வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இயேசுவின் ஆயிர வருட ஆட்சியில் பேய்கள் எங்கு இருக்கும்?
இந்தக் கேள்விக்கு நேரடியான பதிலை பைபிள் தருவதில்லை. என்றாலும், நம்மால் ஒரு நியாயமான முடிவுக்கு வர முடியும்.
ஆயிர வருட ஆட்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் என்ன நேரிடும் என்பதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக் கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் அது ஜனங்களை மோசம் போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரை போட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாக வேண்டும்.” (வெளிப்படுத்துதல் 20:1-3) சாத்தான் பாதாளத்தில் அடைக்கப்படுவது பற்றியும், பின்பு கொஞ்ச காலத்திற்கு விடுவிக்கப்படுவதைப் பற்றியுமே இவ்வசனங்கள் சொல்கின்றன. பேய்களைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. என்றாலும், பாதாளத்தின் திறவுகோலை உடைய தூதனாகிய மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து பிசாசை பாதாளத்தில் அடைக்கும்போது பேய்களையும் சேர்த்து அடைப்பார் என்பதே நியாயமாகப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 9:11.
1914-ல் இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக ஆனதுமே சாத்தான் மீதும் அவனுடைய பேய்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தார். அதைப் பற்றி வெளிப்படுத்துதல் 12:7-9 இவ்வாறு சொல்கிறது: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் [பேய்களும்] யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற் போயிற்று. உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத் தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” அதுமுதல், சாத்தானும் அவனுடைய பேய்களும் பூமியின் எல்லைக்குள் மட்டுமே சுற்றித்திரிய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, பூமியில் பொல்லாத செல்வாக்கு செலுத்தாதபடி சாத்தானை இயேசு கிறிஸ்து இன்னுமதிகம் அடக்கி ஒடுக்கும்போது பேய்களையும் அவ்வாறே அடக்கி ஒடுக்குவார் என்ற நியாயமான முடிவுக்கு நாம் வரலாம்.
அதுமட்டுமல்ல, பைபிளிலுள்ள முதல் தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள். அது இவ்வாறு வாசிக்கிறது: ‘உனக்கும் [சாத்தான்] ஸ்திரீக்கும் [யெகோவாவின் பரலோக அமைப்பு], உன் [சாத்தானுடைய] வித்துக்கும் அவள் வித்துக்கும் [இயேசு கிறிஸ்து] பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்று கடவுள் சொன்னார்.’ (ஆதியாகமம் 3:15) சர்ப்பத்தின் தலை நசுக்கப்படுவது என்பது கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது சாத்தான் பாதாளத்தில் தள்ளப்படுவதை உட்படுத்துகிறது. சாத்தானுடைய தலையை நசுக்குபவருக்கும் சாத்தானுடைய வித்துவுக்கும் இடையே பகைமை இருக்கிறதென அந்தத் தீர்க்கதரிசனம் மேலும் குறிப்பிடுகிறது. சாத்தானுடைய வித்துவின், அதாவது அவனுடைய அமைப்பின் காணக்கூடாத பாகமாக பேய்கள் இருக்கின்றன. எனவே, சாத்தானை இயேசு பாதாளத்தில் அடைக்கையில், அவனோடு பேய்களையும் அடைத்துவிடுவார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதாக இருக்கிறது. பாதாளத்தைக் குறித்து இந்தப் பொல்லாத ஆவிகள் பயத்தை வெளிக்காட்டியிருப்பதுதானே, அதில் தாங்கள் தள்ளப்படப் போவதை, அதாவது செயல்பட முடியாதபடி அடக்கப்படப் போவதை நன்கு அறிந்திருப்பதைக் காட்டுகிறது.—லூக்கா 8:31.
என்றாலும், வெளிப்படுத்துதல் 20:1-3 பேய்களைப் பற்றி எதுவும் குறிப்பிடாததற்குக் காரணம், அர்மகெதோனில் சாத்தானுடைய காணக்கூடிய அமைப்போடுகூட அவையும் அழிக்கப்படும் என்பதாலா? அப்படி இருக்க முடியாதென்றே பைபிள் காட்டுகிறது. சாத்தானுக்கு இறுதியில் என்ன ஆகப் போகிறதென பைபிள் விவரிப்பதை முதலில் கவனியுங்கள்: “அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:10) இங்கே குறிப்பிடப்படும் மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் சாத்தானுடைய காணக்கூடிய அமைப்பின் பாகமான அரசியல் அமைப்புகளைக் குறிக்கின்றன. (வெளிப்படுத்துதல் 13:1, 2, 11-14; 16:13, 14) கடவுளுடைய ராஜ்யம் இந்த உலக ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கும்போது இந்த அமைப்புகளெல்லாம் அழிக்கப்படும். (தானியேல் 2:44) அதேசமயத்தில், ‘பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் நித்திய அக்கினி ஆயத்தம் பண்ணப்பட்டிருப்பதாகவும்’ பைபிள் குறிப்பிடுகிறது. (மத்தேயு 25:41) ஆகவே மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் ஏற்கெனவே தள்ளப்பட்டிருக்கிற அந்த ‘அக்கினியும் கந்தகமுமான கடலில்’ சாத்தானும் அவனைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்படுவார்கள், அதாவது ஒரேயடியாக அழிக்கப்படுவார்கள். பேய்கள் அர்மகெதோனில் அழிக்கப்படுவதாக இருந்தால், அந்த அடையாளப்பூர்வ கடலில் மூர்க்க மிருகத்தோடும் கள்ளத் தீர்க்கதரிசியோடும் அவையும் இருப்பதாக அல்லவா அந்த வசனம் குறிப்பிட்டிருக்க வேண்டும்? வெளிப்படுத்துதல் 20:10 பேய்களைப் பற்றி எதுவும் குறிப்பிடாததால், அவை அர்மகெதோனில் அழிக்கப்படாது என்பது புலனாகிறது.
பாதாளத்தில் பேய்கள் தள்ளப்படுவது பற்றி நேரடியாக சொல்லப்படாததால் அவை அங்கிருந்து விடுவிக்கப்படுவது பற்றியும் சொல்லப்படுவதில்லை. எனினும், பிசாசுடைய முடிவு எப்படியிருக்குமோ அப்படியே பேய்களுடைய முடிவும் இருக்கும். ஆயிர வருட ஆட்சியின் கடைசியில் மனிதவர்க்கத்தின் இறுதிக்கட்ட சோதனைக்காக பிசாசு விடுவிக்கப்படுகையில் பேய்களும் விடுவிக்கப்படும்; பிறகு அவனோடு சேர்ந்து அவை அக்கினிக் கடலிலே தள்ளப்படும், அதாவது நிரந்தரமாக அழிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 20:7-9.
ஆக, வெளிப்படுத்துதல் 20:1-3-ல், சாத்தான் மட்டும் பிடிக்கப்பட்டு பாதாளத்தின் செயலற்ற நிலைமைக்கு தள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவனுடைய தூதர்களும் அதே நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற நியாயமான முடிவுக்கே நாம் வரலாம். கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது சாத்தானும் சரி, அவனுடைய பேய் கும்பலும் சரி, கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதை தடுத்து நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆம், இந்தப் பூமி பரதீஸாக மாறுவதையும் மனிதர்கள் திரும்ப பரிபூரண நிலையை அடைவதையும் தடுத்து நிறுத்த அனுமதிக்கப்படவே மாட்டார்கள்.