யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி
பத்மூ தீவில் சிறைப்பட்டிருந்தபோது வயதான அப்போஸ்தலன் யோவானுக்கு தொடர்ச்சியாக 16 தரிசனங்கள் கிடைக்கின்றன. யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் கர்த்தருடைய நாளில் நிறைவேற்ற போகிறவற்றை அத்தரிசனங்களில் காண்கிறார். கர்த்தருடைய நாள் 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் கிறிஸ்துவின் ஆயிரமாண்டு ஆட்சி முடியும்வரை நீடிக்கிறது. சுமார் பொ.ச. 96-ல் யோவானால் எழுதப்பட்ட வெளிப்படுத்துதல் புத்தகத்தில், இத்தரிசனங்கள் பற்றிய சிலிர்க்க வைக்கும் பதிவுகள் உள்ளன.
வெளிப்படுத்துதல் 1:1–12:17-ன் சிறப்பு குறிப்புகளை இப்போது சிந்திக்கலாம். யோவானுக்குக் கிடைத்த முதல் ஏழு தரிசனங்கள் இந்தப் பகுதியில் அடங்கியுள்ளன. உலக அரங்கில் இப்போது என்ன நடக்கிறது, வெகு விரைவில் யெகோவா என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதையெல்லாம் இத்தரிசனங்கள் தத்ரூபமாய்க் காட்டுகின்றன; அதனால் இவற்றுக்கு நாம் உன்னிப்பாய் கவனம் செலுத்துவோமாக. இவற்றை விசுவாசத்தோடு வாசிக்கும் எவரும் நிச்சயமாகவே ஆறுதலையும் உற்சாகத்தையும் அடைவார்கள்.—எபி. 4:12.
ஏழு முத்திரைகளில் ஆறு முத்திரைகளை ‘ஆட்டுக்குட்டியானவர்’ திறக்கிறார்
முதலாவதாக, மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை யோவான் பார்க்கிறார். பிறகு, ‘ஒரு புஸ்தகத்தில் எழுதி, . . . ஏழு சபைகளுக்கும் அனுப்ப வேண்டிய’ செய்திகளைத் தொடர்ச்சியாகப் பெறுகிறார். (வெளி. 1:10, 11) அடுத்து, பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் வைக்கப்பட்டிருப்பதாக தரிசனம் காண்கிறார். அந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவருடைய வலது கரத்தில், ஏழு முத்திரைகள் இடப்பட்ட ஒரு புத்தகச்சுருள் இருக்கிறது. அந்த “புஸ்தகத்தைத் திறக்க” தகுதியுள்ளவர் ‘யூதா கோத்திரத்துச் சிங்கமே’ அல்லது ‘ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடைய ஆட்டுக்குட்டியானவரே.’—வெளி. 4:2; 5:1, 2, 5, 6.
‘ஆட்டுக்குட்டியானவர்’ ஆறு முத்திரைகளையும் ஒவ்வொன்றாகத் திறக்கும்போது என்ன நடக்கிறது என்பதை மூன்றாவது தரிசனம் வெளிப்படுத்துகிறது. ஆறாவது முத்திரையை உடைக்கிறபோது, பயங்கரமான பூமியதிர்ச்சி உண்டாகிறது; பின்பு, கோபாக்கினையின் மகா நாள் வருகிறது. (வெளி. 6:1, 12, 17) 1,44,000 பேரும் முத்திரையிடப்படும்வரை, ‘பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, . . . பூமியின் நான்கு காற்றுகளை பிடித்திருப்பதை’ அடுத்த தரிசனம் காட்டுகிறது. முத்திரையிடப்படாத “திரளான கூட்டமாகிய ஜனங்கள்,” ‘சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதை’ அத்தரிசனம் காட்டுகிறது.—வெளி. 7:1, 9.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:4; 3:1; 4:5; 5:6—‘ஏழு ஆவிகள்’ என்றால் என்ன? ஏழு என்ற எண் கடவுளுடைய பார்வையில் முழுமையைக் குறிக்கிறது. எனவே, ‘ஏழு சபைகளுக்கு’ அனுப்பிய செய்தி, உலகெங்கிலும் உள்ள கடவுளுடைய மக்கள் அனைவருக்கும், அதாவது 1,00,000-க்கும் அதிகமான சபைகளில் உள்ள அனைவருக்கும் பொருந்துகிறது. (வெளி. 1:11, 20) கடவுள் என்ன செய்ய நினைக்கிறாரோ அதற்கு ஏற்றவாறு பரிசுத்த ஆவியை அருளுகிறார்; அதனால், ‘ஏழு ஆவிகள்’ என்பது தீர்க்கதரிசனத்திற்கு செவிசாய்ப்போருக்குப் புரிந்துகொள்ளுதலையும் ஆசீர்வாதத்தையும் வழங்குவதில் பரிசுத்த ஆவி முழு அளவில் செயல்படுவதைக் குறிக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகம் ஏழேழு அம்சங்களைச் சேர்த்து பேசுவதாகத் தெரிகிறது. இங்கு ஏழு என்ற எண் முழுமையைக் குறிக்கிறது. சொல்லப்போனால், ‘தேவரகசியம் நிறைவேறுவதை,’ அதாவது முழுமை பெறுவதை இப்புத்தகம் சொல்கிறது.—வெளி. 10:6.
1:8, 17—“அல்பாவும், ஓமெகாவும்,” ‘ஆதியும் அந்தமும்’ யாரைக் குறிக்கின்றன? “அல்பாவும், ஓமெகாவும்” என்ற பட்டப்பெயர் யெகோவாவைக் குறிக்கிறது. அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி, சர்வ வல்லமை படைத்த கடவுள் யாருமே இல்லை என்பதை அது வலியுறுத்திக் காட்டுகிறது. அவரே ‘ஆதியும் அந்தமுமாயிருக்கிறார்.’ (வெளி. 21:6; 22:13) வெளிப்படுத்துதல் 22:13-ல் “ஆதியும் அந்தமும்” என்பது யெகோவாவைக் குறிக்கிறது, அதாவது அவருக்கு முன்பும் பின்பும் எந்தக் கடவுளுமில்லை என்பதைக் குறிக்கிறது. ஆனால், வெளிப்படுத்துதல் முதலாம் அதிகாரத்தின் சூழமைவின்படி, ‘ஆதியும் அந்தமும்’ என்ற பட்டப்பெயர் இயேசு கிறிஸ்துவுக்குப் பொருந்துகிறது. எப்படியெனில், ஆவி உடலில் உயிர்த்தெழுப்பப்பட்டு சாவாமை வரம்பெற்ற முதல் மனிதர் இவரே; அதேபோல் யெகோவாவே உயிர்த்தெழுப்பிய கடைசி மனிதரும் இவரே.—கொலோ. 1:18.
2:7—‘தேவனுடைய பரதீஸ்’ என்றால் என்ன? இந்த வார்த்தைகள் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடம் சொல்லப்படுவதால், இது பரதீஸ் போன்றிருக்கும் பரலோகத்தையே, அதாவது கடவுளுடைய சமூகத்தையே குறிக்க வேண்டும். அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ளோர் ‘ஜீவ விருட்சத்திலிருந்து’ உண்ணும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்கள் சாவாமை வரத்தைப் பெறுவார்கள்.—1 கொ. 15:53.
3:7—“தாவீதின் திறவுகோலை” இயேசு எப்போது பெற்றார், அதை எவ்வாறு பயன்படுத்தி வருகிறார்? பொ.ச. 29-ல் இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது தாவீது வம்சத்தின் வருங்கால ராஜாவாக நியமிக்கப்பட்டார். என்றாலும், பொ.ச. 33 வரை தாவீதின் திறவுகோல் இயேசுவின் கைக்கு கிடைக்கவில்லை. அந்த ஆண்டில்தான் பரலோகத்தில் கடவுளுடைய வலது பக்கத்துக்கு அவர் உயர்த்தப்பட்டார். தாவீதின் ராஜ்யத்துக்குரிய எல்லா உரிமைகளையும் அங்குதான் அவர் பெற்றார். அதுமுதல் ராஜ்யம் சம்பந்தப்பட்ட பாக்கியங்களை மனிதர்களுக்குக் கொடுப்பதற்கு இயேசு இந்தத் திறவுகோலை பயன்படுத்தி வருகிறார். 1919-ல் “தாவீதுடைய வீட்டின் திறவுகோலை” “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரிடம் இயேசு ஒப்படைத்தார். எப்படியெனில், “தன் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும்” அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.—ஏசா. 22:22; மத். 24:45, 47, NW.
3:12—இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட ‘புதிய நாமம்’ என்ன? இந்தப் பெயர் அவருடைய புதிய ஸ்தானத்தோடும் அதோடு வரும் பாக்கியங்களோடும் சம்பந்தப்பட்டது. (பிலி. 2:9–11) அந்தப் பெயரை இயேசு புரிந்துகொள்ளுமளவுக்கு வேறு யாரும் புரிந்துகொள்ள முடியாது. தம்முடன் பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகும் உண்மையுள்ள சகோதரர்கள்மீது இயேசு அந்தப் பெயரை எழுதுகிறார். இவ்விதமாக, அவர்கள் தம்முடன் ஒரு நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க உதவுகிறார். (வெளி. 19:12) தமக்குக் கிடைத்த பாக்கியங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
நமக்குப் பாடம்:
1:3. ‘காலம் [அதாவது, சாத்தானிய உலகத்தின்மீது கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்காகக் குறிக்கப்பட்ட காலம்] சமீபமாயிருப்பதால்,’ வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள செய்தியைப் புரிந்துகொண்டு, உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3:17, 18. ஆன்மீக ரீதியில் செல்வந்தர்களாக இருப்பதற்கு, “நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை” இயேசுவிடமிருந்து நாம் வாங்க வேண்டும். அதாவது, நற்செயல்களில் செல்வந்தர்களாவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும். (1 தீ. 6:17-19) கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என நம்மை அடையாளம் காட்டுகிற ‘வெண்வஸ்திரங்களையும்’ போட்டுக்கொள்ள வேண்டும். ஆன்மீக பகுத்துணர்வைப் பெறுவதற்கு, ‘கண்களுக்குக் கலிக்கம்’ போலிருக்கிற காவற்கோபுரம் இதழ்களில் வரும் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.—வெளி. 19:8.
7:13, 14. பரலோகத்தில் மகிமையுடன் வீற்றிருக்கும் 1,44,000 பேரையே இந்த 24 மூப்பர்கள் குறிக்கிறார்கள்; அங்கு ராஜாக்களாக மட்டுமல்ல ஆசாரியர்களாகவும் சேவை செய்கிறார்கள். பூர்வ இஸ்ரவேலில் தாவீது ராஜாவினால் 24 பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்ட ஆசாரியர்கள் இவர்களையே சித்தரித்துக் காட்டினார்கள். மூப்பர்களில் ஒருவர் யோவானுக்குத் திரள் கூட்டத்தாரை அடையாளம் காட்டினார். ஆகவே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் 1935-க்கு முன்பே உயிர்த்தெழ ஆரம்பித்திருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால், அந்த ஆண்டில்தான் பூமியில் வாழும் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குத் திரள் கூட்டத்தினர் யாரென்று தெளிவாக அடையாளம் காண்பிக்கப்பட்டது.—லூக். 22:28–30; வெளி. 4:4; 7:9.
ஏழாம் முத்திரை திறக்கப்படுகையில் ஏழு எக்காளச் சத்தம் தொனிக்கிறது
ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையைத் திறக்கிறார். ஏழு தேவதூதர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்படுகின்றன. அவர்களில் ஆறு பேர் தங்களுடைய எக்காளங்களை முழங்கி, மனிதகுலத்தில் “மூன்றிலொரு” பாகத்தினருக்கு, அதாவது கிறிஸ்தவமண்டலத்திற்கு, நியாயத்தீர்ப்பு செய்திகளை அறிவிக்கிறார்கள். (வெளி. 8:1, 2, 7–12; 9:15, 18) இதைத்தான் யோவான் ஐந்தாவது தரிசனத்தில் காண்கிறார். அதற்கு அடுத்துவரும் தரிசனத்தில் யோவானும் ஒருவராக இருந்து, சிறு புத்தகத்தைச் சாப்பிடுகிறார்; அதோடு, ஆலயப் பிரகாரத்தையும் அளவிடுகிறார். ஏழாம் எக்காளம் முழங்கியபின், “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின” என்று ஒரு குரல் சத்தமாக அறிவித்தது.—வெளி. 10:10; 11:1, 15.
வெளிப்படுத்துதல் 11:15, 17-ல் குறிப்பிடப்பட்டுள்ள விஷயத்தைப் பற்றி ஏழாம் தரிசனம் கூடுதலாக விவரிக்கிறது. பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது. பரலோக ஸ்திரீ ஓர் ஆண் மகனைப் பெற்றெடுக்கிறாள். பிசாசு பரலோகத்திலிருந்து தள்ளப்படுகிறான். பரலோக ஸ்திரீமீது சினங்கொண்டு, “அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ண” போகிறான்.—வெளி. 12:1, 5, 9, 17.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
8:1-5—பரலோகத்தில் ஏன் அமைதி நிலவியது, அதன்பின் பூமியின் மீது என்ன கொட்டப்பட்டது? பூமியிலுள்ள ‘பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள்’ பரலோகத்தில் கேட்கப்படுவதற்காக அடையாள அர்த்தத்தில் அங்கு அமைதி நிலவியது. முதல் உலகப் போரின் முடிவில் இது சம்பவித்தது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பலர் நினைத்ததுபோல், புறஜாதியாருடைய காலங்களின் முடிவில் அவர்கள் பரலோகத்திற்குப் போகவில்லை. அதற்குப் பதிலாக, போர்க்காலத்தில் பயங்கர கஷ்டங்களை அனுபவித்தார்கள். ஆகவே, வழிநடத்துதல் கேட்டு ஊக்கமாய் ஜெபம் செய்தார்கள். அவர்களுடைய ஜெபத்திற்கு விடை கிடைத்தது; அடையாளப்பூர்வ அக்கினியை ஒரு தேவதூதன் பூமியின் மீது போட்டான்; இது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை ஆன்மீக ரீதியில் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்தது. அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்களாக இருந்தபோதிலும், உலகளாவிய பிரசங்க வேலையை ஆரம்பித்து வைத்தார்கள்; அதன் விளைவாக கடவுளுடைய ராஜ்யமே முக்கிய தலைப்பாக ஆனது; இது, கிறிஸ்தவமண்டலத்தின் கோபத்தைக் கிளறியது. பைபிளிலிருந்து இடிமுழக்கம் போன்ற எச்சரிப்பு செய்திகள் அறிவிக்கப்பட்டன; சத்தியத்தின் ஒளிக்கீற்றுகள் அனைவருக்கும் பிரகாசிக்கச் செய்யப்பட்டன; பூமியதிர்ச்சியினால் கட்டிடங்கள் ஆட்டங்காணுவது போல் பொய் மத சாம்ராஜ்யமும் அதன் அஸ்திவாரத்தோடு ஆட்டங்கண்டது.
8:6-12; 9:1, 13; 11:15—அந்த ஏழு தூதர்களும் எப்போது எக்காளம் ஊதத் தயாரானார்கள், எப்போது, எப்படி எக்காள சத்தம் முழங்கப்பட்டது? மறுபடியும் புத்துயிர் பெற்றுவந்த யோவான் வகுப்பைச் சேர்ந்த அங்கத்தினர்களுக்கு 1919 முதல் 1922 வரையிலான காலப்பகுதியில் தேவையான வழிநடத்துதல் கொடுப்பதும் அந்த ஏழு எக்காளங்களை ஊதத் தயாராவதில் உட்பட்டுள்ளது. அப்போது, வெளி ஊழியத்தை ஒழுங்கமைப்பதிலும் அச்சகங்களைக் கட்டுவதிலும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மும்முரமாக ஈடுபட்டார்கள். (வெளி. 12:13, 14) சாத்தானுடைய உலகத்திற்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை தேவதூதர்களுடன் சேர்ந்து அவருடைய மக்கள் பயமின்றி அறிவிப்பதையே அந்த எக்காள முழக்கங்கள் குறிக்கின்றன. 1922-ஆம் ஆண்டில் ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்ட்டில் நடைபெற்ற மாநாட்டில் ஆரம்பித்த அந்த முழக்கங்கள் மிகுந்த உபத்திரவம் வரைக்கும் தொடரும்.
8:13; 9:12; 11:14—எந்த அர்த்தத்தில் கடைசி மூன்று எக்காள சத்தங்கள் ‘ஆபத்துகள்’? கிறிஸ்தவமண்டலம் ஆன்மீக ரீதியில் செத்த நிலையில் இருப்பதை அம்பலப்படுத்தும் அறிவிப்புகளே முதல் நான்கு எக்காள சத்தங்கள்; ஆனால் கடைசி மூன்று எக்காள சத்தங்கள் ஆபத்துகளைக் குறிக்கின்றன, அவை குறிப்பிட்ட சம்பவங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஐந்தாம் எக்காள சத்தம் 1919-ல் கடவுளுடைய மக்கள் ‘பாதாளக் குழியிலிருந்து,’ அதாவது செயலற்ற நிலையிலிருந்து, வெளியே வந்ததையும் அவர்கள் முழுமூச்சோடு செய்துவரும் ஊழியத்தையும் குறிக்கிறது; இது கிறிஸ்தவமண்டலத்தை வாதிக்கும் வாதனையைப் போல் இருக்கிறது. (வெளி. 9:1) ஆறாம் எக்காள சத்தம், சரித்திரத்திலேயே மிகப் பெரியளவில் நடத்தப்பட்ட குதிரைப்படை தாக்குதலையும், 1922-ல் ஆரம்பமான உலகளாவிய பிரசங்க வேலையையும் குறிக்கிறது. கடைசி எக்காள சத்தம், மேசியாவை அரசராகக் கொண்ட ராஜ்யத்தின் பிறப்பைக் குறிக்கிறது.
நமக்குப் பாடம்:
9:10, 19. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வெளியிடுகிற பிரசுரங்களில் வரும் அதிகாரப்பூர்வமான பைபிள் கூற்றுகளில் தேள்போல் கொட்டுகிற செய்திகள் உள்ளன. (மத். 24:45, NW) அந்தச் செய்திகள், ‘தேள்களின் கொடுக்குகளைப் போன்ற கொடுக்குகளையுடைய’ வெட்டுக்கிளிகளின் வால்களைப் போலவும், ‘பாம்புகளைப் போன்ற’ வால்களையுடைய ‘குதிரைகளின் . . . வால்களைப்’ போலவும் இருக்கின்றன. ஏன்? ஏனென்றால், “நீதியைச் சரிக்கட்டும் [யெகோவாவின்] நாளை” பற்றி இந்தப் பிரசுரங்கள் எச்சரிக்கின்றன. (ஏசா. 61:2) அவற்றை எல்லாருக்கும் விநியோகிப்பதில் தைரியத்துடனும் வைராக்கியத்துடனும் ஈடுபடுவோமாக.
9:20, 21. கிறிஸ்தவமல்லாத நாடுகள் என்று அழைக்கப்படுகிற நாடுகளில் வாழ்கிற சாந்தகுணமுள்ள மக்கள் பலரும் நாம் அறிவிக்கும் செய்தியை நன்கு செவிகொடுத்துக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவமண்டலத்தைச் சாராத அனைவரும், அதாவது “மற்ற மனுஷர்கள்” அனைவரும், சாட்சிகளாய் மாறிவிடுவார்கள் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. என்றாலும், ஊழிய வேலையில் வீறுநடைபோட்டுச் செல்கிறோம்.
12:15, 16. “பூமி,” அதாவது சாத்தானுடைய உலகிற்குள் இருக்கிற பல்வேறு அரசாங்கங்கள், மத சுதந்திரம் அளித்திருக்கின்றன. 1940-கள் முதல் இந்த அரசாங்கங்கள், ‘வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின [துன்புறுத்துதல் எனும்] வெள்ளத்தை விழுங்கியுள்ளன.’ யெகோவா விரும்புகிறபோது, தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற அரசாங்க அதிகாரிகளை அவரால் தூண்ட முடியும். ஆகவே, நீதிமொழிகள் 21:1 சொல்வது பொருத்தமாக இருக்கிறது: “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.” கடவுள்மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை இது நிச்சயம் பலப்படுத்த வேண்டும்.