விசுவாசம் நம்மை பொறுமையோடும் ஜெபசிந்தையோடும் இருக்கும்படி செய்கிறது
“நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை [“வந்திருத்தல்,” NW] சமீபமாயிருக்கிறதே.”—யாக்கோபு 5:8.
1. யாக்கோபு 5:7, 8-ன் பேரில் நாம் ஏன் சிந்தனை செலுத்த வேண்டும்?
நீண்ட காலம் காத்திருக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் “வந்திருத்தல்,” இப்போது நிறைவேறிய உண்மையாக இருக்கிறது. (மத்தேயு 24:3-14) கடவுளிலும் கிறிஸ்துவிலும் விசுவாசம் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிற எல்லாரும், சீஷனாகிய யாக்கோபின் இந்த வார்த்தைகளுக்கு கவனம் செலுத்த, முன்னொருபோதும் இல்லாதளவுக்கு அதிகமான காரணம் உள்ளது: “சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.”—யாக்கோபு 5:7, 8.
2. யாக்கோபு யாருக்கு எழுதினாரோ அவர்கள் எதிர்ப்பட்ட பிரச்சினைகள் சில யாவை?
2 தேவாவியால் ஏவப்பட்ட தன் நிருபத்தை யாருக்காக யாக்கோபு எழுதினாரோ அவர்கள், பொறுமையோடிருந்து பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியவர்களாக இருந்தனர். கடவுளில் விசுவாசம் இருப்பதாக உரிமை பாராட்டுவோரிடம் எதிர்பார்க்கப்பட்ட நல்நடத்தைக்கு எதிர்மாறாக பலர் நடந்தனர். உதாரணமாக, சிலருடைய இருதயங்களில் தோன்றியிருந்த சில இச்சைகளைக் குறித்து ஏதாவது செய்யப்பட வேண்டியிருந்தது. அந்தப் பூர்வ கிறிஸ்தவர்களின் மத்தியில் திரும்பவும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியமிருந்தது. பொறுமையோடும் ஜெப சிந்தையோடும் இருப்பதன்பேரிலும் அவர்களுக்கு அறிவுரை தேவைப்பட்டது. யாக்கோபு அவர்களுக்குச் சொன்னதை நாம் சிந்திக்கையில், அவருடைய வார்த்தைகளை நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்வாறு பொருத்திப் பிரயோகிக்கலாம் என்பதை காண்போமாக.
தவறான இச்சைகள் அழிவுண்டாக்குபவை
3. சபையில் சண்டையிட்டுக் கொண்டிருந்ததன் காரணங்கள் யாவை, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
3 கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டின சிலரின் மத்தியில் சமாதானம் இருக்கவில்லை, தவறான இச்சைகளே இந்த நிலைமைக்கு மூலகாரணமாக இருந்தன. (யாக்கோபு 4:1-3) சண்டையிடும் இயல்பு, பிரிவினையை உண்டாக்கியிருந்தது; சிலர் அன்பற்ற முறையில் தங்கள் சகோதரரில் குற்றம் கண்டுபிடித்தனர். புலனுணர்வு இன்பத்திற்கான மோகம் அவர்கள் உடலுறுப்புகளில் போராட்டத்தை நடத்தினதால் இது சம்பவித்தது. சபையின் சமாதானத்தைக் கெடுக்கும் எதையும் நாம் செய்துவிடாதபடி, கௌரவம், அதிகாரம், உடைமைகள் ஆகியவற்றிற்கான மாம்ச இச்சைகளை எதிர்த்துத் தடுப்பதற்கான உதவிக்காக, நாம்தாமே ஜெபிக்க வேண்டியதாய் இருக்கலாம். (ரோமர் 7:21-25; 1 பேதுரு 2:11) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சிலருக்குள், இச்சையானது, பகையையும், கொலைபாதக மனப்பான்மையையும் தூண்டும் அளவுக்கு வளர்த்துவிட்டிருந்தது. அவர்களுடைய தவறான இச்சைகளை கடவுள் பூர்த்திசெய்வதில்லை என்பதால், தங்கள் இலக்குகளை அடைவதற்கு முயன்று, விடாது சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர். அதைப்போன்ற தவறான இச்சைகள் நமக்கு இருந்தால், அவற்றை நாம் கேட்டாலும் பெற்றுக்கொள்ள மாட்டோம்; ஏனெனில், நம்முடைய பரிசுத்த கடவுள் அத்தகைய ஜெபங்களுக்கு பதிலளிக்கிறதில்லை.—புலம்பல் 3:44; 3 யோவான் 9, 10.
4. யாக்கோபு சிலரை “விபசாரரே,விபசாரிகளே” என்று ஏன் அழைக்கிறார், அவர் சொன்னது நம்மை எவ்வாறு நல்லவிதத்தில் பாதிக்க வேண்டும்?
4 பூர்வ கிறிஸ்தவர்கள் சிலர் மத்தியில் உலகப்பற்றும், பொறாமையும், பெருமையும் இருந்துவந்தன. (யாக்கோபு 4:4-6) “விபசாரரே, விபசாரிகளே,” என்று யாக்கோபு சிலரை அழைக்கிறார், ஏனென்றால் அவர்கள் உலகத்தின் சிநேகிதர்களாக இருந்தார்கள், அவ்வாறு ஆவிக்குரிய விபசாரக் குற்றமுள்ளவர்களாக இருந்தனர். (எசேக்கியேல் 16:15-19, 25-45) மனப்பான்மையிலும், பேச்சிலும், செயல்களிலும் உலகப்பற்றுள்ளவர்களாக ஆகும்படி நாம் நிச்சயமாகவே விரும்புகிறதில்லை; ஏனெனில் அது நம்மை கடவுளுடைய பகைஞர்களாக ஆக்கிவிடும். ‘பொறாமை கொள்ளும்’ மனப்போக்கு, பாவிகளான மனிதரிலுள்ள கெட்ட மனச்சாய்வின் அல்லது ‘ஆவியின்’ பாகமாக இருக்கிறதென்று அவருடைய வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. (ஆதியாகமம் 8:21; எண்ணாகமம் 16:1-3; சங்கீதம் 106:16, 17; பிரசங்கி 4:4) ஆகையால், பொறாமை, பெருமை, அல்லது வேறு ஏதாவது கெட்ட மனச்சாய்வை எதிர்த்து நாம் போராடவேண்டிய தேவை இருக்கிறதென உணர்ந்தால், பரிசுத்த ஆவியின்மூலம் கடவுள் உதவி செய்யும்படி அவரிடம் உதவிக்காக கேட்போமாக. கடவுளுடைய தகுதியற்ற தயவினால் வழங்கப்பட்ட அந்த ஆவியே, ‘பொறாமை கொள்ளும் மனப்போக்கைப்’ பார்க்கிலும் மேம்பட்டது. பெருமையுள்ளவர்களை யெகோவா எதிர்க்கையில், பாவ மனப்போக்குகளுக்கு எதிராகப் போராடுவோமானால், அவர் தகுதியற்ற தயவை நமக்கு அருளுவார்.
5. கடவுளுடைய தகுதியற்ற தயவை அனுபவித்து மகிழ்வதற்கு, என்ன தேவைகளை நாம் பூர்த்தி செய்யவேண்டும்?
5 கடவுளுடைய தகுதியற்ற தயவை நாம் எவ்வாறு பெற முடியும்? (யாக்கோபு 4:7-10) யெகோவாவிடமிருந்து தகுதியற்ற தயவை அனுபவித்து மகிழ்வதற்கு, நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய ஏற்பாடுகளை ஏற்று, அவருடைய சித்தம் எதையும் எதிர்க்காமல் இருக்க வேண்டும். (ரோமர் 8:28) மேலும், பிசாசை ‘எதிர்க்க’ அல்லது அவனுக்கு ‘எதிர்த்து நிற்க’ வேண்டும். யெகோவாவின் சர்வலோக அரசதிகாரத்தை ஆதரிப்போராக நாம் உறுதியாய் நிலைத்து நின்றால், அவன் ‘நம்மைவிட்டு ஓடிப்போவான்.’ இயேசுவின் உதவி நமக்கு இருக்கிறது. எவற்றாலும் நமக்கு நிலையான தீங்கு வராதபடி உலகத்தின் தீமைக்குக் காரணமாக இருப்பவற்றை அவர் கட்டுப்படுத்துகிறார். மேலும், இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்: ஜெபம், கீழ்ப்படிதல், விசுவாசம் ஆகியவற்றின் மூலம், நாம் கடவுளிடம் நெருங்கிவருகிறோம், அவர் நமக்கு அருகில் இருப்பவராக நிரூபிக்கிறார்.—2 நாளாகமம் 15:2.
6. சில கிறிஸ்தவர்களை “பாவிகளே” என்று யாக்கோபு ஏன் அழைக்கிறார்?
6 கடவுளில் விசுவாசம் இருப்பதாக சொல்லிக்கொள்கிற சிலருக்கு, “பாவிகளே” என்ற பதத்தை யாக்கோபு ஏன் பொருத்திப்பயன்படுத்துகிறார்? ஏனெனில், அவர்கள் ‘யுத்தங்களும்’ கொலைபாதக பகைகளுமான, கிறிஸ்தவர்களுக்கு ஏற்கத்தகாத மனப்பான்மைகளினால் குற்றமுள்ளவர்களாக முன்னொருபோது இருந்தார்கள். (தீத்து 3:3) அவர்களுடைய ‘கைகள்’ கெட்ட செயல்களால் நிரம்பியிருந்தன; சுத்தப்படுத்துதல் தேவைப்பட்டது. செயல்நோக்கத் தூண்டுதலின் இருப்பிடமான தங்கள் ‘இருதயங்களையும்’ அவர்கள் சுத்தப்படுத்த வேண்டியிருந்தது. (மத்தேயு 15:18, 19) ‘இருமனமுள்ளவர்களாக’ இருந்த அவர்கள், கடவுளிடமும் உலகத்திடமும் இருந்த சிநேகத்திற்கு இடையே ஊசலாடினர். அவர்களுடைய கெட்ட முன்மாதிரியால் எச்சரிக்கப்படுவோராக நாம், அத்தகைய காரியங்கள் நம்முடைய விசுவாசத்தைச் சேதப்படுத்தாதபடி, தொடர்ந்து விழிப்புள்ளோராய் இருக்க கவனம் செலுத்துவோமாக.—ரோமர் 7:18-20.
7. “துக்கித்து அழுங்கள்” என்று யாக்கோபு ஏன் சிலருக்குச் சொல்கிறார்?
7 “துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்” என்று யாக்கோபு தம்முடைய வாசகர்களுக்குச் சொல்கிறார். தேவபக்திக்கேதுவான துக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினால், மனந்திரும்பினதன் அத்தாட்சியாக அது இருக்கும். (2 கொரிந்தியர் 7:10, 11) இன்று, தங்களுக்கு விசுவாசம் இருக்கிறதென்று சொல்லிக்கொள்கிறவர்களில் சிலர், உலக சிநேகத்தைத் தேடுகிறார்கள். அத்தகைய போக்கை நம்மில் எவராவது பின்தொடர்ந்தால், நம்முடைய ஆவிக்குரிய பலவீன நிலைமையின்பேரில் நாம் துக்கித்து, காரியங்களைச் சீர்படுத்துவதற்கு உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமல்லவா? தேவைப்படும் சரிப்படுத்துதல்களைச் செய்து, கடவுளுடைய மன்னிப்பைப் பெறுவது, சுத்தமான மனச்சாட்சியையும் நித்திய ஜீவனின் சந்தோஷமான எதிர்பார்ப்பையும் அளிப்பதனால், அது நம்மில் பெரும் மகிழ்ச்சிக்குரிய உணர்வை உண்டாக்கும்.—சங்கீதம் 51:10-17; 1 யோவான் 2:15-17.
ஒருவரையொருவர் தீர்ப்புச்செய்யாதிருங்கள்
8, 9. நாம் ஏன் மற்றவர்களுக்கு விரோதமாகப் பேச அல்லது ஒருவரையொருவர் தீர்ப்புச்செய்யக் கூடாது?
8 உடன் விசுவாசிக்கு விரோதமாகப் பேசுவது பாவமாக இருக்கிறது. (யாக்கோபு 4:11, 12, தி.மொ.) எனினும், உடன் விசுவாசிகளைப் பற்றி குற்றங்குறை கூறுவோராக சிலர் உள்ளனர். ஒருவேளை அது, அவர்களுடைய சொந்த சுயநீதிக்குரிய மனப்பான்மையின் விளைவாக இருக்கலாம்; அல்லது மற்றவர்களைத் தாழ்த்துவதன் மூலம் தங்களைத்தாமே உயர்த்திக்கொள்ள அவர்கள் விரும்புவதாக இருக்கலாம். (சங்கீதம் 50:20; நீதிமொழிகள் 3:29) ‘விரோதமாகப் பேசுவது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதன் கிரேக்க பதம், பகைமையை அர்த்தப்படுத்துகிறது, மற்றும் மிகைப்படுத்தப்பட்ட அல்லது பொய்யாக குற்றம்சாட்டுவதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. இது, ஒரு சகோதரனை தவறாக நியாயம் தீர்ப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. இது, கடவுளுடைய ‘நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி, நியாயப்பிரமாணத்திற்குத் தீர்ப்புச்செய்வதாக’ இருப்பது எவ்வாறு? வேதபாரகரும் பரிசேயரும் “தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு,” தங்கள் சொந்த தராதரங்களின்படி தீர்ப்பு செய்தார்கள். (மாற்கு 7:1-13) அவ்வாறே, யெகோவா கண்டனம் செய்யாத ஒரு சகோதரனை நாம் கண்டனம் செய்தால், கடவுளுடைய ‘பிரமாணத்தைத் தீர்ப்புச்செய்வோராகவும்’ அது குறைபாடுள்ளதென, பாவத்தன்மையுடன் மறைமுகமாகக் குறிப்பிடுவோராகவும் இருப்போம் அல்லவா? நம்முடைய சகோதரன்பேரில் அநியாயமாய்க் குற்றங்குறை கூறுவதால், அன்பின் பிரமாணத்தை நிறைவேற்றாதவர்களாக நாம் இருப்போம்.—ரோமர் 13:8-10.
9 “நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவரும் நியாயாதிபதியும் ஒருவரே”—யெகோவாவே. அவருடைய “பிரமாணம் குறைவற்றது,” குறைபாடுடையதல்ல என்பதை நினைவுகூருவோமாக. (சங்கீதம் 19:7, தி.மொ.; ஏசாயா 33:22) இரட்சிப்புக்கான தராதரங்களையும் விதிகளையும் ஏற்படுத்துவதற்கு கடவுளுக்கு மாத்திரமே அதிகாரம் இருக்கிறது. (லூக்கா 12:5, NW) ஆகையால் யாக்கோபு கேட்கிறார்: “அயலானுக்குத் தீர்ப்புச்செய்வதற்கு நீ யார்?” மற்றவர்களை நியாயம் தீர்த்து, கண்டனம் செய்ய நமக்கு அதிகாரம் இல்லை. (மத்தேயு 7:1-5; ரோமர் 14:4, 10) கடவுளுடைய உன்னத அரசதிகாரத்தின்பேரிலும் பட்சபாதமற்ற பண்பின்பேரிலும், நம்முடைய சொந்த பாவத் தன்மையின்பேரிலும் சிந்தனை செய்வது, சுயநீதி உணர்வுடன் மற்றவர்களைத் தீர்ப்புச்செய்வதைத் தவிர்க்கும்படி நமக்கு உதவிசெய்யவேண்டும்.
வீம்பான தன்னம்பிக்கையைத் தவிருங்கள்
10. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் ஏன் யெகோவாவை நம் கவனத்தில் வைக்க வேண்டும்?
10 யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் நாம் எப்போதும் கவனத்தில் வைக்க வேண்டும். (யாக்கோபு 4:13-17) தன்னம்பிக்கையுள்ளவர்கள், கடவுளைக் கவனத்தில் ஏற்காமல்: ‘இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோம்’ என்று சொல்லுகிறார்கள். ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாயிராமல், தங்களுக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவர்களாக’ நாம் இருந்தால், நாளைக்கே நம் வாழ்க்கை ஒருவேளை முடிவடையலாம், யெகோவாவைச் சேவிக்க நமக்கு வாய்ப்பில்லாமல் போகலாம். (லூக்கா 12:16-21) யாக்கோபு சொல்லுகிற பிரகாரம், நாம் காலையில் தோன்றும் மூடுபனிபோல் இருக்கிறோம். அது ‘கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிறது.’ (1 நாளாகமம் 29:15) யெகோவாவில் விசுவாசம் காட்டுவதன் மூலமே, நிலையான மகிழ்ச்சியையும் நித்திய ஜீவனையும் அடையும் நம்பிக்கை உடையோராக நாம் இருக்கலாம்.
11. ‘யெகோவாவுக்குச் சித்தமானால்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன?
11 கடவுளை நினையாமல் வீம்புடன் இருப்பதற்கு மாறாக, நாம் இந்த நிலையை ஏற்க வேண்டும்: “ஆண்டவருக்குச் [“யெகோவாவுக்கு,” NW] சித்தமானால், நாங்கள் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம்.” ‘யெகோவாவுக்குச் சித்தமானால்’ என்று சொல்வது, அவருடைய சித்தத்திற்கு ஒத்திசைவாக நடக்க நாம் பிரயாசப்படுகிறோம் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது. நம்முடைய குடும்பத்தைப் பராமரிப்பதற்கு வேலை செய்வதும், ராஜ்ய ஊழியத்தில் பயணப்படுவதும், இன்னும் மற்றவற்றை செய்வதும் அவசியமாயிருக்கலாம். ஆனால் நாம் வீம்பு பேசாமல் இருப்போமாக. “இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் . . . பொல்லாங்காயிருக்கிறது,” ஏனெனில் கடவுளின்மீது சார்ந்திருப்பதை சிந்திக்கவிடாமல் அது செய்துவிடுகிறது.—சங்கீதம் 37:5; நீதிமொழிகள் 21:4; எரேமியா 9:23, 24.
12. யாக்கோபு 4:17-ல் உள்ள வார்த்தைகள் குறிப்பது என்ன?
12 தன்னம்பிக்கையையும் வீம்பு பேசுதலையும் பற்றிய தன் கூற்றுகளை பெரும்பாலும் முடிப்பவராக, யாக்கோபு சொல்கிறார்: “ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.” ஒவ்வொரு கிறிஸ்தவனும், தான் கடவுளின்மீது சார்ந்திருப்பதை மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு அவன் செய்யாவிட்டால், “அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.” நிச்சயமாகவே, கடவுளில் விசுவாசம் வைத்திருப்பது நாம் செய்யும்படி தேவைப்படுத்தும் எதையும், செய்யத் தவறுகையிலும் அதே நியமம் பொருந்துகிறது.—லூக்கா 12:47, 48.
ஐசுவரியவான்களைக் குறித்த எச்சரிக்கை
13. தங்கள் ஐசுவரியங்களைத் தவறாக பயன்படுத்துகிறவர்களைக் குறித்து யாக்கோபு என்ன சொல்கிறார்?
13 பூர்வ கிறிஸ்தவர்களில் சிலர், பொருளாசை உடையோராக ஆகியிருந்ததால் அல்லது ஐசுவரியவான்களைப் பாராட்டிக்கொண்டிருந்ததால், ஐசுவரியவான்களான சிலரைக் குறித்து கண்டிப்பான சில வார்த்தைகளை யாக்கோபு சொல்கிறார். (யாக்கோபு 5:1-6) தங்கள் ஐசுவரியங்களைத் தவறாக பயன்படுத்துகிற உலகப்பிரகாரமான மனிதர்கள், அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ப கடவுள் அவர்களுக்கு பதிலளிக்கையில், ‘தங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுவார்கள்.’ அந்நாட்களில், பல ஆட்களுடைய ஐசுவரியம், முக்கியமாய், அங்கிகள், தானியம், திராட்சரசம் போன்ற பொருட்கள் அடங்கியதாக இருந்தது. (யோவேல் 2:19; மத்தேயு 11:8) இவற்றில் சில அழியலாம் அல்லது ‘பொட்டரித்துப்போகலாம்,’ ஆனால், ஐசுவரியத்தின் அழியும் தன்மையை அல்ல, அதன் பயனற்ற தன்மையையே யாக்கோபு அறிவுறுத்துகிறார். பொன்னும் வெள்ளியும் துருப்பிடிப்பதில்லை என்றாலும், அவற்றை நாம் ஏராளமாகச் சேர்த்து வைத்தால், துருப்பிடித்த பொருட்களைப்போல் அவை மதிப்பற்றவையாக இருக்கும். “துரு” என்பது, பொருள் சம்பந்தமான ஐசுவரியங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படாதிருப்பதைக் குறிக்கிறது. ஆகையால், தங்கள் பொருளுடைமைகளில் நம்பிக்கை வைத்திருப்போர், கடவுளுடைய கோபாக்கினை தங்கள்மீது வரவிருக்கும் ‘கடைசி நாட்களில்,’ ‘அக்கினியைப் போன்ற’ ஒன்றையே ‘சேர்த்து வைத்திருக்கிறார்கள்’ என்பதை நாம் எல்லாரும் நினைவில் வைக்க வேண்டும். ‘முடிவுகாலத்தில்’ நாம் வாழ்வதால், இத்தகைய வார்த்தைகள் நமக்குத் தனிப்பட்ட அர்த்தமுடையவையாக இருக்கின்றன.—தானியேல் 12:4; ரோமர் 2:5.
14. ஐசுவரியவான்கள் பெரும்பாலும் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், நாம் அதைக்குறித்து என்ன செய்ய வேண்டும்?
14 ஐசுவரியவான்கள், தங்களுக்கு அறுவடை செய்வோரை அடிக்கடி வஞ்சிக்கிறார்கள்; கொடுக்காமல் வைக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய கூலிகள் பழிவாங்கும்படி ‘கூக்குரலிடுகின்றன.’ (ஆதியாகமம் 4:9, 10-ஐ ஒப்பிடுக.) உலகப்பிரகாரமான ஐசுவரியவான்கள் ‘சம்பிரமாய் வாழ்ந்தார்கள்.’ புலன் இன்ப சுகபோகத்தில் மிதமீறி உழன்று, கொழுத்து, செயல்பட தூண்டாமல் போகும்படி இருதயங்களைச் செய்வித்திருக்கிறார்கள். அவர்கள் கொல்லப்படுவதற்கு குறிக்கப்பட்ட ‘நாளிலும்’ தொடர்ந்து இதையே செய்துகொண்டிருப்பார்கள். ‘நீதிமானை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்கிறார்கள்.’ யாக்கோபு சொல்கிறார்: “அவன் உங்களோடே எதிர்த்துநிற்கவில்லை.” ஆனால் மற்றொரு மொழிபெயர்ப்பு, “அந்த நீதிமான்; அவன் உங்களை எதிர்க்கிறதில்லை.” (NW அடிக்குறிப்பு) எவ்வாறாயினும், ஐசுவரியவான்களுக்கு பட்சபாதம் காட்டுவோராக நாம் இருக்கக்கூடாது. ஆவிக்குரிய அக்கறைகளையே நம் வாழ்க்கையில் முதலாவதாக நாம் வைக்க வேண்டும்.—மத்தேயு 6:25-33.
பொறுமையாக இருக்கும்படி விசுவாசம் நமக்கு உதவி செய்கிறது
15, 16. பொறுமையாக இருப்பது ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது?
15 இந்த உலகத்தின், ஒடுக்கும் ஐசுவரியவான்களைக் குறித்து பேசினபின்பு, அடுத்தபடியாக, பொறுமையாக இருக்கும்படி ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களை யாக்கோபு ஊக்குவிக்கிறார். (யாக்கோபு 5:7, 8) விசுவாசிகள், தங்கள் கஷ்டங்களை பொறுமையுடன் சகித்தால், உண்மையுடன் நிலைத்திருந்ததற்காக, கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது பலனளிக்கப்படுவார்கள்; அவர்களை ஒடுக்கினவர்களின்மீது ஆக்கினைத் தீர்ப்பு வரும். (மத்தேயு 24:37-41) தான் நாற்று நடக்கூடிய முன்மாரியான இலையுதிர்கால மழைக்கும் கனிகளை விளைவிக்கும் பின்மாரியான இளவேனிற்கால மழைக்கும் பொறுமையுடன் காத்திருக்கும் விவசாயியைப்போல அந்தப் பூர்வ கிறிஸ்தவர்கள் இருப்பது அவசியமாக இருந்தது. (யோவேல் 2:23) முக்கியமாய், இயேசு கிறிஸ்துவாகிய “கர்த்தரின் வந்திருத்தல்” இங்கிருப்பதால், நாமுங்கூட பொறுமையாக இருந்து, நம்முடைய இருதயங்களை ஸ்திரப்படுத்த வேண்டும்!
16 நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்? (யாக்கோபு 5:9-12) உடன் விசுவாசிகள் நமக்கு தொல்லை கொடுக்கையில், ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருக்கும்படி பொறுமை நமக்கு உதவி செய்கிறது. கெட்ட மனப்பான்மையுடன் ‘நாம் ஒருவருக்கொருவர் விரோதமாக முறையிட்டால்,’ நியாயாதிபதியாகிய இயேசு கிறிஸ்துவால் நாம் கண்டனம் செய்யப்படுவோம். (யோவான் 5:22) இப்போது அவருடைய “வந்திருத்தல்” தொடங்கிவிட்டிருப்பதால், அவர் “வாசற்படியில் நிற்கிறார்.” விசுவாசத்தின் பல பரீட்சைகளை எதிர்ப்படுகிற, நம்முடைய சகோதரரிடம் பொறுமையாக இருப்பதன் மூலம் சமாதானத்தை முன்னேற்றுவிப்போமாக. யோபு தன் துன்பங்களை பொறுமையுடன் சகித்ததினால், கடவுள் அவருக்கு பலனளித்தார் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்கையில் நம்முடைய சொந்த விசுவாசம் பலப்படுத்தப்படுகிறது. (யோபு 42:10-17) நாம் விசுவாசமும் பொறுமையோடும் இருந்தால், “யெகோவா பாசத்தில் மிகக் கனிவுள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார்” என்பதைக் காண்போம். (NW)—மீகா 7:18, 19.
17. “சத்தியம்பண்ணாதிருங்கள்” என்று யாக்கோபு ஏன் சொல்கிறார்?
17 நாம் பொறுமையாக இராவிட்டால், நெருக்கடியில் இருக்கும்போது நாவை நாம் தவறாக பயன்படுத்திவிடக்கூடும். உதாரணமாக, சிந்தியாமல் துணிகரமாக நாம் ஆணையிட்டுவிடக்கூடும். சிந்தனையற்று மடத்தனமாய் ஆணையிடுவதற்கு எதிராக எச்சரிப்பவராய், “சத்தியம்பண்ணாதிருங்கள்” என்று யாக்கோபு சொல்கிறார். சொல்பவற்றிற்கெல்லாம் சத்தியம்பண்ணுவது பாசாங்குத்தனமாகவும் தோன்றுகிறது. ஆகையால், நாம் வெறுமனே சத்தியத்தை பேசுவோராக, உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்ல வேண்டும். (மத்தேயு 5:33-37) நிச்சயமாகவே, நீதிமன்றத்தில் உண்மையைச் சொல்வதற்கு ஆணையிடுவது தவறு என்று யாக்கோபு சொல்கிறதில்லை.
விசுவாசமும் நம்முடைய ஜெபங்களும்
18. எந்த சந்தர்ப்பங்களில் நாம் “ஜெபம்பண்ணவும்” ‘சங்கீதங்கள் பாடவும்’ வேண்டும்?
18 நம்முடைய பேச்சை நாம் கட்டுப்படுத்தி, பொறுமையாக இருந்து, கடவுளில் திடமான விசுவாசத்தைக் காத்துவர வேண்டுமானால், ஜெபம் நம்முடைய வாழ்க்கையில் முக்கிய பாகத்தை வகிக்க வேண்டும். (யாக்கோபு 5:13-20) முக்கியமாய், துன்பத்தில் இருக்கையில் நாம் “ஜெபம்பண்ண” வேண்டும். நாம் மகிழ்ச்சியாயிருந்தால், இயேசு, தம்முடைய மரணத்தின் நினைவு ஆசரிப்பை தொடங்கிவைத்தபோது, அவரும் அவருடைய அப்போஸ்தலர்களும் செய்ததைப்போல், ‘சங்கீதங்கள் பாடக்கடவோம்.’ (மாற்கு 14:26, NW அடிக்குறிப்பு) சில சமயங்களில், கடவுளிடமாக அவ்வளவு அதிக நன்றியுணர்வு நிரம்பியவர்களாய் நாம் உணர்வதால், இருதயத்திலேயும்கூட துதிகளைப் பாடுகிறோம். (1 கொரிந்தியர் 14:15; எபேசியர் 5:19) மேலும் கிறிஸ்தவ கூட்டங்களில் பாடல்களின் மூலம் மிக ஆர்வமாய் யெகோவாவைப் போற்றுவது எத்தகைய ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறது!
19. ஆவிக்குரிய பிரகாரம் நாம் நோயுற்றவர்களாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும், ஏன் அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும்?
19 தவறான நடத்தையின் காரணமாகவோ, யெகோவாவின் மேசையில் தவறாமல் உணவருந்திவர தவறினதாலோ, ஆவிக்குரிய பிரகாரமாய் நாம் நோயுற்றிருந்தால் பாடும்படியான உணர்ச்சி நமக்கு ஒருவேளை இராது. அந்த நிலையில் நாம் இருந்தால், ‘நமக்காக ஜெபம்பண்ணும்படி’ மனத்தாழ்மையுடன் மூப்பர்களை நாம் அழைப்போமாக. (நீதிமொழிகள் 15:29) மேலும் அவர்கள், ‘யெகோவாவின் பெயரில் நமக்கு எண்ணெய்ப் பூசுவார்கள்.’ காயத்தின்மேல்பூசும் நோயைத் தணிக்கும் எண்ணெய்யைப்போல், அவர்களுடைய ஆறுதலான வார்த்தைகளும் வேதப்பூர்வ அறிவுரையும், நம் மனச்சோர்வையும், சந்தேகத்தையும், பயத்தையும் தணிப்பதற்கு உதவி செய்யும். அது நம்முடைய சொந்த விசுவாசத்தால் ஆதரிக்கப்பட்டால், ‘விசுவாசமுள்ள ஜெபம் நம்மை சொஸ்தப்படுத்தும்.’ வினைமையான பாவமே, நம்முடைய ஆவிக்குரிய நோய்க்குக் காரணம் என மூப்பர்கள் கண்டால், நம்முடைய தவறை அவர்கள் நமக்குத் தயவாக வெளிப்படுத்தி, நமக்கு உதவி செய்ய பிரயாசப்படுவார்கள். (சங்கீதம் 141:5) நாம் மனந்திரும்பினால், கடவுள் அவர்களுடைய ஜெபங்களுக்குச் செவிகொடுத்து, நம்மை மன்னிப்பார் என்ற விசுவாசம் உடையோராக நாம் இருக்கலாம்.
20. நாம் ஏன் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ண வேண்டும்?
20 ‘நம்முடைய பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிடுவது,’ மேலுமாக பாவம் செய்வதிலிருந்து தடுத்துவைக்கிற ஒரு தடையாக சேவிக்க வேண்டும். அது ஒருவருக்கொருவர் இரக்கம் காண்பிப்பதை ஊக்குவிக்க வேண்டும். இது ‘ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணும்படி’ நம்மை ஊக்குவிக்கும் ஒரு பண்பு. இது நன்மை பயக்குவிப்பதாக இருக்கும் என்று நாம் விசுவாசம் உடையோராக இருக்கலாம், ஏனென்றால், ‘நீதிமான்’—விசுவாசம் காட்டுபவனும், நேர்மையுள்ளவனாக கடவுளால் கருதப்படுகிறவனும்—செய்யும் ஜெபம், யெகோவாவிடமிருந்து நிறைவேற்றத்தை கொண்டுவருகிறது. (1 பேதுரு 3:12) தீர்க்கதரிசியாகிய எலியா, நமக்கு இருப்பதைப்போன்ற பலவீனங்களை உடையவராக இருந்தார் ஆனால் அவருடைய ஜெபங்கள் பலன்தரத்தக்கவையாய் இருந்தன. மூன்றரை ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. அவர் மறுபடியும் ஜெபித்தபோது, மழை பெய்தது.—1 இராஜாக்கள் 17:1; 18:1, 42-45; லூக்கா 4:25.
21. உடன் கிறிஸ்தவர் ஒருவர், ‘சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போனால்,’ நாம் என்ன செய்ய முயற்சி செய்யலாம்?
21 சபையின் ஒரு உறுப்பினர், ‘சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போனால்,’ சரியான போதகத்திலிருந்தும் நடத்தையிலிருந்தும் விலகினால் என்ன செய்வது? பைபிளின் அறிவுரை, ஜெபம், இன்னும் மற்ற உதவிகளின் மூலமாக அவருடைய தவறிலிருந்து அவரை நாம் திருப்ப முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்வதில் நாம் வெற்றிபெற்றால், இது அவரை கிறிஸ்து அளித்த மீட்பின் கிரயத்திற்கு பாத்திரராக்கி ஆவிக்குரிய மரணத்திலிருந்தும் அழிவுக்கு ஆக்கினைத் தீர்ப்பு செய்யப்படுவதிலிருந்தும் காப்பாற்றுகிறது. தவறு செய்பவரைத் திரும்பும்படி உதவி செய்வதன் மூலம், அவருடைய திரளான பாவங்களை நாம் மூடுகிறோம். கண்டிக்கப்பட்ட பாவி, தன் தவறான போக்கை விட்டு விலகி, மனம்திரும்பி, மன்னிப்பு கேட்கையில், அவருடைய பாவங்கள் மூடப்படும்படி நாம் பிரயாசம் எடுத்ததைக் குறித்து களிகூருவோம்.—சங்கீதம் 32:1, 2; யூதா 22, 23.
நம் எல்லாருக்குமான ஒன்று
22, 23. யாக்கோபின் வார்த்தைகளால் நாம் எவ்வாறு பாதிக்கப்பட வேண்டும்?
22 தெளிவாகவே, யாக்கோபின் நிருபம், நம்மெல்லாருக்கும் பயனுள்ள ஏதாவது ஒன்று அடங்கியதாக இருக்கிறது. துன்பங்களை எதிர்ப்படுவது எவ்வாறு என்பதை அது நமக்குக் காட்டுகிறது, பட்சபாதம் காட்டுவதற்கு எதிராக நமக்கு அறிவுரை அளிக்கிறது, மேலும் நேர்மையான செயல்களில் ஈடுபட்டிருக்கும்படி நம்மை ஊக்குவிக்கிறது. நாவை அடக்கும்படியும், உலக செல்வாக்கை எதிர்த்துத் தடுக்கும்படியும், சமாதானத்தை முன்னேற்றுவிக்கும்படியும் யாக்கோபு நம்மை ஊக்குவிக்கிறார். அவருடைய வார்த்தைகள் நம்மை பொறுமையும் ஜெபசிந்தையும் உள்ளவர்களாகும்படியும் செய்விக்க வேண்டும்.
23 உண்மைதான், யாக்கோபின் நிருபம், அபிஷேகஞ்செய்யப்பட்ட பூர்வ கிறிஸ்தவர்களுக்கே முதலாவதாக அனுப்பப்பட்டது. எனினும், நம்முடைய விசுவாசத்தை விடாது பற்றியிருக்க அதன் அறிவுரை நமக்கு உதவி செய்யும்படி, நாம் எல்லாரும் இடமளிக்க வேண்டும். கடவுளுடைய சேவையில் தீர்மானமாய்ச் செயல்படும்படி நம்மைத் தூண்டியியக்குவிக்கக்கூடிய விசுவாசத்தை யாக்கோபின் வார்த்தைகள் நமக்கு அளிக்க முடியும். மேலும், கடவுளால் ஏவப்பட்ட இந்த நிருபம் இன்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ‘வந்திருத்தலின்போது’ யெகோவாவின், பொறுமையும் ஜெபசிந்தையுமுள்ள சாட்சிகளாக இருக்கும்படி நம்மை செய்விக்கிற, நிலையான ஒரு விசுவாசத்தை நம்மில் கட்டியெழுப்புகிறது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பூர்வ கிறிஸ்தவர்களில் சிலர் ஏன் தங்கள் மனப்பான்மையையும் நடத்தையும் மாற்ற வேண்டியிருந்தது?
◻ ஐசுவரியவான்களுக்கு யாக்கோபு என்ன எச்சரிக்கை கொடுக்கிறார்?
◻ நாம் ஏன் பொறுமையோடு இருக்கவேண்டும்?
◻ நாம் ஏன் தவறாமல் ஜெபித்துவர வேண்டும்?
[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 23-ன் படம்]
பூர்வ கிறிஸ்தவர்களில் சிலர் உடன் விசுவாசிகளுடன் அதிக பொறுமையோடு இருக்க வேண்டியிருந்தது
[பக்கம் 24-ன் படம்]
கிறிஸ்தவர்கள் பொறுமையோடும் அன்போடும் ஜெபசிந்தையோடும் இருக்க வேண்டும்