நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள்
‘பொய் சொல்ல முடியாத கடவுள் வெகு காலத்திற்கு முன்பே வாக்குறுதி அளித்த முடிவில்லா வாழ்வு என்ற நம்பிக்கை [நமக்கு] இருக்கிறது.’ —தீத். 1:3.
மறுபார்வைக்கு
பரலோக நம்பிக்கையுள்ளவர் மரணம்வரை உத்தமராய் இருக்கும்போது பரலோகத்தில் சந்தோஷம் உண்டாகுமென நமக்கு எப்படித் தெரியும்?
வேறே ஆடுகளின் எதிர்பார்ப்பு எப்படிப் பரலோகத்திற்குப் போகிறவர்களுடைய நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளது?
நம்முடைய நம்பிக்கை நிறைவேறுவதைக் காண எத்தகைய ‘பரிசுத்த நடத்தையையும்,’ ‘தேவபக்திக்குரிய செயல்களையும்’ நாம் வெளிக்காட்ட வேண்டும்?
1. நாம் சகித்திருக்க யெகோவா தரும் நம்பிக்கை எப்படி உதவுகிறது?
யெகோவாவே “நம்பிக்கை அளிக்கிற கடவுள்.” இப்படிச் சொன்ன அப்போஸ்தலன் பவுல் தொடர்ந்து கூறினார்: ‘நம்முடைய விசுவாசத்தின் காரணமாக நம்மை எல்லாவிதச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவார்; அப்போது, கடவுளுடைய சக்தியினால் பலம் பெற்று, நம்பிக்கையில் பெருகுவோம்.’ (ரோ. 15:13) நம்பிக்கை நமக்குள் நிறைந்திருந்தால், எந்தச் சூழ்நிலையிலும் நம்மால் சகித்திருக்க முடியும்... நம் இதயத்தில் சந்தோஷமும் சமாதானமும் குடிகொண்டிருக்கும். பரலோகமோ... புதிய பூமியோ... நாம் எங்கு வாழப்போகிறவர்களாக இருந்தாலும்சரி, நம் நம்பிக்கை ‘உயிருக்கு நங்கூரம் போன்றது; உறுதியானது, நம்பகமானது.’ (எபி. 6:18, 19) புயல்போல் சோதனைகள் சூழ்ந்துகொள்ளும்போது நம் நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான், சந்தேகத்தினாலோ விசுவாசக் குறைவினாலோ வழுவிப்போக மாட்டோம்.—எபிரெயர் 2:1; 6:11-ஐ வாசியுங்கள்.
2. இன்று கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள் யாவை, சிறுமந்தையினருக்குத் தோள்கொடுப்பதைக் குறித்து ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்கள் ஏன் அக்கறையாக இருக்கிறார்கள்?
2 உலகின் முடிவு காலத்தில் வாழ்கிற கிறிஸ்தவர்களுக்குப் பரலோகத்தில் வாழும் நம்பிக்கையோ பூமியில் வாழும் நம்பிக்கையோ இருக்கிறது. இப்போது பூமியில் வாழும் ‘சிறுமந்தையினர்’ பரலோகத்தில் அழியா வாழ்வைப் பெறும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்; இவர்கள் கிறிஸ்துவின் அரசாங்கத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருப்பார்கள். (லூக். 12:32; வெளி. 5:9, 10) ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த “திரள் கூட்டமான மக்கள்” பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள்; இவர்கள் மேசியானிய அரசாங்கத்தில் குடிமக்களாக இருப்பார்கள். (வெளி. 7:9, 10; யோவா. 10:16) பூமியில் இன்னும் இருக்கிற கிறிஸ்துவின் ‘சகோதரர்களுக்கு,’ அதாவது சிறுமந்தையினருக்கு, தோள்கொடுத்தால் மட்டுமே மீட்புப் பெற முடியும் என்பதை வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. (மத். 25:34-40) சிறுமந்தையினரைப் போல வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும், தங்கள் பரிசை நிச்சயம் பெறுவார்கள். (எபிரெயர் 11:39, 40-ஐ வாசியுங்கள்.) முதலாவதாக, பரலோகத்திற்குச் செல்லப்போகிறவர்களுடைய நம்பிக்கையைப் பற்றிச் சிந்திப்போம்.
பரலோகத்திற்குப் போகிறவர்களின் “அசைக்க முடியாத நம்பிக்கை”
3, 4. பரலோகத்திற்குப் போகிறவர்கள் எப்படி ‘புதிய பிறப்பின்’ மூலம் ‘அசைக்க முடியாத நம்பிக்கையை’ பெறுகிறார்கள், அந்த நம்பிக்கை என்ன?
3 பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு எழுதிய இரண்டு கடிதங்களிலும் அவர்களை ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்தார். (1 பே. 1:2) அவர்களுக்கு இருக்கும் அருமையான நம்பிக்கையைப் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டார். முதல் கடிதத்தில் பேதுரு இவ்வாறு எழுதினார்: “நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமானவர் போற்றப்படுவாராக; அவர் இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழுப்பியதன் மூலம் தமது மகா இரக்கத்தின்படி எங்களுக்குப் புதிய பிறப்பை அளித்தார்; இதனால் அசைக்க முடியாத நம்பிக்கையை, அழியாத, மாசில்லாத, மறையாத ஆஸ்தியை, நாங்கள் பெற்றோம். அந்த ஆஸ்தி உங்களுக்காகவும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆம், விசுவாசத்தின் மூலம் கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் மீட்புக்கென்று கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிற உங்களுக்காகவும் அந்த ஆஸ்தி பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதைக் குறித்து உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.”—1 பே. 1:3-6.
4 பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆள தாம் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு ‘புதிய பிறப்பை’ யெகோவா தருகிறார். அவர் தமது சக்தியின் மூலம் அவர்களைத் தமது மகன்களாகத் தத்தெடுக்கிறார், கிறிஸ்துவோடு ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவிக்க நியமிக்கிறார். (வெளி. 20:6) இந்த ‘புதிய பிறப்பு,’ ‘அசைக்க முடியாத நம்பிக்கையை’ பெற அவர்களுக்கு வழிசெய்கிறது. இந்த நம்பிக்கையைத்தான், ‘பரலோகத்தில்’ வைக்கப்பட்டிருக்கிற “அழியாத, மாசில்லாத, மறையாத ஆஸ்தி” என பேதுரு அழைத்தார். பரலோகத்திற்குப் போகிறவர்கள் தங்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையைக் குறித்து “அளவில்லா மகிழ்ச்சி” அடைவதில் ஆச்சரியமில்லை! ஆனால், அந்த நம்பிக்கை ஈடேற கடைசிவரை அவர்கள் உண்மையுடன் இருக்க வேண்டும்.
5, 6. பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் உண்மையாய் நிலைத்திருக்க வேண்டும்?
5 பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் ‘அழைக்கப்பட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருப்பதால், கடைசிவரை அதற்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பதற்குத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்’ என பேதுரு தனது இரண்டாவது கடிதத்தில் அறிவுரை கூறினார். (2 பே. 1:10) விசுவாசம், தேவபக்தி, சகோதரப் பாசம், அன்பு போன்ற கிறிஸ்தவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள அவர்கள் முயல வேண்டுமெனக் குறிப்பிட்டார். “இந்தப் பண்புகள் உங்களுக்குள் அதிகமதிகமாகப் பெருகினால், . . . நீங்கள் செயலற்றவர்களாகவும் பலனற்றவர்களாகவும் ஆகிவிட மாட்டீர்கள்” என்று பேதுரு குறிப்பிட்டார்.—2 பேதுரு 1:5-8-ஐ வாசியுங்கள்.
6 ஆசியா மைனரில், பரலோக நம்பிக்கையுள்ள மூப்பர்கள் இருந்த பிலதெல்பியா சபையிடம் கிறிஸ்து சொன்னதாவது: “என் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன்படியே நடந்துகொண்டாய்; அதனால், பூமியெங்கும் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காக அவர்கள் அனைவர்மீதும் வரப்போகிற சோதனை நேரத்தில் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் சீக்கிரமாக வரப்போகிறேன். உன் கிரீடத்தை யாரும் எடுத்துப்போடாதபடி உன்னிடம் உள்ளவற்றை தக்க வைத்துக்கொள்.” (வெளி. 3:10, 11) மரணம்வரை உண்மையாய் நிலைத்திருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே ‘வாடாத கிரீடமான மகிமையின் கிரீடம்’ கொடுக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களில் ஒருவர் உண்மையற்றவராய் மாறினால் அந்தக் கிரீடத்தைப் பெற மாட்டார்.—1 பே. 5:4; வெளி. 2:10.
அரசாங்கத்திற்குள் அனுமதி
7. என்ன அருமையான நம்பிக்கையைக் குறித்து யூதா தனது கடிதத்தில் எழுதினார்?
7 சுமார் கி.பி. 65-ஆம் ஆண்டில், இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர் யூதா பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்; அவர்களை ‘அழைக்கப்பட்டவர்கள்’ என அதில் குறிப்பிட்டார். (யூ. 1; எபிரெயர் 3:1-ஐ ஒப்பிடுங்கள்.) பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ‘பொதுவாக’ உள்ள மீட்பைப் பற்றிக் கடிதம் எழுதலாம் என முதலில் அவர் நினைத்திருந்தார். (யூ. 3) ஆனால், வேறு முக்கிய விஷயங்களைக் குறித்து அவர்களுக்கு எழுத வேண்டியிருந்தது; இருந்தாலும், தான் எழுதிய சிறிய கடிதத்தின் முடிவில், பரலோகத்திற்குப் போகிற கிறிஸ்தவர்கள் பெற்றிருக்கும் அருமையான நம்பிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டார். “பாவக்குழியில் விழாதபடி உங்களைப் பாதுகாக்கவும், தமது மகிமைக்குமுன் உங்களைக் களங்கமற்றவர்களாகப் பெருமகிழ்ச்சியோடு நிறுத்தவும் வல்லவரான நம் கடவுளுக்கு, நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மகிமையும் மாட்சிமையும் வல்லமையும் அதிகாரமும் அன்றும் இன்றும் என்றும் இருப்பதாக!” என்று எழுதினார்.—யூ. 24, 25.
8. பரலோக நம்பிக்கையுள்ளவர் மரணம்வரை உத்தமராய் இருக்கும்போது பரலோகத்தில் சந்தோஷம் உண்டாகுமென நமக்கு எப்படித் தெரியும்?
8 பரலோக நம்பிக்கையுள்ளோர் ஒவ்வொருவரும் பாவக்குழியில் விழாதபடி தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உண்மையிலேயே விரும்புகிறார்கள். இயேசு கிறிஸ்து தங்களைப் பரலோகத்திற்குரிய உடலில் உயிர்த்தெழுப்பி, கடவுள் முன்னிலையில் நிற்கும் வாய்ப்பை அருளுவார் என்பதே அவர்கள் நம்பிக்கை. பரலோக நம்பிக்கையுள்ள ஒருவர் சாகும்வரை உண்மையுடன் நிலைத்திருக்கும்போது, ‘பரலோகத்திற்குரிய உடலில் எழுப்பப்படுவார்,’ ‘அழிவில்லாதவராய் . . . மகிமையுள்ளவராய் உயிர்த்தெழுப்பப்படுவார்’ என்பதில் சந்தேகமே இல்லை. (1 கொ. 15:42-44) ‘மனந்திரும்புகிற ஒரே பாவியைக் குறித்துப் பரலோகத்தில் அதிக சந்தோஷம்’ உண்டாகுமென்றால், கிறிஸ்துவின் சகோதரரில் ஒருவர் மரணம்வரை உத்தமராய் இருக்கும்போது பரலோகத்தில் எவ்வளவு சந்தோஷம் உண்டாகும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். (லூக். 15:7) பரலோக நம்பிக்கையுள்ள ஒரு கிறிஸ்தவர் தன் பரிசை ‘பெருமகிழ்ச்சியோடு’ பெறும்போது அவரோடு சேர்ந்து யெகோவாவும் அவரது உண்மைத் தூதர்களும் சந்தோஷப்படுவார்கள்.—1 யோவான் 3:2-ஐ வாசியுங்கள்.
9. பரலோக நம்பிக்கையுடையோர் எந்த அர்த்தத்தில் கடவுளது அரசாங்கத்திற்குள் “தாராளமாக” அனுமதிக்கப்படுவார்கள், பூமியிலுள்ள சிறுமந்தையினரை இது எப்படிப் பலப்படுத்தும்?
9 பரலோக நம்பிக்கையுள்ளோர் உண்மையுடன் நிலைத்திருந்தால், ‘நம் எஜமானரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் முடிவில்லா அரசாங்கத்திற்குள் போவதற்குத் தாராளமாக அனுமதிக்கப்படுவார்கள்’ என அவர்களுக்கு பேதுருவும் எழுதினார். (2 பே. 1:10, 11) பரலோக வாழ்க்கைக்கு “தாராளமாக” அனுமதிக்கப்படுவார்கள் என பேதுரு சொன்னபோது, அவர்கள் மிகுந்த மகிமையுடன் பரலோகத்திற்குச் செல்வார்கள் என்று அர்த்தப்படுத்தியிருக்கலாம். அதோடு, பரலோகத்தில் அவர்கள் ஆசீர்வாதங்களை அளவில்லாமல் பெறுவார்கள் என்றும் அர்த்தப்படுத்தியிருக்கலாம். பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தாங்கள் உண்மையுடன் வாழ்ந்ததை நினைத்து ஆனந்தப் பரவசம் அடைவார்கள், அவர்களுடைய இதயம் நன்றியுணர்வால் பொங்கும். இந்த எதிர்பார்ப்பு, பூமியில் தொடர்ந்து உண்மையுடன் நிலைத்திருக்க சிறுமந்தையினரைப் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.—1 பே. 1:13.
வேறே ஆடுகளின் “எதிர்பார்ப்பு”
10, 11. (அ) வேறே ஆடுகளுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது? (ஆ) வேறே ஆடுகளின் எதிர்பார்ப்பு எவ்வாறு கிறிஸ்துவுடனும், ‘கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவதுடனும்’ சம்பந்தப்பட்டுள்ளது?
10 கிறிஸ்துவுடன் ‘சக வாரிசுகளாக’ ஆகும் மகிமையான எதிர்பார்ப்பை ‘கடவுளது மகன்கள்’ பெற்றிருப்பதாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார். பின்னர், எண்ணற்ற வேறே ஆடுகளுக்கு யெகோவா அளிக்கப்போகும் அற்புதமான நம்பிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டார்: “[பரலோக நம்பிக்கையுள்ள] கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவதற்காக [மனித] படைப்பு பேராவலோடு காத்திருக்கிறது. ஏனென்றால், படைப்பு விரக்தியான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது; அதன் சொந்த விருப்பத்தால் அல்ல, கடவுளுடைய விருப்பத்தால் அப்படித் தள்ளப்பட்டது. படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறுகிற எதிர்பார்ப்புடன் அவ்வாறு தள்ளப்பட்டது.”—ரோ. 8:14-21.
11 வாக்குப்பண்ணப்பட்ட “வித்து” மூலம் “பழைய பாம்பாகிய” பிசாசான சாத்தானிடமிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்யப்போவதாக யெகோவா வாக்குறுதி அளித்தபோது அந்த ‘எதிர்பார்ப்பை’ கொடுத்தார். (ஆதி. 3:15; வெளி. 12:9) அந்த ‘வித்துவின்,’ அதாவது ‘சந்ததியின்,’ முக்கிய பாகம் இயேசு கிறிஸ்து. (கலா. 3:16) பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்கள் விடுதலை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பை அவரது மரணமும் உயிர்த்தெழுதலும் அளித்தன. அந்த எதிர்பார்ப்பு, ‘கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவதுடன்’ சம்பந்தப்பட்டுள்ளது. இந்த மகன்களே ‘சந்ததியின்’ இரண்டாம் பாகம். சாத்தானுடைய பொல்லாத உலகத்தை அழிக்க கிறிஸ்துவுக்கு உதவி செய்யும்போது இவர்கள் ‘வெளிப்படுவார்கள்.’ (வெளி. 2:26, 27) அதன்பின், மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைக்கிற வேறே ஆடுகளுக்கு மீட்புக் கிடைக்கும்.—வெளி. 7:9, 10, 14.
12. பரலோக நம்பிக்கையுள்ளோர் ‘வெளிப்படும்போது’ மகிமையான என்ன நன்மைகளை மனிதர்கள் அனுபவிப்பார்கள்?
12 கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் மனித ‘படைப்புக்கு’ கிடைக்கப்போவது எப்பேர்ப்பட்ட விடுதலை! அந்தச் சமயத்தில், மகிமைப்படுத்தப்பட்ட ‘கடவுளுடைய மகன்கள்’ மற்றொரு விதத்தில் ‘வெளிப்படுவார்கள்’; கிறிஸ்துவுடன் சேர்ந்து குருமார்களாகச் செயல்பட்டு, அவரது மீட்புப் பலியின் நன்மைகளைப் பெற மனிதர்களுக்கு உதவி செய்வார்கள். அப்போது, பரலோக அரசாங்கத்தின் பூமிக்குரிய குடிமக்கள் பாவம் மற்றும் மரணத்தின் பாதிப்புகளிலிருந்து விடுதலையை ருசிக்க ஆரம்பிப்பார்கள். கீழ்ப்படிகிற மனிதர்கள் படிப்படியாக ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.’ ஆயிரவருட ஆட்சியிலும் அதன் முடிவில் வரும் இறுதிப் பரிட்சையிலும் உண்மையுடன் நிலைத்திருந்தால், அவர்களது பெயர் ‘வாழ்வின் சுருளில்’ நிரந்தரமாய் இருக்கும். அவர்கள் ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறுவார்கள்.’ (வெளி. 20:7, 8, 11, 12) இது நிச்சயமாகவே மகிமையான எதிர்பார்ப்பு!
நம்பிக்கைச் சுடர் அணையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
13. எதனால் நமக்கு நம்பிக்கை கிடைத்திருக்கிறது, கிறிஸ்து எப்போது வெளிப்படுவார்?
13 பேதுரு தனது இரண்டு கடிதங்களிலும் எழுதிய விஷயங்கள், பரலோக நம்பிக்கையுள்ளோரும் வேறே ஆடுகளும் தங்கள் நம்பிக்கை எனும் சுடர் அணையாமல் பார்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவும். அவர்களது செயல்களினால் அல்ல, யெகோவாவின் அளவற்ற கருணையினாலேயே அவர்களுக்கு நம்பிக்கை கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். “எப்போதும் தெளிந்த புத்தியுடன் இருங்கள்; இயேசு கிறிஸ்து வெளிப்படுகிற சமயத்தில் உங்களுக்கு அருளப்படும் அளவற்ற கருணையின் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று அவர் எழுதினார். (1 பே. 1:13) கிறிஸ்து எப்போது வெளிப்படுவார்? தம்மை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்களுக்குப் பரிசளிக்கவும், தேவபக்தியற்றவர்கள்மீது யெகோவாவின் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றவும் வரும்போது வெளிப்படுவார்.—2 தெசலோனிக்கேயர் 1:6-10-ஐ வாசியுங்கள்.
14, 15. (அ) நம்பிக்கைச் சுடர் அணையாதிருக்க எதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்? (ஆ) பேதுரு என்ன அறிவுரை கொடுத்தார்?
14 நம்பிக்கைச் சுடர் அணையாதிருக்க, ‘யெகோவாவின் நாள்’ சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதை எப்போதும் நம் நினைவில் வைத்து வாழ வேண்டும். இன்றுள்ள ‘வானத்தையும்,’ அதாவது மனித ஆட்சியையும், ‘பூமியையும்,’ அதாவது பொல்லாத மனித சமுதாயத்தையும், அதன் ‘பஞ்சபூதங்களையும்’ யெகோவா அழித்துவிடுவார். எனவே, “நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்!” என்று பேதுரு எழுதினார். “யெகோவாவின் நாளை நாம் எப்போதும் மனதில் வைத்து அதற்காக ஆவலோடு காத்திருக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த நாளில் வானம் எரிந்து அழிந்துபோகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும்” என்றும் சொன்னார்.—2 பே. 3:10-12.
15 இன்றுள்ள ‘வானத்திற்கும்,’ ‘பூமிக்கும்’ பதிலாக ‘புதிய வானமும் [கிறிஸ்துவின் பரலோக அரசாங்கமும்] புதிய பூமியும் [ஒரு புதிய மனித சமுதாயமும்] உண்டாகும்.’ (2 பே. 3:13) புதிய உலகத்திற்காக நாம் ‘ஆவலோடு காத்திருக்கையில்’ என்ன செய்ய வேண்டுமென பேதுரு தெளிவான அறிவுரை கொடுத்தார்: “அன்பானவர்களே, இவையெல்லாம் வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிற நீங்கள், அவர் முன்னிலையில் கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும் காணப்படுவதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.”—2 பே. 3:14.
நம் நம்பிக்கைக்கு இசைய வாழ்தல்
16, 17. (அ) எத்தகைய ‘பரிசுத்த நடத்தையையும்,’ ‘தேவபக்திக்குரிய செயல்களையும்’ நாம் வெளிக்காட்ட வேண்டும்? (ஆ) நம் நம்பிக்கை எப்படி நிறைவேறும்?
16 நாம் வாழும் விதம், நம் நம்பிக்கைச் சுடர் அணையாமல் பார்த்துக்கொள்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும். ஆன்மீக ரீதியில் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதற்குக் கவனம் செலுத்த வேண்டும். “பரிசுத்த நடத்தை” என்பது கடவுளுடைய நெறிமுறைகளுக்கு இசைவாக வாழ்வதன் மூலம் “உலகத்தார் மத்தியில் எப்போதும் நன்னடத்தை உள்ளவர்களாக” இருப்பதைக் குறிக்கிறது. (2 பே. 3:11; 1 பே. 2:12) நாம் ‘ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட’ வேண்டும். அதற்காக, சபையில் உள்ள சகோதரர்களுடனும் உலகெங்குமுள்ள சகோதரர்களுடனும் ஒற்றுமையைக் கட்டிக்காக்க பாடுபட வேண்டும். (யோவா. 13:35) ‘தேவபக்திக்குரிய செயல்கள்’ என்பது யெகோவாவுடன் நெருங்கிய பந்தம் வைத்திருப்பதைக் காட்டும் செயல்களைக் குறிக்கிறது. ஊக்கமாக ஜெபிப்பது, தினமும் பைபிளை வாசிப்பது, தனிப்பட்ட விதத்தில் ஆராய்ச்சி செய்து படிப்பது, குடும்ப வழிபாட்டில் ஈடுபடுவது, ‘அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ மும்முரமாய் அறிவிப்பது ஆகியவை தேவபக்திக்குரிய செயல்களில் அடங்கும்.—மத். 24:14.
17 நாம் ஒவ்வொருவரும் யெகோவாவுக்குப் பிரியமானவர்களாய்... இன்றுள்ள பொல்லாத உலகம் ‘அழிந்து போகையில்’ அவரால் காப்பாற்றப்படுகிறவர்களாய்... இருக்க ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்டவர்களாக நாம் இருந்தால், “பொய் சொல்ல முடியாத கடவுள் வெகு காலத்திற்கு முன்பே வாக்குறுதி அளித்த முடிவில்லா வாழ்வு என்ற நம்பிக்கை” நிஜமாவதைக் கண்ணாரக் காண்போம்.—தீத். 1:3.
[பக்கம் 22-ன் படம்]
பரலோகத்திற்குப் போகிறவர்கள், ‘புதிய பிறப்பின்’ மூலம் ‘அசைக்க முடியாத நம்பிக்கையை’ பெறுகிறார்கள்
[பக்கம் 24-ன் படம்]
நம்பிக்கைச் சுடர் உங்கள் குடும்பத்தில் அணையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்