ஒரு மதம் நிலைத்திருக்கும்
பூமியிலுள்ள எல்லா மக்களும் ஒரே மதத்தில் ஒன்றுபட்டவர்களாய், ஒரே மெய்க்கடவுளின் தூய்மையான வணக்கத்தில் இருப்பது எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். அது ஒற்றுமைக்கு எப்பேர்ப்பட்ட ஓர் ஆதாரமாய் இருக்கும்! அப்போது மதச்சண்டைகளோ, போராட்டமோ, போரோ இருக்கவே இருக்காது. இது வெறுமனே ஒரு பகற்கனவாய் இருக்கிறதா? இல்லை. பொய் மத உலகப் பேரரசான அவ் வேசியை அழிப்பது பற்றிய அப்போஸ்தலன் யோவானின் தரிசனம், அவளுடைய அழிவுக்குப் பிறகு ஒரு வணக்கமுறை நிலைத்திருக்கும் என்பதைக் குறித்துக் காட்டுகிறது. எந்த வணக்கமுறை?
யோவான் வானத்திலிருந்து உண்டாகக் கேட்ட சத்தத்தின் மூலம் நமக்கு ஒரு துப்பு கிடைக்கிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு, அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” (வெளிப்படுத்துதல் 18:4) இங்கு, கடவுள்தாமே தம் ஜனங்களிடம் பேசுவது தெளிவாய் இருக்கிறது. ஓர் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தும்படி அவள் சரிசெய்துகொள்ள அவளுக்கு உதவுவதன் மூலம் அவளைக் காப்பாற்றும் முழுமொத்தமான முயற்சியில் அந்த வேசியோடு கலக்கும்படியாக அவர் தம் ஜனங்களுக்குக் கட்டளையிடவில்லை என்பதைக் கவனியுங்கள். இல்லை, அவளைத் திருத்தவே முடியாது. ஆகவே, அவளுடைய படுமோசமான பாவத்தன்மையால் கெட்டுப்போவதைத் தவிர்ப்பதற்காகவும், காலப்போக்கில் நியாயந்தீர்க்கப்பட்டு அவளோடு சேர்ந்து அழிவதைத் தவிர்ப்பதற்காகவும் அவளைவிட்டு வெளியேறி, விலகியிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
‘அவளைவிட்டு வெளியே வரும்படியான’ பரலோகக் கட்டளை, கடவுளுடைய ஜனங்களை அடையாளம் கண்டுகொள்வதில் சத்தியத்தை உண்மையாய்த் தேடுபவர்களுக்கு உதவவும் செய்கிறது. ‘இன்றைய பூமியில் வாழும் எந்த ஜனங்கள், ‘மகா பாபிலோனுடன்’ தொடர்புடைய ஏதாவதொரு மதம், அமைப்பு அல்லது வணக்கத் தொகுதியிலிருந்து வெளியேறுவதன் மூலம் இக் கட்டளைக்குச் செவிசாய்த்திருக்கின்றனர்? (வெளிப்படுத்துதல் 18:2) இன்றைய பூமியில் வாழும் எந்த ஜனங்கள் பாபிலோனிய கோட்பாடுகள், கொள்கைகள், பழக்கங்கள், பாரம்பரியங்கள் ஆகிய அனைத்திலிருந்தும் அவ்வாறு தங்களை விடுவித்திருக்கின்றனர்?’ என்று அவர்கள் தங்களிடமே கேட்டுக்கொள்ளலாம். அப்படிப்பட்டவர்கள் யெகோவாவின் சாட்சிகளைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்? 230-க்கும் அதிகமான நாடுகளில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட சாட்சிகளின் மத்தியில், பிறப்பிலேயோ, அல்லது மதம் மாறியவராகவோ, ஒரு வகை பாபிலோனிய மதத்தோடு தொடர்புடையோராயிருந்த அனைவருமே, அதிலிருந்து திட்டவட்டமாக வெளியேறியிருக்கின்றனர்—சில சமயங்களில் உறவினர்கள், நண்பர்கள், மதத் தலைவர்கள் ஆகியோரிடமிருந்து கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டபோதிலும் அவ்வாறு வெளியேறியிருக்கின்றனர்.
இதற்கு ஓர் உதாரணம், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவரும், தனது சர்ச்சின் பொருளாளராய் இருந்தவரும், அதனோடு மிகவும் பற்றுதலுள்ளவராய் இருந்தவருமான ஹென்றி. அவர் சத்தியத்துக்காகத் தேடிக்கொண்டிருந்ததால், ஒரு நாள் யெகோவாவின் சாட்சிகளோடு ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். காலப்போக்கில், ஒரு சாட்சியாக ஆவதற்கு அவர் தீர்மானித்தபோது, தன்னுடைய பாதிரியும், தனக்கு மிகவும் அருகில் வசித்துவந்தவருமானவரிடம், தான் சர்ச்சிலிருந்து வெளியேற விரும்புவதாகக் கூறினார்.
அந்தப் பாதிரி அதிர்ச்சிக்குள்ளானார்; பிறகு ஹென்றியைச் சந்திப்பதற்காக அச் சர்ச்சின் தலைமை அலுவலரையும் பிற உறுப்பினர்களையும் கூட்டிச் சென்றார். தங்களுடைய கருத்துப்படி, கடவுளுடைய பரிசுத்த ஆவியை உடையதாயிராத ஒரு மதத்தில் உறுப்பினராவதற்காக, ஏன் சர்ச்சிலிருந்து விலகிவிட்டாய் என்று அவர்கள் கேட்டனர். “அவர்கள் என்மீது எப்பொழுதுமே அதிக செல்வாக்கு செலுத்திவந்திருந்ததால், முதலில் அவர்களிடம் பதில்சொல்ல எனக்குப் பயமாயிருந்தது, ஆனால் உதவிக்காக யெகோவாவிடம் நான் ஜெபித்தேன்; அவர், ‘சர்வதேச மதங்கள் அனைத்திலும், எந்த ஒரே ஒரு மதம் யெகோவா என்ற கடவுளுடைய பெயரை ஒழுங்காக பயன்படுத்துகிறது? யெகோவாவின் சாட்சிகள் என்ற மதம்தான் இல்லையா? தம்முடைய பெயரைத் தரித்துக்கொள்ளும்படி அவர்களை அனுமதிக்கும் கடவுள், தமது பரிசுத்த ஆவியையும் அவர்களுக்கு அளிக்க மாட்டார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என எதிர்த்து வாதிட எனக்கு உதவினார்” என்பதாக ஹென்றி கூறினார். சர்ச் அலுவலர்கள் இந் நியாயவிவாதத்தைத் தவறென நிரூபிக்க முடியவில்லை; ஹென்றி இப்போது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராய் இருக்கிறார்.
ஆகவே வானத்திலிருந்து உண்டாகக் கேட்ட சத்தம், “அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்று கட்டளையிடும்போது, எங்கேயோ போவதற்கான ஓரிடம் இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 18:4) மெய்க்கடவுளாகிய யெகோவாவை வணங்கும் ஜனங்களிடம் நீங்கள் புகலிடமாய்ச் சென்றுசேர முடியும். லட்சக்கணக்கானோர் அவ்வாறு புகலிடமடைந்துள்ளனர். யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்பட்டிருப்பவர்களாய், 78,600-க்கும் மேற்பட்ட சபைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு, தங்களுடைய வரலாற்றில் மிகப் பெரிதளவான வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டிருக்கும் அவர்கள், ஒரு சர்வதேச கிறிஸ்தவ சகோதரத்துவத்தை உண்டுபண்ணுகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் 12,00,000-க்கும் மேற்பட்டவர்களை முழுக்காட்டியுள்ளனர்! முழுக்காட்டுதலுக்கு முன்பு, இவர்கள் அனைவரும், ஆவிக்குரிய வகையில் தூண்டுதலளிக்கும் தொடர் பைபிள் படிப்பைப் படித்து முடித்திருந்தனர். இது முன்னாளைய வேறெந்த மதத்தோடும் வைத்திருந்த பற்றுதலிலிருந்து விலகிக்கொள்வதற்கு ஒரு தனிப்பட்ட மற்றும் ஆதாரப்பூர்வ தீர்மானத்தை எடுக்கும்படி அவர்களுக்கு உதவி செய்திருக்கிறது.—செப்பனியா 2:2, 3.
நீங்கள் இதுவரையில் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடத்தப்படும் கூட்டம் ஒன்றுக்குச் செல்லாதிருந்தால், இந்த வாரம் ஏன் செல்லக்கூடாது? நீங்கள் காண்பதிலிருந்தும் கேட்பதிலிருந்தும் நிச்சயமாகவே சாதகமாய்க் கவரப்படலாம். மேலும், நீங்கள் பைபிளைப் புரிந்துகொள்ள விரும்பினால், லட்சக்கணக்கான மற்றவர்கள் செய்திருப்பதைப் போலவே, உங்களோடு சேர்ந்து அதைப் படிக்கும்படி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரிடம் ஏன் கேட்கக்கூடாது? கடவுளுடைய வார்த்தையின் உண்மையான புரிந்துகொள்ளுதலுக்காகவும், அந்த வார்த்தைக்கு இசைய வாழும் ஒரு வாழ்க்கை முறைக்காகவும் நீங்கள் ஜெபித்து வருகிறீர்களென்றால், உங்கள் ஜெபத்திற்குப் பதிலை நீங்கள் கண்டடைவீர்கள்.
[பக்கம் 9-ன் படங்கள்]
லட்சக்கணக்கானோர் யெகோவா தேவனின் வணக்கத்துக்குத் திரும்புகின்றனர்