கொரிந்தியருக்கு முதலாம் கடிதம்
5 உங்கள் மத்தியில் பாலியல் முறைகேடு*+ நடப்பதாகக் கேள்விப்பட்டேன்; ஒருவன் தன்னுடைய அப்பாவின் மனைவியை வைத்திருக்கிறானாம்;+ இப்படிப்பட்ட பாலியல் முறைகேடு* மற்ற தேசத்து மக்கள் மத்தியில்கூட நடப்பதில்லை. 2 இதற்காக நீங்கள் துக்கப்படாமல்,+ உங்களைக் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறீர்களா? அப்படிப்பட்ட காரியத்தைச் செய்தவனை உங்களைவிட்டு நீக்கியிருக்க வேண்டாமா?+ 3 உடலால் உங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும், உள்ளத்தால் உங்கள் மத்தியில் இருக்கிறேன். அப்படி இருப்பதாகவே நினைத்து, அந்தக் காரியத்தைச் செய்தவனை நியாயந்தீர்த்துவிட்டேன். 4 நம் எஜமானாகிய இயேசுவின் பெயரில் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, நம் எஜமானாகிய இயேசுவிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றிருக்கிற நான் உள்ளத்தால் அங்கே இருப்பேன். 5 அந்த மனிதனுடைய கெட்ட செல்வாக்கை ஒழிப்பதற்காக, அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்துவிடுங்கள்.+ அப்போதுதான், நம் எஜமானுடைய நாளில் சபையாரின் சிந்தை பாதுகாக்கப்படும்.+
6 நீங்கள் பெருமையடிப்பது நல்லதல்ல; புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் என்று உங்களுக்குத் தெரியாதா?+ 7 நீங்கள் புளிப்பில்லாத புதிய மாவாய் இருப்பதற்காக, பழைய புளித்த மாவை எறிந்துவிடுங்கள். சொல்லப்போனால், நீங்கள் புளிப்பில்லாத மாவாகத்தான் இருக்கிறீர்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து+ பலியிடப்பட்டிருக்கிறாரே.+ 8 அதனால், பஸ்கா பண்டிகையைப்+ பழைய புளித்த மாவை வைத்தோ, கெட்டகுணம், பொல்லாத்தனம் ஆகிய புளித்த மாவை வைத்தோ அனுசரிக்காமல், நேர்மை, உண்மை ஆகிய புளிப்பில்லாத ரொட்டிகளை வைத்து அனுசரிப்போமாக.
9 பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களோடு பழகுவதை நீங்கள் விட்டுவிட வேண்டுமென்று என்னுடைய கடிதத்தில் எழுதியிருந்தேன். 10 இருந்தாலும், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ பேராசைப்படுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள், சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறவர்கள் ஆகியோரோடு பழகுவதை அடியோடு விட்டுவிட வேண்டுமென்று நான் எழுதவில்லை. அப்படியானால், நீங்கள் இந்த உலகத்தைவிட்டே வெளியேற வேண்டியிருக்கும்.+ 11 ஆனால், சகோதரன் என்று அழைக்கப்படுகிற எவனும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவனாகவோ பேராசைப்படுகிறவனாகவோ+ சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறவனாகவோ சபித்துப் பேசுகிறவனாகவோ* குடிகாரனாகவோ+ கொள்ளையடிக்கிறவனாகவோ+ இருந்தால், அப்படிப்பட்டவனோடு பழகுவதை விட்டுவிட வேண்டும்+ என்றுதான் இப்போது நான் உங்களுக்கு எழுதுகிறேன்; அப்படிப்பட்டவனோடு சேர்ந்து நீங்கள் சாப்பிடவும் கூடாது. 12 சபைக்கு வெளியே இருக்கிறவர்களை நியாயந்தீர்ப்பது என் வேலையா? வெளியே இருக்கிறவர்களைக் கடவுளே நியாயந்தீர்க்கிறார்.+ 13 உள்ளே இருக்கிறவர்களை நீங்கள்தானே நியாயந்தீர்க்க வேண்டும்? அதனால், “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்.”+