வகுப்புவாதமற்ற சமுதாயம் உண்மையில் சாத்தியமா?
வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர உறுதிமொழிக்கு கையொப்பமிட்டவர்களில் ஐக்கிய மாகாணங்களின் இரண்டாவது ஜனாதிபதியாகிய ஜான் ஆடம்ஸும் ஒருவர். அந்த உறுதிமொழியில் காணப்பட்ட பொன் மொழிகள்: “அனைவரும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கின்றனர். இது விளக்கம் தேவைப்படாத உண்மை என நாம் நம்புகிறோம்.” ஆனாலும் மனிதர்கள் உண்மையில் சமமானவர்கள்தானா என்பதில் ஜான் ஆடம்ஸின் அடிமனதில் சந்தேகங்கள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே அவர் இவ்வாறு எழுதினார்: “எல்லாம் வல்ல இறைவன் மனித இயல்பின் பாகமாக மனதிலும் உடலிலும் சமத்துவமின்மையை நிரந்தரமாக அமைத்துவிட்டதால், அதை சரிப்படுத்த எந்த திட்டத்தாலும் கொள்கையாலும் முடியாது.” இதற்கு மாறாக, எல்லாரும் சமம் என்ற தத்துவத்திற்கு இசைய வாழும் ஒரு சமுதாயத்தை பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஹெச். ஜி. வெல்ஸ் தம் மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்தார். இந்த சமத்துவம் நிலவ அடிப்படையில் மூன்று காரியங்கள் தேவை: பொதுவான ஆனால் கறைபடியாத தூய உலக மதம், அனைவருக்கும் ஒரே போதனை, ஆயுதமில்லாத உலகம்.
வெல்ஸ் மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்த அந்தச் சமத்துவ உலகை இன்று வரை யாரும் படைக்கவில்லை. உண்மையில், மனிதர்களுக்கும் சமத்துவத்திற்கும் வெகுதூரம். வகுப்புவாதம் இன்னும் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்றன. இந்த வகுப்பு வேறுபாடுகள் முழு மனித சமுதாயத்திற்கும் ஏதாவது நன்மைகளை செய்திருக்கின்றனவா? இல்லை. சமுதாயத்தில் காணப்படும் வகுப்புவாத முறைகள் பிரிவினைகளைத்தான் உண்டுபண்ணுகின்றன, இதனால் மிஞ்சியதெல்லாம் பொறாமையும் பகைமையும் மனவேதனையும் அதிகமான இரத்தஞ்சிந்துதலுமே. வெள்ளையனே உயர்ந்தவன் என்று ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வட அமெரிக்காவிலும் ஒரு காலத்தில் நிலவிய கருத்து வெள்ளையரல்லாதவருக்கு பெரும் துன்பங்களைக் கொண்டுவந்தது. (இப்போது டாஸ்மேனியாவாக இருக்கும்) வான் டைமென்ஸ் லான்டின் பழங்குடியினர் அடியோடு அழிக்கப்பட்டனர். ஐரோப்பாவில் யூதர்களை தாழ்ந்தவர்கள் என முத்திரை குத்தியதே நாசி படுகொலைக்குக் காரணமானது. உயர்குடி மக்களிடம் செல்வம் குவிந்து கிடந்ததும், கீழ் வர்க்கத்தினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இருந்துவந்த அதிருப்தியுமே 18-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சிக்கும் 20-ம் நூற்றாண்டு ரஷ்ய போல்ஷிவிக் புரட்சிக்கும் தீமூட்டின.
முற்கால ஞானி ஒருவர் இவ்வாறு எழுதினார்: ‘மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆளுகை செய்கிறான்.’ (பிரசங்கி 8:9) ஆளுகை செய்கிறவர்கள் தனி மனிதரோ ஒரு தொகுதியினரோ யாராக இருந்தாலும் இதுவே உண்மை. ஒரு ஜனத்தார் மற்றொருவருக்கு மேலாக தங்களை உயர்த்திக் கொள்ளும்போது அங்கே துன்பமும் துயரமுமே நிச்சயம் மிஞ்சும்.
கடவுளுக்கு முன்னால் அனைவரும் சமமே
பிறப்பிலேயே ஒரு குலத்தார் இன்னொருவரைவிட உயர்ந்திருக்கின்றனரா? கடவுளுடைய பார்வையில் அப்படி இல்லை. பைபிள் இவ்வாறு சொல்லுகிறது: “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்”தார். (அப்போஸ்தலர் 17:26) அதுமட்டுமல்லாமல் படைப்பாளர் ‘ஆளுநனை ஒருதலைச் சார்பாய் நடத்தமாட்டார்; ஏழைகளைவிடச் செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்; . . . அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள்.’ (யோபு 34:19, பொது மொழிபெயர்ப்பு) மனிதர் அனைவருமே உறவினர்தான், பிறப்பில் அனைவருமே கடவுளுக்கு முன்னால் சமம்.
ஒருவன் சாகும்போது மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்ற போலி பெருமைகள் அனைத்தும் மறைந்துவிடுவதை மறந்துவிடாதீர்கள். பண்டைய எகிப்தியர் அவ்வாறு நினைக்கவில்லை. ஒரு பார்வோன் மரிக்கையில் அவனுடைய கல்லறையில் விலையுயர்ந்த பொருட்களையும் சேர்த்து புதைத்தார்கள். மறுமையில் உயர்ந்த அந்தஸ்தில் அவன் வாழ்க்கையைத் தொடரும்போது அவற்றை அனுபவிப்பான் என்று நம்பினார்கள். அவன் அனுபவித்தானா? இல்லை. கல்லறையைக் கொள்ளையடித்தவர்களே இதனால் பணக்காரர்கள் ஆனார்கள். திருடரின் கைக்குத் தப்பிய பொருட்களை இன்று அருங்காட்சியகங்களில் காணலாம்.
பார்வோன் இறந்துவிட்டதால் அந்த விலையுயர்ந்த பொருட்கள் அவனுக்குப் பயன்படவில்லை. மரணத்தில் மேன்மக்களும் இல்லை, கீழ்மக்களும் இல்லை, செல்வமும் இல்லை, வறுமையும் இல்லை. பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து போகிறார்கள். ஆகிலும் கனம் பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.’ (சங்கீதம் 49:10, 12) நாம் அரசராயிருந்தாலும் அடிமையாயிருந்தாலும் ஆவியால் ஏவப்பட்ட இந்த வார்த்தைகள் நம் அனைவருக்கும் பொருந்துகின்றன: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை . . . நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:5, 10.
பிறப்பில் நாம் அனைவரும் கடவுளுக்கு முன்பாக சமமானவர்கள், இறப்பிலும் அப்படித்தான். இப்படியிருக்கையில் நம் குறுகிய கால வாழ்க்கையில் ஒரு ஜனத்தாரை மற்றொருவருக்கு மேலாக தூக்கி வைத்து பேசுவது எத்தனை பேதமை!
சமத்துவ சமுதாயம்—எவ்வாறு?
உயிரோடு வாழ்கிறவர்களின் சமுதாயத்தில் வகுப்புவாதத்திற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படாத காலம் வரும் என்று நம்பலாமா? நிச்சயம் நம்பலாம். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் இயேசு வாழ்ந்தபோது, இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. விசுவாசிக்கிற மனிதகுலத்தார் அனைவருக்காகவும் இயேசு தம்முடைய உயிரை கிரய பலியாக செலுத்தினார். ஆகவே ‘அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான்.’—யோவான் 3:16.
தம்மைப் பின்பற்றுகிற எவரும் சக விசுவாசிகளுக்கு மேலாக தங்களை உயர்த்திக்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தவே இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” (மத்தேயு 23:8-12) கடவுளுடைய பார்வையில், இயேசுவின் உண்மையான சீஷர்கள் அனைவரும் மெய் மதத்தில் சரிசமமானவர்கள்.
ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தங்களை சரிசமமானவர்களாக கருதினார்களா? இயேசுவின் போதனைகளைப் புரிந்துகொண்டவர்கள் அவ்வாறே கருதினார்கள். அவர்கள் விசுவாசத்தில் தங்களை சரிசமானமாய் கருதினார்கள், ஒருவரையொருவர் ‘சகோதரன்’ என்று அழைத்துக்கொள்வதன் மூலம் இதை வெளிக்காட்டினார்கள். (பிலேமோன் 1, 7, 20) எவருமே மற்றவர்களைவிட தங்களை மேம்பட்டவராக கருதுவதற்கு இடமளிக்கப்படவில்லை. உதாரணமாக, பேதுரு தன்னுடைய இரண்டாவது நிருபத்தில் தன்னைப் பற்றி எத்தனை மனத்தாழ்மையுடன் குறிப்பிட்டார் என்பதை கவனியுங்கள்: “எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு.” (2 பேதுரு 1:1) இயேசுவிடமிருந்து பேதுரு நேரடியாக போதனைகளைப் பெற்றவர். அப்போஸ்தலனாக மிகவும் பொறுப்புள்ள ஸ்தானத்தை வகித்தார். இருந்தபோதிலும், அவர் தன்னை ஒரு ஊழியக்காரனாக கருதினார், விசுவாசத்தைப் பொறுத்தவரை அனைத்து கிறிஸ்தவர்களும் தன்னைப் போலவே அதே பாக்கியத்தைப் பெற்றவர்கள் என்று கருதினார்.
கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில், இஸ்ரவேல் ஜனத்தை கடவுள் தம்முடைய விசேஷித்த ஜனமாக தேர்ந்தெடுத்ததால் இந்த சமத்துவ நியமம் அடிபட்டுப் போவதாக சிலர் குறைசொல்லலாம். (யாத்திராகமம் 19:5, 6) இனப் பெருமைக்கு உதாரணமாக இதையே சுட்டிக்காட்டலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ஆபிரகாமின் சந்ததியாராக இருந்ததால் இஸ்ரவேலர் கடவுளோடு ஒரு விசேஷித்த உறவை அனுபவித்ததும் தெய்வீக வெளிப்படுத்துதல்களுக்கு வழியாக அவர்கள் பயன்படுத்தப்பட்டதும் உண்மைதான். (ரோமர் 3:1, 2) ஆனால் இவர்களை பீடத்தில் தூக்கி வைக்க வேண்டும் என்பது இதன் நோக்கமல்ல. “சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” பொருட்டே அவர் இவ்வாறு செய்தார்.—ஆதியாகமம் 22:18; கலாத்தியர் 3:8.
முடிவில் பெரும்பாலான இஸ்ரவேலர் தங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமின் விசுவாசத்தைப் பின்பற்றாமல் போனார்கள். அவர்கள் உண்மையற்றவர்களாக ஆனார்கள், இயேசுவை மேசியாவாக ஏற்காமல் புறக்கணித்தார்கள். அதன் காரணமாக, கடவுள் அவர்களை ஒதுக்கிவிட்டார். (மத்தேயு 21:43) ஆனால் மனிதவர்க்கம் முழுவதிலும் தாழ்மையுள்ள மக்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்கள் கிடைக்காமல் போகாது. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டது. பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்களின் அமைப்பு ‘தேவனுடைய இஸ்ரவேல்’ என்றழைக்கப்பட்டது, அதுவே கடவுளுடைய ஆசீர்வாதங்களை பெறுவதற்குரிய வழியாக நிரூபித்தது.—கலாத்தியர் 6:16.
சமத்துவத்தைக் கற்பிப்பது அந்தச் சபையிலிருந்த சிலருக்கு தேவைப்பட்டது. உதாரணமாக, ஏழ்மையாக இருந்தவர்களைவிட பணக்கார கிறிஸ்தவர்களை அதிக மதிப்பு மரியாதையோடு நடத்தியவர்களுக்கு சீஷனாகிய யாக்கோபு புத்திமதி கூறினார். (யாக்கோபு 2:1-4) அது தவறு. புறஜாதி கிறிஸ்தவர்கள் எந்த விதத்திலும் யூத கிறிஸ்தவர்களைவிட தாழ்ந்தவர்கள் அல்ல, கிறிஸ்தவ பெண்கள் ஆண்களைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்று அப்போஸ்தலன் பவுல் காண்பித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.”—கலாத்தியர் 3:26-28.
இன்று வகுப்புவாதமற்ற ஜனம்
யெகோவாவின் சாட்சிகள் இன்று வேதாகமத்திலுள்ள நியமங்களுக்கு இசைய வாழ முயற்சி செய்கிறார்கள். கடவுளுடைய பார்வையில் இந்தச் சமுதாய வகுப்புவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே அவர்களுக்கு மத்தியில் குருமார்/பாமரர் என்ற பாகுபாடு கிடையாது. நிறத்தின் அல்லது பணத்தின் அடிப்படையில் அவர்கள் பிரிந்திருப்பதில்லை. அவர்களில் சிலர் பணக்காரர்களாக இருந்தாலும் “ஜீவனத்தின் பெருமை”யிலேயே குறியாக இருப்பதில்லை. ஏனென்றால் இப்படிப்பட்ட காரியங்கள் நிலையற்றவை என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (1 யோவான் 2:15-17) இதற்கு மாறாக, சர்வலோக உன்னத பேரரசராகிய யெகோவா தேவனை வணங்குவதில் இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்களாய் இருக்கிறார்கள்.
ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை சகமனிதருக்குப் பிரசங்கிக்கும் வேலையில் பங்கு கொள்வதற்கு இருக்கும் பொறுப்பை அவர்கள் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இயேசுவைப் போலவே, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களையும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் அவர்களுடைய வீடுகளில் சந்தித்து கடவுளுடைய வார்த்தையை அவர்களுக்கு போதிக்க முன்வருவதன் மூலம் அவர்களை மதிப்புடன் நடத்துகிறார்கள். வாழ்க்கையில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் சமுதாயத்தால் மேல் மட்டத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படுகிறவர்களோடு சேர்ந்து ஒன்றாக வேலை செய்கிறார்கள். அங்கே ஆன்மீக குணங்களே அதிக முக்கியத்துவம் உடையவையாய் இருக்கின்றன, சமுதாய வகுப்புவாதம் அல்ல. முதல் நூற்றாண்டில் இருந்தது போலவே அனைவரும் விசுவாசத்தில் சரிசமமான சகோதர சகோதரிகள்.
சமத்துவம் பல்வகைமைக்கு இடமளிக்கிறது
சமத்துவம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாவற்றிலும் ஒத்திருப்பதை குறிக்காது. இந்த கிறிஸ்தவ அமைப்பில் ஆண்கள் பெண்கள், பெரியோர் சிறியோர் ஆகிய அனைவரும் இருக்கின்றனர். இவர்கள் பல இனங்களையும், மொழிகளையும், தேசங்களையும், பொருளாதார பின்னணிகளையும் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மன ரீதியிலும் உடல் ரீதியிலும் வித்தியாசமான திறமைகள் உண்டு. ஆனால் இந்த வித்தியாசங்கள் சிலரை உயர்ந்தவர்களாகவும் சிலரை தாழ்ந்தவர்களாகவும் ஆக்குவதில்லை. மாறாக இந்த வித்தியாசங்கள் மகிழ்வளிக்கும் பல்வகைமைக்கு வழிசெய்கின்றன. தங்களிடம் உள்ள திறமைகளை கடவுளிடமிருந்து பெற்ற பரிசுகளாக கருதுவதால் தங்களை உயர்த்திக்கொள்வதற்கு அவை காரணமாயிருக்க முடியாது என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்றாமல் மனிதர் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள முயற்சி செய்ததால் வந்த விளைவுதான் இந்த வகுப்புவாத பிரிவினைகள். சீக்கிரத்தில் கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியை நித்தம் ஆட்சிசெய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும், அப்பொழுது காலா காலமாக துயரத்தை உண்டுபண்ணிய மற்றெல்லா காரியங்களோடுகூட மனிதன் தோற்றுவித்த வகுப்பு வேறுபாடுகள் துடைத்தழிக்கப்படும். அப்பொழுது, உண்மையான கருத்தில், ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்’ கொள்வார்கள். (சங்கீதம் 37:11) தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள்போல் காட்டி பெருமைப்படுவதற்கு எந்த விஷயங்களும் இனி இருக்காது. மனிதனின் உலகளாவிய சகோதரத்துவத்தைக் கூறுபோடும் சமுதாய வகுப்புவாதங்கள் இனி இருக்கவே இருக்காது.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
படைப்பாளர் ‘ஏழைகளைவிடச் செல்வரை உயர்வாய்க் கருதமாட்டார்; அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகளே.’—யோபு 34:19.
[பக்கம் 6-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் அயலாரை மதிப்பு மரியாதையுடன் நடத்துகிறார்கள்
[பக்கம் 7-ன் படங்கள்]
மெய்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆன்மீக குணங்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை