வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் மனந்திரும்பாத பாவி என்பதால் கிறிஸ்தவர்கள் அவருக்காக ஜெபிக்கக் கூடாது என்பதை எரேமியா 7:16-ல் உள்ள கடவுளுடைய கட்டளை அர்த்தப்படுத்துகிறதா?
உண்மையற்ற யூதாவின்மீது யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்பை அறிவித்தபின் எரேமியாவிடம் இவ்வாறு கூறினார்: “நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.”—எரேமியா 7:16.
இஸ்ரவேலருக்காக ஜெபம் பண்ண வேண்டாம் என்று எரேமியாவிடம் யெகோவா ஏன் சொன்னார்? அவர்கள் நியாயப்பிரமாணத்தை அப்பட்டமாக மீறியதே இதற்கு காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. பகிரங்கமாகவும் துளிகூட வெட்கம் இல்லாமலும் அவர்கள் “திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, . . . அந்நிய தேவர்களைப் பின்பற்றி”னார்கள். ஆகவே யெகோவா உண்மையற்ற யூதர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டது போல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன்.” எரேமியாவோ அல்லது வேறு யாராவதோ அவருடைய நியாயத்தீர்ப்பை மாற்றி அறிவிக்கும்படி யெகோவாவிடம் ஜெபிப்பது நிச்சயமாகவே சரியானதாக இருந்திருக்காது.—எரேமியா 7:9, 15.
இதற்கு இசைவாகவே, கடவுளிடம் பொருத்தமான விதத்தில் ஜெபிப்பதைக் குறித்து அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார். முதலாவதாக, கிறிஸ்தவர்களுக்கு அவர் இவ்வாறு உறுதியளித்தார்: ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்.’ (1 யோவான் 5:14) அடுத்து, மற்றவர்களுக்காக ஜெபிப்பதைப் பற்றி யோவான் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக் குறித்து வேண்டுதல் செய்ய நான் சொல்லேன்.” (1 யோவான் 5:16) ‘மன்னிக்கப்படாத’ பாவத்தை, அதாவது பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவத்தைப் பற்றியும் இயேசு பேசினார்.—மத்தேயு 12:31, 32.
அப்படியானால், தவறிழைத்து மனந்திரும்பாமல் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்ட அனைவருமே ‘மரணத்திற்கு ஏதுவான’ பாவத்தையே செய்திருக்கிறார்கள் என்றும் அவர்களுக்காக ஜெபிக்கக் கூடாது என்றும் இது அர்த்தப்படுத்துகிறதா? அப்படி புரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் சிலருடைய மீறுதல்கள் மரணத்திற்கு ஏதுவான பாவங்களாக இருப்பதில்லை. சொல்லப்போனால், அவை மரணத்திற்கு ஏதுவானவையா இல்லையா என தெரிந்துகொள்வது கடினமாகும். இதற்கு ஓர் உதாரணம் யூதாவின் அரசனாகிய மனாசே. அவன் பொய் கடவுட்களுக்கு மேடைகளைக் கட்டினான், தன் குமாரர்களையே பலியாக செலுத்தினான், ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களை பின்பற்றினான், யெகோவாவின் ஆலயத்தில் விக்கிரகங்களைக் கொண்டுவந்து வைத்தான். மனாசேயும் ஜனங்களும் “கர்த்தர் [“யெகோவா,” NW] இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப் பார்க்கிலும் அதிகமாய்ச் செய்”தனர். மனாசே செய்த எல்லா செயலுக்கும் தண்டனையாக அவன் சங்கிலியால் கட்டப்பட்டு பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும்படி யெகோவா அனுமதித்தார்.—2 இராஜாக்கள் 21:1-9; 2 நாளாகமம் 33:1-11.
மனாசே செய்த பாவங்கள் படுமோசமானவையாக இருந்தாலும், அவை மரணத்திற்கு ஏதுவானவையா? இல்லை என்று தெரிகிறது, ஏனென்றால் அவனைப் பற்றிய பதிவு தொடர்ந்து இவ்வாறு கூறுகிறது: “இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை [“யெகோவாவை,” NW] நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் பண்ணிக் கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே [“யெகோவாவே,” NW] தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.”—2 நாளாகமம் 33:12, 13.
ஆகவே, ஒருவர் சபை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மரணத்திற்கு ஏதுவான பாவம் செய்த குற்றமுள்ளவர் என்று நாம் அவசரப்பட்டு முடிவெடுத்துவிடக் கூடாது. ஒருவருடைய உண்மையான இருதய நிலை வெளிப்படுவதற்கு காலம் எடுக்கலாம். சொல்லப்போனால், அந்த நபர் தன் தவறை உணர வேண்டும், மனந்திரும்பி, குணப்பட வேண்டும் என்பதே சபை நீக்கம் செய்யப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்று என அடிக்கடி சொல்லப்படுகிறது.
அவர் இனிமேலும் சபையின் அங்கத்தினராக இல்லாததால் அவருடைய இருதயத்திலும் மனப்பான்மையிலும் ஏற்படும் மாற்றங்களை அவருக்கு நெருக்கமானவர்களே முதலில் கவனிக்க முடியும், அது மணத் துணையாக அல்லது குடும்பத்தாராக இருக்கலாம். இந்த மாற்றங்களைப் பார்க்கிறவர்கள் அவர் மரணத்திற்கு ஏதுவான பாவத்தை செய்யவில்லை என்ற முடிவுக்கு வரலாம். ஆகவே பாவம் செய்த அந்த நபர், ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், யெகோவா தம்முடைய சித்தத்திற்கு இசைவாக அவரிடம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஜெபிக்க அவர்கள் தூண்டப்படலாம்.—சங்கீதம் 44:21; பிரசங்கி 12:14.
தவறிழைத்தவர் மனந்திரும்பிவிட்டார் என்று நம்புவதற்கு போதிய அத்தாட்சியை சிலர் மாத்திரமே கவனிக்க முடியும். பொதுவில் சபையாரால் அதை கவனிக்க முடியாது. ஆகவே சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்காக பகிரங்கமாக யாராவது ஜெபம் செய்வதைக் கேட்டால் அவர்கள் குழம்பிப் போகலாம், இடறலடையலாம். எனவே தவறிழைத்தவருக்காக ஜெபிக்கும்படி ஒருவர் தூண்டப்பட்டால், அவர் தனிப்பட்ட விதத்தில் மாத்திரமே ஜெபிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மற்ற காரியங்களை சபையிலுள்ள பொறுப்புள்ள மூப்பர்கள் கவனித்துக்கொள்வதற்கு விட்டுவிட வேண்டும்.
[பக்கம் 31-ன் படம்]
யெகோவாவுக்கு முன்பாக மனாசே தன்னை தாழ்த்தியபோது அவனுடைய பெரும் பாவங்கள் மன்னிக்கப்பட்டன
[பக்கம் 30-ன் படத்திற்கான நன்றி]
Reproduced from Illustrierte Pracht - Bibel/Heilige Schrift des Alten und Neuen Testaments, nach der deutschen Uebersetzung D. Martin Luther’s