ரோமருக்குக் கடிதம்
8 அதனால், கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிறவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடையாது. 2 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிறவர்களுக்கு வாழ்வு தருகிற கடவுளுடைய சக்தியின் சட்டம் உங்களைப் பாவத்தின் சட்டத்திலிருந்தும் மரணத்தின் சட்டத்திலிருந்தும் விடுதலை செய்திருக்கிறது.+ 3 மனிதர்களுடைய பாவ இயல்பால் திருச்சட்டம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட முடியாததாகவும் அவர்களைக் காப்பாற்ற முடியாததாகவும் இருந்தது.+ அந்தத் திருச்சட்டம் செய்ய முடியாததைக்+ கடவுளே செய்தார். அதாவது, பாவத்தைப் போக்குவதற்குத் தன்னுடைய மகனைப் பாவமுள்ள மனித சாயலில்+ அனுப்பி,+ மனிதர்களிடமுள்ள பாவத்தைக் கண்டனம் செய்தார். 4 பாவ வழியில் நடக்காமல் கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிற நாம்,+ திருச்சட்டத்தின் நீதியான கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும்+ என்பதற்காக அப்படிச் செய்தார். 5 பாவ வழியில் நடக்கிறவர்கள் பாவ காரியங்களைப் பற்றியே யோசிக்கிறார்கள்.+ ஆனால், கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறவர்கள் கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிக்கிறார்கள்.+ 6 பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் மரணமடைவார்கள்,+ கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் வாழ்வையும் சமாதானத்தையும் அடைவார்கள்.+ 7 பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பது கடவுளுக்கு விரோதமானது.+ அது கடவுளுடைய சட்டத்துக்குக் கட்டுப்பட்டதாக இல்லை, சொல்லப்போனால் கட்டுப்பட்டதாக இருக்கவும் முடியாது. 8 அதனால், பாவ வழியில் நடக்கிறவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது.
9 ஆனாலும், கடவுளுடைய சக்தி உண்மையிலேயே உங்களிடம் குடியிருந்தால் பாவ வழியில் நடக்காமல் கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பீர்கள்.+ கிறிஸ்துவின் சிந்தை ஒருவனிடம் இல்லையென்றால், அவன் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன் அல்ல. 10 ஆனால் கிறிஸ்து உங்களோடு ஒன்றுபட்டிருந்தால்,+ பாவத்தின் காரணமாக உங்கள் உடல் செத்திருந்தாலும் நீதியின் காரணமாகக் கடவுளுடைய சக்தி உங்களுக்கு உயிர் கொடுக்கும். 11 இயேசுவை உயிரோடு எழுப்பியவரின் சக்தி உங்களிடம் இப்போது குடியிருந்தால், கிறிஸ்து இயேசுவை உயிரோடு எழுப்பிய அவரே+ தன்னுடைய சக்தியால் சாவுக்குரிய உங்கள் உடல்களுக்கு உயிர் கொடுப்பார்.+
12 சகோதரர்களே, பாவ இயல்புக்கு அடிபணிந்து அதன் ஆசைகளின்படி வாழ வேண்டிய கட்டாயம் நமக்கு இல்லை.+ 13 நீங்கள் அப்படிப் பாவ ஆசைகளின்படி வாழ்ந்தால் நிச்சயம் சாவீர்கள்.+ உங்களுடைய கெட்ட செயல்களைக் கடவுளுடைய சக்தியின் உதவியோடு ஒழித்துவிட்டால் உயிர்வாழ்வீர்கள்.+ 14 கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிற எல்லாரும் கடவுளுடைய மகன்களாக இருக்கிறார்கள்.+ 15 கடவுளுடைய சக்தி நம்மை அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி பயப்பட வைப்பதில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவதற்கு வழிநடத்தி, அவரை “அபா,* தகப்பனே!” என்று கூப்பிட வைக்கிறது.+ 16 நாம் கடவுளுடைய பிள்ளைகள்+ என்பதை அந்தச் சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது.*+ 17 நாம் பிள்ளைகள் என்றால், வாரிசுகளாகவும் இருப்போம். உண்மையில், கடவுளுடைய வாரிசுகளாக, கிறிஸ்துவின் சக வாரிசுகளாக,+ இருப்போம். கிறிஸ்துவோடு சேர்ந்து நாம் பாடுகளை அனுபவித்தால்+ அவரோடு சேர்ந்து மகிமையையும் பெறுவோம்.+
18 அதனால், நம் மூலம் வெளிப்படப்போகிற மகிமையோடு ஒப்பிடும்போது இந்தக் காலத்தில் நாம் படும் பாடுகள் ஒன்றுமே இல்லை என்று நினைக்கிறேன்.+ 19 கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவதற்காகப் படைப்பு* மிகவும் ஆவலோடு காத்திருக்கிறது.+ 20 ஏனென்றால், படைப்பு வீணான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது;+ அதன் சொந்த விருப்பத்தால் அல்ல, கடவுளுடைய விருப்பத்தால் அப்படித் தள்ளப்பட்டது. 21 படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு+ கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும் என்ற நம்பிக்கையோடு அப்படித் தள்ளப்பட்டது. 22 நமக்குத் தெரிந்தபடி, இதுவரை எல்லா படைப்புகளும் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. 23 அதுமட்டுமல்ல, நமக்குக் கிடைக்கப்போகிற ஆஸ்திக்கு உத்தரவாதமாகக் கடவுளுடைய சக்தியைப் பெற்ற நாமும்கூட,* ஆம் நாமும்கூட, உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறோம்.+ அதேசமயம், கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவதற்கு,+ அதாவது மீட்புவிலையால் நம்முடைய உடலிலிருந்து விடுதலை செய்யப்படுவதற்கு, மிகவும் ஆவலோடு காத்திருக்கிறோம். 24 இந்த நம்பிக்கையில்தான் நாம் காப்பாற்றப்பட்டோம். ஆனால், கண்களால் பார்ப்பதை நம்புவது உண்மையில் நம்பிக்கையே அல்ல. ஒருவன் ஒன்றை நேரடியாகப் பார்க்கும்போது அதற்காக அவன் நம்பிக்கையோடு காத்திருக்கிறான் என்று சொல்வோமா? 25 கண்களால் பார்க்காததை+ நாம் நம்பினால்தான்,+ சகிப்புத்தன்மையுடன்+ அதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருப்போம்.
26 அதோடு, நாம் பலவீனமாக இருக்கிற சமயங்களில் கடவுளுடைய சக்தியும் நமக்கு உதவி செய்கிறது.+ எப்படியென்றால், ஜெபம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் என்ன ஜெபிப்பதென்று நமக்குத் தெரியாதபோது, வார்த்தைகளால் சொல்ல முடியாத* நம் உள்ளக் குமுறல்களைப் பற்றி அந்தச் சக்தி நமக்காகப் பரிந்து பேசுகிறது. 27 இதயங்களை ஆராய்ந்து பார்க்கிற கடவுளுக்கு,+ அந்தச் சக்தி என்ன சொல்கிறது என்று தெரியும். ஏனென்றால், அது அவருடைய விருப்பத்தின்படி* பரிசுத்தவான்களுக்காகப் பரிந்து பேசுகிறது.
28 கடவுள் தன்னை நேசிக்கிறவர்களுடைய, அதாவது தன் நோக்கத்தின்படி+ அழைக்கப்பட்டவர்களுடைய, நன்மைக்காகத் தன்னுடைய எல்லா செயல்களையும் ஒன்றுக்கொன்று இசைந்துபோக வைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். 29 ஏனென்றால், தன்னுடைய விசேஷ கவனத்தைப் பெற்றவர்கள் தன்னுடைய மகனின் சாயலுக்கு ஒப்பாக இருக்க வேண்டும்+ என்று அவர் முன்தீர்மானித்தார். தன்னுடைய மகனே முதல் மகனாகவும்+ அவர்கள் அவருடைய சகோதரர்களாகவும்+ இருக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார். 30 அவரால் முன்தீர்மானிக்கப்பட்டவர்கள்+ அவரால் அழைக்கப்பட்டவர்களாக+ இருக்கிறார்கள். அவரால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் நீதிமான்களாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக+ இருக்கிறார்கள். அவரால் நீதிமான்களாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அவரால் மகிமைப்படுத்தப்பட்டவர்களாக+ இருக்கிறார்கள்.
31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+ 32 தன்னுடைய சொந்த மகனென்றும் பார்க்காமல் நம் எல்லாருக்காகவும் அவரைக் கொடுத்தவர்+ அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பாரா? 33 கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மீது யாரால் குற்றம்சாட்ட முடியும்?+ கடவுள்தான் அவர்களை நீதிமான்களாக ஏற்றுக்கொள்கிறாரே.+ 34 அவர்களுக்கு யாரால் தண்டனைத் தீர்ப்பு கொடுக்க முடியும்? இறந்த பின்பு, சொல்லப்போனால், உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற கிறிஸ்து இயேசுவும்+ நமக்காகப் பரிந்து பேசுகிறாரே.+
35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து எது நம்மைப் பிரிக்க முடியும்?+ உபத்திரவமா, வேதனையா, துன்புறுத்தலா, பசியா, நிர்வாணமா, ஆபத்தா, வாளா?+ 36 “உங்களுக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்; வெட்டப்படுகிற ஆடுகள் போல ஆகிவிட்டோம்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நமக்கு நடக்கும். 37 இருந்தாலும், நம்மேல் அன்பு காட்டியவரின் உதவியோடு இவை எல்லாவற்றிலும் நாம் முழு வெற்றி+ பெற்றுவருகிறோம். 38 சாவோ, வாழ்வோ, தேவதூதர்களோ, அரசாங்கங்களோ, இன்றுள்ள காரியங்களோ, இனிவரும் காரியங்களோ, வலிமைமிக்க சக்திகளோ,+ 39 உயர்வான காரியங்களோ, தாழ்வான காரியங்களோ, வேறெந்தப் படைப்போ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று உறுதியாக நம்புகிறேன்.