விசுவாசமும் ஞானமும் நமக்கு ஏன் தேவை
யாக்கோபு-விலிருந்து முக்கிய குறிப்புகள்
சோதனையின் கீழ் இருக்கையில் யெகோவாவின் ஊழியர்களுக்கு சகிப்புத் தன்மை தேவை. தெய்வீக அங்கீகாரத்தை இழந்துவிடுவதில் விளைவடையக்கூடிய பாவங்களையும் அவர்கள் தவிர்க்க வேண்டும். யாக்கோபின் நிருபத்தில் அப்படிப்பட்ட குறிப்புகள் அழுத்திக்காட்டப்படுகின்றன. அவைகளைக் குறித்து உடன்பாடான ஏதோவொன்றைச் செய்வது என்பது, சுறுசுறுப்பான விசுவாசத்தையும், பரம ஞானத்தையும் அவசியப்படுத்துகிறது.
இந்த நிருபத்தை எழுதியவர், தன்னை யாக்கோபு என்ற பெயருள்ள இயேசுவின் இரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராக அடையாளம் காட்டவில்லை. ஆனால் “தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் ஓர் ஊழியக்காரன் (அடிமை)” என்றே அடையாளம் காட்டுகிறார். அதைப் போலவே, இயேசுவின் ஒன்றுவிட்டச் சகோதரன், யூதாவும் தான் “இயேசுவின் ஊழியக்காரனும் (அடிமையும்) யாக்கோபின் சகோதரனுமாக” இருப்பதாக கூறுகிறார். (யாக்கோபு 1:1; யூதா 1; மத்தேயு 10:2, 3) ஆதலால் தெளிவாகவே, இயேசுவின் ஒன்றுவிட்டச் சகோதரனாகிய யாக்கோபு, தன் பெயரைக் கொண்ட நிருபத்தை எழுதினார்.—மாற்கு 6:3.
பொ.ச. 70-ல் நிகழ்ந்த எருசலேமின் அழிவை இந்த நிருபம் குறிப்பிடவில்லை. ரோம அதிபதியான பெஸ்து இறந்து சிறிது காலத்திற்குப் பிறகு யாக்கோபு உயிர்த் தியாகம் செய்யப்பட்டார் என்று சரித்திராசிரியனான ஜோஸிபஸ் சுட்டிக் காட்டுகிறார். அப்படியானால் அந்த நிருபம் பொ.ச. 62-ற்கு முன்பு எழுதப்பட்டது என்பது வெளிப்படையாக இருக்கிறது. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் பற்றிக்” கொண்டிருப்பவர்களை நோக்கிக் கூறப்பட்டிருப்பதினால், ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய “பன்னிரண்டு கோத்திரத்தா”ருக்கு அது எழுதப்பட்டது.—யாக்கோபு 1:1; 2:1; கலாத்தியர் 6:16.
அவருடைய அறிவுரையை நினைவுபடுத்திக்கொள்ள நமக்கு உதவும் திருஷ்டாந்தங்களை யாக்கோபு பயன்படுத்துகிறார். உதாரணமாக, தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவன் சந்தேகப்படாமல் கேட்கக்கடவன் என்கிறார். ஏனென்றால், “சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.” (1:5-8) நமது நாவு அடக்கப்பட வேண்டும், ஏனென்றால், அது, சுக்கான் ஒரு படகை தேவையான திசையில் செலுத்துவது போல், நம்முடைய பாதையைத் திருப்ப முடியும். (3:1, 4) சோதனைகளைச் சமாளிப்பதற்கு, ஒரு விவசாயி அறுவடைக்காகக் காத்திருக்கையில் செய்வதுபோல, நாம் பொறுமையாக சகிப்புத்தன்மையைக் காட்ட வேண்டும்.—5:7, 8.
விசுவாசம், சோதனைகள், கிரியைகள்
நமக்குச் சோதனைகள் இருந்தபோதிலும் கிறிஸ்தவர்களாக நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை முதலாவதாக யாக்கோபு காட்டுகிறார். (1:1-18) இந்தச் சோதனைகளில் சில, உடல் நல கேடுகள் போன்றவை, எல்லா மனிதருக்கும் பொதுவானவை. ஆனால் கிறிஸ்தவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமைகளாயிருப்பதனாலும்கூட துயரம் அனுபவிக்கிறார்கள். ஆக, நாம் தொடர்ந்து விசுவாசத்துடன் சகித்திருப்பதற்கு தேவையான ஞானத்தைக் கேட்டுக் கொண்டேயிருந்தால், யெகோவா அதை நமக்கு அளிப்பார். பொல்லாத காரியங்களால் அவர் நம்மை ஒருபோதும் சோதிப்பதில்லை. நன்மையானதை நமக்கு அவர் அளிப்பதற்கு நாம் அவர் பேரில் சார்ந்திருக்கலாம்.
கடவுளின் உதவியைப் பெற வேண்டுமென்றால், நாம் நம் விசுவாசத்தை வெளிப்படுத்திக் காட்டும் கிரியைகளின் மூலம் அவருக்கு வணக்கத்தைச் செலுத்த வேண்டும். (1:19–2:26) நாம் வெறுமென கேட்பவர்களாக மட்டுமிராமல், ‘வார்த்தையின்படி செய்கிறவர்களாயுமிருத்தலை’ இது தேவைப்படுத்துகிறது. நாம் நாவை அடக்க வேண்டும். அனாதைகளையும் விதவைகளையும் விசாரித்துக் கவனித்துக்கொள்ள வேண்டும்; அதோடு இந்த உலகத்தால் கறைபடாதபடிக்கு இருக்கவும் வேண்டும். பணக்காரரை ஆதரித்து, ஏழையை அலட்சியம் செய்வோமானால், நாம் அன்பென்னும் “ராஜரிக சட்டத்தை” மீறுகிறவர்களாயிருப்போம். விசுவாசம் கிரியைகளினால் காட்டப்படுகிறது என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். ஆபிரகாம், ராகாப் இவர்களின் உதாரணங்கள் இதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. மெய்யாகவே “கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது.”
பரத்திலிருந்து வரும் ஞானமும் ஜெபமும்
போதகர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, விசுவாசம், ஞானம் இரண்டும் அவர்களுக்குத் தேவை. (3:1-18) போதகர்களாக அவர்கள் மிக கனத்த உத்தரவாதத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போல நாம் நாவை அடக்கியாக வேண்டும். பரத்திலிருந்து வரும் ஞானம் நாம் அதைச் செய்ய நமக்கு உதவுகிறது.
உலகப்பிரகாரமான மனச்சாய்வுகளுக்கு இணங்கிவிடுதல், கடவுளோடு நமக்கிருக்கும் உறவை சேதப்படுத்திவிடும் என்பதை உணரவும்கூட ஞானம் நமக்கு உதவிசெய்கிறது. (4:1–5:12) சுயநலமான குறிக்கோள்களை அடைவதற்காக நாம் போராடியிருந்தாலோ நம் சகோதரர்களைக் கண்டனம் செய்திருந்தாலோ, நாம் மனம் திரும்ப வேண்டியது அவசியம். இந்த உலகத்துடன் சிநேகத்தைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது, ஏனென்றால் அது ஆவிக்குரிய வேசித்தனமாகும்! பொருளாசைக்கேற்ற திட்டங்களை முன்னேற்றுவிப்பதன் மூலம் கடவுளுடைய சித்தத்தை நாம் ஒருபோதும் அசட்டை செய்யாதிருப்போமாக, மேலுமாக, நாம் ஒருவருக்கொருவர் பொறுமை இழந்து, பெருமூச்சுவிடும் ஆவிக்கு எதிராக எச்சரிப்புடனிருப்போமாக.
ஆவிக்குரிய விதத்தில் வியாதிப்பட்டிருக்கிற எவரும் சபையின் மூப்பர்களின் உதவியை நாட வேண்டும். (5:13-20) பாவங்கள் செய்யப்பட்டிருந்தால், அவர்களுடைய ஜெபங்களும் ஞானமான அறிவுரையும் மனத் திரும்பிய ஒரு பாவியின் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை நிலைநாட்ட உதவும். உண்மையில், “ஒரு பாவியை அவனுடைய தவறான வழியிலிருந்து திருப்புகிற ஒருவர், அந்த (தவறு செய்தவனுடைய) ஆத்துமாவை (ஆவிக்குரிய மேலும் நித்திய) மரணத்திலிருந்து பாதுகாப்பார்.” (w91 3/15)
[பக்கம் 29-ன் பெட்டி]
வார்த்தையின்படி செய்கிறவர்கள்: “நாம் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல வார்த்தையின்படி செய்பவர்களாகவும்” இருக்கவேண்டும். (யாக்கோபு 1:22-25) வெறுமென கேட்பவராய் மட்டுமிருப்பவர், “கண்ணாடியில் தன் இயல்பான முகத்தைக் காணும் ஒரு மனிதனைப் போலிருக்கிறான்.” சிறிதளவே உற்றுப் பார்த்தபின் “அவன் கிளம்பிவிடுகிறான்; உடனடியாக தான் எப்படிப்பட்ட ஆள் என்பதை மறந்துவிடுகிறான்.” ஆனால் “வார்த்தையின்படி செய்பவனோ” கடவுளுடைய பரிபூரண அல்லது முழுமையான சட்டத்திலே ஜாக்கிரதையாக உற்று நோக்குகிறான்; ஒரு கிறிஸ்தவனிடத்திலிருந்து எதிர்பார்க்கப்படுவது யாவற்றையும் ஏற்றுக்கொள்கிறான். அவன் தொடர்ந்து அந்தச் சட்டத்திற்கு அதிக நெருக்கமாக இசைந்திருக்கும் பொருட்டு திருத்தங்களைச் செய்து கொள்வதற்காக அதிக நெருக்கமாக ஆராய்ந்து பார்ப்பதில் ‘நிலைத்திருக்கிறான்.’ (சங்கீதம் 119:16) “வார்த்தையின்படி செய்பவன்,” கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து, பிறகு அது என்ன வெளிப்படுத்துகிறதோ அதைப் பற்றி மறப்பவனிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறான்? ஏன், செய்பவன், யெகோவாவின் வார்த்தையை கிரியையில் காட்டி அவருடைய ஆதரவை அனுபவித்துக் களிக்கிறான்!—சங்கீதம் 19:7-11.