அவர்கள் ‘அப்படியே செய்தார்கள்’
“நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதே அவரில் அன்புகூருவதைக் குறிக்கிறது.”—1 யோவான் 5:3, NW.
1. கடவுளுடைய அன்பின் ஆழத்தைக் குறித்து என்ன சொல்லப்படலாம்?
“தேவன் அன்பாகவே இருக்கிறார்.” கடவுளைப் பற்றி அறிவோராகி அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோர் யாவரும் அந்த அன்பின் ஆழத்திற்கான ஆழ்ந்த மதித்துணர்வை அடைகின்றனர். “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.” இயேசுவின் விலைமதியா மீட்கும்பொருளான பலியில் நாம் விசுவாசம் காட்டிவருகையில், ‘தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கிறோம்.’ (1 யோவான் 4:8-10, 16) இவ்வாறு நாம் இப்போது ஏராளமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், வரவிருக்கிற காரிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனையும் அனுபவித்து மகிழலாம்.—யோவான் 17:3; 1 யோவான் 2:15, 17.
2. கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொண்டது அவருடைய ஊழியர்களுக்கு எவ்வாறு பயன் தந்திருக்கிறது?
2 கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அதன் பலனாக நிறைவாய் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் முன்மாதிரிகள் பைபிள் பதிவில் மிகுதியாக உள்ளன. இவர்களில், கிறிஸ்தவ காலத்திற்கு முன்னிருந்த சாட்சிகளும் அடங்கியிருக்கின்றனர், இவர்களில் சிலரைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இவர்களெல்லாரும் வாக்குப்பண்ணப்பட்டவைகளை யடையாமல் தூரத்திலே அவைகளைக் கண்டு வாழ்த்திப் பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளுமென்று அறிக்கையிட்டு விசுவாசத்தில் மரித்தார்கள்.” (எபிரேயர் 11:13, தி.மொ.) பிற்காலத்தில், கடவுளுடைய பக்தியுள்ள கிறிஸ்தவ ஊழியர்கள், ‘இயேசு கிறிஸ்துவின் மூலமாக வந்த தகுதியற்ற தயவிலிருந்தும் சத்தியத்திலிருந்தும்’ பயனடைந்தனர். (யோவான் 1:17, NW) மனித சரித்திரத்தின் ஏறக்குறைய 6,000 ஆண்டுகள் முழுவதினூடேயும் யெகோவா, தம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்த உண்மையுள்ள சாட்சிகளுக்குப் பலனளித்திருக்கிறார், அவருடைய கட்டளைகள் ‘பாரமானவையல்ல.’—1 யோவான் 5:2, 3.
நோவாவின் நாட்களில்
3. என்ன வகைகளில் நோவா ‘அப்படியே செய்தார்’?
3 பைபிள் பதிவு சொல்வதாவது: “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.” ‘நீதியைப் பிரசங்கித்தவராக’ நோவா, கடவுளுக்கு முழுமனதோடு கீழ்ப்படிந்து, ஜலப்பிரளயத்துக்கு முன்னிருந்த வன்முறையான அந்த உலகத்துக்கு எக்கணமும் நேரிடவிருந்த ஆக்கினைத் தீர்ப்பைப் பற்றி எச்சரிக்கை கொடுத்தார். (எபிரெயர் 11:7; 2 பேதுரு 2:5) பேழையைக் கட்டுவதில், கடவுளால் கொடுக்கப்பட்ட திட்ட உருபடத்தை உன்னிப்பான கவனத்துடன் பின்பற்றினார். பின்பு, குறிப்பிடப்பட்ட மிருகங்களையும் உணவு பொருட்களையும் அதனுள் கொண்டுவந்தார். “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.”—ஆதியாகமம் 6:22.
4, 5. (அ) ஒரு கெட்ட பாதிப்பு எவ்வாறு இந்நாள்வரை மனிதவர்க்கத்தைத் தாக்கியிருக்கிறது? (ஆ) கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நாம் ஏன் ‘அப்படியே செய்ய வேண்டும்’?
4 கீழ்ப்படியாமற்போன தூதர்களின் கெட்ட பாதிப்புடன் நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் போராட வேண்டியிருந்தது. தேவகுமாரரான இவர்கள் காணக்கூடிய உருவெடுத்து பெண்களோடு பாலுறவு கொண்டு, மனித இயல்புக்கு மீறிய இனக்கலப்புப் பிறவிகளான பிள்ளைகளைப் பிறப்பித்தனர், இவர்கள் மனிதகுலத்தைக் கொடுமைப்படுத்தினர். “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.” அந்தப் பொல்லாதச் சந்ததியை அழித்தொழிப்பதற்கு யெகோவா ஜலப்பிரளயத்தை அனுப்பினார். (ஆதியாகமம் 6:4, 11-17; 7:1) நோவாவின் நாளுக்கப்பால் பேய்த்தன தூதர்கள், கண்களுக்குப் புலப்படும்படி மனித உருவில் தோன்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், தொடர்ந்து ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள்,’ பிசாசான சாத்தானுக்குள் ‘கிடக்கிறது.’ (1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9) தீர்க்கதரிசன முறையில் இயேசு, நோவாவின் நாளினுடைய அந்தக் கலகக்கார சந்ததியை, 1914-ல் தம்முடைய ‘வந்திருத்தலின்’ அடையாளம் தெளிவாக தோன்ற தொடங்கினதிலிருந்து தம்மை ஏற்க மறுத்துவிட்டிருக்கிற மனிதவர்க்க சந்ததிக்கு ஒப்பிட்டார்.—மத்தேயு 24:3, 34, 37-39; லூக்கா 17:26, 27.
5 இன்று, நோவாவின் நாளில் செய்ததைப்போல், மனிதகுலத்தையும் நம்முடைய கிரகத்தையும் அழிவுக்குக் கொண்டுவர சாத்தான் முயற்சி செய்கிறான். (வெளிப்படுத்துதல் 11:15-18) ஆகையால் தேவாவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட இந்தக் கட்டளைக்கு நாம் செவிகொடுப்பது அவசரமாக இருக்கிறது: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:11) கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதை நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தி வருவதன் மூலம் நாம் இதில் பலப்படுத்தப்படுகிறோம். மேலுமாக, நாம் செல்ல வேண்டிய வழியில் நம்மைப் பொறுமையுடன் நடத்திச் செல்வதற்கு, கவனித்து காக்கும் யெகோவாவின் அமைப்பு, அபிஷேகம் செய்யப்பட்ட அதன் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையையும்’ அதன் அன்புள்ள மூப்பர்களையும் கொண்டதாக நமக்கு இருக்கிறது. செய்துமுடிக்க வேண்டிய உலகளாவிய பிரசங்க வேலை நமக்கிருக்கிறது. (மத்தேயு 24:14, 45-47, NW) கடவுளுடைய கட்டளைகளுக்கு அவ்வளவு உன்னிப்பான கவனத்துடன் கீழ்ப்படிந்த நோவாவைப்போல் நாம் எப்போதும் ‘அப்படியே செய்வோமாக.’
மோசே—மனிதரில் மிகுந்த சாந்தகுணமுள்ளவர்
6, 7. (அ) பயனுள்ள என்ன தெரிவை மோசே செய்தார்? (ஆ) என்ன தைரியமுள்ள மாதிரியை மோசே நமக்கு விட்டுச் சென்றார்?
6 விசுவாசமுள்ளவராயிருந்த மற்றொரு மனிதராகிய மோசேயைக் கவனியுங்கள். இவர், எகிப்தின் பெரும் இன்பங்களுக்குள் சொகுசான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் “சொற்பகால பாவசந்தோஷங்களை அநுபவிப்பதிலும் கடவுளின் ஜனங்களோடு துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்”டார். யெகோவாவின் பொறுப்பளிக்கப்பட்ட ஊழியராக, ‘இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தார் . . . காணமுடியாதவரைக் காண்கிறவர்போல் உறுதியாய்ப் பற்றிக்கொண்டு’ தொடர்ந்தார்.—எபிரேயர் 11:23-28, தி.மொ.
7 எண்ணாகமம் 12:3-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” மாறாக, எகிப்தின் பார்வோன் எல்லா மனிதருக்கும் மேலாகப் பெரும் தற்பெருமையுள்ளவனாக நடந்துகொண்டான். யெகோவா பார்வோனின்மீது தம்முடைய நியாயத்தீர்ப்பை அறிவிக்கும்படி மோசேயையும் ஆரோனையும் கட்டளையிட்டபோது, அவர்கள் என்ன செய்தார்கள்? நாம் இவ்வாறு சொல்லப்படுகிறோம்: “மோசேயும் ஆரோனும் அப்படியே செய்தார்கள்; யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டவைகளையே செய்தார்கள்.” (யாத்திராகமம் 7:4-7, தி.மொ.) இன்று கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கிற நமக்கு எத்தகைய தைரியமான மாதிரி!
8. எவ்வாறு இஸ்ரவேலர் ‘அப்படியே செய்ய’ வேண்டியிருந்தது, அதன் பயனாக உண்டான களிகூருதலை எவ்வாறு எதிர்காலத்தில் ஏற்படவிருப்பதற்கு ஒப்பிடலாம்?
8 இஸ்ரவேலர் மோசேக்கு உண்மையான ஆதரவு தருவோராக இருந்தார்களா? பத்தில் ஒன்பது வாதைகளை எகிப்தின்மீது அனுப்பின பின்பு, யெகோவா பஸ்காவை ஆசரிக்கும்படி இஸ்ரவேலருக்கு நுட்ப விவரமான கட்டளைகளைக் கொடுத்தார். “ஜனங்கள் அதைக்கேட்டுக் குனிந்து பணிந்து கொண்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.” (யாத்திராகமம் 12:27, 28, தி.மொ.) பொ.ச.மு. 1513, நிசான் 14 அன்றான, அந்த முக்கிய நிகழ்ச்சிக்குரிய நாளின் நள்ளிரவில், கடவுளுடைய தூதன் எகிப்தின் முதற்பேறான அனைவரையும் கொன்றுகொண்டு சென்றார், ஆனால் இஸ்ரவேலரின் வீடுகளின்மீதோ கடந்து சென்றார். இஸ்ரவேலரின் முதற்பேறானவர்கள் ஏன் கொல்லாமல் விடப்பட்டனர்? ஏனெனில் தங்கள் வாசல் சட்டங்களில் தெளித்திருந்த அந்தப் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின்கீழ் அவர்கள் பாதுகாப்பைக் கண்டடைந்திருந்தார்கள். மோசேக்கும் ஆரோனுக்கும் யெகோவா கட்டளையிட்டிருந்தபடியே அவர்கள் செய்திருந்தார்கள். ஆம், “இப்படியே செய்தார்கள்.” (யாத்திராகமம் 12:50, 51) சிவந்த சமுத்திரத்தில், பார்வோனையும் அவனுடைய பலத்த இராணுவ சேனையையும் அழித்து, கீழ்ப்படிதலுள்ள தம்முடைய ஜனத்தைக் காப்பாற்றினதில் யெகோவா மேலுமான ஓர் அற்புதத்தை நடப்பித்தார். இஸ்ரவேலர் எவ்வளவாய்க் களிகூர்ந்தனர்! அவ்வாறே இன்றும், யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கிற பலர், அர்மகெதோனில் அவருடைய நியாயம் நிரூபிக்கப்படுகிறதை நேரில் காணும் சாட்சிகளாக இருப்பதில் களிகூருவர்.—யாத்திராகமம் 15:1, 2; வெளிப்படுத்துதல் 15:3, 4.
9. ஆசரிப்புக் கூடாரம் சம்பந்தமாக இஸ்ரவேலர் ‘அப்படியே செய்ததானது’, என்ன தற்கால சிலாக்கியங்களை நிழலாக முன்குறிப்பிடுகிறது?
9 நன்கொடையை ஏற்று வனாந்தரத்தில் ஆசரிப்புக் கூடாரம் ஒன்றைக் கட்டும்படி யெகோவா கட்டளையிட்டபோது, ஜனங்கள் தாராளமாய்த் தங்கள் முழு ஆதரவைக் கொடுத்தனர். பின்பு, மோசேயும் மனப்பூர்வமான அவருடைய உடனுழைப்போரும், மிக நுட்ப விவரம் வரையிலும்கூட, யெகோவா அளித்திருந்த கட்டிடக்கலை திட்டங்களைப் பின்பற்றினர். “இப்படியாகத் தரிசனக்கூடார வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட யெல்லாவற்றின்படியும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்; அப்படியே செய்துமுடித்தார்கள்.” இதைப்போலவே, ஆசாரியத்துவத்தின் பிரதிஷ்டையின்போதும், “மோசே அப்படியே செய்தான். யெகோவா தனக்குக் கட்டளையிட்ட யாவற்றின்படியேயும் செய்தான்.” (யாத்திராகமம் 39:32; 40:16, தி.மொ.) தற்காலங்களில், பிரசங்க ஊழியத்திற்கும் ராஜ்ய பெருக்கத்திற்கான திட்டங்களுக்கும் இருதயப்பூர்வ ஆதரவு அளிக்க நமக்கு வாய்ப்பு இருக்கிறது. ‘அப்படியே செய்வதில்’ இவ்வாறு ஒன்றுபடுவது நம்முடைய சிலாக்கியமாக இருக்கிறது.
யோசுவா—தைரியமும் திட பலமுமுள்ளவர்
10, 11. (அ) வெற்றியடைவதற்கு யோசுவாவைத் தகுதிபெற செய்தது எது? (ஆ) தற்கால இக்கட்டுகளைச் சமாளிப்பதற்கு நாம் எவ்வாறு பலப்படுத்தப்படலாம்?
10 இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் வழிநடத்தும்படி மோசே யோசுவாவை நியமித்தபோது, யெகோவாவின் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை பெரும்பாலும் மோசேயின் ஐந்து ஆகமங்களிலும், ஒன்று அல்லது இரண்டு சங்கீதங்களிலும், யோபின் புத்தகத்திலும் மாத்திரமே கிடைப்பதாயிருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்கள் போய்ச் சேரும்போது ஜனங்களை ஒன்றுசேர்த்து, “இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்”கும்படி மோசே யோசுவாவுக்குப் போதனை கொடுத்திருந்தார். (உபாகமம் 31:10-13) மேலும், யெகோவாதாமே யோசுவாவுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”—யோசுவா 1:8.
11 யெகோவாவின் வார்த்தையாகிய பைபிளைத் தினந்தோறும் வாசிப்பது, இந்தக் கொடிய ‘கடைசி நாட்களின்’ இக்கட்டுகளைச் சமாளிப்பதற்கு அவருடைய தற்கால சாட்சிகளைப் பலப்படுத்துகிறதைப்போல், யெகோவாவின் ‘புஸ்தகத்திலிருந்து’ தினந்தோறும் வாசித்தது, எதிர்காலத்திலிருந்த இக்கட்டுகளைக் கையாளுவதற்கு யோசுவாவைத் தகுதிபெற செய்தது. (2 தீமோத்தேயு 3:1) வன்செயல் நிறைந்த உலகத்தால் சூழப்பட்டிருப்போராக நாமும், யோசுவாவுக்குக் கடவுள் கொடுத்த அறிவுரையை இருதயத்தில் ஏற்போமாக: “மனோபலங்கொண்டு தைரியமாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகுமிடமெல்லாம் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடிருக்கிறார்.” (யோசுவா 1:9, தி.மொ.) கானானை வென்ற பின்பு, இஸ்ரவேலின் கோத்திரத்தார் தங்கள் சுதந்தரத்துக்குள் குடியேறினபோது நிறைவாய் பலனளிக்கப்பட்டார்கள். “யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் புத்திரர் செய்”தார்கள். (யோசுவா 14:5) இன்று கடவுளுடைய வார்த்தையை வாசித்து அதை நம் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தி, கீழ்ப்படிதலுடன் ‘அப்படியே செய்கிற’ நம்மெல்லாருக்கும் அதைப்போன்ற பலன் காத்துக்கொண்டிருக்கிறது.
அரசர்கள்—உண்மையுள்ளவர்களும் கீழ்ப்படியாதவர்களும்
12. (அ) இஸ்ரவேலில் அரசர்களுக்கு என்ன கட்டளை கொடுக்கப்பட்டது? (ஆ) அரசர்கள் கீழ்ப்படியத் தவறினது எதில் விளைவடைந்தது?
12 இஸ்ரவேலிலிருந்த அரசர்களைப் பற்றியதென்ன? யெகோவா இந்தக் கடமையை அரசன்மீது வைத்திருந்தார்: “அவன் இராஜாவாகும்போது லேவியரான ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்துத் தனக்காக ஒரு பிரதியை எழுதித் தன்னிடம் வைத்துக்கொண்டு தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை ஆராய்ந்து வாசிக்கவேண்டும். அப்பொழுது இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும் இந்த நியமங்களையும் கைக்கொண்டு இவைகளின்படி செய்வதற்குத் தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளுவான்.” (உபாகமம் 17:18, 19, தி.மொ.) இஸ்ரவேலின் அரசர்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்களா? துயரத்துக்கு ஏதுவாக, அவர்கள் பெரும்பாலும் தவறினர், ஆகவே, உபாகமம் 28:15-68-ல் முன்னறிவிக்கப்பட்ட சாபங்களை அனுபவித்தனர். கடைசியாக, “பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும்” இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்டது.
13. தாவீது செய்ததைப்போல் யெகோவாவின் வார்த்தையின்பேரில் ஆவலைக் காட்டுவதன் மூலம் நாம் எவ்வாறு பயனடையலாம்?
13 எனினும், தாவீது—இஸ்ரவேலில் உண்மையுள்ளவராயிருந்த முதல் மனித அரசர்—யெகோவாவிடம் தனிப்பட்ட பக்தியைக் காட்டினார். ‘யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவராகிய’ வெற்றி சிறக்கும் கிறிஸ்து இயேசுவை நிழலாக முன்குறித்தவராய் அவர், ‘யூதாவில் பாலசிங்கமாக’ நிரூபித்தார். (ஆதியாகமம் 49:8, 9; வெளிப்படுத்துதல் 5:5) தாவீதின் பலம் எங்கிருந்தது? யெகோவாவின் எழுதப்பட்ட வார்த்தையின்பேரில் அவர் ஆழ்ந்த மதித்துணர்வைக் கொண்டிருந்து, அதன்படி வாழ்ந்தார். சங்கீதம் 19, “தாவீதின் சங்கீதம்” என்பதில் நாம் வாசிப்பதாவது: “யெகோவாவின் பிரமாணம் குறைவற்றது.” யெகோவாவின் சாட்சியம், கட்டளை, மற்றும் நியாயத்தீர்ப்புகளைக் குறிப்பிட்ட பின்பு, தாவீது தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “அவை பொன்னிலும் மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவை, தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவை. அன்றியும், அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன், அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.” (சங்கீதம் 19:7-11, தி.மொ.) யெகோவாவின் வார்த்தையைத் தினந்தோறும் வாசித்து அதன்பேரில் தியானிப்பது 3,000 ஆண்டுகளுக்கு முன்பாகப் பலன் தந்ததென்றால், இன்று எவ்வளவு அதிகமாய் இது பலன்தருவதாய் இருக்கிறது!—சங்கீதம் 1:1-3; 13:6; 119:72, 97, 111.
14. அறிவை பார்க்கிலும் அதிகம் தேவைப்படுவதை சாலொமோனின் நடத்தைப் போக்கு எவ்வகையில் காட்டுகிறது?
14 இருப்பினும், அறிவை மாத்திரம் பெறுவது போதுமானதல்ல. அந்த அறிவின்பேரில் கடவுளுடைய ஊழியர்கள் செயல்படுவதும், கடவுளுடைய சித்தத்திற்கேற்ப அதைப் பொருத்தி பயன்படுத்துவதும்—ஆம், ‘அப்படியே செய்வது’—முக்கியமானது. இதை, ‘இஸ்ரவேலை ஆளும் யெகோவாவின் ராஜ்யபார சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு’ யெகோவா தெரிந்துகொண்ட தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் காரியத்தில் விளக்கிக் காட்டலாம். தாவீது பெற்ற ‘ஆவியினால் கட்டளையிடப்பட்ட’ கட்டிடக்கலை உருவரை திட்டங்களைப் பயன்படுத்தி, ஆலயத்தைக் கட்டும்படியான வேலை நியமிப்பை சாலொமோன் பெற்றார். (1 தினவர்த்தமானம் 28:5, 11-13; தி.மொ.) இந்த மிகப் பெரிய வேலையை சாலொமோன் எவ்வாறு நிறைவேற்றக்கூடும்? ஒரு ஜெபத்திற்கு விடையாக, யெகோவா அவருக்கு ஞானத்தையும் அறிவையும் அருளினார். இவற்றைக் கொண்டும், கடவுள் அளித்த திட்டங்களைக் கடைப்பிடித்தும், சாலொமோன் அந்த மிகச் சிறந்த வீட்டைக் கட்டிமுடிப்பவராக இருந்தார். அது யெகோவாவின் மகிமையால் நிரப்பப்படலாயிற்று. (2 நாளாகமம் 7:2, 3) எனினும், பின்னால், சாலொமோன் தவறினார். எந்தக் காரியத்தில்? இஸ்ரவேலில் அரசராயிருப்பவரைக் குறித்து யெகோவாவின் சட்டம் இவ்வாறு கூறியிருந்தது: “அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்.” (உபாகமம் 17:17) எனினும் சாலொமோனுக்கு “ராஜகுலமான எழுநூறு மனைவிகள் இருந்தார்கள், முந்நூறு வைப்பாட்டிகளும் இருந்தார்கள். அவனுடைய ஸ்திரீகள் . . . அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி வழுவிப்போகப் பண்ணினார்கள்.” தன் வயதுசென்ற ஆண்டுகளில், சாலொமோன் ‘அப்படியே செய்வதிலிருந்து’ விலகிப்போனார்.—1 இராஜாக்கள் 11:3, 4, தி.மொ.; நெகேமியா 13:26.
15. எவ்வாறு யோசியா ‘அப்படியே செய்தார்’?
15 யூதாவில் கீழ்ப்படிதலுள்ள சில அரசர்கள் இருந்தார்கள், அவர்களில் கடைசியானவர் யோசியா. பொ.ச.மு. 648-வது ஆண்டில் அவர், தேசத்திலிருந்து விக்கிரக வணக்கத்தை ஒழிக்கவும் யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிக்கவும் தொடங்கினார். “மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட யெகோவாவின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை” அங்கேயே பிரதான ஆசாரியன் கண்டெடுத்தார். இதைக் குறித்து யோசியா என்ன செய்தார்? “ராஜாவும் அவனோடு யூதாவிலுள்ள யாவரும் எருசலேமின் குடிகளும் ஆசாரியரும் லேவியரும் பெரியோர்முதல் சிறியோர் மட்டுமுள்ள ஜனமுழுதும் யெகோவாவின் ஆலயத்துக்குப் போனார்கள்; யெகோவாவின் ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் ராஜா அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். ராஜா தன் ஸ்தானத்திலே நின்றுகொண்டு, யெகோவா காட்டிய வழியில் நடப்போம், அவருடைய கட்டளைகளையும் அவருடைய சாட்சியங்களையும் அவருடைய நியமங்களையும் ஒவ்வொருவனும் தன்தன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளுவோம், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றுவோம் என்று யெகோவாவின் சந்நிதியிலே உடன்படிக்கைபண்ணினான்.” (2 தினவர்த்தமானம் 34:14, 30, 31, தி.மொ.) ஆம், யோசியா ‘அப்படியே செய்தார்.’ உண்மையற்ற யூதாவின்பேரில் யெகோவா கூறியிருந்த ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றுவது, அவருடைய உண்மையுள்ள போக்கின் பலனாகத் தள்ளி வைக்கப்பட்டது. தீங்கான முறையில் நடந்த அவருடைய குமாரரின் காலம் வரையாகத் தள்ளி வைக்கப்பட்டது.
கடவுளுடைய வார்த்தையின்படி வாழ்தல்
16, 17. (அ) என்ன வகைகளில் நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும்? (ஆ) கடவுளுக்கு உண்மையாயிருந்த வேறு எந்த ஊழியர்கள் நமக்கு முன்மாதிரிகளை அளிக்கின்றனர்?
16 எக்காலத்திலாயினும் உயிர்வாழ்ந்த எல்லா மனிதரிலும் கடவுளுடைய வார்த்தையின்பேரில் தியானித்து அதன்படி வாழ்ந்த மிகச் சிறந்த முன்மாதிரியானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. கடவுளுடைய வார்த்தை அவருக்கு உணவைப்போல் இருந்தது. (யோவான் 4:34) தமக்குச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “பிதா செய்யக் காண்பதெதுவோ அதையேயன்றிக் குமாரன் தாமாகவே எதையுஞ் செய்யமுடியாது; அவர் எவைகளைச் செய்கிறாரோ அவைகளைக் குமாரனும் அப்படியே செய்கிறார்.” (யோவான் 5:19, 30, தி.மொ.; 7:28; 8:28, 42) “நான் பரத்திலிருந்திறங்கி வந்தது என் சித்தத்தைச் செய்வதற்கல்ல, என்னை அனுப்பினவரின் சித்தத்தைச் செய்வதற்கே,” என்று சொல்லி இயேசு “அப்படியே செய்தார்.” (யோவான் 6:38, NW) யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளாய் இருக்கிற நாம், இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ‘அப்படியே செய்யும்படி’ அழைக்கப்படுகிறோம்.—லூக்கா 9:23; 14:27; 1 பேதுரு 2:21.
17 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே இயேசுவின் மனதில் எப்போதும் முதலாவதாக இருந்தது. அவர் கடவுளுடைய வார்த்தையை முற்றுமுழுக்க நன்றாய்த் தெரிந்திருந்தார், ஆகவே வேதப்பூர்வ விடைகளைக் கொடுப்பதற்கு ஆயத்தமாக இருந்தார். (மத்தேயு 4:1-11; 12:24-31) கடவுளுடைய வார்த்தைக்கு இடைவிடாத கவனம் செலுத்துவதன் மூலம், நாமும்கூட முழுமையாகத் ‘தகுதியுள்ளவராகி எந்த நற்கிரியையுஞ் செய்ய முற்றிலும் தக்கவராகக்’ கூடும். (2 தீமோத்தேயு 3:16, 17, தி.மொ.) பூர்வ காலங்களிலும் பிற்பட்ட காலங்களிலும் இருந்த யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களின் முன்மாதிரியையும், எல்லாவற்றிற்கும் மேலாக, “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும் பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும் உலகம் அறியும்படிக்கு,” என்று சொன்ன நம்முடைய தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியையும் பின்பற்றுவோமாக. (யோவான் 14:31) தொடர்ந்து ‘அப்படியே செய்து’ வருவதன் மூலம் நாமும் கடவுளுக்கு நம் அன்பைக் காட்டுவோமாக.—மாற்கு 12:29-31.
18. ‘வார்த்தையின்படி செய்வோராவதற்கு’ எது நம்மை ஊக்குவிக்க வேண்டும், அடுத்தபடியாக எது ஆராயப்படும்?
18 பைபிள் காலங்களிலிருந்த கடவுளுடைய ஊழியரின் கீழ்ப்படிதலுள்ள போக்கின்பேரில் நாம் ஆழ்ந்து சிந்திக்கையில், சாத்தானுடைய பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவுக்குரிய இந்த நாட்களின்போது, உண்மையுள்ள ஊழியத்தை நடப்பிக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறோமல்லவா? (ரோமர் 15:4-6) பின்வரும் கட்டுரை ஆராயப்போகிறபடி, முழுமையான கருத்தில் ‘வார்த்தையின்படி செய்வோராவதற்கு’ நாம் நிச்சயமாகவே ஊக்குவிக்கப்பட வேண்டும்.—யாக்கோபு 1:22.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ‘கடவுளுடைய அன்பு’ நமக்கு எதைக் குறிக்க வேண்டும்?
◻ நோவா, மோசே, மற்றும் யோசுவாவின் முன்மாதிரிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ இஸ்ரவேலில் அரசர்கள் எந்த அளவாகக் கடவுளுடைய “வார்த்தை”க்குக் கீழ்ப்படிந்தார்கள்?
◻ ‘அப்படியே செய்வதில்’ நம்முடைய முன்மாதிரியானவராகிய இயேசு எவ்வாறு இருக்கிறார்?
[பக்கம் 15-ன் படங்கள்]
நோவாவும், மோசேயும், யோசுவாவும் ‘அப்படியே செய்தார்கள்’