மகிழ்ச்சியுடன் ‘வார்த்தையின்படி செய்வோர்’
“உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாக இருக்கிற வார்த்தை நாட்டப்படுவதை சாந்தத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். எனினும், கேட்போராக மட்டுமிராமல், வார்த்தையின்படி செய்வோராகுங்கள்.”—யாக்கோபு 1:21, 22, NW.
1. 1996-க்குரிய நம் வருடாந்தர வசனத்தை எவ்வாறு கருத வேண்டும்?
“வார்த்தையின்படி செய்வோராகுங்கள்.” இந்த எளிய கூற்று வல்லமைவாய்ந்த ஒரு செய்தியைக் கொண்டுள்ளது. இது பைபிளிலுள்ள ‘யாக்கோபின் நிருபத்திலிருந்து’ எடுக்கப்பட்டிருக்கிறது. இது, 1996 முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர வசனமாக ராஜ்ய மன்றங்களில் மாட்டி வைக்கப்படும்.
2, 3. யாக்கோபு, தன் பெயரைக் கொண்ட நிருபத்தை எழுதுவது ஏன் பொருத்தமாயிருந்தது?
2 கர்த்தராகிய இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரரான யாக்கோபு, ஆரம்பகால கிறிஸ்தவ சபையில் முக்கியமானவராக இருந்தார். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னான ஒரு சந்தர்ப்பத்தில், யாக்கோபுக்கு நம்முடைய கர்த்தர் தனிப்பட தோன்றினார், பின்பு அப்போஸ்தலர் எல்லாருக்கும் தோன்றினார். (1 கொரிந்தியர் 15:7) பின்னால், அப்போஸ்தலன் பேதுரு சிறைச்சாலையிலிருந்து அற்புதமாய் விடுதலை செய்யப்பட்டபோது, கூடியிருந்த கிறிஸ்தவ தொகுதி ஒன்றிடம்: “இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள்,” என்று கூறினார். (அப்போஸ்தலர் 12:17) யாக்கோபு அப்போஸ்தலரில் ஒருவராக இராதபோதிலும், எருசலேமில் நிர்வாகக் குழுவின் கூட்டத்தில், புறஜாதியாரில் மதமாறினவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டியதில்லை என்று அப்போஸ்தலரும் மூப்பரும் தீர்மானித்தபோது அவர் அதில் தலைமை வகித்ததாகத் தெரிகிறது. காரியங்களை யாக்கோபு தொகுத்து கூறினார். அந்தத் தீர்மானம் பரிசுத்த ஆவியினால் உறுதிசெய்யப்பட்டு, எல்லா சபைகளுக்கும் அனுப்பப்பட்டது.—அப்போஸ்தலர் 15:1-29.
3 யாக்கோபின் முதிர்ச்சியோடுகூடிய நியாயவிவாதம் முக்கியத்துவமுடையதாக இருந்ததெனத் தெளிவாக தெரிகிறது. எனினும், தான், ‘கடவுளுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அடிமை’ என்பதை அவர் மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார். (யாக்கோபு 1:1, NW) தேவாவியால் ஏவப்பட்ட அவருடைய நிருபத்தில், இன்று கிறிஸ்தவர்களுக்கு நல்ல அறிவுரைகளும் ஊக்கமூட்டுதலும் நிறைவாய் அடங்கியுள்ளது. படைத்தலைவர் செஸ்டியஸ் காலஸ் எருசலேமைத் தாக்கின அந்த முதல் ரோமத் தாக்குதலுக்கு ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன், நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” விரிவாக பிரசங்கிக்கப்பட்டிருந்ததற்குப் பிறகு அது எழுதி முடிக்கப்பட்டது. (கொலோசெயர் 1:23) அவை நெருக்கடியான காலங்களாக இருந்தன. கடவுளின் நியாயத்தீர்ப்பு யூத ஜனத்தின்மீது நிறைவேற்றப்படப்போகிற சமயமாயிருந்ததென்று யெகோவாவின் ஊழியர்கள் முற்றிலும் உணர்ந்திருந்தனர்.
4. பூர்வ கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையின்பேரில் மிகுந்த நம்பிக்கையுடையோராக இருந்தனரென்பதை எது காட்டுகிறது?
4 அந்தக் கிறிஸ்தவர்கள், எபிரெய வேதாகமங்கள் முழுவதையும் கிரேக்க வேதாகமங்களில் பெரும்பாகத்தையும் ஏற்கெனவே உடையோராக இருந்தனர். முந்தின எழுத்துக்களிலிருந்து மிகுதியான மேற்கோள்கள் எடுத்துக் குறிப்பிடுவதிலிருந்து காட்டப்படுகிறபடி, கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளர்கள், கடவுளுடைய வார்த்தையில் மிகுந்த நம்பிக்கையுடையோராக இருந்தனரென்பது தெளிவாயிருக்கிறது. அவ்வாறே இன்று நாமும் கடவுளுடைய வார்த்தையை மனமார்ந்து படித்து அதை நம் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்த வேண்டும். சகித்து நிலைத்திருப்பதற்கு, பரிசுத்த வேதாகமங்கள் அளிக்கிற ஆவிக்குரிய பலமும் தைரியமும் நமக்குத் தேவை.—சங்கீதம் 119:97; 1 தீமோத்தேயு 4:13.
5. இன்று ஏன் நமக்குத் தனிப்பட்ட வழிநடத்துதல் தேவை, அதை நாம் எங்கே கண்டடையலாம்?
5 இன்று மனிதகுலம், ‘மிகுந்த உபத்திரவத்தின்’ விளிம்பில் நிற்கிறது, “அப்படிப்பட்ட உபத்திரவம் உலகமுண்டானது முதல் இந்நாள்வரையும் நேரிட்டதுமில்லை, இனி நேரிடப்போவதுமில்லை.” (மத்தேயு 24:21, தி.மொ.) கடவுளுடைய வழிநடத்துதலைக் கொண்டிருப்பதன் பேரிலேயே நாம் தப்பிப்பிழைப்பது சார்ந்திருக்கிறது. இதை நாம் எவ்வாறு கண்டடையலாம்? கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையின் போதகங்களை ஏற்கும்படி நம்முடைய இருதயத்தைத் திறந்து வைப்பதன் மூலமே கண்டடையலாம். இது, முற்காலங்களில் யெகோவாவின் பற்றுறுதியுள்ள ஊழியர்கள் செய்ததுபோல், ‘வார்த்தையின்படி செய்வோராவதற்கு’ நம்மை வழிநடத்தும். நாம் தளரா ஊக்கத்துடன் கடவுளுடைய வார்த்தையை வாசித்துப் படித்து, யெகோவாவுக்குத் துதியுண்டாக அதைப் பயன்படுத்தி வரவேண்டும்.—2 தீமோத்தேயு 2:15; 3:16, 17.
சந்தோஷத்துடன் சகித்து நிலைத்திருத்தல்
6. சோதனைகளை எதிர்ப்படுகையில் நாம் ஏன் சந்தோஷத்தைக் கண்டடைய வேண்டும்?
6 யாக்கோபு தன் நிருபத்தைத் தொடங்குகையில், கடவுளுடைய ஆவியின் இரண்டாவது கனியாகிய சந்தோஷத்தைக் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவதாவது: “என் சகோதரரே, நீங்கள் பலவித சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை [“சகிப்புத் தன்மையை,” NW] உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுமுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது [“சகிப்புத்தன்மையானது,” NW] பூரண கிரியை செய்யக்கடவது.” (யாக்கோபு 1:2-4; கலாத்தியர் 5:22, 23) பலவித சோதனைகளை எதிர்ப்படும்போது அவற்றையெல்லாம் ‘மிகுந்த சந்தோஷம்’ என்பதாக எவ்வாறு சொல்லலாம்? இயேசுவுங்கூட தம்முடைய மலைப் பிரசங்கத்தில் இவ்வாறு சொன்னார்: “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் [“சந்தோஷமுள்ளவர்களாயிருப்பீர்கள்,” NW]; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” (மத்தேயு 5:11, 12) நித்திய ஜீவனின் இலக்கை நோக்கி நாம் கடுமுயற்சியுடன் முன்னேறுகையில் நம்முடைய பிரயாசங்களில் யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் காண்பதில் சந்தோஷமான மனதிருப்தி உள்ளது.—யோவான் 17:3; 2 தீமோத்தேயு 4:7, 8; எபிரெயர் 11:8-10, 26, 35.
7. (அ) சகித்து நிலைத்திருப்பதற்கு நாம் எவ்வாறு உதவிசெய்யப்படலாம்? (ஆ) யோபுவைப் போல நாம் எவ்வாறு பலனளிக்கப்படலாம்?
7 “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு,” இயேசுதாமே சகித்தார். (எபிரெயர் 12:1, 2,) இயேசுவின் தைரியமான முன்மாதிரியை கருத்தூன்றி கவனித்து நாமும் சகித்திருக்கலாம்! தன் நிருபத்தின் முடிவு பகுதியில் யாக்கோபு குறிப்பிடுகிறபடி, உத்தமத்தைக் காப்போருக்கு யெகோவா நிறைவாகப் பலன் அளிக்கிறார். “இதோ! சகித்தவர்களைச் சந்தோஷமுள்ளவர்களாக அறிவிக்கிறோம்,” என்று யாக்கோபு சொல்கிறார். “யோபின் சகிப்புத்தன்மையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், யெகோவா அளித்த பலனையும் கண்டிருக்கிறீர்களே, யெகோவா பாசத்தில் மிகக் கனிவுள்ளவரும் இரக்கமுள்ளவருமாக இருக்கிறார்.” (யாக்கோபு 5:11, NW) யோபு நல்ல ஆரோக்கியத்திற்கும், அன்பானவர்களுடன் பூரணமும் சந்தோஷமுமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் திரும்ப பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டபோது, எவ்வாறு அவருடைய உத்தமத்தன்மை பலனளிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். உத்தமத்தில் சகித்து நிலைத்திருப்பதானது, இப்போதுதானே யெகோவாவைச் சேவிப்பதன் சந்தோஷத்திற்கு உச்சநிலையாக, கடவுளுடைய புதிய உலகத்தின் வாக்குப்பண்ணப்பட்ட பரதீஸில் அதைப்போன்ற களிகூருதலை உங்களுக்குக் கொண்டுவரலாம்.
ஞானத்தைத் தேடுதல்
8. உண்மையான, நடைமுறைக்குரிய ஞானத்தை நாம் எவ்வாறு கண்டடையலாம், இதில் ஜெபம் என்ன பாகத்தை நடப்பிக்கிறது?
8 நாம் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும், அதோடு அதை நடைமுறையில் பொருத்தி பயன்படுத்துவதும் தேவ ஞானத்தைப் பெறுவதில் பலன் தந்து, ஒழியும் தறுவாயிலிருக்கும் சாத்தானுடைய ஒழுங்குமுறையின் சீரழிவின் மத்தியில் இக்கட்டுகளைச் சகிக்க நமக்கு உதவிசெய்யும். அத்தகைய ஞானத்தைக் கண்டடைவோமென எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்? யாக்கோபு நமக்கு இவ்வாறு சொல்கிறார்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.” (யாக்கோபு 1:5, 6) யெகோவா நம்முடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடுத்துக் கேட்டு, தம்முடைய சொந்த ஏற்ற காலத்திலும் வழியிலும் அவற்றிற்கு விடை தருவார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நாம் ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும்.
9. தேவ ஞானத்தையும் அதன் பொருத்தப் பயனையும் யாக்கோபு எவ்வாறு விவரிக்கிறார்?
9 தேவ ஞானம் யெகோவாவிடமிருந்து வரும் வரமாகும். இத்தகைய வரங்களைப்பற்றி விவரித்து யாக்கோபு இவ்வாறு சொல்கிறார்: “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” பின்னால் தன் நிருபத்தில், இவ்வாறு சொல்கையில், உண்மையான ஞானத்தை அடைவதன் பலனை யாக்கோபு விளக்குகிறார்: “உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். . . . பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.”—யாக்கோபு 1:17; 3:13-17.
10. எவ்வாறு பொய்மதம், உண்மையான மதத்துக்கு மாறுபடுகிறது?
10 கிறிஸ்தவமண்டல நாடுகளிலாயினும் அல்லது மற்ற நாடுகளிலாயினும், பொய்மத உலகப் பேரரசில், துதிப்பாடல்கள் சிலவற்றைப் பாடுவதும், ஒன்றையே திரும்பத்திரும்பச் சொல்லும் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பதும், ஒருவேளை ஒரு பேச்சைக் கேட்பதுமே அடிக்கடி வணக்கத்தாரின் வழக்கமாயுள்ளது. நம்பிக்கையளிக்கும் செய்தியை யாவரறிய அறிவிப்பதன் சம்பந்தமாக எந்த ஊக்கமூட்டுதலும் அளிக்கப்படுகிறதில்லை. ஏனெனில் எதிர்காலத்திற்கான சந்தோஷ எதிர்பார்ப்பு எதையும் பெரும்பான்மையான மதங்கள் காண்கிறதில்லை. கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தைப்பற்றிய மகிமையான நம்பிக்கை ஒருபோதும் குறிப்பிடப்படுவதில்லை அல்லது முற்றிலும் தவறாகப் பொருள்கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவமண்டலத்தைப் பின்பற்றுவோரைக் குறித்து தீர்க்கதரிசனமாக யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்.” (எரேமியா 2:13) அவர்களிடம் சத்தியத்தின் தண்ணீர் எதுவும் இல்லை. பரம ஞானம் கிடையாது.
11, 12. (அ) தேவ ஞானம் நமக்கு எவ்வகையான உள்நோக்கத் தூண்டுதலை அளிக்க வேண்டும்? (ஆ) எதைக் குறித்து தேவ ஞானம் நம்மை எச்சரிக்கிறது?
11 இன்று யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இது எவ்வளவாய் வேறுபட்டதாயிருக்கிறது! கடவுள் கொடுத்திருக்கும் ஊக்கமிகுந்த ஆற்றலைக் கொண்டு அவர்கள், அவருடைய வந்துகொண்டிருக்கும் ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை பூமி முழுவதிலும் நிரப்புகிறார்கள். அவர்கள் பேசும் ஞானம் கடவுளுடைய வார்த்தையின்பேரில் உறுதியாய் ஆதாரம் கொண்டிருக்கிறது. (ஒப்பிடுக: நீதிமொழிகள் 1:20; ஏசாயா 40:29-31.) நிச்சயமாகவே, நம்முடைய கடவுளும் சிருஷ்டிகருமானவரின் மகத்தான நோக்கங்களை யாவரறிய அறிவிப்பதில் உண்மையான அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் நடைமுறையில் அவர்கள் பயன்படுத்துகின்றனர். சபையிலுள்ள எல்லாரும் “ஆவிக்குரிய எல்லா ஞானத்தோடும் உணர்வோடும் [கடவுளுடைய] சித்தத்தை அறிகிற முற்றறிவினால் [“திருத்தமான அறிவினால்,” NW] நிரப்பப்படவேண்டுமென்”பது நம்முடைய ஆவலாக இருக்க வேண்டும். (கொலோசேயர் 1:9, தி.மொ.) இந்த அடிப்படை ஆதாரத்தை உடையோராக, இளைஞரும் முதியோரும் எப்போதும் ‘வார்த்தையின்படி செய்வோராவதற்கு’ உள்நோக்கத் தூண்டுதல் அளிக்கப்படுவர்.
12 கடவுளுடைய அங்கீகாரத்தை இழப்பதில் விளைவுண்டாக்கும் பாவங்களைக் குறித்து, ‘பரத்திலிருந்து வருகிற ஞானம்’ நம்மை எச்சரிக்கிறது. யாக்கோபு இவ்வாறு சொல்கிறார்: “என் பிரியமான சகோதரரே, இதை அறிந்துகொள்ளுங்கள்: எந்த மனுஷனும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குத் தாமதமாயுங் கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவன்; மனுஷகோபம் தெய்வநீதியை நடப்பிக்கிறதில்லை.” ஆம், தேவ ஆலோசனைக்குச் செவிகொடுத்து அதைப் பொருத்தி பயன்படுத்துவதற்கு நாம் தீவிரமாயும் ஆவலாயும் இருக்க வேண்டும். எனினும், அந்தச் ‘சிறிய அவயவமாகிய’ நாவைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். தற்புகழ்ச்சி, ஞானமற்ற வீண்பேச்சு, அல்லது தன்-கருத்தை சாதிக்கும் பேச்சு ஆகியவற்றின் மூலமாக இந்த நாவு அடையாளக் கருத்தில் “பெரிய காட்டைக்” கொளுத்திவிடக்கூடும். ஆகையால், நம்முடைய எல்லா கூட்டுறவுகளிலும் இனிமையையும் தன்னடக்கத்தையும் நாம் வளர்க்க வேண்டும்.—யாக்கோபு 1:19, 20, தி.மொ.; 3:5.
13. “வார்த்தை நாட்டப்படுவதை” நாம் ஏற்பது ஏன் முக்கியமானது?
13 “ஆகவே,” யாக்கோபு எழுதுகிறார், “எல்லா அழுக்கையும் கேடான, அந்தத் தேவையில்லாத காரியத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாக இருக்கிற வார்த்தை நாட்டப்படுவதைச் சாந்தத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.” (யாக்கோபு 1:21, NW) பேராசையுள்ள இந்த உலகம், அதன் பகட்டு, பொருளாசை, நான்-முதல் வாழ்க்கை பாணி, இழிவடைந்த ஒழுக்கங்கள் ஆகியவற்றோடுகூட சீக்கிரத்தில் ஒழிந்துபோகவிருக்கிறது. “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:15-17) அப்படியானால், “வார்த்தை நாட்டப்படுவதை” நாம் ஏற்பது எவ்வளவு முக்கியமானது! கடவுளுடைய வார்த்தை அளிக்கிற ஞானம், இந்தச் சாகும் உலகத்தின் கேட்டுக்கு முற்றிலும் நேர்மாறாக நிற்கிறது. அந்தக் கேட்டில் எதுவும் நமக்கு வேண்டாம். (1 பேதுரு 2:2, 3) யெகோவாவின் நீதியுள்ள வழிகளிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதபடி நாம் தீர்மானித்திருப்பதற்கு, சத்தியத்தின்பேரில் பற்றார்வமும், நம் இருதயங்களில் உறுதியான விசுவாசம் நாட்டப்பட்டிருப்பதுமே நமக்குத் தேவை. ஆனால் கடவுளுடைய வார்த்தையைக் கேட்பது மாத்திரமே போதுமானதா?
“வார்த்தையின்படி செய்வோரா”வது
14. நாம் எவ்வாறு வார்த்தையைக் ‘கேட்போராயும்’ அதன்படி ‘செய்வோராயும்’ ஆகக்கூடும்?
14 யாக்கோபு 1:22-ல் (NW) நாம் வாசிப்பதாவது: “பொய் விவாதங்களால் உங்களை வஞ்சித்துக்கொண்டு, கேட்போராக மட்டுமிராமல், வார்த்தையின்படி செய்வோராகுங்கள்.” “வார்த்தையின்படி செய்வோராகுங்கள்”! இந்தப் பொருள் யாக்கோபின் நிருபத்தில் நிச்சயமாகவே முக்கியப்படுத்திக் காட்டப்படுகிறது. நாம் செவிகொடுத்துக் கேட்டு, பின்பு ‘அப்படியே செய்ய’ வேண்டும்! (ஆதியாகமம் 6:22) ஒரு பிரசங்கத்தைக் கேட்பது அல்லது ஏதோ ஆசாரமுறைப்படியான வணக்கத்தில் எப்போதாவது பங்குகொள்வது போதுமானதென இன்று பலர் வாதிடுகின்றனர், ஆனால் வெறுமனே அதோடு இருந்துவிடுகின்றனர். தங்கள் தராதரங்களின்படி ஒரு ‘நல்ல வாழ்க்கையைத்’ தாங்கள் வாழ்ந்து வரும் வரையில், அது போதுமானதென்று அவர்கள் நினைக்கலாம். எனினும் இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை [“கழுமரத்தை,” NW] எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்குரிய இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவதில், தன்னலத் தியாகச் செயலும் சகிப்புத்தன்மையும் உண்மையான கிறிஸ்தவர்களுக்குத் தேவை என்பது தெளிவாயுள்ளது. இன்று அவர்களுக்கான கடவுளுடைய சித்தமானது, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, முதல் நூற்றாண்டில் பின்வருமாறு கட்டளையிட்டபோது இருந்த சித்தமாகவே உள்ளது: ‘ஆகையால் போய் சகல தேசத்து மக்களையும் சீஷராக்குங்கள்.’ (மத்தேயு 28:19, NW) இதைக் குறித்ததில் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்?
15. (அ) நாம் எவ்வாறு சந்தோஷத்துடன் ‘வார்த்தையைச் செய்வோராகக்’ கூடுமென்பதைக் காட்டுபவராய், யாக்கோபு என்ன விளக்க உதாரணத்தைக் கொடுக்கிறார்? (ஆ) வெறும் புற ஆசாரமான வணக்கம் ஏன் போதுமானதல்ல?
15 கடவுளுடைய வார்த்தைக்குள் நாம் தொடர்ந்து உற்று நோக்கிக் கொண்டிருந்தால், நாம் என்ன வகையான ஆட்களாக இருக்கிறோம் என்பதை நமக்குப் பிரதிபலித்துக் காட்டுவதில் அது ஒரு கண்ணாடியைப்போல் இருக்கக்கூடும். யாக்கோபு சொல்கிறார்: “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான் [“சந்தோஷமுள்ளவனாயிருப்பான்,” NW].” (யாக்கோபு 1:23-25) ஆம், சந்தோஷமாய் ‘வார்த்தையின்படி செய்கிற’வனாயிருப்பான். மேலும், நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு நுட்ப காரியத்திலும் ‘செய்வோராக’ இருப்பது முக்கியமானது. வெறும் புற ஆசாரமான வணக்கம் போதுமானதென்று நினைப்பவர்களாய் நம்மைநாமே ஒருபோதும் ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. ஆர்வமுள்ள கிறிஸ்தவர்களும் தவறியிருக்கக்கூடிய, உண்மையான வணக்கத்தின் சில அம்சங்களைக் கைக்கொள்ளும்படி யாக்கோபு நமக்கு அறிவுரை கூறுகிறார். அவர் எழுதுவதாவது: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.”—யாக்கோபு 1:27.
16. என்ன வகைகளில் ஆபிரகாம் ‘யெகோவாவின் நண்பன்’ ஆனார், கடவுளின் நட்பை நாம் எவ்வாறு பெறக்கூடும்?
16 ‘கடவுளில் எனக்கு நம்பிக்கை உண்டு,’ என்று வெறுமனே சொல்லி அதோடு காரியங்களை நிறுத்திக்கொள்வது போதுமானதல்ல. யாக்கோபு 2:19 குறிப்பிடுகிறபடி: “தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.” “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” என்று யாக்கோபு அறிவுறுத்தி, ஆபிரகாமைக் குறிப்பிட்டு: “விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டது,” என்று சொல்கிறார். (யாக்கோபு 2:17, 20-22) ஆபிரகாமின் கிரியைகள், தன் இரத்த உறவினருக்கு உதவியளித்து விடுவித்தது, உபசரணைக் காட்டினது, ஈசாக்கைப் பலியிடுவதற்கு ஆயத்தம் செய்தது, எதிர்கால மேசியானிய ராஜ்யமாகிய ‘உண்மையான அஸ்திபாரங்களுள்ள நகரத்தைப்’ பற்றிய கடவுளுடைய வாக்குத்தத்தத்தில் அசைக்கமுடியாத விசுவாசத்தை ‘யாவரறிய அறிவித்தது’ ஆகியவை உட்பட்டிருந்தன. (ஆதியாகமம் 14:16; 18:1-5; 22:1-18; எபிரெயர் 11:8-10, 13, 14, NW; 13:2) பொருத்தமாகவே, ஆபிரகாம் “‘யெகோவாவின் நண்பன்’ என்றழைக்கப்படலானார்.” (யாக்கோபு 2:23, NW) நாமும்கூட, வந்துகொண்டிருக்கிற அவருடைய நீதியுள்ள ராஜ்யத்தில் நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும், சுறுசுறுப்பாய்ச் செயல்பட்டு அறிவித்து வருகையில் ‘யெகோவாவின் நண்பர்களாகக்’ கருதப்படலாம்.
17. (அ) ராகாப் ஏன் ‘நீதியுள்ளவளாகத் தீர்க்கப்பட்டாள்,’ அவள் எவ்வாறு பலனளிக்கப்பட்டாள்? (ஆ) ‘வார்த்தையின்படி செய்வோரானவர்களின்’ என்ன நீண்ட பெயர்ப் பட்டியலை பைபிள் அளிக்கிறது? (இ) யோபு எவ்வாறு பலனளிக்கப்பட்டார், ஏன்?
17 ‘வார்த்தையின்படி செய்வோராகிறவர்கள்’ நிச்சயமாகவே, ‘விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமான்களாகத் தீர்க்கப்படுகிறார்கள்.’ (யாக்கோபு 2:24, தி.மொ.) ராகாப், யெகோவாவின் வல்லமைமிகுந்த செயல்களைக் குறித்து தான் கேள்விப்பட்ட ‘வார்த்தையில்’ வைத்த தன் விசுவாசத்தோடு செயல்களையும் கூட்டினவளாக இருந்தாள். இஸ்ரவேல வேவுகாரர்களை அவள் மறைத்து வைத்து, தப்பிப்போகும்படி அவர்களுக்கு உதவிசெய்தாள். பின்பு பாதுகாப்புக்காகத் தன் தகப்பனின் குடும்பத்தினரைக் கூட்டிச் சேர்த்தாள். செயல்களால் ஆதரிக்கப்பட்ட அவளுடைய விசுவாசம், தான் மேசியாவின் மூதாதையாவதற்கு வழிநடத்தினதைக் குறித்து, உயிர்த்தெழுதலின்போது அறிகையில் அவள் எவ்வளவு அதிகமாய்க் களிகூருவாள்! (யோசுவா 2:11; 6:25; மத்தேயு 1:5) தங்கள் விசுவாசத்தை மெய்ப்பித்துக் காட்டினதில் ‘செய்வோரானோரின்’ மற்றவர்களைப் பற்றிய நீண்ட ஒரு பெயர்ப் பட்டியலை எபிரெயர் 11-வது அதிகாரம் அளிக்கிறது, அவர்கள் நிறைவாய் பலனளிக்கப்படுவார்கள். யோபையும் நாம் மறந்துவிடக் கூடாது, கடுமையான பரீட்சையின்கீழ் அவர்: “யெகோவா திருநாமம் துதிக்கப்படுக,” என்று சொன்னார். நாம் ஏற்கெனவே கவனித்தபடி, அவருடைய விசுவாசமும் செயல்களும் மகத்தான பலனில் பயன்தந்தது. (யோபு 1:21, தி.மொ.; 31:6; 42:10; யாக்கோபு 5:11) அவ்வாறே, இன்று ‘வார்த்தையின்படி செய்வோராக’ நாம் சகித்து நிலைத்திருப்பது யெகோவாவின் அங்கீகார புன்சிரிப்பைக் கொண்டுவரும்.
18, 19. நெடுங்காலம் ஒடுக்கப்பட்டவர்களான சகோதரர்கள் எவ்வாறு ‘வார்த்தையின்படி செய்வோராயினர்,’ அவர்களுடைய நடவடிக்கை என்ன ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்திருக்கிறது?
18 பல ஆண்டுகளினூடே மிகுதியாய்ச் சகித்தவர்களுக்குள், கிழக்கு ஐரோப்பாவிலுள்ள நம் சகோதரர்கள் இருக்கின்றனர். இப்போது கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டிருப்பதால், தங்கள் புதிய சூழமைவில் இவர்கள் உண்மையில் ‘வார்த்தையின்படி செய்வோராகியிருக்கின்றனர்.’ கற்பிப்பதிலும், ஒழுங்குபடுத்தி அமைப்பதிலும் உதவிசெய்வதற்கு, அண்டை நாடுகளிலுள்ள மிஷனரிகளும் பயனியர்களும் அங்கு இடம் மாறி சென்றிருக்கின்றனர். உவாட்ச் டவர் சொஸைட்டியின் ஃபின்லாந்து கிளை அலுவலகமும் அருகிலிருக்கும் மற்ற கிளை அலுவலகங்களும் கட்டிடக் கலையில் தேறினவர்களை அனுப்பியிருக்கின்றன. மேலும் புதிய கிளை அலுவலகங்களையும் ராஜ்ய மன்றங்களையும் கட்டுவதற்கு, உலகமெங்குமுள்ள தயாளகுண சகோதரத்துவம் பண உதவியளித்திருக்கிறது.—2 கொரிந்தியர் 8:14, 15-ஐ ஒப்பிடுக.
19 நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களான அந்தச் சகோதரர்கள், வெளி ஊழியத்தில் எவ்வளவு ஆர்வமாகச் செயல்பட்டிருக்கின்றனர்! ‘தொந்தரவான காலத்தின்போது’ கிடைக்காத வாய்ப்புகளை எட்ட வேண்டுமென்பதுபோல் ‘அவர்கள், கடினமாக உழைத்து தங்களைக் கடுமுயற்சியில் ஈடுபடுத்துகின்றனர்.’ (1 தீமோத்தேயு 4:10; 2 தீமோத்தேயு 4:2; NW) உதாரணமாக, ஒடுக்குதல் வெகு கொடூரமாக இருந்திருந்த அல்பேனியாவில், கடந்த ஏப்ரலின்போது, தங்களிடமிருந்த, “வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்” என்ற தலைப்பைக் கொண்ட ராஜ்ய செய்தி பிரதிகள் முழுவதையும் மூன்று நாட்களுக்குள்தானே விநியோகித்துவிட்டனர். இது, இயேசுவின் மரண நினைவுநாள் அழைப்பு கொடுக்க மறுசந்திப்பு செய்வதற்கு சிறந்ததாயிருந்தது. அதற்கு 3,491 பேர்—செயல்படும் 538 பிரஸ்தாபிகளைப் பார்க்கிலும் மிகப் பலர்—வந்திருந்தனர்.
20. சமீபகால நினைவுநாள் ஆஜரெண்ணிக்கை என்ன காட்டுகிறது, இவர்களில் பலருக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?
20 நினைவுநாளுக்கு வந்திருந்தோரின் எண்ணிக்கைக்கு, மற்ற நாடுகளும் கவனிக்கத்தக்க பங்கைச் செய்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் 1,00,00,000-க்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. பல இடங்களில், நினைவுநாளுக்கு வந்திருந்து கூர்ந்து கவனித்ததால் தங்கள் விசுவாசம் பலப்படுத்தப்பட்ட புதியவர்கள், ‘வார்த்தையின்படி செய்வோராகிக்’ கொண்டிருக்கின்றனர். அந்தச் சிலாக்கியத்திற்குத் தகுதிபெறும்படி அதிகமான புதிய கூட்டாளிகளை நாம் ஊக்குவிக்கக் கூடுமா?
21. நம் வருடாந்தர வசனத்திற்குப் பொருந்த, என்ன நடத்தைப் போக்கை நாம் நாடித் தொடரவேண்டும், என்ன இலக்குடன்?
21 முதல் நூற்றாண்டிலிருந்த ஆர்வமுள்ள அந்தக் கிறிஸ்தவர்களைப் போலவும், அது முதற்கொண்டு இருந்துவந்திருக்கிற பலரைப்போலவும், பரலோக ராஜ்யத்திலோ அல்லது அதன் பூமிக்குரிய ராஜ்ய பகுதியிலோ நித்திய ஜீவனடையும் ‘இலக்கை நோக்கித் தொடருவதில்’ நம்மைக் கடுமுயற்சியில் ஈடுபடுத்தும்படி நாம் தீர்மானத்துடன் இருப்போமாக. (பிலிப்பியர் 3:12-14) அந்த இலக்கை அடைவதற்கு எடுக்கும் எல்லா முயற்சியும் தகுதியானது. கேட்போராக மட்டும் இருக்கும்படி பின்வாங்குவதற்கு இது நேரமல்ல, “மனோபலங்கொண்டு வேலையை நடத்து”வதற்கே இது எல்லா காலங்களிலும் முக்கியமான காலமாக இருக்கிறது. (ஆகாய் 2:4, தி.மொ.; எபிரெயர் 6:11, 12) ‘வார்த்தை நாட்டப்படுவதை ஏற்றிருக்கிற’ நாம், இப்போதும், வரவிருக்கிற நித்திய காலமாகவும் ‘வார்த்தையின்படி சந்தோஷமாக செய்வோராவோமாக.’
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ நாம் எவ்வாறு சந்தோஷத்துடன் சகித்து நிலைத்திருக்கலாம்?
◻ ‘பரத்திலிருந்து வருகிற ஞானம்’ எது, அதை நாம் எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?
◻ நாம் ஏன் ‘கேட்போராக மட்டுமிராமல், வார்த்தையின்படி செய்வோராக’ வேண்டும்?
◻ ‘வார்த்தையின்படி செய்வோராக’ இருப்பதற்கு என்ன அறிக்கைகள் நமக்கு ஊக்கத் தூண்டுதலளிக்க வேண்டும்?
[பக்கம் 17-ன் படம்]
நாமும்கூட தெய்வீக போதனையை நம்முடைய இருதயங்களில் ஏற்றுக்கொள்வோமாக
[பக்கம் 18-ன் படம்]
அன்பானவர்களுடன் பூரணமும் சந்தோஷமுமான வாழ்க்கைக்கு யோபு திரும்ப கொண்டுவரப்படுவதன் மூலம் அவருடைய உத்தமத்தன்மை பலனளிக்கப்பட்டது