கள்ளப்போதகர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!
“உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்.”—2 பேதுரு 2:1.
1. எதைப்பற்றி எழுதும்படி யூதா எண்ணியிருந்தார், தான் எழுத நினைத்தக் காரியத்தை அவர் ஏன் மாற்றினார்?
எத்தகைய திடுக்கிடச் செய்யும் காரியம்! முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் கள்ளப்போதகர்கள்! (மத்தேயு 7:15; அப்போஸ்தலர் 20:29, 30) இயேசுவின் ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரனாகிய யூதா, இது தோன்றினதைக் குறித்து அறிந்திருந்தார். “பொதுவான இரட்சிப்பைக் குறித்து” உடன் விசுவாசிகளுக்கு எழுதும்படி தான் நினைத்ததாக அவர் கூறி, ஆனால், “விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது” என்று விளக்கினார். யூதா ஏன் தான் எழுத நினைத்தக் காரியத்தை மாற்றினார்? ஏனெனில், “நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, . . . மறுதலிக்கிற . . . சிலர் பக்கவழியாய் [சபைக்குள்] நுழைந்திருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.—யூதா 3, 4.
2. இரண்டு பேதுரு இரண்டாம் அதிகாரமும் யூதாவும் ஏன் ஒன்றுபோல் இருக்கின்றன?
2 பேதுரு தன் இரண்டாவது நிருபத்தை எழுதின பின்பு சீக்கிரத்திலேயே யூதாவும் எழுதினதாகத் தோன்றுகிறது. இந்த நிருபத்தில் அடங்கியதை யூதா அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அறிவுரை அளிக்கும் வல்லமைவாய்ந்த தன் சொந்த நிருபத்தில், அதிலுள்ளவற்றிற்கு ஒப்பான பல எண்ணங்களை அவர் நிச்சயமாகவே வெளிப்படுத்திக் கூறினார். ஆகையால், 2 பேதுரு 2-ம் அதிகாரத்தை நாம் ஆராய்கையில், அது, எவ்வளவாய் யூதாவின் நிருபத்திற்கு ஒப்பாக இருக்கிறதென்பதைக் கவனிப்போம்.
கள்ளப் போதகங்களின் விளைவுகள்
3. மறுபடியும் நடக்கும் என்று பேதுரு சொல்கிற என்ன காரியம் பூர்வ காலத்தில் நடந்தது?
3 தீர்க்கதரிசனத்திற்குக் கவனம் செலுத்தும்படி, தன் சகோதரர்களை ஊக்குவித்த பின்பு, பேதுரு இவ்வாறு சொல்கிறார்: “கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே [பூர்வ இஸ்ரவேலருக்குள்] இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்.” (2 பேதுரு 1:14-2:1) பூர்வ காலங்களில் கடவுளுடைய ஜனங்கள் உண்மையான தீர்க்கதரிசனத்தைப் பெற்றார்கள்; எனினும் கள்ளப்போதகர்களின் உண்மையற்ற போதகங்களுடனும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. (எரேமியா 6:13, 14; 28:1-3, 15) எரேமியா இவ்வாறு எழுதினார்: ‘எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடக்கிறார்கள்.’—எரேமியா 23:14.
4. கள்ளப் போதகர்கள் ஏன் அழிவுக்குத் தகுதியுடையோராக இருக்கின்றனர்?
4 கிறிஸ்தவ சபையில் கள்ளப்போதகர்கள் என்ன செய்வார்கள் என்பதை விவரித்து, பேதுரு இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் [“அழிவுக்கேதுவான உட்பிரிவுகளை,” NW] தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை [இயேசு கிறிஸ்துவை] மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.” (2 பேதுரு 2:1; யூதா 4) அத்தகைய முதல் நூற்றாண்டு மத உட்பிரிவு கொள்கையின் முடிவான விளைவு, இன்று நாம் அறிகிறபடியான கிறிஸ்தவமண்டலமேயாகும். கள்ளப்போதகர்கள் ஏன் முழுமையான அளவில் அழிவுக்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை பேதுரு இவ்வாறு தெரிவிக்கிறார்: “அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.”—2 பேதுரு 2:2.
5. கள்ளப் போதகர்கள் எதற்கு உத்தரவாதமுள்ளவர்களாக இருந்தார்கள்?
5 இதைச் சிந்தித்துப் பாருங்கள்! கள்ளப்போதகர்களின் செல்வாக்கின் காரணமாக, சபையிலுள்ள பலர் கெட்ட நடக்கையில் உட்படுவோராவார்கள். “கெட்ட நடக்கை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற கிரேக்கச் சொல், இழிகாமம். இச்சையடக்கமில்லாமை, நாணமற்ற நடத்தை, ஒழுக்கக்கேடு, வெட்கக்கேடான நடத்தை, ஆகியவற்றைக் குறிக்கிறது. “இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்கு” கிறிஸ்தவர்கள் “தப்பி”யிருந்தார்கள் என்று பேதுரு தொடக்கத்தில் சொன்னார். (2 பேதுரு 1:4) ஆனால், சிலர் அந்தக் கேட்டுக்குத் திரும்பிச்செல்லப் போகிறவர்களாக இருந்தார்கள். சபையிலிருந்த கள்ளப்போதகர்களே அதற்குப் பெரும்பாலும் உத்தரவாதமுள்ளவர்களாக இருப்பார்கள்! இவ்வாறு சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். எவ்வளவு விசனகரமானது! நிச்சயமாகவே இன்று யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் கூர்ந்த கவனம் செலுத்தவேண்டிய ஒரு காரியமாக இது இருக்கிறது. நம்முடைய நடத்தையினால், யெகோவா தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் துதியை அல்லது அவர்கள்மீது நிந்தையை நாம் கொண்டுவரக்கூடும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.—நீதிமொழிகள் 27:11; ரோமர் 2:24.
பொய் போதகங்களை அறிமுகப்படுத்துதல்
6. கள்ளப் போதகர்களை எது தூண்டுவிக்கிறது, தாங்கள் நாடினதை அடைய அவர்கள் எவ்வாறு முயற்சி செய்கிறார்கள்?
6 கள்ளப்போதகர்கள் தங்கள் கேடான சிந்தனையை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதை நாம் கவனிப்பது ஞானமாயுள்ளது. அவர்கள் அதைத் தந்திரமாய், மறைவான இரகசிய முறையில் செய்கிறார்கள் என்று பேதுரு முதலாவதாக சொல்கிறார். அவர் மேலும் தொடர்ந்து: “பொருளாசையுடையவர்களாய். தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்” என்கிறார். த ஜெரூசலம் பைபிள் மொழிபெயர்த்திருப்பது அறிவுறுத்துகிறபடி, தன்னல ஆசையே கள்ளப் போதகர்களைத் தூண்டுவிக்கிறது: “நயவஞ்சகமான பேச்சுகளைக்கொண்டு, உங்களைத் தங்களுக்காக விலைக்கு வாங்கிக்கொள்ள அவர்கள் ஆவலோடு முயற்சி செய்வார்கள்.” அதைப்போல், ஜேம்ஸ் மொஃபட் டிரான்ஸ்லேஷன் இங்கே இவ்வாறு கூறுகிறது: “தங்கள் இச்சையில், தந்திரமான விவாதங்களைக்கொண்டு அவர்கள் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்வார்கள்.” (2 பேதுரு 2:1, 3) ஆவிக்குரிய பிரகாரமாய் விழிப்புள்ளவராக இராத ஒருவருக்கு, கள்ளப்போதகர்களின் மேட்டிமையான பேச்சுகள் நேர்மையாகத் தோன்றலாம்; ஆனால், அவர்களுடைய வார்த்தைகள், ஜனங்களை ‘வசப்படுத்தி,’ அந்த வஞ்சகர்களின் தன்னல நோக்கங்களைச் சேவிக்கும்படி அவர்களை தந்திரமாய் உட்படுத்துவதற்கே, கவனமாய்த் திட்டமிடப்பட்டிருக்கின்றன
7. முதல் நூற்றாண்டில் என்ன தத்துவஞானம் பொதுமக்கள் பாராட்டுக்குரியதாகியது?
7 சந்தேகமில்லாமல், முதல் நூற்றாண்டு கள்ளப்போதகர்கள், அப்போது நடப்பிலிருந்த உலகப்பிரகாரமான சிந்தனையால் கவரப்பட்டிருந்தார்கள். பெரும்பாலும் பேதுரு எழுதின காலத்தில், நாஸ்டிஸிஸம் என்றழைக்கப்பட்ட ஒரு தத்துவஞானம் பொதுமக்கள் பாராட்டுக்குரியதாக ஆகிக்கொண்டிருந்தது. எல்லா சடப்பொருட்களும் தீயவை, ஆவிக்குரியதாயிருப்பது மாத்திரமே நல்லது என்று நாஸ்டிகர்கள் நம்பினார்கள். ஆகையால், ஒரு மனிதன், தன் மாம்சப்பிரகாரமான உடலை என்ன செய்தாலும் அது பொருட்படுத்த வேண்டிய காரியமல்ல என்று அவர்களில் சிலர் சொன்னார்கள். முடிவில், மனிதனுக்கு இந்த உடல் இராது, என்று அவர்கள் விவாதித்தார்கள். ஆகவே, உடல் சம்பந்தமான—பாலுறவுங்கூட உட்படும்—பாவங்கள் முக்கியமானவையல்ல என்று அவர்கள் முடிவுசெய்தார்கள். கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டினவர்களில் சிலரை இத்தகைய கருத்துகள் பாதிக்கத் தொடங்கினதாகத் தெரிகிறது.
8, 9. (அ) என்ன திருக்குமுறுக்கான விவாதம் பூர்வ கிறிஸ்தவர்கள் சிலரை பாதித்தது? (ஆ) யூதா குறிப்பிடுகிற பிரகாரம், சபையிலிருந்த சிலர் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
8 “கிருபையின்” அல்லது “தகுதியற்ற தயவின்” கோட்பாட்டை தகா வழியில் பயன்படுத்தினவர்கள் சர்ச்சில் இருந்தனர்” என்று, பைபிள் அறிவாளர் ஒருவர் குறிப்பிட்டார். (எபேசியர் 1:5-7) அவர் சொல்லுகிறபடி, சிலருடைய விவாதம் இவ்வாறு இருந்தது: “எல்லா பாவத்தையும் மூடுவதற்கு கடவுளுடைய [தகுதியற்ற தயவு] போதியளவு மிகுந்ததாக இருக்கிறதென்று நீங்கள் சொல்கிறீர்களா? . . . அப்படியானால் நாம் தொடர்ந்து பாவஞ்செய்துகொண்டிருக்கலாம். ஏனெனில் கடவுளுடைய [தகுதியற்ற தயவு] எல்லா பாவத்தையும் துடைத்தொழிக்கும். உண்மையில், எவ்வளவு அதிகமாய் நாம் பாவம் செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாய் கடவுளுடைய [தகுதியற்ற தயவு] கிரியை செய்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.” இதைவிட அதிக திருக்குமுறுக்கான விவாதத்தை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?
9 அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு கேட்டபோது, கடவுளுடைய இரக்கத்தைப் பற்றிய தவறான சிந்தனையை எதிர்த்துத் தாக்கினார். “தகுதியற்ற தயவு பெருகும்படி நாம் பாவத்தில் தொடர்ந்துகொண்டிருக்கலாமா? அவர் மேலும் கேட்டார்: “நாம் நியாயப்பிரமாணத்தின்கீழ் இராமல் தகுதியற்ற தயவின்கீழ் இருப்பதால் பாவஞ்செய்யலாமா?” “அது ஒருபோதும் நடவாதிருப்பதாக!” என்று ஒவ்வொரு கேள்விக்குப் பின்னும் பவுல் அழுத்தந்திருத்தமாய் பதிலளித்தார். (ரோமர் 6:1, 2, 15. NW) தெளிவாகவே, யூதா குறிப்பிடுகிறபடி, சிலர் “நமது தேவனுடைய கிருபையை [“தகுதியற்ற தயவை,” NW] காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி”கொண்டிருந்தார்கள். எனினும், அத்தகையோருக்கு “அழிவு உறங்கிக்கொண்டில்லை,” என்று பேதுரு குறிப்பிடுகிறார்.—யூதா 4; 2 பேதுரு 2:3.
எச்சரிக்கை உதாரணங்கள்
10, 11. என்ன மூன்று எச்சரிக்கை உதாரணங்களை பேதுரு அளிக்கிறார்?
10 அறிந்து வேண்டுமென்றே தவறுசெய்வோருக்கு எதிராக கடவுள் நடவடிக்கை எடுப்பார் என்று அறிவுறுத்துவதற்கு, வேதவசனங்களிலிருந்து மூன்று எச்சரிக்கை உதாரணங்களை பேதுரு அளிக்கிறார். முதலாவதாக, அவர் எழுதுகிறார்: “பாவஞ்செய்த தூதர்களை கடவுள் தண்டியாமல் விடவில்லை.” யூதா சொல்கிறார்: இவர்கள், “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், [பரலோகத்தில்] தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள்.” ஜலப்பிரளயத்திற்கு முன்பாக அவர்கள் பூமிக்கு வந்து, மனுஷகுமாரத்திகளுடன் பாலுறவுகொள்ளும்படி மாம்ச உடல்களை எடுத்தனர். அவர்களுடைய தகாத, இயற்கைக்கு மாறான நடத்தைக்குத் தண்டனையாக, அவர்கள் “டார்ட்டரஸுக்குள்” தள்ளப்பட்டனர், அல்லது யூதாவின் விவரம் சொல்லுகிற பிரகாரம், “மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவை”க்கப்பட்டனர்.—2 பேதுரு 2:4; யூதா 6; ஆதியாகமம் 6:1-3.
11 அடுத்தபடியாக, நோவாவின் நாளிலிருந்த ஜனங்களை பேதுரு குறிப்பிடுகிறார். (ஆதியாகமம் 7:17-24) நோவாவின் காலத்தில் கடவுள், “பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், . . . அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி”னார் என்று சொல்கிறார். முடிவாக, “சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, . . . பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்”தார் என்று பேதுரு எழுதுகிறார். அந்த ஆட்கள், “விபசாரத்தில் மிதமிஞ்சி அந்நிய மாம்சத்தை நாடித் தொடர்ந்”தார்கள் என்ற கூடுதலான தகவலை யூதா கொடுக்கிறார். (2 பேதுரு 2:5, 6; யூதா 7, தி.மொ.) ஆண்கள், பெண்களோடு கள்ளத்தனமான பாலுறவுகளில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், மற்ற ஆண்களின் மாம்சத்திற்காகவும் தகா காமம் கொண்டார்கள், மிருகங்களோடுங்கூட தகா காமம் கொண்டிருந்திருக்கலாம்.—ஆதியாகமம்:19:4, 5; லேவியராகமம் 18:22-25.
12. பேதுரு சொல்லுகிற பிரகாரம், நீதியுள்ள நடக்கை எவ்வாறு பலனளிக்கப்படுகிறது?
12 எனினும், அதே சமயத்தில், தம்மை உண்மையுடன் சேவிப்போருக்கு யெகோவா பலனளிக்கிறார் என்று பேதுரு குறிப்பிடுகிறார். உதாரணமாக, எவ்வாறு கடவுள், “ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தபோது, “நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி” வைத்தார் என்பதை அவர் குறிப்பிட்டுரைக்கிறார். சோதோம் இருந்த காலத்தில், “நீதிமானாகிய லோத்தை” யெகோவா காப்பாற்றினதைப் பற்றியும் அவர் சொல்லி, இவ்வாறு முடிக்கிறார்: “கர்த்தர் [“யெகோவா,” NW] தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.”—2 பேதுரு 2:5, 7-9.
தண்டனைக்குத் தகுதியான செயல்கள்
13. யார் ஆக்கினைத்தீர்ப்புக்குப் பாத்திரராக முக்கியமாய் வைக்கப்பட்டிருக்கின்றனர், என்ன சொப்பனங்களில் அவர்கள் ஈடுபடுவதாகத் தெரிகிறது?
13 கடவுள் அளிக்கும் ஆக்கினைத்தீர்ப்புக்குப் பாத்திரராக முக்கியமாய் வைக்கப்பட்டிருப்போரை, அதாவது, “அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை” பேதுரு தனிப்பட குறிப்பிடுகிறார். பின்வருமாறு சொல்கையில் பேதுருவின் கடும் கோபத்தை நாம் பெரும்பாலும் உணரமுடிகிறது; “துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் [“மகத்துவமானவர்களை,” NW] தூஷிக்க அஞ்சாதவர்கள்.” யூதா இவ்வாறு எழுதுகிறார்: “சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, . . . மகத்துவங்களைத் [“மகத்துவமானவர்களை,” NW] தூஷிக்கிறார்கள்.” (2 பேதுரு 2:10; யூதா 8) ஒழுக்கக்கேடான பாலுறவு இச்சைகளைத் திருப்திசெய்துகொள்ளும்படி அவர்கள் நாடித்தேடுவதை ஊக்குவிக்கும் அசுத்தமான கற்பனை கனாக்கள் உட்பட்டவையாக ஒருவேளை அவர்கள் சொப்பனம் இருக்கலாம். எனினும், என்ன கருத்தில், அவர்கள், ‘கர்த்தத்துவத்தை அசட்டைப்பண்ணி,’ ‘மகத்துவமானவர்களைத் தூஷிக்கிறார்கள்’?
14. என்ன கருத்தில் கள்ளப் போதகர்கள் ‘கர்த்தத்துவத்தை அசட்டைப்பண்ணி,’ ‘மகத்துவமானவர்களைத் தூஷிக்கிறார்கள்’?
14 கடவுளால் நியமிக்கப்பட்ட அதிகாரத்துவத்தைத் தாங்கள் அசட்டையாகக் கருதுவதில் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். மகத்துவமானவர்களான யெகோவா தேவனையும் அவருடைய குமாரனையும், கிறிஸ்தவ மூப்பர்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்; இதன் பலனாக, ஓரளவு மகத்துவம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உண்மைதான், பேதுருதானே செய்ததுபோல், அவர்களும் தவறுகள் செய்கிறார்கள். எனினும் அத்தகைய மகத்துவமானவர்களுக்கு அடங்கியிருக்கும்படி வேதவசனங்கள் சபை உறுப்பினரை வற்புறுத்திக் கூறுகின்றன. (எபிரெயர் 13:17) அவர்களுடைய குறைபாடுகளைக் காரணங்களாகக் கொண்டு அவர்களைப் பற்றி தூஷணமாய்ப் பேசக்கூடாது. அவ்வாறு செய்வது மிகவும் தகுதியாயிருந்தாலும், தூதர்களுங்கூட, “அவர்களைத் [கள்ளப் போதகர்களை] தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே” என்று பேதுரு சொல்கிறார். “இவர்களோ” என்று பேதுரு மேலும் தொடர்ந்து, “பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள்” என்கிறார்.—2 பேதுரு 2:10-13.
“உங்களோடு விருந்துண்கையில்”
15. கள்ளப் போதகர்கள் பயன்படுத்தும் முறைகள் யாவை, தங்கள் வஞ்சகங்களை அவர்கள் எங்கே நடப்பிக்கிறார்கள்?
15 ஒழுக்கங்கெட்ட இந்த மனிதர், “பகற்பொழுதில் உல்லாசமாயிருப்பதே இன்பமென்றெண்ணுகிற”வர்களாகவும் ‘கறைகளும் இலச்சைகளுமாகவும்’ இருக்கிற போதிலும், விலகிப்போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். முன்னால் பேதுரு குறிப்பிட்டபடி, அவர்கள் ‘வஞ்சக வார்த்தைகளைப்’ பயன்படுத்தி “தந்திரமாய்” செயல்படுகிறார்கள். (2 பேதுரு 2:1, 3, 13, தி.மொ.) இவ்வாறு, கடவுள் குறிப்பிட்டுள்ள ஒழுக்கத் தராதரங்களைக் கடைப்பிடிக்க மூப்பர்கள் செய்யும் முயற்சிகளை அவர்கள் வெளிப்படையாக எதிர்க்கமாட்டார்கள் அல்லது தங்கள் சொந்த பாலுறவு இச்சைகளை வெளிப்படையாய்த் தொடரமாட்டார்கள். மாறாக, “உங்களோடு விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் [“வஞ்சகமான போதகங்களில்,” NW] உல்லாசமாயிருக்கிறார்கள்” என்று பேதுரு சொல்கிறார். மேலும் யூதா இவ்வாறு எழுதுகிறார்: “இவர்கள், உங்கள் அன்பு விருந்துகளில் தண்ணீருக்கடியில் மறைந்து கிடக்கிற பாறைகள்.” (யூதா 12, NW) ஆம், தண்ணீருக்கடியில் மறைந்திருக்கிற கரடுமுரடான பாறைகள் ஒரு படகின் அடிவாரத்தைக் கீறி பிளந்து, விழிப்பாயிராத மாலுமிகளை மூழ்கடிப்பதுபோல், கள்ளப் போதகர்கள், “தங்கள் ‘அன்பின் விருந்துகளின்போது’ தாங்கள் பாசாங்குத்தன அன்பு காட்டின விழிப்பாயிராத ஆட்களை வஞ்சித்து வந்தனர்.
16. (அ) ‘அன்பின் விருந்துகள்’ என்னவாக இருந்தன, இன்று அவற்றைப்போன்ற என்ன சூழ்நிலைகளில், ஒழுக்கக்கேடான ஆட்கள் செயல்படக்கூடும்? (ஆ) கள்ளப் போதகர்கள் தங்கள் கவனங்களை எவர்மீது ஊன்ற வைக்கின்றனர், ஆகையால் அத்தகையோர் என்ன செய்ய வேண்டும்?
16 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், உணவையும் கூட்டுறவையும் அனுபவித்து மகிழும்படி ஒன்றுகூடின தோழமை சந்தர்ப்பங்களாக இந்த ‘அன்பின் விருந்துகள்’ இருந்தனவென்று தோன்றுகிறது. இன்று யெகோவாவின் சாட்சிகளுங்கூட தோழமைக்காக சிலசமயங்களில் ஒன்றுகூடுகிறார்கள், அது ஒருவேளை திருமண வரவேற்பு உபசரணைகளாக, இன்பப் பயணங்களாக, அல்லது ஒரு சாயங்காலத்தில் ஒன்றுகூடி மகிழ்தலாக இருக்கலாம். தவறான செயல்களுக்கு உட்பட செய்யும்படி வஞ்சக நபர்கள் அத்தகைய சம்பவங்களை எவ்வாறு பயன்படுத்தக்கூடும்? பேதுரு இவ்வாறு எழுதுகிறார்: ‘விபசாரத்தால் நிறைந்த . . . கண்களையுடையவர்கள். . . . உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய் பிடிக்கிறவர்கள் [“வசப்படுத்துகிறவர்கள்,” தி.மொ.].’ சத்தியத்தை முழுமையாய்த் தங்கள் சொந்தமாக்கிக்கொள்ளத் தவறி, ஆவிக்குரிய பிரகாரமாய் உறுதியற்றிருப்போர் மீது, ‘பொருளாசையில் பழகின தங்கள் இருதயத்தை’ அவர்கள் ஊன்றவைக்கிறார்கள். ஆகையால், பேதுருவின் நாளில் நடந்தவற்றால் முன்னெச்சரிக்கை அளிக்கப்பட்டவர்களாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்! கற்பொழுக்கங்கெட்ட எவற்றையும் எதிர்த்துத் தடை செய்யுங்கள். ஒழுக்கக்கேடான நாட்டங்களை உடைய ஒருவரின் வசீகரத்தால் அல்லது உடல் கவர்ச்சியால் ஏமாறிவிடாதீர்கள்.—2 பேதுரு 2:14.
“பிலேயாமின் வழி”
17. ‘பிலேயாமின் வழி’ என்னவாக இருந்தது, 24,000 இஸ்ரவேலரை அது எவ்வாறு பாதித்தது?
17 இந்த “சாபத்தின் பிள்ளைகள்” சத்தியத்தை சிறிது காலமாக அறிந்துவந்தவர்களாக இருக்கின்றனர். சபையில் அவர்கள் இன்னும் செயல்படுகிறவர்களாகத் தோன்றலாம். ஆனால் பேதுரு இவ்வாறு சொல்கிறார்; “செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி”னான். (2 பேதுரு 2:14, 15) தன் சொந்த தனிப்பட்ட லாபத்திற்காக, ஒழுக்கக்கேடான போக்கிற்கு தூண்டும்படி ஆலோசனையாகக் கூறினதே தீர்க்கதரிசியாகிய பிலேயாமின் வழியாக இருந்தது. ஜனங்களை வசீகரித்து வேசித்தனத்தில் ஈடுபடும்படி செய்விக்கக்கூடுமானால் இஸ்ரவேலை கடவுள் சபிப்பார் என்று மோவாபிய அரசன் பாலாக்கினிடம் அவன் சொன்னான். இதன் விளைவாக, கடவுளுடைய ஜனங்களில் பலர் மோவாபிய பெண்களால் கற்பிழக்கச் செய்யப்பட்டு, தங்கள் ஒழுக்கக்கேடான நடத்தைக்காக 24,000 பேர் கொல்லப்பட்டனர்.—எண்ணாகமம் 25:1-9; 31:15, 16; வெளிப்படுத்துதல் 2:14.
18. பிலேயாம் எந்த அளவில் பிடிவாதமாக இருந்தான், அதன் முடிவு கள்ளப் போதகர்களுக்கு எதை முன்குறித்துக் காட்டுகிறது?
18 பிலேயாமின் கழுதை அவனிடம் பேசினபோது அவன் தடை செய்யப்பட்டான், ஆனால் பிலேயாம் அந்த “அநீதத்தின் கூலியை” அவ்வளவு அதிகமாக விரும்பினதால், அது நடந்தபோதுங்கூட தன் ‘மதிகேடான’ போக்கை விட்டுவிடவில்லை என்று பேதுரு குறிப்பிடுகிறார். (2 பேதுரு 2:15, 16) எத்தகைய பொல்லாங்கன்! ஒழுக்கக்கேடான நடத்தைக்கு உட்படும்படி கடவுளுடைய ஜனங்களை வசீகரிப்பதால் அவர்களைத் தூய்மையற்றவர்களாக்க பிலேயாமைப்போல் முயற்சி செய்கிற எவருக்கும் ஐயோ! தன் கேட்டுக்காக பிலேயாம் செத்தான்; அவனுடைய வழியைப் பின்பற்றுகிற எல்லாருக்கும் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு முன்காட்சியாக இருக்கிறது.—எண்ணாகமம் 31:8.
அவர்களுடைய பேய்த்தன கற்பழிப்புகள்
19, 20. (அ) பிலேயாமைப் போன்றவர்கள் எவற்றிற்கு ஒப்பிடப்படுகிறார்கள், ஏன்? (ஆ) அவர்கள் யாரை தந்திரமாய் வசப்படுத்துகிறார்கள், எவ்வாறு? (இ) அவர்களுடைய வசீகரங்கள் பேய்த்தனமானவை என்று நாம் ஏன் சொல்லலாம், நாம் எவ்வாறு நம்மையும் மற்றவர்களையும் அவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்?
19 பிலேயாமைப் போன்றவர்களை விவரித்து, பேதுரு இவ்வாறு எழுதுகிறார்: “இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்.” வனாந்தரத்தில் தாகத்தோடு பயணப்படும் ஒருவருக்கு, தண்ணீரற்ற காய்ந்த கிணறு சாவைக் குறிக்கலாம். அத்தகைய காரியங்களுக்கு ஒப்பாக இருப்போருக்கு, “காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது” என்பது ஆச்சரியமாயில்லை! பேதுரு மேலும் தொடர்ந்து சொல்கிறார்: “வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள் [“வசப்படுத்திக்கொள்கிறார்கள்,” தி.மொ.]. தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணு”வதன் மூலம், அனுபவமில்லாதவர்களை அவர்கள் கற்பிழக்கச் செய்கிறார்கள் என்று பேதுரு சொல்கிறார்.—2 பேதுரு 2:17-19; கலாத்தியர் 5:13.
20 இத்தகைய கேடுற்ற போதகர்களின் வசீகரங்கள் பேய்த்தனமானவை. உதாரணமாக அவர்கள் இவ்வாறு சொல்லலாம்: ‘நாம் பலவீனர், காம உணர்ச்சிக்கு உட்பட்டவர்கள் என்று கடவுள் அறிந்திருக்கிறார். ஆகையால் நம்முடைய பாலுறவு இச்சைகளில் உட்பட்டு அவற்றைத் திருப்தி செய்துவிடுவோமானால், கடவுள் இரக்கமுள்ளவராக இருப்பார். நம்முடைய பாவத்தை நாம் அறிக்கையிட்டால், நாம் சத்தியத்துக்குள் வந்தபோது அவர் செய்ததைப்போலவே நமக்கு மன்னிப்பார்.’ ஓரளவு இதற்கு ஒப்பான ஓர் அணுகுமுறையை பிசாசானவன் ஏவாளிடம் பயன்படுத்தி, தண்டனையில்லாமல் அவள் பாவம் செய்யலாம் என்று வாக்குறுதி அளித்தான் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். ஏவாளின் விஷயத்தில், கடவுளுக்கு விரோதமான பாவம், அவளுக்கு அறிவொளியையும் சுயாதீனத்தையும் அளிக்கும் என்று அவன் உரிமைபாராட்டினான். (ஆதியாகமம் 3:4, 5) அத்தகைய கேடுற்ற ஓர் ஆள் சபையுடன் கூட்டுறவுகொள்வதை நாம் காண நேரிட்டால், கிறிஸ்தவ சபையில் பொறுப்புள்ளோரிடம் அந்த நபரைப் பற்றி அறிவிப்பதன்மூலம், நம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு கடமை நமக்கு உள்ளது.—லேவியராகமம் 5:1
திருத்தமான அறிவினால் பாதுகாக்கப்படுவது
21-23. (அ) திருத்தமான அறிவை பொருத்திப் பயன்படுத்தத் தவறுவதன் விளைவுகள் யாவை? (ஆ) அடுத்தபடியாக ஆலோசிக்கப்படவிருக்கிற, மேலுமான என்ன பிரச்சினையை பேதுரு விவாதித்துப் பேசுகிறார்?
21 “ஜீவனுக்கும் தேவபக்திக்கும்” இன்றியமையாததாக இருக்கிறதென்று பேதுரு தொடக்கத்தில் சொன்ன அறிவைப் பொருத்திப் பிரயோகிக்கத் தவறுவதன் விளைவுகளை விவரிப்பதோடு, தன் நிருபத்தின் இந்தப் பகுதியை முடிக்கிறார். (2 பேதுரு 1:2, 3, 8) அவர் இவ்வாறு எழுதுகிறார்: “கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே [“திருத்தமான அறிவினால்,” NW] உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.” (2 பேதுரு 2:20) எவ்வளவு வருந்தத்தக்கது! பேதுருவின் நாளில் அத்தகையோர், கணநேர பாலுறவு இன்பத்துக்காக, அழியாமையுடைய பரலோக வாழ்க்கையின் அருமையான நம்பிக்கையை எறிந்துவிட்டிருந்தனர்.
22 ஆகையால் பேதுரு இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.”—2 பேதுரு 2:21, 22; நீதிமொழிகள் 26:11.
23 பூர்வ கிறிஸ்தவர்களைத் தாக்கத் தொடங்கியிருந்த மற்றொரு பிரச்சினை, இன்றும் சிலருக்கு உண்டாயிருப்பதைப் போன்ற ஒன்றாக இருந்ததென தோன்றுகிறது. அந்தச் சமயத்தில், வாக்குப்பண்ணப்பட்ட கிறிஸ்துவின் வந்திருத்தல் தாமதிப்பதுபோல் தோன்றுவதாக சிலர் முறையிட்டுக் கொண்டிருந்தனர். இந்தக் காரியத்தை பேதுரு எவ்வாறு விளக்குகிறார் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ எந்த மூன்று எச்சரிக்கை உதாரணங்களை பேதுரு குறிப்பிடுகிறார்?
◻ எவ்வாறு கள்ளப் போதகர்கள் ‘கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறார்கள்’?
◻ ‘பிலேயாமின் வழி’ என்ன, அதைப் பின்பற்றுகிறவர்கள் எவ்வாறு மற்றவர்களைக் கற்பிழக்கச் செய்ய தந்திரமாய் முயற்சி செய்யக்கூடும்?
◻ திருத்தமான அறிவை பொருத்திப் பயன்படுத்தத் தவறுவதன் விளைவுகள் யாவை?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
பிலேயாம் ஒரு எச்சரிக்கை உதாரணமாக இருக்கிறான்