தேவ பக்தியின் பரிசுத்த இரகசியத்தைக் கற்றுக்கொள்ளுதல்
“கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்.”—1 பேதுரு 2:21.
1. ‘தேவபக்தியின் பரிசுத்த இரகசியத்தைப்’ பற்றியதில் யெகோவாவின் தீர்மானம் என்னவாக இருந்தது?
“தேவ பக்திக்குரிய இந்தப் பரிசுத்த இரகசியம்” இனிமேலும் இரகசியமாக இல்லை! (1 தீமோத்தேயு 3:16) இன்னும் இரகசியமாகவே இருந்துவருகிற அறியக்கூடாத திரித்துவம் போன்ற பொய் மதத்தின் இரகசியங்களிலிருந்து இது எவ்வளவு வித்தியாசமுள்ளதாக இருக்கிறது! ஒருவரும் அவைகளை அறிந்துகொள்ள முடியாது. அதற்கு மாறாக, இயேசு கிறிஸ்துவில் வெளியாக்கப்பட்ட பரிசுத்த இரகசியம், கூடுமானவரையில் விஸ்தாரமாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று யெகோவா தீர்மானித்துள்ளார். கடவுளுடைய ராஜ்யத்தை வைராக்கியத்தோடு அறிவித்தவர்களில் இயேசுதாமே சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். நாம் இப்பொழுது பார்க்கப்போகும் வண்ணம் அவருடைய செய்தியிலிருந்தும், அவர் பிரசங்கித்த விதத்திலிருந்தும் அதிகம் கற்றுக்கொள்ளலாம்.
2. இயேசுவின் ஊழியம் மீட்கும் பொருளுக்கும் மேலாகவும்கூட முன்நிலையில் ஏன் வைக்கப்பட்டது? (மத்தேயு 20:28)
2 ஆகவே இயேசு “மாம்சத்திலே வெளிப்பட்ட”தைக் குறித்து நாம் மேலுமாக சிந்திப்போமாக. (1 தீமோத்தேயு 3:16) மத்தேயு 20:28-ல் இயேசு, “ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று வாசிக்கிறோம். மீட்கும் பொருளுக்கு மேலாகவும்கூட அவருடைய ஊழியம் முன்நிலையில் வைக்கப்படுகிறது. ஏன் அப்படி? அங்கே ஏதேனில், தந்திரமுள்ள சர்ப்பம் மனிதகுலத்தின் மீது யெகோவாவுக்குள்ள அரசுரிமையைப் பற்றி விவாதித்தான். கடவுளுடைய சிருஷ்டிப்பு பழுதானது என்றும், எந்த மனிதனும் சோதனையின் கீழ் உன்னதமானவருக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ளமுடியாது என்றும் மறைமுகமாக குறிப்பிட்டான். (யோபு 1:6-12; 2:1-10 ஒப்பிட்டுப் பார்க்கவும்.) ஒரு பரிபூரண மனிதனாக, “பிந்திய ஆதா”மாக, இயேசுவின் குற்றமற்றிருந்த ஊழியம், நிந்தித்த சாத்தானை ஒரு துன்மார்க்க பொய்யன் என்று நிரூபித்தது. (1 கொரிந்தியர் 15:45) மேலுமாக, இயேசு யெகோவாவின் அரசுரிமையை உண்மையென மகிமைப்படுத்துபவராக, “அதிபதியாகவும் இரட்சகராகவும்” மற்றும் “பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்ப”வராகவும் இருப்பதற்கு தகுதியுள்ளவராக தம்மை முற்றிலுமாக நிரூபித்துகாட்டினார்.—அப்போஸ்தலர் 5:31; 17:31.
3. இயேசு எவ்வாறு முற்றிலுமாக சாத்தானின் சவாலை எதிர்த்தார்?
3 இயேசு சாத்தானுடைய சவாலை முற்றிலுமாக எதிர்த்தார்! நிந்தைகள், அடிகள், சரீர மற்றும் மனதின் பிரகாரமான சித்திரவதைகளின் நடுவிலும், எல்லாச் சரித்திரத்திலும் பூமியிலுள்ள எந்த மனிதனும் இவ்வளவு பக்திக்குரிய விதமாக தேவனுக்குச் சேவை செய்ததே கிடையாது. தேவனுடைய குமாரனாக எல்லாத் தேவதூஷணமான நிந்தைகளையும் கிறிஸ்து சகிக்க வேண்டியிருந்தது. இவை எல்லாவற்றினூடாகவும்—ஒரு கொடூரமான அவமான மரணத்திலும்கூட—அவர் நிலைத்திருப்பவராய் தன் தகப்பனிடம் உத்தமத்தைக் காட்டுவதில் அசையவில்லை. பிலிப்பியர் 2:8, 9-ல் இயேசு ‘மரணபரியந்தமும், அதாவது சிலுவையின் [கழுமரத்தின், NW] மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி . . . எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தைத் தந்தருளினார்’ என்று பவுல் எழுதுகிறான். சாத்தானை விஷம்நிறைந்த பொய்யனாக இயேசு வெளிப்படுத்திக் காட்டினார்!
4 இவ்விதமாக, ஒரு சில வருடங்கள் விறுவிறுப்பான பிரசங்கத்தின் முடிவிலேதானே, இயேசு பொந்தியு பிலாத்துவினிடம் தைரியமாக சாட்சி கொடுக்க முடிந்தது: “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.” (யோவான் 18:37) கடவுளுடைய ராஜ்யத்தின் சத்தியத்தை பலஸ்தீனா முழுவதும் பிரஸ்தாபிப்பதில் இயேசு அதிஉன்னத தேவ பக்தியை வெளிக்காட்டினார். தன் சீஷர்களும் வைராக்கியமுள்ள பிரசங்கிகளாக ஆகும்படி பயிற்சி கொடுத்தார். அவருடைய மாதிரி இன்றைக்கு நாம் அவருடைய வழிகளைப் பின்பற்றும்படி எவ்விதம் தூண்டுவிக்கக்கூடியதாய் இருக்கிறது!
நமக்கு மாதிரியானவரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்
5. இயேசுவைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் நாம் எப்படி தேவ பக்தியை கற்றுக்கொள்ளக்கூடும்?
5 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் உள்ள நம் தேவபக்தியின் மூலமாக, நாமும்கூட பிசாசை பொய்யனாக நிரூபிக்கலாம். எப்படிப்பட்ட சோதனைகளை நாம் கொண்டிருந்தாலும் அவைகளில் ஒன்றுமே இயேசுவானவர் அனுபவித்த பயங்கரத் துயரங்களுக்கும், நிந்தனைகளுக்கும் ஒருபோதும் ஈடாகாது. ஆகவே நமக்கு மாதிரியானவரிடத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்வோமாக. எபிரெயர் 12:1, 2 ஊக்கமளிப்பதுபோல், “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” நம் பந்தயத்தில் பொறுமையோடே ஓடுவோமாக. ஆதாம் தேவ பக்தியினிடமாக பரீட்சிக்கப்பட்டபோது தவறினான். ஆனால் இயேசு, ஆதாமைப்போல் இல்லாதபடி, எல்லாப் பரீட்சைகளையும் பரிபூரணமாக எதிர்ப்பட்ட பூமியின் மீதுள்ள ஒரே மனிதனாக இருந்தார். “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாக” மரணம் வரைக்குமாக அவர் நிரூபித்தார். (எபிரெயர் 7:26) உத்தமத்தின் விஷயத்தில் எக்குறையுமின்றி, தன் எதிரிகளிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது: “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?” சாத்தானுடைய சவாலைத் திரும்ப வீசி எறிகிறவராய் சொன்னார்: “இந்த உலகத்தின் அதிபதி . . . அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.” அவர் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுவதற்கு முன்பாக தன் சீஷர்களோடு பேசின கடைசி பேச்சிலே இவ்விதமாக சொல்லி முடித்தார்: “திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.”—யோவான் 8:46; 14:30; 16:33.
6. (எ) எப்படிப்பட்ட இளைப்பாறுதல் மனிதவர்க்கத்துக்குத் தேவை என்று இயேசுவுக்கு ஏன் தெரியும்? (பி) எந்த அளவுக்கு இயேசு தெய்வ பயத்தைக் காண்பித்தார்?
6 பூமியிலே மாம்சத்திலிருக்கையில், இயேசு ஒரு மனிதனாக, “தேவ தூதரிலும் சற்று சிறியவராக” இருப்பதென்றால் என்ன என்பதை அனுபவித்தார். (எபிரெயர் 2:7) அவர் மனிதரின் தவறிழைக்கச்செய்யும் பலவீனங்களை தெரிந்துகொண்டார். எனவே மனிதவர்க்கத்தின் ராஜாவும் நியாயாதிபதியுமாக ஆயிரவருடங்கள் ஆட்சி செய்ய முற்றிலும் ஆயத்தமுள்ளவராக இருக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,” என்று சொன்ன இந்தக் கடவுளின் குமாரன், மனிதவர்க்கத்துக்கு எப்படிப்பட்ட இளைப்பாறுதல் தேவை என்பதை அறிந்திருக்கிறார். (மத்தேயு 11:28) எபிரெயர் 5:7-9 நமக்கு சொல்லுகிறது: “அவர் [கிறிஸ்து] மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு தாம் [கீழ்ப்படிதலில்] பூரணரான பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்.” அவரை வெறுத்த சர்ப்பத்தினிடமிருந்து “குதிங்கால் காயத்தைப்” பெறுகையில், மனித மரணத்தின் கடும் வேதனையை அனுபவிக்கும் அளவுக்கு சகிக்க வேண்டியதாக இருந்தபோதிலும் இயேசு ஊசலாடுபவராக இல்லை. (ஆதியாகமம் 3:15) இயேசுவைப் போலவே நாமும்கூட யெகோவா தேவன் நம்முடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடுப்பார், நமக்கு இரட்சிப்பைத் தருவர் என்ற திடநம்பிக்கையுடன், தேவைப்படுமாகில் மரணபரியந்தம், தேவ பக்தியை எப்பொழுதும் காட்ட வேண்டும்.
‘நீதிக்குப் பிழைத்திருத்தல்’
7. 1 பேதுரு 2:21-24-ன்படி கிறிஸ்து என்ன மாதிரியை நமக்கு வைத்திருக்கிறார்? அவருடைய வாழ்க்கைப் போக்கு நம்மை எப்படி பாதிக்க வேண்டும்?
7 மாம்சத்திலே வெளிப்பட்டிருந்தபொழுது, இயேசு உத்தமத்தன்மையோடு தேவபக்தியின் பரிசுத்த இரகசியத்தை வெளிப்படுத்திக் காட்டினார். 1 பேதுரு 2:21-24-ல் இவ்விதமாக வாசிக்கிறோம்: “ஏனெனில் கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார். அவர் பாவஞ் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே தம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் [கழுமரத்தின்மேல், NW] சுமந்தார்.” இயேசுவின் வாழ்க்கையின் பேரில் தியானிக்கையில், நாமுங்கூட அவரைப் போலவே தேவ பக்தியை நாடவும், உத்தமத்தைக் காத்துக்கொள்ளவும், நீதிக்குப் பிழைத்திருக்கவும் எவ்வளவாக உற்சாகப்படுத்தப்படுகிறோம்!
8. இயேசு செய்ததுபோல நாம் எப்படி நீதிக்காக பிழைத்திருக்கலாம்?
8 இயேசு உண்மையாகவே நீதிக்குப் பிழைத்திருந்தார். சங்கீதம் 45:7 அவரைப் பற்றி தீர்க்கதரிசனமாக உரைத்தது: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்.” அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வார்த்தைகளை இயேசுவுக்குப் பொருத்தி எபிரெயர் 1:9-ல்: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்,” என்று சொன்னான். தேவபக்தியின் பரிசுத்த இரகசியத்தை நாம் புரிந்துகொள்ளும் வெளிச்சத்திலே, நாமும் இயேசுவைப் போல் நீதியை நேசித்து, அக்கிரமத்தை வெறுக்கிறவர்களாக இருப்போமாக. சாத்தானின் உலகத்திலே, இன்றைக்கு பயங்கரமான விதத்தில் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் கிறிஸ்தவ ஒழுக்கங்களைக் குறித்ததில், மற்றும் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் மற்றவர்களோடு நமக்கு இருக்கும் எல்லா நடவடிக்கைகளிலும், யெகோவாவின் சரியான நியமங்களைக் கைக்கொள்ளுகிறவர்களாய், நீதிக்குப் பிழைத்திருக்க நாம் தீர்மானமாக இருப்போமாக. சாத்தானையும் அவனுடைய வழிமுறைகளையும் எதிர்த்து நிற்பதற்கு அவ்வளவு அவசியமாக இருக்கும் தெய்வீக உட்பார்வையை உடையவர்களாயிருப்பதற்கு நாம் கடவுளுடைய வார்த்தையின்பேரில் தொடர்ந்து விருந்து கொள்வோமாக!
9. இயேசு ஊழியத்தில் மேலுமாக வைராக்கியத்துடன் இருக்கும்படி செய்தது என்ன, பொய்மத மேய்ப்பர்களைக் குறித்ததில் அது எதை உட்படுத்தியது?
9 கூடுதலான இன்னொன்று இயேசுவை ஊழியத்தில் வைராக்கியமாக இருக்கும்படி செய்தது. அது என்ன? மத்தேயு 9:36-ல்: “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல தொய்ந்து போனவர்களும், சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல் மனதுருகி”னார் என்பதாக வாசிக்கிறோம். ஆக இயேசு, “அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.” (மாற்கு 6:34) இது அவசியமாக பொய்மத மேய்ப்பர்களின் துன்மார்க்கத்தையும் அக்கிரமத்தையும் வெளிப்படுத்துவதையும் உட்படுத்தியது. மத்தேயு 15:7-9-ன்படி இப்படிப்பட்ட சிலருக்கு இயேசு சொன்னார்: “மாயக்காரரே, உங்களைக் குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.”
கண்டனஞ் செய்யப்படவேண்டிய ஓர் இரகசியம்
10. இன்று யார் மேல் “அக்கிரமத்தின் இரகசியம்” கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது, அவர்கள் என்ன குற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள்?
10 இயேசு அந்தப் பொய் மதத்தலைவர்களுக்கு எதிராக பேசினதுபோலவே, நாமும் இன்றைக்குத் தேவபக்தியின் இரகசியத்துக்கு குறிப்பாக எதிர்மாறாக நிற்கிற ஓர் இரகசியத்தைக் குறித்து கண்டனஞ் செய்கிறவர்களாக இருக்கிறோம். 2 தெசலோனிக்கேயர் 2:7-ல் பவுல் அதை “அக்கிரமத்தின் இரகசியம்” என்று குறிப்பிடுகிறான். பொ.ச. முதல் நூற்றாண்டில் அது இரகசியமாக இருந்தது. ஏனென்றால் அப்போஸ்தலரின் மரணத்துக்கு வெகு காலத்துக்குப் பின்புதான் அது வெளிப்படுத்தப்படும். இன்றைக்கு அது, கடவுளுடைய நீதியான ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதற்குப் பதிலாக, அரசியலில் அதிகமாக சிரத்தை கொண்டுள்ள, கிறிஸ்தவ மண்டல குருமாரின் மீது கவனத்தை திருப்புவதாக இருக்கிறது. அவர்களுடைய வரிசையிலே மாய்மாலம் மிகுந்துள்ளது. கிறிஸ்தவ மண்டல புராட்டஸ்டன்ட் பிரிவுகளின் டெலிவிஷன் சுவிசேஷகர்கள் பளிச்சிடும் மாதிரியாக உள்ளனர்: “தங்களுடைய மந்தைகளை கொள்ளையடித்து, பலகோடிக்கணக்கான டாலர்கள் வருமானத்தை உடைய பேரரசுகளைக் கட்டி, மோசமான விலைமாதரோடு தொடர்பு கொண்டு, பின்பு அவர்கள்தாமே வெளிப்படுத்திக் காட்டப்படும்போது, முதலைக் கண்ணீர் வடித்து, பணத்திற்காக தொடர்ந்து கெஞ்சுகிறார்கள், எப்போதுமே அதிகப் பணத்துக்காக கெஞ்சுகின்றனர். ரோமன் கத்தோலிக்க வத்திக்கனும் இதேப்போன்ற கசப்பான காட்சியை அளிப்பதாய், நியாயம் இல்லாத அரசியல் தொடர்புகளையும், வெளிப்புற கம்பீரத்தையும், கறைப்பட்ட வங்கிப் பழக்கங்களையும் கொண்டுள்ளதாயிருக்கிறது.
11. கிறிஸ்தவமண்டல குருமாருக்கும் மகா பாபிலோன் முழுவதற்கும் என்ன ஏற்படும்?
11 கிறிஸ்தவ மண்டல குருவர்க்கத்தை “கேட்டின் மகனாகிய பாவமனுஷன்” என்று விவரிப்பதில் எவ்வித ஆச்சரியமில்லை! (2 தெசலோனிக்கேயர் 2:3) வேசியைப் போன்ற மகா பாபிலோனின் இந்தப் பிரதானப் பகுதி எஞ்சிருக்கும் மற்ற எல்லாப் பொய் மதத்தோடு சேர்த்து முற்றிலும் வெளிப்படுத்தப்பட்டு அழிக்கப்படும். வெளிப்படுத்துதல் 18:9-17-ல் நாம் வாசிக்கிறபடி, அரசியலாளரும், வர்த்தகரும் (அவர்களுடைய வங்கிமாரும்) அப்பொழுது: “ஐயையோ! பாபிலோன், மகா நகரமே!” என்பதாக புலம்புவார்கள். தேவபக்தியின் பரிசுத்த இரகசியத்தைப் பிரகாசிக்கச் செய்யும் எல்லாவற்றோடும் ஒப்பிடுகையில், அதற்கு நேர் எதிராக, மகா பாபிலோனும் அவளுடைய இரகசியங்களும் எல்லாம் திறந்து வெளியாக்கப்படும்.
12. இயேசு நீதியை நேசித்தது எதைச் செய்ய அவரை வழிநடத்தியது?
12 இயேசு நீதியை நேசித்து அக்கிரமத்தை வெறுத்ததானது அவரை உண்மையான வணக்கத்தின் சார்பாக தளராமல் கடினமாக உழைக்கும்படி செய்தது. அபிஷேகம் பண்ணப்பட்ட தேவகுமாரனாக எருசலேமுக்கு முதல் தடவையாக வந்தபோது, வியாபாரிகளையும் காசுக்காரரையும் ஆலயத்தை விட்டு விரட்டி: “இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்” என்றார். (யோவான் 2:13-17) பிறகு ஒரு தடவை ஆலயத்துக்கு வந்தபோது எதிர்த்த யூதர்களிடம்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள். அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்,” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:44) அந்த மதவாதிகளிடம் அவர்களுடைய முகத்திற்கு எதிராக, அவர்கள் பொய்யர்கள், பிசாசின் பிள்ளைகள் என்று சொல்லுவதற்கு இயேசுவுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்!
13. (எ) இயேசு அக்கிரமத்தை வெறுத்ததானது முக்கியமாக எங்கே வெளிக்காட்டப்பட்டது? (பி) வேதபாரகர், பரிசேயர் மீது இயேசு கூறிய அதே விதமான நியாயத்தீர்ப்புக்கு அக்கிரமக்கார குருமாரும் ஏன் பாத்திரராக இருக்கிறார்கள்?
13 இயேசு அக்கிரமத்தை வெறுத்ததானது, விரியன் பாம்புக் குட்டிகளான வேதபாரகர், பரிசேயரை கொட்டும் வசை மொழிகளால் மத்தேயு 23-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டதுபோல், வேறு எங்கும் அதிக தெளிவாக சொல்லப்படவில்லை. இங்கே ஏழு ‘ஐயோ!’-க்களை அவர் பொழிந்தார். அவர்களை ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு—எல்லா விதமான அசுத்தங்களாலும், மாய்மாலத்தாலும் அக்கிரமத்தாலும் முழுவதும் நிறைந்துள்ளதாக’—ஒப்பிட்டார். அந்த அக்கிரமத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலைசெய்ய இயேசு எவ்வளவு ஆர்வம் கொண்டார்! “எருசலேமே, எருசலேமே, கோழி தன்குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்று உரத்த சத்தமாய்ச் சொன்னார். (வசனங்கள் 37, 38) நம் நாளின் அக்கிரம குருவர்க்கத்துக்கும் அதே நியாயத்தீர்ப்புதான் உரியதாக இருக்கிறது, ஏனென்றால் 2 தெசலோனிக்கேயர் 2:12-ன் வார்த்தைகளின்படி, ‘அவர்கள் சத்தியத்தை விசுவாசியாமல், அநீதியில் பிரியப்படுகிற’வர்களாயிருக்கின்றனர். இயேசு பூமியிலே இருக்கும்போது அவ்வளவு உத்தமத் தன்மையோடு வெளிக்காட்டின தேவபக்திக்கு அவர்களுடைய அக்கிரமம் நேர் எதிரிடையாக இருக்கிறது.
கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை அறிவித்தல்
14. தேவ பக்திக்குரிய பரிசுத்த இரகசியத்திற்கான போற்றுதல் நம்மை என்ன செய்யும்படி உந்துவிக்கவேண்டும்?
14 தேவபக்தியின் பரிசுத்த இரகசியத்துக்கான நம் போற்றுதல் எப்பொழுதுமே இயேசுவின் அடிச்சுவடுகளை நெருங்கிய விதமாகப் பின்பற்ற நம்மை வழிநடத்த வேண்டும். அவரைப்போலவே, ஏசாயா 61:2-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, “யெகோவாவின் அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும்” வைராக்கியமுள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும். “துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்” நம் பாகத்தில் வைராக்கியமாக இருப்போமாக. இயேசுவின் நாளில் இருந்தபடி யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை, வெளிப்படுத்துதல்—அதனுடைய மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்திலும், சமீபகாலத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகையின் வெளியீடுகளில் வந்துள்ள கடின செய்திகள் உட்பட, அறிவிப்பதற்கு இன்றைக்குத் தைரியம் அவசியமாயிருக்கிறது. நாம் தைரியமாகவும் சாதுரியமாகவும் பிரசங்கிக்கவேண்டும். நீதியினிடமாக மனச்சாய்வு கொண்டவர்களுக்கு ருசிகரமாக இருப்பதற்கு, நம் வார்த்தைகள் “உப்பால் சாரமேறின”வையாய் இருக்கவேண்டும். (கொலோசெயர் 4:6) இயேசுவின் தேவ பக்திக்குரிய முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொண்டவர்களாய், யெகோவா நமக்குக் கொடுத்த வேலையைச் செய்துமுடித்தோம் என்று ஏற்ற வேளையில் அறிக்கை செய்யக்கூடியவர்களாக இருப்போமாக.—மத்தேயு 24:14; யோவான் 17:4.
15. கடவுளின் பரிசுத்த இரகசியத்தைக் குறித்ததில், 1914 முதல் என்ன ஏற்பட்டிருக்கிறது?
15 இயேசு மாம்சத்தில் வெளிப்பட்டபோது, என்ன சிறந்த வகையில் நமக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறார்! தேவபக்தியின் பரிசுத்த இரகசியம் எவ்வளவு தெளிவாக அவரில் நிறைவேற்றம் அடைந்துள்ளது! யெகோவாவின் நாமத்தை எவ்வளவு தைரியமாக மகிமைப்படுத்தினார்! எவ்வளவு ஆச்சரியமாக இயேசுவின் தகப்பன் அவருடைய உத்தமத்தைக் காக்கும் வாழ்க்கை போக்கிற்கு பலன் அளித்தார்! ஆனால் கடவுளுடைய பரிசுத்த இரகசியத்தில் மேலும் அதிகம் அடங்கிருக்கிறது. 1914-லிருந்து நாம் “கர்த்தருடைய நாளில்” வாழ்ந்து கொண்டிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 1:10) வெளிப்படுத்துதல் 10:6 சொல்லுகிறபடி, “சுவிசேஷமாய் அறிவித்தபடி . . . தேவ இரகசியம் நிறைவேறும்” காலமாக இப்பொழுது இருக்கிறது. பரலோகத்திலிருந்து குரல்கள் இப்பொழுது: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவாவுக்கும், NW] அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதா காலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்,” என்று அறிவித்திருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 11:15) யெகோவா மேசியானிய ராஜாவாகிய இயேசுவை, அவருடைய மகிமையான சிங்காசனத்தில் அவரோடு உடன் அரசராக அமர்த்தியுள்ளார்!
16. புதிதாக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்து எவ்வாறு பரலோகத்திலும் தெய்வத்தன்மைக்கு தனது மரியாதையைக் காட்டினார்?
16 புதிதாக பிறந்த ராஜ்யத்தில் கடவுளுடன் உடன் அரசராக இருப்பதால், இயேசு மிகாவேல் (அதன் அர்த்தம் “யார் கடவுளைப் போல் இருக்கிறார்?” என்பது) என்றும்கூட அழைக்கப்படுகிறார். எந்தக் கலகக்காரனும் ஒருபோதும் கடவுளைப் போல ஆவதில் வெற்றிபெற முடியாது, பழைய பாம்பாகிய சாத்தானையும் அவன் தூதர்களையும் பூமிக்குத் தள்ளுவதன் மூலம் புதிதாக அமர்த்தப்பட்ட ராஜா இதை உடனடியாக செயல்நடப்பித்துக் காட்டினார். (வெளிப்படுத்துதல் 12:7-9) ஆம், பூமியிலே இயேசு தேவ பக்தியை வெளிக்காட்டியதுபோலவே பரலோகத்திலும் தேவ பற்றுக்கு போற்றுதலைக் காட்டினார். பொய் மதத்தையும் சாத்தானின் காணக்கூடிய மற்றும் காணக்கூடாத அமைப்பையும் முற்றிலுமாக அழித்துப்போடும்வரை, மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து இளைப்பாறமாட்டார்.
17. 1914 முதற்கொண்டு மத்தேயு 25:31-33-ன் நிறைவேற்றமாக என்ன நடந்துகொண்டிருக்கிறது?
17 1914-லிருந்து மத்தேயு 25:31-33-லுள்ள இயேசுவின் சொந்தத் தீர்க்கதரிசனம் தேவனின் பரிசுத்த இரகசியத்தின் பேரில் பிரகாசமாக ஒளிவீசியிருக்கிறது. இங்கே இயேசு: “அன்றியும், மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடும்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களைப் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்,” என்று அறிவித்தார். பரலோகத்தில் அனுகூலமான ஸ்தானத்திலிருந்து, இம்மகிமையான ராஜனும், நீதிபதியும், தேவ பக்தியைச் சிபாரிசு செய்பவருமாகிய இவர், முதலில் கேட்டின் மகனாகிய பாவமனுஷன் மீதும் மகா பாபிலோனின் மற்றப் பிரிவுகளின் மீதும், பிறகு சாத்தானுடைய துன்மார்க்க பூமிக்குரிய அமைப்பை ஆதரிக்கும் வெள்ளாட்டைப் போன்ற ஆதரவாளர்கள் மீதும், எஞ்சியுள்ள மற்ற எல்லா அம்சங்களின் மீதும் பழித்தீர்ப்பைக் கொண்டுவருவார். சாத்தான் பிறகு பாதாளத்தில் அடைக்கப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:1-3) ஆனால் செம்மறியாட்டைப் போன்ற “நீதிமான்கள்” நித்திய ஜீவனுக்குள் செல்வார்கள். (மத்தேயு 25:46) நீங்கள் தேவ பக்தியைத் தொடருவதானது உங்களை அந்தத் தொகுதியில் இருக்கும்படியாக செய்யட்டும்!
18. தேவ பக்தியின் பரிசுத்த இரகசியம் சம்பந்தமாக என்ன மகிழ்ச்சியான சிலாக்கியம் நமக்கு இருக்கிறது?
18 வெளிப்படுத்துதல் 19:10: “தேவனைத் தொழுதுகொள்” என்று நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஏன்? வேத வசனம் தொடர்ந்து, “இயேசுவைப் பற்றிய சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது” என்று சொல்லுகிறது. ஆகவே பண்டைய காலத்திய ஏவப்பட்ட தீர்க்கதரிசனங்களில் அநேகம் இயேசுவைப் பற்றி சாட்சி பகர்ந்தன! இந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிட்டிருப்பதால், “தேவனுடைய பரிசுத்த இரகசியம்” தெள்ளந்தெளிவாகத் தெரிகிறது. ஆகவே “தேவ பக்தியின் பரிசுத்த இரகசியம்” இயேசுவில் உருவகமாக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்ளுகிறோம். கடவுளுடைய ராஜ்யத்தின் தாழ்மையான ஊழியர்களாக அவருடைய அடிச்சுவடுகளில் பின்பற்ற இருப்பது என்னே ஆச்சரியமான சிலாக்கியம்! ஆம், சுவிசேஷமாய் அறிவித்தபடி, தேவனுடைய பரிசுத்த இரகசியம் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுவதிலும் அவற்றை அறிவிப்பதிலும் ஒரு பங்கைக் கொண்டிருப்பதில் நாம் கனமடைவதற்கு சிலாக்கியம்தான்! (w90 1/15)
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ இயேசுவின் தேவபக்திக்குரிய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ இயேசுவைப் போலவே நாமும் எப்படி நீதிக்காகப் பிழைப்பவர்களாக வாழலாம்?
◻ கண்டனத்திற்குரிய என்ன இரகசியம் தேவ பக்திக்குரிய இரகசியத்திற்கு குறிப்பாக நேர் எதிராக நிற்கிறது?
◻ தேவ பக்திக்குரிய இரகசியத்திற்கான நம்முடைய போற்றுதல் நம்மை என்ன செய்யும்படி உந்துவிக்கவேண்டும்?
4. சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கவே இந்த உலகத்திற்கு வந்ததாக ஏன் இயேசு பொந்தியு பிலாத்திடம் கூறினார்?
[பக்கம் 20-ன் படம்]
தேவ பக்தியை ஆதரித்து பேசுபவராகவும் ராஜ்யத்தை வைராக்கியத்துடன் அறிவிப்பவருமாகவும், இயேசு பிலாத்துவிடம்: “சத்தியத்தைக் குறித்து நான் சாட்சி கொடுக்க . . . இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என்று சொல்லக்கூடும்
[பக்கம் 22-ன் படம்]
இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் கண்டனம் செய்தபோது அவருடைய தேவ பக்தி வெளிக்காட்டப்பட்டது