சபைகளிடம் கிறிஸ்து பேசுகிறார்
‘ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது.’—வெளிப்படுத்துதல் 2:1.
1, 2. ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளிடம் கிறிஸ்து சொன்ன விஷயங்களுக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
யெகோவாவின் ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து, கிறிஸ்தவ சபையின் தலைவராக இருக்கிறார். அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களடங்கிய சபையை தலைமை வகிக்கையில் அது மாசற்று இருப்பதற்காக, அதை பாராட்டவும் செய்கிறார், திருத்தவும் செய்கிறார். (எபேசியர் 5:21-27) இதற்கான உதாரணங்கள் வெளிப்படுத்துதல் 2-ம் 3-ம் அதிகாரங்களில் உள்ளன; ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளுக்கு இயேசு கொடுத்த வலிமைமிக்க, அன்பான செய்திகளை இந்த அதிகாரங்களில் காணலாம்.
2 ஏழு சபைகளுக்கான இயேசுவின் வார்த்தைகளை கேட்பதற்கு முன் அப்போஸ்தலன் யோவான் ‘கர்த்தருடைய நாளைப்’ பற்றிய தரிசனத்தை கண்டார். (வெளிப்படுத்துதல் 1:10) 1914-ல் மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட போது அந்த ‘நாள்’ ஆரம்பமானது. ஆகவே, கிறிஸ்து அந்தச் சபைகளுக்கு சொன்ன விஷயங்கள் இந்தக் கடைசி நாட்களுக்கும் அதிமுக்கியமானவை. அவருடைய உற்சாகமளிக்கும் வார்த்தைகளும் ஆலோசனைகளும் இக்கொடிய காலங்களை சமாளிக்க நமக்கு உதவும்.—2 தீமோத்தேயு 3:1-5.
3. அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்ட ‘நட்சத்திரங்கள்,’ ‘தூதர்கள்,’ ‘பொன் குத்துவிளக்குகள்’ ஆகியவற்றின் அடையாள அர்த்தமென்ன?
3 “ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிற” மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை யோவான் தரிசனத்தில் கண்டார். அந்தப் ‘பொன் குத்துவிளக்குகள்’ சபைகளைக் குறிக்கின்றன. அந்த ‘நட்சத்திரங்கள்,’ ‘ஏழு சபைகளின் தூதர்களை’ குறிக்கின்றன. (வெளிப்படுத்துதல் 1:20; 2:1) நட்சத்திரங்கள் சிலசமயம் தேவதூதர்களை அடையாளப்படுத்துகின்றன, ஆனால் ஆவி சிருஷ்டிகளுக்குத் தேவையான செய்திகளை எழுத கிறிஸ்து ஒரு மனுஷனைப் பயன்படுத்த அவசியமில்லை. ஆகவே, இந்த ‘நட்சத்திரங்கள்’ ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகளை, அல்லது அபிஷேகம் செய்யப்பட்ட மூப்பர் குழுக்களை குறிக்க வேண்டும். ‘தூதர்கள்’ என்ற பதம் தூதுவர்களாக அவர்கள் வகிக்கும் பொறுப்போடு சம்பந்தப்பட்டிருக்கிறது. கடவுளுடைய அமைப்பு விரிவடைந்திருப்பதால், ‘உண்மையுள்ள விசாரணைக்கார’ வகுப்பு இயேசுவின் ‘வேறே ஆடுகளிலிருந்தும்’ தகுதியுள்ள ஆண்களை தேர்ந்தெடுத்து கண்காணிகளாக நியமித்திருக்கிறது.—லூக்கா 12:42-44; யோவான் 10:16.
4. சபைகளுக்கு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளை மூப்பர்கள் கவனமாக கேட்டால் எவ்வாறு பயனடையலாம்?
4 அந்த ‘நட்சத்திரங்கள்’ இயேசுவின் வலது கையில் இருக்கிறார்கள், அதாவது, அவருடைய அதிகாரத்தில், அவருடைய கட்டுப்பாட்டில், அவருடைய ஆதரவில், அவருடைய பாதுகாப்பில் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் இயேசுவுக்கு கணக்கு கொடுக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த ஏழு சபைகளுக்கும் அவர் சொன்ன வார்த்தைகளை செவிகொடுத்துக் கேட்கையில் அவற்றில் இருந்ததைப் போன்ற நிலைமைகளை எப்படி சமாளிக்கலாம் என இன்றைய மூப்பர்கள் தெரிந்துகொள்வார்கள். மூப்பர்கள் மட்டுமல்ல, எல்லா கிறிஸ்தவர்களுமே கடவுளுடைய குமாரனுக்கு செவிகொடுக்க வேண்டும். (மாற்கு 9:7) அப்படியானால், சபைகளிடம் கிறிஸ்து பேசுவதை கவனமாக கேட்பதன் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
எபேசுவில் இருந்த தூதனுக்கு
5. எபேசு பட்டணம் எப்படிப்பட்டதாக இருந்தது?
5 எபேசுவிலிருந்த சபையை இயேசு பாராட்டினார், அதோடு கண்டிக்கவும் செய்தார். (வெளிப்படுத்துதல் 2:1-7-ஐ வாசிக்கவும்.) ஆசியா மைனரின் மேற்கு கரையோரப் பகுதியில், வர்த்தகத்திற்கும் மதத்திற்கும் மையமாகத் திகழ்ந்த இந்தச் செல்வச்செழிப்புள்ள இடத்தில்தான் தியானாள் தேவதைக்கு மிகப் பிரமாண்டமான கோவில் எழுப்பப்பட்டிருந்தது. எபேசு முழுவதிலும் ஒழுக்கயீனமும் பொய் மதங்களும் மாயவித்தைகளும் நிறைந்திருந்தன. இருந்தாலும், அப்பட்டணத்தில் பவுலும் மற்றவர்களும் செய்த ஊழியத்தை கடவுள் ஆசீர்வதித்தார்.—அப்போஸ்தலர், 19-வது அதிகாரம்.
6. இன்றைய உண்மைப் பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் எவ்வாறு பூர்வ எபேசியர்களை போல இருக்கிறார்கள்?
6 எபேசு சபையை கிறிஸ்து இப்படியாக பாராட்டினார்: “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், [“சகிப்புத்தன்மையையும்,” NW] நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் . . . அறிந்திருக்கிறேன்.” இவர்களை போலவே, இன்றைக்கு இயேசுவை உண்மையாக பின்பற்றுபவர்களும் நற்கிரியைகளை செய்கிறார்கள், கடினமாக பிரயாசப்படுகிறார்கள், சகிப்புத்தன்மை காட்டுகிறார்கள். தங்களையும் அப்போஸ்தலர்களைப் போல கருத வேண்டுமென துடிக்கும் கள்ளச் சகோதரர்களை அவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. (2 கொரிந்தியர் 11:13, 26) மேலும் எபேசியர்களைப் போலவே, இன்றும் உண்மைப் பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் ‘பொல்லாதவர்களையும் சகித்துக் கொள்வதில்லை.’ ஆகவே, யெகோவாவின் தூய வணக்கம் மாசுப்படாமல் இருப்பதற்காகவும் சபையை பாதுகாப்பதற்காகவும் இவர்கள் மனந்திரும்பாத விசுவாச துரோகிகளோடு சகவாசம் வைப்பதில்லை.—கலாத்தியர் 2:4, 5; 2 யோவான் 8-11.
7, 8. எபேசு சபையாரிடம் இருந்த பெரிய குறை என்ன, அதே போன்ற நிலைமையை நாம் எவ்வாறு சமாளிக்கலாம்?
7 ஆனாலும், எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் ஒரு பெரிய குறை இருந்தது. “நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு” என இயேசு சொன்னார். சபையார் ஆரம்பத்தில் யெகோவாவிடம் காட்டிய அதே விதமான அன்பை மீண்டும் அபிவிருத்தி செய்ய வேண்டியிருந்தது. (மாற்கு 12:28-30; எபேசியர் 2:4; 5:1, 2) நாம் எல்லாருமே கடவுளிடம் ஆரம்பத்தில் காட்டிய அன்பை விட்டு விடாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். (3 யோவான் 3, NW) ஆனால் பொருட்செல்வங்களைக் குவிப்பதற்கும், சிற்றின்பங்களை நாடித்தேடுவதற்குமே நம் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக உணர்ந்தால் என்ன செய்வது? (1 தீமோத்தேயு 4:8; 6:9, 10) இப்படிப்பட்ட எண்ணங்களை விட்டொழித்து, அதற்கு பதிலாக, யெகோவாவின் மீதான ஆழமான அன்பிலும், அவரும் அவர் குமாரனும் நமக்கு செய்திருக்கும் எல்லா காரியங்களுக்கான நன்றி உணர்விலும் பெருக உதவும்படி கடவுளிடம் ஊக்கத்துடன் ஜெபிக்க வேண்டும்.—1 யோவான் 4:10, 16.
8 எபேசியர்களை கிறிஸ்து இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக.” அப்படி அவர்கள் செய்யாவிட்டால் என்ன நேரிடும்? அப்படி செய்யாவிட்டால், “நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, . . . உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்” என இயேசு சொன்னார். ஆகவே, மந்தையில் இருக்கும் அனைவருமே ஆரம்பத்திலிருந்த அன்பை விட்டுவிட்டால், அந்த ‘விளக்குத்தண்டு,’ அதாவது, அந்தச் சபையே இல்லாமல் போய்விடும். எனவே, சபை ஆன்மீக ஒளியில் தொடர்ந்து ஜொலிப்பதற்கு வைராக்கியமுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் கடும் முயற்சி எடுப்போமாக.—மத்தேயு 5:14-16.
9. மதப்பிரிவினையை எவ்வாறு கருத வேண்டும்?
9 எபேசியர்கள் “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை” வெறுத்தது பாராட்டத்தக்கது. அந்த மதப்பிரிவின் பெயரை வெளிப்படுத்துதல் புத்தகம் மட்டுமே குறிப்பிடுகிறது; அதன் ஆரம்பத்தையோ, போதனைகளையோ, பழக்கவழக்கங்களையோ பற்றி வேறு எதுவும் திட்டவட்டமாக தெரியவில்லை. எப்படியிருந்தாலும், மனிதர்களை பின்பற்றுவதை இயேசு கண்டித்திருப்பதால் எபேசு கிறிஸ்தவர்களைப் போல நாமும் இப்படிப்பட்ட மதப்பிரிவினையை எப்போதுமே அடியோடு வெறுத்தொதுக்க வேண்டும்.—மத்தேயு 23:10.
10. ஆவி சொல்வதைக் கேட்டு நடப்போர் எதையெல்லாம் அனுபவிப்பார்கள்?
10 ‘ஆவி சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என இயேசு சொன்னார். அவர் பூமியில் இருந்தபோது கடவுளுடைய ஆவியின் உதவியால் பேசினார். (ஏசாயா 61:1; லூக்கா 4:16-21) அதேபோல இப்போது கடவுள் தம் பரிசுத்த ஆவியைப் பயன்படுத்தி இயேசுவின் மூலம் சொல்லும் விஷயங்களுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்” என ஆவியின் வழிநடத்துதலால் இயேசு வாக்குறுதி அளித்தார். தேவ ஆவி சொல்லுகிறதை காதுகொடுத்துக் கேட்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு, பரலோகத்திலுள்ள ‘தேவனுடைய பரதீசில்,’ அதாவது யெகோவாவின் பிரசன்னத்தில் சாவாமையுள்ள வாழ்க்கை கிடைக்கும். ஆவி சொல்வதைக் கேட்டு நடக்கும் ‘திரள் கூட்டத்தாரோ’ பூமிக்குரிய பரதீஸை அனுபவித்து மகிழ்வார்கள்; அங்கு ‘ஜீவத் தண்ணீருள்ள நதியிலிருந்து’ பருகுவார்கள், நதியின் இருகரைகளிலும் உள்ள ‘விருட்சத்தின் இலைகளிலிருந்து’ ஆரோக்கியத்தையும் பெறுவார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9; 22:1, 2; லூக்கா 23:43.
11. யெகோவா மீதுள்ள அன்பை நாம் எவ்வாறு அதிகரிக்க செய்யலாம்?
11 எபேசியர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த அன்பு இல்லாமல் போய்விட்டது; அப்படிப்பட்ட நிலைமை இன்று ஒரு சபையில் உருவானால் என்ன செய்வது? யெகோவா அன்பாக செயல்படும் விதத்தைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சபையோரிடம் பேசுவதன் மூலம் அவர் மீதுள்ள அன்பை அதிகரிக்க செய்யலாம். முக்கியமாக, தம் நேசகுமாரன் மூலம் கிரய பலியைக் கொடுத்து அன்பு காட்டியதற்காக கடவுள் மீது நமக்கிருக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்தலாம். (யோவான் 3:16; ரோமர் 5:8) அதோடு, சபை கூட்டங்களில் வாய்ப்பு கிடைக்கும்போது நாம் கடவுளின் அன்பைப் பற்றி குறிப்புகள் சொல்லலாம்; கூட்டங்களில் பேச்சு கொடுக்கையில் அவருடைய அன்பைப் பற்றி சொல்லலாம். மேலும், வெளி ஊழியத்தில் யெகோவாவின் பெயரை போற்றிப் பேசுவதன் மூலமும் தனிப்பட்ட விதத்தில் அவரிடம் நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்தலாம். (சங்கீதம் 145:10-13) ஆம், நம்முடைய சொல்லும் செயலும் ஒரு சபை ஆரம்பத்தில் காட்டிய அன்பை மறுபடியும் காட்டும்படி தூண்டிவிட அல்லது பலப்படுத்த பேருதவி புரியலாம்.
சிமிர்னாவில் இருந்த தூதனுக்கு
12. சிமிர்னாவையும் அங்கிருந்த மதப் பழக்கவழக்கங்களையும் பற்றி சரித்திரம் என்ன காண்பிக்கிறது?
12 “முந்தினவரும் பிந்தினவரும்,” “மரித்திருந்து [உயிர்த்தெழுதல் மூலமாக] பிழைத்தவருமான” கிறிஸ்து, சிமிர்னாவிலுள்ள சபையை பாராட்டினார். (வெளிப்படுத்துதல் 2:8-11-ஐ வாசிக்கவும்.) சிமிர்னா (இன்று இஜ்மிர், துருக்கி), ஆசியா மைனரின் மேற்கு கரையோரப் பகுதியில் இருந்தது. கிரேக்கர்கள் அந்தப் பட்டணத்தில் குடியேறினார்கள், ஆனால் சுமார் பொ.ச.மு. 580-ல் லிடியர்கள் அதை நாசமாக்கினார்கள். மகா அலெக்சாந்தருக்கு பின் வந்தவர்களோ அதை வேறொரு இடத்திலே புதுப்பித்துக் கட்டினார்கள். அதன் பின், சிமிர்னா ரோம மாகாணமான ஆசியாவின் பாகமானது; வர்த்தக மையமாக கொடிகட்டி பறந்தது; அருமையான அரசு கட்டடங்களுக்கும் அது பெயர் பெற்று விளங்கியது. திபேரியு இராயனின் கோவில் அங்கு இருந்தது, ஆகவே அது பேரரசர் வணக்கத்தின் மையமானது. பக்தர்கள் ஒரு சிட்டிகை தூபவர்க்கத்தை எரித்து, “இராயனே கர்த்தர்” என்று சொல்ல வேண்டியிருந்தது. கிறிஸ்தவர்களுக்கோ ‘இயேசுவே கர்த்தர்.’ ஆகவே அவர்கள் அந்தப் பேரரசர் வணக்கத்தில் ஈடுபடவில்லை. அதன் காரணமாக, கடும் துன்புறுத்துதலுக்கு ஆளானார்கள்.—ரோமர் 10:9.
13. சிமிர்னாவிலிருந்த கிறிஸ்தவர்கள் பொருளாதார ரீதியில் ஏழைகளாக இருந்தாலும் எந்த விதத்தில் பணக்காரர்களாக இருந்தனர்?
13 சிமிர்னாவிலிருந்த கிறிஸ்தவர்கள் துன்புறுத்துதலை எதிர்ப்பட்டதோடு, வறுமையிலும் வாடினார்கள்; ஒருவேளை அவர்கள் பேரரசரை வணங்காததால் பொருளாதார ரீதியில் எந்தச் சலுகைகளும் கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கலாம். இன்றுள்ள யெகோவாவின் ஊழியர்களும் இது போன்ற சோதனைகளுக்கு ஆளாகிறார்கள். (வெளிப்படுத்துதல் 13:16, 17) சிமிர்னாவிலிருந்த கிறிஸ்தவர்களைப் போன்றவர்கள், பொருளாதார ரீதியில் ஏழைகளாக இருந்தாலும் ஆன்மீக ரீதியில் பணக்காரர்களாக இருக்கிறார்கள்; இப்படி ஆன்மீக ரீதியில் பணக்காரர்களாக இருப்பதுதானே முக்கியம்!—நீதிமொழிகள் 10:22; 3 யோவான் 2.
14, 15. வெளிப்படுத்துதல் 2:10-லிருந்து அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்ன ஆறுதலை பெற்றுக்கொள்ளலாம்?
14 சிமிர்னாவிலிருந்த பெரும்பாலான யூதர்கள் “சாத்தானுடைய கூட்டமாயிரு”ந்தார்கள், ஏனெனில் வேதப்பூர்வமற்ற பாரம்பரியங்களில் அவர்கள் ஊறிப்போயிருந்தார்கள்; கடவுளுடைய குமாரனை புறக்கணித்தார்கள்; ஆவியால் பிறப்பிக்கப்பட்ட அவருடைய சீஷர்களை தூஷித்தார்கள். (ரோமர் 2:28, 29) ஆனாலும், கிறிஸ்து அடுத்ததாக பேசிய வார்த்தைகளிலிருந்து அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எப்பேர்ப்பட்ட ஆறுதலை பெற முடியும்! அவர் சொல்கிறார்: “நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.”—வெளிப்படுத்துதல் 2:10.
15 யெகோவாவின் அரசுரிமையை ஆதரிப்பதற்காக உயிரைத் தியாகம் செய்யவும் இயேசு பயப்படவில்லை. (பிலிப்பியர் 2:5-8) அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருடன் இப்போது சாத்தான் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தாலும், ஒரு தொகுதியாக அவர்கள் படப்போகும் பாடுகளைக் குறித்து அஞ்சி நடுங்குவதில்லை—அது உபத்திரவமானாலும் சரி, சிறைவாசமானாலும் சரி, அல்லது கொடூர மரணமானாலும் சரி. (வெளிப்படுத்துதல் 12:17) அவர்கள் உலகை ஜெயிக்கிறவர்களாக இருப்பார்கள். புற தேசத்தாரின் விளையாட்டுகளில் ஜெயிப்பவர்களுக்கு வாடிப்போகும் மலர் கிரீடமே சூட்டப்பட்டது. ஆனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கோ உயிர்த்தெழுதலுக்கு பின் பரலோகத்தில் சாவாமையுள்ள சிருஷ்டிகளாக இருக்கும் “ஜீவகிரீடத்தை” தருவதாக கிறிஸ்து வாக்குறுதி அளிக்கிறார். எப்பேர்ப்பட்ட மதிப்புமிக்க பரிசு!
16. பூர்வ சிமிர்னா சபையைப் போன்ற ஒரு சபையோடு நாம் கூட்டுறவு வைத்திருந்தால் நம் முழு கவனமும் எந்த விவாதத்தின் மீது இருக்க வேண்டும்?
16 நம் நம்பிக்கை பரலோகத்திற்குரியதாக இருந்தாலும் சரி, பூமிக்குரியதாக இருந்தாலும் சரி, பூர்வ சிமிர்னா சபையைப் போன்ற ஒரு சபையோடு நாம் கூட்டுறவு வைத்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? துன்புறுத்துதலை கடவுள் அனுமதிப்பதற்கான முக்கிய காரணத்தின் மீது, அதாவது சர்வலோக பேரரசுரிமையைப் பற்றிய விவாதத்தின் மீது முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்த சக விசுவாசிகளுக்கு உதவ வேண்டும். உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியும் சாத்தானை பொய்யனாக நிரூபிக்கிறார்; மேலும், துன்புறுத்துதல் மத்தியிலும் ஒருவர் கடவுளுடைய சர்வலோக பேரரசுரிமையை முழுமையாக ஆதரிக்க முடியும் என்பதையும் காட்டுகிறார். (நீதிமொழிகள் 27:11) ஆகவே, உபத்திரவத்தை சகித்துக்கொள்ளுமாறு சக கிறிஸ்தவர்களை நாம் உற்சாகப்படுத்துவோமாக; இதன் மூலம், “உயிரோடிருக்கும் நாளெல்லாம்,” ஏன், நித்திய காலத்திற்கும்கூட ‘பயமில்லாமல் [யெகோவாவுக்கு] முன்பாகப் பரிசுத்தத்தோடும் [“உத்தமத்தன்மையோடும்,” NW] நீதியோடும் ஊழியஞ்செய்யும்’ சிலாக்கியத்தைப் பெறுவார்கள்.—லூக்கா 1:71, 74, 75.
பெர்கமுவில் இருந்த தூதனுக்கு
17, 18. எத்தகைய வழிபாட்டிற்கு பெர்கமு மையமாக திகழ்ந்தது, அப்படிப்பட்ட விக்கிரகாராதனையில் ஈடுபட மறுத்தால் என்ன நேரிடலாம்?
17 பெர்கமு சபைக்கு பாராட்டும் கிடைத்தது, சிட்சையும் கிடைத்தது. (வெளிப்படுத்துதல் 2:12-17-ஐ வாசிக்கவும்.) சிமிர்னாவுக்கு வடக்கில் ஏறக்குறைய 80 கிலோமீட்டர் தூரத்தில் பெர்கமு இருந்தது; இந்தப் பட்டணம் பொய் மதத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. கல்தேய சோதிடர்கள் பாபிலோனைவிட்டு வெளியேறி இங்கு வந்ததாகத் தெரிகிறது. பெர்கமுவிலிருந்த பிரபலமான, அஸ்க்லீப்பியஸ் என்ற பொய் கடவுளின் கோவிலுக்கு வியாதியஸ்தர்கள் திரண்டு வந்தனர். இந்தப் பொய்க் கடவுள், சுகப்படுத்துதலுக்கும் மருத்துவத்திற்குமான கடவுளாக கருதப்பட்டது. மேலும், அகஸ்து இராயனுக்கு பெர்கமுவில் ஒரு கோவில் இருந்ததால், “பூர்வ ராஜ்யத்திலிருந்த பேரரசர் வழிபாட்டிற்கு முக்கிய மையம்” என பெர்கமு அழைக்கப்பட்டது.—என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, 1959, தொகுதி 17, பக்கம் 507.
18 பெர்கமுவில் ஜியஸ் என்ற கடவுளுக்கு ஒரு பீடம் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, மனிதர்களை கடவுளின் அவதாரங்களாக வணங்கும் பேய்த்தன பழக்கத்திற்கும் இந்நகரம் மையமாக திகழ்ந்தது. ஆகவே, “சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற” இடத்தில் சபை இருந்ததாக சொல்லப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை! பேரரசர் வழிபாட்டை மறுத்து யெகோவாவின் பேரரசுரிமையை ஆதரித்தவர்கள் மரணத்தை சந்திக்க நேரிட்டது. இன்னமும் இவ்வுலகம் பிசாசின் அதிகாரத்தில்தான் கிடக்கிறது; தேசிய சின்னங்கள் இப்போதும் வணங்கப்படுகின்றன. (1 யோவான் 5:19) “எனக்கு உண்மையுள்ள சாட்சி” என கிறிஸ்துவால் அழைக்கப்பட்ட ‘அந்திப்பா கொலை செய்யப்பட்டது’ போல, முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை, உத்தமமுள்ள கிறிஸ்தவர்கள் பலர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். உண்மைப் பற்றுறுதியுள்ள இப்படிப்பட்ட ஊழியர்களை யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் ஒருகாலும் மறக்க மாட்டார்கள்.—1 யோவான் 5:21.
19. பிலேயாம் என்ன செய்தான், எதைக் குறித்து எல்லா கிறிஸ்தவர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
19 “பிலேயாமுடைய போதகத்தைக்” குறித்தும் கிறிஸ்து பேசினார். பொய் தீர்க்கதரிசியான பிலேயாம் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு இஸ்ரவேலை சபிக்க முயன்றான். அவனுடைய சாபத்தை கடவுள் ஆசீர்வாதமாக மாற்றியபோது, அவன் மோவாபிய ராஜாவான பாலாக்கோடு சேர்ந்து அநேக இஸ்ரவேலர்களை விக்கிரகாராதனையிலும் பாலின ஒழுக்கக்கேட்டிலும் சிக்க வைத்தான். பிலேயாமின் சூழ்ச்சிகளுக்கு எதிராக பினெகாஸ் நடவடிக்கை எடுத்தார்; நீதியை நிலைநாட்டுவதில் அவர் எந்தளவுக்கு உறுதியுடன் இருந்தாரோ அந்தளவுக்கு கிறிஸ்தவ மூப்பர்களும் நீதிக்காக உறுதியுடன் இருக்க வேண்டும். (எண்ணாகமம் 22:1–25:15; 2 பேதுரு 2:15, 16; யூதா 11) மூப்பர்கள் மட்டுமல்ல, சபைக்குள் விக்கிரகாராதனையும் பாலின ஒழுக்கக்கேடும் நுழைந்து விடாதபடிக்கு எல்லா கிறிஸ்தவர்களுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.—யூதா 3, 4.
20. எந்த கிறிஸ்தவனாவது விசுவாச துரோக கருத்துகளை ஆமோதிக்க ஆரம்பித்தால் என்ன செய்ய வேண்டும்?
20 பெர்கமு சபை ‘நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களை’ அனுமதித்ததால், பெரும் ஆபத்தில் சிக்கியிருந்தது. கிறிஸ்து அந்தச் சபையிடம் இப்படி சொன்னார்: “நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன்.” மதப்பிரிவினைவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு ஆன்மீக ரீதியில் கெடுதல் செய்ய துடிக்கிறார்கள்; இப்படி பிளவுண்டாக்கவும் பிரிவினைகளை ஏற்படுத்தவும் விடாப்பிடியாக இருப்பவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள். (ரோமர் 16:17, 18; 1 கொரிந்தியர் 1:10; கலாத்தியர் 5:19-21) எந்தக் கிறிஸ்தவனாவது விசுவாச துரோக கருத்துகளை ஆமோதிக்க ஆரம்பித்தாலோ அவற்றை பரப்ப நினைத்தாலோ கிறிஸ்துவிடமிருந்து வரும் எச்சரிக்கைக்கு செவிகொடுத்தே ஆக வேண்டும்! பேரழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவன் மனந்திரும்ப வேண்டும்; மேலும், ஆவிக்குரிய உதவியைப் பெற சபை மூப்பர்களையும் அணுக வேண்டும். (யாக்கோபு 5:13-18) உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம், ஏனெனில் நியாயந்தீர்ப்பதற்காக கிறிஸ்து சீக்கிரத்தில் வர இருக்கிறார்.
21, 22. “மறைவான மன்னாவை” யார் புசிப்பார்கள், அது எதை அர்த்தப்படுத்துகிறது?
21 அபிஷேகம் செய்யப்பட்ட உண்மை கிறிஸ்தவர்களும் அவர்களுடைய பற்றுமாறா தோழர்களும் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்து துளியும் பயப்படத் தேவையில்லை. கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலில் இயேசு கொடுத்திருக்கும் ஆலோசனைகளை கேட்டு நடக்கும் அனைவருக்குமே ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, உலகை ஜெயங்கொள்ளும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் “மறைவான மன்னாவை” புசிக்கும்படி அழைக்கப்படுவார்கள்; அதோடு, ‘புதிய நாமத்தையுடைய’ “வெண்மையான குறிக்கல்” ஒன்றும் அவர்களுக்கு கொடுக்கப்படும்.
22 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்திலே 40 வருடகாலம் பயணித்தபோது கடவுள் அவர்களுக்கு மன்னாவை அளித்து போஷித்தார். உடன்படிக்கை பெட்டிக்குள் அந்த ‘அப்பத்தில்’ கொஞ்சம் ஒரு பொற்கலசத்தில் வைக்கப்பட்டது; இவ்வாறு அது ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திலே மறைவாக இருந்தது. அங்குதான் யெகோவாவின் பிரசன்னத்தை அடையாளப்படுத்திய ஒரு அதிசய ஒளி காணப்பட்டது. (யாத்திராகமம் 16:14, 15, 23, 26, 33; 26:34; எபிரெயர் 9:3, 4) மறைவான மன்னாவை புசிக்க யாருக்கும் அனுமதி இருக்கவில்லை. ஆனால், இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில் அடையாள அர்த்தத்தில் “மறைவான மன்னாவை” புசிப்பார்கள், அதாவது சாவாமையை பெறுவார்கள்.—1 கொரிந்தியர் 15:53-57.
23. “வெண்மையான குறிக்கல்” மற்றும் அதன் ‘புதிய நாமத்தின்’ முக்கியத்துவம் என்ன?
23 ரோம நீதிமன்றங்களில், ஒரு கருமை நிறக் குறிக்கல் தண்டனைத் தீர்ப்பைக் குறித்தது; ஆனால் வெண்மை நிற குறிக்கல்லோ விடுதலையை அர்த்தப்படுத்தியது. ஜெயங்கொள்ளும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இயேசு ஒரு “வெண்மையான குறிக்கல்லை” கொடுப்பது, அவர்களை கள்ளங்கபடமில்லாதவர்கள், தூய்மையானவர்கள், சுத்தமுள்ளவர்கள் என்று அவர் கருதுவதையே குறிக்கிறது. ரோமர்கள், முக்கிய நிகழ்ச்சிகளின்போது குறிக்கற்களை ஒரு நுழைவு சீட்டைப் போலவும் பயன்படுத்தினார்கள்; ஆகவே, அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவர் ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்காக பரலோகத்திற்குள்ளே அனுமதிக்கப்படுவதை அந்த “வெண்மையான குறிக்கல்” ஒருவேளை அடையாளப்படுத்தலாம். (வெளிப்படுத்துதல் 19:7-9) அந்தப் ‘புதிய நாமம்,’ பரலோக ராஜ்யத்தில் இயேசுவோடு அவர்கள் உடன் சுதந்தரவாளிகளாக இருக்கும் சிலாக்கியத்தையே குறிப்பதாக தெரிகிறது. இவையெல்லாம் அபிஷேகம் செய்யப்பட்டவர்களையும், யெகோவாவின் ஊழியத்தில் அவர்களுக்கு தோள் கொடுப்பவர்களையும்—பரதீஸிய பூமியில் வாழும் நம்பிக்கை உடையவர்களையும்—எவ்வளவாக உற்சாகப்படுத்துகிறது!
24. விசுவாச துரோகம் சம்பந்தமாக நாம் என்ன நிலைநிற்கையை ஏற்க வேண்டும்?
24 விசுவாச துரோகிகளால் பெர்கமு சபையின் நிலைமை ஆபத்துக்குள்ளானதை நினைவில் வைப்பது ஞானமானது. இதே போன்ற நிலைமை நாம் கூட்டுறவு கொள்ளும் சபையின் ஆவிக்குரிய நலனை அச்சுறுத்தினால், அப்படிப்பட்ட விசுவாச துரோக காரியங்களை நாம் அடியோடு ஒதுக்கித்தள்ளிவிட்டு சத்தியத்திலே என்றும் நடப்போமாக. (யோவான் 8:32, 44; 3 யோவான் 4) விசுவாச துரோகத்தின் பக்கமாக சாயும் கள்ள போதகர்களோ தனி நபர்களோ முழு சபையையும் கறைபடுத்திவிடலாம்; ஆகவே, நாம் விசுவாச துரோகத்தை உறுதியுடன் எதிர்த்து நிற்க வேண்டும், விசுவாச துரோகிகளின் நயவஞ்சக பேச்சுகள் சத்தியத்திற்கு கீழ்ப்படிவதிலிருந்து நம்மை தடுக்கும்படி அனுமதிக்கக் கூடாது.—கலாத்தியர் 5:7-12; 2 யோவான் 8-11.
25. கிறிஸ்துவின் செய்திகளைப் பெற்ற எந்தெந்த சபைகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்?
25 மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து, ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளில் மூன்று சபைகளுக்கு கொடுத்த பாராட்டுதல்களையும் புத்திமதிகளையும் நாம் இதுவரை சிந்தித்தோம்; அவை சிந்தனையைத் தூண்டும் எப்பேர்ப்பட்ட அருமையான வார்த்தைகள்! பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் மீதமுள்ள நான்கு சபைகளிடமும் அவர் நிறைய விஷயங்களைப் பேசினார். தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய சபைகளுக்கு கொடுக்கப்பட்ட செய்திகள் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.
உங்கள் பதிலென்ன?
• சபைகளிடம் கிறிஸ்து பேசும் விஷயங்களுக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
• ஒரு சபை ஆரம்பத்தில் காட்டிய அன்பை மீண்டும் காட்டும்படி நாம் எவ்வாறு தூண்டலாம்?
• பூர்வ சிமிர்னாவில் பொருளாதார ரீதியில் ஏழைகளாக இருந்த கிறிஸ்தவர்கள் உண்மையில் பணக்காரர்களாக இருந்தார்கள் என ஏன் சொல்லலாம்?
• பெர்கமு சபையிலிருந்த நிலைமையை சிந்தித்துப் பார்க்கையில் விசுவாச துரோக எண்ணங்களை நாம் எப்படி கருத வேண்டும்?
[பக்கம் 10-ன் தேசப்படம்]
கிரீஸ்
ஆசியா மைனர்
எபேசு
சிமிர்னா
பெர்கமு
தியத்தீரா
சர்தை
பிலதெல்பியா
லவோதிக்கேயா
[பக்கம் 12-ன் படம்]
‘திரள் கூட்டத்தார்’ பூமியில் பரதீஸை அனுபவித்து மகிழ்வர்
[பக்கம் 13-ன் படங்கள்]
துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள் உலகை ஜெயங்கொள்பவர்கள்