யோவானின் இரண்டாம் கடிதம்
1 கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணிக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பராகிய* நான் எழுதுவது என்னவென்றால்: எனக்கு உங்கள்மேல் உண்மையாகவே அன்பு இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, சத்தியத்தைத் தெரிந்துகொண்ட எல்லாருக்கும் உங்கள்மேல் அன்பு இருக்கிறது. 2 அதற்குக் காரணம் நம்மிடம் இருக்கிற சத்தியம்தான், அது என்றென்றும் நம்மோடு இருக்கும். 3 சத்தியமும் அன்பும் மட்டுமல்ல, பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வருகிற அளவற்ற கருணையும் இரக்கமும் சமாதானமும் நம்மோடு இருக்கும்.
4 பரலோகத் தகப்பன் நமக்குக் கொடுத்த கட்டளையின்படியே, உன்னுடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்தில் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.+ 5 பெண்மணியே, ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டுமென்று உன்னைக் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு புதிய கட்டளை அல்ல, ஆரம்பத்திலிருந்தே நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையைத்தான் உனக்கு எழுதுகிறேன்.+ 6 நாம் தொடர்ந்து அவருடைய கட்டளைகளின்படி நடந்தால்தான் அன்பு காட்டுகிறோம் என்று அர்த்தம்.+ தொடர்ந்து அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்து நீங்கள் எல்லாரும் கேட்ட கட்டளை. 7 ஏமாற்றுக்காரர்கள் நிறைய பேர் இந்த உலகத்தில் வந்திருக்கிறார்கள்.+ இயேசு கிறிஸ்து மனிதராக வந்ததை+ இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இப்படி மறுக்கிறவன்தான் ஏமாற்றுக்காரன், அந்திக்கிறிஸ்து.*+
8 நாங்கள் பாடுபட்டு உண்டாக்கியவற்றை நீங்கள் இழந்துவிடாமல் முழு பலனைப் பெற்றுக்கொள்வதற்கு+ விழிப்புடன் இருங்கள். 9 கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்காமல் வரம்புமீறிப் போகிற எவனையும் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார்.+ ஆனால், இந்தப் போதனையில் நிலைத்திருப்பவனைப் பரலோகத் தகப்பனும் மகனும் ஏற்றுக்கொள்கிறார்கள்.+ 10 உங்களிடம் வருகிற யாராவது இந்தப் போதனைக்கு ஏற்றபடி கற்றுக்கொடுக்கவில்லை என்றால், அவனை ஒருபோதும் உங்களுடைய வீட்டுக்குள் சேர்க்காதீர்கள்,+ அவனுக்கு வாழ்த்தும் சொல்லாதீர்கள். 11 அப்படி அவனுக்கு வாழ்த்துச் சொல்கிற ஒருவன் அவனுடைய பொல்லாத செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறான்.
12 நான் உங்கள் எல்லாருக்கும் எழுத வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன, ஆனால் தாளிலும் மையிலும் அவற்றை எழுத நான் விரும்பவில்லை; உங்கள் சந்தோஷம் நிறைவாகும்படி, உங்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேச ஆவலாக இருக்கிறேன்.
13 கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவளான உன்னுடைய சகோதரியின் பிள்ளைகள் உனக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.