தவறை ஏன் தெரிவிக்க வேண்டும்?
“விஷயத்தை அம்பலப்படுத்துகிறவன் மக்களுடைய எதிரி ஆகிறான்” என மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சிலர் சொல்கின்றனர். தன்னுடைய தங்கையுடன் தன் அண்ணன் செய்த முறைதகா உறவைப் பற்றி ஓலு குற்றஞ்சாட்டியபோது இதுதான் நடந்தது. “நீ ஒரு புளுகுணி!” என கத்தினார் அண்ணன். அதன்பின்பு ஓலுவை மூர்க்கத்தனமாய் அடித்து, பரம்பரை வீட்டை விட்டு துரத்திவிட்டார்; அதோடு ஓலுவின் எல்லா துணிமணிகளையும் கொளுத்திவிட்டார். கிராமவாசிகள் அண்ணனுக்கு ஆதரவு தந்தார்கள். இனிமேல் கிராமத்தில் யாரும் வரவேற்காததால், ஓலு அங்கிருந்து செல்லவேண்டியதாயிற்று. அந்தப் பெண் கர்ப்பவதியானதைப் பார்த்த பிறகுதான் ஓலு சொன்னது உண்மை என்பதை அந்த மக்கள் உணர்ந்தார்கள். உண்மையை அண்ணன் ஒத்துக்கொண்டார், ஓலுவுக்கு மீண்டும் தயவுகிடைத்தது. விஷயமே வேறுவிதமாய் ஆகியிருந்திருக்கும். ஓலு கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
தெளிவாகவே, யெகோவாமீது எந்தவித அன்பும் இல்லாதவர்கள் தாங்கள் செய்த தவறு வெட்டவெளிச்சமாவதை போற்றுவதில்லை. பாவமுள்ள மனிதனின் மனப்போக்கே, கடிந்துகொள்ளுதலை எதிர்த்து அதைக் கொடுக்கிறவர் யாராக இருந்தாலும் அவர்மீது மனக்கசப்படைவதுதான். (யோவான் 7:7-ஐ ஒப்பிடுக.) மற்றவர்கள் செய்த தவறுகளைத் திருத்தும் அதிகாரமுள்ளவர்களிடம் அவற்றை வெளிப்படுத்தும்போது, அநேகர் குத்துக்கல் போல் நிற்பதில் ஆச்சரியமே இல்லை.
கடிந்துகொள்ளுதலின் மதிப்பை போற்றுதல்
இருப்பினும், யெகோவாவின் மக்கள் மத்தியில், கடிந்துகொள்ளுதலைக் குறித்து வித்தியாசமான மனப்பான்மை உள்ளது. கிறிஸ்தவ சபைக்குள்ளே இருக்கும் தவறுசெய்தவர்களுக்கு உதவ யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டுக்கு தேவபக்தியுள்ள ஆண்களும் பெண்களும் ஆழ்ந்த போற்றுதலைக் காண்பிக்கின்றனர். இப்படிப்பட்ட சிட்சை அவருடைய அன்பான தயவின் வெளிக்காட்டு என்பதை உணருகின்றனர்.—எபிரெயர் 12:6-11.
தாவீது ராஜாவினுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தினால் இதை விளக்கிக் காண்பிக்கலாம். அவர் இளம் வயதிலிருந்தே நீதிமானாய் இருந்தபோதிலும், பெருந்தவறுக்குள் வீழ்ந்த ஒரு சமயம் வந்தது. முதலாவதாக, அவர் விபசாரம் செய்தார். அதன்பின்பு, தன்னுடைய தவறை மூடி மறைப்பதற்காக அந்தப் பெண்ணின் கணவன் கொல்லப்படும்படி ஏற்பாடு செய்தார். ஆனால், தீர்க்கதரிசியாகிய நாத்தானுக்கு தாவீதின் பாவத்தை யெகோவா வெளிப்படுத்தினார்; இந்த விஷயத்தைக் குறித்துப்பேச நாத்தான் தைரியமாய் தாவீதை சந்தித்தார். வலிமைமிக்க ஒரு உதாரணத்தைப் பயன்படுத்தி, தாவீதிடம் நாத்தான் கேட்டார்: அநேக செம்மறியாடுகளை வைத்திருந்தபோதிலும், தன்னுடைய நண்பனுக்கு விருந்து செய்வதற்காக ஒரு ஏழை மனிதனுடைய ஒரேவொரு ஆட்டுக்குட்டியை, அவன் பொக்கிஷமாய் கருதிய குட்டியை, எடுத்து சமைத்துப் போட்ட செல்வந்தனை என்ன செய்ய வேண்டும். முன்னாள் மேய்ப்பனாகிய தாவீது, அந்த அநியாயத்தைக் குறித்து கோபத்தால் கொதித்தெழும்படி தூண்டப்பட்டார். அவர் சொன்னார்: “இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன்”! பின்பு நாத்தான் இந்த உதாரணத்தை தாவீதுக்குப் பயன்படுத்தி சொன்னதாவது: “நீயே அந்த மனுஷன்”!—2 சாமுவேல் 12:1-7.
நாத்தானிடம் தாவீது கோபங்கொள்ளவில்லை; தன்சார்பாக வாதாடவுமில்லை, பதிலுக்கு அவர்மீது கடுமையாக சாடவுமில்லை. அதற்கு மாறாக, நாத்தான் கொடுத்த கடிந்துகொள்ளுதல் அவருடைய மனச்சாட்சியை ஆழமாய் தொட்டது. இருதயத்தில் கீறுண்டவராய், தாவீது இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன்.”—2 சாமுவேல் 12:13.
தாவீதின் பாவத்தை நாத்தான் அம்பலப்படுத்தி தேவபக்திக்குரிய கடிந்துகொள்ளுதலை கொடுத்தது நல்ல பலன்களைப் பிறப்பித்தது. தாவீது தான் செய்த தவறினால் வந்த விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்படாதபோதிலும், அவர் மனந்திரும்பி யெகோவாவுடன் ஒப்புரவானார். இத்தகைய கடிந்துகொள்ளுதலை பற்றி தாவீது எவ்வாறு உணர்ந்தார்? அவர் எழுதினார்: “நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை.”—சங்கீதம் 141:5.
நம்முடைய நாளிலும்கூட, யெகோவாவின் ஊழியர்கள், அநேக ஆண்டுகளாக உண்மைதன்மையுடன் இருந்திருப்பவர்களும்கூட, பெருந்தவறில் ஈடுபட்டுவிடக்கூடும். மூப்பர்கள் உதவிசெய்யக்கூடும் என்பதை உணர்ந்தவர்களாய், பெரும்பாலானோர் உதவிக்காக அவர்களை அணுகுவதற்கு முதற்படி எடுக்கின்றனர். (யாக்கோபு 5:13-16) ஆனால் சிலசமயங்களில், தாவீது செய்ததுபோல, தவறிழைத்தவர் தன்னுடைய பாவத்தை மறைக்க முயலக்கூடும். சபையிலுள்ள பெருந்தவறைப் பற்றி நாம் அறியவந்தால் என்ன செய்ய வேண்டும்?
அது யாருடைய உத்தரவாதம்?
பெருந்தவறைப் பற்றி மூப்பர்கள் அறியவரும்போது, தேவையான உதவியையும் திருத்தத்தையும் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அந்த நபரை அணுகுகின்றனர். கிறிஸ்தவ சபைக்குள்ளே இருக்கும் இப்படிப்பட்டவர்களை நியாயந்தீர்ப்பது மூப்பர்களுடைய உத்தரவாதமாகும். அதன் ஆவிக்குரிய நிலைமையை கூர்ந்து கண்காணித்து, ஞானமற்ற அல்லது தவறான நடவடிக்கையை எடுக்கிற எவருக்கும் அவர்கள் உதவிசெய்து புத்திசொல்லுகின்றனர்.—1 கொரிந்தியர் 5:12, 13; 2 தீமோத்தேயு 4:2; 1 பேதுரு 5:1, 2.
ஆனால், நீங்கள் ஒரு மூப்பராக இல்லாமலிருந்து மற்றொரு கிறிஸ்தவரின் பாகத்தில் ஏதாவது மோசமான தவறைப்பற்றி அறியவந்தால் அப்போது என்ன செய்வது? இஸ்ரவேல் தேசத்தாருக்கு யெகோவா கொடுத்த நியாயப்பிரமாணத்தில் வழிகாட்டுக் குறிப்புகள் அடங்கியுள்ளன. விசுவாசதுரோக செயல்கள், ராஜதுரோகம், கொலை, அல்லது வேறு ஏதாவது பெரும் குற்றச்செயல்களை ஒருவர் பார்த்தால், அதை தெரிவித்து தான் அறிந்ததை உறுதிப்படுத்துவது அவருடைய உத்தரவாதம் என நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது. லேவியராகமம் 5:1 இவ்வாறு குறிப்பிடுகிறது: “சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.”—ஒப்பிடுக: உபாகமம் 13:6-8; எஸ்தர் 6:2; நீதிமொழிகள் 29:24.
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லாமலிருந்தாலும், கிறிஸ்தவர்கள் இன்றைக்கு அதற்குப் பின்னாலுள்ள நியமங்களால் வழிநடத்தப்படலாம். (சங்கீதம் 19:7, 8) ஆகவே, உடன் கிறிஸ்தவர் ஒருவருடைய பெருந்தவறைப் பற்றி அறியவந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
அந்த விஷயத்தைக் கையாளுதல்
முதலாவதாக, பெருந்தவறு உண்மையிலேயே நடந்திருக்கிறது என்பதை நம்புவதற்கு போதிய ஆதரமுள்ள காரணம் இருப்பது முக்கியம். “நியாயமின்றி பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சம் பேசாதே” என ஞானவான் குறிப்பிட்டார்.—நீதிமொழிகள் 24:28.
மூப்பர்களிடம் நேரிடையாக செல்ல நீங்கள் விரும்பலாம். அவ்வாறு செய்வது தவறல்ல. இருப்பினும், பொதுவாக, சம்பந்தப்பட்ட நபரை அணுகுவதே மிகவும் அன்பான போக்காகும். ஒருவேளை உண்மைகளெல்லாம் அவை தோன்றுகிறதுபோலவே இருக்காது. அல்லது ஒருவேளை அந்தச் சூழ்நிலைமை ஏற்கெனவே மூப்பர்களால் கையாளப்பட்டிருக்கலாம். அந்த நபருடன் அந்தப் பிரச்சினையைப் பற்றி அமைதலாக பேசுங்கள். மோசமான தவறிழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவதற்கு காரணம் இருந்தால், உதவிக்காக மூப்பரை அணுகும்படி அவரையோ அல்லது அவளையோ உற்சாகப்படுத்தி, அவ்வாறு செய்வதன் ஞானத்தை விளக்குங்கள். அந்த விஷயத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசாதிருங்கள், ஏனென்றால் அது வீண்பேச்சாக இருக்கும்.
நியாயமான காலப்பகுதிக்குள் மூப்பரிடம் அந்த நபர் தெரிவிக்கவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் சொல்ல வேண்டும். பின்பு ஓரிரண்டு மூப்பர்கள் அந்த விஷயத்தைப் பற்றி குற்றஞ்சாட்டப்பட்டவருடன் பேசுவார்கள். தவறிழைக்கப்பட்டிருக்கிறதா என்பதை மூப்பர்கள் ‘நன்றாய் விசாரித்து, கேட்டாராய’ வேண்டும். அப்படியிருந்தால், வேதப்பூர்வ வழிகாட்டு குறிப்புகளுக்கேற்ப அந்தக் காரியத்தை அவர்கள் கையாளுவார்கள்.—உபாகமம் 13:12-14.
தவறைப் பற்றிய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவைப்படுகிறார்கள். (யோவான் 8:17; எபிரெயர் 10:28) அந்த நபர் குற்றச்சாட்டை மறுதலித்து, உங்கள் ஒருவருடைய சாட்சி மட்டுமே இருந்தால், அந்தக் காரியம் யெகோவாவின் கரங்களில் விட்டுவிடப்படும். (1 தீமோத்தேயு 5:19, 24, 25) இது, எல்லா காரியங்களும் யெகோவாவுக்கு ‘வெளியரங்கமாயிருக்கின்றன’ என்ற அறிவின் அடிப்படையில் செய்யப்படுகிறது; அந்த நபர் குற்றவாளியாக இருந்தால், இறுதியில் அவருடைய பாவங்கள் அவரைப் ‘பற்றிப் பிடித்துக்கொள்ளும்.’—எபிரெயர் 4:13; எண்ணாகமம் 32:23, தி.மொ.
ஆனால் அந்த நபர் குற்றச்சாட்டை மறுதலிக்கிறார், நீங்கள் மாத்திரம்தான் அவருக்கு எதிரான ஒரே சாட்சி என வைத்துக்கொள்வோம். இப்பொழுது நீங்கள் பழிதூற்றியதாக எதிர் குற்றஞ்சாட்டப்படுவதற்கு ஆளாகக்கூடுமா? இல்லை, அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படாத ஒருவரிடம் நீங்கள் புறங்கூறினால் தவிர குற்றச்சாட்டுக்கு ஆளாகமாட்டீர்கள். கண்காணித்து காரியங்களைச் சரிசெய்கிற அதிகாரமும் உத்தரவாதமும் உள்ளவர்களிடம் சபையை பாதிக்கிற நிலைமைகளை அறிவிப்பது பழிதூற்றுதலல்ல. அது, உண்மையில் சொல்லப்போனால், சரியானதும் உண்மையானதுமானவற்றை நம்முடைய விருப்பத்திற்கு இசைவாக எப்பொழுதும் செய்வதாகும்.—லூக்கா 1:74, 75-ஐ ஒப்பிடுக.
சபையில் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுதல்
தவறை தெரியப்படுத்துவதற்கான ஒரு காரணம், அது சபையின் சுத்தத்தைப் பாதுகாக்க உதவுகிறது. யெகோவா தூய்மையான கடவுள், பரிசுத்தமுள்ள ஒரு கடவுள். அவரை வணங்குகிற அனைவரும் ஆவிக்குரிய ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சுத்தமுள்ளவர்களாய் இருக்கும்படி தேவைப்படுத்துகிறார். ஏவப்பட்டு எழுதப்பட்ட அவருடைய வார்த்தை இவ்வாறு புத்திமதி கூறுகிறது: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.” (1 பேதுரு 1:14-16) அசுத்தமானதை அல்லது தவறானதை பழக்கமாய் செய்கிற நபர்களை திருத்துவதற்கு அல்லது நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் தவிர, முழு சபையின்மீதும் களங்கத்தையும் யெகோவாவின் வெறுப்பையும் அவர்கள் கொண்டுவரக்கூடும்.—யோசுவா, 7-ம் அதிகாரத்தை ஒப்பிடுக.
தவறை தெரியப்படுத்துவது கொரிந்துவிலிருந்த கடவுளுடைய ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவதற்கு உதவியது என்பதை அங்கிருந்த கிறிஸ்தவ சபைக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதங்கள் காண்பிக்கின்றன. தன்னுடைய முதல் கடிதத்தில், பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.”—1 கொரிந்தியர் 5:1.
இந்த அறிக்கையை யாரிடமிருந்து அந்த அப்போஸ்தலன் பெற்றார் என்பதை பைபிள் சொல்வதில்லை. பவுல் தங்கியிருந்த எபேசுவுக்கு கொரிந்துவிலிருந்து பயணம் சென்ற ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோரிடமிருந்து இந்த சூழ்நிலைமையைப் பற்றி பவுல் அறிந்திருக்கலாம். கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவ சபையிடமிருந்து விசாரணைக் கடிதத்தையும் பவுல் பெற்றிருந்தார். ஊற்றுமூலம் எதுவாக இருந்தாலும், நம்பத்தக்க சாட்சிகள் மூலம் அந்தச் சூழ்நிலைமை பவுலுக்கு அறிவிக்கப்பட்டவுடன், அந்த விஷயத்தின்பேரில் அவரால் வழிநடத்துதல் கொடுக்க முடிந்தது. “அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்” என்று எழுதினார். அந்த மனிதன் சபையிலிருந்து நீக்கப்பட்டான்.—1 கொரிந்தியர் 5:13; 16:17, 18.
பவுலுடைய அறிவுரை நல்ல பலன்களைக் கொண்டுவந்ததா? நிச்சயமாகவே கொண்டுவந்தது! தெளிவாகவே, தவறுசெய்த அந்த நபருக்கு புத்தி தெளிந்தது. கொரிந்தியர்களுக்கு எழுதிய தன்னுடைய இரண்டாவது கடிதத்தில், மனந்திரும்பிய அந்த மனிதனை அந்த சபை ‘தயவுடன் மன்னித்து ஆறுதல் செய்யும்படி’ பவுல் உந்துவித்தார். (2 கொரிந்தியர் 2:6-8, NW) இவ்வாறாக, தவறை தெரியப்படுத்துவது செயல்படுவதற்கு வழிநடத்தியது; அந்தச் சபையை சுத்திகரித்து, கடவுளுடன் தன்னுடைய உறவை கெடுத்திருந்த ஒரு நபர் கடவுளுடைய தயவுக்குள் மீண்டும் வருவதில் விளைவடைந்தது.
கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவ சபைக்கு பவுல் எழுதிய முதல் கடிதத்தில் மற்றொரு உதாரணத்தை நாம் காண்கிறோம். இந்தத் தடவை, விஷயத்தை அறிக்கை செய்த சாட்சிகளுடைய பெயர்களை அந்த அப்போஸ்தலன் குறிப்பிடுகிறார். அவர் எழுதினார்: “உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.” (1 கொரிந்தியர் 1:11) இந்த வாக்குவாதங்களும், அதோடு மனிதருக்கு மட்டுக்குமீறிய கனத்தைச் செலுத்துவதும், சபையின் ஐக்கியத்தை அழிப்பதற்கு அச்சுறுத்திய பிரிவினை மனப்பான்மையை உருவாக்கியிருந்தன என்பதை பவுல் அறிந்துகொண்டார். எனவே, அங்கிருந்த தன் உடன் விசுவாசிகளுடைய ஆவிக்குரிய நலத்திற்கான ஆழ்ந்த அன்பின் நிமித்தமாக, பவுல் உடனடியாக செயல்பட்டு அந்த சபைக்கு திருத்தத்தைக் கொடுக்கும் ஆலோசனையை எழுதினார்.
இன்று, பூமி முழுவதிலுமுள்ள சபைகளில் இருக்கும் மிகப் பெரும்பான்மையான சகோதர சகோதரிகள், கடவுளுக்கு முன்பாக தனிப்பட்ட விதத்தில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையை காத்துக்கொள்வதன் மூலம் சபையின் ஆவிக்குரிய சுத்தத்தைப் பாதுகாக்க கடினமாய் உழைக்கின்றனர். அவ்வாறு செய்வதற்கு சிலர் துன்பப்படுகின்றனர்; உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்காக சிலர் மரித்தும்கூட இருக்கின்றனர். நிச்சயமாகவே, தவறை கண்டும் காணாதும் விட்டுவிடுவது அல்லது மூடி மறைத்துவிடுவது இந்த முயற்சிகளுக்கான போற்றுதலின்மையை காண்பிக்கும்.
தவறிழைத்தவர்களுக்கு உதவி
படுமோசமான பாவத்தில் வீழ்ந்துவிட்ட சிலர் ஏன் சபை மூப்பர்களை அணுகுவதிலிருந்து பின்வாங்குகிறார்கள்? மூப்பர்களிடம் போவதனால் வரும் நன்மைகளை அவர்கள் பெரும்பாலும் அறியாமலிருப்பதன் காரணமாகும். தாங்கள் தெரியப்படுத்தினால், தங்களுடைய பாவம் முழு சபைக்கும் அம்பலப்படுத்தப்படும் என்று தவறாக சிலர் நினைக்கிறார்கள். வேறுசிலர் தங்களுடைய போக்கு எந்தளவுக்கு மோசமானது என்பதைக் குறித்ததில் தாங்களாகவே முடிவுபண்ணிக்கொள்கிறார்கள். இன்னும் வேறுசிலர், மூப்பர்களுடைய உதவியின்றி தாங்களாகவே சரிசெய்து கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
ஆனால் தவறிழைத்த இப்படிப்பட்டவர்களுக்கு சபை மூப்பர்களிடமிருந்து அன்பான உதவி தேவை. யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.”—யாக்கோபு 5:14, 15.
தவறிழைத்தவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய தன்மையைப் புதுப்பித்துக்கொள்ள உதவிசெய்வதற்கு என்னே ஒரு சிறந்த ஏற்பாடு! கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் இதமான ஆலோசனையை பயன்படுத்துவதன் மூலமும் அவர்கள் சார்பாக ஜெபிப்பதன் மூலமும், அவர்களுடைய தவறான வழிகளிலிருந்து மீண்டுவர ஆவிக்குரிய ரீதியில் பிணியாளிகளாய் இருக்கிறவர்களுக்கு மூப்பர்கள் உதவிசெய்ய முடியும். இவ்விதமாய், கண்டனம் செய்யப்பட்டவர்களாய் உணருவதற்குப் பதிலாக, மனந்திரும்புகிறவர்கள் அன்பான மூப்பர்களைச் சந்திக்கும்போது பெரும்பாலும் புத்துணர்ச்சி பெற்றவர்களாயும் சுகமளிக்கப்பட்டவர்களாயும் உணருகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர் வேசித்தனம் செய்துவிட்டு தன்னுடைய பாவத்தை சில மாதங்களுக்கு மறைத்துவைத்திருந்தார். அவருடைய பாவம் வெளிப்படுத்தப்பட்ட பிறகு, அவர் மூப்பர்களிடம் இவ்வாறு சொன்னார்: “அந்தப் பெண்ணுடன் என்னுடைய தொடர்பை பற்றி யாராவது என்னிடம் கேட்டிருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்! இந்தக் காரியத்தை தெரியப்படுத்துவது எப்பேர்ப்பட்ட விடுதலையைக் கொண்டுவருகிறது.”—சங்கீதம் 32:3-5-ஐ ஒப்பிடுக.
நியமத்தின் அடிப்படையிலான ஓர் அன்பின் செயல்
கடவுளுடைய முழுக்காட்டப்பட்ட ஊழியர்கள் ‘மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள்.’ (1 யோவான் 3:14) ஆனால் பெரும் பாவத்தை செய்வார்களாகில், அவர்கள் மீண்டும் மரண வழிக்குத் திரும்புகிறார்கள். அவர்களுக்கு உதவி அளிக்கப்படவில்லையென்றால், மனந்திரும்பி உண்மையான கடவுளுடைய வணக்கத்திற்குத் திரும்ப விருப்பமில்லாமல், தவறுசெய்வதில் சுரணையற்றவர்களாய் ஆகிவிடலாம்.—எபிரெயர் 10:26-29.
தவறைப் பற்றி தெரியப்படுத்துவது, தவறிழைத்தவருக்கு காண்பிக்கும் உண்மையான அக்கறைக்குரிய செயலாக இருக்கிறது. யாக்கோபு எழுதினார்: “சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.”—யாக்கோபு 5:19, 20.
அப்படியானால், தவறை ஏன் தெரியப்படுத்த வேண்டும்? ஏனென்றால் அது நல்ல பலன்களைக் கொண்டுவருகிறது. உண்மையிலேயே, தவறை தெரியப்படுத்துவது, கடவுளிடமும் சபையிடமும் தவறிழைத்தவரிடமும் காண்பிக்கப்படும் கிறிஸ்தவ நியமத்தின் அடிப்படையிலான அன்பின் செயலாகும். சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் உண்மைப் பற்றுறுதியுடன் கடவுளுடைய நீதியான தராதரங்களைக் கடைப்பிடிக்கையில், முழு சபையையும் யெகோவா அபரிமிதமாய் ஆசீர்வதிப்பார். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் [யெகோவா] உங்களை ஸ்திரப்படுத்துவார்.”—1 கொரிந்தியர் 1:8.
[பக்கம் 26-ன் படம்]
தவறிழைத்த சாட்சியை மூப்பர்களிடம் பேசும்படி உற்சாகப்படுத்துவது அன்பை காண்பிக்கிறது
[பக்கம் 28-ன் படம்]
தவறிழைத்தவர் கடவுளுடைய தயவை மீண்டும் பெற மூப்பர்கள் உதவுகின்றனர்