சாத்தானின் தந்திரங்களுக்கு எதிராக உறுதியாக நில்லுங்கள்
“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு [கிரேக்கு, “தந்திரமான செயல்கள்”] எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்.”—எபேசியர் 6:11.
சாத்தான் உண்மையிலேயே இருக்கிறானா? பைபிளில் “சாத்தான்,” மனிதனுக்குள்ளிருக்கும் தீமையை மாத்திரமே குறிக்கிறது என்பதாக சில ஆட்கள் வாதாடுகிறார்கள். ஓர் ஆளாக அவன் இருப்பதை அவர்கள் மறுதலிக்கிறார்கள். ஆனால் வேதாகமம் நமக்குச் சொல்வது என்ன? மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிசேஷப் பதிவு கிறிஸ்து இயேசு மூன்று முறை சாத்தானால் நேரடியாக சோதிக்கப்பட்டார் என்பதைக் காண்பிக்கிறது. ஒவ்வொரு சமயமும் இயேசு வேதாகம வசனத்தை உபயோகித்து அவனை நிராகரித்தார். இயேசு எபிரெய வேதாகமத்திலிருந்து அவனுக்கு ஏன் பதிலளித்தார்? ஏனென்றால் வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய கடவுளின் குமாரனாகிய அவரைப் பாவம் செய்ய வைத்துத் தோல்வியுறச் செய்ய சாத்தான் அதே வேதவசனங்களைத் தவறாக பொருத்துகிறவனாக அவரிடத்தில் வந்தான்.—மத்தேயு 4:1–11; லூக்கா 4:1–13.
2 பரிபூரண மனிதனாக, இயேசு, இந்தச் சந்திப்புகளைக் கற்பனை செய்யவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. (எபிரெயர் 4:15; 7:26) ஏதேனில் சர்ப்பத்துக்குப் பின்னாலிருந்த அதே சக்தியை அவர் எதிர்ப்பட்டார். இவன் பல யுகங்களுக்கு முன்பாக, கலகஞ் செய்தவனும், இப்பொழுது, ஆதியாகமம் 3:15-ன் நிறைவேற்றத்தைத் தடைச் செய்ய முனைப்புடனுமிருந்த அவருடைய சொந்த முன்னாள் தேவதூத சகோதரனாக இருந்தான். சாத்தான் வாக்குப்பண்ணப்பட்ட வித்தின் உத்தமத்தன்மையை தகர்த்துவிட விரும்பினான். அவனுடைய தந்திரமான செயல்களை அறிந்தவராய், இயேசு சோதனைக்காரனை உறுதியாக எதிர்த்தார். சாத்தானுடைய பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? “பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்த பின்பு, சில காலம் அவரைவிட்டு விலகிப் போனான்.” இயேசு ஒதுங்கிச் சென்றுவிடவில்லை என்பது தெளிவாக இருக்கிறது! ஏமாற்றமடைந்தவனாய் சாத்தான் “அவரைவிட்டு விலகிப் போனான். உடனே தேவதூதர்கள் வந்து அவருக்குப் [இயேசுவுக்கு] பணிவிடை செய்தார்கள்.”—லூக்கா 4:13; மத்தேயு 4:11.
3 நியாயமாகவே சரித்திராசிரியர் ஒருவர் குறிப்பிடுவதாவது: “பிசாசு இருப்பதையும் அவனுடைய மைய முக்கியத்துவத்தையும் கிறிஸ்தவத்தில் மறுதலிப்பது, அப்போஸ்தலர்களின் போதனைகளையும் கிறிஸ்தவ கோட்பாட்டின் சரித்திரப் பூர்வ வளர்ச்சியையும் எதிர்ப்பதாக இருக்கிறது. இதைத் தவிர வேறு விதமாக கிறிஸ்தவத்துக்கு விளக்கமளிப்பது உண்மையில் அர்த்தமற்றதாக இருப்பதன் காரணமாக, பிசாசை ஒதுக்கி வைத்த கிறிஸ்தவத்துக்காக வாதாடுவது அறிவுப்பூர்வமாக முற்றிலும் பொருத்தமற்றதாக இருக்கிறது. பிசாசு இல்லையென்றால், அப்போது கிறிஸ்தவமானது ஆரம்பத்திலிருந்தே ஒரு முக்கிய குறிப்பில் தவறானதாக அது மரித்துவிட்டிருக்கிறது.”a இந்த முடிவு இன்று பூமியிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு சவாலாக இருக்கிறது. கடவுளின் அரசுரிமையையும் மனிதனின் பற்றுறுதியையும் அழிப்பதில் முனைப்பாக இருக்கும் காணக்கூடாத ஒரு சத்துரு இருப்பதை உங்களால் உணரமுடிகிறதா?
சாத்தானின் மெய்யான தனித்தன்மை
4 சாத்தான் வல்லமை வாய்ந்த ஓர் ஆவி ஆளாக, கடவுளால் ஆரம்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தேவதூதனாக, யெகோவாவின் பரலோக சந்நிதியில் செல்வதற்கு அனுமதிப் பெற்றிருந்தவனாக இருந்தான். (யோபு 1:6) என்றபோதிலும் சாத்தான் தனக்கிருந்த சுயாதீனத்தைக் கடவுளுக்கு எதிராகப் பயன்படுத்தினான்; தந்திரமாக அவன் ஏவாளையும் அவள் மூலமாக ஆதாமையும் கீழ்ப்படியாமைக்குள்ளும் மரணத்துக்குள்ளும் வழிநடத்தினான். (2 கொரிந்தியர் 11:3) இவ்விதமாக அவன் “எதிரி” என்று பொருள்படும் சாத்தானாக மாறினான்—ஒரு கலகக்காரனாக, ஒரு பேயாக, ஒரு கொலைப்பாதகனாக, ஒரு பொய்யனாக மாறினான். (யோவான் 8:44) உண்மையில் சாத்தான் “அந்தகார லோகாதிபதியாக” இருக்கையில், “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே” என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் எத்தனை பொருத்தமானதாக இருக்கின்றன! (2 கொரிந்தியர் 6:14; 11:14; எபேசியர் 6:12) கலகம் செய்வதற்கு மற்ற தூதர்களைக் கவர்ச்சிப்பதன் மூலம் அவன் அவர்களைக் கடவுளுடைய வெளிச்சத்திலிருந்து தன்னுடைய சொந்த இருளுக்குள் வழிநடத்தினான். அவன் “பிசாசுகளின் தலைவனாக” ஆனான். இயேசு அவனை இந்த “உலகத்தின் அதிபதி” என்றும்கூட அடையாளங்காட்டினார். தெளிவாகவே, ஓர் அதிபதியாக இருப்பதற்கு அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஓர் ஆவி ஆளாக இருக்க வேண்டும்.—மத்தேயு 9:34; 12:24–28; யோவான் 16:11.
5 எபிரெய வேதாகமத்தில் சாத்தான் அபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தாலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அவன் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறான்—இதன் காரணமாக நாம் சாத்தான் என்ற பெயரை 36 தடவைகளும் பிசாசு என்ற வார்த்தையை 33 தடவைகளும் இதில் வாசிக்கிறோம். (பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பினுடைய விரிவான சொல் தொகுதி விளக்கப்பட்டியலை [Comprehensive concordance of the New World Translation of the Holy Scriptures] பார்க்கவும்.) அவன் மற்ற பெயர்களாலும் பட்டப் பெயர்களாலும்கூட அடையாளங் காண்பிக்கப்படுகிறான். இவைகளில் இரண்டை யோவான், வெளிப்படுத்துதல் 12:9-ல் பயன்படுத்தியிருக்கிறான்: “உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது.”—மத்தேயு 12:24–27; 2 கொரிந்தியர் 6:14, 15-ஐயும் பார்க்கவும்.
6 இங்கே வெளிப்படுத்துதலில் கிரேக்க வார்த்தையாகிய டையபொலாஸ் (di-a’bo-los) காணப்படுகிறது. இது “பிசாசு” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிரேக்க பண்டிதரான J. H. தய்யரின் பிரகாரம், இது சொல்லர்த்தமாக, “அவதூறு பேசுகிறவன், பொய்யாக குற்றம் சாட்டுகிறவன், பழிதூற்றுபவன்” என்று பொருள்படுகிறது. (1 தீமோத்தேயு 3:11; 2 தீமோத்தேயு 3:3, கிங்டம் இன்டர்லீனியர் ஒப்பிடவும்.) W. E. வைன், பிசாசை, “கடவுளுக்கும் மனிதனுக்கும் கொடிய சத்துருவாக” இருப்பதாக வருணிக்கிறார்.b
7 இந்தப் பெரிய எதிராளி சோம்பேறியாக இல்லை. (1 பேதுரு 5:8) ஒருவேளை அதன் காரணமாகத்தான் “பிசாசு வேலையில்லாத கைகள் செய்வதற்கு வேலையை தேடிக்கொடுகிறான்” என்று ஒரு முதுமொழி சொல்லுகிறது. எல்லா உண்மைக் கிறிஸ்தவர்களையும் அழிப்பதற்கு அவன் முனைப்பாக இருக்கிறான். (2 தீமோத்தேயு 3:12) ஒரே ஓர் எளிய காரணத்துக்காக அவன் யெகோவாவின் ஜனங்கள் மீது தன் கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடும்—உலகிலுள்ள மற்றவர்களை அவன் ஏற்கெனவே தன் ஆதிக்கத்தில் வைத்திருக்கிறான்! (1 யோவான் 5:19) இன்றைய உலகம் சாத்தானுடைய உலகமாகும். மக்கள் அதை உணர்ந்தாலும் அல்லது உணராவிட்டாலும் சரி, அவனே அதன் அதிபதியாகவும் கடவுளாகவும் இருக்கிறான். (யோவான் 12:31; 2 கொரிந்தியர் 4:4) இதன் விளைவாக யெகோவாவின் மக்களை தனிப்பட்டவர்களாகவோ அல்லது மொத்தமாகவோ அழிப்பதற்காக அவன் எல்லாவிதமான தந்திரமான அல்லது சாமர்த்தியமான செயலையும் அல்லது யோசனையையும் துணையாக நாடுவான். அவன் செயல்படுகிற ஒரு சில வழிகளை நாம் ஆராய்வோமாக.—மாற்கு 4:14, 15; லூக்கா 8:12.
சாத்தானின் சூழ்ச்சியும் தந்திரமுமான செயல்கள்
8 மனித மனோதத்துவ சாஸ்திரத்தைப் படிக்க, அதன் எல்லா இயல்பான மற்றும் தேடிக்கொள்ளப்பட்ட குறைகளோடுகூட மனித இயல்பை கூறுபோட்டு ஆராய சாத்தானுக்கு நீண்ட காலமிருந்திருக்கிறது. நம்முடைய பலவீனங்களையும் நம்முடைய வீணான தற்பெருமைகளையும் எவ்விதமாக பயன்படுத்திக் கொள்வது என்பது அவனுக்குத் தெரியும். இப்பொழுது, உங்கள் சத்துருவுக்கு உங்கள் பலவீனங்கள் தெரிந்திருந்து, நீங்கள் தாமே அவற்றை உணர்ந்து கொள்ள தவறினால் என்ன நிலைமை ஏற்படும்? அப்படியென்றால், உங்கள் ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்திலுள்ள குறுகிய துவாரங்களைப் பற்றி நீங்கள் அறியாததன் காரணமாக, உங்களை நீங்களே தற்காத்து கொள்ள முன்னேற்பாடுகளில்லாமல் இருக்கிறீர்கள். (1 கொரிந்தியர் 10:12; எபிரெயர் 12:12, 13) ஸ்காட்லாந்து நாட்டு கவிஞனின் வார்த்தைகள் எத்தனைப் பொருத்தமாக இருக்கிறது: ‘பிறர் எம்மை பார்ப்பது போல எம்மைப் பார்த்துக்கொள்ளும் வரனை ஏதாவது ஒரு சக்தி அளித்திடாதா! அது எம்மை அநேக முட்டாள்தனமான தவறுகளிலிருந்து விடுவித்திடாதா.’
9 மற்றவர்கள்—விசேஷமாக கடவுளோ அல்லது சாத்தானோ நம்மைப் பார்க்கும் விதமாக, நாம் நம்மைப் பார்த்துக் கொள்ள மனமுள்ளவர்களாக இருக்கிறோமா? அது நேர்மையாக நம்மைநாமே பகுத்து ஆராய்வதையும், நம்மை மதிப்பிட்டுக் கொள்வதையும் மாற்றத்தைச் செய்ய விருப்பமுள்ளவர்களாயிருப்பதையும் கேட்கிறது. நம்மைநாமே வஞ்சித்துக் கொள்வது மிக சுலபமாகும். (யாக்கோபு 1:23, 24) நமது நடத்தைப் போக்குக்குக் காரணங்கள் காட்ட நாம் சில சமயங்களில் எவ்விதமாக நியாயங்காட்டி வாதிடுகிறோம்! (1 சாமுவேல் 15:13–15, 20, 21, 24 ஒப்பிடவும்.) “ஆம் எவருமே பரிபூரணரல்லர் என்பது உங்களுக்குத் தெரியுமே!” என்று சொல்லுவது எத்தனை எளிதாக இருக்கிறது. இதைத்தானே சாத்தான் அறிந்திருக்கிறான், நம்முடைய அபூரணத்தன்மையை அவன் அனுகூலப்படுத்திக் கொள்கிறான். (2 சாமுவேல் 11:2–27) மத்திப வயதை அடைந்து, பின்னர், வருடங்களினூடாக ஒருவர் மற்றவர்களோடு கொடுமையாக, ஒட்டாமல் அல்லது தயவற்ற முறையில் நடந்துகொண்டதன் காரணமாக, தனக்கு நண்பர்கள் எவரும் இல்லாதிருப்பதை, அல்லது மற்றவர்களை மகிழ்ச்சியுள்ளவர்களாக்க எதையுமே தான் செய்யவில்லை என்பதை உணருவது எத்தனை வருந்தத்தக்கது. சூழ்ச்சியாக சாத்தான், நம்மைக் குருடாக்க நம்முடன் பிறந்த சுயநலத்தைப் பயன்படுத்தி நம்மை வாழ்க்கையினூடாக நடத்திக் கொண்டு வந்திருக்கிறான். கிறிஸ்துவினுடைய மெய்யான சிந்தனையின் உட்பொருளை—அன்பு, இரக்கம் மற்றும் தயவை நாம் கிரகித்துக் கொள்வதில் தவறிவிட்டிருக்கிறோம்.—1 யோவான் 4:8, 11, 20.
10 ஆகவே சாத்தானை எதிர்ப்பதற்கு, நம்மைநாமே நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சாத்தான் தன்னுடைய காரியத்தை சாதிக்க பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அல்லது இப்போது பயன்படுத்திக் கொண்டுவரும் ஒரு பலவீனம் உங்களுக்கிருக்கிறதா? உங்களுக்கு “நான்” என்கிற தன்முனைப்புப் பிரச்னை இருக்கிறதா? நீங்கள் எப்போதும் முதல் ஆளாக இருக்க வேண்டுமா? பெருமையே உங்களுடைய மறைந்திருக்கும் உந்துவிக்கும் சக்தியாக இருக்கிறதா? காழ்ப்பு, பொறாமை அல்லது பண ஆசை உங்கள் ஆளுமையை மாற்றிக் கூறுகிறதா? சண்டைப்போடும் மனச்சாய்வு உங்களுக்கிருக்கிறதா? நீங்கள் நட்புக்கொள்ள நாட்டமில்லாத எரிந்துவிழுகிற குணமுள்ளவரா? அல்லது யோசனைகள் சொல்லப்படுகையில் அல்லது குறைகூறப்படுகையில் வெகுவாக எளிதில் புண்படக்கூடியவரா? புத்திமதி கொடுக்கப்படுகையில் கோபங் கொள்பவரா அல்லது அதை நிராகரித்துவிடுகிறவரா? நாம் மனத்தாழ்மையுள்ளவர்களாக இருப்போமாகில், நாம் நம்மை அறிந்திருந்தால், இப்படிப்பட்ட பிரச்னைகளை சரி செய்துகொள்ளலாம். மற்றபடி நாம் நம்மை தாக்குவதற்கு சாத்தானுக்கு எளிதில் வாய்ப்பளிக்கிறவர்களாக இருப்போம்.—1 தீமோத்தேயு 3:6, 7; எபிரெயர் 12:7, 11; 1 பேதுரு 5:6–8.
11 சாத்தான் தந்திரமாக திட்டமிட்டு சதி செய்து, நம்முடைய ஆவிக்குரிய தன்மையை அழித்துவிடவும்கூடும். ஒருவேளை சபையிலோ அல்லது அமைப்பிலோ காரியங்கள் செய்யப்படுகின்ற விதத்தைக் குறித்து நாம் நிலைகுலைந்து போய்விடலாம். அநேக சமயங்களில் எல்லா உண்மைகளும் நமக்குத் தெரிந்திருப்பதில்லை. ஆனால் சுலபமாக நாம் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்துவிடுகிறோம். யெகோவாவோடு நம்முடைய உறவு பலவீனமாக இருக்குமானால், எதிர்மறையான சிந்தனைக்கும் சத்தியத்தைப் பற்றிய சந்தேகங்களுக்கும் இது குறுக்குவழியாக உள்ளது. சிலர் சத்தியம் தவிர்க்கமுடியாததாக்கும் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்ள சுய–நியாய வழிகளைத் தேடிக் கொண்டிருக்கலாம். சாத்தான் அப்போது நம்பிக்கை மோசத்தையும் நம்பிக்கை துரோகத்தையும் அவர்களுடைய இருதயங்களுக்குள் வைக்கிறான். சீக்கிரத்தில் அவர்கள் விசுவாச துரோகத்துக்குப் பலியாகிவிடுகிறார்கள், சாத்தான் களிகூருகிறான்.—லூக்கா 22:3–6; யோவான் 13:2, 27; 2 யோவான் 9–11.
12 மற்றவர்கள் சபைநீக்கம் செய்யப்படுவதற்கேதுவான மிக மோசமான பாவங்களைச் செய்வதற்கு மாத்திரமல்லாமல், சபை மூப்பர்களை ஏமாற்றுவதற்காகப் பொய் சொல்லவும் ஏமாற்றவும்கூட துணிகரமளிக்கப்பட்டிருக்கிறார்கள். அனனியாவும் சப்பீராளும் செய்தது போல தாங்கள் தேவதூதர்களையும் கடவுளுடைய பரிசுத்த ஆவியையும் ஏமாற்றிவிடலாம் என்பதாக நினைக்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:1–10) ஆயிரக்கணக்கானோர் சமீப ஆண்டுகளில் சாத்தானுடைய ஒழுக்கயீன கண்ணிக்குள் விழுந்துவிட்டிருக்கிறார்கள். மனிதவர்க்கத்தின் பாலுணர்ச்சிகளின் தூண்டுதல்கள் வலிமை வாய்ந்ததாக இருப்பதைப் பிசாசு அறிந்திருக்கிறான், அவனுடைய உலக அமைப்பின் மூலமாக பாலீடுபாட்டின் பங்கை அவன் உயர்த்திக் காண்பிக்கவும் தகாத வழியில் செலுத்தவும், அதன் நோக்கத்தைப் புரட்டவும் செய்கிறான். (எண்ணாகமம் 25:1–3) விவாகமாகாத கிறிஸ்தவர்கள், வேசித்தனத்துக்கோ அல்லது பாலின துர்ப்பிரயோகங்களுக்கோ தூண்டப்படலாம். (நீதிமொழிகள் 7:6–23) விவாகமான கிறிஸ்தவர்கள் தங்கள் மனங்களையும் இருதயங்களையும் அலைபாய அனுமதிப்பார்களேயானால், அவர்கள் வாழ்க்கைத் துணைக்கு வஞ்சனை செய்பவர்களாக, நம்பிக்கை துரோக நடத்தைக்குள் எளிதில் விழுந்துவிடக்கூடும்.—1 கொரிந்தியர் 6:18; 7:1–5; எபிரெயர் 13:4.
13 பொய்ப் பேசுவதும், ஏமாற்றுவதும், கோபாவேசமும் மிகச் சாதாரணமாக இருக்கும் ஓர் உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். சாத்தான் இழிவான இந்த மனநிலையை ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகச் செய்ய, பொது செய்தித் தொடர்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறான். டெலிவிஷன் தொடர் நிகழ்ச்சிகள் அல்லது தொடர் நாடகங்கள் கவர்ச்சியான தோற்றமுள்ள ஆட்கள் ஒருவரையொருவர் ஏமாற்றி ஒரு வலைக்குள் வாழ்ந்து வருவதாக வருணிக்கின்றன. அந்தச் சிந்தனை நம்மைப் பாதிக்க நாம் அனுமதிப்போமேயானால் நாம் விரைவில், “சிறிய பாவங்களுக்கு” இணங்கிவிட ஆரம்பிக்க, இது “பெரிய பாவங்களுக்கு” வழிகோலும் சிறிய செயல்களாகிவிடுகின்றன. சாத்தானின் தந்திரமான யோசனைகள் எளிதில் நம்முடைய சிந்தனைக்குள் நுழைந்துவிடுகின்றன. இப்படிப்பட்ட செல்வாக்குகளை நாம் எவ்விதமாக எதிர்த்திடலாம்? பவுல் அறிவுரை கூறியபடியே, ஒருபோதும் “பிசாசுக்கு இடங் கொடாமலும் இருங்கள்.” அப்படியென்றால், டெலிவிஷன் மூலமாக நீங்கள் வீட்டுக்குள் யாரை அனுமதிக்கிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்துவதையும் அது அர்த்தப்படுத்தும். நம்முடைய பகல் நேர அறைக்குள் தூய்மைக் கேட்டைக் கொண்டுவரும் கொடுமையான, ஒழுக்கங் கெட்ட இழிவான பேச்சை பேசும் ஆட்கள் நுழைவதை நாம் அருவருக்க வேண்டாமா?—எபேசியர் 4:23–32.
நாம் எவ்விதமாக சாத்தானை எதிர்த்து கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க முடியும்?
14 அபூரணமான மனிதர்களாகிய நமக்கு எதிராக இப்படிப்பட்ட ஒரு வல்லமை வாய்ந்த மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திபடைத்த சத்துரு அலைந்து திரிந்துகொண்டிருப்பதால், நாம் எவ்விதமாக நம்முடைய உத்தமத்தன்மையைக் காத்துக் கொள்ளலாம்? இதற்குரிய விடை யாக்கோபின் வார்த்தைகளில் காணப்படுகிறது: “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” (யாக்கோபு 4:7) யாக்கோபினுடய புத்திமதியில் இரண்டு பாகங்கள் இருப்பதை கவனியுங்கள். பிசாசையும் அவனுடைய சித்தத்தையும் நாம் எதிர்க்கையில், கடவுளுடைய சித்தத்துக்கு நாம் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். அது கடவுளுடைய சித்தத்தை நேசிப்பதையும் சாத்தானுடையதை வெறுப்பதையும் உட்படுத்துகிறது. (ரோமர் 12:9) ஆகவே யாக்கோபு சொல்வதாவது: “தேவனிடத்தில் சேருங்கள். அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.” (யாக்கோபு 4:8) ஆம், நாம் சாத்தானை எதிர்க்கையில், அரை மனமுள்ளவர்களாகவும் இரு மனமுள்ளவர்களாகவும் இருப்பதற்கு இடமில்லை. பொல்லாப்பிலிருந்து பிரிக்கும் எல்லைக்கோட்டுக்கு எவ்வளவு அருகாமையில் நாம் வரக்கூடும் என்பதைப் பார்ப்பதன் மூலம் நம்முடைய உத்தமத்தன்மையை நாம் ஆபத்திற்குள்ளாக்க முடியாது. நாம் முழுவதுமாக “தீமையை வெறுத்திட” வேண்டும்.—சங்கீதம் 97:10.
15 சாத்தானை எதிர்ப்பதன் பேரில் குறிப்பிடத்தக்க புத்திமதி எபேசியர் 6-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. சாத்தானுடைய “தந்திரத்தை,” “திட்டத்தை” அல்லது “சூழ்ச்சியை” நாம் எவ்விதமாக எதிர்க்கமுடியும் என்பதாக பவுல் சொல்லுகிறான்? (எபேசியர் 6:11, பிலிப்ஸ், புதிய சர்வதேச மொழிபெயர்ப்பு, எருசலேம் பைபிள்) “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அவன் அறிவுரை கூறுகிறான். ரோம நாட்டு யுத்த வீரன் ஒருவன் யுத்தத்துக்காக தயார் செய்கையில் அரைகுறையாக இருக்கக் கூடாதிருந்தது போலவே “சர்வாயுத வர்க்கம்” என்ற சொற்றொடர், கிறிஸ்தவத்தினிடமாக ஓர் அரைகுறையான மனநிலைக்கு இடம் கொடுப்பதில்லை. யுத்த வீரன் ஒருவன் கேடயத்தையும் தலைச்சீராவையும் தவிர சர்வாயுதவர்க்கத்தைத் தனக்குத்தானே ஆயத்தஞ் செய்திருப்பானேயானால் அவன் எவ்விதமாக வெற்றியடைவான்? ‘அது உண்மையில் மிகப் பெரிய கேடயமாகவும், அந்தத் தலைச்சீரா மிகவும் கனமாகவும் இருக்கிறதே. அவை எடை அதிகமுள்ளவை. எனக்கு உண்மையில் அவை அவசியமில்லை’ என்பதாக அவன் நினைத்திருக்கக்கூடும். ரோம தேச யுத்த வீரன் தற்காப்புக்குரிய முக்கிய உருப்படிகள் இல்லாமல் போர் செய்ய ஆயுதந்தரித்திருக்கும் நிலையைக் கற்பனை செய்துபாருங்கள்.—எபேசியர் 6:16, 17.
16 தன் பட்டயத்தை வைத்திராத ஒரு யுத்த வீரனையும்கூட கற்பனை செய்துபாருங்கள். கிறிஸ்தவனுக்கு எதிராக சாத்தான் கொண்டு வரும் ஆயுதங்களை எதிர்த்துத் தாக்குவதற்குப் பயன்படுவதன் காரணமாக “ஆவியின் பட்டயம்” ஒரு சிறந்த தற்காப்பாக இருக்கிறது. நம்முடைய “பட்டயம்” எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். நம்முடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப பைபிள் படிப்பை நாம் அசட்டை செய்யாதிருந்தால் அது அவ்விதமாக இருக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் முதலாவதாக, இந்தப் “பட்டயம் . . . தேவனுடைய வார்த்தை” தாக்குவதற்குரிய நம்முடைய கருவியாக இருக்கிறது. இயேசு அதை இரண்டு வழிகளிலும் பயன்படுத்தினார். (மத்தேயு 4:6, 7, 10; 22:41–46) நாமும் அவ்விதமாகவே செய்ய வேண்டும். சத்தியத்துக்கு நம்முடைய மதித்துணருதலை நாம் தொடர்ந்து கூர்மையாக்கிக் கொண்டே வரவேண்டும். சத்தியத்தில் முதல் சில மாதங்களில் அல்லது வருடங்களில் நாம் கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையில் நம்முடைய ஆவிக்குரிய தன்மையை நாம் காத்துக் கொள்ள முடியாது. நம்முடைய மனதின் ஆவிக்குரியப் பகுதிகளை நாம் புதுப்பிக்கத் தவறினால் நம்முடைய ஆவிக்குரிய பார்வை மங்கிவிடும். யெகோவாவின் மெய்வணக்கத்துக்கான நம்முடைய வைராக்கியம் குறைந்துவிடும். நாம் ஆவிக்குரிய வகையில் தளர்ந்துவிடுவோம். நம்முடைய நம்பிக்கைகளை இகழ்ச்சி செய்யும் உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் மற்றும் விசுவாச துரோகிகளின் தாக்குதல்களை நாம் இனிமேலும் தடைசெய்யக்கூடாதவர்களாகி விடுவோம். ஆனால் நாம் “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை” தொடர்ந்து முன்னேற்பாடாக வைத்திருப்போமேயானால் தேவன் பிசாசினிடத்திலிருந்தும் அவன் “எய்யும் அக்கினியாஸ்திரங்களி”லிருந்தும் நம்மைப் பாதுகாப்பார்.—ஏசாயா 35:3, 4.
17 ஆம், பின்வருமாறு எழுதுகையில், கிறிஸ்தவப் போராட்டத்தில் உட்பட்டிருக்கும் ஆபத்தைப் பவுல் வலியுறுத்திக் காண்பித்தான்: “நம்முடைய போராட்டம் மனித சத்துருக்களுக்கு எதிராக அல்ல, இருண்ட இந்த உலகின் அதிகாரங்களுக்கும் அதிபதிகளுக்கும் எதிராகவும் வான மண்டலங்களிலுள்ள பொல்லாத மீமானிட சக்திகளுக்கு எதிராகவுமே.” (எபேசியர் 6:12, புதிய ஆங்கில பைபிள்) இப்படிப்பட்ட சரிசமநிலையில் இல்லாத ஒரு யுத்தத்தில் அற்பமான மனிதர்களாகிய நாம் எவ்விதமாக எதிர்த்து அதில் வெற்றியடைய முடியும்? பவுல் தன்னுடைய குறிப்பைத் திரும்பக்கூறுகிறான்: “ஆகையால் தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:13) “நீங்கள் சகலத்தையும் செய்து முடித்தவர்களாய்” என்பதே முக்கிய சொற்றொடராக இருக்கிறது. மறுபடியுமாக இது அரை இருதயமுள்ள அல்லது கவன மாற்றமுள்ள கிறிஸ்தவத்துக்கு இடத்தை அனுமதிப்பதில்லை.—1 யோவான் 2:15–17.
18 ஆகவே நம்முடைய முக்கியமான ஆதாரமாக கடவுளுடைய வார்த்தையின் மீது சார்ந்திருக்கையில், யெகோவாவின் நீதியை நேசித்து, சமாதானத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, யெகோவா, கிறிஸ்து இயேசுவின் மூலமாக கொடுக்கும் இரட்சிப்பை பலமான விசுவாசத்தோடே உறுதியாகப் பற்றிக் கொண்டு சத்தியத்தில் உறுதியாக நிலைநிற்போமாக. (எபேசியர் 6:14–17) கடவுள் நம்மீது அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதையும் சாத்தானுடைய ஒழுங்கு முறையில் நம்முடைய வழியில் வருகின்ற சோதனைகள் மற்றும் கவலைகள் மீது வெற்றிப் பெற அவர் நமக்கு உதவி செய்வார் என்பதையும் நினைவில் வையுங்கள். பின்வரும் எச்சரிப்புக்கு நாம் அனைவருமே செவி கொடுப்போமாக: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான்.” ஆம் “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.”—1 பேதுரு 5:6–9.
19 “சர்வாயுதவர்க்க”த்தோடு பவுல் இன்றியமையாததாகச் சேர்க்கும் ஒரு காரியத்தை நாம் மறந்துவிடாதிருப்போமாக. அவன் சொல்கிறான்: “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்.” (எபேசியர் 6:18) காணக்கூடாத நம்முடைய சத்துரு அவ்வளவு வல்லமையுள்ளவனாக இருப்பதால், “சகலவிதமான வேண்டுதலும் விண்ணப்பமும்” நமக்குத் தேவையாக இருக்கிறது. அப்படியானால் நம்முடைய ஜெபம் எவ்வளவு உண்மையானதாயும் வித்தியாசப்பட்டதாயும் இருக்க வேண்டும்! நாம் போராட்டத்தில் வெற்றி பெற்று உத்தமத்தன்மையைக் காத்துக் கொள்வதற்கு யெகோவாவின் மீது நாம் முழுமையாக சார்ந்திருப்பது இன்றியமையாததாகும். நம்முடைய இரக்கமற்ற எதிராளியை எதிர்க்கத் திராணியுள்ளவர்களாக்கும் “மகத்துவமுள்ள வல்லமையை” அவர் மாத்திரமே நமக்கு கொடுக்கக்கூடும். நம்முடைய பெரிய எதிராளி விரைவில் அபிஸிற்குள் தள்ளப்பட்டு பின்னர் கடைசியாக, என்றுமாக அழிக்கப்பட்டுவிடுவான் என்பதை தெரிந்துகொள்வது எத்தனை ஆறுதலளிப்பதாக இருக்கிறது!—2 கொரிந்தியர் 4:7; வெளிப்படுத்துதல் 20:1–3, 10. (w88 9⁄1)
[அடிக்குறிப்புகள்]
a ஜெஃப்ரி பர்டன் ரஸல் எழுதிய சாத்தான்—பூர்வ கிறிஸ்தவ பாரம்பரியம், பக்கம் 25.
b புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் ஒரு விளக்க அகராதி.
உங்களால் பதிலளிக்கமுடியுமா?
◻ சாத்தான் மெய்யான ஓர் ஆள் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
◻ சாத்தானின் மற்ற பெயர்களும் பட்டப் பெயர்களும் ஏன் பொருத்தமாக உள்ளன?
◻ சாத்தானின் தந்திரமான தாக்குதல்களை எதிர்ப்பதற்கு நம்மைநாமே எவ்விதமாக பகுத்து ஆராய்வது நமக்கு உதவி செய்யக்கூடும்?
◻ சாத்தானை மேற்கொள்ளுவதில் என்ன புத்திமதி உதவி செய்யும்? ஏன்?
[கேள்விகள்]
1. இயேசு சோதிக்கப்பட்டதன் மூலம், சாத்தான் இருக்கிறான் என்பதற்கு என்ன அத்தாட்சி கொடுக்கப்படுகிறது?
2. இயேசு சாத்தானோடு சந்திப்புகளை கற்பனை செய்யவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
3. கிறிஸ்தவத்துக்குப் பிசாசு இருப்பது எதைக் குறிக்கிறது என்பது பற்றி சரித்திராசிரியர் ஒருவர் சொல்வது என்ன?
4. பரிபூரணமான ஓர் ஆவி சிருஷ்டி எவ்விதமாக சாத்தானாக மாறினான்?
5. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் சாத்தான் எவ்வளவு தெளிவாக அடையாளம் காண்பிக்கப்படுகிறான்?
6. “பிசாசு” என்ற வார்த்தையின் பொருள் என்ன?
7. சாத்தான் ஏன் தன்னுடைய முயற்சிகளை யெகோவாவின் ஜனங்கள் மீது ஒருமுகப்படுத்தக்கூடும்?
8. என்ன அனுகூலங்களோடு சாத்தான் நமக்கு எதிராக வேலை செய்திடக்கூடும்?
9. நம்மைநாமே பகுத்து ஆராயவும் மாற்றத்தைச் செய்யவும் நாம் தவறினால் வருந்தத்தக்க விளைவு என்னவாக இருக்கக்கூடும்?
[பக்கம் 10-ன் படம்]
சாத்தானுடைய செல்வாக்கை எதிர்ப்பதற்கு ஒரு வழி தாராளமாக பழகுகிறவராக, உதவி செய்கிறவராக, அன்புள்ளவராக இருப்பதாகும்
[பக்கம் 11-ன் படம்]
சாத்தானுக்கு இடங்கொடுத்துவிட்ட அனனியா, சப்பீராளைப் போல இருந்துவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்
[பக்கம் 12-ன் படம்]
சாத்தானுடைய ஏவுகணைகளைத் தடை செய்வதற்கு, நம்முடைய ஆவிக்குரிய போராயுதத்தின் எந்த ஒரு பகுதியையும் புறக்கணித்து விடக்கூடாது