சத்தியத்தில் உடன் வேலையாட்களாக நடந்திடுங்கள்
இரண்டு மற்றும் மூன்று யோவானிலிருந்து முக்கிய குறிப்புகள்
சத்தியத்தின் அறிவு யெகோவாவின் வணக்கத்தாரை அடையாளப்படுத்தும் ஒரு குறியாக இருக்கிறது. (யோவான் 8:31, 32; 17:17) தெய்வீக சத்தியத்தில் நடப்பது இரட்சிப்புக்கு அவசியம். கடவுளுடைய ஊழியர்கள் சத்தியத்தில் உடன் ஊழியர்களாக இருக்க வேண்டும்.
அப்போஸ்தலனாகிய யோவான் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதிய இரண்டாவது மற்றும் மூன்றாவது கடிதங்கள் “சத்தியத்திலே நடக்கிற” காரியத்தைப்பற்றிப் பேசுகிறது. (2 யோவான் 4; 3 யோவான் 3, 4) மூன்று யோவான்கூட “சத்தியத்தில் உடன் வேலையாட்களாக” ஒத்துழைப்பை உற்சாகப்படுத்துகிறது. (3 யோவான் 5–8) அநேகமாக இரண்டு கடிதங்களும் எபேசு பட்டணத்தில் அல்லது அதற்கு அண்மையில் ஏறக்குறைய பொ.ச. 98-ல் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவை சொல்லுவது இன்றைய யெகோவாவின் ஜனங்களுக்கு நன்மையாயிருக்கும்.
இரண்டு யோவான் சத்தியத்தை அறிவுறுத்துகிறது
இரண்டு யோவான் முதலில் சத்தியத்தையும் அன்பையும் அழுத்திக் காண்பித்து, “அந்திக்கிறிஸ்துவுக்கு” எதிராக எச்சரித்தது. (வசனங்கள் 1–7) அந்தக் கடிதம் “தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கு,” எழுதப்பட்டது, ஒருவேளை ஒரு தனி நபருக்கு இருக்கலாம். ஆனால் அது ஒரு சபைக்கு அனுப்பப்பட்டிருந்தால், அவளுடைய “பிள்ளைகள்” பரலோக வாழ்க்கைக்குத் “தெரிந்தகொள்ளப்பட்ட” ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாயிருந்தனர். (ரோமர் 8:16, 17; பிலிப்பியர் 3:12–14) சிலர் “சத்தியத்தில் நடக்கிறதைக்” கண்டு யோவான் மகிழ்ச்சியடைந்தான், இப்படியாக அவர்கள் விசுவாச துரோகத்தை எதிர்த்துநின்றார்கள். என்றபோதிலும், இயேசு மாம்சத்தில் வந்தார் என்பதை மறுக்கும் “அந்திக்கிறிஸ்துவுக்கு” எதிராக அவர்கள் கவனமாயிருக்க வேண்டும். இன்றைய யெகோவாவின் சாட்சிகளும் விசுவாச துரோகத்திற்கு எதிரான அப்படிப்பட்ட எச்சரிப்புகளுக்கு செவிகொடுக்கிறார்கள்.
அடுத்து யோவான் விசுவாசதுரோகிகளுடன் தொடர்பு கொள்வதன் பேரில் புத்திமதி அளித்து, தனிப்பட்ட வாழ்த்துதலுடன் முடிக்கிறான். (வசனங்கள் 8–13) பிரசங்கித்தல் போன்ற உழைப்பின் மூலம், அவனும் மற்றவர்களும் கனிகொடுத்திருக்கின்றனர், இது மற்றவர்கள் மதம் மாறுவதில் விளைவடைந்திருக்க, இவர்களுக்குத்தான் தன்னுடைய கடிதத்தை எழுதியனுப்பினான். ஆவிக்குரிய பிரகாரமாய் அவர்கள் ‘கவனமாயிருந்தால்தான்’ ‘முழு பலனைப் பெறுவார்கள்,’ இதில் உண்மையுள்ள அபிஷேகம்பண்ணப்பட்டிருப்பவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பரம “கிரீடம்” உட்படுகிறது என்பது தெளிவாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 4:7, 8) ‘கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்காத எவனும்’ அவர்களிடத்தில் வந்தால், அவனுடைய “துர்க்கிரியைகளுக்கு” பங்குள்ளவனாகாதிருக்க ‘அவனைத் தங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும் அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும்’ இருக்கவேண்டும். அந்த உடன் விசுவாசிகளைச் சந்திக்க வருவதாகவும் அவர்களுடன் முகமுகமாய்ப் பேசுவதாகவும் நம்பிக்கைத் தெரிவித்த பின்னர் யோவான் வாழ்த்துதலுடன் முடிக்கிறான்.
மூன்று யோவான் ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது
மூன்று யோவான் காயுவுக்கு எழுதப்பட்டது மற்றும் அவன் தன்னுடைய உடன்விசுவாசிகளுக்கு என்ன செய்துகொண்டிருந்தான் என்பதற்குக் கவனம் திருப்பப்படுகிறது. (வசனங்கள் 1–8) கிறிஸ்தவ போதனைகளின் முழு தொகுப்புக்கும் செவிகொடுப்பதன் மூலம் காயு “சத்தியத்தில் நடந்துகொண்டிருந்தான்.” சந்திக்க வரும் சகோதரர்களுக்கு உதவுவதில் அவன் “உண்மையான வேலையைச்” செய்துவந்தான். யோவான் எழுதியதாவது: “நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்.” யெகோவாவின் சாட்சிகள் இன்றும் அதுபோன்ற உபசரிப்பை பிரயாண கண்காணிகளுக்குக் காண்பித்து வருகிறார்கள்.
தியோத்திரேப்புவின் கெட்ட நடத்தையை தேமேத்திரியுவுடன் முரண்படுத்திக் காட்டிய பின்பு, யோவான் தன்னுடைய கடிதத்தை முடித்தான். (வசனங்கள் 9–14) மகிமை தேடும் தியோத்திரேப்பு யோவானுக்கு எவ்வித மதிப்பும் காண்பிக்கவில்லை, மற்றும் சகோதரர்களை உபசரிப்பவர்களைச் சபையிலிருந்து புறம்பாக்கிடவும் முயன்றான். என்றபோதிலும் தேமேத்திரியு என்பவன் நல்ல முன்மாதிரியாகக் குறிப்பிடப்படுகிறான். யோவான் காயுவைச் சீக்கிரத்தில் சந்திக்க நம்பிக்கை தெரிவித்து, காயு சமாதானத்தை அனுபவித்துமகிழ அவரை வாழ்த்தி முடிக்கிறான். (w91 4⁄15)
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
காகிதத்தினாலும் மையினாலும், இறகினாலும்: “தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மா”ளுக்கும் அவளுடைய “பிள்ளைகளுக்கும்” அநேக காரியங்களைக் “காகிதத்தினாலும் மையினாலும்” எழுதுவதற்குப் பதிலாக யோவான் அவர்களைச் சீக்கிரத்தில் சந்திக்க விரும்பினான். காயுவுக்கு “மையினாலும் இறகினாலும்” தொடர்ந்து எழுதுவதற்கு பதிலாக அப்போஸ்தலன் சீக்கிரத்தில் அவனையும் காண எதிர்பார்த்தான். (2 யோவான் 1, 12; 3 யோவான் 1, 13, 14) “இறகு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்கச் சொல் (காலமாஸ்) ஒரு பிரம்பு அல்லது நாணலைக் குறிக்கிறது, எனவே “எழுதும் நாணல்” எனலாம். கிரேக்கர் மற்றும் ரோமர்கள் மத்தியில், நாணல் பேனாக்கள் பிற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட இறகுகள் போன்று கூராகவும் சிறிய பிளவு கொண்டதாகவும் இருந்தன. “மை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மேலான் என்ற கிரேக்க சொல் ஆண்பால் பெயரடைச் சொல் மேலாஸ், “கருமை” என்று பொருள். பண்டைக்கால மைகளில் பயன்படுத்தப்பட்ட நிறமி கரியம் கலந்த கருமை—தாவரம் அல்லது மிருகங்களிலிருந்து கிடைக்கும் எண்ணெய், மரம், அல்லது திடக் கரி எரிப்பதால் பெறப்பட்ட ஒருவகைப் புகைக்கரியாகும். பொதுவாக மைகள் திடப்பொருளாக அல்லது கெட்டிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்தன, இவை எழுத்தரால் ஈரமாக்கப்பட்டு அவருடைய தூரிகை அல்லது நாணல் கொண்டு எழுதப்பட்டது. அக்காலங்களில் காகிதம் பப்பைரஸ் நாணற்புல்லிலிருந்து தாள்களாகச் செய்யப்பட்ட மெல்லிய பொருளாயிருந்தது. பூர்வ கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட காகிதத்தைக் கடிதங்கள், சுருள்கள் மற்றும் ஏட்டுச்சுவடிகளுக்குப் பயன்படுத்தினர்.