துன்பங்கள் இருந்தாலும், உங்கள் விசுவாசத்தை விடாமல் பற்றியிருங்கள்!
“என் சகோதரரே, நீங்கள் பலவகை துன்பங்களை எதிர்ப்படுகையில், . . . அவற்றையெல்லாம் மகிழ்ச்சியாகக் கருதுங்கள்.”—யாக்கோபு 1:2, NW.
1. எதன் மத்தியிலும் யெகோவாவின் ஜனங்கள் விசுவாசத்தோடும் ‘மனமகிழ்ச்சியோடும்’ அவரைச் சேவிக்கிறார்கள்?
யெகோவாவின் ஜனங்கள், அவரில் விசுவாசம் வைத்து ‘மனமகிழ்ச்சியோடு’ அவருடைய சாட்சிகளாக சேவிக்கிறார்கள். (உபாகமம் 28:47; ஏசாயா 43:10) பல துன்பங்களுக்கு அவர்கள் உட்படுகிறபோதிலும் இதை அவர்கள் விடாதுதொடர்ந்து செய்கிறார்கள். தங்கள் இக்கட்டுகளின் மத்தியிலும், இவ்வார்த்தைகளிலிருந்து அவர்கள் ஆறுதலடைகிறார்கள்: “என் சகோதரரே, நீங்கள் பலவகை துன்பங்களை எதிர்ப்படுகையில், உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, உங்கள் விசுவாசத்தின் பரீட்சிக்கப்பட்ட பண்பு, சகிப்புத்தன்மையை உண்டாக்குகிறதென்று அறிந்து அவற்றையெல்லாம் மகிழ்ச்சியாகக் கருதுங்கள்.”—யாக்கோபு 1:2, 3, NW.
2. யாக்கோபு நிருபத்தை எழுதினவரைப் பற்றி என்ன அறியப்பட்டிருக்கிறது?
2 இந்தக் கூற்று, இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய சீஷன் யாக்கோபால், ஏறக்குறைய பொ.ச. 62-ல் எழுதப்பட்டது. (மாற்கு 6:3) எருசலேம் சபையில் யாக்கோபு ஒரு மூப்பராக இருந்தார். உண்மையில், அவரும், கேபாவும் (பேதுருவும்), யோவானும் “தூண்களாக”—சபையின் பலமான, உறுதியாய் நிலைநிறுத்தப்பட்ட ஆதரவாளர்களாக—‘எண்ணப்பட்டார்கள்.’ (கலாத்தியர் 2:9) ஏறக்குறைய பொ.ச. 49-ல், விருத்தசேதனத்தைப் பற்றிய வாக்குவாதம், “அப்போஸ்தலரும் மூப்பரும்” ஆகிய இவர்களுக்கு முன்கொண்டுவரப்பட்டபோது, யாக்கோபு, வேதப்பூர்வமான சரியான தீர்மானத்தை எடுத்துரைத்தார். அந்த முதல் நூற்றாண்டு ஆளும் குழு அதை ஏற்றது.—அப்போஸ்தலர் 15:6-29.
3. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்ட பிரச்சினைகளில் சில யாவை, நாம் எவ்வாறு யாக்கோபின் நிருபத்திலிருந்து மிக பேரளவான நன்மையை அடைய முடியும்?
3 அக்கறையுள்ள ஆவிக்குரிய மேய்ப்பராக யாக்கோபு, ‘ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்திருந்தார்.’ (நீதிமொழிகள் 27:23) கிறிஸ்தவர்கள் அப்போது கடுமையான துன்பங்களை எதிர்ப்பட்டிருந்தார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார். சிலர் தங்களுடைய சிந்தனையில் சரிப்படுத்துதல் செய்யவேண்டிய தேவையிருந்தது. ஏனெனில் அவர்கள், செல்வந்தர்களுக்கு தனிச்சலுகை காட்டிக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்தவர்கள் பலருக்கு, வணக்கம் என்பது வெறும் ஒரு ஆசாரமுறையாகவே இருந்தது. சிலர், கட்டுப்பாடற்ற தங்கள் நாவுகளினால் தீங்கு விளைவித்தனர். உலகப்போக்கான மனப்பான்மை சேதப்படுத்தும் பாதிப்புகளை உண்டாக்கிக்கொண்டிருந்தது. பொறுமையாகவோ ஜெபசிந்தை உடையோராகவோ பலர் இல்லை. உண்மையில், சில கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய நோயுற்றவர்களாக இருந்தனர். யாக்கோபின் நிருபம், கட்டியெழுப்பும் ஒரு முறையில் இத்தகைய காரியங்களைக் குறிப்பிட்டு அறிவுரை அளிக்கிறது. அவருடைய அறிவுரை, பொ.ச. முதல் நூற்றாண்டில் இருந்ததைப்போல் இன்றும் நடைமுறைக்கு உகந்ததாக உள்ளது. நமக்கே தனிப்பட எழுதினதுபோல் இந்த நிருபத்தை நாம் கருதினோமானால் பேரளவில் பயன் பெறுவோம்.a
நாம் துன்பப்படுகையில்
4. துன்பங்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
4 துன்பங்களை நாம் எவ்வாறு கருத வேண்டும் என்று யாக்கோபு காட்டுகிறார். (யாக்கோபு 1:1-4, NW) கடவுளுடைய குமாரனோடு தனக்கிருந்த உறவைக் குறிப்பிடாமல், அவர் தன்னை, ‘தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரன்’ என்று மனத்தாழ்மையுடன் குறிப்பிடுகிறார். தொடக்கத்தில் துன்புறுத்தப்பட்டதன் காரணமாக, “சிதறியிருக்கிற” ஆவிக்குரிய இஸ்ரவேலின் “பன்னிரண்டு கோத்திரங்களுக்கும்” யாக்கோபு எழுதுகிறார். (அப்போஸ்தலர் 8:1; 11:19; கலாத்தியர் 6:16; 1 பேதுரு 1:1) கிறிஸ்தவர்களாக நாமும் துன்புறுத்தப்படுகிறோம், ‘பலவிதமான துன்பங்களை எதிர்ப்படுகிறோம்.’ ஆனால், துன்பங்களை சகிக்கையில் அவை நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன என்பதை நாம் நினைவில் வைத்திருந்தால், அவற்றை எதிர்ப்படுகையில், ‘அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுவோம்.’ துன்பங்களின்போது கடவுளிடமாக நம் உத்தமத்தை காத்துவந்தால், இது நமக்கு நிலையான சந்தோஷத்தை கொடுக்கும்.
5. நம் துன்பங்கள் எவற்றை உட்படுத்தலாம், அவற்றை நாம் வெற்றிகரமாய்ச் சகிக்கையில் என்ன ஏற்படுகிறது?
5 நம்முடைய துன்பங்களில், மனிதவர்க்கத்திற்குப் பொதுவாயுள்ள இன்னல்களும் உட்பட்டுள்ளன. உதாரணமாக, சுகவீனம் நம்மைத் தொல்லைப்படுத்தலாம். அற்புத சுகப்படுத்துதலை இப்போது கடவுள் நடப்பிக்கிறதில்லை; ஆனால், அந்த நோயை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் ஞானத்திற்காகவும் மன வலிமைக்காகவும் ஜெபிக்கும் நம்முடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்கிறார். (சங்கீதம் 41:1-3) யெகோவாவின் சாட்சிகளாக துன்புறுவோராய், நீதியினிமித்தமாகவும் நாம் துன்பப்படுகிறோம். (2 தீமோத்தேயு 3:12; 1 பேதுரு 3:14) அத்தகைய துன்பங்களை நாம் வெற்றிகரமாய் சகிக்கையில், நம்முடைய விசுவாசம் நிரூபிக்கப்பட்டு, ‘பரீட்சிக்கப்பட்ட பண்பாகிறது.’ மேலும் நம்முடைய விசுவாசம் வெற்றியடைகையில் இது “சகிப்புத்தன்மையை உண்டாக்குகிறது.” துன்பங்களின் மூலமாக மேலும் பலப்படுத்தப்பட்ட விசுவாசம், எதிர்கால பரீட்சைகளில் சகித்து நிலைத்திருக்க நமக்கு உதவி செய்யும்.
6. எவ்வாறு ‘சகிப்புத்தன்மை அதன் கிரியைப் பூரணமாக்குகிறது,’ துன்பத்துக்கு உட்படுகையில் நடைமுறைக்கு உகந்த என்ன நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்?
6 “ஆனால்,” யாக்கோபு சொல்கிறார், “சகிப்புத்தன்மை பூரண கிரியை செய்யக்கடவது.” வேதப்பூர்வமற்ற வழிமுறைகளைக் கையாண்டு ஒரு துன்பத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்யாமல், அதன் போக்கில் சென்று முடியும்படி அதை நாம் அனுமதித்தால், கிறிஸ்தவர்களாக நம்மைப் பூரணமாக்கி, விசுவாசத்தில் குறைவுபடாமல் இருக்கச் செய்யும் அதன் “கிரியையை” சகிப்புத்தன்மை செய்து முடிக்கும். நிச்சயமாகவே, ஒரு துன்பம், நம்முடைய ஏதாவது பலவீனத்தை வெளிப்படுத்தும்படி செய்தால், அதைப் போக்குவதற்கு யெகோவாவின் உதவியை நாம் நாடவேண்டும். பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும்படியான சோதனையாக அந்தத் துன்பம் இருக்குமானால் என்ன செய்வது? அந்தப் பிரச்சினையைக் குறித்து நாம் ஜெபித்து, அதற்கிசைவாய் செயல்படுவோமாக. கடவுளிடம் உத்தமத்தைக் காத்துக்கொள்ள, நாம் வேலை செய்யும் இடத்தை விட்டு, வேறு இடத்தில் வேலை தேடிக்கொள்ள வேண்டியதாக இருக்கலாம், அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கலாம்.—ஆதியாகமம் 39:7-9; 1 கொரிந்தியர் 10:13.
ஞானத்திற்காகத் தேடுதல்
7. துன்பங்களைச் சகிப்பதற்கு நாம் எவ்வாறு உதவி செய்யப்படலாம்?
7 ஒரு துன்பத்தை எவ்வாறு சகிப்பது என்று நமக்குத் தெரியாதிருந்தால் என்ன செய்வதென்று யாக்கோபு காண்பிக்கிறார். (யாக்கோபு 1:5-8, NW) ஞானத்தில் குறைவுபடுகையில் விசுவாசத்துடன் அதற்காக ஜெபிக்கும்போது யெகோவா நம்மைக் கடிந்துகொள்ளமாட்டார். ஒரு துன்பத்தை சரியான முறையில் கருதி, அதைச் சகிப்பதற்கு அவர் நமக்கு உதவி செய்வார். உடன் விசுவாசிகள் மூலமோ அல்லது பைபிள் படிக்கும்பொழுதோ வேத வசனங்கள் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படலாம். கடவுளுடைய செயலால் ஏற்படும் சம்பவங்கள், நாம் என்ன செய்ய வேண்டுமென்பதைக் காணும்படி செய்விக்கலாம். கடவுளுடைய ஆவியால் நாம் வழிநடத்தப்படலாம். (லூக்கா 11:13) இத்தகைய நன்மைகளை அனுபவித்து மகிழ்வதற்கு, நியாயப்படியே நாம் கடவுளையும் அவருடைய ஜனங்களையும் விட்டு விலகாமல் இருக்கவேண்டும்.—நீதிமொழிகள் 18:1.
8. சந்தேகிக்கிறவன் ஏன் யெகோவாவிடமிருந்து எதையும் பெறப்போவதில்லை?
8 நாம் ‘எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல், விசுவாசத்துடன் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால்,’ துன்பங்களைச் சமாளிப்பதற்கு ஞானத்தை யெகோவா நமக்கு அளிக்கிறார். சந்தேகிக்கிறவன், முன்னறிவிப்பின்றி வரும் “காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.” ஆவிக்குரிய பிரகாரமாக நாம் அவ்வளவாய் நிலையற்றவர்களாக இருந்தால், ‘யெகோவாவினிடமிருந்து எதையாகிலும் பெறலாமென்று நாம் நினைக்கக்கூடாது.’ ஜெபத்திலோ அல்லது மற்ற வழிகளிலோ ‘சந்தேகிக்கிறவர்களாகவும்,’ ‘நிலையற்றவர்களாகவும்’ இராதிருப்போமாக. மாறாக, ஞானத்தின் மூலகாரணராகிய யெகோவாவில் விசுவாசமுள்ளவர்களாக நாம் இருக்கலாம்.—நீதிமொழிகள் 3:5, 6.
செல்வந்தர்களும் ஏழைகளும் களிகூர முடியும்
9. யெகோவாவின் வணக்கத்தாராக களிகூருவதற்கு நமக்கு ஏன் காரணம் இருக்கிறது?
9 வறுமை, நம்முடைய துன்பங்களில் ஒன்றாக இருந்தாலும்கூட, செல்வந்தர்களாயினும் ஏழைகளாயினும் இரு நிலைகளிலுமே உள்ள கிறிஸ்தவர்கள் களிகூர முடியும் என்பதை நாம் மனதில் வைப்போமாக. (யாக்கோபு 1:9-11) அபிஷேகம் செய்யப்பட்டவர்களான பூர்வ கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையர், இயேசுவைப் பின்பற்றுபவர்களாக ஆவதற்கு முன்பாக, பொருள் சம்பந்தமாய் சொற்பமே உடையோராய் இருந்தனர், உலகத்தாரால் இழிவாகக் கருதப்பட்டனர். (1 கொரிந்தியர் 1:26) ஆனால், ராஜ்ய சுதந்தரவாளிகளாக இருக்கும் நிலைக்கு தாங்கள் “உயர்த்தப்பட்டதைக்” குறித்து அவர்கள் களிகூரலாம். (ரோமர் 8:16, 17) நேர்மாறாக, முன்பு கனப்படுத்தப்பட்ட செல்வந்தர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களாக, உலகத்தால் இழிவாய்க் கருதப்பட்டதால், ‘தாழ்த்தப்பட்டதை’ அனுபவித்தார்கள். (யோவான் 7:47-52; 12:42, 43) எனினும், யெகோவாவின் ஊழியராக, நாம் எல்லாரும் களிகூரலாம், ஏனெனில், நாம் அனுபவித்து மகிழும் ஆவிக்குரிய செல்வந்தர்களோடு ஒப்பிட, உலகப்பிரகாரமான செல்வமும் உயர் சமுதாயப் படிநிலையும் மதிப்பற்றவையாக இருக்கின்றன. நம் மத்தியில் சமுதாயப் படிநிலைக்கான பெருமை போன்றதற்கு இடமில்லாதிருப்பதனிமித்தம் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—நீதிமொழிகள் 10:22; அப்போஸ்தலர் 10:34, 35.
10. பொருள் சம்பந்தமான செல்வத்தை ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு கருத வேண்டும்?
10 நம்முடைய ஜீவன், செல்வத்தின்மீதும் உலகப்பிரகாரமான சாதனையின்மீதும் சார்ந்தில்லை என்பதைக் காணும்படி யாக்கோபு நமக்கு உதவி செய்கிறார். ஒரு மலரின் அழகு, சூரியனின் ‘கடும் வெய்யிலில்’ வாடி உதிர்ந்துபோவதை தடுக்க முடியாததுபோல், செல்வம் அவனுடைய ஜீவனை நீடிக்கச் செய்யாது. (சங்கீதம் 49:6-9; மத்தேயு 6:27) தன் ‘வாழ்க்கை வழிகளை’ நாடிக்கொண்டிருக்கையில், ஒருவேளை வியாபாரத்தை நடத்திக்கொண்டிருக்கையில் அவன் மரித்துவிடலாம். ஆகையால் ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாக’ இருந்து, ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவதற்கு நம்மால் இயலும் எல்லாவற்றையும் செய்வதே முக்கியமான காரியம்.—லூக்கா 12:13-21; மத்தேயு 6:33; 1 தீமோத்தேயு 6:17-19.
துன்பத்தைச் சகிக்கிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்
11. துன்பங்களின் மத்தியிலும் தங்கள் விசுவாசத்தை விடாமல் பற்றியிருப்போருக்கு என்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன?
11 செல்வந்தர்களாயிருந்தாலும் ஏழைகளாயிருந்தாலும், நம்முடைய துன்பங்களைச் சகித்தால் மாத்திரமே நாம் சந்தோஷமாக இருக்க முடியும். (யாக்கோபு 1:12-15, NW) நம்முடைய விசுவாசம் பாதிக்கப்படாமல் துன்பங்களை நாம் சகித்தால், சந்தோஷமுள்ளவர்கள் என்று நாம் சொல்லப்படலாம்; ஏனெனில், கடவுளுடைய பார்வையில் சரியானதைச் செய்வதில் மகிழ்ச்சி உள்ளது. ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், தங்கள் மரணம் வரையில் விசுவாசத்தை விடாமல் பற்றியிருப்பதால், பரலோகத்தில் சாவாமையின் “ஜீவகிரீடத்தை” பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 2:10; 1 கொரிந்தியர் 15:50) பூமிக்குரிய நம்பிக்கையுடையோராய் கடவுளில் நம் விசுவாசத்தை விடாமல் காத்துவந்தால், பரதீஸான ஒரு பூமியில் நித்திய ஜீவனை பெறும்படி நாம் எதிர்பார்க்கலாம். (லூக்கா 23:43; ரோமர் 6:23) தம்மில் விசுவாசம் வைக்கும் யாவருக்கும் யெகோவா எவ்வளவாக நன்மை செய்கிறார்!
12. துன்பத்தை அனுபவிக்கையில், “நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன்” என்று நாம் ஏன் சொல்லக்கூடாது?
12 யெகோவாவே நமக்குத் துன்பத்தைக் கொடுத்து சோதிக்கிறாரா? இல்லை, “நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன்” என்று நாம் சொல்லக்கூடாது. பாவம் செய்யும்படி நம்மைத் தூண்டுவிக்க யெகோவா முயற்சி செய்வதில்லை; அதற்கு மாறாக, விசுவாசத்தில் நாம் உறுதியாய் நிலைத்திருந்தால், துன்பங்களைச் சகிப்பதற்குத் தேவைப்படும் பலத்தை நமக்கு அளித்து, நிச்சயமாய் உதவி செய்வார். (பிலிப்பியர் 4:13) கடவுள் பரிசுத்தராக இருக்கிறார், ஆகையால், தவறு செய்வதை எதிர்த்துநிற்கும் நம் பலத்தைக் குறைக்கும் சூழ்நிலைமைகளுக்கு அவர் நம்மை வைக்கிறதில்லை. பரிசுத்தமற்ற ஒரு சூழ்நிலைக்குள் நம்மை உட்படுத்தி ஏதோ பாவம் செய்துவிட்டோம் என்றால், அதற்கு நாம் அவரை குற்றம் சாட்டக்கூடாது; ஏனெனில், “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” நம்முடைய நன்மைக்காக நம்மைச் சிட்சிப்பதற்கு ஒரு துன்பத்தை யெகோவா அனுமதிக்கலாம் என்றாலும், தீங்கான நோக்கத்துடன் அவர் நம்மைத் துன்பத்துக்கு உட்படுத்துவதில்லை. (எபிரெயர் 12:7-11) தவறு செய்யும்படி சாத்தான் நம்மைத் தூண்டி இழுக்கலாம், ஆனால் கடவுள் நம்மை அந்தப் பொல்லாங்கனிடமிருந்து விடுவிக்க முடியும்.—மத்தேயு 6:13.
13. தவறான இச்சையை நாம் அகற்றாவிட்டால் என்ன நடக்கலாம்?
13 பாவம் செய்யும்படி தூண்டுவிக்கும் தவறான இச்சைக்கு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைமை நம்மை வழிநடத்தலாம் என்பதால், நாம் ஜெபசிந்தையுடன் இருப்பது அவசியம். யாக்கோபு சொல்கிறார்: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.” பாவமுள்ள இச்சையின்பேரில் நம் இருதயம் ஊன்றியிருக்க விடுவோமானால், நம்முடைய பாவத்திற்காக கடவுளை நாம் குற்றம்சாட்ட முடியாது. தவறான ஒரு இச்சையை நாம் அகற்றாவிட்டால், அது இருதயத்தில் ‘கர்ப்பந்தரித்து,’ வளர்ந்து, ‘பாவத்தைப் பிறப்பிக்கிறது.’ பாவம் பூரணமாகும்போது, ‘மரணத்தைப் பிறப்பிக்கிறது.’ நம் இருதயத்தைக் காத்து, பாவ மனச்சாய்வுகளை நாம் எதிர்த்துத் தடுக்க வேண்டுமென்பது தெளிவாயிருக்கிறது. (நீதிமொழிகள் 4:23) பாவம் காயீனை விரைவில் மேற்கொள்ளவிருந்ததைக் குறித்து அவன் எச்சரிக்கப்பட்டான்; ஆனால் அவன் அதை மேற்கொள்வதற்கு முயற்சி எடுக்கவில்லை. (ஆதியாகமம் 4:4-8) அப்படியானால், பைபிளுக்கு முரணான போக்கில் செல்ல நாம் தொடங்கியிருந்தால் என்ன செய்வது? நாம் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்யாதபடி கிறிஸ்தவ மூப்பர்கள் நம்மைச் சீர்திருத்த பிரயாசப்பட்டால் நிச்சயமாகவே நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.—கலாத்தியர் 6:1.
கடவுள்—நற்காரியங்களுக்கு மூலகாரணர்
14. கடவுளுடைய ஈவுகள் ‘பூரணமானவை’ என்று என்ன கருத்தில் சொல்லப்படலாம்?
14 துன்பங்களுக்கு அல்ல, நற்காரியங்களுக்கே யெகோவா மூலகாரணர் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். (யாக்கோபு 1:16-18) உடன் விசுவாசிகளை “பிரியமான சகோதரரே” என்று யாக்கோபு அழைத்து, ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ அளிக்கிறவர் கடவுளே என்று காட்டுகிறார். யெகோவா அளிக்கிற ஆவிக்குரிய மற்றும் பொருள்சம்பந்தமான ஈவுகள் ‘பூரணமானவையாக,’ அல்லது முழுமையானவையாக, ஒன்றும் குறைவுபடாதவையாக இருக்கின்றன. அவை மேலிருந்து, அதாவது கடவுள் வாசம் செய்யும் இடமாகிய ‘பரலோகத்திலிருந்து’ வருகின்றன. (1 இராஜாக்கள் 8:39) யெகோவாவே சூரியன், சந்திரன், நட்சத்திரங்களாகிய ‘ஜோதிகளின் பிதா.’ ஆவிக்குரிய ஒளியையும் சத்தியத்தையும்கூட அவர் நமக்கு கொடுக்கிறார். (சங்கீதம் 43:3; எரேமியா 31:35, திருத்திய மொழிபெயர்ப்பு; 2 கொரிந்தியர் 4:6) இடம் மாறி செல்கையில் நிழல்களை உண்டாக்கி நடுப்பகலில் மாத்திரமே அதன் முழு பிரகாசத்தைக் கொடுக்கிற சூரியனைப்போல் இராமல், கடவுள் நன்மையானதை அளிப்பதில் எப்போதுமே உன்னத நிலையில் இருக்கிறார். தம்முடைய வார்த்தையின் மூலமும், ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்’ மூலமும் அவர் அருளும் ஆவிக்குரிய ஏற்பாடுகளை நாம் முழுமையாக அனுகூலப்படுத்திக் கொண்டால், துன்பங்களை எதிர்ப்படுவதற்கு நிச்சயமாகவே அவர் நம்மை தகுதியாக்குவார்.—மத்தேயு 24:45.
15. யெகோவாவின் மிகச் சிறந்த ஈவுகளில் ஒன்று என்ன?
15 கடவுள் அருளிய மிகச் சிறந்த ஈவுகளில் ஒன்றாக இருந்திருப்பது எது? நற்செய்தியோடு அல்லது ‘சத்திய வசனத்தோடு’ செயல்பட்டு பரிசுத்த ஆவியால் ஆவிக்குரிய குமாரர்களைப் பிறப்பித்ததாகும். ஆவிக்குரிய பிறப்பை அனுபவிப்பவர்கள், பரலோக ‘ராஜ்யமும் ஆசாரியர்களுமாக’ இருக்கும்படி மனிதவர்க்கத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ‘சில முதற்கனிகளாக’ இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 5:10; எபேசியர் 1:13, 14) நிசான் 16-ல் செலுத்தப்பட்ட வாற்கோதுமையின் முதற்கனிகளைப் பற்றி யாக்கோபு ஒருவேளை சிந்தித்துக்கொண்டு இருந்திருக்கலாம். அதுவே இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட தேதியாக இருந்தது. மேலும் பெந்தெகொஸ்தே நாளில் இரண்டு கோதுமை அப்பங்கள் செலுத்தப்பட்டதையும் நினைத்திருக்கலாம், அப்போது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது. (லேவியராகமம் 23:4-11; 15:17, NW) அவ்வாறென்றால், இயேசுவே, முதற்பலனும் அவருடைய உடன் சுதந்தரவாளிகள் ‘சில முதற்கனிகளுமாக’ இருப்பார்கள். நமக்கு பூமிக்குரிய நம்பிக்கை இருக்கிறதென்றால் எப்படி? சரி, அதை நாம் மனதில் வைத்துவருவது ராஜ்ய ஆட்சியின்கீழ் நித்திய ஜீவனடைவதை சாத்தியமாக்கியிருக்கிறவராகிய, ‘நன்மையான எந்த ஈவையும்’ அருளுகிறவரில் வைத்திருக்கும் நம் விசுவாசத்தை விடாமல் பற்றியிருக்கும்படி நமக்கு உதவி செய்யும்.
‘வசனத்தின்படி செய்கிறவர்களாக’ இருங்கள்
16. நாம் ஏன் “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருக்க வேண்டும்?
16 இப்போதே நம்முடைய விசுவாசத்தின் பரீட்சைகளை நாம் அனுபவித்தாலும் அனுபவிக்காவிடினும், ‘வசனத்தின்படி செய்கிறவர்களாக’ நாம் இருக்க வேண்டும். (யாக்கோபு 1:19-25) கடவுளுடைய வார்த்தையைக் ‘கேட்பதற்குத் தீவிரமாக’ நாம் இருந்து, கீழ்ப்படிதலுடன் அதைச் செய்வோராக இருக்க வேண்டும். (யோவான் 8:47) மறுபட்சத்தில் நாம் என்ன சொல்கிறோமோ அதைப்பற்றி கவனமாயிருந்து, ‘பேசுவதற்குப் பொறுமையாய்’ இருப்போமாக. (நீதிமொழிகள் 15:28; 16:23) நம்முடைய துன்பங்கள் கடவுளிடமிருந்து வருகின்றன என்று சொல்வதற்கு அவசரப்படாமல் இருக்கும்படி யாக்கோபு நம்மை உந்துவிப்பவராய் இருக்கலாம். மேலும், “கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்றும் நாம் அறிவுரை கூறப்படுகிறோம். ஒருவர் சொல்கிறதைக் குறித்து நாம் கோபமடைந்தால், எரிச்சலுடன் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்கு ‘தாமதிப்போமாக.’ (எபேசியர் 4:26, 27) நமக்குப் பிரச்சினைகளை உண்டாக்குகிறதும் மற்றவர்களுக்கு சோதனையாக ஆகிறதுமான கோப மனப்பான்மை, நீதியுள்ள நம் கடவுளிடமுள்ள விசுவாசம் தேவைப்படுத்துகிற விதமாக நடந்துகொள்ளும்படி நம்மைச் செய்விக்க முடியாது. அது மாத்திரமே அல்லாமல், நாம் ‘தெளிந்துணர்வில் மிகுந்திருந்தால்,’ ‘கோபிக்கிறதற்குத் தாமதமாக’ இருப்போம், நம்முடைய சகோதர சகோதரிகளும் நம்மிடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள்.—நீதிமொழிகள் 14:29.
17. தீங்கை இருதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் விலக்கினது எதைச் செய்வித்திருக்கிறது?
17 ‘எல்லாவித அழுக்குக்கும்’—கடவுளுக்கு வெறுப்பேற்படுத்தி, கோபத்தை உண்டாக்குகிற எல்லாவற்றிற்கும்—நாம் நிச்சயமாகவே விலகியிருக்க வேண்டும். மேலும், ‘கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட வேண்டும்.’ செயலிலோ சிந்தையிலோ எவ்வித அசுத்தத்தையும் நம்முடைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக நாம் எல்லாரும் அகற்ற வேண்டும். (2 கொரிந்தியர் 7:1; 1 பேதுரு 1:14-16; 1 யோவான் 1:9) இருதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் தீங்கை விலக்கியது, சத்தியத்தின் ‘வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ள’ நமக்கு உதவி செய்தது. (அப்போஸ்தலர் 17:11, 12) நாம் எவ்வளவு காலம் கிறிஸ்தவர்களாக இருந்துவந்தபோதிலும், வேதப்பூர்வ சத்தியத்தை அதிகமதிகமாக நம்மில் இன்னும் ஊன்ற வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏன்? ஏனெனில், ஊன்றவைக்கப்பட்ட அந்த வார்த்தை, கடவுளுடைய ஆவியால், இரட்சிப்படைவதற்கு ஏதுவான “புதிய மனுஷனை” உண்டுபண்ணுகிறது.—எபேசியர் 4:20-24.
18. வசனத்தைக் கேட்கிறவனாய் மாத்திரம் இருக்கிறவன் எவ்வாறு, அதைக் கேட்டு செய்கிறவனாகவும் இருப்பவனிலிருந்து வேறுபடுகிறான்?
18 வசனம் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறதென்று நாம் எவ்வாறு காட்டுகிறோம்? கீழ்ப்படிதலுடன், “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும்” இருப்பதன் மூலமே. (லூக்கா 11:28) ‘செய்கிறவர்கள்,’ கிறிஸ்தவ ஊழியத்தில் ஆர்வமுள்ள நடவடிக்கை போன்ற செயல்களை உண்டுபண்ணுகிற விசுவாசத்தை உடையோராயும், கடவுளுடைய ஜனங்களின் கூட்டங்களில் தவறாமல் பங்குகொள்வோராயும் இருக்கிறார்கள். (ரோமர் 10:14, 15; எபிரெயர் 10:24, 25) வசனத்தை வெறுமனே கேட்கிறவனாக மாத்திரம் இருப்பவன், ‘கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்.’ அவன் தன்னைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்று, தன் தோற்றத்தைத் திருத்துவதற்குத் தேவைப்படுவதை செய்ய மறந்துவிடுகிறான். நாம் ‘கிரியை செய்கிறவர்களாக’ கடவுள் நமக்குக் கட்டளையிடும் எல்லாம் அடங்கிய அவருடைய ‘பூரண பிரமாணத்தைக்’ கவனமாய்ப் படித்து அதற்குக் கீழ்ப்படிகிறோம். இவ்வாறு நாம் அனுபவித்து மகிழும் சுயாதீனம், பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டிருப்பதற்கு மாறானதாக இருக்கிறது, ஏனெனில் அது ஜீவனுக்கு வழிநடத்துகிறது. ஆகையால், ‘பரிபூரண பிரமாணத்தை’ இடைவிடாமல் கூர்ந்தாராய்ந்து அதற்குக் கீழ்ப்படிந்து, ‘அதில் நிலைத்திருப்போமாக.’ சற்று சிந்தித்துப் பாருங்கள்! ‘கேட்கிறதை மறக்கிறவர்களாக இராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவர்களாக’ இருப்பதனால், கடவுளுடைய தயவின் பலனாக வரும் மகிழ்ச்சியை உடையோராக நாம் இருக்கிறோம்.—சங்கீதம் 19:7-11.
ஆசாரமுறை வணக்கத்தாராக இருப்பதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது
19, 20. (அ) யாக்கோபு 1:26, 27-ன்படி, சுத்தமான வணக்கம் நாம் என்ன செய்யும்படி தேவைப்படுத்துகிறது? (ஆ) மாசில்லாத வணக்கத்தைக் குறிக்கும் சில உதாரணங்கள் யாவை?
19 கடவுளுடைய தயவை நாம் அனுபவித்து மகிழ வேண்டுமானால், உண்மையான வணக்கம் வெறும் ஆசாரமுறையானதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். (யாக்கோபு 1:26, 27, NW) நாம் யெகோவாவின் ஏற்கத்தகுந்த ‘ஆசார வணக்கத்தார்’ என்று ஒருவேளை நினைக்கலாம்; ஆனால் அவருடைய மதிப்பீட்டில் நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு இருக்கிறோம் என்பதே உண்மையில் முக்கியமானது. (1 கொரிந்தியர் 4:4) ‘நாவை அடக்கத்’ தவறுவது வினைமையான ஒரு குறைபாடாக இருக்கலாம். மற்றவர்களைப் பற்றி நாம் அவதூறு பேசிக்கொண்டு, பொய்ச் சொல்லிக்கொண்டு, அல்லது மற்ற வழிகளில் நாவைத் தவறாக பயன்படுத்திக்கொண்டு, அதே சமயத்தில் கடவுள் நம்முடைய வணக்கத்தில் பிரியமுள்ளவராக இருக்கிறார் என்று நினைப்போமானால், நம்மைநாமே வஞ்சித்துக்கொள்வோராக இருப்போம். (லேவியராகமம் 19:16; எபேசியர் 4:25) நிச்சயமாகவே, எந்தக் காரணத்தினிமித்தமாகவும் நம்முடைய ‘வணக்க முறை’ ‘பயனற்றதாகவும்’ கடவுளுக்கு ஏற்கத் தகாததாகவும் இருக்க நாம் விரும்புகிறதில்லை.
20 நம்முடைய சுத்தமான வணக்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் யாக்கோபு குறிப்பிடாதபோதிலும், “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும்” அதில் அடங்கியிருக்கிறதென்று அவர் சொல்கிறார். (கலாத்தியர் 2:10; 6:10; 1 யோவான் 3:18) விதவைகளுக்கு உதவியளிப்பதில் கிறிஸ்தவ சபை தனிப்பட்ட அக்கறை காட்டுகிறது. (அப்போஸ்தலர் 6:1-6; 1 தீமோத்தேயு 5:8-10) விதவையையும் தகப்பனை இழந்த பிள்ளைகளையும் பாதுகாப்பவராக கடவுள் இருப்பதால், ஆவிக்குரிய விதத்திலும் பொருளாதார விதத்திலும் அவர்களுக்கு உதவ நம்மால் இயன்றதையெல்லாம் செய்வதன் மூலம், நாம் அவரோடு ஒத்துழைப்போமாக. (உபாகமம் 10:17, 18) சாத்தானின் அதிகாரத்திற்குட்பட்ட அநீதியுள்ள மனித சமுதாயமாகிய ‘உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதும்’ சுத்தமான வணக்கத்தைக் குறிக்கிறது. (யோவான் 17:16; 1 யோவான் 5:19) ஆகையால், நாம் யெகோவாவை மகிமைப்படுத்தி அவருடைய சேவையில் பயனுள்ளவர்களாக இருக்கும்படி, இந்த உலகத்தின் தேவபக்தியற்ற நடத்தைகளிலிருந்து விலகியவர்களாய் நிலைத்திருப்போமாக.—2 தீமோத்தேயு 2:20-22.
21. யாக்கோபினுடைய நிருபத்தின் சம்பந்தமாக, மேலுமான என்ன கேள்விகள் நம்முடைய ஆலோசிப்புக்குத் தகுந்தவை?
21 இது வரையில் நாம் ஆலோசித்த யாக்கோபின் அறிவுரை, துன்பங்களைச் சகித்து நம்முடைய விசுவாசத்தை விடாமல் பற்றிக்கொண்டிருக்க நமக்கு உதவிசெய்ய வேண்டும். இது நல்ல ஈவுகளை அன்புடன் அளிப்பவருக்கு நம்முடைய நன்றிமதித்துணர்வை மிகைப்படுத்தி காண்பிப்பதாயிருக்க வேண்டும். மேலும், சுத்தமான வணக்கத்தை அனுசரிக்க யாக்கோபின் வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன. இன்னும் எவற்றை அவர் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகிறார்? யெகோவாவில் நமக்கு உண்மையான விசுவாசம் இருக்கிறதென்று நிரூபிப்பதற்கு மேலுமான என்ன நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்?
a இந்தக் கட்டுரையையும் இதற்குப் பின்வரும் இரண்டு கட்டுரைகளையும் தனிப்பட்ட அல்லது குடும்ப படிப்பின்போது படிக்கையில், விசுவாசத்தைப் பலப்படுத்தும் யாக்கோபு நிருபத்திலிருந்து கொடுக்கப்பட்ட வசனங்களை எடுத்து வாசிப்பதை முக்கியமாய் பயனுள்ளதாக காண்பீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ துன்பங்களைச் சகிப்பதற்கு எது நமக்கு உதவி செய்யும்?
◻ துன்பங்களின் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் ஏன் களிகூர முடியும்?
◻ நாம் எவ்வாறு வசனத்தின்படி செய்வோராக இருக்கலாம்?
◻ சுத்தமான வணக்கம் எதை உட்படுத்துகிறது?
[பக்கம் 9-ன் படம்]
துன்பத்திற்கு உட்பட்டிருக்கையில், ஜெபங்களுக்கு பதிலளிக்க யெகோவாவுக்கு இருக்கும் வல்லமையில் விசுவாசம் காட்டுங்கள்
[பக்கம் 10-ன் படம்]
‘வசனத்தின்படி செய்கிறவர்கள்’ கடவுளுடைய ராஜ்யத்தை உலக முழுவதிலும் அறிவிக்கிறார்கள்