தேவபக்தியுள்ள மக்களுக்கு மீட்பு சமீபம்!
“தேவபக்தியுள்ள மக்களைச் சோதனையிலிருந்து மீட்கவும், ஆனால் அநீதியான மக்களை அழிவுக்காக நியாயத்தீர்ப்பு நாளுக்கென்று வைக்கவும் யெகோவா அறிந்திருக்கிறார்.”—2 பேதுரு 2:9, NW.
1. (எ) நம்முடைய நாளில் மனிதவர்க்கம் எதிர்ப்படும் துயர்தரும் நிலைமைகள் என்ன? (பி) இது சம்பந்தமாக நாம் என்ன கேள்விகளை சிந்திக்கப்போகிறோம்?
மனிதவர்க்கம் முழுவதற்குமே வாழ்க்கைப் பிரச்னை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் பொருள் வளம் மிகுந்திருக்கும் இடங்களில் வாழ்ந்தாலுஞ்சரி, அல்லது அவை குறைவுபடும் இடங்களில் வாழ்ந்தாலுஞ்சரி, இந்நிலை உண்மையாயிருக்கிறது. பாதுகாப்பின்மை எல்லா இடங்களிலுமே இருக்கிறது. நிலையற்ற பொருளாதார நிலைமைகள் கவலைக்கொள்வதற்குப் போதாது என்பதுபோல், இந்தப் பூமிக் கோளத்தில் அனைத்து உயிர்வாழ்வையும் கடுமையான சுற்றுப்புறச்சூழல் பிரச்னைகள் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. நோய் பேரளவில் பரவிவருகிறது. தொத்து நோய்கள், இருதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வாதை ஏராளமானவர்களின் உயிரைப் பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன. ஒழுக்கக்கேடு மனித உணர்ச்சிகளையும் குடும்ப வாழ்க்கையையும் கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கிறது. இவை அனைத்தையும் தவிர, உலகம் வன்முறையினால் நிறைந்திருக்கிறது. மனித சமுதாயம் எதிர்ப்படும் காரியத்தைப் பார்க்கும்போது, நாம் உண்மைமனதுடன் பின்வருமாறு கேட்கிறோம்: மீட்பு சீக்கிரத்தில் இருக்கிறது என்று எதிர்பார்ப்பதற்கு நல்ல ஆதாரம் இருக்கிறதா? அப்படி இருக்கிறது என்றால், அது எப்படி வரும், யாருக்கு வரும்?—ஆபகூக் 1:2; 2:1–3-ஐ ஒப்பிடவும்.
2 நம்முடைய நாளில் நடைபெறும் காரியம் மனித சரித்திரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கக் காலங்களை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. அந்தச் சமயங்களில் கடவுள் அளித்த மீட்புகளுக்கு நம் கவனத்தைத் திருப்புகிறவனாய் பேதுரு அப்போஸ்தலன் இந்த உறுதியான முடிவுக்கு வருகிறான்: “தேவபக்தியுள்ள மக்களைச் சோதனையிலிருந்து மீட்க . . . யெகோவா அறிந்திருக்கிறார்.” (2 பேதுரு 2:9, NW) 2 பேதுரு 2:4–10-லுள்ள அந்தக் கூற்றின் சந்தர்ப்ப சூழ்நிலையைக் கவனியுங்கள்:
2, 3. (எ) 2 பேதுரு 2:9-ல் சொல்லப்பட்டிருக்கும் காரியம் ஏன் நமக்கு உறுதியளிப்பதாயிருப்பதாக நாம் காண்கிறோம்? (பி) நமக்கு உற்சாகமளிப்பதற்கு ஆதாரமாக மீட்புக்குரிய என்ன குறிப்பான செயல்களுக்கு பைபிள் நம் கவனத்தைத் திருப்புகிறது?
3 “பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், டார்ட்டரஸிலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கென்று வைக்கப்பட்டவர்களாக அந்தகாரக் குழிகளுக்கு ஒப்புவித்தார்; பூர்வ உலகத்தைத் தப்பவிடாமல் நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா உட்பட எட்டுப் பேரைக் காப்பாற்றிப் பக்தியில்லாதவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துச் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, பிற்காலத்திலே பக்தியில்லாதவர்களாய் நடக்கப்போகிறவர்களுக்கு அவர்களைத் திருஷ்டாந்தமாக வைத்தார்; அக்கிரமக்காரரின் காமவிகார நடத்தையால் வெகுவாய் வருத்தப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் விடுவித்தார்; இந்த நீதிமான் அவர்கள் நடுவில் வாசம்பண்ணி, அவர்களுடைய அக்கிரமக் கிரியைகளைக் கண்டும் கேட்டும் நீதியுள்ள தன் மனதில் நாடோறும் பாதிக்கப்பட்டான். இவ்விதமாய் தேவபக்தியுள்ள மக்களைச் சோதனையிலிருந்து மீட்கவும், ஆனால் அநீதியான மக்களை அழிவுக்காக நியாயத்தீர்ப்பு நாளுக்கென்று வைக்கவும் யெகோவா அறிந்திருக்கிறார். விசேஷமாக அசுத்த இச்சையோடு மாம்சத்திற்கிசைய நடந்து அதிகாரத்தை அசட்டைப் பண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.” அந்த வசனங்கள் காண்பிப்பதுபோல், நோவாவின் நாட்களிலும் லோத்தின் காலத்திலும் நடந்தவை நமக்கு அர்த்தம் நிறைந்ததாயிருக்கின்றன.
நோவாவின் நாட்களில் நிலவிய ஆவி
4. நோவாவின் நாட்களில், பூமி சீரழிந்திருப்பதாகக் கடவுள் கருதியதற்குக் காரணம் என்ன? (சங்கீதம் 11:5)
4 நோவாவின் நாட்களில் பூமி கடவுளுடைய பார்வையில் கெட்டிருந்தது என்று ஆதியாகமம் 6-ம் அதிகாரத்திலுள்ள சரித்திரப் பதிவு காண்பிக்கிறது. ஏன்? வன்முறையே காரணம். இது குற்றச்செயல் சம்பந்தப்பட்ட வன்முறையை உட்படுத்திய தனி சம்பவங்கள் அல்ல. “பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது,” என்று ஆதியாகமம் 6:11 அறிக்கையிடுகிறது.
5. (எ) நோவாவின் நாட்களில் இருந்த வன்முறைக்கு மனிதவர்க்கத்தின் என்ன மனப்பான்மை காரணமாயிருந்தது? (பி) அவபக்தியைக் குறித்து ஏனோக்கு என்ன எச்சரிப்பு கொடுத்தான்?
5 அதற்குப் பின்னே இருந்தது என்ன? இரண்டு பேதுருவிலிருந்து மேற்கோளாகக் காண்பிக்கப்பட்ட வசனம் தேவபக்தியற்ற ஆட்களைக் குறிப்பிடுகிறது. ஆம், மானிட விவகாரங்களில் தேவபக்தியில்லாத ஓர் ஆவி ஊடுருவியிருந்தது. இது பொதுவில் தெய்வீகப் பிரமாணத்திற்கு அவமதிப்பை மட்டுமல்ல, ஆனால் கடவுளைத் தாமே எதிர்க்கும் ஒரு மனப்பான்மையை உட்படுத்தியது.a ஆனால் மனிதர் கடவுளையே எதிர்த்திடும்போது, அவர்கள் தங்களுடைய உடன் மனிதரிடம் தயவாய் நடந்துகொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? நோவா பிறப்பதற்கு முன்பே அவபக்தி அவ்வளவு அதிகமாக இருந்ததால் யெகோவா ஏனோக்கை அதன் விளைவை அறிவிக்கும்படிச் செய்தார். (யூதா 14, 15) அவர்கள் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதுதானே அவர்கள் மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படுவதை நிச்சயமாக்கியது.
6, 7. ஜலப்பிரளயத்திற்கு முன் ஏற்பட்ட மோசமான நிலைமைகளுக்குத் தேவதூதரை உட்படுத்தும் என்ன நிலை ஒரு முக்கிய அம்சமாக இருந்தது?
6 அந்த நாட்களில் இருந்த வன்முறைக்கு மற்றொரு செல்வாக்கும் காரணமாயிருந்தது. ஆதியாகமம் 6:1, 2 அதனிடமாகக் கவனத்தைத் திருப்புகிறது. அது சொல்வதாவது: “மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது, தேவ குமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” உண்மையான கடவுளின் அந்தத் தேவகுமாரர் யார்? வெறுமென மனிதர்கள் அல்லர். நூற்றாண்டுகளாக ஆண்கள் செளந்தரியமுள்ள பெண்களைப் பார்த்து அவர்களை விவாகம் செய்து வந்திருக்கிறார்கள். இந்தத் தேவ குமாரர் மாம்ச உடல் ஏற்று வந்த தேவ தூதர்கள். யூதா 6-ல் அவர்கள் “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள்” என்று விவரிக்கப்பட்டிருக்கின்றனர்.—1 பேதுரு 3:19, 20 ஒப்பிடவும்.
7 ஆண்களாக மாம்ச உருவெடுத்துவந்த மீமானிட சிருஷ்டிகள் மனித குமாரத்திகளோடு உறவு கொண்ட போது அதன் விளைவு என்னவாயிருந்தது? “அந்நாட்களிலே இராட்சதர்கள் (நெஃபிலிம், NW) பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.” ஆம், இயற்கைக்கு முரணான அந்த உறவில் பிறந்த பிள்ளைகள்தான் நெஃபிலிம் அல்லது இராட்சதர்கள், அதாவது தங்களுடைய மேம்பட்ட பலத்தோடு மற்றவர்களைக் கொடுமைப்படுத்தின பலவான்கள்.—ஆதியாகமம் 6:4.
8. பூமியிலிருந்த கெட்ட நிலைமைகளுக்குக் கடவுள் எவ்விதம் பிரதிபலித்தார்?
8 நிலைமை எந்தளவுக்கு மோசமடைந்தது? “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் (யெகோவா, தி.மொ.) கண்டார்.” இதற்குக் கடவுள் எவ்விதம் பிரதிபலித்தார்? “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் (யெகோவா, தி.மொ.) மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்திற்கு விசனமாயிருந்தது.” கடவுள் மனிதவர்க்கத்தை உண்டாக்கியதில் அவர் தவறிழைத்துவிட்டார் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாகத் தாம் மனிதரை உண்டாக்கியதற்குப் பின்பு, அவர்களுடைய நடத்தை அந்தளவுக்குப் பொல்லாததாகிவிட்டதால் அவர்களை அவர் அழிக்க வேண்டியிருந்ததைக் குறித்து மனம் வருந்தினார்.—ஆதியாகமம் 6:5–7.
மீட்புக்கு வழிநடத்திய செயல்
9. (எ) கடவுள் ஏன் நோவாவுடன் பிரியமாகத் தொடர்பு கொண்டார்? (பி) கடவுள் நோவாவுக்கு என்ன முன் தகவலைக் கொடுத்திருந்தார்?
9 நோவாவைக் குறித்ததில் அவனுக்கு “கர்த்தருடைய (யெகோவாவுடைய, தி.மொ.) கண்களில் கிருபை கிடைத்தது. . . . நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.” (ஆதியாகமம் 6:8, 9) எனவே தாம் ஓர் உலகளாவிய ஜலப்பிரளயத்தைக் கொண்டுவருவதாக யெகோவா நோவாவிடம் முன்னதாகவே அறிவித்து, ஒரு பேழையைக் கட்டும்படியாக அவனுக்குக் கட்டளையிட்டார். நோவாவும் அவனுடைய குடும்பமும் தவிர மனிதவர்க்கம் முழுவதும் பூமியின் பரப்பிலிருந்து நிர்மூலமாக்கப்படுவர். நோவா பேழைக்குள் கொண்டுசெல்லவிருந்த மிருகங்களின் ஒவ்வொரு அடிப்படை வகை விலங்குகளைத் தவிர மிருக சிருஷ்டிகளும் அழிக்கப்படும்.—ஆதியாகமம் 6:13, 14, 17.
10. (எ) பாதுகாப்பளிக்கும் நோக்கத்துடன் என்ன ஆயத்தங்கள் செய்யப்படவேண்டியதாயிருந்தது? அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தது? (பி) நோவா அந்த வேலை நியமிப்பை நிறைவேற்றிய விதத்தில் கவனிக்கத்தக்க காரியம் என்ன?
10 விஷயத்தை முன்னதாக அறிந்திருந்த இந்தக் காரியம்தானே நோவாவில் பெருத்த உத்தரவாதத்தை வைத்தது. பேழைக் கட்டப்படவேண்டும். அது ஒரு பிரமாண்டமான பெட்டியின் உருவில் அமைக்கப்படவேண்டியிருந்தது, கொள்ளளவில் ஏறக்குறைய 14,00,000 கன அடியாக இருக்கவேண்டும். நோவா அதில் உணவைச் சேகரித்து, அதற்குப் பின்பு பாதுகாக்கப்படுவதற்கென “சகல ஜாதிஜாதியான” மிருகங்களையும் பறவைகளையும் கூட்டிச்சேர்க்க வேண்டியதாயிருந்தது. அது பல வருடங்களை உட்படுத்தும் வேலையைக் கொண்ட ஒரு செயல்திட்டமாயிருந்தது. நோவா எவ்விதம் பிரதிபலித்தான்? அவன் “அப்படியே செய்தான். தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.”—ஆதியாகமம் 6:14–16; 19–22; எபிரெயர் 11:7.
11. தன்னுடைய சொந்த குடும்பத்தினரைக் குறித்ததில், நோவாவுக்கு என்ன முக்கியமான உத்தரவாதம் இருந்தது?
11 அந்த வேலையைச் செய்யும்போது, நோவா தன்னுடைய குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மையைக் கட்டுவிப்பதிலும் நேரம் செலவழிக்கவேண்டியதாயிருந்தது. அவர்களைச் சுற்றி வாழ்ந்த மக்களின் வன்முறையான வழிகளையும், எதிர்த்துச் செயல்படும் மனப்போக்கையும் பெற்றுவிடாதபடிக்குத் தற்காக்கப்படவேண்டிய தேவை இருந்தது. அவர்கள் வாழ்க்கையின் அனுதின விவகாரங்களில் அளவுக்கு மிஞ்சி ஆழ்ந்துவிடாதிருப்பது மிகவும் முக்கியமாயிருந்தது. கடவுள் அவர்களுக்கென்று ஒரு வேலையைக் கொடுத்திருந்தார், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அதைச் சுற்றி அமைத்திடுவது அவசியமாயிருந்தது. நோவாவின் குடும்பம் அவனுடைய போதனையை ஏற்று, அவனுடைய விசுவாசத்திலும் பங்கு கொண்டிருந்தனர் என்பது நமக்குத் தெரியும், ஏனென்றால் அவனுடைய மனைவி, மூன்று குமாரர்கள், குமாரர்களின் மனைவிகள்—மொத்தத்தில் எட்டு பேர்—வேத வசனங்களில் அவர்கள் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றவர்களாய்ப் பேசப்படுகிறார்கள்.—ஆதியாகமம் 6:18; 1 பேதுரு 3:20.
12. 2 பேதுரு 2:5-ல் காண்பிக்கப்பட்டிருப்பதற்கு ஏற்ப, நோவா உண்மையுடன் நிறைவேற்றிய பொறுப்பு என்ன?
12 நோவாவுக்கு இன்னொரு உத்தரவாதமும் இருந்தது—வரும் ஜலப்பிரளயத்தைக் குறித்து எச்சரிப்பதும், அது ஏன் வருகிறது என்பதைத் தெரியப்படுத்துவதும். அந்த உத்தரவாதத்தை அவன் உண்மையோடு நிறைவேற்றினான் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால் அவன் “நீதியைப் பிரசங்கித்தவன்” என்று கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.—2 பேதுரு 2:5.
13. கடவுள் கொடுத்த அந்த வேலைக்குக் கவனம் செலுத்திடுகையில் நோவா என்ன நிலைமைகளை எதிர்ப்பட்டான்?
13 அந்த உத்தரவாதத்தை அவன் நிறைவேற்றிய சூழ்நிலையைக் குறித்து சற்று எண்ணிப்பாருங்கள். உங்களை அவனுடைய இடத்தில் வைத்துப் பாருங்கள். நீங்கள் நோவாவாக அல்லது அவனுடைய குடும்பத்தின் ஓர் அங்கத்தினராக இருந்திருந்தால், நெஃபிலிம் மற்றும் தேவபக்தியில்லாத மனிதரின் வன்முறைச் செயல்களால், நீங்கள் சூழப்பட்டிருப்பீர்கள். கலகத்தனமான தேவதூதர்களின் செல்வாக்கு உங்களை நேரடியாகத் தாக்கியிருக்கும். அந்தப் பேழையைக் கட்டிக்கொண்டிருக்கும்போது, உங்களைக் கேலிசெய்திருப்பார்கள். ஜலப்பிரளயம் ஏற்படவிருப்பதைக் குறித்து நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் எச்சரித்துவர, மக்கள் தங்களுடைய அனுதின விவகாரங்களில் ஆழ்ந்துவிட்டிருப்பதால் “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்” என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.—மத்தேயு 24:39; லூக்கா 17:26, 27.
நோவாவின் அனுபவம் உங்களுக்கு எதைக் குறிக்கிறது?
14. நோவாவும் அவனுடைய குடும்பமும் எதிர்ப்பட்ட நிலைமையை நாம் புரிந்துகொள்வது ஏன் நமக்குக் கடினமாயில்லை?
14 அப்படிப்பட்ட ஒரு நிலைமையைக் கற்பனைசெய்து பார்ப்பது எமது வாசகரில் பலருக்குக் கடினமாயிராது. ஏன்? ஏனென்றால் நம்முடைய நாட்களின் நிலைமைகள் நோவாவின் நாளில் இருந்ததைப் போன்றுதான் இருக்கிறது. இதை எதிர்பார்த்திருக்கவேண்டும் என்று இயேசு கூறினார். இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவின்போது இருக்கும் தம்முடைய பிரசன்னத்தின் சமயம் குறித்து தாம் கூறிய அந்தப் பிரபலமான தீர்க்கதரிசனத்தில் இயேசு முன்னுரைத்ததாவது: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:37.
15, 16. (எ) நோவாவின் நாட்களில் இருந்ததுபோல, நம்முடைய நாளிலும் பூமி இன்று வன்முறையால் நிறைந்திருக்கிறது என்பது எவ்விதம் உண்மையாயிருக்கிறது? (பி) யெகோவாவின் ஊழியர்கள் குறிப்பாக என்னவிதமான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்?
15 அது அவ்விதமாக சம்பவித்திருக்கிறதா? இன்றைய உலகம் வன்முறையால் நிறைந்திருக்கிறதா? ஆம்! இந்த நூற்றாண்டில் பத்து கோடி மக்களுக்கும் மேலாகப் போர்களில் மரித்திருக்கின்றனர். எமது வாசகரில் சிலர் இதன் பாதிப்பை நேரடியாக அனுபவித்திருக்கின்றனர். இதற்கும் அதிகமானவர்கள் பணம் அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களை அடையும் எண்ணமுடைய குற்றவாளிகளால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். பள்ளியில் வன்முறைச் செயல்களின் பாதிப்புகளுக்கு இளம் வயதினர் ஆளாகியிருக்கின்றனர்.
16 என்றபோதிலும், யெகோவாவின் ஊழியர்கள் பொதுவில் காணப்படும் போர்களின் சேதங்கள் மற்றும் குற்றவாளிகளின் வன்முறைச் செயல்களைக் காட்டிலும் அதிகத்தை அனுபவித்திருக்கின்றனர். அவர்களும் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தின் பாகமல்லாதவர்களாயிருக்கிறார்கள், ஆனால் தேவபக்தியுள்ள மக்களாயிருக்கப் பிரயாசப்படுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:10–12) சில சமயங்களில் வன்முறைச் செயல், வேண்டுமென்றே தள்ளுதல் அல்லது கன்னத்தில் அறைதல் போன்ற வகையில் வெளிப்படுகிறது; மற்ற சமயங்களில் அது சொத்துக்கள் அழிக்கப்படுவதிலும், கடுமையாக அடிக்கப்படுவதிலும், கொல்லப்படுவதிலும் விளைவடைகிறது.—மத்தேயு 24:9.
17. தேவபக்தியில்லாமை இன்று அதிகரித்துக்கொண்டிருக்கிறதா? விளக்குங்கள்.
17 அப்படிப்பட்ட வன்முறைகளில் ஈடுபடும்போது, தேவபயமற்ற மனிதர் சில சமயங்களில் கடவுள் மீதான தங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிப்படையாக அறிக்கை செய்திருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஒரு பகுதியில் வாழ்ந்த காவல் துறையினர் இப்படியாக அறிக்கை செய்தனர்: “அரசாங்கம் எங்களுடையது. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால் நீங்கள் அவரிடம் சென்று, உங்களுக்கு உதவி செய்யும்படியாக அவரைக் கேளுங்கள்.” சிறைச்சாலைகளிலும், கான்சன்ட்ரேஷன் முகாம்களிலும் யெகோவாவின் சாட்சிகள் ஜெர்மனியில் சாக்ஸன்ஹுசனிலுள்ள பாரனொஸ்கி போன்ற மனிதரை எதிர்ப்படவேண்டியதாயிருந்திருக்கிறது. அவன் இப்படியாக நிந்தித்தான்: “நான் யெகோவாவோடு போரிட ஆரம்பித்திருக்கிறேன். யார் பலமுள்ளவர், நானா அல்லது யெகோவாவா என்பதை நாம் பார்ப்போம்.” அதற்குப் பின்பு சில காலத்துக்குள் பாரனொஸ்கி நோய்ப்பட்டு மரித்தான்; ஆனால் மற்றவர்கள் அதுபோன்ற மனநிலையைத் தொடர்ந்து வெளிக்காட்டி வருகின்றனர். கடவுளை எதிர்ப்பதில், துன்புறுத்துதல் என்ற ஒரு போரியக்கத்தில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டும் உள்ளடங்கியவர்களாயில்லை. அவற்றில் ஈடுபடுகிறவர்களின் இருதயத்தில் தேவ பயம் இல்லை என்பதற்கு அத்தாட்சி பகரும் காரியங்களை கடவுளுடைய ஊழியர்கள் உலகமுழுவதும் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள்.
18. பொல்லாத ஆவிகள் எந்தவிதத்தில் மனிதவர்க்கத்தின் கொந்தளிப்பு நிலைக்குத் தங்கள் பங்கை வகித்துவருகின்றன?
18 நோவாவின் காலத்தைப்போன்றிருக்கும் இந்நாட்களில் நாம் பொல்லாத ஆவிகளின் தலையிடுதலையும் கண்கூடாகக் காண்கிறோம். (வெளிப்படுத்துதல் 12:7–9) இந்தப் பிசாசுகள், நோவாவின் நாட்களில் மனிதர் உருவெடுத்து வந்து பெண்களை விவாகம் செய்த அதே தூதர்கள். ஜலப்பிரளயம் வந்தபோது அவர்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் அழிக்கப்பட்டார்கள், ஆனால் கீழ்ப்படியாத அந்தத் தேவதூதர்கள், அந்த ஆவிப்பகுதிக்கு வலுக்கட்டாயமாகத் திரும்பவேண்டியிருந்தது. யெகோவாவின் பரிசுத்த அமைப்பில் அவர்களுக்கு இனிமேலும் இடமில்லை, ஆனால் டார்ட்டரஸுக்கு, அதாவது தெய்வீக வெளிச்சத்திலிருந்து புறம்பாக்கப்பட்டிருந்த கடுமையான அந்தகார நிலைக்கு அனுப்பிவிடப்பட்டனர். (2 பேதுரு 2:4, 5) தாங்கள் இனிமேலும் மாம்ச உருவெடுக்க முடியாதபோதிலும், சாத்தானின்கீழ் செயல்படுகிறவர்களாய் அவர்கள் மனிதரோடு நெருங்கிய தொடர்பைத் தொடர்ந்து வைத்து, ஆண்கள், பெண்கள், பிள்ளைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க முயன்றுவந்திருக்கின்றனர். இவற்றில் சில மாய மந்திரம் சார்ந்த பழக்கங்கள் மூலமாகச் செய்யப்படுகின்றன. அவைகள் மனிதனின் நியாயமான யோசனைக்கு எதிரான வழிகளில் ஒருவரையொருவர் அழித்துக்கொள்ள மனிதவர்க்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஆனால் அதுமட்டுமல்ல.
19. (எ) பேய்கள் குறிப்பாக யாருக்கு எதிராகத் தங்கள் பகைமையை வெளிப்படுத்திவருகின்றன? (பி) பேய்கள் நம்மை என்ன செய்ய வற்புறுத்துகின்றன?
19 “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய” ஆட்களுக்கு எதிராகப் பேய்கள் யுத்தம்பண்ணுகின்றன என்று பைபிள் வெளிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 12:12, 17) யெகோவாவின் ஊழியர்களைத் துன்புறுத்துவதற்குப் பின்னால் அமைந்திருக்கும் ஏவுதலுக்கு அந்தப் பொல்லாத ஆவிகளே அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. (எபேசியர் 6:10–13) யெகோவா தேவனுக்கு உத்தமமாயிருப்பதை முறிப்பதற்கும், இயேசுவை மேசியானிய ராஜாவாகக் கொண்டிருக்கும் யெகோவாவின் ராஜ்யத்தைப் பிரஸ்தாபப்படுத்துவதை நிறுத்துவதற்கும் அவை உண்மையுள்ள மனிதரைக் கவர்ந்திழுக்கத் தங்களுக்குத் தெரிந்த எல்லா வழிவகைகளையும் உபயோகிக்கின்றன.
20. தங்களுடைய பிடியிலிருந்து விடுவித்துக்கொள்வதில் மக்களை இந்தப் பேய்கள் எவ்விதம் தடைச் செய்ய முயலுகின்றன? (யாக்கோபு 4:7)
20 தங்களை ஒடுக்கும் செல்வாக்கிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஏங்கிடும் மக்களைப் பேய்கள் தடை செய்ய முயலுகின்றன. பிரேசிலில் ஒரு சமயத்தில் ஆவியுலகத் தொடர்பைக் கொண்டிருந்த ஒருத்தி சாட்சிகள் தன்னுடைய வீட்டிற்கு வந்த போது கதவைத் திறக்கக்கூடாது என்று பேய்க் குரல்கள் உத்தரவிட்டதாக அறிக்கையிடுகிறாள்; ஆனால் அவள் கதவைத் திறந்தாள், சத்தியத்தைக் கற்றுக்கொண்டாள். சில பிராந்தியங்களில் பேய்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை நிறுத்துவதற்காக பேய்த்தனமான காரியங்களைக் கையாளுபவர்களை நேரடியாகவே பயன்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, சூரினாமிலுள்ள ஒரு கிராமத்தில் யெகோவாவின் சாட்சிகளை எதிர்த்திடும் ஆட்கள், தன்னுடைய மந்திரக் கோலை ஆட்களை நோக்கி நீட்டுவதிலேயே திடீர் மரணத்தை ஏற்படுத்துவதில் பிரபலமாயிருந்த ஒரு சூனியக்காரனைச் சந்தித்தனர். நடனக்காரரும் மேளம் கொட்டுபவர்களும் அடங்கிய தன்னுடைய அணியுடன் அந்தச் சூனியக்காரன் பேய் பிடித்தவனாய்ச் சாட்சிகளை எதிர்நோக்கி வந்தான். அவன் தன்னுடைய மந்திரங்களை ஓதி, தன் மந்திரக்கோலை அவர்களை நோக்கி நீட்டினான். சாட்சிகள் அப்படியே செத்துவிழும்படியாகவே அந்தக் கிராமவாசிகள் எதிர்பார்த்தனர், ஆனால் மயங்கிவிழுந்ததோ அந்தச் சூனியக்காரன். இக்கட்டான நிலைக்குள் தங்களைக் கண்ட அவனுடைய ஆதரவாளர்கள் அவனைத் தூக்கிச்செல்லவேண்டியிருந்தது.
21. நோவாவின் நாட்களைப்போலவே, நம்முடைய பிரசங்க வேலைக்குப் பெரும்பான்மையான மக்கள் எவ்விதம் பிரதிபலிக்கின்றனர்? ஏன்?
21 மாய மந்திரமும் சூனியமும் வெளிப்படையாகப் பின்பற்றப்படாத இடங்களிலுங்கூட இதுப்பற்றி கவலைப்படாது வாழ்க்கையின் அனுதின விவகாரங்களில் ஆழ்ந்துவிட்டிருக்கும் மக்களுக்குப் பிரசங்கிக்க முற்படுவது எப்படிப்பட்ட காரியம் என்பதை ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியும் அனுபவித்திருக்கின்றனர். நோவாவின் நாட்களில் இருந்ததுபோல, பெரும்பாலான மக்கள் ‘உணராதிருக்கிறார்கள்.’ (மத்தேயு 24:37–39) சிலர் நம்முடைய ஐக்கியத்தையும் சாதனைகளையும் வியந்து நோக்கலாம். ஆனால் நம்முடைய ஆவிக்குரிய கட்டும் வேலை—பல மணிநேரங்களை உட்படுத்தும் தனிப்பட்ட படிப்பு, கூட்டங்களுக்குத் தவறாமல் வருவது, மற்றும் வெளி ஊழியம்—இவையனைத்தும் அவர்களுக்குப் பைத்தியமாய்த் தெரிகிறது. அவர்களுடைய வாழ்க்கை இப்பொழுது அவர்கள் கொண்டிருக்கமுடிந்த பொருளுடைமைகளிலும் காமத்துக்குரிய இன்பங்களிலும் மையம்கொண்டிருப்பதால், அவர்கள் கடவுளுடைய வார்த்தையிலுள்ள வாக்குறுதிகளில் நமக்கு இருக்கும் நம்பிக்கையை ஏளனம்செய்கின்றனர்.
22, 23. யெகோவா தேவபக்தியுள்ள மக்களை சோதனையிலிருந்து விடுவிப்பார் என்பதற்கு நோவாவின் நாளைய சம்பவங்கள் எவ்விதம் உறுதியளிப்பதாயிருக்கிறது?
22 கடவுளை நேசிக்காத மக்களிடமிருந்து துன்பங்களுக்கு யெகோவாவின் உத்தம ஊழியர்கள் என்றுமாக கீழ்ப்படுத்தப்பட்டிருப்பார்களா? இல்லவே இல்லை! நோவாவின் நாட்களில் என்ன ஏற்பட்டது? கடவுளுடைய வழிநடத்துதலின் கீழ் நோவாவும் அவனுடைய குடும்பமும் கட்டிமுடிக்கப்பட்ட பேழைக்குள் பிரவேசித்தனர். பின்பு, தெய்வீக ஏற்பாட்டின்படி நியமிக்கப்பட்டச் சமயத்தில், “மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.” மலைகள் மூடப்படும்வரையிலும் பிரளயம் நீடித்தது. (ஆதியாகமம் 7:11, 17–20) தங்களுடைய வாசஸ்தலத்தை விட்டுவந்த அந்தத் தூதர்களும் தங்களுடைய மாம்ச உடல்களைக் கைவிடும் கட்டாயத்துக்குள்ளாகி, ஆவிப்பிரதேசத்திற்குத் திரும்பினர். நெஃபிலிமும் நோவாவின் எச்சரிப்பின்பேரில் செயல்பட மறுத்தவர்கள் உட்பட அந்தத் தேவபக்தியற்ற உலகின் மற்ற மக்களும் அழிக்கப்பட்டனர். மறுபட்சத்தில் நோவாவும் அவனுடைய மனைவியும் அவர்களுடைய மூன்று குமாரரும், குமாரரின் மனைவிகளும் காப்பற்றப்பட்டனர். இப்படியாக அநேக ஆண்டுகளாக உத்தமமாய்ச் சோதனைகளைச் சகித்துவந்த நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும் யெகோவா மீட்டார்.
23 இன்று தேவ பக்தியுள்ள ஆட்களை யெகோவா அதேவிதமாக மீட்டருளுவாரா? இதைக் குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் அதை வாக்களித்திருக்கிறார், அவர் பொய்சொல்லக்கூடாதவர்.—தீத்து 1:2; 2 பேதுரு 3:5–7. (w90 4/15)
[அடிக்குறிப்புகள்]
a “அனோமியா என்பது கடவுளுடைய சட்டங்களுக்கு அவமதிப்பை அல்லது எதிர்க்கும் மனப்பான்மையை குறிப்பதாக இருக்கிறது. அசிபியா [‘அவபக்தியுள்ளவர்கள்’ என்பதாக மொழிபெயர்க்கப்படும் வார்த்தையின் பெயர்ச் சொல் வடிவம்] கடவுளிடமாக அதே மனநிலையாக இருக்கிறது.”—பழைய மற்றும் புதிய ஏற்பாடு வார்த்தைகளுக்கு வைனின் விளக்க அகராதி, புத்தகம் 4, பக்கம் 170.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ தேவ பக்தியுள்ள மக்களைச் சோதனையிலிருந்து மீட்பது எப்படி என்று யெகோவா அறிந்திருக்கிறார் என்பதைப் பேதுரு எவ்விதம் காண்பித்தான்?
◻ நோவாவின் நாட்களில் வன்முறைக்கு உடந்தையாக இருந்த அம்சங்கள் என்ன?
◻ உலகளாவிய ஜலப்பிரளயம் ஏற்படவிருக்க, நோவாவுக்கு என்ன உத்தரவாதம் இருந்தது?
◻ நோவாவின் நாட்களுக்கும் நம்முடைய காலத்துக்குமிடையே என்ன இணைவுப் பொருத்தங்களை நாம் காண்கிறோம்?
[பக்கம் 14-ன் படம்]
பேழையைக் கட்டுவது அநேக ஆண்டு கடினமான வேலையை உட்படுத்தியது
[பக்கம் 15-ன் படம்]
நோவா தன்னுடைய குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மையை விருத்திசெய்வதற்கு நேரம் செலவழித்தான்