எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?
“கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.”—லூக்கா 16:10.
1. யெகோவா உண்மையுள்ளவராய் இருக்கிற வழிகளில் ஒன்று எது?
ஒரு மரத்தின் நிழல், நேரம் ஆக ஆக எப்படி மாறுகிறது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருப்பீர்கள். ஏன், அதன் அளவும் திசையும்கூட மாறுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்! மனித முயற்சிகளும் வாக்குறுதிகளும் நிழலைப் போல சதா மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் யெகோவா அப்படி மாறிக்கொண்டிருப்பவரல்ல. ‘சோதிகளின் பிதாவைக்’ குறித்து சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு சொல்கிறார்: “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” (யாக்கோபு 1:17) சின்னச் சின்ன விஷயங்களிலும்கூட யெகோவா மாறாதவர், நம்பகமானவர். அவர் “உண்மையுள்ள கடவுள்.”—உபாகமம் 32:4, NW.
2. (அ) நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள நம்மை நாமே ஏன் ஆராய்ந்து பார்க்க வேண்டும்? (ஆ) உண்மையுடன் இருப்பதைக் குறித்த என்ன கேள்விகளை நாம் சிந்திக்கப் போகிறோம்?
2 தம்முடைய வணக்கத்தார் நம்பகமானவர்களாக இருப்பதைப் பார்த்து கடவுள் எப்படி உணருகிறார்? அவர்களைக் குறித்து தாவீது சொன்ன விதமாகவே அவர் கருதுகிறார்: “தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.” (சங்கீதம் 101:6) ஆம், தம் ஊழியர்கள் உண்மையுடன் இருப்பதைக் காண்கையில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆகவே, நல்ல காரணத்துடன்தான், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.” (1 கொரிந்தியர் 4:2) உண்மையுள்ளவர்களாய் இருப்பதில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளது? வாழ்க்கையில் எந்தெந்த அம்சங்களில் நாம் உண்மையுள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டும்? ‘உத்தமமான வழியில் நடப்பதால்’ வரும் நன்மைகள் யாவை?
உண்மையாயிருப்பதன் அர்த்தம்
3. நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா இல்லையா என்பதை எது தீர்மானிக்கிறது?
3 ‘மோசே பணிவிடைக்காரராக உண்மையுள்ளவராய் இருந்தார்’ என எபிரெயர் 3:5 குறிப்பிடுகிறது. அவர் உண்மையுள்ளவராய் இருந்தது எப்படி? ஆசரிப்புக் கூடாரத்தை உருவாக்குவதிலும் அதை ஸ்தாபிப்பதிலும், ‘யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தார்.’ (யாத்திராகமம் 40:16) யெகோவாவின் வணக்கத்தாராக நாம், கீழ்ப்படிதலோடு அவருக்குச் சேவை செய்வதன் மூலம் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோம். கடினமான சோதனைகளை அல்லது பரீட்சைகளை நாம் எதிர்ப்படுகையில் யெகோவாவுக்குப் பற்றுமாறாதவர்களாய் இருப்பதையும் இது நிச்சயம் உட்படுத்துகிறது. என்றாலும், பெரிய சோதனைகளை வெற்றிகரமாகச் சமாளிப்பதை வைத்து மட்டுமே நாம் உண்மையுள்ளவர்கள் என்று தீர்மானித்துவிட முடியாது. “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” என இயேசு குறிப்பிட்டார். (லூக்கா 16:10) ஆகவே, சிறியதாகத் தோன்றுகிற விஷயங்களில்கூட நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
4, 5. நாம் “கொஞ்சத்திலே” உண்மையுள்ளவர்களாய் இருப்பது எதைக் காட்டுகிறது?
4 ஒவ்வொரு நாளும் “கொஞ்சத்திலே” கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருப்பது முக்கியம் என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இது யெகோவாவின் பேரரசுரிமையைக் குறித்து நாம் எப்படி உணருகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. முதல் மனித ஜோடியான ஆதாம் ஏவாள் எதிர்ப்பட்ட விசுவாசப் பரீட்சையை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அது அவர்களுக்கு கஷ்டமானதாகவே இருக்கவில்லை. ஏதேன் தோட்டத்திலிருந்த எல்லா மரத்தின் பழங்களையும் அவர்கள் சாப்பிடலாம், ஆனால், ஒரேவொரு மரத்தின் பழத்தை மட்டும், அதாவது “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின்” பழத்தை மட்டும், அவர்கள் சாப்பிடாதிருக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 2:16, 17) அந்த எளிய கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்திருந்தால், அது யெகோவாவின் பேரரசுரிமைக்கு ஆதரவு அளித்ததைக் காண்பித்திருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் யெகோவாவின் கட்டளைகளைப் பின்பற்றுவது, யெகோவாவின் பேரரசுரிமைக்கு நாம் ஆதரவு அளிப்பதைக் காட்டுகிறது.
5 இரண்டாவதாக, “கொஞ்சத்திலே,” அதாவது சிறிய விஷயங்களிலே, நாம் நடந்துகொள்ளும் விதம் ‘அநேகத்தில்,’ அதாவது வாழ்க்கையில் எதிர்ப்படும் பெரிய விஷயங்களில், நாம் எப்படி நடந்துகொள்வோம் என்பதைத் தீர்மானிக்கும். இது சம்பந்தமாக, தானியேலுக்கும் அவரது உற்ற நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கும் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். பொ.ச.மு. 617-ல் அவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வாலிபர்கள், ஒருவேளை பருவ வயதினராக இருந்திருக்கலாம். இந்த நான்கு பேரும் நேபுகாத்நேச்சார் ராஜாவுடைய அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார்கள். “ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்று வருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான்.”—தானியேல் 1:3-5.
6. தானியேலும் அவரது மூன்று எபிரெய நண்பர்களும் பாபிலோன் அரண்மனையில் என்ன சோதனையை எதிர்ப்பட்டார்கள்?
6 ஆனால், பாபிலோன் ராஜா சாப்பிடும் அதே உணவை சாப்பிடுவது இந்த நான்கு எபிரெய வாலிபர்களுக்கும் ஒரு சோதனையாக இருந்தது. ராஜாவின் உணவில் நியாயப்பிரமாணம் தடை செய்திருந்த உணவுப் பதார்த்தங்கள் ஒருவேளை இருந்திருக்கலாம். (உபாகமம் 14:3-20) கொல்லப்பட்ட மிருகங்களின் இரத்தம் சரிவர வெளியேற்றப்படாமல் இருந்திருக்கலாம், இத்தகைய இறைச்சியைச் சாப்பிடுவது கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதாக இருந்திருக்கும். (உபாகமம் 12:23-25) அந்த உணவு, ஒருவேளை விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதாகக்கூட இருந்திருக்கலாம், ஏனென்றால் பலர் ஒன்று சேர்ந்து உணவருந்தும் வேளைகளில் சாப்பிடுவதற்கு முன் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது.
7. தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் கீழ்ப்படிதலுடன் நடந்துகொண்டது எதைக் காட்டியது?
7 பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் இருந்தோருக்கு உணவு சம்பந்தமான கட்டுப்பாடுகள் பெரிய விஷயமாகவே இருக்கவில்லை. ஆனால், தானியேலுக்கும் அவரது நண்பர்களுக்கும் அது பெரிய விஷயமாக இருந்தது; எனவே, இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணத்தில் தடை செய்யப்பட்டிருந்தவற்றைச் சாப்பிட்டு, தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். கடவுள் மீது அவர்களுக்கு இருந்த விசுவாசமும் உண்மைத்தன்மையும் இதில் உட்பட்டிருந்தது. அதனால், அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவர்களுக்கு காய்கறிகளும் தண்ணீரும் கொடுக்கப்பட்டன. (தானியேல் 1:9-14) இந்த நான்கு இளைஞருடைய செயல் இன்று சிலருக்குச் சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தது, அவருடைய பேரரசுரிமைப் பற்றிய விவாதத்தில் அவர்கள் எந்தப் பக்கத்தை ஆதரித்தார்கள் என்பதைக் காட்டியது.
8. (அ) என்ன மாபெரும் விசுவாசப் பரீட்சையை அந்த மூன்று எபிரெயர்கள் எதிர்ப்பட்டார்கள்? (ஆ) அதன் விளைவு என்ன, இது எதைக் காட்டுகிறது?
8 அற்பமாகத் தோன்றிய விஷயத்தில் தானியேலின் மூன்று நண்பர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்தது, ஒரு பெரிய சோதனையைச் சந்திக்க அவர்களைத் தயார்படுத்தியது. பைபிளை தானியேல் மூன்றாம் அதிகாரத்திற்குத் திறந்துகொள்ளுங்கள்; நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்திய பொற்சிலைக்கு அந்த மூன்று எபிரெயர்கள் தலைவணங்க மறுத்ததால் எதிர்ப்பட்ட மரண தண்டனையைப் பற்றி கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். ராஜாவுக்கு முன் அவர்கள் அழைத்து வரப்பட்டபோது, இவ்வாறு தங்களுடைய தீர்மானத்தை உறுதியோடு அறிவித்தார்கள்: “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.” (தானியேல் 3:17, 18) அவர்களை யெகோவா காப்பாற்றினாரா? அந்த வாலிபர்களை அக்கினி சூளையில் தூக்கியெறியச் சென்ற காவலாளிகள் எரிந்து பஸ்பமானார்கள். ஆனால் உண்மையுள்ள அந்த மூன்று எபிரெயர்களோ உயிருடன் வெளியே வந்தார்கள், சூளையின் வெப்பத்தில் அவர்களுடைய உடல் கருகவே இல்லை! உண்மையுள்ளவர்களாய் இருக்க அவர்கள் ஏற்கெனவே தங்களைத் தயார்படுத்திக் கொண்டது இந்த மாபெரும் சோதனையைச் சந்திக்க அவர்களுக்கு உதவியது. எனவே சிறிய விஷயங்களில் உண்மையுள்ளவர்களாய் இருப்பதன் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது, அல்லவா?
‘அநீதியான உலகப் பொருள்களில்’ உண்மையுள்ளவர்களாய் இருத்தல்
9. எந்தச் சூழமைவில் லூக்கா 16:10-ல் உள்ள வார்த்தைகளை இயேசு கூறினார்?
9 சிறிய விஷயங்களில் உண்மையுள்ளவராய் இருப்பவர் முக்கிய விஷயங்களிலும் அப்படியே இருப்பாரென்ற நியமத்தை இயேசு சொல்வதற்கு முன், அங்கிருந்தவர்களிடம் அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்: “அநீதியான உலகப் பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, உங்களை அவர்கள் நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வார்கள்.” அதன் பின்பு, கொஞ்சத்திலே உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்: “அநீதியான உலகப் பொருளைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? . . . எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது.”—லூக்கா 16:9-13; NW.
10. ‘அநீதியான உலகப் பொருளைப்’ பயன்படுத்துவதில் உண்மையுள்ளவர்களாய் இருப்பதை எப்படிக் காட்டலாம்?
10 சூழமைவு காட்டுகிறபடி, லூக்கா 16:10-ல் “அநீதியான உலகப் பொருளை,” அதாவது பொருளாதார வளங்களை அல்லது உடைமைகளைப் பயன்படுத்துவது சம்பந்தமாகவே இயேசு சொன்னார். பொருட்செல்வங்கள், அதிலும் முக்கியமாக காசுபணம் அபூரண மனிதரின் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே அவை அநீதியானவை என அழைக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, சொத்து சுகத்திற்கான தீரா ஆசை அநீதியான செயல்களுக்கு வழிநடத்தலாம். பொருளுடைமைகளை ஞானத்தோடு பயன்படுத்துவதன் மூலம் நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பதைக் காட்டுகிறோம். அவற்றைத் தன்னல காரியங்களுக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ராஜ்ய வேலைகளுக்கும் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்தவே நாம் விரும்புகிறோம். இவ்வாறு உண்மையுள்ளவர்களாய் இருப்பதன் மூலம், ‘நித்தியமான வீடுகளின்’ சொந்தக்காரர்களான யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் நம்முடைய நண்பர்களாக்கிக் கொள்கிறோம். அவர்கள் நம்மை அந்த ‘வீடுகளில்,’ அது பரலோகமாயிருந்தாலும் சரி, பரதீஸ் பூமியாக இருந்தாலும் சரி ஏற்றுக்கொண்டு, அங்கே நித்திய ஜீவனை அருளுவார்கள்.
11. உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகள் செய்து வருகிற வேலைக்காக நன்கொடைகள் ஏற்றுக்கொள்வதைப் பற்றி வீட்டுக்காரரிடம் சொல்ல நாம் ஏன் தயங்கக் கூடாது?
11 ஜனங்களிடம் நாம் ராஜ்ய செய்தியை அறிவித்து, பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் அளிக்கையில், யெகோவாவின் மக்கள் உலகெங்கும் செய்து வருகிற வேலைக்காக நன்கொடைகள் ஏற்றுக்கொள்வதைப் பற்றிச் சொல்கிறோம்; இப்படிச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு என்ன வாய்ப்பை நாம் அளிக்கிறோம் என்பதைக்கூட சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய பொருளாதார வளங்களை ஞானமாகப் பயன்படுத்துவதற்கு அல்லவா நாம் வாய்ப்பு அளிக்கிறோம்? லூக்கா 16:10, பொருளாதார வளங்களைப் பயன்படுத்துவது பற்றி குறிப்பிட்டாலும், அதிலுள்ள நியமம் வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் பொருந்துகிறது.
நேர்மையே முக்கியம்
12, 13. எந்தெந்த அம்சங்களில் நாம் நேர்மையைக் காட்டலாம்?
12 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் [“நேர்மையாய்,” NW] நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.” (எபிரெயர் 13:18) “எல்லாவற்றிலும்” என்று குறிப்பிடுகையில், நிச்சயமாகவே பண சம்பந்தப்பட்ட விஷயங்கள்கூட அதில் உட்பட்டிருக்கிறது. செலுத்த வேண்டிய கடனையும் வரியையும் உரிய நேரத்தில் நாம் நேர்மையாகச் செலுத்திவிடுகிறோம். ஏன்? நம்முடைய மனசாட்சியே அதற்குக் காரணம்; அதைவிட முக்கியமாக நாம் கடவுளை நேசிக்கிறோம், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம். (ரோமர் 13:5, 6) நமக்குச் சொந்தமல்லாத ஒன்றைக் கண்டெடுக்கையில் நாம் என்ன செய்கிறோம்? அதன் சொந்தக்காரரிடம் அதைத் திருப்பிக் கொடுக்க முயலுகிறோம். அவ்வாறு செய்யும்படி எது தங்களைத் தூண்டியதென அந்த நபரிடம் சொல்கையில் அது எப்பேர்ப்பட்ட சிறந்த சாட்சியாக அமைகிறது!
13 எல்லாவற்றிலும் உண்மையாயும் நேர்மையாயும் இருப்பது, வேலை செய்யுமிடத்தில் நேர்மையுள்ளவர்களாய் இருப்பதையும் உட்படுத்துகிறது. நம் வேலைகளை நேர்மையுடன் செய்வது நாம் எப்படிப்பட்ட கடவுளை வணங்குகிறோம் என்பதிடம் கவனத்தை ஈர்க்கிறது. நாம் சோம்பேறித்தனமாக இருந்து, நேரத்தை ‘திருடுவதில்லை.’ மாறாக, யெகோவாவுக்கென்று கடினமாக உழைக்கிறோம். (எபேசியர் 4:28; கொலோசெயர் 3:23) ஐரோப்பிய நாடு ஒன்றில், மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு டாக்டர்களிடமிருந்து சான்றிதழ் பெறும் பணியாளர்களில் மூன்றில் ஒரு நபர் பொய் சான்றிதழ் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. உண்மை கிறிஸ்தவர்களோ வேலைக்குப் போகாமலிருப்பதற்காக இவ்வாறு சாக்குப்போக்கு சொல்லி விடுப்பு எடுப்பதில்லை. சில சமயங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய நேர்மையையும் கடின உழைப்பையும் கவனிக்கிற முதலாளிகள் அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்க முன்வருகிறார்கள்.—நீதிமொழிகள் 10:4.
கிறிஸ்தவ ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாய் இருத்தல்
14, 15. கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கான சில வழிகள் யாவை?
14 நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாய் இருப்பதை நாம் எப்படிக் காட்டுகிறோம்? “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 13:15) வெளி ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாய் இருப்பதைக் காட்டுவதற்கு மிக முக்கிய வழி, அதில் தவறாமல் கலந்துகொள்வதாகும். யெகோவாவையும் அவரது நோக்கத்தையும் பற்றி ஒரு மாதம்கூட பேசாமல் இருக்க நாம் ஏன் இடமளிக்க வேண்டும்? பிரசங்க வேலையில் தவறாமல் கலந்துகொள்வது நம் திறமைகளை வளர்க்கிறது.
15 வெளி ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாய் இருப்பதைக் காண்பிப்பதற்கு மற்றொரு சிறந்த வழி, காவற்கோபுரத்திலும் நம் ராஜ்ய ஊழியத்திலும் காணப்படுகிற குறிப்புகளைப் பின்பற்றுவதாகும். அங்கு கொடுக்கப்படுகிற நடைமுறைக்கேற்ற பிரசங்கங்களையும் குறிப்புகளையும் தயாரித்து பயன்படுத்துகையில், நம்முடைய ஊழியம் மிகுந்த பலன் அளிப்பதை நாம் காண்கிறோம், அல்லவா? ராஜ்ய செய்தியில் அக்கறை காட்டுகிற ஒருவரை நாம் சந்திக்கையில் அவருடைய ஆர்வப் பசியைத் தூண்டிவிட மீண்டும்போய் நாம் அவரைச் சந்திக்கிறோமா? அக்கறை காட்டுவோரிடத்தில் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பது பற்றி என்ன சொல்லலாம்? அவர்களுக்குத் தவறாமல் பைபிள் படிப்பு நடத்தும் விஷயத்தில் நம்பகமானவராக, உண்மையுள்ளவராக இருக்கிறோமா? ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாய் இருப்பதன் மூலம் நாமும், நமக்குச் செவிகொடுத்து கேட்போரும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும்.—1 தீமோத்தேயு 4:15, 16.
இவ்வுலகிலிருந்து விலகியிருத்தல்
16, 17. உலகத்திலிருந்து விலகியிருப்பதை எவ்வழிகளில் நாம் காட்டலாம்?
16 கடவுளிடம் ஜெபிக்கையில் தம் சீஷர்களைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:14-16) நடுநிலை வகிப்பு, மதப் பண்டிகைகள், பழக்கவழக்கங்கள், ஒழுக்கக்கேடான காரியங்கள் போன்ற பெரிய விஷயங்களில் இந்த உலகிலிருந்து விலகியிருக்க நாம் திடத்தீர்மானமாய் இருக்கக்கூடும். ஆனால் சிறிய விஷயங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? நம்மையும் அறியாமல் இவ்வுலகின் வழிகள் நம்மீது செல்வாக்கு செலுத்தி விடுகின்றனவா? உதாரணத்திற்கு, நாம் கவனமாக இல்லாவிட்டால், எவ்வளவு எளிதில் கண்ணியமற்ற விதத்திலும் தகுதியற்ற விதத்திலும் நாம் உடை உடுக்க ஆரம்பித்துவிடலாம்! ஆடை அலங்காரத்தைப் பொறுத்தவரை உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கு, ‘அடக்கமும் தெளிந்த புத்தியும்’ அவசியம். (1 தீமோத்தேயு 2:9, 10, NW) ஆம், ‘நம்முடைய ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாம் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், நம்மை தேவ ஊழியக்காரராக விளங்கப் பண்ணுகிறோம்.’—2 கொரிந்தியர் 6:3, 4.
17 யெகோவாவை கனப்படுத்த வேண்டுமென்ற ஆவலில், சபை கூட்டங்களுக்கு நாம் கண்ணியமாக உடையணிந்து செல்கிறோம். திரளானோர் கூடிவருகிற மாநாடுகளுக்கும் அவ்வாறே உடையணிந்து செல்கிறோம். நம்முடைய உடை பொருத்தமானதாயும், அடக்கமானதாயும் இருக்க வேண்டும். நம்மைக் கவனிப்போருக்கு அது ஒரு சாட்சியாக அமைகிறது. பவுல் மற்றும் அவரது நண்பர்களின் நடவடிக்கைகளைத் தேவதூதர்கள் கவனித்தது போல நம்முடைய நடவடிக்கைகளையும் அவர்கள் கவனிக்கிறார்கள். (1 கொரிந்தியர் 4:9) சொல்லப்போனால், நாம் எப்போதுமே சரியான விதத்தில் உடை அணிந்திருக்க வேண்டும். உடையைக் குறித்ததில் உண்மையுள்ளவர்களாய் இருப்பது சிலருக்கு ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் கடவுளைப் பொறுத்தவரை அது முக்கியமானது.
உண்மையுள்ளவர்களாய் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
18, 19. உண்மையுள்ளவர்களாய் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
18 உண்மை கிறிஸ்தவர்கள், “தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்து கொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்” என சொல்லப்படுகிறார்கள். அதோடு, அவர்கள் ‘தேவன் தந்தருளும் பெலத்தில் சார்ந்திருக்கிறார்கள்.’ (1 பேதுரு 4:10, 11) அதுமட்டுமல்ல, உக்கிராணக்காரர்களான நம்மிடம் நமக்குரியதல்லாதவை ஒப்படைக்கப்பட்டுள்ளன, அதாவது ஊழிய வேலை உட்பட, கடவுளுடைய தகுதியற்ற தயவை வெளிப்படுத்துகிற வேலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நல்ல உக்கிராணக்காரராக நம்மை நிரூபிக்க, “இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை,” கடவுள் அருளும் பலத்தை, நாம் சார்ந்திருக்கிறோம். (2 கொரிந்தியர் 4:7, NW) எதிர்காலத்தில் எத்தகைய சோதனைகள் வந்தாலும் அவற்றைச் சமாளிக்க இது நமக்கு எப்பேர்ப்பட்ட பயிற்சி அளிக்கிறது!
19 ‘கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையுள்ளவர்களைக் கர்த்தர் தற்காக்கிறார்’ என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 31:23) அப்படியானால், ‘எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் [அதாவது, உண்மையுள்ளவர்களுக்கும்] இரட்சகராக’ உள்ள யெகோவா மீது முழு நம்பிக்கை வைத்து அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க திடத்தீர்மானமாய் இருப்போமாக!—1 தீமோத்தேயு 4:10.
நினைவிருக்கிறதா?
• நாம் ஏன் ‘கொஞ்சத்திலே உண்மையுள்ளவர்களாய்’ இருக்க வேண்டும்?
• உண்மையுள்ளவர்களாய் இருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்:
நேர்மையாக இருப்பதில்?
ஊழியத்தில்?
இவ்வுலகிலிருந்து விலகியிருப்பதில்?
[பக்கம் 26-ன் படங்கள்]
கொஞ்சத்திலே உண்மையுள்ளவர்களாய், அநேகத்திலும் உண்மையுள்ளவர்களாய்
[பக்கம் 29-ன் படம்]
‘எல்லாவற்றிலும் நேர்மையாய் நடந்துகொள்ளுங்கள்’
[பக்கம் 29-ன் படம்]
உண்மையுள்ளவர்களாய் இருப்பதைக் காண்பிப்பதற்கு ஒரு சிறந்த வழி வெளி ஊழியத்திற்காக நன்கு தயாரிப்பதாகும்
[பக்கம் 30-ன் படம்]
ஆடை அலங்கார விஷயத்தில் தன்னடக்கம் காட்டுங்கள்