நீங்கள் எப்போதாவது காட்டுத்தீயை மூட்டியிருக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை, என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் பொறுங்கள்! ஒருவேளை நீங்கள் மூட்டியிருக்கக்கூடும். சீஷனாகிய யாக்கோபின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!”—யாக்கோபு 3:5.
நாக்கு, பேச்சுக்குத் தேவையான ஒரு முக்கிய உறுப்பு, ஆனாலும் அது எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது! மக்கள் பொய்ச் சொல்லுவதற்கும் பழிதூற்றுவதற்கும் நாக்கைப் பயன்படுத்துகின்றனர். அதை வைத்து அவர்கள் மற்றவர்களைக் கடுமையாகக் குறைசொல்லுகின்றனர், அவர்களுடைய நற்பெயரைக் கெடுக்கின்றனர், அவர்களை ஏமாற்றுகின்றனர். கிளர்ச்சிகளை எழுப்புபவர்கள் புரட்சியைத் தூண்டுவதற்கு நாக்கைப் பயன்படுத்துகின்றனர். ஒரு தேசத்தை போருக்குத் திரட்டுவதற்கு அடால்ஃப் ஹிட்லர் தன் நாக்கைப் பயன்படுத்தினான்—உண்மையில் ஒரு ‘காட்டுத் தீயே!’
நல்ல உள்நோக்கங்களைக் கொண்டிருப்பவர்கள்கூட சிறிய ‘காட்டுத் தீக்களை’ உருவாக்கலாம். நீங்கள் ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு உடனடியாக அதை அழித்துச் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எப்போதாவது விரும்பியிருக்கிறீர்களா? அப்படியானால், பின்வருமாறு யாக்கோபு சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்: “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது.”—யாக்கோபு 3:8.
இருந்தாலும், நாம் நம்முடைய நாக்கை நன்மைக்காகப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். சங்கீதக்காரனைப்போல், நாம் உறுதியுடன் சொல்லலாம்: “என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து” கொள்வேன். (சங்கீதம் 39:1) கடுமையாக மற்றவர்களைக் குறைகாண்பதற்கு மாறாக, நாம் அவர்களைக் கட்டியெழுப்ப முயற்சி செய்யலாம். மக்களைப் பழிதூற்றுவதற்கு மாறாக, அவர்களைப்பற்றி நல்லவற்றைப் பேசலாம். ஏமாற்றுவதற்கும் வஞ்சிப்பதற்கும் மாறாக, உண்மையைப் பேசி, போதிக்கலாம். ஒரு நல்ல இருதயத்தால் தூண்டப்படும்போது, வியக்கத்தகு குணப்படுத்தும் வார்த்தைகளை நாக்கால் பேச முடியும். மனிதவர்க்கத்துக்கு இரட்சிப்பைப்பற்றி போதிப்பதற்கு இயேசு தம்முடைய நாக்கை ஒரு மகத்தான வழியில் பயன்படுத்தினார்.
உண்மையாகவே, “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்.” (நீதிமொழிகள் 18:21) உங்களுடைய நாக்கு மரணத்திற்குரியதா அல்லது ஜீவனை அளிப்பதாக இருக்கிறதா? அது ‘காட்டுத் தீக்களை’ மூட்டுகிறதா அல்லது அவற்றை அணைக்கிறதா? சங்கீதக்காரன் கடவுளிடம் ஜெபித்தார்: “உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.” (சங்கீதம் 119:172) சங்கீதக்காரனுடைய மனநிலையை நாம் வளர்த்துக்கொண்டால், நாமும் நம்முடைய நாக்கை நன்மைக்காகப் பயன்படுத்துவோம்.