‘கறையற்றவர்களும், பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே இருங்கள்’
“நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.”—2 பேதுரு 3:14.
யெகோவா தேவன் பரிசுத்தராக இருக்கிறார். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஜெபத்தில் அவரைப் “பரிசுத்த பிதாவே” என்பதாக குறிப்பிட்டார். (யோவான் 17:1, 11) பரலோகத்திலுள்ள ஆவி சிருஷ்டிகள் “சேனைகளின் யெகோவா பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று அறிவிப்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. (ஏசாயா 6:3) ஆனால் பரிசுத்தம் என்பது என்ன?
2 “பரிசுத்தர்” “பரிசுத்தம்” என்ற பதங்கள் “பிரகாசமாயிருப்பது” “புதுமைக் குன்றாமல் அல்லது மாசுப்படாமல் இருப்பது” சரீரபிரகாரமாக “கறையற்று அல்லது சுத்தமாக” இருப்பது என்ற சாத்தியமான அடிப்படைக் கருத்துள்ள எபிரேய வார்த்தைகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. என்றபோதிலும் வேதாகமத்தில் இந்த வார்த்தைகள் முக்கியமாக ஒழுக்க அல்லது ஆவிக்குரிய கருத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மூல எபிரேய வார்த்தைப் பரிசுத்த தேவனாகிய யெகோவாவுக்காக பிரிந்து வேறாக இருப்பது, தனிப்பட்டத் தன்மையோடிருப்பது அல்லது குற்றமற்றிருப்பது என்ற பொருளையுடையதாகவும் இருக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுங்கூட “பரிசுத்தர்” “பரிசுத்தம்” என்பதாக மொழிப் பெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள், கடவுளுக்கென்று பிரிந்து வேறாக இருப்பதை அர்த்தப்படுத்துகின்றன. யெகோவாவின் ஒரு பண்பாக, பரிசுத்தத்தைக் குறிப்பிடவும், ஒரு தனி நபரின் தனிப்பட்ட நடத்தையில் தூய்மை அல்லது பரிபூரணத் தன்மையைக் குறிப்பிடவுங்கூட அவை பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே பரிசுத்தம் என்பது சுத்தத்தை, தூய்மையை, புனிதத் தன்மையை அர்த்தப்படுத்துகிறது.
பரிசுத்தத் தன்மை யெகோவாவின் ஜனங்களிடம் கேட்கப்படுகிறது
3 அப்படியென்றால், “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்ற பரலோக அறிவிப்பின் அர்த்தமென்ன? (வெளிப்பபடுத்தின விசேஷம் 4:8) ஏன், இது உச்ச உயர்நிலை அளவில் கடவுள் பரிசுத்தமாக, தூய்மையாக இருப்பதைக் குறித்துக் காட்டுகிறது. ஆகவே “மகா பரிசுத்தராகிய” யெகோவா சுத்தமான வணக்கத்துக்கு பாத்திரராக இருக்கிறார். ஆதலால் யெகோவா தேவன் இஸ்ரவேலரிடம் பின்வருமாறு சொல்ல தீர்க்கதரிசியாகிய மோசேக்குக் கட்டளையிட்டார்: “உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.”—லேவியராகமம் 19:1, 2.
4 அசுத்தமானதைச் செய்துகொண்டு யெகோவாவுக்கு, ஏற்றுக் கொள்ளப்படத்தக்க ஊழியத்தைச் செய்வதாக உரிமைப் பாராட்டும் எவரும் அவருடைய பார்வையில் அருவருப்பானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் தெய்வீக ஞானத்தோடும் பரிசுத்தமான முறையிலும் தானே, அவர் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் அவரை வணங்குவது கூடிய காரியமாக இருக்கிறது. (நீதிமொழிகள் 20:25; 21:27) அதன் காரணமாகவே, நாடு கடத்தப்பட்ட தம்முடைய ஜனம், பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு திரும்பிவர, வழியைத் திறந்து வைக்கப் போவதாக கடவுள் முன்னறிவித்தபோது, அவர் இவ்விதமாகச் சொன்னார்: “அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்து வருவதில்லை.” (ஏசாயா 35:8) பொ.ச.மு. 537-ல் திரும்பி வந்த மீதியானோர், “மகாப் பரிசுத்தரின்” மெய் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற தூய்மையான உள்ளெண்ணத்தோடு அவ்விதமாக வந்தார்கள். இஸ்ரவேலர் கடவுளுக்கு கீழ்ப்படிவதன் மூலம் பரிசுத்தராக தங்களை நிரூபித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அவருடைய நோக்குநிலையில் பரிசுத்தமாக, கறையற்றவர்களாக இருக்கத் தவறினர்.—யாக்கோபு 1:27 ஒப்பிடவும்.
5 ஆவிக்குரிய இஸ்ரவேலர் அல்லது அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுங்கூட யெகோவாவைப் பரிசுத்தத்தோடு வணங்க வேண்டும். (கலாத்தியர் 6:16) இதன் சம்பந்தமாக, அப்போஸ்தலனாகிய பவுல் உடன் கிறிஸ்தவர்களை, “அவர்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்கும்”படியாக புத்திச் சொன்னான். இதைச் செய்வதற்கு, இந்த விசுவாசிகள் அவர்கள் தெய்வீக சித்தத்தைச் செய்து கொண்டிருப்பதைக் குறித்து நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். ஏனென்றால் பவுல் மேலுமாக, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்ததறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” என்று சொன்னான்.—ரோமர் 12:1, 2.
6 அதிகரிப்பு இருந்து வரும் இந்தச் சமயத்தில் புதியவர்கள் அநேகர் யெகோவாவின் அமைப்புக்குள் திரளாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுங்கூட யெகோவாவைப் பரிசுத்தமாக வணங்குகிறார்கள். “மகா உபத்திரவத்தில்” தப்பிப் பிழைத்து கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்கில் பரதீஸிய பூமியின் மீது நித்திய ஜீவனை அனுபவிக்கும் எதிர்பார்ப்பில் அவர்கள் எவ்வளவாக களிகூறுகிறார்கள்! (மத்தேயு 24:21; லூக்கா 23:43) ஆனால் பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் பூமிக்குரிய எதிர்பார்ப்புகளையுடைய “திரளான கூட்டமாகிய ஜனங்களும்,” முடிவில்லா வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமாயின் அவர்கள் அசுத்தமான பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் அல்லது வேதப் பூர்வமான ஒழுக்கங்களுக்கும் போதனைகளுக்கும் நேர் எதிர்மாறானதாக இருக்கும் வேறு எதற்கும் எதிராகவும் எச்சரிக்கையாயிருப்பது அவசியமாகும்.—வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 14.
7 நம்முடைய காலத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாக எழுதினான்: “யெகோவாவுடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் [உலகப்பிரகாரமான அரசாங்கங்கள்] மடமட என்று அகன்றுபோம். பூதங்கள் [உலகப் பிரகாரமான மனநிலைகளும் வழிகளும்] வெந்து உருகிப்போம். யெகோவாவின் நாளின் “அக்கினி”யிலே “வானங்களையும்” “பூதங்களையும்” போல பூமியும் [கடவுளிடமிருந்து விலகிப் போய்விட்ட மனித சமுதாயம்] அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். ஆகவே பேதுரு மேலுமாக இவ்விதமாகச் சொன்னான்: “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவ பக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து பூதங்கள் எரிந்து உருகிப் போம்!” ஆம், யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் “பரிசுத்த நடக்கையில்” சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். பரிசுத்தத்தைக் காத்துக் கொள்பவர்கள், கடவுளுடைய நீதியுள்ள “புதிய வானங்கள் மற்றும் புதிய பூமி”யினுள்ளே பாதுகாப்பான ஒரு இடத்தைப் பெற எதிர்பார்த்திருக்கலாம். (2 பேதுரு 3:7, 10-13) என்ன ஆசீர்வாதமான எதிர்பார்ப்புகள்!
8 என்றபோதிலும் ஒரு கிறிஸ்தவன் கொஞ்ச காலம் யெகோவாவின் ஊழியத்தைச் சிறப்பாக செய்துவிட்டு பின்பு, அசுத்தமான பழக்கங்களை வளர்த்துக் கொண்டாலோ அல்லது பைபிள் கோட்பாடு அல்லது ஒழுக்கங்களுக்கு நேர் எதிராக சென்றுவிட்டாலோ என்ன? அப்பொழுது அவர் பரிசுத்தப் பாதையிலிருந்து விலகிச் சென்று விட்டிருக்கிறார் என்று அர்த்தமாகிறது. அவர் மெய்யான மனந்திரும்புதலை காண்பித்து சரியான பரிகார நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாக இருக்கும். பவுல், உடன் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களிடம் சொன்னது போலவே: “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாக்குதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்தக் கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) தன்னுடைய ஏறுமாறான போக்கைத் திருத்திக்கொள்ள வேண்டிய அவசியத்திலுள்ள ஒரு கிறிஸ்தவன் அன்புள்ள கண்காணிகளின் வேதப் பூர்வமான புத்திமதி நிச்சயமாகவே ஒரு ஆசீர்வாதமாக இருப்பதைக் காண்பான்.—நீதிமொழிகள் 28:13; யாக்கோபு 5:13-20.
9 நீதியுள்ள புதிய ஒழுங்கைப் பற்றி குறிப்பிட்டுப் பேசிய பிறகு, பேதுரு, இவ்விதமாகச் சொன்னான்: “பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும், பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் [யெகோவா தேவனின்] சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். (2 பேதுரு 3:14) இந்த வார்த்தைகள், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்குச் சொல்லப்பட்டன. ஆனால் நிச்சயமாகவே யெகோவாவின் சாட்சிகள் அனைவருமே ‘கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய் சமாதானத்தோடேயும்’ காணப்பட வேண்டும். ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும்?
“கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்”
10 கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய் காணப்படும்படி நாம் நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது. திரள் கூட்டத்தினர் “தங்கள் அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்”திருக்கிறார்கள். ஒரு சமயத்தில் இவர்கள் இந்தப் பாவம் நிறைந்த உலகத்தின் பாகமாக இருந்தார்கள். அவர்களுடைய அடையாள அங்கிகள் அதனால் கறைப்பட்டதாக, யெகோவாவின் பார்வையில் அசுத்தமானதாக இருந்தது. அவர்கள் எவ்விதமாக தங்களுடைய அங்கிகளை “ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்தில்” தோய்த்து வெளுத்தார்கள்? ‘இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது’ என்பதையும் இயேசுவே “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்பதையும் நம்புவதை காண்பிப்பதன் மூலமாக. (வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 14; எபிரேயர் 9:22; யோவான் 1:29, 36) நிபந்தனையின்றி கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதன் மூலமாகவும், முழுக்காட்டப்படுவதனாலும் இதைச் செய்திருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு ஒப்புக் கொடுத்தல் இயேசு கிறிஸ்துவின் மூலமாகச் செய்யப்பட வேண்டியதாக இருந்திருக்கிறது. சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தினால் கடவுள் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதும் அவருடைய பார்வையில் அவர்களை ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவர்களாக்குவதும் கூடிய காரியம் என்ற நம்பிக்கையோடு இது செய்யப்படுகிறது.
11 திரள் கூட்டத்தார் உலக ஆசையின் மூலமாக தங்களுடைய “அங்கிகளைக்” கறைப்படுத்தி இவ்விதமாக அவர்களுடைய கிறிஸ்தவ ஆளுமையையும் யெகோவாவால் அங்கீகரிக்கப்பட்ட சாட்சிகளாக அடையாளத்தையும் இழந்துவிடாதபடி அவற்றை வெள்ளையாக வைத்திருக்க வேண்டும். ஆம், எல்லா உண்மைக் கிறிஸ்தவர்களும் பிழையுள்ளவர்களாகிவிடாதபடி உலகப் பிரகாரமான வழிகளையும் செயல்களையும் மனநிலைகளையும் தவிர்க்கிறவர்களாக இருக்க வேண்டும். பாவமானது, யெகோவாவோடு நாம் கொண்டிருக்கும் உறவில் குறுக்கிடுவதன் காரணமாக, நம்முடைய பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படக்கூடிய ஒரு நிலையில் இருப்பதன் மூலமாக மாத்திரமே நாம் வரப்போகும் “யெகோவாவின் மகா நாளில்” “சமாதானத்தோடே” காணப்படக்கூடியவர்களாக இருப்போம். பொய்மதப் பழக்க வழக்கங்களினால் அல்லது உலகின் ஒழுக்கக்கேட்டினால் கறைப்பட்டவர்களாக நாம் இருக்கக்கூடாது.
12 கறையற்றவர்களாயும் பிழையில்லாதவர்களாயும் இருப்பது “கள்ளப் போதகர்களின்” நடத்தைக்கும் மனநிலைகளுக்கும் எதிர்மாறான நடத்தையையும் மனநிலைகளையும் கொண்டிருப்பதைத் தேவைப்படுத்துகிறது. கள்ளப் போதகர்களைக் குறித்து பேதுரு இவ்விதமாக எழுதினான்: “இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்கைகளுமாயிருந்து உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்.” (2 பேதுரு 2:1, 13) ஆம், சபையினுள்ளேயுங்கூட “ஒருநாள் வாழ்வை இன்பமென்றெ”ண்ணும் கள்ளப் போதகர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஒரு நாளில் மற்றவர்களுடைய ஆவிக்குரிய பிரயோஜனத்துக்காக எத்தனையோ காரியங்களை செய்வது கூடிய காரியமாக இருக்கும்போது, ஆவிக்குரிய தன்மையற்ற ஆட்கள், களியாட்டங்கள், மிதமிஞ்சிய உணவு மற்றும் பானம் உட்பட, தவறானதை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம்.” விவாக வரவேற்பு விழா போன்ற சமூக வைபவங்களை, காம உணர்ச்சிகளைத் தூண்டும் இசையைக் கேட்பதற்கும், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் நடனமாடுவதற்கும், பெருந்தீனிக்கும் மிதமிஞ்சி குடிப்பதற்குமான ஒரு சமயமாக மாற்றிவிட முயற்சிக்கலாம். இவை எதுவுமே யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் நடைபெற அனுமதிக்கப்படக்கூடாது.—ஏசாயா 5:11, 12; காவற்கோபுரம் ஏப்ரல் 15, 1984, பக்கங்கள் 16-22 பார்க்கவும்.
13 ஒரு சமூக கூட்டத்தில், விருந்தளிப்பவர், அங்கு நடைபெறும் காரியங்களுக்கு பொறுப்புள்ளவராக இருக்கிறார். நிகழ்ச்சி ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்புவதாக இருப்பதற்காக, சமாளிக்கக்கூடிய வகையில், கூட்டத்தின் அளவை கட்டுப்படுத்தி வைப்பதும் ஆரோக்கியமற்ற செல்வாக்கை உள்ளே கொண்டுவரக்கூடிய எவரையும் அழைக்காதிருப்பதும் ஞானமுள்ள காரியமாக இருக்கும். 2 தீமோத்தேயு 2:20-22-லுள்ள பவுலின் வார்த்தைகள் காண்பிக்கிறவிதமாகவே, சபையோடு கூட்டுறவுக் கொள்ளும் அனைவருமே கட்டாயமாக விரும்பத்தக்க நண்பர்களாக இருக்க மாட்டார்கள். ஆகவே நாவடக்கம் இல்லாதவர்கள் அல்லது உண்பதிலோ குடிப்பதிலோ கட்டுப்பாடில்லாதவர்கள் என்பதாக அறியப்பட்டிருக்கும் ஆட்களை அழைக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் விருந்தளிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்குக் கிடையாது. ‘நாம் புசித்தாலும் குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்றே செய்ய வேண்டும்’ என்பதை அவன் நினைவில் கொள்கிறான்.—1 கொரிந்தியர் 10:31.
14 நம்மோடு கூட்டுறவுக் கொள்ளும்போது, ஒரு சிலர் மாத்திரமே, ‘கறைகளும் இலச்சைகளுமாயிருந்து வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்களாக’ இருக்கிறார்கள். ஆனால் சபையிலுள்ள கண்காணிகளும் மற்றவர்களும் விழிப்புள்ளவர்களாயிருந்து, சபையினுள் பக்கவழியாய் நுழைந்து ஒழுக்கயீனத்தை அல்லது தவறான கோட்பாட்டை ஆதரிக்கக்கூடிய கள்ளப் போதகர்களை உறுதியாக விலக்கிவிட வேண்டும். (யூதா 3, 4) கடவுளின் நீதியான தராதரங்களை உறுதியாக பற்றிக் கொண்டிருப்பதன் மூலமாக மாத்திரமே, சபையைக் கறையில்லாமலும் பிழையில்லாமலும் வைத்திருப்பது சாத்தியமாக இருக்கும்.
“சமாதானத்தோடே” இருப்பதற்கு தேவைப்படுவது என்ன?
15 “சமாதானத்தோடே” காணப்படுவதற்கு யெகோவாவின் ஜனங்கள் அவரோடு சமாதானத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே நமக்கு இந்த நிலைநிற்கை அளிக்கப்பட்டிருக்கிறது. அவரைக் குறித்து பவுல் இவ்விதமாக எழுதினான்: “சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும் அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.” (கொலோசெயர் 1:19, 20) வினைமையான பாவங்கள் யெகோவாவோடு ஒரு நபர் கொண்டிருக்கும் உறவைப் பலவீனப்படுத்திவிடுகிறது. இதன் காரணமாக அவர் மனசாட்சி உறுத்தலுடனும் அமைதியை இழந்த நிலையிலும் இருக்கிறார். ஆனால் சமாதானமோ கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களின் உடைமையாக இருக்கிறது. (சங்கீதம் 38:3; ஏசாயா 48:18) அப்படியென்றால், வரப்போகும் யெகோவாவின் மகா நாளில் சமாதானத்தோடே காணப்படுவதற்கு, கழு மரத்தில் இயேசு சிந்தின இரத்தத்தின் மூலமாக, நம்முடைய பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படுவதை அனுமதிக்கும் நிலையில் நாம் இருக்க வேண்டும்.
16 யெகோவாவினுடைய மற்ற வணக்கத்தாரோடுங்கூட நாம் சமாதானமாயிருக்க வேண்டும். பவுல் இவ்விதமாகத் துரிதப்படுத்தினான்: “ஆனபடியால் சமாதானத்துக் கடுத்தவைகளையும் அந்நியோந்நிய பக்தி விருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.” சந்தர்ப்ப சூழ்நிலையை ஆராய்கையில், உணவு, பானம் அல்லது வேறு எதன் சம்பந்தமாகவும் உடன் விசுவாசிகளை இடறலடையச் செய்யாதபடிக்கு நாம் கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்பதைக் காண்பிக்கிறது. (ரோமர் 14:13-23) ஆனால் அதற்கு இன்னும் அதிகமிருக்கிறது. ஏனென்றால் பவுல் எபிரேய கிறிஸ்தவர்களிடம் இவ்விதமாகச் சொன்னான்: “நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.” (எபேசியர் 4:1-3) நிச்சயமாகவே சமாதானத்தைக் குலைத்துப் போடும் எல்லா வார்த்தைகளையும் செயல்களையும் தவிர்ப்பதன் மூலமாகவும், யெகோவாவின் அரசுரிமையின் ஆதரவாளர்களாக உறுதியாக நிற்பதன் மூலமாகவும் நாம் நம்முடைய ஐக்கியத்தைக் காண்பிக்க விரும்ப வேண்டும்.
17 ‘சமாதானத்தை நாடுவது’ நிச்சயமாகவே நம்முடைய செயல்களையும் நம்முடைய வார்த்தைகளையும் குறித்து எச்சரிக்கையாயிருப்பதைத் தேவைப்படுத்துகிறது. ஏனென்றால் அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்விதமாக எழுதினான்: “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக் காத்து, பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின் தொடரக் கடவன். யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ யெகோவாவுடைய முகம் விரோதமாயிருக்கிறது.” (1 பேதுரு 3:10-12; சங்கீதம் 34:12-16) அப்படியென்றால் சமாதானத்தோடே காணப்படுவதற்கு பல்வேறு வழிகளிலும் யெகோவாவின் உண்மைத்தவறாத ஊழியர்கள் தொடர்ந்து ‘சமாதானத்தை நாடு’கிறவர்களாக இருக்க வேண்டும்.
யெகோவாவின் உதவியை நம்பியிருங்கள்
18 யெகோவாவுடைய நாளில் “பூதங்கள்” அதாவது, உலகப் பிரகாரமான ஆவி அல்லது மனநிலைகளும் வழிகளும் “உருகிப்போம்” அல்லது அழிந்துபோம் என்பதாக பேதுரு குறிப்பிட்டான். (2 பேதுரு 3:7, 10) ஆனால் உலகப்பிரகாரமான வழிகளும் நடவடிக்கைகளும் அல்லது மனநிலைகளும் நமக்குக் கவர்ச்சியாக இருந்தால் நாம் என்ன செய்யலாம்? நிச்சயமாகவே யெகோவாவின் அமைப்பின் மூலமாக செய்யப்படும் ஆவிக்குரிய ஏற்பாடுகளை நாம் முழுமையாக அனுகூலப்படுத்திக் கொள்வது அவசியமாக இருக்கிறது. மற்ற காரியங்களோடுகூட, நாம் கடவுளுடைய வார்த்தையையும், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” தயாரித்து தரும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் ஒழுங்காகப் படிக்க வேண்டும். (மத்தேயு 24:45-47) மீட்பின் ஏற்பாட்டுக்காக, “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்துக்”காக நாம் தொடர்ந்து நன்றியுள்ளவர்களாக இருப்பதையும் காண்பிக்க வேண்டும்.—1 பேதுரு 1:18, 19.
19 “நீதியை நாடுவதற்கு” கடவுளின் உதவிக்காக நாம் ஜெபிக்க வேண்டும். (1 தீமோத்தேயு 6:11-14) உலகப் பிரகாரமான மனநிலைகள் நம்மீது செல்வாக்கைச் செலுத்துவதை நாம் உணருவோமேயானால், அல்லது அன்புள்ள உடன் விசுவாசி ஒருவர் இதை நம்முடைய கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பாரேயானால், இந்த மனச்சாய்வுகளை மேற்கொள்ள உதவும்படியாக யெகோவாவிடம் ஜெபத்தில் கேட்கையில் இந்தப் பிரச்னையைக் குறித்து தனிப்பட குறிப்பிடுவது ஞானமாக இருக்கும். கடவுளுடைய பரிசுத்த ஆவிக்காகவும், உலகப் பிரகாரமான மனநிலைகளிலிருந்தும் வழிகளிலிருந்தும் அத்தனை வித்தியாசமாக இருக்கும் பரிசுத்த ஆவியின் கனிகளை விருத்தி செய்வதற்கு அவருடைய உதவிக்காகவும் கேட்பது பொருத்தமான காரியமாக இருக்கும். (கலாத்தியர் 5:16-26; சங்கீதம் 25:4, 5; 119:27, 35) நீதியுள்ள, கற்புள்ள, ஒழுக்கமுள்ள, புகழப்படும் காரியங்களின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்த யெகோவா நமக்கு உதவக்கூடும். ஒப்பிடப்பட முடியாத “தேவ சமாதானம்” நம்முடைய இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்வதற்கு ஊக்கமாக அவரிடம் ஜெபிப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! (பிலிப்பியர் 4:6, 7) அப்பொழுது, கவலைகளும் சோதனைகளும் இது போன்றவைகளும் கட்டுக்கடங்காமல் போய்விடும் அளவுக்கு வளர்ந்துவிடாது. மாறாக, நம்முடைய வாழ்க்கையில் கடவுளால் கொடுக்கப்படும் மன அமைதி இருக்கும். ஆம் “[யெகோவாவுடைய] வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமதானமுண்டு.”—சங்கீதம் 119:165.
‘கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய் சமாதானத்தோடேயும்’ நிலைத்திருங்கள்
20 இப்பொழுது உள்ளே வந்து கொண்டிருக்கும் புதியவர்கள் உட்பட, யெகோவாவின் அமைப்பினுள்ளே இருக்கும் அனைவரும் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியும் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) யெகோவாவின் உதவியினால் “அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து” மெய் கிறிஸ்தவர்கள் வாழ வேண்டிய விதமாக வாழ்வது கூடிய காரியமாக இருக்கிறது. (தீத்து 2:11-14) ஒரு சமயம் நாம் யெகோவாவுக்கு அந்நியராகவும், நம்முடைய மனது துர்கிரியைகளின் மீது இருந்தபோதிலும் இப்பொழுது நாம் கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம். தொடர்ந்து நாம் விசுவாசத்தில் நிலைத்திருந்து நற்செய்தியின் நம்பிக்கையிலிருந்து திசைத் திருப்பப்படாமல் இருப்போமானால், ஆவிக்குரிய வகையில் பிழையில்லாத நிலையில் இருப்பது கூடிய காரியமாக இருக்கிறது.—கொலோசெயர் 1:21-23.
21 யெகோவாவும், அவருடைய வார்த்தையும் அமைப்பும் தரும் உதவியின் மூலமாக, உலகத்தால் கறைப்படாதபடியும், அதன் வழிகள், நடவடிக்கைகள் மற்றும் மனநிலைகளினால் கறைப்படாதவர்களாயும் நிலைத்திருக்க முடியும். இவ்விதமாக நாமுங்கூட மெய்யான சமாதானத்தை அறிந்துகொள்ள முடியும். ஆம், நாம் யெகோவாவின் பரிசுத்த வணக்கத்தில் தரித்திருப்பதன் மூலம், கடைசியாக, “கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே”யும் காணப்படலாம். (w86 5/1)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ பரிசுத்தம் யெகோவாவின் ஜனங்களிடம் கேட்கப்படுவதற்குக் காரணமென்ன?
◻ நாம் எவ்விதமாக கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாயிருக்கலாம்?
◻ “சமாதானத்தோடே” இருப்பதற்குத் தேவைப்படுவது என்ன?
◻ கடவுளின் உதவியை நம்பியிருப்பதை என்ன வழிகளில் நாம் காண்பிக்கக்கூடும்?
[கேள்விகள்]
1, 2. பரிசுத்தம் என்பது என்ன?
3. யெகோவா ஏன் சுத்தமான வணக்கத்துக்கு பாத்திரராக இருக்கிறார்?
4. எவ்விதமாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் யெகோவாவை வணங்குவது சாத்தியமாக இருக்கும்?
5. ஆவிக்குரிய இஸ்ரவேலர் கடவுளைப் பரிசுத்தத்தோடு வணங்க வேண்டும் என்பதைப் பவுல் எவ்விதமாக காண்பித்தான்?
6. எதற்கு எதிராக எல்லா கிறிஸ்தவர்களுமே எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
7. “பரிசுத்த நடக்கையில்” சிறந்த முன்மாதிரிகளாக இருப்பதன் அவசியத்தை உயர்த்திக் காண்பிக்கும் வகையில் பேதுரு என்ன சொன்னான்?
8. பரிசுத்த பாதையிலிருந்து ஒரு கிறிஸ்தவன் விலகிச் சென்றுவிடுவானேயானால் அவன் என்ன செய்வது அவசியமாக இருக்கும்?
9. 2 பேதுரு 3:14-ஐ முன்னிட்டுப் பார்க்கையில், என்ன கேள்வி எழும்புகிறது?
10. “திரள் கூட்டத்தார்” எவ்விதமாக இயேசுவின் இரத்தத்தில் தங்களுடைய “அங்கிகளை” வெளுத்திருக்கிறார்கள்?
11. பாவமானது யெகோவாவோடு நாம் கொண்டிருக்கும் சமாதானத்தில் குறுக்கிடுவதன் காரணமாக நாம் என்ன நிலையில் இருப்பது அவசியமாக இருக்கிறது?
12. கிறிஸ்தவ சபையினுள்ளேயுங்கூட 2 பேதுரு 2:13 எவ்விதமாக பொருத்தப்படலாம்?
13. ஒரு சமூக கூட்டம் ஆவிக்குரிய வகையில் கட்டி எழுப்புவதாக இருப்பதற்கு விருந்தளிப்பவர் என்ன செய்யக்கூடும்?
14. கள்ளப் போதகர்களின் சம்பந்தமாக என்ன நிலைநிற்கை எடுக்கப்பட வேண்டும்?
15. (எ) ஒருவர் எவ்விதமாக கடவுளோடு சமாதானத்தை முயன்று பெறமுடியும்? (பி) வரப் போகிற யெகோவாவின் மகா நாளில் “சமாதானத்தோடே” காணப்படும்படிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
16. அப்போஸ்தலனாகிய பவுலின் பிரகாரம், நாம் எவ்விதமாக உடன் விசுவாசிகளோடு சமாதானத்தை நாடலாம்?
17. 1 பேதுரு 3:10-12-ன் பிரகாரம், ‘சமாதானத்தை நாடு’வதில் உட்பட்டிருப்பது என்ன?
18. உலகப் பிரகாரமான வழிகள், நடவடிக்கைகள் அல்லது மனநிலைகள் நமக்குக் கவர்ச்சியாக இருந்தால், நாம் என்ன செய்யலாம்?
19. உலகப் பிரகாரமான மனநிலைகள் நம்மீது செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருக்குமேயானால், ஜெபம் எவ்விதமாக பிரயோஜனமாக இருக்கக்கூடும்?
20. ஆவிக்குரிய வகையில் பிழையில்லாத நிலையில் இருப்பது கூடிய காரியம் என்று நாம் ஏன் சொல்லலாம்?
21. நாம் கடைசியாக, எவ்விதமாக ‘கறையற்றவர்களும், பிழையில்லாதவர்களுமாய் சமாதானத்தோடே’ காணப்படலாம்?
[பக்கம் 12,13-ன் படங்கள்]
‘கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களும், சமாதானத்தோடேயும்’ இருப்பதன் அம்சங்கள்
முழு இருதயத்தோடு ஒப்புக்கொடுத்து
கடவுளைச் சேவித்தல்
கிறிஸ்தவ ஆள்த்தன்மையை அபிவிருத்தி செய்தல்
ஆவிக்குரிய விதத்தில் கட்டியெழுப்பும் கூட்டுறவுகளைக் கொண்டிருத்தல்
ஜெபத்தின் மூலமாக கடவுளோடு சமாதானமாயிருக்க நாடுதல்