ஒளிப் பிரகாசங்கள் —பெரியவையும் சிறியவையும்—ப கு தி ஒ ன் று
“நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.”—நீதிமொழிகள் 4:18.
1. சத்தியம் ஏன் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது?
நீதிமொழிகள் 4:18-க்கு இசைவாக, ஆவிக்குரிய சத்தியங்கள் ஒளிப் பிரகாசங்கள் மூலமாகப் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது, தெய்வீக ஞானத்தின் நிரூபணமாக இருக்கிறது. அப்போஸ்தலர் காலங்களில் இந்த வசனம் எவ்வாறு நிறைவேறியது என்று முந்தின கட்டுரையில் கண்டோம். வேதப்பூர்வ சத்தியம் அனைத்தும் மொத்தமாக ஒரே சமயத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அது தாங்கிக்கொள்ள முடியாததாகவும் குழப்பமூட்டுவதாகவும் இருந்திருக்கும்—ஓர் இருண்ட குகையிலிருந்து பளிச்சிடும் சூரியவொளியிடம் வருவதை ஒத்திருக்கும். மேலுமாக, படிப்படியாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைத் தொடர்ச்சியான விதத்தில் பலப்படுத்துகிறது. அது அவர்களுடைய நம்பிக்கையை அதிக பிரகாசமானதாகவும் அவர்கள் நடக்கவேண்டிய பாதையை முன்னிருந்ததைவிட தெளிவாகவும் ஆக்குகிறது.
“உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”
2. இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு ஆவிக்குரிய ஒளியைக் கொண்டுவருவதற்கு யாரைப் பயன்படுத்தப்போவதாக குறிப்பிட்டார், மேலும் அந்த செயல்துணை எவரை உள்ளடக்குகிறது?
2 அப்போஸ்தலர் காலங்களில், இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றியவர்களுக்கு ஒளியின் ஆரம்ப பிரகாசங்களை அளிப்பதற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட முறைகளைப் பயன்படுத்துதைத் தெரிந்துகொண்டார். இதற்கு நாம் இரண்டு உதாரணங்களைக் கொண்டிருக்கிறோம்: பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே மற்றும் பொ.ச. 36-ல் கொர்நேலியுவின் மதமாற்றம். அதற்குப்பின், அவர் முன்னுரைத்தது போலவே, ஒரு மனித செயல்துணையைப் பயன்படுத்துவதைக் கிறிஸ்து தெரிந்துகொண்டார்: “ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் [“அடிமை,” NW] யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:45-47) இந்த அடிமை வெறும் ஒரு தனி நபராக இருக்க முடியாது, ஏனென்றால் பெந்தெகொஸ்தே அன்று கிறிஸ்தவ சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து எஜமானாகிய இயேசு கிறிஸ்து கணக்குக் கேட்க வரும்வரையாக அவன் ஆவிக்குரிய உணவை அளிக்கவேண்டியதாக இருந்தது. குறிப்பிட்ட எந்தவொரு சமயத்திலும் பூமியிலிருக்கும் எல்லா அபிஷேகம் செய்யப்பட்டவர்களையும் கொண்ட ஒரு தொகுதியை இந்த உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு உள்ளடக்குகிறது என்று உண்மைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
3. அடிமை வகுப்பின் ஆரம்பகால அங்கத்தினர்களுள் யாரெல்லாம் உட்படுத்தப்பட்டிருந்தனர்?
3 உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரின் முதல் அங்கத்தினரில் உட்பட்டிருந்தவர்கள் யாவர்? “என் ஆடுகளை மேய்ப்பாயாக,” என்ற இயேசுவின் கட்டளைக்கு இணங்கிய அப்போஸ்தலன் பேதுரு அதில் ஒருவர். (யோவான் 21:17) அடிமை வகுப்பின் ஆரம்பகால அங்கத்தினர்களில், தன் பெயரைத் தாங்கிய சுவிசேஷத்தை எழுதிய மத்தேயு, ஏவப்பட்ட கடிதங்களை எழுதிய பவுல், யாக்கோபு, யூதா ஆகியோரும் உட்பட்டிருந்தனர். வெளிப்படுத்துதல் புத்தகம், தன் சுவிசேஷம், தன் கடிதங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்த அப்போஸ்தலன் யோவானும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பின் ஒரு அங்கத்தினராக இருந்தார். இயேசுவின் கட்டளைக்கு இணங்க அவர்கள் எழுதினார்கள்.
4. ‘வேலைக்காரர்’ யாவர்?
4 பூமியில் எங்கு வாழ்ந்தாலும் சரி, அபிஷேகம் செய்யப்பட்டோர் ஒரு மொத்த தொகுதியாக அடிமை வகுப்பின் அங்கத்தினர்களாக இருப்பார்களானால், அந்த ‘வேலைக்காரர்’ யாவர்? அவர்களும் அபிஷேகம் செய்யப்பட்ட அதே நபர்கள்தான், ஆனால் வேறொரு நோக்குநிலையிலிருந்து—தனிநபர்களாக—கருதப்படுகையில் அப்படி இருக்கிறார்கள். ஆம், ஆவிக்குரிய உணவை அளிக்கிறார்களா அல்லது அதில் பங்கெடுக்கிறார்களா என்பதைப் பொறுத்து அவர்கள் தனி நபர்களாக ‘அடிமையை’ சேர்ந்தவர்களாக அல்லது ‘வேலைக்காரராக’ இருப்பார்கள். உதாரணமாக: 2 பேதுரு 3:15, 16-ல் பதிவு செய்யப்பட்டபடி, பவுலின் கடிதங்களை அப்போஸ்தலன் பேதுரு மேற்கோள் காட்டுகிறார். அவற்றை வாசிக்கும்போது, அடிமை வகுப்பின் ஒரு பிரதிநிதியாகிய பவுலால் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய உணவை உட்கொள்ளும் வேலைக்காரரில் ஒருவரைப்போல் பேதுரு இருப்பார்.
5. (அ) அப்போஸ்தலருக்குப் பின்னான நூற்றாண்டுகளின்போது அந்த அடிமைக்கு என்ன சம்பவித்தது? (ஆ) 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் என்ன வளர்ச்சிகள் ஏற்பட்டன?
5 இதைக் குறித்து, கடவுளுடைய ஆயிர வருட ராஜ்யம் நெருங்கிவிட்டது (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிட்டது: “எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலருடைய மரணத்திற்குப் பிறகு நூற்றாண்டுகளினூடே ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பு எப்படி இருந்தது, எவ்வாறு செயல்பட்டது என்பதைப்பற்றிய தெளிவான சரித்திரப் பதிவு நம்மிடமில்லை. ‘அடிமை’ வகுப்பின் ஒரு தலைமுறை அதைத் தொடர்ந்துவரும் அடுத்த தலைமுறைக்கு உணவளித்திருக்க வேண்டும். (2 தீமோத்தேயு 2:2) ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பரிசுத்த பைபிளின் ஆவிக்குரிய உணவை நேசித்த மற்றும் அதை உட்கொள்ள விரும்பிய கடவுள்-பயமுள்ள ஆட்கள் இருந்தனர் . . . பைபிள் படிப்பு வகுப்புகள் . . . அமைக்கப்பட்டு, பரிசுத்த வேத வசனங்களின் அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்வதில் முன்னேறின. இந்த பைபிள் மாணாக்கர்களில் நேர்மையாகவும் தன்னலமற்றவர்களாகவும் இருந்தவர்கள், ஆவிக்குரிய உணவின் இந்த முக்கியமான பகுதிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களாய் இருந்தனர். தேவையான ஆவிக்குரிய ‘உணவை ஏற்றவேளையில்’ அந்த ‘வேலைக்காரருக்கு’ கொடுக்கும்படியாக நியமிக்கப்பட்ட ‘அடிமையின்’ உண்மையுள்ள மனநிலையை அவர்கள் கொண்டிருந்தனர். உணவை அளிப்பதற்கான சரியான, ஏற்ற சமயம் அதுவே என்றும் அதைப் பகிர்ந்தளிப்பதற்கு மிகச் சிறந்த உதவிப் பொருட்கள் எவை என்றும் கண்டுணரும் விதத்தில் அவர்கள் ‘விவேகமுள்ளவர்களாய்’ இருந்தனர். அதை அளிக்க முயன்றனர்.”—பக்கங்கள் 344-5.a
நவீன காலங்களில் ஆரம்ப ஒளிப் பிரகாசங்கள்
6. சத்தியம் படிப்படியாக வெளிப்படுத்தப்படுவதன் சம்பந்தமாக எந்த உண்மை மேலோங்கி நிற்கிறது?
6 ஆவிக்குரிய வெளிச்சத்தில் இந்தப் படிப்படியான அதிகரிப்பைக் கொண்டுவருவதற்கு யெகோவா பயன்படுத்தியவர்களைக் குறித்ததில் மேலோங்கி நிற்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் எந்தப் புகழையும் தங்களுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களுடைய அற்ப திறன்களைப் பயன்படுத்த கர்த்தர் பிரியப்பட்டார் என்பதே உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் பிரஸிடென்ட்டான சி. டி. ரஸலின் மனநிலையாக இருந்தது. அவருடைய பகைவர்கள் பயன்படுத்திவந்த அடைமொழிகளைக் குறித்ததில், “ரஸலைச் சேர்ந்தவர்” (Russellite) என்றழைக்கப்படக்கூடிய எவரையும் தான் ஒருபோதும் பார்த்ததில்லை என்றும் “ரஸலத்துவம்” (Russellism) என்பதாக ஒன்றும் இல்லை என்றும் சகோதரர் ரஸல் பலமாக வலியுறுத்தினார். எல்லா புகழும் கடவுளுக்குச் சென்றது.
7. சகோதரர் ரஸலும் அவருடன் உழைத்தவர்களும் நிச்சயமாகவே உண்மையும் விவேகமுமுள்ள அடிமையுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு என்ன அத்தாட்சியை அளித்தனர்?
7 விளைவுகளை வைத்து தீர்ப்பு செய்தால், சகோதரர் ரஸல் மற்றும் அவரோடு தொடர்பு கொண்டவர்களின் முயற்சிகளை யெகோவாவின் பரிசுத்த ஆவி உந்துவித்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. உண்மையும் விவேகமுமுள்ள அடிமையோடு தொடர்புடையவர்கள் என்பதற்கு அவர்கள் சான்றளித்தனர். பைபிளானது கடவுளால் ஏவப்பட்ட வார்த்தை என்றும், இயேசு கடவுளுடைய குமாரன் என்றும் நம்புவதாக அப்போதிருந்த மதக் குருக்கள் அநேகர் உரிமைபாராட்டினபோதிலும், திரித்துவம், மனித ஆத்துமா அழியாமை, நித்திய வாதனை போன்ற பொய்யான, பாபிலோனிய கோட்பாடுகளை அவர்கள் ஆதரித்துவந்தார்கள். இயேசுவின் வாக்குறுதிக்கு இசைவாக, சகோதரர் ரஸல் மற்றும் அவருடைய கூட்டாளிகளின் மனத்தாழ்மையுள்ள முயற்சிகள், உண்மையில் பரிசுத்த ஆவியின் காரணமாகவே, சத்தியத்தை முன்னொருபோதும் இராத வகையில் பிரகாசிக்க வைத்தன. (யோவான் 16:13) அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பைபிள் மாணாக்கர்கள், எஜமானுடைய வேலைக்காரருக்கு ஆவிக்குரிய உணவைக் கொடுக்கும் வேலையைச் செய்யும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பின் பாகமாக தாங்கள் உண்மையில் இருந்தனர் என்பதற்கு சான்றளித்தனர். அபிஷேகம் செய்யப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பதில் அவர்களுடைய முயற்சிகள் பேருதவியாக இருந்தன.
8. யெகோவா, பைபிள், இயேசு கிறிஸ்து, மற்றும் பரிசுத்த ஆவியைப்பற்றி பைபிள் மாணாக்கர்கள் என்ன அடிப்படை உண்மைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர்?
8 இந்த ஆரம்பகால பைபிள் மாணாக்கர்களை யெகோவா தம் பரிசுத்த ஆவியின்மூலம், ஒளிப் பிரகாசங்களுடன் எந்தளவுக்கு அதிகமாக ஆதரித்தார் என்பதை காண்பது குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. முதலாவதாக, சிருஷ்டிகர் இருக்கிறார் என்றும் அவருக்கு யெகோவா என்ற தனிச்சிறப்பான பெயர் இருக்கிறது என்றும் அவர்கள் உறுதியாக நிரூபித்தார்கள். (சங்கீதம் 83:17; ரோமர் 1:20) யெகோவாவுக்கு வல்லமை, நீதி, ஞானம், அன்பு என்ற நான்கு அடிப்படை பண்புகள் இருப்பதைக் கண்டறிந்தனர். (ஆதியாகமம் 17:1; உபாகமம் 32:4; ரோமர் 11:33; 1 யோவான் 4:8) பைபிள் கடவுளுடைய வார்த்தை என்றும் அதுவே சத்தியம் என்றும் அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் தெளிவாக நிலைநாட்டினார்கள். (யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16, 17) மேலுமாக, கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, சிருஷ்டிக்கப்பட்டவரென்றும் அவர் தம்முடைய உயிரை மனிதவர்க்கம் முழுவதற்கும் கிரயமாகக் கொடுத்தார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். (மத்தேயு 20:28; கொலோசெயர் 1:15) திரித்துவத்தின் மூன்றாவது ஆளாக இருப்பதற்கு முற்றிலும் மாறாக, பரிசுத்த ஆவி கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தியாக இருப்பதாகக் காணப்பட்டது.—அப்போஸ்தலர் 2:17.
9. (அ) மனிதனுடைய இயல்பையும் பைபிள் முன்வைக்கக்கூடிய எதிர்பார்ப்புகளையும் குறித்த என்ன சத்தியங்களை பைபிள் மாணாக்கர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்? (ஆ) மேலும் என்ன சத்தியங்களை யெகோவாவின் ஊழியர்கள் தெளிவாகக் கண்டறிந்தனர்?
9 மனிதன் ஒரு அழியாத ஆத்துமாவைக் கொண்டில்லை, ஆனால் அழியும் ஒரு ஆத்துமாவாகவே இருக்கிறான் என்று பைபிள் மாணாக்கர்கள் தெளிவாகக் கண்டார்கள். எரியும் நரகம் என ஒன்று இல்லையாதலால், “பாவத்தின் சம்பளம் மரணம்” என்றும் நித்திய வாதனை அல்ல என்றும் அவர்கள் அறிந்துகொண்டனர். (ரோமர் 5:12; 6:23; ஆதியாகமம் 2:7; எசேக்கியேல் 18:4) மேலுமாக, பரிணாமக் கோட்பாடு வேதப்பூர்வமற்றது மட்டுமல்லாமல் முற்றிலும் உண்மையான ஆதாரமற்றது என்பதை அவர்கள் தெளிவாகக் கண்டார்கள். (ஆதியாகமம், அதிகாரங்கள் 1 மற்றும் 2) பைபிள் இரண்டு எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறது என்பதையும் அவர்கள் உணர்ந்துகொண்டனர்—கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்ட 1,44,000 பேருக்குப் பரலோகத்துக்குரியதும், ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த எண்ணற்ற ‘திரள் கூட்டத்தினருக்கு’ ஒரு பரதீஸான பூமிக்குரியதுமான எதிர்பார்ப்பு. (வெளிப்படுத்துதல் 7:9, NW; 14:1; யோவான் 10:16) பூமி என்றைக்கும் நிலைத்திருக்கும் என்றும், பல மதங்களில் போதிக்கப்படுகிறபடி எரிக்கப்படப்போவதில்லை என்றும் அந்த ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் உணர்ந்துகொண்டனர். (பிரசங்கி 1:4; லூக்கா 23:43) கிறிஸ்துவின் வருகை காணக்கூடாததாக இருக்கும் என்றும் அப்போது அவர் தேசங்கள்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றி, பூமிக்குரிய ஒரு பரதீஸை ஏற்படுத்துவார் என்றும் அவர்கள் கற்றறிந்தனர்.—அப்போஸ்தலர் 10:42; ரோமர் 8:19-21; 1 பேதுரு 3:18.
10. முழுக்காட்டுதல், குருவர்க்கத்தினர்-பாமரர் பாகுபாடு, கிறிஸ்துவினுடைய மரணத்தின் நினைவு ஆசரிப்பு ஆகியவற்றைக் குறித்து பைபிள் மாணாக்கர்கள் என்ன சத்தியத்தைக் கற்றுக்கொண்டார்கள்?
10 வேதப்பூர்வ முழுக்காட்டுதல், குழந்தைகள்மீது தண்ணீரைத் தெளிப்பது அல்ல, ஆனால் மத்தேயு 28:19, 20-லுள்ள இயேசுவின் கட்டளைக்கு இசைவாக, கற்பிக்கப்பட்ட விசுவாசிகள் மூழ்கி எழும்படிச் செய்வதாகும் என்று பைபிள் மாணாக்கர்கள் கற்றறிந்தனர். குருவர்க்கத்தினர்-பாமரர் என்ற பாகுபாட்டிற்கு எவ்வித வேதப்பூர்வ அடிப்படையும் இல்லை என்பதை அவர்கள் காண ஆரம்பித்தனர். (மத்தேயு 23:8-10) மாறாக, கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்செய்தியின் பிரசங்கிகளாக இருக்கவேண்டும். (அப்போஸ்தலர் 1:8) கிறிஸ்துவினுடைய மரணத்தின் நினைவு ஆசரிப்பு, வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே, நிசான் 14 அன்று அனுசரிக்கப்படவேண்டும் என்பதை பைபிள் மாணாக்கர்கள் மதித்துணர்ந்தனர். மேலுமாக, ஈஸ்டர் ஒரு புறமத கொண்டாட்டம் என்பதைக் கண்டனர். இதோடுகூட, அந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், தங்களுடைய வேலையைக் கடவுள் ஆதரிப்பதைக் குறித்து அவ்வளவு நம்பிக்கையுள்ளவர்களாக இருந்ததால், ஒருபோதும் காணிக்கைகளை வசூல் செய்யவில்லை. (மத்தேயு 10:8) கிறிஸ்தவர்கள் பைபிள் நியமங்களின்படி வாழவேண்டும் என்பதை மிக ஆரம்ப காலங்களிலிருந்தே புரிந்துகொண்டனர்; கடவுளுடைய ஆவியின் கனிகளை வளர்ப்பதையும் இது உட்படுத்துகிறது.—கலாத்தியர் 5:22, 23.
ஒளிப் பிரகாசங்களின் அதிகரிப்பு
11. கிறிஸ்தவனின் வேலையைக் குறித்தும் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் உவமையைக் குறித்தும் என்ன ஒளிப் பிரகாசித்தது?
11 குறிப்பாக 1919 முதற்கொண்டு, யெகோவாவின் ஊழியர்கள் அதிகப்படியான ஒளிப் பிரகாசங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர். உவாட்ச் டவர் சொஸைட்டியின் இரண்டாம் பிரஸிடென்ட் ஜே. எஃப். ரதர்ஃபர்டு, “ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்” என்பதை நிறைவேற்றுவதே யெகோவாவின் ஊழியர்களுடைய தலையாய கடமை என்று 1922 சீடர் பாயின்ட் மாநாட்டில் நன்கு அழுத்திக் காண்பித்தபோது, எப்பேர்ப்பட்ட பிரகாசமான ஒளி வீசியது! அதற்கு அடுத்த வருடத்தில்தானே, செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமையின்மீது பிரகாசமான ஒளி வீசியது. தற்போதைய கர்த்தருடைய நாளில் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற்றம் அடையவேண்டியதாக இருந்தது என்றும், முன்னர் எண்ணப்பட்டதுபோல் எதிர்காலத்தில் ஆயிர வருட ஆட்சியில் அல்ல என்றும் காணப்பட்டது. ஆயிர வருட ஆட்சியின்போது, கிறிஸ்துவின் சகோதரர்கள் வியாதிப்பட்டிருக்கவும் மாட்டார்கள், சிறைப்பட்டிருக்கவும் மாட்டார்கள். இது மட்டுமல்லாமல், ஆயிர வருட ஆட்சியின் முடிவில், இயேசு கிறிஸ்து அல்ல, யெகோவா தேவனே நியாயத்தீர்ப்பைச் செய்வார்.—மத்தேயு 25:31-46.
12. அர்மகெதோனைக் குறித்து என்ன பிரகாசமான ஒளி வீசியது?
12 பைபிள் மாணாக்கர்கள் ஒருகாலத்தில் நினைத்ததுபோல, அர்மகெதோன் யுத்தம் ஒரு சமூக புரட்சியாக இருக்கப்போவதில்லை என்று 1926-ல், பளிச்சிடும் மற்றுமொரு ஒளிப் பிரகாசம் வெளிப்படுத்தியது. மாறாக, யெகோவாவே கடவுள் என்று எல்லா மக்களும் நம்பும்விதத்தில் அவ்வளவு தெளிவாக அவர் தம்முடைய வல்லமையை வெளிக்காட்டும் ஒரு போராக அது இருக்கும்.—வெளிப்படுத்துதல் 16:14-16; 19:17-21.
கிறிஸ்மஸ்—ஒரு புறமத பண்டிகை
13. (அ) கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைப்பற்றி என்ன ஒளிப் பிரகாசித்தது? (ஆ) பிறந்தநாட்கள் ஏன் இனிமேலும் கொண்டாடப்படவில்லை? (அடிக்குறிப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.)
13 கொஞ்சக்காலத்திற்குப்பின் ஒரு ஒளிப் பிரகாசம், பைபிள் மாணாக்கர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுவதை நிறுத்தும்படி செய்தது. அதற்கு முன்பு வரையாக, உலகெங்கும் பைபிள் மாணாக்கர்களால் கிறிஸ்மஸ் எப்போதுமே கொண்டாடப்பட்டு வந்தது; புரூக்லின் தலைமை அலுவலகத்தில் அதன் கொண்டாட்டம், மிகவும் களிப்பூட்டும் ஒரு சமயமாக இருந்தது. ஆனால், டிசம்பர் 25-ஐ அனுசரிப்பது உண்மையில் புறமத பழக்கமாக இருந்தது என்றும் புறமதத்தினரை மதமாற்றுவதை எளிதாக்குவதற்கு விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்தால் தெரிந்துகொள்ளப்பட்ட வழியென்றும் கண்டுகொள்ளப்பட்டது. மேலுமாக, குளிர்காலத்தில் இயேசு பிறந்திருக்க முடியாது என்பதாகக் காணப்பட்டது, ஏனென்றால், அவருடைய பிறப்பு காலத்தின்போது, வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்தனர்; டிசம்பர் பிற்பகுதியின் இரவுநேரத்தில் அவர்கள் செய்யாத ஒரு காரியம் அது. (லூக்கா 2:8) மாறாக, அக்டோபர் 1-ம் தேதியளவில் இயேசு பிறந்ததாக வேத வசனங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இயேசு பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்குப்பின் அவரைச் சந்திக்க வந்த ஞானிகள் எனப்பட்டவர்கள், புறமத மந்திர சாஸ்திரிகளாக இருந்தார்கள் என்பதையும் பைபிள் மாணாக்கர்கள் அறிந்துகொண்டனர்.b
ஒரு புதிய பெயர்
14. யெகோவாவின் மக்களுக்கு பைபிள் மாணாக்கர்கள் என்ற பெயர் ஏன் போதுமானதாக இருக்கவில்லை?
14 1931-ல் சத்தியத்தின் பிரகாசமான ஒளி அந்த பைபிள் மாணாக்கர்களுக்குப் பொருத்தமான வேதப்பூர்வ பெயர் ஒன்றை வெளிப்படுத்தியது. மற்றவர்கள் அவர்களுக்குக் கொடுத்திருந்த பட்டப்பெயர்களாகிய ரஸலைச் சேர்ந்தவர்கள், ஆயிரவருட விடியல்காரர்கள் (Millennial Dawnists), “நரகமற்றவர்கள்” (“no hellers”) ஆகியவற்றைப் போன்ற எதையும் தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை யெகோவாவின் மக்கள் புரிந்துகொண்டிருந்தனர்.c ஆனால் தாங்களாகவே வைத்துக் கொண்டிருந்த பெயராகிய சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் என்பதும் அவர்களைச் சரியாகப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் வெறும் பைபிள் மாணாக்கர்கள் மட்டும் அல்லர். அது மட்டுமல்லாமல், பைபிள் மாணாக்கர்களுடன் எவ்விதத்திலும் ஒத்தவர்களாய் இராத மற்றும் அநேகர் பைபிளின் மாணாக்கர்களாக இருந்தனர்.
15. 1931-ல் பைபிள் மாணாக்கர்கள் என்ன பெயரை ஏற்றார்கள், அது ஏன் பொருத்தமானதாக இருக்கிறது?
15 பைபிள் மாணாக்கர்கள் எவ்வாறு ஒரு புதிய பெயரைக் கொண்டிருக்கலாயினர்? பல வருடங்களாக காவற்கோபுரம் யெகோவாவின் பெயரை முதன்மைப்படுத்திக் கொண்டிருந்தது. ஆகவே, ஏசாயா 43:10-ல் காணப்படும் பெயரை பைபிள் மாணாக்கர்கள் ஏற்றுக்கொள்வது மிகவும் பொருத்தமாக இருந்தது: “நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை.”
நியாயநிரூபணமும் ‘திரள் கூட்டமும்’
16. திரும்ப நிலைநாட்டப்படுதலைக் குறித்த தீர்க்கதரிசனங்கள், மாம்சப்பிரகாரமான யூதர்கள் பலஸ்தீனாவிற்குத் திரும்பிச் சென்றதற்கு ஏன் பொருந்தவில்லை, ஆனால் யாருக்குப் பொருந்துகின்றன?
16 திரும்ப நிலைநாட்டுதலைக்குறித்து, ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோராலும் மற்ற தீர்க்கதரிசிகளாலும் பதிவுசெய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள், (ஒருகாலத்தில் நினைத்ததுபோல்) விசுவாசக்குறைவுடனும் அரசியல்சார்ந்த உள்நோக்குகளுடனும் பலஸ்தீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த மாம்சப்பிரகாரமான யூதர்களுக்குப் பொருந்துவதில்லை என்று ஒரு பிரகாசமான ஒளி, 1932-ல், உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட நியாயநிரூபணம் (ஆங்கிலம்) என்பதன் இரண்டாம் தொகுதியில் வெளிப்படுத்தியது. மாறாக, பொ.ச.மு. 537-ல் யூதர்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பியபோது சிறிய நிறைவேற்றத்தைக் கொண்டிருந்த திரும்ப நிலைநாட்டப்படுதலைக்குறித்த இந்தத் தீர்க்கதரிசனங்கள், 1919-ல் தொடங்கிய ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீட்பு மற்றும் திரும்ப நிலைநாட்டப்படுவதிலும் இன்று யெகோவாவின் உண்மை ஊழியர்களால் அனுபவிக்கப்படும் ஆவிக்குரிய பரதீஸில் விளைவடைந்திருக்கும் செழுமையிலும் பெரிய நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தன.
17, 18. (அ) யெகோவாவின் பிரதான நோக்கம் என்ன என்பதாக காலப்போக்கில் ஒரு பிரகாசமான ஒளியின்மூலம் காண்பிக்கப்பட்டது? (ஆ) வெளிப்படுத்துதல் 7:9-17-ஐக் குறித்து 1935-ல் என்ன பிரகாசமான ஒளி வீசியது?
17 மனிதரின் மீட்பு அல்ல, ஆனால் யெகோவாவின் அரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதே அவருடைய பிரதான நோக்கம் என்பதைக் காலப்போக்கில், ஒளிப் பிரகாசங்கள் வெளிப்படுத்தின. பைபிளின் மிக முக்கிய பொருளானது, மீட்பின் கிரயம் அல்ல, ஆனால் ராஜ்யமே, ஏனென்றால் அதுவே யெகோவாவின் அரசுரிமையை நியாயநிரூபணம் செய்யும் என்பதாகக் காணப்பட்டது. என்னே ஓர் பிரகாசமான ஒளி அது! ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, தாங்கள் பரலோகத்திற்குச் செல்வது இனிமேலும் பிரதான அக்கறையாக இருக்கவில்லை.
18 1935-ல், வெளிப்படுத்துதல் 7:9-17-ல் குறிப்பிடப்பட்டுள்ள திரள் கூட்டம், இரண்டாந்தரமான பரலோகத் தொகுதியாக இருக்கவில்லை என்று ஒரு பிரகாசமான ஒளி வெளிப்படுத்தியது. அந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், முழு அளவில் உண்மையாக இல்லாதிருந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் சிலர் என்றும், அதன் காரணமாகவே, ஆட்சி செய்பவர்களாக இயேசு கிறிஸ்துவோடு ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் சிங்காசனத்தில் உட்கார்ந்து இருப்பதற்குப் பதிலாக சிங்காசனத்திற்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள் என்றும் கருதப்பட்டிருந்தது. ஆனால், அரைகுறையாக உண்மையுடன் இருத்தல் என்பதாக ஒன்று இல்லவே இல்லை. ஒருவர் உண்மையுள்ளவராக இருக்கிறார் அல்லது உண்மையற்றவராக இருக்கிறார். ஆகவே, எல்லா தேசங்களிலிருந்தும் இப்போது கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகிற, பூமிக்குரிய நம்பிக்கையை உடைய எண்ணிலடங்கா திரள் கூட்டத்தினரை இந்தத் தீர்க்கதரிசனமானது குறிப்பிட்டது என்பது கண்டுகொள்ளப்பட்டது. மத்தேயு 25:31-46-ல் சொல்லப்பட்டுள்ள ‘செம்மறியாடுகளும்’ யோவான் 10:16-ல் சொல்லப்பட்டுள்ள ‘வேறே ஆடுகளும்’ இவர்களே.
சிலுவை—ஒரு கிறிஸ்தவ அடையாளம் அல்ல
19, 20. சிலுவை ஏன் உண்மை கிறிஸ்தவத்தின் ஓர் அடையாளமாக இருக்க முடியாது?
19 கிறிஸ்தவத்தின் முக்கியமான அடையாளமாக சிலுவையை பைபிள் மாணாக்கர்கள் அநேக வருடங்களாக வைத்திருந்தனர். ஆடையில் குத்திக்கொள்வதற்கு வசதியாக, “சிலுவையும் கிரீடமும்” உடைய ஒரு சின்னத்தைக்கூட வைத்திருந்தார்கள். கிங் ஜேம்ஸ் வர்ஷனின்படி, இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம், தங்களுடைய ‘சிலுவையை’ எடுத்துக்கொண்டு செல்லும்படி கூறினார்; மேலும் அவர் ஒரு சிலுவையில் கொல்லப்பட்டதாக அநேகர் நம்பத் தொடங்கினர். (மத்தேயு 16:24; 27:32) அநேக ஆண்டுகளாக இந்த அடையாளம் காவற்கோபுர பத்திரிகையின் அட்டையிலும் காணப்பட்டது.
20 ஒரு சிலுவையில் அல்ல, ஆனால் நேராக நிற்கும் கம்பத்தில், அல்லது ஒரு கழுமரத்தில் இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டார் என்று 1936-ல் பிரசுரிக்கப்பட்ட செல்வம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் தெளிவாக்கியது. ஒரு ஆதாரத்தின்படி, கிங் ஜேம்ஸ் வர்ஷனில் “சிலுவை” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை (ஸ்டாரஸ்) என்பது “அடிப்படையில், நேராக நிற்கும் ஒரு கம்பத்தை அல்லது கழுமரத்தைக் குறிக்கிறது. மதஞ்சார்ந்த வகையில் பெற்றிருக்கும் வடிவமாகிய இரு துண்டுகளாலான சிலுவையிலிருந்து [அது] வேறுபடுத்திக் காட்டப்படவேண்டும். . . . பின்குறிப்பிடப்பட்ட இது பண்டைய கல்தேயாவில் தோன்றியது, தம்மூஸ் என்ற கடவுளின் அடையாளமாக அது பயன்படுத்தப்பட்டது.” இயேசு அறைந்து கொல்லப்பட்ட கருவியை வழிபாட்டுக்குரியதாக்குவதற்கு முற்றிலும் மாறாக, எதிர்ப்புணர்ச்சியோடு கருத வேண்டும்.
21. அடுத்த கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
21 பெரிய ஒளிப் பிரகாசங்களுக்கும் சிறியவை என்பதாக எண்ணப்படக்கூடியவற்றிற்கும் மேலுமான உதாரணங்கள் இருக்கின்றன. இவற்றைப் பற்றிய கலந்தாலோசிப்பிற்கு, தயவுசெய்து அடுத்த கட்டுரையைப் பாருங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
b எக்காலத்தில் நேர்ந்த பிறப்புகளிலே அதிமுக்கியமான பிறப்பு கொண்டாடப்பட முடியாது என்றால், நாம் எந்தப் பிறந்தநாளையும் கொண்டாடக்கூடாது என்பது காலப்போக்கில் புரிந்துகொள்ளப்பட்டது. அது மட்டுமல்லாமல், இஸ்ரவேலரோ ஆரம்பகால கிறிஸ்தவர்களோ பிறந்தநாட்களைக் கொண்டாடவில்லை. பைபிள் இரண்டு பிறந்தநாட்களைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது, ஒன்று பார்வோனுடையது, மற்றொன்று ஏரோது அந்திப்பாவுடையது. ஒவ்வொரு கொண்டாட்டமும் ஒரு கொலையால் களங்கப்படுத்தப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் பிறந்தநாட்களைக் கொண்டாடுவதில்லை; ஏனென்றால் இந்த அனுசரிப்புகள் புறமத ஆரம்பங்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் பிறந்தநாளைக் கொண்டாடுபவரை மேன்மைப்படுத்தும் தன்மையுடையவை.—ஆதியாகமம் 40:20-22; மாற்கு 6:21-28.
c கிறிஸ்தவமண்டலத்தின் பல பிரிவுகளால் செய்யப்பட்ட ஒரு தவறாக இது இருந்தது. லூத்தரன் என்பது மார்ட்டின் லூத்தரைப் பின்பற்றியவர்களுக்கு அவருடைய எதிரிகள் இட்டு, பின்னர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டப்பெயராகும். அதேவிதமாக, பாப்டிஸ்ட்டுகள் முழுக்குவதன்மூலம் முழுக்காட்டுதல் கொடுப்பதன் காரணமாக வெளியாட்கள் அவர்களுக்கு வைத்த பட்டப்பெயரை ஏற்றுக்கொண்டார்கள். ஏறக்குறைய அதேவிதத்தில், மெத்தடிஸ்ட் அல்லாத ஒருவர் கொடுத்த பெயரை மெத்தடிஸ்ட்டுகள் ஏற்றுக்கொண்டனர். சொஸைட்டி ஆஃப் ஃபிரன்ட்ஸ் எவ்வாறு க்வேக்கர்ஸ் என்று அழைக்கப்படலாயினர் என்பதைக் குறித்து, தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “க்வேக்கர் என்ற வார்த்தை, ‘கர்த்தருடைய வார்த்தைக்கு நடுங்குங்கள்’ என்று ஒரு ஆங்கிலேய நீதிபதியிடம் சொன்ன, [அதை நிறுவிய] ஃபாக்ஸ் என்பவருக்கு அவமதிப்பாக இருக்கும்படி ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. அந்த நீதிபதி, ஃபாக்ஸை ஒரு ‘க்வேக்கர்’ [நடுங்குபவர்] என்றழைத்தார்.”
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” யார், ‘வேலைக்காரர்’ யாவர்?
◻ நவீன காலங்களில் தோன்றிய ஆரம்ப ஒளிப் பிரகாசங்களில் சில யாவை?
◻ யெகோவாவின் சாட்சிகள் என்ற புதிய பெயர் ஏன் பொருத்தமானதாய் இருந்தது?
◻ 1935-ல் என்ன முனைப்பான சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டன?
[பக்கம் 17-ன் படம்]
சி. டி. ரஸலும் அவருடைய கூட்டாளிகளும் ஆவிக்குரிய ஒளியைப் பரப்பினர், ஆனால் அதற்கான பாராட்டு அனைத்தும் யெகோவாவுக்கே சென்றது