ஏழை ஆனாலும் செல்வந்தர் அது எப்படி?
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஒரு ஞானி தான் ஏழையாகிவிடக்கூடாது என்று ஜெபித்தார். ஏன் இப்படி வேண்டிக்கொண்டார்? ஏனென்றால் கடவுளோடு அவருக்கிருக்கும் உறவை ஆபத்திற்குள்ளாக்கும் மனநிலைகளையும் செயல்களையும் வறுமை தூண்டும் என அவர் பயந்திருந்தார். இது அவருடைய வார்த்தைகளிலிருந்து தெளிவாக தெரிகிறது: “தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கு . . . என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.”—நீதிமொழிகள் 30:8, 9.
ஏழையாக இருக்கும் ஒரு நபர் கடவுளை உண்மையுடன் சேவிப்பது கூடாத காரியம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாக இல்லை! வரலாறு முழுவதிலும் யெகோவா தேவனின் எண்ணற்ற ஊழியர்கள் வறுமையால் வரும் கஷ்டங்களின் மத்தியிலும் அவருக்குத் தங்களுடைய உத்தமத்தைக் காத்து வந்திருக்கிறார்கள். யெகோவாவும் தம் பங்கில், தம்மீது நம்பிக்கை வைப்போரை நேசித்து, அவர்களை போஷித்து வருகிறார்.
பண்டையகாலத்து உண்மையுள்ளோர்
அப்போஸ்தலன் பவுலும்கூட சில சமயங்களில் ஏழ்மையில் இருந்திருக்கிறார். (2 கொரிந்தியர் 6:3, 4) கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில் வாழ்ந்திருந்த ‘மேகம் போன்ற திரளான’ உண்மையுள்ள சாட்சிகளையும்கூட அவர் விவரித்தார், அவர்களில் சிலர் “செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் . . . அநுபவித்தார்கள்; அவர்கள் வனாந்திரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.”—எபிரெயர் 11:37, 38; 12:1.
இப்படிப்பட்ட உண்மையுள்ளோரில் ஒருவர் எலியா தீர்க்கதரிசி. மூன்றரை ஆண்டுகால பஞ்சத்தின் போது, யெகோவா அவருக்கு தொடர்ந்து உணவளித்து வந்தார். முதலாவது, காகங்கள் தீர்க்கதரிசிக்கு அப்பத்தையும் இறைச்சியையும் கொண்டுவரும்படியாகச் செய்தார். (1 இராஜாக்கள் 17:2-6) பிறகு, எலியாவுக்கு உணவளித்த ஒரு விதவையின் மாவும் எண்ணெயும் அற்புதத்தினால் நெடுநாட்கள் வரும்படியாக யெகோவா செய்தார். (1 இராஜாக்கள் 17:8-16) உணவு மிகவும் எளிமையானதாக இருந்தது, ஆனால் அது தீர்க்கதரிசியையும், அந்த ஸ்திரீயையும், அவளுடைய மகனையும் உயிரோடே காத்தது.
அதேவிதமாகவே கடினமான பொருளாதார காலங்களின்போது உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய எரேமியாவை யெகோவா ஆதரித்துவந்தார். எருசலேமை பாபிலோன் முற்றுகையிட்ட சமயத்தில் மக்கள் “அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு”க்கொண்டிருந்தபோது எரேமியா உயிரோடே காக்கப்பட்டார். (எசேக்கியேல் 4:16) கடைசியாக, நகரத்தில் பஞ்சம் மிகவும் கடுமையானபோது சில பெண்கள் தங்கள் சொந்த பிள்ளைகளின் மாம்சத்தை சாப்பிட்டார்கள். (புலம்பல் 2:20) எரேமியா பயமின்றி பிரசங்கித்த காரணத்துக்காக காவலில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், “நகரத்திலே அப்பமிருக்குமட்டும்” தினம் ‘ஒரு அப்பம்’ அவருக்குக் கிடைக்கும்படி யெகோவா செய்தார்.—எரேமியா 37:21.
ஆகவே எலியாவைப் போலவே எரேமியாவுக்கும் சாப்பிட கொஞ்சம்தான் இருந்தது. எருசலேமில் அப்பம் தீர்ந்துபோனபின்பு, எரேமியா என்ன சாப்பிட்டார் என்றோ அல்லது எப்போதெல்லாம் சாப்பிட்டார் என்றோ வேதவாக்கியங்கள் நமக்குச் சொல்லவில்லை. இருந்தாலும், யெகோவா அவரைக் காத்து வந்தார், அவர் அந்தக் கொடிய பஞ்ச காலத்தில் சாகாமல் பிழைத்திருந்தார் என்பதை நாம் அறிவோம்.
இன்று, உலகின் ஒவ்வொரு பாகத்திலும் வறுமை இருந்துவருகிறது. ஐக்கிய நாடுகளின் பிரகாரம், ஆப்பிரிக்காவில்தான் மிகக் கொடிய வறுமை காணப்படுகிறது. 1996-ல் ஐநா செய்தி அறிக்கை ஒன்று இவ்வாறு சொன்னது: “ஆப்பிரிக்க மக்களில் குறைந்தபட்சம் பாதிபேராவது ஏழ்மையில் இருக்கிறார்கள்.” மோசமாகிக்கொண்டே வரும் மிகக் கடினமான பொருளாதார சூழ்நிலைமைகளின் மத்தியிலும், தங்கள் வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பின்பற்றிக்கொண்டு கடவுள் தங்களைக் காப்பார் என்ற நம்பிக்கையோடு அவரை உண்மையுடன் சேவித்து வரும் ஆப்பிரிக்க மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. குழப்பங்கள் நிறைந்த நம்முடைய உலகின் ஒரு பகுதியிலிருந்து வரும் சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
நேர்மையைக் காத்துக்கொள்ளுதல்
நைஜீரியாவில் வாழ்ந்துவரும் மைக்கல்,a ஒரு விவசாயி; இவர் ஆறு பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. “உங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள உங்களிடம் பணம் இல்லையென்றால் நேர்மையாக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல” என்பதாக அவர் சொல்கிறார். “இருப்பினும் நேர்மையற்றவிதமாக நடந்துகொள்ள எனக்குச் சோதனைவந்தால், நான் எபேசியர் 4:28-ஐ ஞாபகப்படுத்திக் கொள்வேன், அது சொல்கிறது: ‘திருடுகிறவன் இனித் திருடாமல், தன் கைகளினால் நலமான வேலையை செய்து பிரயாசப்படக்கடவன்.’ ஆகவே, எனக்கு அப்படிப்பட்ட சோதனை வரும்போது, “இது என் உழைப்பால் வந்த பணமா?” என்பதாக என்னை நானே கேட்டுக்கொள்வேன்.”
“உதாரணமாக, ஒரு நாள் நான் நடந்துசென்றுகொண்டிருக்கையில், ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து ஒரு கைப்பை கீழே விழுவதைப் பார்த்தேன். என்னால் அவரை நிறுத்த முடியவில்லை, ஆகவே அதை எடுத்து பார்த்தபோது அதில் நிறைய பணம் இருப்பதை கண்டேன்! அதிலிருந்த அடையாளத்தை வைத்து அதன் சொந்தக்காரரை நான் கண்டுபிடித்து பையை அவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.”
மனச்சோர்வை சமாளித்தல்
வட ஆப்பிரிக்காவில் ஒரு மனிதன் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆழமான ஒரு பள்ளத்தில் மாட்டிக்கொண்டு மேலே வெளிச்சத்தையும் மக்கள் சுதந்தரமாக நடமாடிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தாலும், உதவிகேட்டு சப்தமிட முடியாமலும் அல்லது வெளியே வருவதற்கு ஒரு ஏணியைக் கேட்க முடியாமலும் இருக்கும் ஒருவரைப் போலவே வறுமை இருக்கிறது.” மனச்சோர்வு, விரக்தி போன்ற உணர்வுகளை பெரும்பாலும் வறுமை உண்டாக்குவதால், இதில் ஆச்சரியமடைய ஒன்றுமில்லையே! கடவுளுடைய ஊழியர்களும்கூட மற்றவர்களுடைய செல்வத்தைப் பார்த்து நேர்மையான ஒரு வாழ்க்கை பிரயோஜனமற்றது என்பதாக நினைக்க ஆரம்பித்துவிடலாம். (சங்கீதம் 73:2-13-ஐ ஒப்பிடுக.) இப்படிப்பட்ட உணர்ச்சிகளை எவ்வாறு சமாளிக்க முடியும்?
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பீட்டர் 19 ஆண்டுகளுக்குப்பின் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். இப்பொழுது அவர் முக்கியமாக கொஞ்ச ஓய்வு ஊதியத்தை வைத்தே வாழ்க்கை நடத்திவருகிறார். “நான் உற்சாகமிழக்கும் சமயங்களில், பைபிளிலும் உவாட்ச் டவர் பிரசுரங்களிலும் வாசித்தவற்றை நான் நினைவுபடுத்திக்கொள்வேன்,” என்பதாக பீட்டர் சொல்கிறார். “இந்தப் பழைய ஒழுங்குமுறை கடந்துபோகவிருக்கிறது, நாம் மேம்பட்ட ஒரு ஒழுங்குமுறைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.
“மேலும் 1 பேதுரு 5:9-ஐப் பற்றி நான் யோசித்துப் பார்ப்பேன், அது சொல்கிறது, ‘விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.’ ஆகவே நான் மட்டுமே பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கவில்லை. இந்த நினைப்பூட்டுதல்கள் உற்சாகமிழக்கச் செய்யும் மற்றும் சோர்வூட்டும் எண்ணங்களைத் தள்ளிவிட எனக்கு உதவிசெய்கிறது.”
“இதைத் தவிர, பூமியிலிருக்கும்போது இயேசு அநேக அற்புதங்களை நடப்பித்தார், ஆனால் எவரையும் பொருள் சம்பந்தமாக செல்வந்தராக ஆக்கவில்லை. அவர் என்னைச் செல்வந்தனாக ஆக்கவேண்டும் என்று நான் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?” என பீட்டர் மேலும் கேட்கிறார்.
ஜெபத்தின் வல்லமை
எதிர்மறையான எண்ணங்களைச் சமாளிப்பதற்கான மற்றொரு வழி யெகோவா தேவனிடம் ஜெபத்தில் நெருங்கிவருவதாகும். மேரி 1960-ல் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆனபோது, அவருடைய குடும்பத்தார் அவரை கைவிட்டுவிட்டார்கள். திருமணம் செய்துகொள்ளாதவராய் 50 வயதுகளில் இருக்கும் அவர், மிகவும் பலவீனமாகவும் ஏழையாகவும் இருக்கிறார். இருந்தபோதிலும் கிறிஸ்தவ ஊழியத்தில் அவர் வைராக்கியமாக இருக்கிறார்.
மேரி சொல்கிறார்: “நான் சோர்வாக உணரும்போது, யெகோவாவிடம் ஜெபம் செய்கிறேன். அவரைவிட அதிகமாக வேறு எவராலும் எனக்கு உதவிசெய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். யெகோவாவை நம்பியிருக்கும்போது அவர் உதவிசெய்கிறார் என்பதை நான் அறிந்துகொண்டிருக்கிறேன். சங்கீதம் 37:25-ல் காணப்படும் தாவீது ராஜாவின் இந்த வார்த்தைகளை, அதாவது ‘நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை’ என்ற வார்த்தைகளை நான் எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
“காவற்கோபுரம் பத்திரிகையில் வெளிவரும் முதிர்வயதான ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின் அனுபவங்களிலிருந்தும்கூட நான் உற்சாகத்தைப் பெற்றுக்கொள்கிறேன். யெகோவா தேவன் அவர்களுக்கு உதவிசெய்தார், ஆகவே எனக்கும்கூட அவர் தொடர்ந்து உதவிசெய்வார் என்று எனக்குத் தெரியும். ஃபுஃபு உணவை [மரவள்ளி உணவை] தயாரித்து விற்கும் என்னுடைய சிறிய வேலையை அவர் ஆசீர்வதிக்கிறார், என்னுடைய அன்றாட தேவைகளை நான் சமாளித்துக்கொள்கிறேன். சில சமயங்களில் என்னிடம் பணமே இல்லாமல், என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கும்போது யெகோவா யாரையாவது என்னிடம் அனுப்பிவைக்கிறார், அவர் எனக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து, ‘சகோதரியே, தயவுசெய்து இதை வாங்கிக்கொள்ளுங்கள்,’ என்று சொல்கிறார். யெகோவா என்னை ஒருபோதும் கைவிடவில்லை.”
பைபிள் படிப்பின் மதிப்பு
யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பதை மதித்துணருகிறார்கள். அவர்கள் மத்தியில் ஏழைகளாக இருப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அறுபது வயதுள்ள ஜான் ஒரு பயனியராகவும் (முழு நேர ராஜ்ய பிரசங்கி) சபையில் ஒரு உதவி ஊழியராகவும் சேவை செய்துவருகிறார். 13 குடும்பங்கள் குடியிருக்கும் சரிவர கட்டப்படாத இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் அவர் வசிக்கிறார். முதல் மாடி நடைக்கூடத்தில் மரத்தடுப்பு ஒன்று வைக்கப்பட்ட பகுதியே அவர் வாழுமிடமாகும். அங்கே இரண்டு பழைய நாற்காலிகளும் பைபிள் படிப்பு உதவி புத்தகங்கள் உயரமாக அடுக்கி வைக்கப்பட்ட ஒரு மேசையும் இருக்கின்றன. அவர் ஒரு பாயில் தூங்குகிறார்.
ரொட்டி விற்பதன் மூலம் நாளொன்றுக்கு ஒரு டாலர் பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தார் ஜான், ஆனால் கோதுமை இறக்குமதிக்கு தேசத்தில் தடை விதிக்கப்பட்டபோது, பிழைப்புக்காக அவருக்குக் கிடைத்த வருமானம் நின்றுவிட்டது. அவர் சொல்லுகிறார்: “சில சமயங்களில் நிலைமை ரொம்ப கஷ்டமாகி விடுகிறது; ஆனால் நான் தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்கிறேன். என்னை யெகோவாதாமே காத்துவருகிறார். எனக்கு என்ன வேலை கிடைத்தாலும் அதைச் செய்கிறேன். சபையிலுள்ள சகோதரர்கள் மிகவும் உதவியாக இருந்தபோதிலும் என்னை ஆதரிக்கவோ அல்லது உணவளிக்கவோ நான் எந்த மனிதரையும் நம்பியிருப்பதில்லை. வேலை கண்டுபிடிக்க அவர்கள் எனக்கு உதவிசெய்கிறார்கள்; சில சமயங்களில் எனக்கு பணத்தை பரிசாக கொடுக்கிறார்கள்.
“பைபிளையும் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களையும் வாசிப்பதற்கு நான் நேரத்தை ஒதுக்கிவைக்கிறேன். வீடு அமைதியாக இருக்கும் அதிகாலை வேளைகளிலும் பிந்திய இரவு நேரங்களில் எப்பொழுதெல்லாம் மின்சாரம் இருக்கிறதோ அந்தச் சமயங்களிலும் நான் வாசிக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட படிப்பை விட்டுவிடக் கூடாது என்பதும் எனக்குத் தெரியும்.”
ஜீவனுக்காக பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்
மனைவியை இழந்த டேனியேல் என்பவர் ஆறு பிள்ளைகளையுடைய தந்தை. அவர் 25 வருடங்களாக செய்துவந்த வேலையை 1985-ல் இழந்துவிட்டார், ஆனால் அவருக்கு ஒரு ஸ்டோர்கீப்பர் வேலை கிடைத்தது. “குடும்பத்தை பொருளாதார ரீதியில் பராமரிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது” என்று அவர் சொல்கிறார். “இப்பொழுது எங்களால் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிட முடிகிறது. முன்பு ஒரு சமயம் மூன்று நாட்களுக்கு சாப்பிட ஒன்றுமில்லாமல் இருந்தோம்; தண்ணீர் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்து கொண்டிருந்தோம்.”
டேனியேல் சபையில் ஒரு மூப்பராக சேவைசெய்கிறார். “நான் கிறிஸ்தவ கூட்டங்களை ஒருபோதும் தவறவிடுவது கிடையாது, தேவராஜ்ய நியமிப்புகளில் நான் என்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறேன்,” என்பதாக அவர் சொல்கிறார். “ராஜ்ய மன்றத்தில் எப்பொழுதெல்லாம் வேலை இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் நான் அங்கே கண்டிப்பாக இருப்பேன். நிலைமை மிகவும் கஷ்டமாக இருக்கும்போது, யோவான் 6:68-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள, இயேசுவிடமாக பேதுரு சொன்ன வார்த்தைகளை நான் எனக்கு ஞாபகப்படுத்திக்கொள்வேன்: ‘ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்?’ யெகோவாவை சேவிப்பதை நான் நிறுத்திவிட்டால் நான் எங்கே போவேன்? ரோமர் 8:35-39-ல் நாம் காணும் பவுலின் வார்த்தைகளும்கூட என்னைத் திடதீர்மானத்தோடு இருக்கச்செய்கிறது, ஏனென்றால் கடவுளுடைய அன்பிலிருந்தும் கிறிஸ்துவினுடைய அன்பிலிருந்தும் எதுவும் நம்மை பிரிக்கமுடியாது என்பதை அவை காண்பிக்கின்றன. அதே மனநிலையைத்தான் நான் என்னுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கிறேன். நாம் ஒருபோதும் யெகோவாவைவிட்டு விலகி விடக்கூடாது என்பதை நான் எப்போதும் என்னுடைய பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.” டேனியேலின் வைராக்கியமும், ஒழுங்கான குடும்ப பைபிள் படிப்பும் சேர்ந்து அவருடைய பிள்ளைகளின்மீது நம்பிக்கையான ஒரு செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கின்றன.
கொடுக்கும் மனப்பான்மை
மிகவும் வறுமையில் இருப்பவர்கள் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு எந்தவொரு பொருள் சம்பந்தமான காணிக்கையையும் கொடுக்கும் நிலைமையில் இருக்கமாட்டார்கள் என்பதாக ஒருவேளை ஒருவர் யோசிக்கலாம். ஆனால் அது அவ்வாறு இல்லை. (லூக்கா 21:1-4-ஐ ஒப்பிடுக.) விவசாயத் தொழில் செய்யும் கானாவிலுள்ள சில சாட்சிகள், தங்களுடைய நிலத்தின் ஒரு பகுதியை கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு பயன்படுத்துவதற்காக ஒதுக்கி வைத்துக்கொள்கிறார்கள். தங்களுடைய நிலத்தில் அந்தப் பகுதியில் விளையும் பொருட்களை விற்கும்போது, அந்தப் பணம் ராஜ்ய அக்கறைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது, இதில் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்துக்கு நன்கொடை அளிப்பதும் அடங்கும்.
மத்திய ஆப்பிரிக்காவில் வாழும் ஜோயன் ஒரு பயனியர். கைகால் விளங்காத கணவனையும் தன்னைச் சார்ந்துள்ள மற்ற நான்கு பேரையும் காப்பாற்றுவதற்காக, அவர் ரொட்டி விற்று வாழ்க்கை நடத்துகிறார். அவர் போய்க்கொண்டிருந்த ராஜ்ய மன்றத்துக்கு பெஞ்சுகள் தேவைப்பட்டபோது, ஜோயனின் குடும்பம் தங்களிடமிருந்த எல்லா பணத்தையும் அதற்காக நன்கொடையாக அளித்துவிட தீர்மானித்தது. அவர்களிடம் இப்பொழுது ஒன்றுமே இல்லை. இருப்பினும், அடுத்த நாள், ரொம்ப நாளாக கடனை கொடுக்காமல் இருந்த யாரோ ஒருவர் எதிர்பாராத விதமாக வந்து அந்தக் கடனை திருப்பித்தந்தார், இந்தப் பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை துளியும் இல்லாத சமயத்தில் இது கையில் கிடைத்தது!
ஜோயன் மகிழ்ச்சியாக இருக்கிறார், பணத்தைப் பற்றி அவர் அனாவசியமாக கவலைப்படுவதே இல்லை. “என்னுடைய நிலைமையை நான் யெகோவாவிடம் ஜெபத்தில் விளக்குகிறேன், பின்னர் நான் வெளி ஊழியத்துக்குச் சென்றுவிடுகிறேன். இந்தக் காரிய ஒழுங்கில் மேம்பட்ட நிலைமைகள் வருமென நம்புவதற்கு எதுவுமில்லை என்று நமக்குத் தெரியும். இருந்தபோதிலும், யெகோவா நமக்கு படியளப்பார் என்பதையும் அறிந்துள்ளோம்.”
சுறுசுறுப்பாக உழைத்தல்
ஒருவருக்கொருவர் காண்பிக்கும் அன்பினால் யெகோவாவின் சாட்சிகள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர். (யோவான் 13:35) வசதியுள்ளவர்கள் தேவையிலிருக்கும் தங்கள் உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு பரிசாக தரப்படுகிறது; சில சமயங்களில் வேலைவாய்ப்பு தந்து உதவி செய்யப்படுகிறது.
காங்கோவில் வாழும் மார்க் குஷ்டரோகத்தினால் கஷ்டப்படுகிறார். இதனால் அவருடைய கால் விரல்களும் கை விரல்களும் உருக்குலைந்துள்ளன. ஆகவே நடப்பதற்கு அவருக்கு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. மார்க் யெகோவாவைச் சேவிக்க தீர்மானித்தபோது, அவர் தன்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தார். முன்பு செய்து வந்ததுபோல உணவுக்காக பிச்சை எடுப்பதற்கு பதிலாக, சொந்தமாக பயிரிட ஆரம்பித்தார். அவர் சுடப்படாத செங்கல்களைச் செய்து அவற்றை விற்கவும் செய்தார்.
மார்க் தன் சரீரப்பிரகாரமான குறைபாட்டின் மத்தியிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக உழைத்து வந்தார். கடைசியில் அவர் கொஞ்சம் நிலத்தை வாங்கி அதில் எளிமையாக ஒரு வீட்டையும் கட்டினார். இன்று, மார்க் ஒரு சபை மூப்பராகச் சேவிக்கிறார், அவர் வாழ்ந்துவரும் நகரத்தில் அவரை மிகவும் மதிப்பாக நடத்துகிறார்கள். இப்பொழுது அவர் தேவையிலிருக்கும் மற்றவர்களுக்கு உதவிசெய்து வருகிறார்.
நிச்சயமாகவே, வேலை கிடைப்பதென்றால் அநேக இடங்களில் குதிரைக் கொம்பாகிவிட்டது. மத்திய ஆப்பிரிக்காவில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளைக் காரியாலயங்கள் ஒன்றில் சேவை செய்யும் ஒரு கிறிஸ்தவ மூப்பர் இவ்விதமாக எழுதினார்: “இங்கே இருக்கும் அநேக சகோதரர்களுக்கு வேலை இல்லை. சிலர் சுயதொழில் செய்ய முயற்சி செய்கிறார்கள், ஆனால் இது கடினமாக உள்ளது. இனி என்னதான் செய்தாலும் கஷ்டம் என்னவோ தீரப்போவதில்லை; எனவே பொருளாதார வசதிகளை தியாகம் செய்துவிட்டு, பயனியர் ஊழியர்களாக இருக்கலாம் என்று அவர்கள் யோசிக்கிறார்கள். அவ்விதமாகச் செய்கையில், கொஞ்சம் வருமானமுள்ள அல்லது வருமானமே இல்லாத ஒரு வேலையில் இருப்பதைவிட தாங்கள் அதிக அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படுவதை அநேகர் அனுபவிக்கின்றனர்.”
யெகோவா தம் மக்களை போஷிக்கிறார்
இயேசு கிறிஸ்து தம்மைப்பற்றி இவ்வாறு சொன்னார்: “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.” (லூக்கா 9:58) அதேவிதமாகவே, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.”—1 கொரிந்தியர் 4:11.
இயேசுவும் பவுலும் தங்கள் ஊழியத்தை இன்னும் அதிக முழுமையாக தொடர்ந்து செய்வதற்காக வேண்டி எளிமையான வாழ்க்கையைத் தெரிந்துகொண்டார்கள். தற்கால கிறிஸ்தவர்களில் அநேகர் வேறு வழியின்றி இருப்பதால் ஏழைகளாக இருக்கின்றனர். இருந்தபோதிலும், அவர்கள் வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்தி கடவுளை வைராக்கியமாக சேவிக்க நாடுகிறார்கள். இயேசுவினுடைய உறுதிமொழியின் உண்மையை அனுபவிக்கையில் யெகோவா தங்களை மிகவும் நேசிக்கிறார் என்பதை அவர்கள் அறிகிறார்கள்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [பொருளாதார காரியங்கள்] உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:25-33) மேலுமாக, ஏழ்மையிலிருக்கும் கடவுளின் இந்த ஊழியர்கள் ‘[யெகோவாவின்] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்’ என்பதற்கு அத்தாட்சியை உடையவர்களாக இருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 10:22.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 6-ன் பெட்டி]
‘திருவசனத்தின்படி செய்கிறவர்கள்’ யார்?
1994 கேலப் வாக்கெடுப்பின்படி, 96 சதவீத அமெரிக்கர் “கடவுளில் அல்லது ஒரு பிரபஞ்ச ஆவியில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” “பூமியிலுள்ள வேறெந்தத் தேசத்தைக் காட்டிலும் ஐக்கிய மாகாணங்களிலுள்ள சர்ச்சுகளின் விகிதாச்சாரமே அதிகம்” என்று யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் சொன்னது. பார்வைக்கு இப்படி பக்தியாய் தோன்றினாலும், திறமைமிக்க வாக்கெடுப்பாளராகிய இளைய ஜார்ஜ் கேலப் இவ்வாறு சொல்கிறார்: “அப்பட்டமான உண்மை என்னவென்றால், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தாங்கள் எதை நம்புகிறார்கள் என்றோ ஏன் நம்புகிறார்கள் என்றோ தெரியாது.”
அநேக மக்களுடைய மத நம்பிக்கைகளுக்கும் அவர்களுடைய செயல்களுக்கும் இடையே ஒரு பெரும்பிளவு இருப்பதையும்கூட புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, “நாட்டிலேயே மிகப் பெரியளவில் குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதிகள்தான் மத நம்பிக்கையிலும் பழக்கத்திலும் ஊறிப்போன இடங்களாகவும் இருக்கின்றன என சமுகவியலர்கள் குறிப்பிடுகின்றனர்” என்பதாக சொல்கிறார் எழுத்தாளராகிய ஜெஃப்ரி ஷெலர்.
இது ஆச்சரியமடையச் செய்ய வேண்டியதில்லை. ஏன்? ஏனென்றால், முதல் நூற்றாண்டிலேயே, ‘தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணி, கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறவர்களைக்’ குறித்து ஜாக்கிரதையுடன் இருக்கும்படி உடன் கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (தீத்து 1:16) மேலும், ‘தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கும்’ மக்களால் ‘கடைசிநாட்கள்’ அடையாளப்படுத்திக் காண்பிக்கப்படும் என இளம் மனிதனாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் சொன்னார்.—2 தீமோத்தேயு 3:1, 5.
என்றபோதிலும், மெய் கிறிஸ்தவர்கள், ‘புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி’ இயேசு கிறிஸ்து கொடுத்த கட்டளையைப் பின்பற்றுவதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள். (மத்தேயு 28:19) இந்த முறையில் அவர்கள் ‘திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாயும் இருக்கிறார்கள்.’—யாக்கோபு 1:22.
[பக்கம் 7-ன் படம்]
உலகெங்கிலும் மக்கள் பைபிள் படிப்பை மதிக்கிறார்கள்