‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது.’ 2 தீமோத்தேயு 3:16-ல் (NW) உள்ள இந்த வார்த்தைகள், யெகோவா என்ற பெயரையுடைய கடவுளை பரிசுத்த வேதாகமத்தின் நூலாசிரியராகவும் அவற்றை ஏவியவராகவும் அடையாளம் காட்டுகின்றன. ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த வேதாகமம் எவ்வளவு திருப்தியளிப்பதாகவும் இனிமைமானதாகவும் இருக்கிறது! மலைக்க வைக்கும் எப்பேர்ப்பட்ட மெய்யான அறிவுக் களஞ்சியம்! இது நிச்சயமாகவே ‘தேவனை அறியும் அறிவு.’ நீதியை நேசிப்போர் எல்லா காலங்களிலும் நாடித்தேடி நெஞ்சில் வைத்து போற்றக்கூடியது.—நீதி. 2:5.
2 அறிவை நாடித்தேடியவர்களில் மோசேயும் ஒருவர். இவரே கடவுளுடைய ஜனமாகிய இஸ்ரவேலின் தலைவராகவும் அமைப்பாளராகவும் இருந்தார். கடவுளுடைய போதனை “பனிபோலும், புல்லின்மீது பெய்யும் சாரல் போலும், தாவரங்கள்மீது பெய்யும் பெருமழையைப் போலும்” புத்துணர்ச்சியூட்டுகிறது என இவர் கூறினார். வீரதீரத்தோடு போரிட்டவரும் யெகோவாவின் பெயரை உயர்த்தியவருமாகிய தாவீது இவ்வாறு ஜெபித்தார்: “யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; நான் உமது சத்தியத்திலே நடப்பேன்.” இந்தப் பூமியில் கட்டப்பட்ட கட்டிடங்களிலேயே மிகவும் மகிமை பொருந்திய கட்டிடமாக திகழ்ந்தது எருசலேமிலிருந்த யெகோவாவின் ஆலயம். அதைக் கட்டிய சாந்தகுணம் படைத்த சாலொமோன் தெய்வீக ஞானத்தைப் பின்வரும் வார்த்தைகளில் மதிப்பிட்டார்: “அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப் பார்க்கிலும் அது விலையேறப் பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.”—உபா. 32:2, NW; சங். 86:11, திருத்திய மொழிபெயர்ப்பு; நீதி. 3:14, 15.
3 “உமது வார்த்தையே சத்தியம்” என கடவுளுடைய குமாரனாகிய இயேசு அறிவித்து, கடவுளுடைய வார்த்தையின்மீது மிக உயர்ந்த மதிப்பை வைத்தார். “என் வார்த்தையில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று தம்மைப் பின்பற்றினோரிடம் கூறினார். (யோவா. 17:17; 8:31, 32) தம்முடைய பிதாவினிடமிருந்து இயேசு பெற்ற இந்த வார்த்தை நிச்சயமாகவே வலிமைமிக்கது. இது கடவுளுடைய வார்த்தை. இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரலோகங்களில் யெகோவாவின் வலது பாரிசத்திற்கு ஏறிச்சென்றதற்குப் பின்பு, தம்முடைய பிதாவின் வார்த்தையைப் பற்றி கூடுதலான வெளிப்படுத்துதலை தந்தார். பரதீஸ் பூமியில் மனிதவர்க்கம் அனுபவிக்கும் கடவுளுடைய ஆசீர்வாதங்களைப் பற்றிய இன்பந்தரும் விவரிப்பு அதில் அடங்கும். அதன்பின் அப்போஸ்தலன் யோவானுக்கு பின்வரும் கட்டளையை கடவுள் கொடுத்தார்: “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது.” ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமத்தின் எல்லா வார்த்தைகளும் “சத்தியமும் உண்மையானவை.” அவற்றிற்கு செவிகொடுப்போருக்கு அவை அளவிலா நன்மைகளை கொண்டுவருகின்றன.—வெளி. 21:5.
4 இந்த நன்மைகள் எவ்வாறு உண்டாகின்றன? 2 தீமோத்தேயு 3:16, 17-ல் (NW) உள்ள அப்போஸ்தலன் பவுலின் முழுமையான கூற்று விடையளிக்கிறது: “வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது; கடவுளுடைய மனிதன் எல்லா நற்செயலும் புரிய முற்றிலும் தேறினவனாகவும் முழுமையாக தகுதிபெற்றவனாகவும் இருக்கும்படி, போதிப்பதற்கும் கண்டிப்பதற்கும் காரியங்களைச் சீர்படுத்துவதற்கும் நீதியான வழிகளில் சிட்சிப்பதற்கும் பயனுள்ளது.” அப்படியானால், ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதவசனங்கள் சரியான கோட்பாட்டையும் சரியான நடத்தையையும் போதிக்கின்றன, நம்முடைய மனதிலும் வாழ்க்கையிலும் காரியங்களைச் சீர்படுத்துகின்றன, நாம் சத்தியத்திலும் நீதியிலும் மனத்தாழ்மையுடன் நடக்கும்படி நம்மை கண்டிப்பதற்கும் சிட்சிப்பதற்கும் பயனுள்ளவை. கடவுளுடைய வார்த்தையில் அடங்கிய போதகத்துக்கு நாம் கீழ்ப்படிவதன்மூலம் ‘தேவனுக்கு உடன் வேலையாட்கள்’ ஆகலாம். (1 கொ. 3:9) ‘முற்றிலும் தேறிய, முழுமையாக தகுதிபெற்ற கடவுளுடைய மனிதனாக’ அவருடைய வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு உழைப்பதே பெரும் பாக்கியம். இதைப் பார்க்கிலும் மேம்பட்ட சிலாக்கியம் ஒருவருக்கு இன்று பூமியில் வேறொன்றும் இல்லை.
விசுவாசத்துக்குரிய உறுதியான அஸ்திவாரம்
5 கடவுளோடு உடன் வேலையாளாக இருப்பதற்கு விசுவாசம் தேவை. இன்று பரவலாக காணப்படுகிற, ஆதாரமின்றி எதையும் நம்பிவிடுகிற போக்கோடு விசுவாசத்தைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. எந்த வகை நம்பிக்கையும்—மதப் பிரிவினை, பரிணாமத்துவம், அல்லது தத்துவவியல்—போதுமானது என பலர் எண்ணுகின்றனர். ஆனால் கடவுளுடைய மனிதன் ‘ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரியை கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் வைத்துக்கொள்ள’ வேண்டும். (2 தீ. 1:13, தி.மொ.) அவனுடைய விசுவாசம் மெய்யானதாகவும் உயிருள்ளதாகவும் இருக்க வேண்டும், ஏனெனில் “விசுவாசம் என்பது நம்பப்படும் காரியங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய தெளிவான மெய்ப்பிப்பு.” கடவுளிலும் அவரை பிரியப்படுத்துவோருக்கு அவர் அளிக்கும் பலன்களிலும் வைக்கும் உறுதியான நம்பிக்கையில் அது வேரூன்றியதாக இருக்க வேண்டும். (எபி. 11:1, 6, NW) கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஊக்கமாக படிப்பதன் மூலமே இந்த விசுவாசத்தை அடையலாம். பைபிளையும், பைபிளின் கடவுளாகிய யெகோவாவையும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் நேசிக்கும் ஆழமான அன்பில் இது ஆதாரம் கொண்டுள்ளது. இயேசு கிறிஸ்து ஒரே கர்த்தராக இருக்கிறார். யெகோவா எல்லாருக்கும் ஒரே கடவுளும் பிதாவுமாக இருக்கிறார். அதுபோல, ஒரே உயிருள்ள விசுவாசம் மட்டுமே இருக்கிறது.—எபே. 4:5, 6.
6 கடவுளுடைய வார்த்தை என்றால் என்ன, அது எங்கிருந்து வந்தது என்பதோடுகூட, அதன் அதிகாரத்துவத்தையும் நோக்கத்தையும் நீதிக்கான அதன் வல்லமையையும் நாம் அறிய வேண்டும். அதிலுள்ள மகிமையான செய்தியை புரிந்துகொள்கையில் நமக்கு விசுவாசம் உண்டாகும். மேலும், பைபிளையும் அதன் நூலாசிரியரையும் நாம் மிக அதிகமாக நேசிக்க ஆரம்பிப்போம். அந்த விசுவாசத்தையும் அன்பையும் எதுவும் ஒருபோதும் முறிக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் அடங்கிய வேதாகமமே விசுவாசத்துக்குரிய உறுதியான ஆதாரத்தைக் கட்டியமைக்கிறது. மெய்யான விசுவாசமே சோதனையையும் கடுமையான கஷ்டத்தையும் துன்புறுத்தலையும் பொருளாதார நாட்டங்களையும் தேவபக்தியற்ற சமுதாயத்தின் தத்துவங்களையும் சகித்து நிலைத்திருக்கும். இது, கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகத்துக்குள்ளும் சென்று மகிமையாய் வெற்றிபெறும். “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயித்த ஜெயம்.”—1 யோ. 5:4, NW.
7 விசுவாசத்தைப் பெற்று அதை விடாமல் பற்றிக்கொண்டிருப்பதற்கு, கடவுளுடைய வார்த்தையாகிய ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமத்தில் நம்முடைய அன்பையும் போற்றுதலையும் வளர்க்க வேண்டும். வேதாகமம் மனிதவர்க்கத்துக்கு கடவுள் கொடுத்திருக்கும் ஒப்பற்ற பரிசு. ஆவிக்குரிய அரும்பொருட்களின் களஞ்சியம், அதன் ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது, அறிவொளியூட்டவும் நீதியான செயல்களைச் செய்ய தூண்டுவிக்கவும் அதற்கு இருக்கும் வல்லமை, எக்காலத்திலும் எழுதப்பட்ட வேறெந்த புத்தகங்களைவிட மேம்பட்டது. கடவுளுடைய வார்த்தையின் அறிவை பெற நாம் ஆழமாய் ஆராய்கையில், அப்போஸ்தலன் பவுலுடன் பின்வருமாறு வியப்புடன் கூறுவதற்கு வழிநடத்தப்படுவோம்: “ஆ, தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமத்தையும் அதன் ஆசிரியரையும் அறிவது, நித்திய மகிழ்ச்சியும் இன்பமும் தரும் பாதைக்குள் பிரவேசிப்பதை அர்த்தப்படுத்தும்.—ரோ. 11:33, தி.மொ.; சங். 16:11.
யெகோவா—பேச்சுத் தொடர்பு கொள்ளும் கடவுள்
8 யெகோவாவுடைய பெயரின் மகிமையைப் பற்றி பேசுகையில், தாவீது இவ்வாறு வியந்து கூறினார்: “தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.” (சங். 86:10) பூமியிலுள்ள மனிதவர்க்கத்துக்காக ‘அதிசயங்கள்’ பலவற்றை யெகோவா செய்திருக்கிறார். இவற்றில் ஒன்று தம்முடைய வார்த்தையை அவர்களுக்குத் தெரிவித்ததாகும். ஆம், யெகோவா பேச்சுத் தொடர்பு கொள்ளும் கடவுள். தம்முடைய படைப்புகளின் நன்மைக்காக அன்புடன் தம்மை வெளிப்படுத்துகிற கடவுள். நம்முடைய சிருஷ்டிகர் புரியாப் புதிர்கள் எனும் திரை மறைவில் இருந்துகொண்டு பூமியில் நீதியை நேசிப்போரின் தேவைகளுக்கு அக்கறையின்றி ஒதுங்கியிருக்கும் அரசர் அல்ல. அதற்காக நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்! யெகோவா தம்மிடம் விசுவாசமும் அன்பும் காட்டுவோருடன், வரப்போகும் புதிய உலகில் மட்டுமல்ல, இப்போதும் வாசம்பண்ணுகிறார். தகவல் கேட்கும் பிள்ளைகளுக்கு தயவுள்ள ஒரு தகப்பனைப்போல் நல்ல விஷயங்களை தெரிவிக்கிறார். (வெளி. 21:3) பயங்கர தோற்றமுடைய ஊமை சிலைகளாய் இருக்கும் பேய் தெய்வங்களைப் போல் நம்முடைய பரலோக தகப்பன் இல்லை. உலோக மற்றும் கல் தெய்வங்களுக்கு, அறியாமை எனும் இருளில் கிடக்கும் தங்களுடைய வணக்கத்தார்மீது தகப்பனென்ற பாசமோ பந்தமோ எதுவும் கிடையாது. அவை பயனுள்ள எதையும் அவர்களுக்கு தெரிவிக்க முடியாது. நிச்சயமாகவே, “அவற்றை உண்டாக்குகிறவர்களும் அவற்றை போலவே ஆவார்கள்.”—சங். 135:15-19, NW; 1 கொ. 8:4-6.
9 யெகோவா “இரக்கமும் உருக்கமும் உள்ளவரும் கோபிப்பதற்கு தாமதிப்பவரும் அன்புள்ள தயவிலும் சத்தியத்திலும் மிகுந்தவருமான கடவுள்.” (யாத். 34:6, NW) தம்முடைய மிகுந்த அன்புள்ள இரக்கத்தால், மனிதவர்க்கத்துக்கு சத்தியத்தை அபரிமிதமாக தெரிவித்திருக்கிறார். இது மனிதவர்க்கத்தின் வழிநடத்துதலுக்குரிய எல்லா நல் அறிவுரையும், எதிர்கால ஆசீர்வாதங்களுக்கு ஒருவருடைய பாதையை வெளிச்சமாக்கும் தீர்க்கதரிசனமும் அடங்கியது. “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோ. 15:4) மனிதவர்க்கத்துக்கு போதனை அளிக்க மேலிருந்தே, அதாவது பரலோகத்திலிருந்தே, நம்பத்தக்க தகவல் வந்துள்ளது.—யோவா. 8:23.
10 அறியப்படாத ஒரு மொழியில் யெகோவா ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் மனிதவர்க்கத்தின் மொழியிலேயே, தம்முடைய உண்மையுள்ள சாட்சிகள் பேசும் மொழியிலேயே எப்போதும் பேசியிருக்கிறார். (அப். 2:5-11) ஆதாம், நோவா, ஆபிரகாம், மோசே, மற்றும் எபிரெய தீர்க்கதரிசிகளிடம், மனிதவர்க்கத்தின் முதல் மொழியில்—இப்போது எபிரெயு என்று அறியப்படும் மொழியில்—யெகோவா பேசினார். இம்மொழி புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்தவரை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. இது, தர்சு பட்டணத்து சவுலின் காலம் வரையிலும்கூட பேசப்பட்டது. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு அவரிடம் அந்த மொழியில் பேசினார். (அப். 26:14) நாடுகடத்தப்பட்டிருந்த இஸ்ரவேலர் கல்தேயரின் அரமேயிக் மொழியை பரவலாக பேச ஆரம்பித்தனர். ஜனங்கள் அந்த மொழியையே புரிந்துகொண்டதால், அந்த சமயத்தில் சில தகவல்கள் கடவுளிடமிருந்து அரமேயிக் மொழியில் வந்தன. (எஸ்றா 4:8–6:18; 7:12-26; தானி. 2:4ஆ–7:28) பின்னால், கிரேக்கு சர்வதேச மொழியாகவும் தம்முடைய சாட்சிகளின் முக்கிய மொழியாகவும் இருந்தபோது, யெகோவாவின் தகவல் தொடர்புகள் அந்த மொழியில் கொடுக்கப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டன. பைபிளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாம் யெகோவாவின் வார்த்தைகளே. சத்தியத்தை நேசிக்கும் மனத்தாழ்மையான மனிதரின் நன்மைக்காக அவர்கள் பேசும் மொழியிலேயே இவை எப்பொழுதும் எழுதப்பட்டன.
11 மனதையும், நாவு, வாய், தொண்டை போன்ற பேச்சு உறுப்புகள் அனைத்தையும் படைத்தவர் யெகோவாவே. இவையே ஒவ்வொரு மொழிக்குரிய சிக்கலான பேச்சு தொனிகளை உருவாக்குகின்றன. ஆகையால், யெகோவாவே எல்லா மொழிகளையும் உருவாக்கியவர் என்று சொல்லலாம். மொழியின்மீது அவருக்கு இருக்கும் அதிகாரம், பாபேல் கோபுரத்தில் நடப்பிக்கப்பட்ட அவருடைய அற்புதத்தால் காட்டப்பட்டது. (யாத். 4:11; ஆதி. 11:6-9; 10:5; 1 கொ. 13:1) யெகோவாவுக்குத் தெரியாத மொழி எதுவும் இல்லை. முதல் மொழியாகிய எபிரெய மொழியை மனிதனுக்குக் கொடுத்தது அவரே. அது மட்டுமின்றி மனதையும் பேச்சு உறுப்புகளையும் படைத்ததும் அவரே. அதன் மூலம், அரமேயிக் மற்றும் கிரேக்க மொழிகளுக்கும் இப்பொழுது மனிதவர்க்கத்தால் பேசப்படும் ஏறக்குறைய 3,000 மொழிகள் அனைத்திற்கும் ஆதாரத்தை அவரே அருளினார்.
சத்திய மொழி
12 யெகோவாவால் பயன்படுத்தப்பட்ட மனித மொழி எதுவாக இருந்தாலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் சத்திய மொழியில் தொடர்பு கொண்டிருக்கிறார், மறைபொருள்களால் அல்ல. இந்தச் சத்திய மொழி எளிதில் புரிந்துகொள்ளும் சிக்கலற்ற ஒன்று. (செப். 3:9) ஒரு பொருளின் முப்பரிமாணங்களையும், அதாவது உயரம், அகலம், மற்றும் நீளத்தையும் கால ஓட்டத்தில் அவற்றின் அர்த்தத்தையும் மனிதன் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஆகையால், மனிதனின் மனதால் புரிந்துகொள்ளத்தக்க உருவங்களை பயன்படுத்தி காணக்கூடாத காரியங்களை யெகோவா அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறார். உதாரணமாக, ஆசரிப்புக் கூடாரம் கடவுளால் வடிவமைக்கப்பட்டு, மோசேயால் வனாந்தரத்தில் கட்டப்பட்டது. பரலோகத்தின் மகிமையான மெய்மைகளை விளக்குவதற்கு, ஆவியின் ஏவுதலால் அதன் முப்பரிமாண அடையாளங்களை பவுல் பயன்படுத்தினார்.—எபி. 8:5; 9:9.
13 மற்றொரு உதாரணம்: ஆவியானவராகிய யெகோவா, சொல்லர்த்தமாகவே, பரலோகத்தில் சிங்காசனத்தைப் போன்ற ஓர் இருக்கையில் உட்கார்ந்திருப்பதில்லை. என்றபோதிலும், கண்ணால் பார்க்கும் காரியங்களை புரிந்துகொள்ளும் மட்டான அறிவுடையவனே மனிதன். எனவே, நாம் அவற்றை புரிந்துகொள்வதற்காக கடவுள் அத்தகைய காணக்கூடிய அடையாளத்தைப் பயன்படுத்தி தம்மை வெளிப்படுத்துகிறார். பரலோக நியாயசங்க நடவடிக்கைகளை அவர் தொடங்குகையில், பூமியில் ஓர் அரசன் சிங்காசனத்தின்மீது அமர்ந்து நடவடிக்கைகளைத் தொடங்குவது போலவே உள்ளது.—தானி. 7:9-14.
எளிதில் மொழிபெயர்க்கப்பட்டது
14 இப்படி நடைமுறைக்கு ஒத்த, எளிதில் புரிந்துகொள்ளத்தக்க வார்த்தைகளில் பைபிள் எழுதப்பட்டிருக்கிறது. அதனால், அதில் சொல்லப்பட்டுள்ள அடையாளங்களையும் நடவடிக்கைகளையும் தெளிவாகவும் திருத்தமாகவும் தற்கால மொழிகள் பெரும்பாலானவற்றில் மொழிபெயர்ப்பது சாத்தியமாயுள்ளது. சத்தியத்தின் உண்மையான வலிமையும் சக்தியும் எல்லா மொழிபெயர்ப்புகளிலும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. “குதிரை,” “யுத்தம்,” “கிரீடம்,” “சிங்காசனம்,” “புருஷன்,” “மனைவி,” “பிள்ளைகள்” போன்ற எளிய அன்றாட சொற்கள், ஒவ்வொரு மொழியிலும் திருத்தமான எண்ணத்தை தெளிவாக தெரிவிக்கின்றன. இது மனித தத்துவஞான எழுத்துக்களுக்கு நேர்மாறாக உள்ளது, அவை பெரும்பாலும் திருத்தமாய் மொழிபெயர்க்க முடியாதவை. பெரும்பாலும் அவற்றின் சிக்கலான சொற்றொடர்களையும் புரிந்துகொள்ள முடியா பதங்களையும் மற்றொரு மொழியில் துல்லியமாக மொழிபெயர்க்க முடியாது.
15 பைபிளின் சொல்வன்மை மிகவும் உயர்தரமானது. அவிசுவாசிகளுக்கு ஆக்கினைத்தீர்ப்பு செய்திகளை கடவுள் தெரிவித்தபோதும், அவர் தத்துவஞான மொழிநடையை பயன்படுத்தவில்லை, மாறாக அன்றாட வழக்கத்திலுள்ள அடையாளங்களையே பயன்படுத்தினார். இது தானியேல் 4:10-12-ல் காட்டப்பட்டுள்ளது. இங்கே, தன்னையே மகிமைப்படுத்திக்கொண்ட புறமத அரசனின் ராஜ்யம், மரம் எனும் அடையாளத்தால் ஓரளவு நுட்பமாய் விவரிக்கப்பட்டது, பின்பு, இந்த மரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைக் கொண்டு, எதிர்கால சம்பவங்கள் திருத்தமாய் முன்னறிவிக்கப்பட்டன. மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கையில் இவை யாவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. உண்மையான ‘அறிவு பெருகும்படி’ இம்முறையில் யெகோவா அன்புடன் தொடர்பு கொண்டிருக்கிறார். இந்த ‘முடிவு காலத்தில்’ தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்வதில் எவ்வளவு அதிசயமாய் இது உதவி செய்திருக்கிறது!—தானி. 12:4.
தொடர்பு கொள்ளும் வழி
16 தொடர்பு கொள்ளும் வழிமுறையாக இருந்தது எது? என்று சிலர் கேட்கலாம். இதை நவீனகால ஓர் உதாரணத்தைக் கொண்டு நன்றாய் விளக்கலாம். தகவல் தொடர்பு இணைப்புகளில் பின்வருபவை உட்பட்டுள்ளன: (1) செய்தியைப் பேசுபவர், அல்லது பிறப்பிப்பவர்; (2) அனுப்பும் சாதனம்; (3) செய்தியை கடத்தும் சாதனம்; (4) செய்தியை பெறும் சாதனம்; (5) கேட்பவர். தொலைபேசி தொடர்புகளில் பின்வருபவை உள்ளன: (1) தொலைபேசியை பயன்படுத்துபவர் பேசுகிறார். (2) தொலைபேசியின் அனுப்பும் சாதனம் (transmitter) செய்தியை மின்சார அலைகளாக மாற்றுகிறது; (3) தொலைபேசி கம்பிகள் அந்த மின்சார அலைகளை சேரவேண்டிய இடத்திற்கு சுமந்து செல்கின்றன; (4) செய்தியை பெறும் சாதனம், அந்தச் செய்தி அலைகளை தொனிகளாக மாற்றுகிறது; (5) கேட்பவர். இவ்வாறே பரலோகத்தில் (1) யெகோவா தேவன் தம்முடைய வார்த்தைகளைச் சொல்கிறார்; (2) அவருடைய அதிகாரப்பூர்வமான வார்த்தை, அல்லது பிரதிநிதிப் பேச்சாளர்—இப்போது இயேசு கிறிஸ்து என அறியப்படுகிறவர்—அந்தச் செய்தியை அனுப்புகிறார்; (3) அனுப்பும் சாதனமாக பயன்படுத்தப்படும் கடவுளுடைய பரிசுத்த ஆவி, அதாவது செயல்நடப்பிக்கும் சக்தி, அதை பூமிக்குக் கொண்டு செல்லுகிறது; (4) பூமியிலுள்ள கடவுளுடைய தீர்க்கதரிசி இந்தச் செய்தியைப் பெறுகிறார்; (5) பின்பு அதை கடவுளுடைய ஜனங்களின் நன்மைக்காக அறிவிக்கிறார். இன்று சிலசமயம் அவசரத்திற்கு ஒரு நபர் மூலம் செய்தியை அனுப்புவதுபோல், சில சமயங்களில் யெகோவா, பரலோகங்களிலிருந்து பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களுக்குச் சில தகவல்களை கொண்டுசெல்லும்படி ஆவி செய்தியாளர்களை, அதாவது தேவதூதர்களைப் பயன்படுத்தினார்.—கலா. 3:19; எபி. 2:2.
ஏவுதலின் வழிமுறை
17 “கடவுளால் ஏவப்பட்டது” என்ற சொற்றொடர் “கடவுள் ஊதினார்” என்று பொருள்படும் தியோப்னூஸ்டாஸ் (the·oʹpneu·stos) என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். (ஆங்கில NW பைபிளில் 2 தீமோத்தேயு 3:16, முதல் அடிக்குறிப்பைக் காண்க.) கடவுள் தமது சொந்த ஆவியை அல்லது செயல்நடப்பிக்கும் சக்தியை உண்மையுள்ள மனிதர்மீது ‘ஊதி’ பரிசுத்த வேதவாக்கியங்களை ஒன்றாக தொகுக்கும்படியும் எழுதும்படியும் செய்வித்தார். இந்த வழிமுறையே ஏவுதல் என அறியப்படுகிறது. ஏவுதலுக்கு ஆளான யெகோவாவின் தீர்க்கதரிசிகள் மற்றும் உண்மையுள்ள மற்ற ஊழியர்களின் மனங்கள், செயல் நடப்பிக்கும் இந்தச் சக்தியால் உந்தப்பட்டன. ஆக, கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய காட்சிகள் உட்பட, அவரிடமிருந்து செய்திகளைப் பெற்றார்கள்; இவை அவர்களுடைய மனதில் உறுதியாக பதியவைக்கப்பட்டன. “தீர்க்கதரிசனம் ஒருபோதும் மனுஷ சித்தத்தினால் வரவில்லை; கடவுளிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்படுகிறவர்களாய் [“உந்தப்பட்டு,” NW] மனுஷர் பேசினார்கள்.”—2 பே. 1:21, தி.மொ.; யோவா. 20:21, 22.
18 கடவுளுடைய இந்த மனிதர் முழு உணர்வோடு விழித்திருந்தபோது அல்லது தூங்கிக்கொண்டிருந்தபோது ஒரு சொப்பனத்தில், அவருடைய ஆவி, அவர் அனுப்பிய செய்தியை மனதில் உறுதியாக பதியவைத்தது. அந்தச் செய்தியைப் பெற்றபோது, அந்தத் தீர்க்கதரிசி அதைச் சொல்வடிவில் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்புடையவராக இருந்தார். மோசேயும் உண்மையுள்ள மற்ற தீர்க்கதரிசிகளும் உயிர்த்தெழுதலில் திரும்பிவருகையில், தங்கள் எழுத்துக்கள் திருத்தமாக பாதுகாக்கப்பட்டனவா என்பதை சந்தேகமில்லாமல் உறுதிசெய்வார்கள். ஏனெனில் அவர்களுக்கு புதிதாக கொடுக்கப்படும் மனம், தொடக்கத்தில் பதியவைக்கப்பட்ட செய்திகளை அப்போதும் தெளிவாக ஞாபகம் வைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறே, அப்போஸ்தலன் பேதுருவும் மறுரூப காட்சியால் அவ்வளவு மிக ஆழமாக மனங்கவரப்பட்டதால், 30-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னரும் அதன் மகிமையைக் குறித்து உயிர்ப்புள்ள முறையில் அவரால் எழுத முடிந்தது.—மத். 17:1-9; 2 பே. 1:16-21.
நூலாசிரியரும் அவருடைய விரலும்
19 மனித நூலாசிரியர்கள் எழுதுவதற்கு விரல்களை பயன்படுத்தினர். பூர்வ காலங்களில் எழுத்தாணியைக் கொண்டு எழுதினர். தற்காலங்களில் பேனா, தட்டச்சுப்பொறி, அல்லது கம்ப்யூட்டரைக் கொண்டும் அதை செய்கின்றனர். எழுத்தாளரின் மனதில் இருப்பதையே அவருடைய கைகள் எழுத்தில் வடிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. கடவுளுக்கு விரல் இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? இருக்கிறது, ஏனெனில், கடவுளுடைய ஆவியை அவருடைய “விரல்” என்று இயேசு குறிப்பிட்டார். பேய் பிடித்த ஒரு மனிதனை இயேசு சுகப்படுத்தினார். அவன் பேசும் திறமையையும் தன் பார்வையையும் திரும்பப் பெற்றான். அப்போது, மத எதிரிகள், இயேசு எதைக்கொண்டு அந்த மனிதனைச் சுகப்படுத்தினாரோ அதை தூஷித்தனர். மத்தேயுவின் விவரத்தின்படி, இயேசு அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நான் கடவுளுடைய ஆவியினாலே பேய்களைத் துரத்தினால் கடவுளின் ராஜ்யம் உண்மையிலேயே உங்களை மேற்கொண்டுவிட்டது.” (மத். 12:22, 28, தி.மொ.) இதைப் போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு சொன்னதைப் பின்வருமாறு லூக்கா குறிப்பிட்டது நம் புரிந்துகொள்ளுதலை அதிகரிக்கிறது: “நான் கடவுளுடைய விரலினாலே பேய்களைத் துரத்தினால் கடவுளின் ராஜ்யம் உங்களிடம் வந்தாயிற்று.” (லூக். 11:20, தி.மொ.) முன்னொரு சமயத்தில், எகிப்துமீது வந்த வாதைகள் யெகோவாவின் ஈடற்ற வல்லமையின் வெளிக்காட்டு என ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எகிப்தின் மந்திரவாதிகளுக்கு ஏற்பட்டது. அப்போது: “இது கடவுளின் விரல்” என்று கூறினர்.—யாத். 8:18 19, தி.மொ.
20 “விரல்” என்ற சொல்லின் இந்த உபயோகங்களிலிருந்து ‘கடவுளின் விரல்’ மிகுந்த வல்லமையுடையது என்பது தெளிவாகிறது. மேலும், இந்தச் சிறப்புப்பெயர் பைபிள் எழுதப்படுவதில் அவர் பயன்படுத்திய அவருடைய ஆவிக்கு நன்றாய்ப் பொருந்துகிறதென்றும் புரிந்துகொள்ளலாம். ஆகவே ‘தமது விரலினால்’ பத்துக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளின்மீது கடவுள் எழுதினார் என்று வேதவாக்கியங்கள் நமக்கு சொல்கின்றன. (யாத். 31:18, தி.மொ.; உபா. 9:10) பரிசுத்த பைபிளின் பல்வேறு புத்தகங்களை எழுதுவதற்குக் கடவுள் மனிதரைப் பயன்படுத்தினார். அந்தச் சந்தர்ப்பங்களில், அவர்களது விரல்களை உந்தி எழுதச் செய்தது கடவுளது அடையாளக் குறிப்பான விரல் அல்லது ஆவியே. கடவுளுடைய பரிசுத்த ஆவியை காண முடியாது, ஆனால் அது அதிசயமான முறையில் செயல்பட்டு, காணக்கூடிய பலனை உண்டுபண்ணியுள்ளது. அதுதான் மதிப்புமிக்க பரிசாக மனிதவர்க்கம் பெற்றுள்ள கடவுளுடைய சத்திய வார்த்தை, அதாவது அவருடைய பைபிள். பரலோகத் தகவல் தொடர்பாளராகிய யெகோவா தேவனே பைபிளின் நூலாசிரியர் என்பதில் சந்தேகமேயில்லை.
ஏவப்பட்டவற்றை தொகுத்தல் தொடங்குகிறது
21 நாம் கவனித்தபடி, யெகோவா ‘தம்முடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளையும் அவனிடம் [மோசேயினிடம்] கொடுத்தார்.’ (யாத். 31:18, தி.மொ.) இது பத்துக் கட்டளைகள் அடங்கியது, மேலும் கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதை எட்டு தடவை அதிகாரப்பூர்வமாய்க் குறிப்பிடுவது அக்கறைக்குரியது. அதே ஆண்டாகிய பொ.ச.மு. 1513-ல், நிரந்தரமான பதிவுகளை செய்துவைக்க ஆரம்பிக்கும்படி மோசேக்கு யெகோவா கட்டளையிட்டார். இவ்வாறு பரிசுத்த வேதாகமம் எழுதப்படுவது ஆரம்பமானது. (யாத். 17:14; 34:27) மேலும் ‘சாட்சியின் பெட்டியை’ அல்லது “உடன்படிக்கைப் பெட்டி”யைச் செய்யும்படியும் மோசேக்கு கடவுள் கட்டளையிட்டார். அழகிய வேலைப்பாடுகளையுடைய அந்தப் பெட்டியில், யெகோவா அருளிய மிகவும் மதிப்புவாய்ந்த அந்தக் கட்டளைகளை இஸ்ரவேலர் பாதுகாத்து வைக்க வேண்டும். (யாத். 25:10-22; 1 இரா. 8:6, 9) இந்தப் பெட்டி மற்றும் இது வைக்கப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்திற்கான வடிவமைப்பை யெகோவா கொடுத்தார். முக்கிய கைவினைஞனும் கட்டிடக் கலைஞனுமாகிய பெசலெயேல், ‘சகலவித வேலைகளையும் செய்கிறதற்கு வேண்டிய அறிவும் விவேகமும் புத்தியும் உண்டாகும்படி கடவுளின் ஆவியால் நிரப்பப்பட்டார்.’ இதனால் கடவுள் அருளிய வடிவத்தின்படியே தன் வேலையைச் செய்து முடித்தார்.—யாத். 35:30-35, தி.மொ.
22 கடவுள் நெடுங்காலமாக “பல சந்தர்ப்பங்களிலும் பல வழிவகைகளிலும் பேசி,” தம்முடைய நோக்கங்களைத் தெரிவித்துள்ளார். (எபி. 1:1, NW) பொ.ச.மு. 1513-லிருந்து பொ.ச. 98 வரையாக, அல்லது ஏறக்குறைய 1,610 ஆண்டுகளினூடே மனிதர் அவருடைய வார்த்தையை எழுதினார்கள். ஒரே நூலாசிரியராகிய யெகோவா தேவன், ஏறக்குறைய 40 எழுத்தாளர்களை, அல்லது மனித செயலாளர்களைப் பயன்படுத்தினார். இந்த எழுத்தாளர்கள் எல்லாரும் எபிரெயர்கள், இதனால் ‘தேவனுடைய வாக்கியங்கள் ஒப்புவிக்கப்பட்ட’ ஜனத்தின் உறுப்பினர்கள். (ரோ. 3:2) இவர்களில் எட்டுபேர், இயேசுவை நேரிலோ அவருடைய அப்போஸ்தலரின் மூலமோ அறிந்த கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்கள். இவர்களுடைய காலத்துக்கு முன்பாக எழுதப்பட்டிருந்த ஏவப்பட்ட வேதவாக்கியங்கள் மேசியா, அல்லது கிறிஸ்துவின் வருகையைக் குறித்து சாட்சி கொடுத்திருந்தன. (1 பே. 1:10, 11) மோசேயிலிருந்து அப்போஸ்தலன் யோவான் வரை இந்த பைபிள் எழுத்தாளர்கள் யாவரும் பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். என்றபோதிலும், யெகோவா தேவனின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிப்பதிலும் அவருடைய நோக்கங்களைப் பூமியில் யாவரறிய அறிவிப்பதிலும் பங்குகொண்டார்கள். அவர்கள் யெகோவாவின் பெயரிலும் அவருடைய ஆவியின் வல்லமையாலும் எழுதினார்கள்.—எரே. 2:2, 4; எசே. 6:3; 2 சா. 23:2; அப். 1:16; வெளி. 1:10.
23 பூர்வ எழுத்தாளர்கள் கண்கூடாகக் கண்டு பதிவுசெய்தவற்றை இந்த எழுத்தாளர்களில் பலர் தங்கள் பதிவுகளில் தொகுத்து அளித்திருக்கின்றனர், அத்தகைய பூர்வ எழுத்தாளர்களில் எல்லாரும் ஏவப்பட்டவர்களாக இல்லை. உதாரணமாக, அத்தகைய கண்கூடான சாட்சிகளின் விவரப்பதிவுகளிலிருந்து மோசே ஆதியாகமத்தின் சில பாகங்களைத் தொகுத்திருக்கலாம். அவ்வாறே சாமுவேலும் நியாயாதிபதிகளின் புத்தகத்தை எழுதுகையில் செய்திருக்கலாம். எரேமியா, முதலாம் இரண்டாம் இராஜாக்கள் புத்தகங்களைப் பெரும்பாலும் இவ்வாறு தொகுத்தார். எஸ்றாவும் முதலாம் இரண்டாம் நாளாகமங்களைப் பெரும்பாலும் இந்த முறையிலேயே எழுதினார். மனிதர் பதிவுசெய்த பழைய பதிவுகளிலிருந்து எந்தப் பகுதிகளை சேர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தத் தொகுப்பாளர்களைப் பரிசுத்த ஆவி வழிநடத்தியது. இவ்வாறு இந்தத் தொகுப்புகளை நம்பத்தக்க ஒன்றாகவும் அதிகாரப்பூர்வமான ஒன்றாகவும் ஆக்கிற்று. அவை தொகுக்கப்பட்ட காலம் முதற்கொண்டு, பழைய பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் பகுதிகள் தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் பாகமாயின.—ஆதி. 2:4; 5:1; 2 இரா. 1:18; 2 நா. 16:11.
24 பைபிளின் இந்த 66 புத்தகங்கள் எந்த வரிசைமுறையில் நம்மிடம் வந்தன? முடிவற்ற கால ஓட்டத்தின் எந்தப் பாகத்தில் அவை அடங்குகின்றன? வானங்களையும் பூமியையும் படைத்ததையும், பூமியை மனிதனுடைய வீடாக ஆயத்தம் செய்ததையும் ஆதியாகமப் பதிவு விவரிக்கிறது. அதன்பின்பு, பொ.ச.மு. 4026-ல் முதல் மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து மனித சரித்திரத்தின் தொடக்கங்களைக் கூற ஆரம்பிக்கிறது. பின்பு, பொ.ச.மு. 443-க்குச் சற்றுப்பின்வரை நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை பரிசுத்த எழுத்துக்கள் எடுத்துரைக்கின்றன. பின்பு, 400-க்கு மேற்பட்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, பொ.ச.மு. 3 முதல் விவரப்பதிவை மீண்டும் தொடங்கி, ஏறக்குறைய பொ.ச. 98 வரை கொடுக்கிறது. இவ்வாறு சரித்திர நோக்குநிலையிலிருந்து, வேதவாக்கியங்கள் 4,123 ஆண்டுகளடங்கிய ஒரு காலப்பகுதியை உள்ளடக்குகின்றன.
25 பக்கம் 12-ல் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை, பைபிள் எழுத்தாளர்களின் வாழ்க்கைப் பின்னணியையும் பைபிள் புத்தகங்கள் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் வரிசைமுறையையும் புரிந்துகொள்வதில் உதவிசெய்யும்.
தெய்வீக சத்தியத்தின் முழுமையான “புத்தகம்”
26 பரிசுத்த வேதவாக்கியங்கள், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை ஒரே தொகுப்பாக இருக்கின்றன. ஈடற்ற உன்னத ஒரே நூலாசிரியரால் ஏவப்பட்டு, முழுமையான ஒரே புத்தகத்தை, முழுமையான ஒரே நூலகத்தை உண்டுபண்ணுகின்றன. ஒரு பாகத்துக்குக் குறைந்த மதிப்பு கொடுக்கும்படி, அவற்றை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கக்கூடாது. எபிரெய வேதவாக்கியங்களும் கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களும் ஒன்றுக்கொன்று இன்றியமையாதவை. தெய்வீக சத்தியத்தின் முழுமையான ஒரே புத்தகமாகும்படி, பிந்தியது முந்தியதை நிறைவுபடுத்துகிறது. பைபிளின் இந்த 66 புத்தகங்கள், அனைத்தும் ஒருசேர பரிசுத்த வேதாகமம் என்ற ஒரே நூலகமாக ஆகின்றன.—ரோ. 15:4.
27 கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஆதியாகமத்திலிருந்து மல்கியா வரையான முதல் பகுதியைப் “பழைய ஏற்பாடு” என்றும், மத்தேயுவிலிருந்து வெளிப்படுத்துதல் வரையான இரண்டாவது பகுதியைப் “புதிய ஏற்பாடு” என்றும் அழைப்பது பாரம்பரியத்தின் ஒரு தவறாகும். பலர் பயன்படுத்தும் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு 2 கொரிந்தியர் 3:14-ல் “பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில்” என்பதாகச் சொல்லுகிறது. ஆனால் இங்கே அப்போஸ்தலன், பண்டைய எபிரெய வேதவாக்கியங்களை முழுமையாக குறிப்பிடுகிறதில்லை. ஏவப்பட்ட கிறிஸ்தவ எழுத்துக்கள் ஒரு ‘புதிய ஏற்பாட்டை [உடன்படிக்கையை]’ உண்டுபண்ணுகிறதென்றும் அவர் அர்த்தப்படுத்துவதில்லை. இந்த அப்போஸ்தலன் நியாயப்பிரமாண உடன்படிக்கையைக் குறித்து பேசுகிறார். அது முதல் ஐந்து ஆகமங்களில் மோசேயால் பதிவுசெய்யப்பட்டது; கிறிஸ்தவ காலத்துக்கு முந்தின வேதவாக்கியங்களின் ஒரு பாகத்தை மாத்திரமே உண்டுபண்ணுகிறது. இந்தக் காரணத்தினிமித்தம் அடுத்த வசனத்தில், “மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது” என அவர் சொல்லுகிறார். ‘ஏற்பாடு’ என தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்த்துள்ள கிரேக்கச் சொல், தற்கால மொழிபெயர்ப்புகள் பலவற்றில் “உடன்படிக்கை” என ஒரே சீராக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.—மத். 26:28; 2 கொ. 3:6, 14, ஆங்கிலத்தில், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு, ரிவைஸ்ட் ஸ்டேன்டர்டு மொழிபெயர்ப்பு, அமெரிக்கன் ஸ்டேன்டர்டு மொழிபெயர்ப்பு.
28 பரிசுத்த வேதவாக்கியங்களாக பதிவுசெய்து பாதுகாத்து வைக்கப்பட்டதில் எதையும் கூட்டிக்குறைத்து மாற்றம் செய்யக்கூடாது. (உபா. 4:1, 2; வெளி. 22:18, 19) அப்போஸ்தலன் பவுல் இந்தக் குறிப்பின்பேரில் பின்வருமாறு எழுதுகிறார்: “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” (கலா. 1:8; யோவான் 10:35-ஐயும் காண்க.) யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தை முழுவதும் காலப்போக்கில் நிறைவேற்றப்பட வேண்டும். “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசா. 55:11.
வேதவாக்கியங்களை ஆராய்தல்
29 பின்வரும் பக்கங்களில், பரிசுத்த வேதவாக்கியங்களின் 66 புத்தகங்கள் வரிசைமுறைப்படி ஆராயப்படுகின்றன. ஒவ்வொரு புத்தகத்தின் சூழமைவும் விவரிக்கப்படுகிறது. எழுத்தாளரையும், எழுதப்பட்ட காலத்தையும், சில சந்தர்ப்பங்களில், உட்பட்ட காலப்பகுதியைப் பற்றிய தகவலும் கொடுக்கப்படுகிறது. அந்தப் புத்தகம் நம்பத்தக்கது என்பதற்கும் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் பாகமே என்பதற்கும் நிரூபணம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிரூபணத்தை இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் அல்லது கடவுளுடைய மற்ற ஊழியர்களின் ஏவப்பட்ட எழுத்துக்களில் காணலாம். மறுக்க முடியாத பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றங்களால் அல்லது ஒத்திசைவு, நேர்மை, கபடமின்மை போன்ற அந்தப் புத்தகத்திலிருந்தே வரும் அத்தாட்சியால் இந்தப் புத்தகத்தின் நம்பகத்தன்மை பெரும்பாலும் காட்டப்படுகிறது. இதர அத்தாட்சிகள் தொல்பொருள் கண்டுபிடிப்புகளிலிருந்து அல்லது உலகப்பிரகாரமான நம்பத்தக்க சரித்திரத்திலிருந்து எடுக்கப்படலாம்.
30 ஒவ்வொரு புத்தகத்தின் பொருளடக்கமும் விவரிக்கப்படுகையில், பைபிள் எழுத்தாளரின் வல்லமைவாய்ந்த அந்தச் செய்தி, தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களுக்கும் அவற்றின் நூலாசிரியரான யெகோவா தேவனுக்கும் ஆழ்ந்த அன்பை வாசகரின் இருதயத்தில் படிப்படியாக அறிவுறுத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கடவுளுடைய வார்த்தையின் உயிர்ப்புள்ள செய்தியை அதன் எல்லா நடைமுறை பயனுடனும், ஒத்திசைவுடனும், அழகுடனும் மதித்துணர்வதை அதிகப்படுத்தவும் முயற்சி செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தின் பொருளடக்கம் உபதலைப்புகளின்கீழ் பாராக்களில் கொடுக்கப்படுகிறது. படிப்பதற்கு வசதியாக அவ்வாறு செய்யப்பட்டுள்ளது, அவை பைபிள் புத்தகங்கள் ஒவ்வொன்றும் முறைப்படி பிரிக்கப்பட்டிருப்பதை குறிப்பதில்லை. ஒவ்வொரு புத்தகமும் கடவுளுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கு மதிப்புள்ள பங்கை அளிக்கும் தனிப்பட்ட நூல் எனலாம்.
31 ஒவ்வொரு புத்தகத்தையும் முடிக்கையில், ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் இந்தப் பகுதி ஏன் “போதிப்பதற்கும் கண்டிப்பதற்கும் காரியங்களைச் சீர்படுத்துவதற்கும் நீதியான வழிகளில் சிட்சிப்பதற்கும் பயனுள்ளது” என்பதை ஆய்வுரை குறிப்பிட்டுக் காட்டுகிறது. (2 தீ. 3:16, NW) தீர்க்கதரிசன நிறைவேற்றங்களைக் குறித்து பிற்பட்ட பைபிள் எழுத்தாளர்கள் அளித்திருக்கும் ஏவப்பட்ட சான்றுகளும் சிந்திக்கப்படுகின்றன. பைபிளின் முழு பொருளைப் படிப்படியாக தெரிவிப்பதில் ஒவ்வொரு புத்தகமும் அளித்திருக்கும் பங்கு காட்டப்படுகிறது. பைபிள் ஒரு கற்பனைக் கதை புத்தகமல்ல. அது மனிதவர்க்கத்துக்கான ஒரே உயிருள்ள செய்தியைக் கொண்டுள்ளது. முதல் புத்தகமாகிய ஆதியாகமம் முதல் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதல் வரை, தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்கள், சர்வலோக சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் நோக்கத்தைக் குறித்து சாட்சிபகருகின்றன. தம்முடைய வித்தால் ஆளப்படும் ராஜ்யத்தைக் கொண்டு தம்முடைய பெயரை பரிசுத்தப்படுத்த வேண்டுமென்பதே அவரது நோக்கம். நீதியை நேசிப்போர் யாவருக்கும் மகிமையான நம்பிக்கை அதில் அடங்கியுள்ளது.—மத். 12:18, 21.
32 பைபிளின் 66 புத்தகங்களை சிந்தித்தப் பின்பு, பைபிளின் பின்னணி தகவலைக் குறித்து சற்று சிந்திப்போம். இதில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் புவியியல், பைபிள் சம்பவங்களின் காலம், பைபிள் மொழிபெயர்ப்புகள், பைபிளின் நம்பகத்தன்மையை ஆதரிக்கும் தொல்பொருள் மற்றும் இதர அத்தாட்சிகள், பைபிள் பட்டியல் வரிசை தொகுப்பு பற்றிய சான்றுகள் போன்றவை அடங்கியுள்ளன. பயனுள்ள மற்ற தகவல்களும் அட்டவணைகளும்கூட இந்தப் பகுதியில் உள்ளன. உலகிலேயே மிகவும் நடைமுறைக்கேற்ற பயனுள்ள புத்தகமாகிய பைபிளின்மீது போற்றுதலை வளர்ப்பதற்கே இவை யாவும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
33 நூலாசிரியராகிய கடவுள், மனிதவர்க்கத்தினிடம் விரிவாக பேசியிருக்கிறார். பூமியிலுள்ள தம்முடைய பிள்ளைகளுக்காக அவர் செய்திருக்கிறவற்றில் ஆழமான அன்பையும் தகப்பனைப் போன்ற அக்கறையையும் காட்டியிருக்கிறார். பரிசுத்த வேதாகமத்தில் எப்பேர்ப்பட்ட அருமையான பதிவுகளை நமக்காக தொகுத்து அருளியிருக்கிறார்! நிச்சயமாகவே, இவை ஒப்பற்ற அரும்பொருள், ‘கடவுள் ஊதிய’ பல்வேறு தகவல் அடங்கிய நூலகமாகின்றன. மதிப்பிலும் நோக்கத்திலும் எந்த மனிதனின் புத்தகங்களையும்விட மிகவும் மேம்பட்டது. கடவுளுடைய வார்த்தையைப் படிக்க முயற்சிப்பது “உடலுக்கு இளைப்பு” ஆகாது, மாறாக, ‘என்றென்றும் நிலைத்திருக்கும் யெகோவாவின் வசனத்தை’ அறிந்திருப்போருக்கு நித்திய நன்மைகளை அது கொண்டுவரும்.—பிர. 12:12; 1 பே. 1:24, 25 NW.
[கேள்விகள்]
1. பைபிள் அதன் நூலாசிரியரை எவ்வாறு அடையாளம் காட்டுகிறது, என்ன வகையான அறிவை வேதாகமம் அளிக்கிறது?
2. மோசே, தாவீது, சாலொமோன் ஆகியோர் தெய்வீக ஞானத்தை எவ்வாறு மதிப்பிட்டார்கள்?
3. கடவுளுடைய வார்த்தையில் இயேசுவும் கடவுள்தாமேயும் எப்படிப்பட்ட மதிப்பை வைக்கிறார்கள்?
4. ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதவசனங்கள் எதற்குப் பயனுள்ளவை?
5. விசுவாசம் என்றால் என்ன, எப்படி மாத்திரமே அதை அடையலாம்?
6. உண்மையான விசுவாசம் எத்தகைய பண்புடையது?
7. பைபிள் ஞானத்தைக் கண்டடைவதோடு என்ன பலன்கள் வருகின்றன?
8. (அ) யெகோவா பேச்சு தொடர்புகொள்ளும் கடவுளாக இருப்பதால் நாம் ஏன் நன்றியுடன் இருக்க வேண்டும்? (ஆ) எந்த வகையில் அவர் பேய் தெய்வங்களுக்கு எதிர்மாறாக இருக்கிறார்?
9. பரலோகத்தில் கடவுளிடமிருந்து என்ன வகையான தகவல் வந்திருக்கிறது?
10. என்ன மொழிகளில் யெகோவா தகவல் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார், ஏன்?
11. யெகோவாவே எல்லா மொழிகளையும் உருவாக்கியவர் என்று ஏன் சொல்லலாம்?
12, 13. (அ) எவ்வாறு யெகோவா தம்முடைய தகவல் தொடர்புகளை எளிதில் புரிந்துகொள்ளுமாறு செய்திருக்கிறார்? (ஆ) உதாரணங்கள் தருக.
14, 15. மனித தத்துவஞான எழுத்துக்களுக்கு நேர்மாறாக, பைபிள் மற்ற மொழிகளில் எளிதில் மொழிபெயர்க்கத்தக்க நூலாக இருப்பதற்கு காரணம் என்ன? விளக்குக.
16. யெகோவாவின் தகவல் தொடர்புகொள்ளும் வழியை எவ்வாறு சுருக்கமாய் குறிப்பிடலாம்?
17. “கடவுளால் ஏவப்பட்டது” என மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க சொல் எது, அதன் பொருள் எவ்வாறு ஏவுதலின் வழிமுறையைப் புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்கிறது?
18. ஏவப்பட்ட மனிதர்களின் மனங்களில் செய்திகள் எவ்வளவு ஆழமாக பதிய வைக்கப்பட்டன?
19. கடவுளுடைய “விரல்” என்றால் என்ன, இதை எந்த வசனங்கள் நிரூபிக்கின்றன?
20. கடவுளுடைய “விரல்” எவ்வாறு செயல்பட்டுள்ளது, அதன் பலன் என்ன?
21. (அ) வேதாகமம் எழுதப்படுவது எவ்வாறு ஆரம்பமானது? (ஆ) அவை பாதுகாத்து வைக்கப்படுவதற்கு யெகோவா எவ்வகையில் ஏற்பாடு செய்தார்?
22. (அ) ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமத்தின் நூலாசிரியர் யார், எழுதுவதற்கு எவ்வளவு நீண்ட காலம் எடுத்தது? (ஆ) பைபிளை எழுதிய எழுத்தாளர்கள் யாவர், அவர்களைப் பற்றி என்ன அறியப்பட்டுள்ளது?
23. பைபிள் எழுத்தாளர்கள் சிலர் பயன்படுத்திய பூர்வ பதிவுகள் யாவை, இவை எவ்வாறு ஏவப்பட்ட வேதவாக்கியமாயின?
24, 25. (அ) பைபிளில் என்ன சரித்திர காலப்பகுதி அடங்கியுள்ளது? (ஆ) பக்கம் 12-ல் உள்ள அட்டவணையில் கண்ட அக்கறையூட்டும் உண்மைகள் சிலவற்றை குறிப்பிடுக.
26. எந்த விதத்தில் வேதாகமம் முழுமையான ஒரே புத்தகம்?
27. “பழைய ஏற்பாடு,” “புதிய ஏற்பாடு” என்ற கூற்றுகள் ஏன் தவறாக வழங்கும் பெயர்கள்?
28. பைபிள் தீர்க்கதரிசனங்களைக் குறித்து என்ன உறுதி கொடுக்கப்படுகிறது?
29. இந்தப் புத்தகத்தில், பைபிள் புத்தகம் ஒவ்வொன்றும் அவற்றின் வரிசையில் ஆராயப்படுகையில், என்ன அறிமுகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது?
30. பைபிள் புத்தகம் ஒவ்வொன்றின் பொருளடக்கமும் எந்த முறையில் அளிக்கப்படுகிறது?
31. (அ) ஒவ்வொரு புத்தகமும் பயனுள்ளது என காட்டுவதற்கு என்ன தகவல் அளிக்கப்பட்டுள்ளது? (ஆ) பைபிள் புத்தகங்களின் ஆய்வுரைகள் முழுவதிலும் மகிமையான என்ன பொருள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது?
32. பைபிளின்மீது போற்றுதலை அதிகரிப்பதற்கு என்ன தகவல் அளிக்கப்பட்டுள்ளது?
33. பைபிளை எவ்வாறு விவரிக்கலாம், அதைப் படிப்பதால் வரும் பயன் என்ன?
[பக்கம் 12-ன் அட்டவணை]
பைபிள் எழுத்தாளர்களும் புத்தகங்களும்
(தேதி வரிசைப்படி)
வரிசை எழுத்தாளர்கள் தொழில்கள் எழுதி முடிக்கப்பட்டது எழுதியவை
1. மோசே அறிஞர், பொ.ச.மு. 1473 ஆதியாகமம்; யாத்திராகமம்;
மேய்ப்பர், லேவியராகமம்; யோபு;
தீர்க்கதரிசி, எண்ணாகமம்; உபாகமம்;
தலைவர் சங்கீதம் 90
(ஒருவேளை 91-ம் சங்கீதமும் இருக்கலாம்)
2. யோசுவா தலைவர் ஏ. பொ.ச.மு. 1450 யோசுவா
3. சாமுவேல் லேவியர், ஏ. பொ.ச.மு. 1080 நியாயாதிபதிகள்; ரூத்;
தீர்க்கதரிசி முதலாம் சாமுவேலின் ஒரு பகுதி
4. காத் தீர்க்கதரிசி ஏ. பொ.ச.மு. 1040 முதலாம் சாமுவேல் பகுதி;
இரண்டாம் சாமுவேல் (இரண்டும்
நாத்தானுடன்)
5. நாத்தான் தீர்க்கதரிசி ஏ. பொ.ச.மு. 1040 மேலே காண்க (காத்துடன்)
6. தாவீது அரசர், பொ.ச.மு. 1037 சங்கீதங்கள் பல
மேய்ப்பர்,
இசைக் கலைஞர்
7. கோராகின் சங்கீதங்கள் சில
புத்திரர்
8. ஆசாப் பாடகர் சங்கீதங்கள் சில
9. ஏமான் ஞானி சங்கீதம் 88
10. ஏத்தான் ஞானி சங்கீதம் 89
11. சாலொமோன் அரசர், ஏ. பொ.ச.மு. 1000 நீதிமொழிகள்
கட்டிடக் பெரும்பான்மையானவை;
கலைஞர், சாலொமோனின் உன்னதப்பாட்டு;
ஞானி பிரசங்கி; சங்கீதம் 127
12. ஆகூர் நீதிமொழிகள் அதிகாரம் 30
13. லேமுவேல் அரசர் நீதிமொழிகள் அதிகாரம் 31
14. யோனா தீர்க்கதரிசி ஏ. பொ.ச.மு. 844 யோனா
15. யோவேல் தீர்க்கதரிசி ஏ. பொ.ச.மு. 820(?) யோவேல்
16. ஆமோஸ் மேய்ப்பன், ஏ. பொ.ச.மு. 804 ஆமோஸ்
தீர்க்கதரிசி
17. ஓசியா தீர்க்கதரிசி பொ.ச.மு. 745-க்குப் பின் ஓசியா
18. ஏசாயா தீர்க்கதரிசி பொ.ச.மு. 732-க்குப் பின் ஏசாயா
19. மீகா தீர்க்கதரிசி பொ.ச.மு. 717-க்கு முன் மீகா
20. செப்பனியா பிரபு, பொ.ச.மு. 648-க்கு முன் செப்பனியா
தீர்க்கதரிசி
21. நாகூம் தீர்க்கதரிசி பொ.ச.மு. 632-க்கு முன் நாகூம்
22. ஆபகூக் தீர்க்கதரிசி ஏ. பொ.ச.மு. 628(?) ஆபகூக்
23. ஒபதியா தீர்க்கதரிசி ஏ. பொ.ச.மு. 607 ஒபதியா
24. எசேக்கியேல் ஆசாரியன், ஏ. பொ.ச.மு. 591 எசேக்கியேல்
தீர்க்கதரிசி
25. எரேமியா ஆசாரியன், பொ.ச.மு. 580 முதலாம் இரண்டாம் இராஜாக்கள்;
தீர்க்கதரிசி எரேமியா; புலம்பல்
26. தானியேல் பிரபு, ஏ. பொ.ச.மு. 536 தானியேல்
அதிபதி,
தீர்க்கதரிசி
27. ஆகாய் தீர்க்கதரிசி பொ.ச.மு. 520 ஆகாய்
28. சகரியா தீர்க்கதரிசி பொ.ச.மு. 518 சகரியா
29. மொர்தெகாய் முக்கிய மந்திரி ஏ. பொ.ச.மு. 475 எஸ்தர்
30. எஸ்றா ஆசாரியன், ஏ. பொ.ச.மு. 460 முதலாம் இரண்டாம் நாளாகமங்கள்;
நகல் எழுதுபவர், எஸ்றா
நிர்வாகி
31. நெகேமியா அரசவை பொ.ச.மு. 443-க்குப் பின் நெகேமியா
பணியாளர்,
தேசாதிபதி
32. மல்கியா தீர்க்கதரிசி பொ.ச.மு. 443-க்குப் பின் மல்கியா
33. மத்தேயு வரி வசூலிப்பவர், ஏ. பொ.ச. 41 மத்தேயு
அப்போஸ்தலன்
34. லூக்கா மருத்துவர், ஏ. பொ.ச. 56-58 லூக்கா; அப்போஸ்தலர்
மிஷனரி
35. யாக்கோபு கண்காணி பொ.ச. 62-க்கு முன் யாக்கோபு
(இயேசுவின் சகோதரன்)
36. மாற்கு மிஷனரி ஏ. பொ.ச. 60-65 மாற்கு
37. பேதுரு மீன்பிடிப்பவர், ஏ. பொ.ச. 64 முதலாம் இரண்டாம் பேதுரு
அப்போஸ்தலன்
38. பவுல் மிஷனரி, ஏ. பொ.ச. 65 முதலாம் இரண்டாம் தெசலோனிக்கேயர்;
அப்போஸ்தலன், கலாத்தியர்; முதலாம் இரண்டாம்
கூடாரம் செய்பவர் கொரிந்தியர்; ரோமர்; எபேசியர்;
பிலிப்பியர்; கொலோசெயர்;
பிலேமோன்; எபிரெயர்; முதலாம்
இரண்டாம் தீமோத்தேயு; தீத்து
39. யூதா சீஷன் ஏ. பொ.ச. 65 யூதா
(இயேசுவின் சகோதரன்)
40. யோவான் மீன்பிடிப்பவர், ஏ. பொ.ச. 98 வெளிப்படுத்துதல்; யோவான்; முதலாம்,
அப்போஸ்தலன் இரண்டாம், மூன்றாம் யோவான்