உங்கள் கிறிஸ்தவ சுயாதீனத்தை ஞானமாக பயன்படுத்துங்கள்
“சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும், உங்கள் சுயாதீனத்தைக் கொண்டு . . . தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.”—1 பேதுரு 2:16, NW.
1. என்ன சுயாதீனத்தை ஆதாம் இழந்து போனான், என்ன சுயாதீனத்துக்குள் யெகோவா மீண்டும் மனிதகுலத்தைக் கொண்டுவருவார்?
நம்முடைய முதல் பெற்றோர் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்த போது, தங்கள் பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கக்கூடிய மகத்தான ஒரு பரம்பரை சொத்தை—பாவம் மற்றும் அழிவிலிருந்து சுயாதீனம்—அவர்கள் இழந்து போனார்கள். இதன் விளைவாக நாம் அனைவரும் பாவத்துக்கும் அழிவுக்கும் அடிமைகளாக பிறந்திருக்கிறோம். ஆனால், யெகோவா உண்மையுள்ள மனிதர்களை மகத்தான சுயாதீனத்துக்குள் மீண்டும் கொண்டுவர நோக்கங்கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இன்று, நேர்மையான இருதயமுள்ள ஆட்கள், “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு,” ஆவலோடே காத்திருக்கின்றனர். இதன் விளைவாக அவர்கள் “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப்,” பெற்றுக்கொள்வார்கள்.—ரோமர் 8:19-21.
‘பிரசங்கிப்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள்’
2, 3. (எ) “தேவனுடைய பிள்ளைகள்” யார்? (பி) அவர்கள் என்ன ஆச்சரியமான நிலைநிற்கையை அனுபவிக்கிறார்கள், என்ன உத்தரவாதத்தை அது கொண்டுவருகிறது?
2 இந்தத் “தேவனுடைய பிள்ளைகள்,” யார்? அவர்கள் இயேசுவோடுகூட பரலோக ராஜ்யத்தில் அரசர்களாக இருக்கப்போகும் ஆவியால்-அபிஷேகம்பண்ணப்பட்ட அவருடைய சகோதரர்கள் ஆவர். இவர்களில் முதலாவதானவர்கள் பொ.ச. முதல் நூற்றாண்டின் போது காணப்பட்டார்கள். அவர்கள் இயேசு கற்பித்த விடுதலையளிக்கும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள், பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேவிலிருந்து, பேதுரு பின்வருமாறு அவர்களுக்கு எழுதிய போது பேசிய அந்த மகத்தான சிலாக்கியங்களில் பங்குகொண்டார்கள்: “நீங்களோ . . . தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”—1 பேதுரு 2:9பி; யோவான் 8:32.
3 கடவுளுடைய சொந்த ஜனமாயிருப்பது—என்னே ஓர் ஆச்சரியமான ஆசீர்வாதம்! கடவுளுடைய அபிஷேகம்பண்ணப்பட்ட இந்தக் குமாரர்களில் நவீன நாளைய மீதியானோர் கடவுளோடு அதே ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நிலைநிற்கையை அனுபவித்துக் களிக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட உயர்வான சிலாக்கியங்களோடு உத்தரவாதங்களும் வருகின்றன. பேதுரு தொடர்ந்து பேசுகையில் இவைகளில் ஒன்றுக்கு கவனத்தை திருப்புகிறார்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்”க வேண்டும்.—1 பேதுரு 2:9எ.
4 அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடைய புண்ணியங்களை அறிவிக்கும் இந்த உத்தரவாதத்தை நிறைவேற்றியிருக்கிறார்களா? ஆம், 1919 முதற்கொண்டு அபிஷேகம்பண்ணப்பட்டவர்களைப் பற்றி தீர்க்கதரிசனமாக பேசுகையில் ஏசாயா சொன்னார்: “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும் கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், . . . என்னை அனுப்பினார்.” (ஏசாயா 61:1, 2) முக்கியமாக இயேசுவுக்கே இந்த வசனம் பொருந்தினது, இன்று அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் இவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் விடுதலையின் நற்செய்தியை மற்றவர்களுக்கு வைராக்கியமாக அறிவித்து வருகிறார்கள்.—மத்தேயு 4:23-25; லூக்கா 4:14-21.
5, 6. (எ) அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் உற்சாகமாக பிரசங்கித்ததன் விளைவு என்ன? (பி) திரள் கூட்டத்தார் என்ன சிலாக்கியங்களையும் உத்தரவாதங்களையும் அனுபவித்து மகிழ்கின்றனர்?
5 அவர்களுடைய வைராக்கியமான பிரசங்கிப்பின் விளைவாக, வேறே ஆடுகளின் ஒரு திரள் கூட்டம் இந்தக் கடைசி நாட்களின் போது உலக காட்சியில் தோன்றியிருக்கிறது. யெகோவாவைச் சேவிப்பதில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களோடு சேர்ந்துகொள்வதற்காக இவர்கள் சகல ஜாதிகளிலிருந்தும் வந்திருக்கிறார்கள், சத்தியம் இவர்களையும்கூட விடுதலையாக்கியிருக்கிறது. (சகரியா 8:23; யோவான் 10:16) ஆபிரகாமைப் போல விசுவாசத்தின் அடிப்படையில் இவர்கள் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள், யெகோவா தேவனோடு ஒரு நெருங்கிய உறவுக்குள் இவர்கள் பிரவேசித்திருக்கிறார்கள். ராகாபைப் போல அவர்கள் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருப்பது தப்பிப்பிழைப்பதற்கான நிலையில் அவர்களை வைக்கிறது—இவர்களுடைய விஷயத்தில் அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பதாகும். (யாக்கோபு 2:23-25; வெளிப்படுத்துதல் 16:14, 16) ஆனால் இப்படிப்பட்ட உயர்ந்த சிலாக்கியங்கள் கடவுளுடைய மகிமையைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும் உத்தரவாதத்தையும்கூட தவிர்க்க முடியாததாக்குகிறது. இதன் காரணமாகவே யோவான் “அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக, என்று ஆர்ப்பரித்து” யெகோவாவை பகிரங்கமாக துதிப்பதைக் கண்டார்.—வெளிப்படுத்துதல் 7:9, 10, 14.
6 கடந்த ஆண்டு, இப்பொழுது எண்ணிக்கையில் நாற்பது லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் திரள் கூட்டத்தார், அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோரின் ஒரு சிறிய தொகுதியோடுகூட யெகோவாவின் புண்ணியங்களைக் குறித்து அறிவிப்பதில் கிட்டதட்ட நூறு கோடி மணிநேரங்கள் செலவழித்திருக்கின்றனர். இது அவர்களுடைய ஆவிக்குரிய சுயாதீனத்தின் மிகச்சிறந்த உபயோகமாக இருந்தது.
“ராஜாவைக் கனம்பண்ணுங்கள்”
7, 8. கிறிஸ்தவ சுயாதீனம் உலகப்பிரகாரமான அதிகாரத்தினிடமாக என்ன உத்தரவாதத்தை தவிர்க்க முடியாததாக்குகிறது, இந்த விஷயத்தில் என்ன தவறான மனநிலையை நாம் தவிர்க்க வேண்டும்?
7 நம்முடைய கிறிஸ்தவ சுயாதீனம் மற்ற உத்தரவாதங்களையும் தவிர்க்க முடியாததாக்குகிறது. பேதுரு பின்வருமாறு எழுதுகையில் அவற்றில் சிலவற்றைக் குறிப்பட்டார்: “எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.” (1 பேதுரு 2:17) “ராஜாவைக் கனம்பண்ணுங்கள்,” என்ற சொற்றொடரினால் அர்த்தப்படுத்தப்படுவது என்ன?
8 “ராஜா,” உலக ஆட்சியாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். இன்று, அதிகாரத்திற்கு அவமரியாதைக் காண்பிக்கும் ஓர் ஆவி உலகில் வளர்ந்துவிட்டிருக்கிறது, இது கிறிஸ்தவர்களை எளிதில் பாதிக்கக்கூடும். “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிட”ப்பதன் காரணமாக தான் ஏன் “ராஜாவைக்” கனம்பண்ணவேண்டும் என்றுகூட ஒரு கிறிஸ்தவன் நினைக்கக்கூடும். (1 யோவான் 5:19) இந்த வார்த்தைகளை முன்னிட்டு, அசெளகரியமான சட்டங்களுக்கு கீழ்ப்படியாமலிருக்கவும், கூடுமானால் வரிகளை செலுத்தாமல் இருக்கவும் அவனுக்கு உரிமை இருப்பதாக அவன் நினைக்கலாம். ஆனால் இது, “இராயனுடையதை இராயனுக்குச்” செலுத்தும்படியான இயேசுவின் தெளிவான கட்டளைக்கு விரோதமாய் இருக்கும். இது உண்மையில், ‘அவனுடைய சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாக பயன்படுத்துவதாய்,’ இருக்கும்.—மத்தேயு 22:21; 1 பேதுரு 2:16.
9. உலகப் பிரகாரமான அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பதற்கு என்ன இரண்டு நல்ல காரணங்கள் இருக்கின்றன?
9 கிறிஸ்தவர்கள் அதிகாரத்தை கனம்பண்ணவும், சம்பந்தப்பட்ட விதமாக இருந்தாலும்கூட அதற்குக் கீழ்ப்பட்டிருக்கவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:29) ஏன்? 1 பேதுரு 2:14, 15-ல், அதிகாரிகள், “தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவரால் [தேவனால்] அனுப்பப்பட்”டிருக்கிறார்கள் என்று சொன்னபோது, பேதுரு மூன்று காரணங்களைக் காட்டுகிறார். தண்டனைக்குப் பயம் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க போதுமான காரணமாயிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தாக்கியதற்காக, திருடியதற்காக அல்லது வேறு ஏதோ ஒரு குற்றச்செயலுக்காக அபராதம் விதிக்கப்படுவதோ அல்லது சிறையிலடைக்கப்படுவதோ எத்தனை வெட்கக்கேடாக இருக்கும்! இப்படிப்பட்ட ஒரு காரியத்தைப் பரப்புவதில் சிலர் எத்தனை மகிழ்ச்சியடைவர் என்பதை கற்பனைச் செய்துபாருங்கள்! மறுபட்சத்தில், சட்டத்துக்குக் கீழ்ப்படிவதில் நாம் ஒரு நற்பெயரை வளர்த்துக்கொள்கையில், நேர்மையான நிர்வாகிகளிடமிருந்து நாம் புகழ்ச்சியைப் பெற்றுக்கொள்கிறோம். நற்செய்தியை பிரசங்கிக்கும் நம் வேலையைச் செய்ய நாம் அதிக சுயாதீனம் கொடுக்கப்படலாம். மேலுமாக, ‘நன்மை செய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குகிறவர்களாக இருக்கிறோம்.’ (1 பேதுரு 2:15) இது அதிகாரத்துக்கு கீழ்ப்படிவதற்கு இரண்டாவது காரணமாகும்.—ரோமர் 13:3.
10. உலகப்பிரகாரமான அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பதற்கு பலமான காரணம் என்ன?
10 ஆனால் பலமான ஒரு காரணமிருக்கிறது. அதிகாரங்கள் யெகோவாவின் அனுமதியினால் இருக்கின்றன. பேதுரு சொல்கிற வண்ணமாக, அரசியல் ஆட்சியாளர்கள் யெகோவாவால் “அனுப்பப்பட்ட”வர்களாயும், கிறிஸ்தவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பது “தேவனுடைய சித்தமா”யுமிருக்கிறது. (1 பேதுரு 2:15பி) அதேவிதமாகவே, அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்: “உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.” ஆகவே பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சி அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்திருக்க நம்மை உந்துவிக்கிறது. நாம் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க மறுப்போமானால், நாம் “தேவனுடைய நியமத்திற்கு [ஏற்பாட்டிற்கு, NW] எதிர்த்து,” நிற்கிறவர்களாக இருப்போம். (ரோமர் 13:1, 2, 5) நம்மில் யார் மனமுவந்து கடவுளுடைய ஏற்பாட்டை எதிர்த்து நிற்க விரும்புவோம்? அது என்னே கிறிஸ்தவ சுயாதீனத்தை தவறாக பயன்படுத்துவதாக இருக்கும்!
‘சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்’
11, 12. (எ) உடன்விசுவாசிகளிடமாக என்ன உத்தரவாதம் நம்முடைய கிறிஸ்தவ சுயாதீனத்தோடு வருகிறது? (பி) விசேஷமாக நம்முடைய அன்பான கரிசனைக்குப் பாத்திரமுள்ளவர்களாக இருப்பது யார், ஏன்?
11 கிறிஸ்தவர்கள், “முழு சகோதரக் கூட்டுறவிலும் அன்புகூர,” வேண்டும் என்றும் கூட பேதுரு சொன்னார். (1 பேதுரு 2:17) இது கிறிஸ்தவ சுயாதீனத்தோடு வரும் மற்றொரு உத்தரவாதமாகும். நம்மில் பெரும்பான்மையர் ஒரு சபையில் உறுப்பினராய் இருக்கிறோம். ஆம், நாம் அனைவருமே சகோதரர்களின் ஒரு சர்வதேசீய கூட்டுறவு அல்லது அமைப்பின் உறுப்பினராக இருக்கிறோம். இவர்களுக்கு அன்பு காண்பிப்பது நம்முடைய சுயாதீனத்தை ஞானமாக பயன்படுத்துவதாக இருக்கும்.—யோவான் 15:12, 13.
12 விசேஷமாக நம்முடைய அன்புக்கு பாத்திரமாக இருக்கும் கிறிஸ்தவர்களின் ஒரு தொகுதியை அப்போஸ்தலனாகிய பவுல் தனியே பிரித்துக் காண்பித்தார். அவர் சொன்னார்: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.” (எபிரெயர் 13:17) சபையில் நடத்துகிறவர்கள் மூப்பர்களாக இருக்கின்றனர். உண்மைதான், இந்த மனிதர்கள் பரிபூரணர் அல்ல. இருப்பினும், அவர்கள் ஆளும் குழுவின் மேற்பார்வையின்கீழ் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் முன்மாதிரியின் மூலமும் கரிசனையோடும் முன்சென்று நடத்துகிறார்கள், நம்முடைய ஆத்துமாக்களுக்கு உத்தரவாதமுள்ளவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். என்னே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேலை! (எபிரெயர் 13:7) மகிழ்ச்சி தரும் வகையில், பெரும்பாலான சபைகளில் நேர்த்தியான, ஒத்துழைக்கும் ஆவி இருக்கிறது, அவர்களோடு வேலை செய்வது மூப்பர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. தனிநபர்கள் ஒத்துழைக்க விரும்பாத போது இது அதிக கடினமாக இருக்கிறது. மூப்பர் இன்னும் அவர் தன் வேலையைச் செய்கிறார், ஆனால் பவுல் சொல்கிற வண்ணமாக, அதை “துக்கத்தோடே,” செய்கிறார். நிச்சயமாகவே, மூப்பர்களை துக்கப்படுத்த நாம் விரும்ப மாட்டோம்! அவர்கள் நம்மை கட்டியெழுப்பும் பொருட்டு அவர்கள் தங்கள் வேலையில் சந்தோஷத்தைக் காண்பதையே நாம் விரும்புகிறோம்.
13. நாம் மூப்பர்களோடு ஒத்துழைக்கக்கூடிய ஒரு சில வழிகள் யாவை?
13 நாம் மூப்பர்களோடு ஒத்துழைக்கக்கூடிய ஒரு சில வழிகள் யாவை? ஒன்று, ராஜ்ய மன்றத்தை பேணி காப்பதிலும் சுத்தம் செய்வதிலும் உதவிசெய்வதாகும். மற்றொன்று வியாதியாயிருப்பவர்களைச் சென்று பார்ப்பதிலும் ஊனமுற்றோருக்கு உதவி செய்வதிலும் ஒத்துழைப்பதன் மூலமாகும். மேலுமாக, சுமையாக இல்லாதிருக்கும் பொருட்டு ஆவிக்குரியவிதமாக பலமுள்ளவர்களாக காத்துக்கொள்ள நாம் உழைக்கலாம். நம்முடைய சொந்த நடத்தையின் மூலமாகவும், நம்முடைய கவனத்துக்கு வரும் வினைமையான பாவத்தைப் பற்றிய விஷயங்களை தெரிவிப்பதன் மூலமாகவும், சபையின் ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய சுத்தத்தைக் காத்துக்கொள்வது ஒத்துழைப்புக்குரிய முக்கியமான ஒரு பகுதியாகும்.
14. மூப்பர்கள் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையோடு நாம் எவ்விதமாக ஒத்துழைக்க வேண்டும்?
14 சில சமயங்களில், சபையை சுத்தமாக வைக்கும் பொருட்டு மூப்பர்கள் மனந்திரும்பாத தவறுசெய்யும் நபரை சபை நீக்கம் செய்யவேண்டியிருக்கிறது. (1 கொரிந்தியர் 5:1-5) இது சபையை பாதுகாக்கிறது. இது தவறுசெய்த நபருக்கும்கூட உதவிசெய்யக்கூடும். அடிக்கடி, இப்படிப்பட்ட சிட்சை ஒரு பாவியை அவனுடைய உணர்வுகளுக்குக் கொண்டுவர உதவியிருக்கிறது. ஆனால், சபைநீக்கம் செய்யப்பட்டவர் ஒரு நெருங்கிய நண்பராகவோ அல்லது உறவினராகவோ இருந்தால், அப்போது என்ன? அந்த நபர் நம்முடைய தந்தையாக, தாயாக அல்லது நம்முடைய மகனாக அல்லது மகளாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியிருந்தாலும் மூப்பர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நாம் மரியாதை காண்பிக்கிறோமா? உண்மைதான், அது கடினமாக இருக்கக்கூடும். ஆனால் மூப்பர்களின் தீர்மானத்தை சந்தேகித்து, சபையில் கறைப்படுத்தும் ஒரு செல்வாக்காக நிரூபித்திருக்கும் ஒருவரோடு தொடர்ந்து ஆவிக்குரிய விதமாக கூட்டுறவுக்கொள்வது சுயாதீனத்தின் என்னே ஒரு துர்ப்பிரயோகமாக இருக்கும்! (2 யோவான் 10, 11) யெகோவாவின் மக்கள் மொத்தமாக இப்படிப்பட்ட காரியங்களில் அவர்கள் ஒத்துழைக்கும் விதத்துக்காக பாராட்டுக்குரியவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாக, யெகோவாவின் அமைப்பு அசுத்தமான இந்த உலகில் கறையற்றதாக நிலைத்திருக்கிறது.—யாக்கோபு 1:27.
15. ஒரு நபர் வினைமையான பாவம் செய்துவிடுவாரேயானால், அவர் உடனடியாக என்ன செய்யவேண்டும்?
15 நாம் ஒரு வினைமையான பாவத்தை செய்துவிட்டால் அப்போது என்ன? தாவீது ராஜா பின்வருமாறு சொன்னபோது யெகோவா தயவு கூறுகிறவர்களை வருணித்தார்: “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.” (சங்கீதம் 24:3, 4) ஏதோ ஒரு காரணத்தினிமித்தமாக நாம் இனிமேலும் ‘நம்முடைய கைகளில் சுத்தமுள்ளவரும், இருதயத்தில் மாசில்லாதவருமாக இல்லாவிட்டால்,’ நாம் அவசரமாக செயல்பட வேண்டும். நம்முடைய நித்திய ஜீவனே ஆபத்திலிருக்கிறது.
16, 17. வினைமையான பாவங்களுக்காக குற்றமுள்ள ஒருவர் ஏன் காரியத்தை தானே சொந்தமாக தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யக்கூடாது?
16 சிலர் ஒருவேளை இவ்வாறு நியாயப்படுத்தி வினைமையான பாவங்களை மறைத்துவிட தூண்டப்பட்டிருக்கிறார்கள்: ‘நான் யெகோவாவிடம் பாவஅறிக்கை செய்து மனந்திரும்பிவிட்டேன். ஏன் மூப்பர்களை உட்படுத்துவது?’ தவறுசெய்தவர் சங்கடமாக உணரலாம் அல்லது மூப்பர்கள் என்ன செய்வார்களோ என்று பயந்திருக்கலாம். இருப்பினும், யெகோவா மாத்திரமே பாவத்திலிருந்து நம்மை சுத்திகரிக்க முடிகிறவராக இருந்தாலும், சபையின் தூய்மைக்கு மூப்பர்களை அவர் முக்கியமாக பொறுப்புள்ளவர்களாக்கியிருக்கிறார் என்பதை அவர் நினைவுகூர வேண்டும். (சங்கீதம் 51:2) அவர்கள் சுகப்படுத்துவதற்காக, “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு,” அங்கே இருக்கிறார்கள். (எபேசியர் 4:12) நமக்கு ஆவிக்குரிய உதவி தேவைப்படும் போது அவர்களிடம் போகாதிருப்பது, நாம் வியாதியிலிருக்கும் போது மருத்துவரிடம் போகாமல் இருப்பது போலாகும்.
17 தனியாக காரியங்களைக் கையாள முயற்சி செய்யும் சிலர், மாதங்கள் அல்லது வருடங்களுக்குப் பிறகு, அவர்களுடைய மனச்சாட்சி இன்னும் அவர்களை மிக மோசமாக தொந்தரவு செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார்கள். இன்னும் மோசமாக இருப்பது, வினைமையான தவறை மறைக்கும் மற்றவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையும்கூட பாவத்துக்குள் விழுந்துவிடுகிறார்கள். கடைசியாக விஷயம் மூப்பர்களின் கவனத்துக்கு வரும்போது, அது திரும்பத் திரும்ப செய்த தவறாக இருக்கிறது. யாக்கோபின் புத்திமதியைப் பின்பற்றுவது எத்தனை மேலானதாக இருக்கிறது! அவர் எழுதினார்: “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்ப்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்.” (யாக்கோபு 5:14) இன்னும் சுகப்படுவதற்கான காலமாக இருக்கும் போதே மூப்பர்களிடம் செல்லுங்கள். நாம் அளவுக்கு அதிகமாக காத்திருந்தோமானால், பாவமான ஒரு போக்கில் நாம் கடினப்பட்டுவிடுவோம்.—பிரசங்கி 3:3; ஏசாயா 32:1, 2.
தோற்றமும் பொழுதுபோக்கும்
18, 19. ஒரு பாதிரி ஏன் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி சாதகமான குறிப்பைச் சொன்னார்?
18 ஐந்து வருடங்களுக்கு முன்பாக, சர்ச் பத்திரிகை ஒன்றில், இத்தாலியிலுள்ள ஒரு கத்தோலிக்க பாதிரி யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி உற்சாகமாக பேசினார்.a அவர் சொன்னார்: “தனிப்பட்டவிதமாக நான் யெகோவாவின் சாட்சிகளை விரும்புகிறேன்; நான் ஒளிவுமறைவில்லாமல் அதை ஒப்புக்கொள்கிறேன். . . . எனக்குத் தெரிந்தவர்கள் குற்றமில்லாத நடத்தையுள்ளவர்கள், இனிமையாக பேசுகிறவர்கள் . . . [மேலும்] தூண்டி இயக்க வல்லவர்கள். சத்தியம் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க வகையில் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை நாம் எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்? சத்தியத்தை அறிவிப்பவர்கள் அரைமனதாக, அருவருப்பான துர்நாற்றமுள்ளவர்களாக, பரட்டைத் தலையுடன், ஒழுங்கற்றவர்களாக இருக்க வேண்டியதில்லையென்று?”
19 இந்த வார்த்தைகளின் பிரகாரம், மற்ற காரியங்களோடுகூட சாட்சிகள் உடுத்தியிருந்த விதமும் அவர்கள் தோற்றமளித்த விதமும் பாதிரியை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அவர் சந்தித்த ஆட்கள் பல வருடங்களாக “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,” கொடுத்து வந்திருக்கும் புத்திமதிக்குச் செவிசாய்த்திருக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. (மத்தேயு 24:45) ஸ்திரீகளின் உடை ‘தகுதியானதாகவும் அடக்கமாயும்,’ இருக்கவேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 2:9) சீர்கெட்ட இந்தக் காலத்தில், அந்தப் புத்திமதி ஆண்களுக்கும்கூட அவசியமாயிருக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தின் பிரதிநிதிகள் வெளியிலுள்ள ஆட்களுக்கு முன்பாக கண்ணியமான தோற்றத்தை அளிப்பது நியாயமாக இருக்கிறதல்லவா?
20. ஒரு கிறிஸ்தவன் ஏன் எல்லா சமயங்களிலும் தன் உடையைக் குறித்து உணர்வுள்ளவனாக இருக்க வேண்டும்?
20 சிலர், கூட்டங்களுக்கும் வெளிஊழியத்துக்கும் எவ்வாறு உடுத்துகிறார்கள் என்பதைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால், மற்ற சமயங்களில் பைபிள் நியமங்கள் பொருந்துவதில்லை என்பதாக நினைக்கலாம். ஆனால், நாம் எப்போதாவது கடவுளுடைய ராஜ்யத்தின் பிரதிநிதிகளாக இருப்பதை நிறுத்திவிடுகிறோமா? உண்மைதான், சூழ்நிலைமைகள் வித்தியாசப்படலாம். நாம் ஒரு ராஜ்ய மன்றத்தை கட்டுவதற்கு உதவி செய்துகொண்டிருக்கையில், அதே ராஜ்ய மன்றத்தில் நாம் ஒரு கூட்டத்துக்கு வரும் போது உடுத்துவதிலிருந்து வித்தியாசமாக உடுத்துவோம். நாம் ஓய்வாயிருக்கையில், நாம் ஒருவேளை அதிக தளர்ந்த (கண்டிப்புக் குறைவான) பாணியில் உடுத்துவோம். ஆனால் மற்றவர்களால் காணப்படும் சமயங்களில் நம்முடைய உடை எப்போதும் தகுதியானதாயும் அடக்கமாயும் இருக்க வேண்டும்.
21, 22. தீங்கிழைக்கும் பொழுதுபோக்கிலிருந்து நாம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கிறோம், இப்படிப்பட்ட விஷயங்களின் பேரில் புத்திமதியை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்?
21 அதிகமான கவனத்தை பெற்றுக்கொண்டிருக்கும் மற்றொரு பகுதி பொழுதுபோக்காகும். மனிதர்களுக்கு—விசேஷமாக இளைஞருக்கு—பொழுதுபோக்கு அவசியம். குடும்பம் ஓய்வாக பொழுதைப் போக்க திட்டமிடுவது ஒரு பாவமாகவோ அல்லது நேரத்தை வீணாக்குவதாகவோ இருக்காது. இயேசுவும்கூட “சற்றே இளைப்பாறும்படி,” தம்முடைய சீஷர்களை அழைத்தார். (மாற்கு 6:31) ஆனால் பொழுதுபோக்கு ஆவிக்குரிய தூய்மைக்கேட்டின் வழியைத் திறந்து வைக்காமல் இருப்பது குறித்து கவனமாயிருங்கள். பொழுதுபோக்கானது, பாலின ஒழுக்கக்கேடு, படுமோசமான வன்முறை, திகில், மற்றும் ஆவியுலகத் தொடர்பு ஆகியவற்றை உயர்த்திக்காண்பிக்கும் ஓர் உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:3; வெளிப்படுத்துதல் 22:15) உண்மையும் விவேகமுமுள்ள அடிமை இப்படிப்பட்ட ஆபத்துக்களைக் குறித்து விழிப்புள்ளதாய் அதற்கு எதிராக இடைவிடாமல் நம்மை எச்சரித்து வருகிறது. இந்த நினைப்பூட்டுதல்கள் உங்கள் சுயாதீனங்களின் வரம்பை கடப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது இப்படிப்பட்ட ஆபத்துக்களைக் குறித்து இடைவிடாமல் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு யெகோவாவின் அமைப்பு உங்களைப் பற்றி தேவையான அளவு அக்கறையுள்ளதாக இருப்பதற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா?—சங்கீதம் 19:7; 119:95.
22 நம்முடைய சுயாதீனம் யெகோவாவிடமிருந்து வந்தபோதிலும், நாம் எவ்வாறு அதை பயன்படுத்துகிறோம் என்பதற்கு நாம் பொறுப்புள்ளவர்களாயிருப்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. நல்ல புத்திமதியை அசட்டை செய்து நாம் தவறான தீர்மானங்களைச் செய்துவிடுவோமானால், நாம் வேறு ஒருவரை குறை சொல்ல முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்: “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.”—ரோமர் 14:12; எபிரெயர் 4:13.
தேவனுடைய பிள்ளைகளுக்குரிய சுயாதீனத்தை நாடுங்கள்
23. (எ) சுயாதீனத்தின் சம்பந்தமாக நாம் இப்பொழுது என்ன ஆசீர்வாதங்களை அனுபவித்துக் களிக்கிறோம்? (பி) என்ன ஆசீர்வாதங்களுக்காக நாம் ஆவலாய் காத்திருக்கிறோம்?
23 நாம் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு ஜனமாக இருக்கிறோம். நாம் பொய் மதத்திலிருந்தும் மூட நம்பிக்கையிலிருந்தும் விடுதலையாயிருக்கிறோம். மீட்பின் பலியின் காரணமாக, பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைகளாயிருப்பதிலிருந்து ஆவிக்குரிய விதமாக விடுதலைப்பெற்று, சுத்திகரிக்கப்பட்ட ஒரு மனச்சாட்சியோடு யெகோவாவை நாம் அணுகமுடியும். வெகு சீக்கிரத்தில், “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவது” நடந்தேறும். அர்மகெதோனில், தங்களுடைய பரலோக மகிமையிலுள்ள இயேசுவின் சகோதரர்கள், யெகோவாவின் சத்துருக்களை அழிப்பவர்களாக மனிதர்களுக்கு வெளிப்படுவர். (ரோமர் 8:19; 2 தெசலோனிக்கேயர் 1:6-8; வெளிப்படுத்துதல் 2:26, 27) அதற்குப் பின்பு, தேவனுடைய இந்தப் புத்திரர்கள் கடவுளுடைய சிங்காசனத்திலிருந்து மனிதகுலத்துக்கு புறப்பட்டு வருகிற ஆசீர்வாதங்களுக்கு வழியாக வெளிப்படுத்தப்படுவர். (வெளிப்படுத்துதல் 22:1-5) கடைசியாக, தேவனுடைய புத்திரரின் இந்த வெளிப்பாடு, உண்மையுள்ள மனிதகுலம் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தினால் ஆசீர்வதிக்கப்படுவதில் விளைவடையும். அந்தக் காலத்துக்காக நீங்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் கிறிஸ்தவ சுயாதீனத்தை ஞானமாக பயன்படுத்துங்கள். இப்பொழுது கடவுளுக்கு ஊழியஞ்செய்யுங்கள், அப்பொழுது எல்லா நித்திய காலத்துக்குமாக அந்த ஆச்சரியமான சுயாதீனத்தை நீங்கள் அனுபவித்துக் களிப்பீர்கள்!
[அடிக்குறிப்புகள்]
a பாதிரி தெளிவாகவே அழுத்தத்தின்கீழ் இந்தப் பாராட்டை பின்னர் திரும்ப பெற்றுக்கொண்டார்.
விமர்சனப் பெட்டி
◻ அபிஷேகம்பண்ணப்பட்டவர்களும் வேறே ஆடுகளும் எவ்விதமாக யெகோவாவை மகிமைப்படுத்தியிருக்கிறார்கள்?
◻ கிறிஸ்தவர்கள் ஏன் உலகப்பிரகாரமான அதிகாரங்களை கனம்பண்ண வேண்டும்?
◻ ஒரு கிறிஸ்தவன் என்ன வழிகளில் மூப்பர்களோடு ஒத்துழைக்கலாம்?
◻ உடையைப் பற்றிய விஷயத்தில், யெகோவாவின் சாட்சிகள் ஏன் உலகிலுள்ள அநேகரிலிருந்து வித்தியாசமாக தனியே காணப்படுகிறார்கள்?
◻ பொழுதுபோக்கு பற்றியதில் நாம் எதை தவிர்க்க வேண்டும்?
4. கிறிஸ்தவ சுயாதீனத்தோடு வரும் உத்தரவாதத்தை அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் எவ்வாறு நிறைவேற்றிவந்திருக்கிறார்கள்?
[பக்கம் 17-ன் படம்]
மூப்பர்கள் விசேஷமாக நம்முடைய அன்புக்கும் ஒத்துழைப்புக்கும் பாத்திரராக இருக்கிறார்கள்
[பக்கம் 18-ன் படங்கள்]
ஒரு கிறிஸ்தவனின் உடை தகுதியானதாயும், அடக்கமாயும், சமயத்துக்கு பொருத்தமானதாயும் இருக்க வேண்டும்