யெகோவாவின் நாள் எதை வெளிப்படுத்தும்?
“யெகோவாவின் நாள் திருடன் வருகிற விதமாக வரும்; அப்போது, . . . பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் தீக்கிரையாக்கப்படும் [வெளியாக்கப்படும், பொது மொழிபெயர்ப்பு, அடிக்குறிப்பு].”—2 பே. 3:10.
1, 2. (அ) இந்தப் பொல்லாத உலகம் எப்படி அழிக்கப்படும்? (ஆ) என்ன கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ளப் போகிறோம்?
யெகோவாவின் துணை இல்லாமல் மனிதனால் இந்தப் பூமியை வெற்றிகரமாய் ஆள முடியும் என்ற அப்பட்டமான பொய்யை அடிப்படையாக வைத்துதான் இந்தப் பொல்லாத உலகமே சுழன்று கொண்டிருக்கிறது. (சங். 2:2, 3) பொய்யை அஸ்திவாரமாகக் கொண்ட எதுவும் நிலைக்குமா? நிச்சயம் நிலைக்காது! அதற்காக, சாத்தானின் இந்த உலகம் தானாகவே அழியும்வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. மாறாக, கடவுள் தம்முடைய குறித்த காலத்தில், தம்முடைய பாணியில் அதை அழிப்பார். இந்தப் பொல்லாத உலகத்தைக் கடவுள் அழிக்கும்போது அவருடைய நீதியும் அன்பும் பரிபூரணமாய் வெளிப்படும்.—சங். 92:7; நீதி. 2:21, 22.
2 “யெகோவாவின் நாள் திருடன் வருகிற விதமாக வரும்; அப்போது, வானம் பேரொலியுடன் மடமடவென அகன்றுவிடும்; கடும் வெப்பத்தில் பஞ்சபூதங்கள் அழிந்துவிடும், பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் தீக்கிரையாக்கப்படும் [அதாவது, வெளியாக்கப்படும்]” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பே. 3:10) இங்கே “வானம்,” “பூமி” எதைக் குறிக்கின்றன? அழியப்போகும் “பஞ்சபூதங்கள்” எதைக் குறிக்கின்றன? “பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் வெளியாக்கப்படும்” என்று பேதுரு சொன்னதன் அர்த்தம் என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொண்டால் விரைவில் நடக்கப்போகும் படுபயங்கரமான சம்பவங்களை எதிர்கொள்ள நாம் தயாராய் இருப்போம்.
வானமும் பூமியும் அகன்றுவிடும்
3. “வானம்” என்று 2 பேதுரு 3:10-ல் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தையின் அர்த்தம் என்ன? அது எப்படி அகன்றுபோகும்?
3 பைபிளில் “வானம்” என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்படும்போது பெரும்பாலும் ஆட்சி அதிகாரங்களைக் குறிக்கிறது; அவை குடிமக்களைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதால் அவ்வாறு விவரிக்கப்படுகின்றன. (ஏசா. 14:13, 14; வெளி. 21:1, 2) அழியப்போகும் இந்த “வானம்” தேவபக்தியற்ற மனிதகுலத்தின்மீது ஆதிக்கம் செலுத்துகிற மனித ஆட்சியைக் குறிக்கிறது. இவை “பேரொலியுடன் மடமடவென” அகன்றுவிடும், மற்றொரு மொழிபெயர்ப்பின்படி, “பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்;” அதன் அழிவு மிக வேகமாக இருக்கும் என்பதை இது சுட்டிக்காட்டலாம்.
4. “பூமி” என்பதன் அர்த்தம் என்ன, அது எப்படி அழிக்கப்படும்?
4 இந்த வசனத்தில், “பூமி” என்ற வார்த்தை கடவுளிடமிருந்து விலகியிருக்கும் மனிதகுலத்தைக் குறிக்கிறது. நோவாவின் காலத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் பூமியில் நிறைந்திருந்தார்கள்; அந்தச் சந்தர்ப்பத்தில் கடவுள் கட்டளையிட, ஒரு பெருவெள்ளத்தின் மூலம் அந்த உலகம் அழிந்தது. அதுபோல், “இப்போது இருக்கிற வானமும் பூமியும் அதே வார்த்தையினால் நெருப்புக்கென்று வைக்கப்பட்டிருக்கின்றன, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற நாளுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன.” (2 பே. 3:7) தேவபக்தியற்ற அனைவரையும் அந்தப் பெருவெள்ளம் ஒரேசமயத்தில் வாரிக்கொண்டு போனது, ஆனால் ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ வரப்போகும் அழிவு படிப்படியாக நடைபெறும். (வெளி. 7:14) அந்த உபத்திரவத்தின் முதல் கட்டத்தில் ‘மகா பாபிலோன்’ அழிக்கப்படும்; இந்த உலகத்தின் அரசியல் தலைவர்களை தூண்டிவிடுவதன் மூலம் கடவுள் அதை அழிப்பார். இந்த விதத்தில் பொய் மதம் எனும் விலைமகள்மீது தம் வெறுப்பைக் காட்டுவார். (வெளி. 17:5, 16; 18:8) பின்பு மிகுந்த உபத்திரவத்தின் கடைசி கட்டத்தில், ஆம் அர்மகெதோனில், மீந்திருக்கும் சாத்தானிய உலகத்தை யெகோவாவே முழுமையாக அழிப்பார்.—வெளி. 16:14, 16; 19:19-21.
“பஞ்சபூதங்கள் அழிந்துவிடும்”
5. அடையாள அர்த்தமுள்ள “பஞ்சபூதங்கள்” எதை உட்படுத்துகின்றன?
5 ‘அழியப்போகும்’ அந்த “பஞ்சபூதங்கள்” எதைக் குறிக்கின்றன? ஒரு பைபிள் அகராதியின்படி, “பஞ்சபூதங்கள்” என்பதன் அர்த்தம்: “அடிப்படையானவை,” “இன்றியமையாதவை.” இந்த வார்த்தை, “பேச்சுக்கு அடிப்படையாக உள்ள அட்சரங்களை அல்லது எழுத்துக்களைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக” அந்த அகராதி சொல்கிறது. எனவே, பேதுரு குறிப்பிட்ட “பஞ்சபூதங்கள்” என்பது இந்த உலகத்தின் தேவபக்தியற்ற செயல்களுக்கும் மனப்பான்மைகளுக்கும் போக்குகளுக்கும், லட்சியங்களுக்கும் அடிப்படையாக உள்ள காரியங்களை அர்த்தப்படுத்துகின்றன. “பஞ்சபூதங்கள்” என்பதில் “உலகத்தின் சிந்தை”யும் உட்படுகிறது, அதாவது “கீழ்ப்படியாதவர்களிடம் தற்போது செயல்படுகிற” சிந்தையும் உட்படுகிறது. (1 கொ. 2:12; எபேசியர் 2:1-3-ஐ வாசியுங்கள்.) சாத்தான் ஆளும் இவ்வுலகில் இந்தச் சிந்தை “காற்றுபோல்” எங்கும் பரவியுள்ளது. இது, அகம்பாவமும் கலகத்தனமும் கொண்ட சாத்தானின் சிந்தையை வெளிப்படுத்த மக்களைத் தூண்டுகிறது, அதாவது அவனைப் போலவே யோசிப்பதற்கு, திட்டமிடுவதற்கு, பேசுவதற்கு, செயல்படுவதற்கு மக்களைத் தூண்டுகிறது.
6. உலகத்தின் சிந்தை எப்படி வெளிக்காட்டப்படுகிறது?
6 எனவே, இந்த உலக சிந்தையால் கறைபட்டவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களுடைய மனதையும் சிந்தையையும் சாத்தான் செல்வாக்கு செலுத்த அனுமதிப்பதால் அவனுடைய சிந்தையையும் மனப்பான்மையையும் வெளிக்காட்டுகிறார்கள். அதனால்தான் கடவுளுடைய சித்தத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தங்கள் இஷ்டபடி நடக்கிறார்கள். அவர்கள் கர்வம் பிடித்தவர்களாகவும் சுயநலவாதிகளாகவும் இருக்கிறார்கள்; அதிகாரத்தை எதிர்க்கும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள்; ‘உடலின் இச்சைக்கும், கண்களின் இச்சைக்கும்’ சுலபமாக அடிமையாகிவிடுகிறார்கள்.—1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்.a
7. நாம் ஏன் ‘நம் இருதயத்தைக் காத்துக்கொள்ள’ வேண்டும்?
7 அப்படியென்றால் நண்பர்கள், பொழுதுபோக்கு, புத்தகங்கள், இன்டர்நெட் வெப்சைட்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கையில் தெய்வீக ஞானத்தைக் காட்டுவதன் மூலம் ‘நம் இருதயத்தைக் காத்துக்கொள்வது’ எவ்வளவு முக்கியம்! (நீதி. 4:23) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தத்துவங்களினாலும் வஞ்சனையான வீண் கருத்துகளினாலும் ஒருவனும் உங்களைக் கவர்ந்துகொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவை மனித பாரம்பரியங்களையும் இவ்வுலகின் அடிப்படைக் காரியங்களையுமே சார்ந்தவை, கிறிஸ்துவைச் சார்ந்தவை அல்ல.” (கொலோ. 2:8) யெகோவாவின் நாள் வெகு அருகில் இருப்பதால் இந்தக் கட்டளைக்குத் துரிதமாகக் கீழ்ப்படிவது மிக அவசியம்; ஏனென்றால், அதன் சுட்டெரிக்கும் ‘வெப்பம்’ சாத்தானிய உலகின் பாகமாக இருக்கும் அனைத்தையும் தீக்கு இரையாக்கிவிடும்; கடவுளுடைய அனல்வீசும் கோபத்தைத் தாக்குப்பிடிக்க அவற்றால் முடியாது என்பது வெளிப்படும். இதனால், மல்கியா 4:1-ல் உள்ள வார்த்தைகள் நம் நினைவுக்கு வரலாம்; அது இவ்வாறு சொல்கிறது: “சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்.”
“பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் தீக்கிரையாக்கப்படும்”
8. பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் எப்படி “தீக்கிரையாக்கப்படும்”?
8 என்ன அர்த்தத்தில் “பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் தீக்கிரையாக்கப்படும்” என்று பேதுரு எழுதினார்? “தீக்கிரையாக்கப்படும்” என்ற வார்த்தை, தீயினால் அழிக்கப்படுவதற்கு தகுதியானதென “வெளிப்படுத்தப்படும்,” “வெட்டவெளிச்சமாக்கப்படும்” என்றும் மொழிபெயர்க்கப்படலாம். மிகுந்த உபத்திரவத்தின்போது சாத்தானின் உலகத்தை யெகோவா வெளிப்படுத்துவார், அதாவது அந்த உலகம் தமக்கும் தம்முடைய அரசாங்கத்திற்கும் எதிராக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தி அது அழிவுக்குத் தகுதியானது என்பதை வெட்டவெளிச்சமாக்குவார் என்றே பேதுரு அர்த்தப்படுத்தினார். அந்தச் சமயத்தைக் குறித்து தீர்க்கதரிசனமாக ஏசாயா 26:21-ல் இவ்வாறு சொல்லப்பட்டது: “பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.”
9. (அ) நாம் எதைத் தவிர்க்க வேண்டும், ஏன்? (ஆ) நாம் எதை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஏன்?
9 யெகோவாவின் நாளில், இந்த உலகத்தின் பொல்லாத சிந்தையால் வடிவமைக்கப்பட்டவர்கள் அவர்களுடைய உண்மையான சுபாவத்தை வெளிக்காட்டுவார்கள்; ஏன், ஒருவரையொருவர் கொலை செய்யவும் துணிவார்கள். இதற்கு முக்கிய காரணம், இன்று மலிந்துகிடக்கும் பல்வகை வன்முறை பொழுதுபோக்குகளே. யெகோவாவின் நாளில் ‘ஒவ்வொருவனும் தன்தன் அயலானுக்கு எதிராய்க் கையை ஓங்குவதற்கு’ பிரபலமான இந்தப் பொழுதுபோக்குகள் அநேகரின் சிந்தையை இப்போதே செதுக்குகின்றன! (சக. 14:13, கத்தோலிக்க பைபிள்) அப்படியென்றால், யெகோவா அருவருக்கிற பெருமை, வன்முறையில் பிரியப்படுவது போன்ற குணங்களை நமக்குள் ஊட்டிவளர்க்கும் திரைப்படங்கள், புத்தகங்கள், வீடியோ விளையாட்டுகள் என எதுவாக இருந்தாலும்சரி அவற்றை நாம் அறவே தவிர்ப்பது எவ்வளவு அவசியம்! (2 சா. 22:28; சங். 11:5) அதற்கு பதிலாக, கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், யெகோவாவுடைய நாளின் கடும் வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க இந்தக் குணங்கள்தான் நமக்குக் கைகொடுக்கும்.—கலா. 5:22, 23.
“புதிய வானமும் புதிய பூமியும்”
10, 11. ‘புதிய வானம்,’ “புதிய பூமி” என்றால் என்ன?
10 இரண்டு பேதுரு 3:13-ஐ வாசியுங்கள். ‘புதிய வானம்’ என்பது கடவுளுடைய பரலோக அரசாங்கம்; அது 1914-ல், ‘புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறிய’ சமயத்தில் நிறுவப்பட்டது. (லூக். 21:24) கிறிஸ்து இயேசுவே அதன் அரசராக இருக்கிறார்; அவரோடுகூட 1,44,000 பேர் ஆட்சி செய்யப் போகிறார்கள்; அவர்களில் பெரும்பாலோர் பரலோக வாழ்க்கை என்னும் வெகுமதியை ஏற்கெனவே பெற்றுவிட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களை வெளிப்படுத்துதல் புத்தகம் இவ்வாறு விவரிக்கிறது: ‘புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வந்தது; . . . அது மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் தயாராக்கப்பட்டிருந்தது.’ (வெளி. 21:1, 2, 22-24) பூர்வ இஸ்ரவேலில் எருசலேம் ஆட்சிபீடமாக இருந்தது போலவே, கடவுளுடைய அரசாங்கத்தில் புதிய எருசலேமாகிய மணமகளும் அவளுடைய மணமகனும் ஆட்சிபீடமாக இருக்கிறார்கள். இந்தப் பரலோக நகரம் பூமியின்மீது தன் ஆட்சியைச் செலுத்தும்; அந்த வகையில் அது ‘பரலோகத்தைவிட்டு இறங்கி வரும்.’
11 “புதிய பூமி” என்பது புதிய மனித சமுதாயம்; இந்தச் சமுதாயத்தினர் கடவுளுடைய அரசாங்கத்திற்கு உள்ளப்பூர்வமாய்க் கீழ்ப்படிவதை செயலில் காட்டியிருப்பார்கள். கடவுளுடைய மக்கள் இப்போது ஆன்மீகப் பூஞ்சோலையில் இருந்தாலும், ‘வரப்போகும் உலகத்தில்’ ஆம், பூஞ்சோலையான பூமியில், முழுமையான அர்த்தத்தில் அதை அனுபவிப்பார்கள். (எபி. 2:5) நாம் எப்படி இந்தப் புதிய பூமியின் பாகமாக இருக்க முடியும்?
யெகோவாவின் மகா நாளுக்குத் தயாராகுங்கள்
12. யெகோவாவின் நாளைக் கண்டு இந்த உலகத்தார் ஏன் அதிர்ச்சி அடைவார்கள்?
12 யெகோவாவின் நாள் ‘திருடனை’ போல் இரகசியமாக, கொஞ்சமும் எதிர்பாராத சமயத்தில் வரும் என்று பவுலும் பேதுருவும் முன்னறிவித்தார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:1, 2-ஐ வாசியுங்கள்.) சொல்லப்போனால், அந்த நாளுக்காகக் காத்திருக்கும் உண்மை கிறிஸ்தவர்கள்கூட அது திடீரென்று வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள். (மத். 24:44) ஆனால், இந்த உலக மக்களுக்கு இது வெறுமனே அதிர்ச்சியாக மட்டும் இருக்கப்போவதில்லை. பவுல் இவ்வாறு எழுதினார்: ‘“இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று அவர்கள் [யெகோவாவிடமிருந்து விலகியிருப்பவர்கள்] சொல்லும்போது, ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவ வேதனை வருவதுபோல் எதிர்பாரா நேரத்தில் அழிவு திடீரென்று அவர்கள்மீது வரும்; அவர்களால் தப்பிக்கவே முடியாது.’—1 தெ. 5:3.
13. “சமாதானம், பாதுகாப்பு!” என்ற பிரச்சாரத்தைக் கேட்டு நாம் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
13 “சமாதானம், பாதுகாப்பு!” என்ற பிரச்சாரம் சாத்தான் பரப்பும் மற்றொரு பொய்; ஆனால், யெகோவாவின் ஊழியர்கள் இந்தப் பொய் பிரச்சாரத்தைக் கேட்டு ஏமாந்துவிட மாட்டார்கள். “நீங்கள் இருளில் இருப்பவர்கள் அல்ல; எனவே, வெளிச்சத்தில் திடீரென அகப்பட்டுக்கொள்கிற திருடர்களைப் போல் நீங்கள் அந்த நாளில் அகப்பட்டுக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எல்லாரும் ஒளியின் பிள்ளைகளாகவும் பகலின் பிள்ளைகளாகவும் இருக்கிறீர்கள்” என்று பவுல் எழுதினார். (1 தெ. 5:4, 5) எனவே, நாம் எப்போதும் வெளிச்சத்திலேயே இருப்போமாக; ஆம், சாத்தானின் இருண்ட உலகத்திலிருந்து தொலைவில் இருப்போமாக. பேதுரு எழுதினார்: “அன்பானவர்களே, இவற்றை முன்கூட்டியே அறிந்திருக்கிற நீங்கள், நெறிகெட்டவர்களுடைய [கிறிஸ்தவ சபையிலுள்ள பொய்ப் போதகர்களுடைய] தவறான கருத்துகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு நிலைதடுமாறிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.”—2 பே. 3:17.
14, 15. (அ) யெகோவா எப்படி நம்மைக் கௌரவிக்கிறார்? (ஆ) என்ன முக்கியமான வார்த்தைகளை நம் மனதில் பதிய வைக்க வேண்டும்?
14 ‘எச்சரிக்கையாக இருந்தால்’ போதும் என்று மட்டுமே யெகோவா நம்மிடம் சொல்லவில்லை. மாறாக, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை ‘முன்கூட்டியே’ அவர் நமக்கு அன்போடு அளித்திருக்கிறார். இதன்மூலமாக அவர் நம்மை கௌரவித்திருக்கிறார்!
15 ஆனால், வருத்தகரமான விஷயம் என்னவென்றால், விழிப்புடன் இருக்கும்படி சொல்லப்படும் எச்சரிப்புகளை இன்று சிலர் அசட்டை செய்துவிடுகிறார்கள், அதுமட்டுமா, சந்தேகிக்கவும் செய்கிறார்கள். ‘இதையே கேட்டு கேட்டு காது புளித்துப் போய்விட்டது’ என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் இப்படி நினைக்கிறவர்கள், உண்மையுள்ள அடிமை வகுப்பாரை மட்டுமல்ல யெகோவாவையும் அவருடைய மகனையும்கூட சந்தேகிக்கிறார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அந்த நாளுக்காக “காத்திரு” என்று யெகோவா சொன்னார். (ஆப. 2:3) அதேபோல், “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்கள் எஜமானர் எந்த நாளில் வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது” என்று இயேசு சொன்னார். (மத். 24:42) அதோடு, பேதுருவும் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்! அதேசமயத்தில், யெகோவாவின் நாளை நாம் எப்போதும் மனதில் வைத்து அதற்காக ஆவலோடு காத்திருக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.” (2 பே. 3:11, 12) உண்மையுள்ள அடிமை வகுப்பும் சரி, அதன் ஆளும் குழுவும் சரி, இந்த முக்கியமான வார்த்தைகளை ஒருநாளும் ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ள மாட்டார்கள்!
16. எப்படிப்பட்ட மனநிலையை நாம் தவிர்க்க வேண்டும், ஏன்?
16 உண்மையில், ‘தீய அடிமைதான்’ எஜமானர் வர தாமதிக்கிறார் என நினைப்பான். (மத். 24:48) இந்தத் தீய அடிமை 2 பேதுரு 3:3, 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதியைச் சேர்ந்தவன். ‘கடைசி நாட்களில், கேலி செய்கிறவர்கள் தோன்றுவார்கள்; அவர்கள் தங்களுடைய ஆசைகளின்படி நடந்து’ யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறவர்களை ஏளனம் செய்வார்கள். இப்படிப்பட்ட கலகக்காரர்கள் கடவுளின் சேவையில் கவனத்தை ஊன்றி அவருடைய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதிலாக தங்களுடைய சுயநல ஆசைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இதுபோன்ற அசட்டையான, ஆபத்தான மனநிலை நமக்குள் துளிர்விட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது! மாறாக, ‘நம் எஜமானருடைய பொறுமை நமக்கு மீட்பு’ தரும் என்று எண்ணி பிரசங்க வேலையையும் சீடராக்கும் வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்வோமாக; அதேசமயம், யெகோவா தேவன் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற எதிர்கால சம்பவங்கள் எப்போது நடக்கும் என்பதை எண்ணி அதிக கவலைபட வேண்டியதுமில்லை.—2 பே. 3:15; அப்போஸ்தலர் 1:6, 7-ஐ வாசியுங்கள்.
இரட்சிப்பின் தேவனை நம்புங்கள்
17. எருசலேமைவிட்டு ஓடிவிடும்படி இயேசு கொடுத்த கட்டளைக்கு இசைவாக உண்மை கிறிஸ்தவர்கள் எப்படிச் செயல்பட்டார்கள், ஏன்?
17 ரோம படை கி.பி. 66-ஆம் வருடம் யூதேயாவைத் தாக்கிய பின் உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவின் கட்டளைக்கு இணங்கி அவர்களுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே எருசலேமைவிட்டு ஓடினார்கள். (லூக். 21:20-23) அவர்கள் ஏன் உறுதியாகவும் உடனடியாகவும் செயல்பட்டார்கள்? அவர்கள் இயேசுவின் எச்சரிப்பை மனதில் பதிய வைத்திருந்தார்கள் என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம். ஆனால், இயேசு முன்னரே எச்சரித்தபடி, அவர்கள் எடுத்த தீர்மானத்தினால், நிச்சயம் சில கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். அதேசமயம், யெகோவா தம்முடைய உண்மை ஊழியர்களை ஒருகாலும் கைவிட மாட்டார் என்பதையும் அறிந்திருந்தார்கள்.—சங். 55:22.
18. லூக்கா 21:25-28-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை வாசிக்கும்போது வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தைக் குறித்து நீங்கள் எப்படி உணருவீர்கள்?
18 நாமும் யெகோவாவையே மலைபோல் நம்பியிருக்க வேண்டும்; ஏனென்றால், சரித்திரம் காணாத படுபயங்கரமான ஓர் உபத்திரவத்தை இந்த உலகம் சந்திக்கும்போது அவர் ஒருவரால் மட்டுமே நம்மை அதிலிருந்து காப்பாற்ற முடியும். மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு ஒரு கட்டத்தில்—ஆனால் இந்த உலகத்தின் மீதி பாகத்தை யெகோவா நியாயந்தீர்ப்பதற்கு முன்பு—“உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்கிற பயத்தில் மக்களுக்குத் தலைசுற்றும்.” கடவுளுடைய எதிரிகள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் யெகோவாவின் உண்மை ஊழியர்களோ கொஞ்சமும் பயப்படாமல் இருப்பார்கள். சொல்லப்போனால், தங்களுக்கு மீட்பு விரைவில் வரப்போவதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.—லூக்கா 21:25-28-ஐ வாசியுங்கள்.
19. அடுத்த கட்டுரையில் நாம் எதைக் குறித்து சிந்திப்போம்?
19 ஆம், உலகத்தோடும் அதன் ‘பஞ்சபூதங்களோடும்’ ஒட்டாமல் வாழ்பவர்களுக்கு எத்தனை அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது! என்றாலும், வரப்போகும் அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் நாம் வெறுமென தீயதைத் தவிர்த்தால் போதாது. யெகோவாவுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துகொள்ள வேண்டும், அவருக்குப் பிரியமான செயல்களைச் செய்ய வேண்டும். அடுத்த கட்டுரையில் இதையே சிந்திப்போம்.—2 பே. 3:11.
[அடிக்குறிப்பு]
a உலக சிந்தை ஊக்குவிக்கிற குணங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 389-393-ஐப் பாருங்கள்.
விளக்க முடியுமா?
• இன்றுள்ள ‘வானமும்’ ‘பூமியும்’ எதைக் குறிக்கின்றன?
• “பஞ்சபூதங்கள்” எதை அர்த்தப்படுத்துகின்றன?
• “புதிய வானமும் புதிய பூமியும்” எதைக் குறிக்கின்றன?
• கடவுளை நாம் ஏன் மலைபோல் நம்பியிருக்கிறோம்?
[பக்கம் 5-ன் படம்]
நம் ‘இருதயத்தைக் காத்துக்கொண்டு,’ எப்படி இந்த உலகத்திலிருந்து பிரிந்திருக்கலாம்?
[பக்கம் 6-ன் படம்]
‘நம் எஜமானருடைய பொறுமை நமக்கு மீட்பு என்று எண்ணுவதை’ எப்படிச் செயலில் காட்டுகிறோம்?