என்றும் வெளிப்படுத்தப்பட்டிராத அன்பின் இரண்டு மிகப்பெரிய வெளிப்பாடுகள்
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் . . . நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.—யோவான் 3:16.
“தேவன் அன்பாகவே இருக்கிறார்.” இப்படியாக அப்போஸ்தலனாகிய யோவான் இரண்டு முறை குறிப்பிட்டான். (1 யோவான் 4:8, 16) ஆம், யெகோவா தேவன் ஞானமும் நீதியும் வல்லமையுமுள்ளவராய் இருக்கும் அதே அளவுக்கு அன்பாகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் அன்பாகவே இருக்கிறார். அவர் அன்பின் உருவாக, தத்ரூபமாக இருக்கிறார். உங்களை நீங்கள் பின்வருமாறு கேட்டுக்கொள்ளக்கூடும்: ‘அது உண்மை என்பதற்குக் காரணத்தை நான் அறிந்திருக்கிறேனா? அவர் அன்பாகவே இருக்கிறார் என்பதை நான் ஒருவருக்கு நிரூபித்து காட்டும் அத்தாட்சிகளுடன் அல்லது எடுத்துக்காட்டுகளுடன்கூடிய தெளிவான விளக்கத்தை அளிக்க முடியுமா? அது என்னுடைய வாழ்க்கையையும் செயல்களையும் எவ்வாறு பாதிக்கிறது?’
2 பூமியிலுள்ள நம்முடைய மானிட சிருஷ்டிகளிடமாக யெகோவா தேவன் எவ்வளவு அன்புள்ளவராயிருந்து வந்திருக்கிறார்! நம்முடைய கண்களின் முழு அழகையும் இயக்கத்தையும், நம்முடைய பலமான எலும்புகளின் அதிசயத்தையும், நம்முடைய தசைநார்களின் ஆற்றலையும், நம்முடைய தொடு உணர்ச்சியையும் எண்ணிப் பாருங்கள். சங்கீதக்காரனின் உணர்ச்சிகளை நாம் எதிரொலிப்பதற்கு நமக்கு தகுந்த காரணம் இருக்கிறது: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்.” அதே சமயத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் கம்பீரமான மலைகளையும், தெளிந்த நீர் பாயும் அமைதியான நீரோடைகளையும், வசந்தத்தின் மலர்கள் பூத்துக்குலுங்கும் புல்வெளியையும், வியப்பில் ஆழ்த்திடும் மகிமை பொருந்திய சூரிய மறைவுகளையுங்கூட எண்ணிப் பாருங்கள். “யெகோவா, உமது செயல்கள் எவ்வளவு திரளானவை! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உமது சிருஷ்டிகள் நிறைந்துள்ளது.”—சங்கீதம் 139:14; 104:24, தி.மொ.
3 தம்முடைய முதல் மானிட சிருஷ்டிகள் கலகம் செய்தபோது கடவுளுடைய அன்பின் வெளிப்பாடுகள் இல்லாமல் போகவில்லை. உதாரணமாக, வாக்குத்தத்தின் “வித்து” மூலமான தமது ஏற்பாட்டினால் பயனடையக்கூடிய பிள்ளைகளைக் கொண்டிருப்பதற்கு அந்தத் தம்பதிகளை அனுமதிப்பதன் மூலம் யெகோவா அன்பைக் காட்டினார். (ஆதியாகமம் 3:15) பின்பு, மனித இனத்தையும் பூமியின் மற்ற உயிரினங்களையும் பாதுகாப்பதற்காக நோவா ஒரு பேழையைக் கட்டும்படி செய்தார். (ஆதியாகமம் 6:13-21) பின்பு ஆபிரகாமிடமாக மிகுதியான அன்பைக் காண்பித்தார், அவன் யெகோவாவின் சிநேகிதன் என்று அறியப்பட்டான். (ஆதியாகமம் 18:19; ஏசாயா 41:8) ஆபிரகாமின் சந்ததியை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்கின்ற விஷயத்திலும் தேவன் தம்முடைய அன்பை அதிகமாக வெளிப்படுத்தினார். உபாகமம் 7:8-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “யெகோவா உங்களில் அன்புகூர்ந்ததினால் . . . யெகோவா உங்களை புஜபலத்தினால் மீட்டுக்கொண்டு வந்தார்.” (தி.மொ.)
4 இஸ்ரவேலர் நன்றிகெட்டவர்களாக திரும்பத்திரும்ப கலகஞ் செய்தபோதிலும், கடவுள் அவர்களை உடனடியாக நிராகரித்துவிடவில்லை. மாறாக அன்புடன் அவர்களைப் பின்வருமாறு கேட்டுக்கொண்டார்: “இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாக வேண்டும்?” (எசேக்கியேல் 33:11) என்றாலும், யெகோவா தேவன் அன்பின் உருவாக இருந்தபோதிலும், அவர் நீதியும் ஞானமுமுள்ளவர். அந்தக் கலகக்கார ஜனம் அவருடைய நீடிய பொறுமையின் எல்லையை அடைந்துவிட்ட சமயம் வந்தது! “சகாயமில்லாமல்” போகும் [குணப்படுத்தப்பட முடியாமற்போகும், NW] நிலைக்கு வந்துவிட்டார்கள், எனவே அவர்கள் பாபிலோனியரால் சிறைபடுத்தப்படுவதற்கு அனுமதித்துவிட்டார். (2 நாளாகமம் 36:15, 16) அப்படியிருந்தும் கடவுளுடைய அன்பு நிரந்தரமாக இல்லாமற்போய்விடவில்லை. அவர்களில் மீதியானோர் எழுபது ஆண்டுகளுக்குப் பின்பு தங்கள் தேசத்திற்குத் திரும்பி வருவதற்கான ஏற்பாட்டை செய்தார். தயவு செய்து சங்கீதம் 126-ஐ வாசித்து, திரும்பி வந்தவர்கள் அதைக் குறித்து எப்படி உணர்ந்தார்கள் என்பதைக் கவனியுங்கள்.
தம்முடைய அன்பின் மிகப்பெரிய வெளிப்பாட்டிற்கு ஆயத்தம்
5சரித்திரத்தின் ஓட்டத்தில் யெகோவா தம்முடைய அன்பை மிகப்பெரிய விதத்தில் வெளிப்படுத்துவதற்கான காலம் வந்தது. அது உண்மையிலேயே ஒரு தியாகத்திற்குரிய அன்பாயிருந்தது. இதற்கு ஆயத்தம் செய்பவராக, தேவன், பரலோகத்தில் ஆவியின் சிருஷ்டியாகயிருந்த தம்முடைய ஒரே பேறான குமாரனின் உயிரை மரியாளின் கருப்பைக்கு மாற்றினார். (மத்தேயு 1:20-23; லூக்கா 1:26-35) யெகோவாவுக்கும் அவருடைய மகனுக்குமிடையே இருந்த விசேஷமான நெருங்கிய உறவைக் குறித்து சற்று எண்ணிப்பாருங்கள். ஞானம் உருவகப்படுத்தப்பட்டிருக்கும் அந்த அடையாள ரூபத்தின்கீழ் மனித பிறப்புக்கு முன்னான இயேசுவின் வாழ்க்கையைக் குறித்து பின்வருமாறு வாசிக்கிறோம்: “நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.” (நீதிமொழிகள் 8:30, 31) எனவே தம்முடைய ஒரே பேறான குமாரன் தம்மைவிட்டு பிரிந்திருக்க ஏற்பாடு செய்வது, யெகோவாவின் பாகத்தில் ஒரு தியாகம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களல்லவா?
6 தம்முடைய குமாரன் மனிதனாகக் கருதரிக்கப்பட்ட முதற்கொண்டு அவருடைய வளர்ச்சியை யெகோவா கூர்ந்த ஆர்வத்தோடும் அதிக அக்கறையோடும் கவனித்து வந்தார் என்பதில் சந்தேகமில்லை. கருவில் வளரும் சிசுவுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாதிருக்க கடவுளுடைய பரிசுத்த ஆவி மரியாள் மேல் நிழலிட்டது. மீகா 5:2-ன் நிறைவேற்றமாக இயேசு பெத்லெகேமில் பிறப்பதற்காக யோசேப்பும் மரியாளும் குடிமதிப்பெழுதப்படும்படிக்கு அங்கு போகும்படியாக யெகோவா பார்த்துக்கொண்டார். ஏரோது அரசனின் கொலைச் சதியைக் குறித்து தேவதூதன் மூலமாக யோசேப்புக்கு கடவுள் எச்சரிப்பு கொடுத்தார், இப்படியாக யோசேப்பும் அவனுடைய குடும்பமும் ஏரோதின் மரணம் வரையாக எகிப்திற்குத் தப்பியோடும்படிச் செய்தார். (மத்தேயு 2:13-15) கடவுள் இயேசுவின் முன்னேற்றத்தில் தொடர்ந்து அக்கறையைக் காண்பித்திருப்பார். 12 வயதில் இயேசு கேள்விகள் மூலமும் விடைகள் மூலமும் ஆலயத்திலிருந்த போதகர்களையும் மற்றவர்களையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினதைக் கவனிப்பது ஆனந்தமாக இருந்தது!—லூக்கா 2:42-47.
7 பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்பு, முழுக்காட்டுதல் பெறுவதற்காக இயேசு யோவானிடம் வந்தபோதும் யெகோவா அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தம்முடைய பரிசுத்த ஆவியை அவர்மீது பொழிவதில் அதிக மகிழ்ச்சியுள்ளவராய், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்,” என்று சொன்னார். (மத்தேயு 3:17) இயேசுவின் ஊழியத்தைக் கூர்ந்து கவனித்து, அவர் எல்லா துதியையும் தம்முடைய பரம பிதாவுக்கே செலுத்தின விதத்தை காண்பதில் யெகோவா எவ்வளவு களிகூர்ந்திருப்பார் என்பதை எந்தக் கிறிஸ்தவ தகப்பனும் கற்பனை செய்துபார்க்க முடியும். ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு அப்போஸ்தலரில் சிலரை உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிக்கொண்டு போனார். அந்த இடத்தில், யெகோவா, இயற்கைக்கு மிஞ்சிய ஒரு மகிமையில் இயேசு பிரகாசித்திடச் செய்து, பிதா இவ்வாறு சொன்னார்: “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்.” (மத்தேயு 17:5) தேவன் தம்முடைய சொந்த நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்று இயேசு கடவுளிடமாக செய்த விண்ணப்பத்திற்கு விடையாக, மூன்றாவது முறை யெகோவா தம்முடைய குரல் கேட்கப்படும்படி செய்தார். யெகோவா சொன்னார்: “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்.” தெளிவாகவே, இது இயேசுவின் நன்மைக்காகவே சொல்லப்பட்டது, ஏனென்றால் அவரோடிருந்த சிலர் அதை தேவதூதன் பேசினதாகவும், மற்றவர்கள் இடிமுழக்கம் என்றும் நினைத்தார்கள்.—யோவான் 12:28, 29.
8 கடவுள் தம்முடைய குமாரனிடமாக செய்த காரியங்களையும் அவர் பேரில் காண்பித்த அக்கறையையும் பற்றிய இந்தச் சுருக்கமான விமரிசனத்திலிருந்து நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறீர்கள்? யெகோவா தம்முடைய ஒரே பேறான குமாரனை மிகவும் நேசிக்கிறார் என்பது தெளிவாயிருக்க வேண்டும். அதை மனதில் கொண்டவர்களாகவும், எந்த ஒரு மானிட பெற்றோரும் தன்னுடைய ஒரே பிள்ளையினிடமாக எவ்வாறு உணருவார் என்பதை மதித்துணர்கிறவர்களாகவும் அடுத்து நிகழ்ந்ததைக் கவனியுங்கள்—இயேசுதாமே பலியாக மரித்தது.