உங்கள் நம்பிக்கையை இறுதிவரை உறுதியாக காத்துக்கொள்ளுங்கள்
சிறிய விமானமொன்று மோசமான சீதோஷண நிலைமைகளில் பறந்துகொண்டிருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள். திசையைக் காட்டும் முக்கிய அடையாளங்களை விமானியால் இனிமேலும் பார்க்க முடியவில்லை. அடர்த்தியான மேகங்கள் அவரை மூடிக்கொள்கின்றன. அவருடைய காற்றுத்தடுப்புக்கு அப்பால் அவரால் பார்க்க முடியவில்லை, என்றபோதிலும் தன்னுடைய பயணத்தைப் பத்திரமாக முடித்துவிட முடியும் என்று அவர் நிச்சயமாக உணருகிறார். அவருடைய நம்பிக்கைக்கு காரணம் என்ன?
மேகங்களினூடே பறந்துசெல்லவும் இருளில் தரையிறங்கவும் அவருக்கு உதவும் துல்லியமான கருவிகள் அவரிடமிருக்கின்றன. அவருடைய பாதை நெடுகிலும், விசேஷமாக விமான நிலையத்துக்கு அருகில், மின்னணு முறையில் விமான வழிகாட்டிகள் வழிகாட்டுகின்றன, விமான போக்குவரத்தை தரையிலிருந்து இயக்குபவர்களோடு வானொலி தொடர்பும் அவருக்கிருக்கிறது.
இதற்கு ஒப்பான ஒரு வகையில், உலக நிலைமைகள் நாளுக்கு நாள் இருளடைந்து கொண்டுவருகிறபோதிலும் நம் எதிர்காலத்தை நாம் நம்பிக்கையோடே எதிர்ப்படலாம். இந்தப் பொல்லாத ஒழுங்கினூடாக நம் பயணம் சிலர் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் நாம் சரியான பாதையிலும் சரியான நேரத்திலுமே இருப்பதைக் குறித்து நாம் நம்பிக்கையோடிருக்கலாம். நாம் ஏன் அத்தனை நிச்சயமாயிருக்கலாம்? ஏனென்றால் மனித பார்வை காணமுடியாததை நாம் காண்பதற்கு உதவிசெய்யும் வழிநடத்துதல் நமக்கிருக்கிறது.
கடவுளுடைய வார்த்தை ‘நம் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது,’ மேலும் அது “சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19:7; 119:105) பறக்கும்போது விமானியின் பாதையைச் சுட்டிக்காட்டும் விமான வழிகாட்டிகளைப் போல, பைபிள் எதிர்கால சம்பவங்களைத் துல்லியமாக கூறுகிறது; மேலும் நாம் சென்று சேரவேண்டிய இடத்துக்குப் பத்திரமாக போய் சேருவதை நிச்சயப்படுத்திக்கொள்ள நமக்குத் தெளிவான அறிவுரைகளைக் கொடுக்கிறது. இருப்பினும், தெய்வீக வழிநடத்துதலிலிருந்து பயனடைய நாம் அதை நம்பவேண்டும்.
எபிரெயர்களுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில், யூத கிறிஸ்தவர்களை ‘ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கும்படியாக’ பவுல் துரிதப்படுத்தினார். (எபிரெயர் 3:14) அதை நாம் பற்றிக்கொண்டிருப்பது ‘உறுதியாய்’ இல்லாவிட்டால் நம்பிக்கை ஆட்டங்காணக்கூடும். ஆகவே யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை முடிவுபரியந்தம் எவ்விதமாக காத்துக்கொள்ளலாம் என்ற கேள்வி எழும்புகிறது.
உங்கள் விசுவாசத்தைக் காட்டுங்கள்
முழுவதுமாக தன்வசமுள்ள கருவிகளையும் தரைக் கட்டுப்பாட்டு பணியாளர்களையுமே நம்பிக்கொண்டு கண்மூடித்தனமாக ஒரு விமானி பறப்பதற்கு முன்பாக, அவருக்கு போதுமான பயிற்சியும் பலமணிநேரங்கள் பறந்த அனுபவமும் தேவையாயிருக்கிறது. அதேவிதமாகவே, ஒரு கிறிஸ்தவன் யெகோவாவின் வழிநடத்துதலில், விசேஷமாக கடினமான சூழ்நிலைமைகள் எழும்புகையில், நம்பிக்கையைக் காத்துக்கொள்வதற்கு தன்னுடைய விசுவாசத்தை அவர் தொடர்ந்து காட்டவேண்டியது அவசியமாகும். அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.” (2 கொரிந்தியர் 4:13) இவ்விதமாக, நாம் கடவுளைப் பற்றிய நற்செய்தியைக் குறித்து பேசும்போது, நாம் நம்முடைய விசுவாசத்தைக் காண்பித்து அதைப் பலப்படுத்திக் கொள்ளுகிறோம்.
இரண்டாம் உலகப் போரின்போது நான்காண்டுகளைச் சித்திரவதை முகாமில் செலவிட்ட மாக்டாலேனா, பிரசங்க வேலையின் மதிப்பைக் குறித்து விளக்குகிறார்கள்: “பலமான விசுவாசத்தைக் காத்துக்கொள்வதற்கு மற்றவர்களுடைய ஆவிக்குரிய நலனைக் குறித்து அக்கறையுள்ளவர்களாயிருப்பது அத்தியாவசியமானது என்பதாக என்னுடைய அம்மா எனக்குக் கற்பித்தார்கள். நாங்கள் எவ்வாறு உணர்ந்தோம் என்பதை விளக்கும் ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ரேவன்ஸ்பர்க் சித்திரவதை முகாமிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்ட பின்பு, என் அம்மாவும் நானும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று எங்கள் வீடு வந்துசேர்ந்தோம். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அன்று, வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதில் நாங்கள் சகோதரர்களைச் சேர்ந்துகொண்டோம். கடவுளுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதற்கு நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நம்முடைய கவனத்தை ஊன்ற வைப்போமானால், அதே வாக்குறுதிகள் நமக்கு அதிக உண்மையானவையாக ஆகிவிடுகின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.”—அப்போஸ்தலர் 5:42-ஐ ஒப்பிடுக.
நம்முடைய நம்பிக்கையை முடிவுவரை உறுதியாக காத்துக்கொள்வது, மற்ற துறைகளில் ஆவிக்குரிய நடவடிக்கையை தேவைப்படுத்துகிறது. தனிப்பட்ட படிப்பு, விசுவாசத்தைப் பலப்படுத்தும் மற்றொரு மிகச் சிறந்த பயிற்சியாக இருக்கிறது. பெரோயா பட்டணத்தாரை நாம் பின்பற்றி வேதவாக்கியங்களை ஊக்கத்துடன் ஆராய்ந்து பார்த்தால், ‘முடிவுபரியந்தம் நம்பிக்கையின் பூரண நிச்சயத்தை’ உடையவர்களாயிருக்க அது நமக்கு உதவிசெய்யும். (எபிரெயர் 6:11, NW; அப்போஸ்தலர் 17:11) தனிப்பட்ட படிப்பு, நேரத்தையும் திடதீர்மானத்தையும் தேவைப்படுத்துவது உண்மைதான். அதன் காரணமாகவேதான் ஒருவேளை பவுல் எபிரெயர்களை இப்படிப்பட்ட காரியங்களில் ‘அசதியாக’ அல்லது சோம்பலாக இருந்துவிடும் அபாயத்தைக் குறித்து எச்சரித்திருக்கலாம்.—எபிரெயர் 6:11.
சோம்பலான ஒரு மனநிலை வாழ்க்கையின் அநேக பகுதிகளில் பயங்கரமான பின்விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். “கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும்,” என்பதாக சாலொமோன் குறிப்பிட்டார். (பிரசங்கி 10:18) பராமரிக்கப்படாத ஒரு கூரையின் வழியாக ஏதாவது ஒரு சமயத்தில் கட்டாயமாக மழைத் தண்ணீர் ஒழுக ஆரம்பித்துவிடுகிறது. நாம் ஆவிக்குரிய விதமாக நம்முடைய கைகளை நெகிழவிட்டு நம்முடைய விசுவாசத்தை காத்துக்கொள்ள தவறினால், சந்தேகங்கள் ஒருவேளை உள்ளே நுழையக்கூடும். மறுபட்சத்தில், கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக தியானிப்பதும் படிப்பதும் நம்முடைய விசுவாசத்தை பேணி பாதுகாக்கும்.—சங்கீதம் 1:2, 3.
அனுபவத்தின் மூலமாக நம்பிக்கையை வளர்த்தல்
நிச்சயமாகவே, தன்னுடைய கருவிகள் நம்பத்தக்கவை என்பதை ஒரு விமானி அனுபவத்தின் மூலமாகவும் ஆராய்ச்சியின் மூலமாகவும் கற்றுக்கொள்கிறார். அதேவிதமாகவே, நாம் நம்முடைய சொந்த வாழ்க்கையில் யெகோவாவின் அன்புள்ள அக்கறைக்கான அத்தாட்சியைக் காணும்போது அவரில் நம்முடைய நம்பிக்கை வளருகிறது. யோசுவா இதை அனுபவித்தார், தன் உடன் இஸ்ரவேலர்களுக்கு அவர் இவ்விதமாக இதை நினைப்பூட்டினார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.”—யோசுவா 23:14.
பிலிப்பீன்ஸிலிருந்து வரும் திருமணமான ஒரு சகோதரி ஹேஸெஃபீனா அதே பாடத்தைக் கற்றுக்கொண்டார். சத்தியத்தை அறிந்துகொள்வதற்கு முன்பாக வாழ்க்கை எவ்விதமாக இருந்தது என்பதை அவர் விளக்குகிறார்: “என்னுடைய கணவன் அதிகமாக குடித்துவிட்டு, குடிபோதை ஏறினவுடன் கோபங்கொண்டு என்னை அடிப்பார். மகிழ்ச்சியற்ற எங்கள் திருமணம் எங்கள் மகனையும்கூட பாதித்தது. என்னுடைய கணவரும் நானும் இருவருமே வேலைசெய்கிறவர்களாக அதிகமான பணத்தைச் சம்பாதித்தோம், ஆனால் சூதாட்டத்தில் நாங்கள் பெரும்பகுதியான எங்கள் பணத்தை இழந்தோம். என்னுடைய கணவருக்கு அநேக நண்பர்கள் இருந்தனர், ஆனால் மதுபானங்களுக்கு அவர் பணம்கொடுப்பார் என்பதற்காகவே பெரும்பாலானவர்கள் அவருடைய நட்பை நாடினார்கள், ஒரு சிலர் அவரைப் பார்த்து சிரிப்பதற்காகவே அவரை அதிகமாக குடிக்க வைக்க முயற்சிசெய்தார்கள்.
“யெகோவாவை நாங்கள் அறியவந்து அவருடைய புத்திமதியை இருயத்திற்குள் ஏற்றுக்கொண்டபோது காரியங்கள் மாறிவிட்டன. என்னுடைய கணவர் இனிமேலும் குடிப்பதில்லை, நாங்கள் சூதாடுவதை நிறுத்திவிட்டோம், எங்களை நேசித்து எங்களுக்கு உதவிசெய்யும் உண்மை நண்பர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள். எங்களுடைய திருமணம் மகிழ்ச்சியுள்ளதாக இருக்கிறது, எங்களுடைய மகன் நல்ல ஒரு வாலிபனாக வளர்ந்து வருகிறான். நாங்கள் குறைந்த மணிநேரங்களே வேலைசெய்கிறோம், ஆனால் அதிகமான பணம் எங்களுக்கிருக்கிறது. யெகோவா அன்புள்ள ஒரு பெற்றோரைப் போல இருந்து, நம்மை எப்போதும் சரியான பாதையில் வழிநடத்துகிறவராக இருக்கிறார் என்பதை அனுபவம் எங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறது.”
வானொலி தொடர்பு மூலமாக வரும் அறிவுரைகள் அல்லது கருவியைக் கொண்டு சரிபார்த்தலின் விளைவாக, விமானிகள் சில சமயங்களில் தங்கள் பாதையை சரிசெய்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணரக்கூடும். அதேவிதமாகவே யெகோவாவின் அறிவுரைக்கேற்ப நாம் திசையை மாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கலாம். “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:21) அவருடைய வார்த்தையின் மூலமாகவும் அவருடைய அமைப்பின் மூலமாகவும் ஆவிக்குரிய ஆபத்துக்களைக் குறித்து நம்மை எச்சரிப்பு செய்யும் புத்திமதிகளை நாம் பெற்றுக்கொள்கிறோம். இவற்றில் ஒன்று கூட்டுறவோடு சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது.
கூட்டுறவுகள் நம்மை வழிதவறிப் போகச் செய்யலாம்
தேவையான திருத்தங்கள் செய்யப்படாவிட்டால் ஒரு சிறிய விமானம் எளிதில் வழிதவறிப் போய்விடலாம். அதேவிதமாகவே, வெளியிலிருந்து வரும் செல்வாக்குகள் இன்று கிறிஸ்தவர்களை இடைவிடாமல் தாக்கிக்கொண்டிருக்கின்றன. ஆவிக்குரிய மதிப்பீடுகளை அநேகர் பரிகாசம் செய்து பணத்துக்கும் இன்பத்துக்கும் அதிகமான முக்கியத்துவத்தை கொடுக்கும் மாம்ச சிந்தையுள்ள ஒரு உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கடைசி நாட்கள் ‘கையாளுவதற்கு கடினமான’ காலமாக இருக்கும் என்பதாக பவுல் தீமோத்தேயுவை எச்சரித்தார். (2 தீமோத்தேயு 3:1-5, NW) ஏற்றுக்கொள்ளப்படவும் பிரபலமாகவும் ஏங்கும் பருவ வயதினர் விசேஷமாக கெட்ட கூட்டுறவுகளினால் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.—2 தீமோத்தேயு 2:22.
பதினேழு வயதினளாக இருக்கும் அமாண்டா இவ்வாறு விளக்குகிறாள்: “கொஞ்ச காலத்துக்கு என்னுடைய விசுவாசம் என்னுடைய சக மாணவர்களால் ஓரளவு பலவீனப்படுத்தப்பட்டது. என்னுடைய மதம் கட்டுப்படுத்துவதாகவும் நியாயமற்றதாகவும் இருக்கிறது என்பதாக அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள், இது என்னை ஊக்கமிழக்கச் செய்ய ஆரம்பித்தது. இருப்பினும் என்னுடைய பெற்றோரோ கிறிஸ்தவ வழிகாட்டுநெறிகள் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பாதுகாப்பதற்கே உதவியாக இருப்பதை புரிந்துகொள்வதற்கு எனக்கு உதவிசெய்தார்கள். என்னுடைய முன்னாள் பள்ளி தோழர்களுடையதைக் காட்டிலும் அதிக திருப்தியான ஒரு வாழ்க்கையைக் கொண்டிருக்க இந்த நியமங்கள் எனக்கு உதவிசெய்வதை நான் இப்பொழுது உணருகிறேன். உண்மையில் என்னிடம் அக்கறையுள்ளவர்களை என்னுடைய பெற்றோரையும் யெகோவாவையும்—நம்புவதற்கு நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்; நான் பயனியர் ஊழியத்தை அனுபவித்து வருகிறேன்.”
நாம் எந்த வயதினராக இருந்தாலும் சரி, நம்முடைய நம்பிக்கைகளைக் குறித்து அலட்சியமாக பேசுகிறவர்களை நாம் எதிர்ப்படுவோம். அவர்கள் ஒருவேளை உலக ஞானிகள் போல தோன்றலாம், ஆனால் கடவுளுக்கு அவர்கள் மாம்சமானவர்களாக, ஆவிக்குரிய தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 2:14) பவுலின் நாட்களில் கொரிந்துவில் உலக ஞானத்தைப் பெற்றிருந்த ஐயுறவாதிகள் செல்வாக்குள்ள ஒரு தொகுதியாக இருந்தனர். இந்தத் தத்துவஞானிகளின் போதகங்கள், உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் விசுவாசத்தை இழந்துபோகும்படியாக ஒருசில கொரிந்திய கிறிஸ்தவர்களை வழிநடத்தின. (1 கொரிந்தியர் 15:12) “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் [“கூட்டுறவுகள்,” NW] நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்,” என்பதாக அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்.—1 கொரிந்தியர் 15:33.
மறுபட்சத்தில், நல்ல கூட்டுறவுகள் நம்மை ஆவிக்குரிய பிரகாரமாக பலப்படுத்துகின்றன. கிறிஸ்தவ சபைக்குள்ளே, விசுவாசமுள்ள ஒரு வாழ்க்கையை வாழும் ஆட்களோடு கலப்பதற்கு நமக்கு வாய்ப்பிருக்கிறது. 1939-ல் சத்தியத்தை கற்றுக்கொண்ட நார்மன் என்ற ஒரு சகோதரர் எல்லாருக்கும் இன்னும் பெரும் உற்சாகத்தின் ஊற்றுமூலராய் இருக்கிறார். அவருடைய ஆவிக்குரிய காட்சியை முழு கவனத்துடன் ஜாக்கிரதையாக வைத்திருக்க செய்திருப்பது எது? “கூட்டங்களும் உண்மையுள்ள சகோதரர்களோடு நெருக்கமான நட்பும் இன்றியமையாதது,” என்பதாக அவர் பதிலளிக்கிறார். “இவ்வகையான கூட்டுறவு, கடவுளுடைய அமைப்புக்கும் சாத்தானுடையதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத் தெளிவாக காண எனக்கு உதவியிருக்கிறது.”
ஐசுவரியத்தின் ஏமாற்றும் வல்லமை
“விமானி சிலசமயங்களில் தன்னுடைய உள்ளுணர்ச்சி ஒத்துக்கொள்ளவில்லை என்ற காரணத்தாலே தன்னுடைய கருவிகளை நம்புவதைக் கடினமாகக் காணலாம். தரையிலுள்ள விளக்குகள் நட்சத்திரங்களைப் போல தோன்றினதால்—அவர்களுடைய கருவிகள் அவர்கள் நினைப்பது தவறு என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டியபோதிலும்—அனுபவமுள்ள இராணுவ விமானிகள் தலைகீழாக தங்கள் விமானத்தை ஓட்டிச்சென்றிருக்கிறார்கள்,” என்பதாக அனுபவமுள்ள ஒரு விமானி பிரையன் விளக்குகிறார்.
அதேவிதமாகவே, நம்முடைய சுயநலமுள்ள உள்ளுணர்ச்சிகள் ஆவிக்குரிய ஒரு கருத்தில் நம்மைத் தவறாக வழிநடத்தக்கூடும். ஐசுவரியத்துக்கு ‘ஏமாற்றும் வல்லமை,’ இருக்கிறது என்பதாக இயேசு சொன்னார், மேலும் பவுல் ‘பண ஆசை அநேகரை விசுவாசத்தைவிட்டு விலகிச்செல்ல செய்திருக்கிறது,’ என்பதாக எச்சரித்தார்.—மாற்கு 4:19; 1 தீமோத்தேயு 6:10.
ஏமாற்றுகிற மினுக்கும் விளக்குகளைப் போல, பொருள்பற்றுள்ள இலக்குகள் தவறான திசையை நமக்குச் சுட்டிக்காட்டக்கூடும். ‘நம்பப்படும் காரியங்களின் எதிர்பார்ப்பில்’ களிகூருவதற்குப் பதிலாக ஒழிந்துபோக இருக்கும் உலகினுடைய ஜீவனத்தின் பெருமையினால் பக்கபாதைக்கு நாம் சென்றுவிடக்கூடும். (எபிரெயர் 11:1, NW; 1 யோவான் 2:16, 17) செல்வம் கொழிக்கும் ஒரு வாழ்க்கைப்பாணியைக் கொண்டிருக்க நாம் ‘தீர்மானமாயிருந்தால்’ ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நமக்கு அதிக நேரம் இருக்காது.—1 தீமோத்தேயு 6:9; மத்தேயு 6:24; எபிரெயர் 13:5.
திருமணமான பேட்ரிக் என்ற ஒரு இளம் மனிதர் மேம்பட்ட ஒரு வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கும்பொருட்டு தானும் தன்னுடைய மனைவியும் ஆவிக்குரிய இலக்குகளைத் தியாகம் செய்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார். அவர் விளக்குகிறார்: “சபையில் விலையுயர்ந்த கார்களையும் சொகுசான வீடுகளையும் கொண்டிருந்தவர்கள் எங்கள்மீது செல்வாக்கு செலுத்தினார்கள். ராஜ்ய நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் கைவிடாமல் இருந்தபோதிலும், நாங்கள் ஒரு சொகுசான வாழ்க்கைப்பாணியை அனுபவிக்கலாம் என்பதாக நினைத்தோம். இருப்பினும், காலப்போக்கில், யெகோவாவை சேவிப்பதிலிருந்தும் ஆவிக்குரியவிதத்தில் வளருவதிலிருந்துமே உண்மையான மகிழ்ச்சி வருகிறது என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். இப்பொழுது எங்களுடைய வாழ்க்கை மறுபடியுமாக எளிமையாக இருக்கிறது. நாங்கள் வேலைபார்க்கும் மணிநேரங்களைக் குறைத்துக்கொண்டு ஒழுங்கான பயனியர்களாக ஆகியிருக்கிறோம்.”
விசுவாசம் ஏற்புடைய ஓர் இருதயத்தின்மீது சார்ந்திருக்கிறது
ஏற்புடைய ஓர் இருதயமும்கூட யெகோவாவில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. உண்மைதான், “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் [அல்லது, “நம்பவைக்கும் அத்தாட்சியின்,” NW அடிக்குறிப்பு] நிச்சயமுமாயிருக்கிறது.” (எபிரெயர் 11:1) ஆனால் நமக்கு ஏற்புடைய ஓர் இருதயம் இருந்தாலொழிய, நம்மை நம்பச்செய்வது சாத்தியமில்லை. (நீதிமொழிகள் 18:15; மத்தேயு 5:6) இதன் காரணமாகவே அப்போஸ்தலன் பவுல் “விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே,” என்பதாக சொன்னார்.—2 தெசலோனிக்கேயர் 3:2.
அப்படியென்றால், கிடைக்கும் எல்லா அத்தாட்சிக்கும் சாதகமாக பிரதிபலிக்கும்படியாக நம்முடைய இருதயங்களை நாம் எவ்வாறு வைத்துக்கொள்ளலாம்? தெய்வீக குணாதிசயங்களை, விசுவாசத்தை மிகுதிப்படுத்தி ஊக்கமளிக்கும் குணாதிசயங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம். பேதுரு, ‘நம்முடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், ஞானத்தையும், இச்சையடக்கத்தையும், பொறுமையையும், தேவபக்தியையும், சகோதர சிநேகத்தையும் அன்பையும்’ கூட்டும்படியாக நம்மைத் துரிதப்படுத்துகிறார். (2 பேதுரு 1:5-7; கலாத்தியர் 5:22, 23) மறுபட்சத்தில், நாம் தன்னலமே கருதும் வாழ்க்கையை நடத்தினால் அல்லது யெகோவாவுக்கு கடமைக்கு செய்யும் சேவையை மாத்திரமே நாம் செய்தால் நம்முடைய விசுவாசம் வளரும்படியாக நாம் நியாயமாகவே எதிர்பார்க்க முடியாது.
எஸ்றா யெகோவாவின் வார்த்தையைப் படிக்கவும் அதின்படி செய்யவும் ‘தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தார்.’ (எஸ்றா 7:10) அதே போல மீகாவும் ஏற்புடைய ஓர் இருதயத்தை உடையவராக இருந்தார். “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.”—மீகா 7:7.
முன்னால் குறிப்பிடப்பட்ட மாக்டாலேனாவும்கூட யெகோவாவுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள். (ஆபகூக் 2:3) அவர்கள் சொல்கிறார்கள்: “ஏற்கெனவே நமக்கு ஆவிக்குரிய பரதீஸ் இருக்கிறது. இரண்டாவது கட்டம் சொல்லர்த்தமான பரதீஸ், அது சீக்கிரத்தில் வந்துவிடும். இதற்கிடையில் நூறாயிரக்கணக்கானோர் திரள்கூட்டத்தோடு சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். கடவுளுடைய அமைப்புக்கு இத்தனை அநேகர் திரண்டுவருவதைக் காண்பது எனக்கு கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது.”
நம்முடைய இரட்சிப்பின் தேவனை நோக்கியிருத்தல்
நம்முடைய நம்பிக்கையை முடிவுவரை உறுதியாக காத்துக்கொள்வது நம்முடைய விசுவாசத்தைக் காண்பிப்பதையும் யெகோவாவிடமிருந்தும் அவருடைய அமைப்பினிடமிருந்தும் நாம் பெற்றுக்கொள்ளும் வழிநடத்துதலுக்கு கவனமாக செவிசாய்த்தலையும் தேவைப்படுத்துகிறது. முயற்சி நிச்சயமாகவே தகுதியுள்ளதே. நீண்ட ஒரு கடினமான பயணத்துக்குப்பின் கீழிறங்கி கடைசியாக அடர்த்தியான மேகங்களினூடே கடந்துவருகையில் விமானி ஆழ்ந்த திருப்தியை அனுபவிக்கிறார். அவருக்கு முன்னால் அங்கே பூமி—பசுமையாகவும் வரவேற்கும் விதமாகவும் விரிந்துகிடக்கிறது. விமான நிலையத்தின் ஓடுபாதை கீழே அவரை வரவேற்க காத்திருக்கிறது.
கிளர்ச்சியூட்டும் ஒரு அனுபவம் நமக்கும்கூட காத்திருக்கிறது. இந்த இருளடைந்த, பொல்லாத உலகம் புதிய நீதியுள்ள ஒரு உலகத்துக்கு வழிவிடும். ஒரு தெய்வீக வரவேற்பு நமக்குக் காத்திருக்கிறது. சங்கீதக்காரனின் வார்த்தைகளுக்கு நாம் செவிகெடுத்தால் நாம் அங்கு சென்று சேரமுடியும்: “கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். . . . உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.”—சங்கீதம் 71:5, 6.