கிறிஸ்தவ இளைஞர்களே விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள்
“அனைவரும் கட்டாயம் ஆஜராயிருக்க வேண்டும்.” அதுவே அறிவிக்கப்பட்ட செய்தியாக இருந்தது. குறிப்பிட்ட ஒரு ஜப்பானிய பள்ளியில் வரவேற்பு கூடத்தில் அனைத்து மாணவர்களும் ஒரு பொது அசெம்பிளியில் இருக்க வேண்டியதாக இருந்தது. ஓர் இளம் கிறிஸ்தவ மாணவனுக்குப் பள்ளிப்பாடலில் வெளிப்படுத்தப்பட்டிருந்த சில கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “ஆம், பள்ளி பாடல் இசைக்கப்படும். ஆனால் எனக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது, நான் வழக்கம் போல் பின்புறத்தில் வெறுமென உட்கார்ந்திருப்பேன்” என்று அவன் நினைத்துக்கொண்டான்.
ஆனால் யெகோவாவின் இளம் சாட்சி வரவேற்பு கூடத்திற்குள் நுழைந்த போது, பல்கலைக்கழக கலையியல் குழு உறுப்பினர்கள் அனைவரும் பின்வரிசையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். ஆகவே அவன் அவர்களுக்கு முன்னால் உட்கார வேண்டியதாயிற்று. பள்ளி பாடலுக்காக மற்ற மாணவர்கள் எழுந்து நின்ற போது, அவன் மரியாதையுடன் உட்கார்ந்து கொண்டே இருந்தான். ஆனால் ஆசிரியர்கள் இதைப் பார்த்து ஆத்திரமடைந்தார்கள். அவர்கள் அவனை பலவந்தமாக நிற்க வைக்க முயற்சித்தார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் உங்களை கற்பனை செய்து பார்க்க முடியுமா? நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
ஏன் பலமான விசுவாசம் தேவைப்படுகிறது
மக்கள், கிறிஸ்தவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு பைபிள்-பயிற்சி பெற்ற அவர்களுடைய மனச்சாட்சிக்கேற்ப வாழும்படி அவர்களை அனுமதித்தால் அது மிக சிறந்ததாய் இருக்கும். ஆனால் அடிக்கடி கிறிஸ்தவர்கள் அழுத்தமான நிலைமைகளை எதிர்ப்பட வேண்டியதாய் இருக்கிறது. இது நமக்கு ஆச்சரியமாய் இருக்கக்கூடாது. ஏனென்றால் கடவுளுடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்து தாமே இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:20) நேரடியான துன்புறுத்தலைத் தவிர, யெகோவாவின் ஊழியர்கள் விசுவாசத்தில் மற்ற பல்வேறு பரீட்சைகளை எதிர்ப்படுகிறார்கள்.
பள்ளியில் எதிர்ப்படும் சோதனைகளைச் சமாளிக்க கிறிஸ்தவ இளைஞருக்கு அநேகமாக பலமான விசுவாசம் தேவையாய் இருக்கிறது. ஒழுக்கமற்ற பேச்சைக் பயன்படுத்துகிறவர்கள் அல்லது கடவுளைக் கனவீனப்படுத்தும் மனநிலையுடைய சக மாணவரோடு தொடர்பு கொள்ள நிர்ப்பந்திக்கப்படலாம். இளம் கிறிஸ்தவர்கள், தேசப்பற்றுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை எதிர்ப்படவும், ஆவிக்குரிய வகையில் தீங்கிழைக்கக்கூடிய மனமகிழ் மன்றங்கள், பள்ளி, அரசியல் அல்லது மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் அழுத்தத்திற்குள் கொண்டுவரப்படக்கூடும். ஆசிரியர்கள் அல்லது உடன் மாணவர்கள் இளம் கிறிஸ்தவர்களை ஒத்திணங்கிப் போகச் செய்விக்க அவர்கள் மீது அழுத்தத்தை வைக்க முற்படலாம். ஆகவே தேவபக்தியுள்ள இளைஞர்கள் தங்கள் நம்பிக்கைக்கு தெளிவாக விளக்கமளிப்பதற்கு தேவைப்படும் விசுவாசத்துக்காக யெகோவாவின் ஆவியின் மீது சார்ந்திருக்க வேண்டும்.—மத்தேயு 10:19, 20; கலாத்தியர் 5:22, 23.
‘உத்தரவு சொல்ல ஆயத்தமாயிருங்கள்’
பேதுரு அப்போஸ்தலனின் புத்திமதி இளைஞருக்கும் வயது வந்த கிறிஸ்தவர்களுக்கும் பொருத்தமாயிருக்கிறது. அவர் சொன்னார்: “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) உத்தரவு சொல்ல ஆயத்தமாயிருப்பது எதைக் கேட்பதாய் இருக்கிறது? முதலாவது, வேதாகமம் என்ன கற்பிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேசப்பற்று, அரசியல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம் அல்லது ஒழுக்கங்கள் போன்ற விஷயங்களில் பள்ளியில் நிலைநிற்கை எடுப்பதற்கு, கிறிஸ்தவ நிலைநிற்கைக்கான காரணத்தை நீங்கள் முதலில் புரிந்துகொண்டு அதை உண்மையில் நம்புகிறவர்களாக இருக்க வேண்டும்.
உதாரணமாக பவுல் அப்போஸ்தலன் உடன் கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “மோசம் போகாதிருங்கள்; கெட்ட கூட்டுறவு பிரயோஜனமான பழக்கவழக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, NW) அதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? பவுல் குறிப்பிட்டது போல கூட்டுறவு விஷயத்தில் மோசம் போய் விடுவது எளிதாக இருக்கிறது. ஒரு நபர் நட்போடு பழகுகிறவராகவும், மனதுக்குப் பிடித்தமானவராகவும் தோற்றமளிக்கலாம். ஆனால் யெகோவாவின் ஊழியத்தில் உங்களுக்கிருக்கும் அக்கறை அவருக்கில்லையென்றால் அல்லது பைபிளின் வாக்குறுதிகளை நம்புகிறவராகவும்கூட இல்லையென்றால் அவர் ஒரு கெட்ட கூட்டாளியாக இருக்கிறார். ஏன்? ஏனென்றால் அவருடைய வாழ்க்கை வித்தியாசமான நியமங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஒரு கிறிஸ்தவனுக்கு அதிமுக்கியமாக இருக்கும் காரியங்கள் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாததாக இருக்கக்கூடும்.
இதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களைக் குறித்து சொன்னதாவது: “நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:16) சாத்தானைக் கடவுளாகக் கொண்டுள்ள இந்த உலகின் பாகமாக இருந்துகொண்டு அதேசமயத்தில் ஒரு மெய்யான கிறிஸ்தவனாகவும் இருப்பது கூடாத காரியமாகும். (2 கொரிந்தியர் 4:4) இப்படியாக உலகிலிருந்து பிரிந்திருப்பது, இன்று இத்தனை அநேகரை வாதித்துக் கொண்டிருக்கும் சீரழிவிலிருந்தும் சச்சரவுகளிலிருந்தும் எவ்விதமாக ஒரு கிறிஸ்தவனை பாதுகாக்கிறது என்பதை உங்களால் காணமுடிகிறதா? அப்படியென்றால், ஒரு சில பள்ளி நடவடிக்கைகளில் நீங்கள் சேர்ந்து கொள்ள முடியாதிருப்பதை இது அர்த்தப்படுத்தினாலும்கூட, நீங்கள் ஏன் பிரிந்திருப்பதைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.a
விசுவாசத்தில் உறுதியாய் இருந்து, ராஜ்ய அக்கறைகளை வாழ்க்கையில் முதலிடத்தில் வைப்பதனுடைய முக்கியத்துவம் ஓர் இளம் கிறிஸ்தவ பெண்ணின் விஷயத்தில் காண்பிக்கப்பட்டது. (மத்தேயு 6:33) பட்டமளிப்பு விழாவின் ஒத்திகைக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்ட போது, அது அவள் ஆஜராக திட்டமிட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார அசெம்பிளி நடைபெறும் அதே நாளில் இருக்கப் போவதை அறிந்தாள். அவள் ஒத்திகைக்குத் தான் ஏன் வரமாட்டாள் என்பதை மரியாதையோடு விளக்கும் ஒரு கடிதத்தை வகுப்புக்கு முன்பே தன் ஆசிரியரிடம் கொடுத்துவிட்டாள். வகுப்பு முடிந்தப் பின்பு, ஆசிரியர் அவளை தனியே அழைத்து, அவள் ஏன் ஒத்திகைக்கு வரமாட்டாள் என்பதை மறுபடியுமாக விளக்கும்படியாக அவளை கேட்டார். அந்தப் பெண் சொல்கிறாள்: “அதே வார்த்தைகளையே நான் சொல்வேனா என்பதைக் காண அவர் விரும்பினார். இது என்னுடைய விருப்பமாக இருந்ததா அல்லது அந்த கடிதத்திலிருந்தது வெறுமனே என் அம்மாவின் வார்த்தைகளா? காரியத்தின் பேரில் என்னுடைய சொந்த நம்பிக்கையைப் பார்த்து, அவர் என்னைத் தடைசெய்யவில்லை.”
“யாவருக்கும் உத்தரவு சொல்ல வேண்டும்”
ஒரு பிரச்னை எழுவதற்கு முன்பாகவே கிறிஸ்தவ இளைஞர்கள் தங்கள் நிலைநிற்கையைப் பல்கலைக் கழக கலையியல் உறுப்பினர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியப்படுத்திவிடுவார்களேயானால், பிரச்னைகளை எதிர்ப்பட வேண்டிய சமயத்தில் அழுத்தம் அவ்வளவு அதிகமாக இல்லாதிருப்பதை அவர்கள் அடிக்கடி காண்கிறார்கள். ஓர் இளம் ஜப்பானிய கிறிஸ்தவ பெண், அவள் 11 வயதாக இருக்கையில், எல்லா மாணவர்களும் ஒரு கிறிஸ்மஸ் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவளுடைய பள்ளி, வற்புறுத்தியது. மேல் வகுப்புகளில் இருந்த மாணவர்கள், அதில் கலந்துகொள்ளும்படி அவளை வற்புறுத்தினார்கள், ஆனால் அவள் அதில் கலந்துகொள்ளவில்லை. அவளுடைய ஆசிரியர் அவளுடைய நிலைநிற்கையை புரிந்துகொண்டிருந்தார். ஏன்? பள்ளி ஆண்டின் ஆரம்பத்திலேயே, சாட்சியும் அவளுடைய பெற்றோரும் ஆசிரியரைச் சந்தித்து தங்களுடைய கிறிஸ்தவ நிலைநிற்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் கலந்துபேசியிருந்தார்கள்.
வெளி ஊழியத்தில் ஈடுபடுகையில், சில இளம் கிறிஸ்தவர்கள் சகமாணவர்களை அல்லது ஆசிரியர்களைச் சந்திப்பது குறித்து தயக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் அவ்விதமாக உணருகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதையும் ஏன் அவ்விதமாக செய்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்க நீங்கள் ஏன் முன்முயற்சி செய்யக்கூடாது? 14-வயது யெகோவாவின் சாட்சி தெரிவித்தார்: “ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய நிலைநிற்கையைப் பற்றி பள்ளியில் அனைவரும் அறிவர். ஆம், அவர்கள் அவ்வளவு நன்றாக அதை அறிந்திருப்பதால், நான் ஊழியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு சகமாணவனைச் சந்திக்க நேர்ந்ததால், நான் சங்கடமாக உணருவதில்லை. உடன் மாணவர்கள் பொதுவாக செவி கொடுத்துக் கேட்கிறார்கள். அநேக சமயங்களில் பைபிள் பிரசுரங்களை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். 12-வயது பையன், ஊழியத்தில் கலந்துகொள்ளும்போது தன் சகமாணவர்களை சந்திப்பதை எதிர்பார்த்திருப்பதாக சொல்கிறான். இதைக் குறித்து குழப்பமடைவதற்குப் பதிலாக, அவ்விதமாக நிகழும் போது தான் என்ன சொல்ல போகிறான் என்பதை வழக்கமாக ஒத்திகை செய்து பார்த்துக் கொள்கிறான். இவ்விதமாக அவன் தன்னுடைய விசுவாசத்துக்கு நியாயமான காரணங்களைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறான்.
அநேக பள்ளிகளில் பள்ளிப் பாடத்திட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள், தெரிவுக்குரிய ஒரு விஷயமாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையாக நடைமுறையில், ஆசிரியர்களும் மாணவர்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் சேர்ந்துகொள்ளும்படி தனி நபர்கள் மீது அதிகமான அழுத்தத்தைக் கொண்டுவருகிறார்கள். 20-வயதுள்ள கிறிஸ்தவ பெண் இந்த அழுத்தத்தைச் சமாளிக்க ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடித்தாள். அவள் சொல்கிறாள்: “உயர்நிலைப்பள்ளி முழுவதிலும் நான் ஒரு துணைப்பயனியராக சேவித்தேன். மற்ற காரியங்களில் சேர்ந்து கொள்ள இயலாதபடி நான் என்னுடைய மத சம்பந்தமான வேலைகளில் மிக அதிகமாக சுறுசுறுப்பாக இருந்ததை அனைவரும் அறிந்திருந்தனர். இந்தச் சாட்சியின் தங்கையும் அதையே பின்பற்றினாள். சில கிறிஸ்தவ இளைஞர்கள் பள்ளி ஆண்டுகளின் போது துணைப்பயனியர் சேவை செய்துவிட்டு, தங்கள் பள்ளிபடிப்பை முடித்துக்கொண்ட பின் நேரடியாக முழு நேர ராஜ்ய அறிவிப்பாளர்களாக ஒழுங்கான பயனியர் வேலையை எடுத்துக் கொள்கிறார்கள்.
உங்களுடைய நேர்த்தியான நடத்தையும் உங்கள் தைரியமான சாட்சியும் கொடுக்கக்கூடிய நல்ல பலன்களை ஒருபோதும் கவனிக்கத் தவறிவிடாதீர்கள். அமைதியாக இருந்துவிடுவதற்குப் பதிலாக, மரியாதையாக, ஆனால் தைரியமாக பேசுவதன் மூலம் நீங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதை ஏன் காண்பிக்கக்கூடாது? நாடு கடத்தப்பட்டு சீரிய படைத்தலைவனாகிய நாகமான் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஓர் இஸ்ரவேல் சிறுமி அதைத்தான் செய்தாள். (2 இராஜாக்கள் 5:2-4) அந்தச் சிறு பெண்ணின் முன்முயற்சியினால் யெகோவாவின் நாமம் துதிக்கப்பட்டது. உங்களுடைய பங்கிலும் இது போன்ற விசுவாசம் கடவுளுக்குக் கனத்தைக் கொண்டு வந்து, மற்றவர்களும்கூட அவருடைய நாமத்தை துதிப்பவர்களாக நிலைநிற்கை எடுக்க உதவிசெய்யக்கூடும்.
நாம் நம்முடைய விசுவாசத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அதே சமயம் கிறிஸ்தவர்களாக நிலைத்திருக்க முடியாது. இயேசு சொன்னார்: “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.” (மத்தேயு 10:32, 33) இயேசுவைப் பின்பற்றுகிறவராக விசுவாசத்தில் உறுதியாய் இருப்பது பொறுப்புணர்ச்சியுள்ள ஓர் உத்தரவாதமாக இருக்கிறது அல்லவா?
உதவி கிடைக்கிறது
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உறுதியான நிலைநிற்கை எடுப்பதற்கு, உங்களுக்குப் பலமான விசுவாசம் அவசியமாயிருக்கிறது. அதற்காக, நீங்கள் பைபிளை ஊக்கமாக படித்து, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராயிருந்து, வெளி ஊழியத்தில் ஈடுபட வேண்டும். அப்படியும் ஏதோ ஒன்று குறைவுபடுவதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் என்ன செய்யக்கூடும்? சீஷனாகிய யாக்கோபு சொன்னார்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5) உங்கள் பிரச்னையைக் குறித்து யெகோவாவிடம் ஜெபத்தில் பேசுங்கள்; உங்கள் விசுவாசத்தின் சோதனைகளை அல்லது பரீட்சைகளை எதிர்ப்படுவதற்கு உங்களை அவர் பலப்படுத்தக்கூடும்.
ஒரு கிறிஸ்தவன் வேறு என்ன செய்ய முடியும்? நீதிமொழிகள் புத்தகம் நமக்குச் சொல்கிறது: “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.” (நீதிமொழிகள் 23:22) அப்போஸ்தலனாகிய பவுல் இந்தப் புத்திமதியை ஆதரித்தார், ஏனென்றால் அவர் சொன்னார்: “பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.” (கொலோசெயர் 3:20) விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதற்குக் கிறிஸ்தவ பெற்றோர் உங்களுக்கு உதவி செய்யக்கூடும். அவர்களுடைய ஆலோசனைகளுக்கு செவிசாயுங்கள். அவர்களுடைய உதவியோடு, யோசனைகள், புத்திமதிகள் மற்றும் அனுபவங்களைக் காண விழிப்புள்ளவர்களாக வேதாகமத்தையும் பைபிள்-ஆதாரமுள்ள பிரசுரங்களையும் ஆராய்ந்து பாருங்கள். நீங்களும் உங்கள் பெற்றோரும் இதை அனுபவித்து மகிழ்வீர்கள், இது உங்கள் கோழைத்தனத்தை அல்லது பயத்தை மேற்கொள்ள உங்களுக்கு உதவிசெய்யும்.—2 தீமோத்தேயு 1:7.
கிறிஸ்தவ சபையின் மூலமாக யெகோவா தேவன் செய்திருக்கும் ஏற்பாடுகளை அனுகூலப்படுத்திக்கொள்ளுங்கள். கூட்டங்களுக்கு நன்கு தயார் செய்யுங்கள். நியமிக்கப்பட்ட மூப்பர்களிடமும் நீங்கள் இப்பொழுது எதிர்ப்படுவதற்கு ஒத்த அனுபவங்களை அனுபவித்திருக்கும் மற்றவர்களிடமும் பேசுங்கள். சாலொமோன் சொன்னார்: “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடை”வான். (நீதிமொழிகள் 1:5) ஆகவே இந்த முதிர்ந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கிருப்பது போன்ற பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளித்து வரும் கிறிஸ்தவ இளைஞரிடமிருந்தும்கூட நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
உண்மைத்தன்மை ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது
விசுவாசத்தில் உறுதியாய் நிலைநிற்பதன் மூலம், “உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும்” இருக்கும்படி பவுல் கொடுத்த புத்திமதியை நாம் பொருத்துகிறவர்களாயிருப்போம். (1 கொரிந்தியர் 15:58) நீங்கள் எதிர்ப்படும் பிரச்னைகளை யெகோவா அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார். இதுபோன்ற பிரச்னைகளை எதிர்ப்பட்ட அநேகரை அவர் பலப்படுத்தியிருக்கிறார், உங்களையும் பலப்படுத்துவார். நீங்கள் கடவுள் மீது சார்ந்திருந்தால், அவர் உங்களை ஆதரிப்பார். ஏனென்றால் சங்கீதக்காரன் சொன்னார்: “கர்த்தர் [யெகோவா, NW) மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”—சங்கீதம் 55:22.
பேதுரு எழுதினார்: “கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.” (1 பேதுரு 3:16) கடவுளுடைய நீதியுள்ள சட்டங்கள் மற்றும் நியமங்களின் சம்பந்தமாக ஒத்திணங்கிப் போக நீங்கள் மறுக்கும் பட்சத்தில், உங்களுக்கு நல்மனச்சாட்சி இருக்கும். இது யெகோவாவிடமிருந்து வரும் உண்மையான ஆசீர்வாதமாகும். மேலுமாக, விசுவாசத்தில் பலவீனமுள்ளவர்களாய் இருக்கக்கூடிய கிறிஸ்தவ இளைஞருக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பீர்கள். (1 தீமோத்தேயு 4:15, 16) உங்களுடைய நடத்தை, விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய் இருக்க முயற்சி செய்யவும் இவ்விதமாக சோதனைகளைச் சகித்திருக்கவும் அவர்களை உற்சாகப்படுத்தக்கூடும்.
உங்கள் கிறிஸ்தவ நிலைநிற்கையை ஆரம்பத்தில் எதிர்ப்பவர்களுக்கும்கூட நீங்கள் உதவி செய்யக்கூடும். நம்பிக்கையை-ஏற்படுத்தும் இந்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்: “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும் இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.” (பிரசங்கி 11:6) உங்கள் உண்மையுள்ள செயல்களின் மூலமாக நல்ல விதைகளை நீங்கள் விதைப்பதால் என்ன நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை யார் அறிவார்?
நீங்கள் அறுவடை செய்யக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதம், யெகோவாவோடு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலைநிற்கையாகும். இறுதியாக, விசுவாசத்தில் உறுதியாய் இருப்பது நித்திய ஜீவனில் விளைவடையும். (யோவான் 17:3; யாக்கோபு 1:12 ஒப்பிடவும்.) ஒத்திணங்கிப் போவதால் கிடைக்கும் எந்த தற்காலிகமான இடை ஓய்வும் அந்தப் பரிசை இழப்பதற்கு தகுதியாக இருக்காது.
இந்தக் கட்டுரையின் அரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்த இளைஞனைப் பற்றி என்ன? ஆம், அவன் கடும் சோதனையைச் சகித்துக்கொண்டான். பள்ளி அசெம்பிளி முடிந்த பிறகு, அவன் சாதுரியமாக தன் நிலைநிற்கையை பற்றி ஆசிரியர்களுக்கு விளக்க முயற்சி செய்தான். அவனுடைய வார்த்தைகள் செவிசாய்க்கப்படாமலே போனபோதிலும், தான் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தினதை அறிந்திருப்பதால் வரும் மனநிறைவு அவனுக்குக் கிடைத்தது. (நீதிமொழிகள் 27:11) அவன் பள்ளி படிப்பை முடிக்கும் வரையாக தன் விசுவாசத்தைத் தொடர்ந்து தற்காத்துக்கொண்டான். பின்னர் அவன் ஒரு பயனியராக ஆனான். உங்களுடைய உண்மையுள்ள சகிப்புத்தன்மையும் அதே மகிழ்ச்சியான விளைவைக் கொண்டுவரட்டும். நீங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிரூபித்தால் அது அவ்வாறு இருக்கும். (w91 7/15)
[அடிக்குறிப்புகள்]
a இவைகளையும் மற்ற பைபிள் நியமங்களையும் பற்றிய கலந்தாலோசிப்புக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் புத்தகம் பார்க்கவும்.
[பக்கம் 22-ன் பெட்டி]
உதவி கிடைக்கிறது
◻ கடவுள் பயமுள்ள உங்கள் பெற்றோரின் ஞானத்துக்குச் செவிகொடுங்கள்.
◻ கிறிஸ்தவ சபையிலுள்ள ஆவிக்குரிய ஏற்பாடுகளை அனுகூலப்படுத்திக் கொள்ளுங்கள்.
◻ நியமிக்கப்பட்ட மூப்பர்களோடும் உங்களுக்கிருப்பதைப் போன்ற பிரச்னைகளையுடைவர்களாயிருந்த மற்றவர்களோடும் பேசுங்கள்.
◻ இதுபோன்ற இடையூறுகளை வெற்றிகரமாக சமாளித்துக்கொண்டிருக்கும் மற்ற இளம் கிறிஸ்தவர்களோடு பேசுங்கள்.