முழுக்காட்டுதல் நம்மை எவ்வாறு இரட்சிக்க முடியும்
“முழுக்காட்டுதல் . . . நம்மை இரட்சிக்கிறது.”—1 பேதுரு 3:21, The Emphatic Diaglott.
இரட்சிப்பை நாடித் தேடுவோர் பூர்த்திசெய்யவேண்டிய திட்டவட்டமான தேவைகளை யெகோவா குறிப்பிட்டுவைத்திருக்கிறார். அவர்கள் திருத்தமான அறிவைப் பெறவேண்டும், விசுவாசத்தைச் செயலில் காட்டவேண்டும், தங்கள் பாவங்களைவிட்டு மனந்திரும்பவேண்டும், மாற்றப்படவேண்டும், கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்யவேண்டும், விசுவாசிகளாக முழுக்காட்டுதலுக்குட்படவேண்டும். (யோவான் 3:16; 17:3; அப்போஸ்தலர் 3:19; 18:8) முழுக்காட்டப்பட வருகிறவர்கள், இயேசுவின் பலியின் ஆதாரத்தின்பேரில் தங்கள் பாவங்களைவிட்டுத் திரும்பி யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்களென்று யாவரறிய ஒப்புக்கொள்ளவேண்டும். மேலும் ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டப்படுதலும் தங்களை யெகோவாவின் சாட்சிகளாக அடையாளங்காட்டுகின்றனவெனவும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
2 விசுவாசத்தை யாவரறிய தெரிவிக்கும் இது உட்பட முழுக்காட்டுதலின் முழு ஏற்பாடும் இரட்சிப்புக்கு இன்றியமையாதது. (ரோமர் 10:10) அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு எழுதினபோது இது உறுதிப்படுத்தப்பட்டது: “முழுக்காட்டுதல் . . . நம்மை இரட்சிக்கிறது.” (1 பேதுரு 3:21, ED) இவ்வார்த்தைகளை நாம் திருத்தமாய் எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும்? சூழமைவு என்ன காட்டுகிறது?
முழுக்காட்டுதல் எவ்வாறு இரட்சிக்கிறது
3 உயிர்த்தெழுப்பப்பட்ட ஆவியாக இயேசு, காவலிலிருந்த பொல்லாத ஆவிகளுக்கு, யெகோவாவின் மகா நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய கட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும் பேய்களுக்குக் கண்டனத்தீர்ப்பு செய்தியைப் பிரசங்கித்தாரென பேதுரு குறிப்பிட்டுக் காட்டினான். “இந்த ஆவிகள் பூர்வத்தில், நோவா பேழையை ஆயத்தம்பண்ணின நாட்களிலே கடவுள் நீடிய பொறுமையோடு காத்திருந்தபோது,” மாம்ச உடல்களில் உருவெடுத்து பெண்களுடன் பாலுறவுகொண்டு கீழ்ப்படியாமல் போனவர்கள். “பேழையில் சிலர் மாத்திரம், எட்டுப்பேரே, [நோவா, அவனுடைய மனைவி, அவனுடைய குமாரர், மற்றும் அவர்களுடைய மனைவிகள்] பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.” பேதுரு மேலும் தொடர்ந்து கூறினதாவது: “அது ஒப்பனையாகக் குறிக்கும் ஞானஸ்நானமானது [முழுக்காட்டுதல்] இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் உங்களையும் இரட்சிக்கிறது. அது [அவசியமான வெறும்] மாம்ச அழுக்கை நீக்குவதல்ல, நல்மனச்சாட்சியைக் கடவுளினிடம் நாடி வேண்டிக்கொள்வதேயாம்”—1 பேதுரு 3:18-21, தி.மொ.; ஆதியாகமம் 6:1, 2; 2 பேதுரு 2:4; 2 கொரிந்தியர் 7:1.
4 “அது ஒப்பனையாகக் குறிக்கும்” முழுக்காட்டுதல் என்று தான் சொன்னபோது பேதுரு என்ன பொருள்கொண்டான்? விசுவாசத்தில் ஆதாரங்கொண்ட முழுக்காட்டுல் நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும் பாதுகாத்ததற்கு ஒத்திருக்கிறதெனவே பொருள்கொண்டான், இவர்கள், பேழைக்கு வெளியிலிருந்தவர்களை அழித்தப் பிரளயத் தண்ணீர்களினூடே பத்திரமாய்க் கொண்டுசெல்லப்பட்டனர். பேழையைக் கட்ட நோவாவுக்கு விசுவாசம் தேவைப்பட்டதுபோல், இயேசு கிறிஸ்துவின் முழுக்காட்டப்பட்ட சீஷரும் யெகோவாவின் சாட்சிகளுமாகும் எல்லாருக்கும், விசுவாசமற்ற இந்த உலகமும் அதன் கடவுளாகிய பிசாசான சாத்தானும் அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரும் துன்பங்களை எதிர்த்து நிற்க விசுவாசம் வேண்டும்.—எபிரெயர் 11:6, 7; 1 யோவான் 5:19.
5 நம்மை இரட்சிப்பது முழுக்காட்டுதல்தானே அல்ல. நாம் ‘மாம்ச அழுக்கை நீக்க’ வேண்டுமெனினும், அது மாத்திரமே நம்மை இரட்சிப்பதில்லை. அதைப் பார்க்கிலும், இரட்சிப்பு “இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால்” உண்டாகிறது. முழுக்காட்டப்பட வருபவர்கள், கடவுளுடைய குமாரன் பலிக்குரிய மரணத்தில் மரித்து உயிர்த்தெழுப்பப்பட்டதனால் மாத்திரமே இரட்சிப்பு கூடியதாயிருக்கிறதென விசுவாசம் கொண்டிருக்கவேண்டும். மேலும் உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க அதிகாரம் கொண்டிருக்கும் தங்கள் கர்த்தராக இயேசுவை அவர்கள் ஏற்கவும் வேண்டும். “அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது,” என்று பேதுரு சொன்னான்.—1 பேதுரு 3:22.
6 மேலும், “நல்மனச்சாட்சியைக் கடவுளினிடம் நாடி வேண்டிக்கொள்வ”தோடும் பேதுரு முழுக்காட்டுதலைச் சம்பந்தப்படுத்தினான். முழுக்காட்டப்பட வருபவன், தன் பாவங்களைக் குறித்து மனம்வருந்தி, தவறான போக்கிலிருந்து திரும்பி, இயேசு கிறிஸ்துவின்மூலம் ஜெபத்தில் யெகோவா தேவனுக்குத் தங்குதடையற்ற ஒப்புக்கொடுத்தலைச் செய்யவேண்டும். முழுக்காட்டப்பட்டவன், கடவுளுடைய தராதரங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து அந்த நல்மனச்சாட்சியைக் காத்துவந்தால் யெகோவாவின் கண்டனத் தீர்ப்பைக் கொண்டுவராத இரட்சிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்திருக்கிறான்.
முழுக்காட்டுதலுக்காகத் தகுதிபெறுதல்
7 சீஷர்களை முழுக்காட்டும்படி இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குக் கட்டளை கொடுத்தபோது, ஆயிரக்கணக்கில் அவிசுவாசிகளைத் தண்ணீர் தெளிப்புக்குட்படுத்தும்படி அவர்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் என்ன செய்திருக்கின்றனர்? இந்தியாவைக் குறித்து, ஜெஸூய்ட் ஃபிரான்ஸிஸ் ஸேவியர் 1545-ல் பின்வருமாறு எழுதினார்: “திருவாங்கூர் ராஜ்யத்தில் . . . ஒருசில மாதங்களில் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமான பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு நான் பாப்டிஸம் கொடுத்தேன். . . . நான் கிராமம் கிராமமாகச் சென்று அவர்களைக் கிறிஸ்தவர்களாக்கினேன்.” ‘கிறிஸ்தவர்களாக்குவதற்கு’ அது இயேசுவின் வழி அல்ல. முழுக்காட்டுதலுக்கு ஆட்கள் தகுதிபெறவேண்டும்.
8 அப்போஸ்தலர் காலத்துக்குப் பிற்பட்ட கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டிக்கொண்ட சிலருங்கூட, பாப்டிஸம் பெற முன்வருபவர்கள் கண்டிப்பான தேவைகளைப் பூர்த்திச் செய்யவேண்டுமென்று நம்பினார்கள். பாப்டிஸம் பெற வரும் இத்தகையோரைக் குறித்து, அப்போஸ்தலன் பவுலினுடையவையென தவறாகக் கூறப்பட்டுள்ள, பைபிள் சம்பந்தப்படாத ஏட்டுத் தொகுதிகள் சொல்வதாவது: “அவர்களுடைய நடத்தைப் பாங்குகளும் அவர்களுடைய வாழ்க்கையும் ஆராய்ந்தறியப்படட்டும். . . . அவர்கள் மணம் செய்திராவிடில், வேசித்தனம் செய்யாதிருக்க, ஆனால் சட்டப்பூர்வமான திருமணத்துக்குள் பிரவேசிக்கக் கற்றுக்கொள்ளட்டும். . . . ஒரு வேசி வந்தால், வேசித்தனவாழ்க்கையை அவள் விட்டுவிடட்டும், மற்றப்படி அவள் ஏற்க மறுத்துவிடப்படட்டும். விக்கிரகங்களைச் செய்யும் ஒருவன் வந்தால், அவன் தன் வேலையை விட்டுவிடட்டும், அல்லது அவன் ஏற்க மறுத்துவிடப்படட்டும். . . . பெயர்சொல்லப்படக்கூடாதப் பாவங்கள் செய்தக் குற்றமுடையவன், . . . மந்திரவாதி, மாயக்காரன், வான்கணிப்பாளன், வருவதுரைப்போன், மந்திரம் ஓதுபவன். . . . தாயத்துகளைச் செய்பவன், மந்திரத்தால் மயக்குபவன், நிமித்திகன், குறிசொல்பவன், கைரேகை பார்ப்பவன், . . . , இவர்கள் சிறிது காலம் நிரூபிக்கப்படட்டும் . . . இந்தப் பழக்கங்களை அவர்கள் விட்டுவிட்டால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாவிடில், அவர்கள் ஏற்க மறுத்துவிடப்படட்டும்.”
9 இப்பொழுது மேற்கோளாக எடுத்துக்கூறினதைப் போன்ற வேத எழுத்துக்களுக்குப் புறம்பானவற்றை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறதில்லை, ஆனால் மூப்பர்கள் நிச்சயமாகவே, முழுக்காட்டப்பட விரும்புவோருடன் கலந்தாராய்தலை நடத்துகிறார்கள். ஏன்? இந்த ஆட்கள் தெய்வீகத் தேவைகளைப் பூர்த்திச்செய்திருக்கும் விசுவாசிகள் எனவும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்தவர்களெனவும் நிச்சயப்படுத்திக் கொள்வதற்கேயாகும். (அப்போஸ்தலர் 4:4; 18:8; 2 தெசலோனிக்கேயர் 3:2) நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் கேள்விகளைக் கலந்தாராய்வது, ஒருவன் முழுக்காட்டப்படுவதற்குத் தகுதிபெற்றிருக்கிறானா என்பதைத் தீர்மானிக்க உதவிசெய்கிறது. சில குறிப்புகள் அவனுக்குத் தெளிவாயிராவிடில், அல்லது தெய்வீகத் தராதரங்களுக்குப் பொருந்தத் தன் வாழ்க்கையைக் கொண்டுவந்திராவிடில், மூப்பர்கள் ஆவிக்குரிய உதவியளிக்க விரும்புகின்றனர்.
10 தம்முடைய நோக்கங்களைப் பற்றிக் கற்றுக்கொள்ள நமக்கு உதவிசெய்ததில் கடவுளுடைய தயவை நாம் நன்றியோடு மதித்துணர்ந்தால், பவுல், சின்ன ஆசியாவிலிருந்த அந்தியோகியாவில் பிரசங்கித்த ஆட்களைப்போல் இருப்போம். யூதர்களின் எதிர்ப்பின் மத்தியிலும், “புறஜாதியார் அதைக் [கடவுளால் ஏற்கப்படும் வாய்ப்பைக் குறித்து] கேட்டுச் சந்தோஷப்பட்டு ஆண்டவர் [யெகோவாவின், NW] வார்த்தையை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட [சரியான மனச்சாய்வுகொண்ட, NW] வர்களனைவரும் நம்பினார்கள்.” (அப்போஸ்தலர் 13:48) அத்தகைய விசுவாசிகள் முழுக்காட்டப்பட்டனர்.
இளமையில் முழுக்காட்டப்படுதல்
11 ‘நித்திய ஜீவனுக்குச் சரியான மனச்சாய்வுகொள்பவர்களில்’ சில இளைஞரும் அடங்கியிருக்கின்றனர். சாமுவேலும் முழுக்காட்டுபவனான யோவானும் பிறப்பதற்கு முன்பே கடவுளுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தபோதிலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக ஒப்புக்கொடுத்தலைச் செய்ய முடியாது என்பதைக் கவனிக்கவேண்டும். (1 சாமுவேல் 1:11, 24.28; 2:11, 18, 19; லூக்கா 1:15, 66) ஆனால் நல்ல பைபிள் பயிற்றுவிப்பின் பலனாக, பல இளைஞர் முழுக்காட்டப்படக்கூடிய நிலைக்கு முன்னேறுகிறார்கள். பத்தொன்பதுக்குட்பட்ட வயதில் முழுக்காட்டப்பட்ட ஒரு மிஷனரி சகோதரி பின்வருமாறு எழுதினாள்: “என் சிருஷ்டிகர் இருப்பதை உணரும் அந்த வயதிலிருந்தே அவரைச் சேவிக்கும்படி நான் ஒப்புக்கொடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது, ஆனால் அவரையும் அவருடைய நோக்கங்களையும்பற்றி திருத்தமான அறிவு ஓரளவு பெற்றவுடன், அந்த உண்மையின் வெளிப்படையான சாட்சியமாக நான் முழுக்காட்டப்பட விரும்பினேன். எனினும், நான் செய்வதை அறிந்தேனோவென என் தாய் சந்தேகித்தார்கள். ஆகவே வேறு எவராவது முழுக்காட்டப்படுவதற்கு ஆயத்தமாகும்வரையில் நான் காத்திருக்கும்படி ஆலோசனைக் கூறினார்கள்.” முழுக்காட்டப்பட விரும்பின ஒரு பெண் கண்டுபிடிக்கப்பட்டாள். அந்தச் சகோதரி மேலும் தொடர்ந்து சொல்வதாவது: “சங்கத்தால் நியமிக்கப்பட்ட ஊழிய அறிவுரையாளர் . . . நான் எடுக்கவிருந்த படியின் கருத்தார்ந்தத் தன்மையைப்பற்றி என்னிடம் அன்புடன் பேசினபோதிலும் அந்நாட்களில் முழுக்காட்டப்பட வருவோருக்குத் தனிப்பட்ட போதனை வகுப்புகள் இல்லை. வைக்கப்பட்ட நிபந்தனைகள் எல்லாவற்றையும் நான் ஆவலோடு ஒப்புக்கொண்டேன், மே 1921-ல் ஒளிமிகுந்த ஒரு ஞாயிறு காலையில் [அந்தப் பெண்ணும்] நானும் முழுக்காட்டப்பட்டோம்.”
12 1914-ல் (அப்பொழுது உவாட்ச் டவர் சங்கத்தின் தலைவராயிருந்த) C. T. ரஸ்ஸல் ஒரு கடிதத்தைப் பெற்றார் அதில் ஓர் உடன் கிறிஸ்தவர், தன் 12-வயது மகனை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்யும்படி ஊக்கப்படுத்த வேண்டுமாவெனக் கேட்டார். அதற்கு ரஸ்ஸல் பதிலளித்ததாவது, “நான் உன் நிலையிலிருந்தால், கடவுளுக்கென்று ஒதுக்கிவைப்பதை [ஒப்புக்கொடுத்தலை] அவன்மேல் வற்புறுத்தமாட்டேன், ஆனால் கடவுளையும் அவருடைய கிருபையான நோக்கங்களையும் பற்றிய அறிவையடைந்துள்ள புத்திக்கூர்மையான எல்லா ஆட்களுக்கும் இருக்கும் ஒரே சரியான போக்காக அதை அவன் மனதுக்கு முன்னால் நான் வைத்துவருவேன். . . . கடவுளுக்கென்று ஒதுக்கிவைக்காமல் ஒருவரும் ஒருபோதும் நித்திய ஜீவனடையப்போவதில்லை . . . கடவுளுக்கென்று ஒதுக்கிவைப்பதால் உன் மகனுக்குத் தீங்குண்டாவதில்லை, ஆனால் வெகுவாய் உதவிசெய்யப்படலாம். . . . பத்து வயது பிள்ளை, நினைவிலும், வார்த்தையிலும் செயலிலும் கடவுளுக்கு முழுமையாய் ஒதுக்கிவைப்பதன் மதித்துணர்வுக்கு மிக முழுமையாயும் பூர்த்தியாயும் வர முடியாதென யார் சொல்ல முடியும்? பின் நோக்கிப் பார்க்கையில் கடவுளுக்கென்று என் முழு ஒதுக்கிவைப்பு சிறிது மேலான—பன்னிரண்டுக்கு மேற்பட்ட வயதில்—முதலாவதாகச் செய்யப்பட்டதை நான் காண முடிகிறது.”
13 ஜூலை 1, 1894-ன் ஜயன்ஸ் உவாட்ச் டவர் பின்வருமாறு கூறியது: “தங்கள் இருதயங்களைக் கடவுளுக்குக் கொடுத்து, நாள்தோறும் இயேசுவைப் பின்பற்றப் பிரயாசப்படுகிற அன்பான சிறுவர்களுக்கும் இளைஞருக்கும், உவாட்ச் டவர் அதன் வாழ்த்துதலை அனுப்புகிறது. இயேசுவை நேசிக்கும் மிகச் சிறுவரில் சிலர், அவரை நேசியாத அல்லது அவரைப் பிரியப்படுத்த முயற்சி செய்யாத மற்றச் சிறுவர் மத்தியில் இயேசுவுக்காக நிலைநிற்கை எடுக்க வெட்கப்படாதிருப்பதைப் பற்றி எங்களுக்குத் தெரியும்; இவர்கள் ராஜ்யத்தின் நற்செய்தியைச் சொல்லும் தங்கள் பள்ளித் தோழர்களால் சிரித்து ஏளனஞ்செய்யப்பட்டு விகற்பமாய் எண்ணப்படுகையிலும் தைரியமாயும் கடவுளுக்கு உண்மையுடனும் இருக்கிறார்கள். மேலும் இந்த உலகத்தையும் அதில் முன்னேறும் ஆவல்களையும் இன்பங்களையும் விட்டுவிட்ட சில இளைஞர், கர்த்தருக்குத் தங்கள் வாழ்க்கையை [ஒப்புக்கொடுத்திருக்கும்] மிக அதிக உண்மையுள்ளவர்களுக்குள் இருப்பதைக் காண்பதில் நாங்கள் மிக மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் காரியாலயத்தில் உதவிசெய்யும் சிலரும், வெற்றிகரமான கோல்போர்ட்டர்களாயுள்ள பலரும் இன்னும் வயதில் இளைஞராயுள்ளனர்.” நீங்கள் இன்னும் இளைஞராயிருப்பினும், யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்தலைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் கலந்துபேசலாமல்லவா?
பெற்றோர் வகிக்கும் பாகம்
14 முழுக்காட்டுதலுக்கு வழிநடத்துகிற பெற்றோரின் வழிநடத்துதலைப் பெறும் பிள்ளைகள் அனுபவித்து மகிழும் நன்மைகளைக் கவனியுங்கள். (எபேசியர் 6:4) ஆவிக்குரிய காரியங்களின்பேரில் சிந்தனைச் செலுத்துவது உலகப்பிரகாரமான கண்ணிகளையும் சிக்கல்களையும் தப்பிக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்கிறது. (1 யோவான் 2:15-17) ‘மாம்சத்திற்கென்று விதைப்பதிலிருந்து’ உண்டாகும் விளைவுகளின் கசப்பான அறுவடையை அவர்கள் அறுப்பதில்லை. (கலாத்தியர் 6:7, 8) தெய்வீக வாழ்க்கை நடத்தும்படி அவர்கள் கற்பிக்கப்பட்டிருப்பதனால், கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிப்படுத்திக் காட்டுகின்றனர். (கலாத்தியர் 5:22, 23) கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதனால், அவர்கள் அவரோடு நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்கின்றனர். “யெகோவாவில் நம்பிக்கை வை”க்க அவர்கள் கற்றிருப்பதனால், பரலோக ஞானத்தால் வழிநடத்தப்படுகிறார்கள் இனிமையும் சமாதானமுமான வழிகளில் நடக்கிறார்கள்.—நீதிமொழிகள் 3:5, 6, 13, 17, NW.
15 யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தல் இளைஞருக்கு அவ்வளவு அதிக நன்மைபயக்குவதால், கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியமைக்கத் தங்களால் கூடியதையெல்லாம் செய்யவேண்டும். தீமோத்தேயுவைப்போல், அவர்கள் ‘தாங்கள் கற்றுக்கொண்ட மற்றும் நம்பும்படி மெய்ப்பித்துக்காட்டப்பட்ட காரியங்களில் தொடர்ந்து நிலைத்திருக்கும்படி,’ இளைஞருக்குச் சிறுவயதுமுதல் வேத எழுத்துக்களைக் கற்பித்துவர முடியும். (2 தீமோத்தேயு 3:14, 15) தெய்வபக்தியுள்ள பெற்றோர், கடவுளுடன் தங்கள் சொந்த உறவு, அனுபவம், முதிர்ச்சியுடைய தீர்மானம் அளிக்கக்கூடியவை ஆகியவற்றைப்போன்ற அறிவைத் தங்கள் பிள்ளைகள் மனதில் ஆழமாய்ப் பதியவைப்பதன்மூலம், தங்கள் சொந்த முன்மாதிரியான வாழ்க்கையின் செல்வாக்கு அவர்களைச் சூழ்ந்திருக்கச் செய்ய முடியும். சரியானபடி செலுத்துகையில் இந்த முயற்சிகள் இளைஞரில் பலன்தராமல் போவதில்லை.—நீதிமொழிகள் 22:6.
16 யெகோவாவின் அமைப்பையும் சாத்தானின் அமைப்பையும் பிரிக்கும் எல்லைக்கோடு எவ்வளவு தெளிவாயிருக்கிறதென்று காண முன்மாதிரியாலும் கற்பிப்பதாலும் உங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யுங்கள். ஒருவகையிலும் இவ்வுலகத்துடன் இணங்கி உடன்பட முடியாதென்பதையும், கிறிஸ்தவர்கள் அதன் நயவஞ்சகமான காரியங்களையும், தெய்வபயமற்ற இன்பங்களையும், ஆவல்களையும், சகவாசங்களையும் முற்றிலும் விட்டுவிடவேண்டும் என்பதையும் அவர்களுக்குக் காண்பியுங்கள். (1 கொரிந்தியர் 15:33; 2 கொரிந்தியர் 4:2) உலகப்பிரகாரமான இன்பங்கள் எவ்வளவு வெறுமையானவையென்பதையும், யெகோவாவின் சாட்சிகளோடு ஒப்பிடுகையில் இவ்வுலகத்தின் ஜனங்கள் எவ்வளவு வஞ்சகமுள்ளோராய் இருக்கின்றனர் என்பதையும் உங்கள் மனப்பான்மையாலும் அதோடு உங்கள் போதகத்தாலும் முன்மாதிரியாலும் உங்கள் சிறுவர்கள் காணச் செய்யுங்கள். கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு உங்களை வழிநடத்தின முறையையும், துயரத்துக்கு வழிநடத்தும் பாதைகளில் வழிதவறிப்போவதிலிருந்து உங்களைக் காத்துவைத்ததையும், துன்ப மற்றும் துயர காலங்களில் தாங்கி ஆதரித்ததையும் அவர்களுக்கு விளக்கிக் கூறுங்கள். பெருமை, புகழ்பேராசை, காலத்தை வீண்போக்குதல், மற்றும் மடத்தனமான நடத்தை ஆகிய உலகப்பிரகாரமான பாதைகளில் ஓடிக்கொண்டிருக்க உங்கள் இளைஞர்களை அனுமதித்தால், அவர்கள் விசுவாசிகளாவார்களென்று எண்ணும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். இந்த உலகம் உங்கள் பிள்ளைகளைக் கண்ணியில் சிக்கவைப்பதற்கு முன்னால், அதன் தீய செல்வாக்குகளிலிருந்து அவர்களைத் தடுத்துக் காப்பாற்றி, தங்கள் பற்றாசைகளையும் நம்பிக்கைகளையும் யெகோவாவில் ஒருமுகப்படுத்தி ஊன்றவைக்கும்படி அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்.
முழுக்காட்டுதலுக்கு அப்பால் நோக்குதல்
17 இளைஞராயினும் முதியோராயினும் முழுக்காட்டப்பட்டவர் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராய் நிலைத்திருக்க விரும்புகிறார். அப்படியானால் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் திரும்பவும் ஆவிக்குரிய சீர்கேட்டை அனுபவிக்கின்றனர்? பற்பல காரணங்கள் உட்பட்டிருந்தாலும், ஒரு காரணம் முக்கியமாய்த் தோன்றுகிறது—ஒப்புக்கொடுத்தல் குறிக்கும் எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ளத் தவறுவதேயாகும். இது ஒரு வேலைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் காரியமல்ல. அது நம்மைச் சுறுசுறுப்பாய் வைக்கும் ஆனால் நம்மை ஆவிக்குரிய ஆட்களாக்காது. நாம் ஒரு வேலைக்கல்ல, ஓர் ஆளுக்கு—யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறோம். இது, வேலையைத் தொடர்ந்து செய்வதற்கு முன்னால் நாம் எடுக்கவேண்டிய கடமைக்கான ஒரு படியென நம் ஒப்புக்கொடுத்தலைக் கருதும் தவறைச் செய்வதைத் தவிர்க்க நமக்கு உதவிசெய்கிறது. ஒப்புக்கொடுத்தலைச் செய்வது, எப்பொழுதும் பாதுகாத்து தொடர்ந்து காப்பாற்றிவரவேண்டிய இன்றியமையாத ஓர் உறவுக்குள் பிரவேசிப்பதென கருதவேண்டும். இந்தக் காரியத்தில், இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரி நமக்கு இருக்கிறது. யெகோவாவுக்குத் தம்மை முன்வந்து அளிக்கையில் அவருடைய இருதயப்பூர்வ மனப்பான்மையைத் தீர்க்கதரிசன வார்த்தைகள் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றன: “இதோ வருகிறேன், . . . என் கடவுளே, உனது சித்தத்தைச் செய்வதே என் பிரியம், உமது பிரமாணம் என் உள்ளத்தில் [உட்புற பாகங்களில், NW] இருக்கிறது.”—சங்கீதம் 40:6-8, தி.மொ.; எபிரெயர் 10:5-10.
18 எவ்வாறு யெகோவாவின் சட்டம் இயேசுவின் “உட்புற பாகங்க”ளுக்குள் இருந்தன? நம்முடைய கடவுளாகிய யெகோவா ஒருவரே, வேறு எவருமில்லை என்று அவர் ஒரு யூத வேதப்பாரகனிடம் கூறினார், இவ்வாறு யெகோவாவின் ஈடற்ற உன்னத நிலையை அறிவுறுத்தினார். பின்பு இயேசு, கடவுளுடைய சட்டத்தின் இன்றியமையாத உட்பொருள் யெகோவாவை நம்முடைய முழு இருதயத்தோடும், பகுத்துணர்வோடும், பலத்தோடும் நேசிப்பதும், அதேசமயத்தில் நம்முடைய அயலானை நம்மைப்போல் நேசிப்பதுமேயென இயேசு காட்டினார். (மாற்கு 12:28-34) “உமது சித்தத்தைச் செய்வதே என் பிரியம்”, என்று இயேசு சொல்ல முடிந்ததற்கு இதுவே அடிப்படையான காரணம். மிகப் பெரிய சோதனைகளுக்கும் பாடுகளுக்கும் மத்தியிலும் அவர் தம்முடைய போக்கில் உண்மையுள்ளவராய் விடா உறுதியுடன் நிலைத்திருக்க முடிந்தது, இதை அவர் வெறுமென நல்ல வேலையாகக் கண்டதனால் அல்ல, ஆனால் யெகோவா தேவனுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருந்ததன் காரணமாகவேயாகும். இவ்வாறே நாமும் யெகோவாவின் ஈடற்ற உன்னத நிலையை ஒப்புக்கொண்டு பிளக்கமுடியாதப் பற்றுதலுடன் அவரை நேசித்தால், நம்முடைய ஒப்புக்கொடுத்தலின் மற்றும் முழுக்காட்டுதலின் வாக்குறுதியை நம் வாழ்க்கையில் விடாமல் கடைப்பிடிப்போம்.
19 நிச்சயமாகவே, கடவுளுடன் கொண்டுள்ள நம் உறவுக்கும் நாம் செய்யும் வேலைக்கும் இணைப்பு இருக்கிறது. ராஜ்ய-பிரசங்க வேலையைச் செய்வதால் நாம் யெகோவாவுக்கு நம் அன்பை வெளிப்படுத்திக் காட்டுகிறோம். இதன் சம்பந்தமாக, யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினரான காலஞ்சென்ற கிரான்ட் சூட்டர் ஒரு முறை பின்வருமாறு எழுதினார்: “யெகோவாவைச் சேவிக்கும் சிலாக்கியங்களையும் அவ்வாறு செய்யவேண்டிய பொறுப்பையும் பற்றி [பயணக் கண்காணி ஒருவர்] பேசுவதை நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், நான் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்ய விரும்பினேன் என்பதை உணர்ந்தேன். இவ்வாறு நான் யெகோவாவுக்கு என் தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலைச் செய்தேன், ஏறக்குறைய அதே சமயத்தில் என் குடும்பத்தின் மற்ற உறுப்பினரும் அவ்வாறு செய்தார்கள். அக்டோபர் 10, 1926-ல், சான்ஜோஸ், கலிஃபோர்னியாவில், நாங்கள் எல்லாரும் ஒன்றாக, தண்ணீர் முழுக்காட்டுக்கு உட்படுவதன்மூலம் யெகோவா தேவனுக்கு எங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினோம். . . . பாப்டிஸத்துக்குப் பின் . . . என் தகப்பன் பாப்டிஸத்தை மேற்பார்வையிட்ட மூப்பரிடம் பின்வருமாறு கூறினார்: ‘நீங்கள் புத்தகங்களுடன் வெளியில் செல்கிறீர்களல்லவா? நாங்களுங்கூட, இப்பொழுது அந்த வேலையைச் செய்ய விரும்புகிறோம்.’ அவ்வாறு எங்கள் குடும்பம் வெளி ஊழியஞ்செய்ய தொடங்கினது.” இன்று, தகுதிபெற்ற ஆட்கள், முழுக்காட்டப்படுவதற்கு முன்பேயும் வெளி ஊழியத்தில் கருத்துள்ள பங்குகொள்ளத் தொடங்குகின்றனர்.
முழுக்காட்டுதல் நம்மை இரட்சிக்க முடியும்
20 நம்முடைய செயல்களால், நாம் “யெகோவாவுக்கு உரியவர்கள்” என்று நாம் காட்ட முடியும். அவருடைய ஒப்புக்கொடுத்த அடிமைகளாக உண்மையுடன் உழைப்பதில் இரட்சிப்பு சார்ந்திருக்கிறது! (ரோமர் 6:20-23; 14:7, 8) பூர்வ காலங்களில், அடிமைகள் பெரும்பாலும் நெற்றியில் அடையாளம் போடப்பட்டனர். மாதிரி முன்குறித்த ‘சணல்நூல் அங்கிதரித்த மனிதனான’—இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர்—தாங்கள் இன்று செய்யும் பிரசங்க வேலையால், இந்த ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப் பிழைத்திருக்கப்போகிறவர்களுக்கு ‘அடையாளம்’ போடுகிறார்கள். இந்த வேலையில், அபிஷேகஞ் செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள் கூட்டாளிகளான “மற்றச் செம்மறியாடுகள்” உதவிசெய்கின்றனர். (எசேக்கியேல் 9:1-7; யோவான் 10:16, NW) இந்த “அடையாளம்” என்ன? நாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள், மேலும் கிறிஸ்துவைப்போன்ற சுபாவத்தையுடைய இயேசுவின் முழுக்காட்டப்பட்ட சீஷர்கள் என்பதற்கு அத்தாட்சியாகும்.
21 நாம் இந்த “அடையாளத்தைக்” கொண்டிருப்பதும் அதை இழக்காமல் காத்துவைத்திருப்பதும் இப்பொழுது முக்கியமாய் இன்றியமையாதது, ஏனெனில் நாம் “முடிவு காலத்”துக்குள் மிக நெருங்க உட்சென்றுவிட்டோம். (தானியேல் 12:4) இரட்சிக்கப்பட நாம் நம்முடைய தற்போதைய வாழ்க்கையின் அல்லது இந்த ஒழுங்குமுறையின் “முடிவுபரியந்தம் நிலைநிற்க” வேண்டும் (மத்தேயு 24:13) இவ்வாறு நாம் யெகோவாவின் சாட்சிகளாக உண்மையுடன் நிலைத்திருந்தால் மாத்திரமே முழுக்காட்டுதல் நம்மை இரட்சிக்கும். (w89 1⁄15)
விமர்சனக் கேள்விகள்
◻ இரட்சிக்கப்பட நாம் பூர்த்திசெய்யவேண்டிய தேவை என்ன?
◻ முழுக்காட்டப்பட விரும்புவோருடன் மூப்பர்கள் கலந்துபேசுதல்களை நடத்துவதேன்?
◻ முழுக்காட்டுதலுக்கு வழிநடத்தும் ஆவிக்குரிய வழிநடத்துதலைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்க பெற்றோர் என்ன செய்யலாம்?
◻ ஒரு வேலைக்கே நாம் ஒப்புக்கொடுத்தலைச் செய்கிறோமா?
◻ முழுக்காட்டுதல் நம்மை எவ்வாறு இரட்சிக்க முடியும்?
[கேள்விகள்]
1, 2. ஒருவர் தண்ணீர் முழுக்காட்டுக்கு உட்படுவதற்கு முன்னால் என்ன தேவைப்படுகிறது?
3. 1 பேதுரு 3:18-21-ல் உள்ளதை உங்கள் சொந்த வார்த்தைகளில் எவ்வாறு சுருக்கிக் கூறுவீர்கள்?
4. “அது ஒப்பனையாகக் குறிக்கும்,” என்று பேதுரு சொன்னபோது எதைக் குறிப்பிட்டான்?
5. எவ்வாறு “இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால்” இரட்சிப்பு உண்டாகிறது?
6. நல்மனச்சாட்சியைப் பெற, முழுக்காட்டப்பட வருபவர் என்ன செய்திருக்கவேண்டும்?
7 பாப்டிஸத்தைக் குறித்து, கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் என்ன செய்திருக்கின்றனர்?
8. பவுலினுடைய ஏட்டுத்தொகுதிகள் என சொல்லிக்கொள்ளப்பட்டவற்றில், முழுக்காட்டப்படுவதற்கு வருவோரைக் குறித்து என்ன சொல்லியிருந்தது?
9. முழுக்காட்டப்பட விரும்பும் ஒருவருடன் சபை மூப்பர்கள் ஏன் கலந்துபேசுதல்களை நடத்துகின்றனர்?
10. நாம் முழுக்காட்டப்பட விரும்பினால் என்ன மனப்பான்மை நமக்கு இருக்கவேண்டும்?
11. இளைஞர் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல் செய்வது சரியா? நீங்கள் அவ்வாறு பதில் சொல்வதேன்?
12. வயதுவராத சிறுவர் ஒப்புக்கொடுத்தல் செய்வதைச் சகோதரர் ரஸ்ஸல் எவ்வாறு கருதினார்?
13. ஏறக்குறைய 94 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பத்திரிகையில் இளைஞருக்கு என்ன சொல்லியிருந்தது?
14. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தலைச் செய்யும் இளைஞர் என்ன நன்மைகளை அனுபவித்து மகிழ்கின்றனர்?
15. தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியமைக்கக் கிறிஸ்தவ பெற்றோர் என்ன செய்யலாம்?
16. உங்கள் முன்மாதிரியிலும் போதகத்திலும் உங்கள் பிள்ளைகள் என்ன காணவேண்டும்?
17. (எ) முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் ஆவிக்குரிய சீர்கேட்டை அனுபவிக்கின்றனர்? (பி) நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
18. கடவுளுடைய சட்டம் எவ்வாறு இயேசுவின் “உட்புற பாகங்களில்” இருந்தது?
19. யெகோவாவுடன் நாம் கொண்டிருக்கும் உறவுக்கும் நாம் செய்யும் வேலைக்கும் என்ன இணைப்பு இருக்கிறது?
20, 21. (எ) யெகோவாவின் அடிமைகள் எம்முறையில் ‘அடையாளம்’ போடப்படுகின்றனர்? (பி) இந்த ‘அடையாளம்’ என்ன, இதைக் கொண்டிருப்பது எதைக் குறிக்கிறது?
[பக்கம் 20-ன் படம்]
முழுக்காட்டுதல் எவ்வாறு நோவாவும் அவனுடைய குடும்பமும் பேழையில் பாதுகாக்கப்பட்டதற்கு ஒத்திருக்கிறதென உங்களுக்குத் தெரியுமா?
[பக்கம் 22-ன் படம்]
ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டப்படுதலும் இளைஞருக்கு நன்மை பயக்குகின்றன. எவ்வாறென உங்களுக்குத் தெரியுமா?