அதிகாரம் 5
மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவை யோவான் காண்கிறார்
தரிசனம் 1—வெளிப்படுத்துதல் 1:10–3:22
பொருள்: இயேசு பூமியிலுள்ள ஆவிக்குரிய இஸ்ரவேலை சோதித்து கனிவான உற்சாகமூட்டுதலைக் கொடுக்கிறார்
நிறைவேற்றத்தின் காலம்: கர்த்தருடைய நாளின் இந்த அம்சம் 1914 முதல் உண்மையுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கடைசி நபர் மரித்து உயிர்த்தெழுப்பப்படும் வரையாக நீடித்திருக்கிறது
1. முதல் தரிசனம் எவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது, மற்றும் இது உண்மையில் பொருந்துகிற காலப்பகுதியை யோவான் எவ்வாறு குறித்துக்காட்டினார்
வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள முதல் தரிசனம் 1-ம் அதிகாரம் 10-வது வசனத்திலிருந்து துவங்குகிறது. வெளிப்படுத்துதலிலுள்ள மற்ற தரிசனங்களைப் போன்றே, யோவான் தனிச்சிறப்பான ஏதோ ஒன்றை கேட்பதை அல்லது காண்பதை அறிவிப்பதுடன் இந்தத் தரிசனமும் அறிமுகப்படுத்தப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 1:10, 12; 4:1; 6:1) இந்த முதல் தரிசனம் முதல் நூற்றாண்டு வடிவமைப்பில் அளிக்கப்பட்டு யோவான் வாழ்ந்த காலத்திலிருந்த ஏழு சபைகளுக்கு செய்திகள் அனுப்பப்படுகின்றன. ஆனால் அது உண்மையில் பொருந்துகிற காலப்பகுதியை யோவான் குறித்துக் காட்டுகிறார்: “கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்.” (வெளிப்படுத்துதல் 1:10அ) இந்த ‘நாள்’ எப்போது? பெருங்கொந்தளிப்பான இக்காலங்களின் திடீர் மாற்றங்களைக்கொண்ட நிகழ்ச்சிகள் இத்துடன் ஏதேனும் தொடர்புடையவையாக இருக்கின்றனவா? அப்படியிருக்குமானால், நம்முடைய சொந்த ஜீவனையே, நம்முடைய தப்பிப்பிழைத்தலையுங்கூட பாதிக்கிறபடியால், தீர்க்கதரிசனத்திற்கு நாம் உன்னிப்பாய் கவனம் செலுத்த வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 5:20, 21.
கர்த்தருடைய நாளில்
2. கர்த்தருடைய நாள் எப்போது தொடங்குகிறது மற்றும் எப்போது முடிவடைகிறது?
2 இது வெளிப்படுத்துதலின் நிறைவேற்றத்தை எந்தக் காலக்கட்டத்தில் வைக்கிறது? கர்த்தருடைய நாள் என்பது என்ன? இது நியாயத்தீர்ப்புக் காலமெனவும் தெய்வீக வாக்குகள் நிறைவேறும் காலமெனவும் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். (1 கொரிந்தியர் 1:8; 2 கொரிந்தியர் 1:14; பிலிப்பியர் 1:6, 10; 2:16) அந்த ‘நாளின்’ வருகையோடு, யெகோவாவின் மகத்தான நோக்கங்கள் படிப்படியாகவும் வெற்றிகரமாகவும் அவற்றின் உச்சக்கட்டத்தை நோக்கி முன்னேறிச் செல்கின்றன. பரலோக அரசராக இயேசு முடிசூட்டப்படுதலுடன் இந்த ‘நாள்’ தொடங்குகிறது. சாத்தானிய உலகின்மீது இயேசு நியாயத்தீர்ப்பை நிறைவேற்றிய பின்புங்கூட கர்த்தருடைய நாள் தொடர்கிறது, பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்பட்டு மனிதவர்க்கத்தினர் பரிபூரணராகி முடிவாக இயேசு, ‘தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுக்கும்’ வரை அது நீடித்திருக்கிறது.—1 கொரிந்தியர் 15:24-26; வெளிப்படுத்துதல் 6:1, 2.
3. (அ) கர்த்தருடைய நாள் எப்போது ஆரம்பமாகிறது என்பதை நாம் காண்பதற்கு “ஏழு காலங்க”ளைப் பற்றிய தானியேலின் தீர்க்கதரிசனம் நமக்கு எவ்வாறு உதவுகிறது? (ஆ) கர்த்தருடைய நாளின் ஆரம்பமாக 1914-ம் ஆண்டை பூமியில் நடைபெற்ற எந்த நிகழ்ச்சிகள் உறுதிசெய்கின்றன?
3 கர்த்தருடைய நாள் எப்பொழுது தொடங்குகிறது என்பதைக் காண்பதற்கு மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் நமக்கு உதவி செய்கின்றன. உதாரணமாக, அரசனாகிய தாவீதின் வம்சாவளியில் ஆட்சி வெட்டப்பட்டுப்போகும், “ஏழு காலங்”களுக்கு பிறகு “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்,” என்றறியப்படும் என்பதை தானியேல் விவரித்துள்ளார். (தானியேல் 4:23, 24, 31, 32) அந்தத் தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றம் யூதாவின் ராஜ்யம் பாழ்க்கடிக்கப்பட்டது முதற்கொண்டு ஆரம்பமானது. இது பொ.ச.மு. 607 அக்டோபரில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக பைபிள் ஆதாரம் குறிப்பிடுகிறது. வெளிப்படுத்துதல் 12:6, 14 வசனங்கள், 3 1/2 காலங்கள், 1,260 நாட்களாக இருப்பதைக் காட்டுகின்றன. ஆகவே ஏழு காலங்கள் (அந்த எண்ணில் இரண்டு மடங்கு) 2,520 நாட்களாயிருக்கவேண்டும். ‘ஒரு நாளை ஒரு வருடமாக’ கணக்கிடுவோமானால் அந்த “ஏழு கால” பகுதியாக, 2,520 ஆண்டுகளுக்கு நாம் வருகிறோம். (எசேக்கியேல் 4:6) ஆகவே, கிறிஸ்து இயேசு தம்முடைய பரலோக ஆட்சியை 1914-ன் பிற்பகுதியில் தொடங்கினார். திடீரென தொடங்கின முதல் உலக யுத்தம் ‘வேதனைகளின் ஆரம்பத்தைக்’ குறித்தது, இவை இன்று வரையிலும் மனிதவர்க்கத்தைத் தொல்லைப்படுத்தியிருக்கின்றன. இந்த இரத்தக்கறைபடிந்த பூமியில், 1914 முதற்கொண்டு நடைபெற்ற சம்பவங்கள், எவ்வளவு குறிப்பிடத்தக்க விதத்தில் அந்த ஆண்டை இயேசு பிரசன்னமாகும் ‘நாளின்’ ஆரம்பமாக உறுதிப்படுத்தின!—மத்தேயு 24:3-14.a
4. (அ) முதல் தரிசனம் எப்போது நிறைவேற்றமடைகிறது என்பதைப்பற்றி வெளிப்படுத்துதலிலுள்ள வார்த்தைகள்தானே என்ன குறிப்பிடுகின்றன? (ஆ) முதல் தரிசனத்தின் நிறைவேற்றம் எப்போது முடிவடைகிறது?
4 ஆகவே, இந்த முதல் தரிசனமும் அதில் உள்ள ஆலோசனையும் 1914 முதற்கொண்டு நடக்கிற கர்த்தருடைய நாளுக்குரியது. வெளிப்படுத்துதல் பதிவு, பின்னால் கடவுளுடைய மெய்யான மற்றும் நீதியான நியாயத்தீர்ப்புகள் நிறைவேற்றப்படுவதைக் குறித்து விவரிப்பதானது இந்தக் காலக்கணிப்பை ஆதரிக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் கர்த்தராகிய இயேசு பிரதான பாகத்தை வகிக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18; 16:15; 17:1; 19:2, 11) முதல் தரிசனத்தின் நிறைவேற்றம் 1914-ல் தொடங்கியதென்றால், இது எப்பொழுது முடிவடையும்? செய்திகள்தாமே காண்பிக்கிற விதமாக, செய்தி அனுப்பப்படுகிற அமைப்பு பூமியிலுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களடங்கிய கடவுளுடைய சபையாகும். இந்த முதல் தரிசனத்தின் நிறைவேற்றம் இந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட சபையிலுள்ள கடைசி உண்மையுள்ள அங்கத்தினர் மரித்து பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும்போது முடிவடைகிறது. என்றாலும், கர்த்தருடைய நாள், பூமிக்குரிய மற்ற செம்மறியாடுகளுக்கான ஆசீர்வாதங்களோடுகூட, இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவு வரையாக தொடர்கிறது.—யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 20:4, 5.
5. (அ) ஓர் குரல் யோவானை என்ன செய்யும்படி அழைக்கிறது? (ஆ) ‘ஏழு சபைகளின்’ அமைவிடம் அவற்றிற்கு சுருளை அனுப்புவதற்கு ஏன் சாதகமாயிருந்தது?
5 இந்த முதல் தரிசனத்தில், யோவான் எந்த ஒரு காரியத்தையும் காண்பதற்கு முன்பாக, இப்படியாக ஏதோ ஒன்றை கேட்கிறவராக இருக்கிறார்: “அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன், அது: . . . நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, . . . எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.” (வெளிப்படுத்துதல் 1:10ஆ, 11ஆ) அதிகார தோரணையான, கம்பீர எக்காள சத்தம் போன்று, ஒரு குரல் யோவானை “ஏழு சபைகளுக்கு” எழுதிட அழைக்கிறது. தொடர்ச்சியான செய்திகளைப் பெற்று தான் காணப்போகிறவற்றையும் கேட்கப்போகிறவற்றையும் அவர் தெரிவிக்க வேண்டியவராக இருக்கிறார். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சபைகள் உண்மையாகவே யோவானின் நாளில் இருந்தன என்பதை கவனியுங்கள். இவ்வெல்லா சபைகளும் சிறிய ஆசியாவில் பத்முவிலிருந்து கடலுக்கு நேர் எதிரில் இருந்தன. அந்தப் பகுதியில் நேர்த்தி வாய்ந்த ரோம சாலைகள் இருந்ததால் ஒன்றுக்கொன்று சாலைத் தொடர்புடையதாக அவை இருந்தன. ஒரு சபையிலிருந்து அடுத்த சபைக்கு சுருளை எடுத்துச் செல்வது தூதுவனுக்கு கடினமாயிருந்திராது. இந்த ஏழு சபைகளும் யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன நாளைய வட்டாரத்தின் ஒரு பிரிவுக்கு ஒத்திருக்கும்.
6. (அ) ‘இருக்கிறவைகள்’ எதைக் குறிக்கிறது? (ஆ) இன்றுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையில் உள்ள நிலைமைகள் யோவானின் நாளிலிருந்ததைப் போன்றே இருக்க வேண்டும் என்பதில் நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
6 வெளிப்படுத்துதலில் உள்ள பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் யோவான் வாழ்ந்த காலத்துக்கு பிற்பாடு நிறைவேற இருந்தன. “இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளை” அவை குறிப்பிட்டன. ஆனால் ஏழு சபைகளுக்கான ஆலோசனை, அப்போது ஏழு சபைகளில் உண்மையிலேயே இருந்த நிலைமைகளை, “இருக்கிறவைகளை” குறித்துப் பேசுகிறது. இந்தச் செய்திகள், அவ்வேழு சபைகளிலுள்ள நியமிக்கப்பட்ட உண்மையுள்ள மூப்பர்களுக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக்கொண்ட மற்ற எல்லா சபைகளுக்கும் மதிப்புள்ள உதவிகளாக இருந்தன.b இந்தத் தரிசனம் கர்த்தருடைய நாளில் அதனுடைய பிரதான பொருத்தத்தைக் கொண்டிருப்பதால், இயேசு சொல்வது நம்முடைய சொந்த நாளைய அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுடைய சபையில் அதேவிதமான நிலைமைகள் எதிர்பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 1:10, 19.
7. இந்த முதல் தரிசனத்தில் யோவான் யாரைக் காண்கிறார், மற்றும் இன்று இது நமக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவமுடையதாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது?
7 இந்த முதல் தரிசனத்தில், பிரகாசிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவருடைய பரலோக மகிமையில் யோவான் காண்கிறார். பரலோகத்திலிருந்து ஆணையிடப்பட்ட இந்தக் கர்த்தருடைய மகா நாள் சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அடங்கிய புத்தகத்துக்கு வேறு எது இதைவிட அதிக பொருத்தமுடையதாய் இருக்க முடியும்? அந்தக் காலக்கட்டத்தில் இப்போது வாழ்ந்து, அவருடைய ஒவ்வொரு கட்டளைக்கும் கவனமாக செவிகொடுப்பவர்களாகிய நமக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக எது இருக்க முடியும்? மேலும், மேசியானிய வித்து, சாத்தானால் கொண்டு வரப்பட்ட எல்லா சோதனைகளையும் துன்புறுத்தல்களையும் சகித்து, கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய ‘குதிங்கால்’ நசுக்கப்பட்டபோது வேதனையான மரணத்தை அனுபவித்து, இப்போது பரலோகத்தில் ஜீவிக்கிறவராக, கடவுளுடைய மகத்தான நோக்கத்தை அதனுடைய வெற்றிகரமான முடிவுக்கு கொண்டுவருவதற்காக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளார் என்று உறுதியளிக்கப்படுவது யெகோவாவின் பேரரசுரிமையை ஆதரிக்கிறவர்களுக்கு எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாயிருக்கிறது!—ஆதியாகமம் 3:15.
8. இயேசு என்ன நடவடிக்கைக்காக இப்போது செயல்பட தயாராயிருக்கிறார்
8 சிங்காசனத்திலேற்றப்பட்ட அரசராக, இயேசு செயல்படத் தயாராயிருக்கிறார் என்பது தெளிவாக இருக்கிறது. யெகோவாவின் முடிவான நியாயத்தீர்ப்புகளை இந்தப் பழைய, பொல்லாத காரிய ஒழுங்குமுறைக்கும் மற்றும் அதனுடைய பேய்த்தனமான கடவுளாகிய சாத்தானுக்கும் எதிராக நிறைவேற்றுவதற்காக யெகோவாவுடைய பிரதான தீர்ப்பு நிறைவேற்றுபவராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய சபையாகிய அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களையும் இவர்களுடைய கூட்டாளிகளாகிய திரள் கூட்டத்தாரையும் உலகத்தையும் நியாயந்தீர்ப்பதற்கும்கூட தயாராயிருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 7:4, 9; அப்போஸ்தலர் 17:31.
9. (அ) பொன் குத்குவிளக்குகளின் மத்தியிலுள்ள மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) ஆலயம் போன்ற அமைப்பு மற்றும் இயேசு அணிந்திருக்கிற நிலையங்கி போன்றவற்றால் என்ன குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது? (இ) அவருடைய பொற்கச்சையால் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
9 யோவான் உரத்தக் குரல் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தபோது இதையே காண்கிறார்: “என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது ஏழு பொன் குத்துவிளக்குகளைக் கண்டேன்.” (வெளிப்படுத்துதல் 1:12) இந்த ஏழு குத்துவிளக்குகளும் எதை அடையாளப்படுத்துகின்றன என்பதை பின்னர் அவர் அறியவருகிறார். ஆனால் அந்த குத்துவிளக்குகளுக்கு மத்தியிலிருந்தவரே அவருடைய கவனத்தை ஈர்க்கிறார். அங்கே “அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவர் [இருந்தார்].” (வெளிப்படுத்துதல் 1:13) இங்கே, ‘மனுஷகுமாரனாகிய இயேசு ஆச்சரியத்தால் பிரமித்துநின்ற சாட்சியாகிய யோவானுக்கு முன்பாக, ஜொலிக்கிற பிரகாசம் பொருந்திய உருவில் காட்சியளிக்கிறார். அவர் எரிகிற பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் ஒளி வீசுகிற மகிமையுடன் தோன்றுகிறார். இந்த ஆலயம் போன்ற அமைப்பு, நியாயந்தீர்க்கும் அதிகாரங்களோடு இயேசு, யெகோவாவின் பெரிய பிரதான ஆசாரியருடைய பாகத்தை வகிப்பவராக இருக்கிறார் என்ற காரியத்தை யோவானின் மனதில் பதிய வைக்கிறது. (எபிரெயர் 4:14; 7:21-25) கவனத்தைக் கவருகிற அவருடைய நீண்ட நிலையங்கி அவருடைய ஆசாரிய ஸ்தானத்திற்கு ஏற்றதாயிருக்கிறது. பூர்வ யூத மத பிரதான ஆசாரியர்களைப் போன்று, அவர் ஒரு கச்சையை கட்டியிருக்கிறார்—அவருடைய இருதயத்தை மறைக்கிற ஒரு பொற்கச்சை அவருடைய மார்பின் மேலிருக்கிறது. யெகோவா தேவனிடமிருந்து பெற்ற அவருடைய தெய்வீக வேலையை முழு இருதயத்தோடு செய்து முடிப்பார் என்பதை இது குறிப்பிடுகிறது.—யாத்திராகமம் 28:8, 30; எபிரெயர் 8:1, 2.
10. (அ) இயேசுவின் பனி வெண்மை முடியாலும், அக்கினிமயமான கண்களாலும் குறிக்கப்பட்டுள்ளது என்ன? (ஆ) இயேசுவின் பாதங்கள் பிரகாசிக்கிற வெண்கலம் போன்றிருப்பதனுடைய உட்பொருள் என்ன?
10 யோவானின் விவரிப்பு தொடர்கிறது: “அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது.” (வெளிப்படுத்துதல் 1:14) அவருடைய பனி வெண்மை முடியானது நீண்ட ஆயுசினால் வரும் ஞானத்தை குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 16:31-ஐ ஒப்பிடுக.) அவருடைய அக்கினிமயமான கண்கள், அவர் பரிசீலனை செய்கையிலும் சோதிக்கையிலும் அல்லது கோபத்தை வெளிக்காட்டுகையிலும் விவேகமுள்ளவராகவும் விழிப்புள்ளவராகவும் இருக்கிறார் என்பதைக் காண்பிக்கின்றன. இயேசுவின் பாதங்களுங்கூட யோவானின் கவனத்தைக் கவருகின்றன: “அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.” (வெளிப்படுத்துதல் 1:15) தரிசனத்தில், இயேசுவின் பாதங்கள் வெண்கலம்போன்று ஒளி வீசிக்கொண்டு, பிரகாசமாக இருந்தன—யெகோவா தேவனுடைய சமூகத்தில் நல்ல நிலைநிற்கையோடு வைராக்கியத்துடன் நடக்கிறவருக்கு பொருத்தமாகவே இருந்தது. மேலும், பைபிளில் தெய்வீக காரியங்கள் அடிக்கடி பொன்னினால் படமாக காட்டப்படுகையில், மனித காரியங்கள் சில சமயங்களில் வெண்கலத்தினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.c எனவே, வெண்கலம் போன்ற பிரகாசமான இயேசுவின் பாதங்கள், அவர் பூமியில் நற்செய்தியை பிரசங்கிக்கையில் அவருடைய பாதங்கள் எவ்வளவு ‘அழகானவைகளாயிருந்தன’ என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றன.—ஏசாயா 52:7; ரோமர் 10:15.
11. (அ) இயேசுவின் மகிமையான பாதங்கள் நமக்கு எதை நினைவுபடுத்துகின்றன? (ஆ) இயேசுவின் குரல் “பெருவெள்ளத்து இரைச்சல் போலிருந்தது” என்ற காரியத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன?
11 உண்மையில், ஒரு பரிபூரண மனிதராக, தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் தெளிவாகத்தெரிந்த ஓர் ஒளியை இயேசு கொண்டிருந்தார். (யோவான் 1:14) அவருடைய மகிமையான பாதங்கள் பிரதான ஆசாரியராக இருக்கும் யெகோவாவுடைய அமைப்பின் பரிசுத்த ஸ்தலத்தில் அவர் நடமாடுகிறார் என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகின்றன. (யாத்திராகமம் 3:5-ஐ ஒப்பிடுக.) மேலும், அவருடைய குரல் ஒரு பெரிய நீர்வீழ்ச்சித்தொடரைப் போன்ற பேரிரைச்சலோடு எதிரொலிக்கிறது. இது மனதில் ஆழமாக பதிவதோடு அச்சமூட்டுகிறதாகவும் இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக, கடவுளுடைய வார்த்தையாக அழைக்கப்படுகிற, ‘குடியிருக்கப்பட்ட பூமியை நீதியால் நியாயந்தீர்க்க’ வருகிறவருக்கு இது ஏற்கத்தகுந்ததாயிருக்கிறது.—அப்போஸ்தலர் 17:31, NW; யோவான் 1:1.
12. ‘இருபுறமும் கருக்குள்ள கூர்மையான நீண்ட பட்டயத்தின்’ உட்பொருள் என்ன?
12 “தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள [கூர்மையான நீண்ட, NW] பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்.” (வெளிப்படுத்துதல் 1:16, 17அ) சற்றே பின்னர், ஏழு நட்சத்திரங்களின் பொருளை இயேசு தாமே விளக்குகிறார். ஆனால் அவருடைய வாயிலிருந்து என்ன வருகிறது என்பதைக் கவனியுங்கள்: “இருபுறமும் கருக்குள்ள கூர்மையான நீண்ட பட்டயம்.” என்னே ஒரு பொருத்தமான அம்சம்! யெகோவாவின் எதிரிகளுக்கு எதிராக அவருடைய முடிவான நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பதற்கு இயேசுவே நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய வாயிலிருந்து வரும் தீர்வான வார்த்தைகள் எல்லா துன்மார்க்கர்மீதும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில் விளைவடையும்.—வெளிப்படுத்துதல் 19:13, 15.
13. (அ) இயேசுவின் பிரகாசமான ஒளிதரும் முகத்தோற்றம் நமக்கு எதை நினைவுபடுத்துகிறது? (ஆ) இயேசுவைப்பற்றிய யோவானின் விவரிப்பிலிருந்து நாம் பெறக்கூடிய முழுமையான கருத்து என்ன?
13 இயேசுவின் பிரகாசமான ஒளிவிடுகிற முகத்தோற்றம், சீனாய் மலையில் யெகோவா மோசேயுடன் பேசிய பிறகு அவருடைய முகத்திலிருந்து வெளியான பிரகாசமான ஒளியை நமக்கு நினைவுபடுத்துகிறது. (யாத்திராகமம் 34:29, 30) இயேசு கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தம் சீஷரில் மூவருக்கு முன்பாக மறுரூபமானபோது, “அவர் முகம் சூரியனைப்போல பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று,” என்பதையும் நினைவுபடுத்திப் பாருங்கள். (மத்தேயு 17:2) இப்போது, கர்த்தருடைய நாளின்போது, இயேசுவின் தரிசன பிரதிநிதித்துவத்தில், அதேவிதமாக யெகோவாவின் சமூகத்தில் இருந்தவருடைய ஒளிதரும் பிரகாசத்தை அவருடைய முகம் பிரதிபலிக்கிறது. (2 கொரிந்தியர் 3:18) உண்மையில், யோவானுடைய தரிசனத்தினால் தெரிவிக்கப்படுகிற முழுமையான கருத்து மகிமையின் பிரகாசமாயிருக்கிறது. பனி வெண்மையான முடி, அக்கினிஜுவாலைக் கண்கள் மற்றும் ஒளிரும் முகத்தோற்றம் முதல் பிரகாசிக்கிற பாதங்கள் வரையாக, “சேரக்கூடாத ஒளியில்” இப்போது வாசம்பண்ணுகிற ஒருவரைப் பற்றிய மிக மேன்மையான தரிசனமாக இது இருக்கிறது. (1 தீமோத்தேயு 6:16) இந்தச் சிறப்புக் காட்சியின் மெய்ம்மை அவ்வளவு உயிர்ப்புள்ளது! அச்சத்தால் பீடிக்கப்பட்ட யோவான் எப்படி பிரதிபலித்தார்? இந்த அப்போஸ்தலன் நமக்கு சொல்கிறார்: “நான் அதைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்.”—வெளிப்படுத்துதல் 1:17.
14. மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவைப்பற்றிய யோவானின் தரிசனத்தை வாசிக்கும்போது நாம் எவ்வாறு பாதிக்கப்பட வேண்டும்?
14 இன்று, யோவானுடைய தரிசனத்தின் வண்ணப்பகட்டான, விவரமான விளக்கம் கடவுளுடைய ஜனங்களை இருதயப்பூர்வமான போற்றுதலினால் நிரப்புகிறது. கர்த்தருடைய நாளில் 90-க்கும் மேற்பட்ட ஆண்டுகளை நாம் ஏற்கெனவே கடந்துவிட்டோம். இந்தக் காலப்பகுதியிலேயே தரிசனம் தொடர்ந்து அதனுடைய கிளர்ச்சியூட்டும் நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கிறது. இயேசுவின் ராஜ்ய ஆட்சி ஒரு எதிர்கால நம்பிக்கையாக இல்லாமல் நமக்கு ஒரு உயிருள்ள தற்போதைய மெய்ம்மையாக இருக்கிறது. ஆகவே, ராஜ்யத்தின் உத்தம பிரஜைகளாக, இந்த முதல் தரிசனத்தில் யோவான் என்ன விவரிக்கிறார் என்பதை ஆச்சரியத்துடன் இன்னும் அதிகமாக கண்டு, மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கீழ்ப்படிதலுடன் கவனித்து கேட்பது ஏற்றதாயிருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a விவரமான விளக்கத்துக்கு, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 88-92, 215-18-ஐக் காண்க.
b முதல் நூற்றாண்டில், ஓர் அப்போஸ்தலனிடமிருந்து ஒரு நிருபத்தை சபை பெற்றதென்றால், அதிலுள்ள ஆலோசனையிலிருந்து எல்லாருமே பயன்பெறும் பொருட்டு, மற்ற சபைகளுக்கு அந்த நிருபத்தை சுற்றுக்கனுப்புவது வழக்கமாக இருந்தது.—கொலோசெயர் 4:16-ஐ ஒப்பிடுக.
c சாலொமோனின் ஆலயத்தினுடைய உட்புற அலங்காரங்களும் ஆலயத்துக்குரிய பொருட்களும் பொன்னினால் செய்யப்பட்டு அல்லது அதனால் மூடப்பட்டிருந்தன, ஆனால் முற்றத்துக்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது.—1 இராஜாக்கள் 6:19-23, 28-35; 7:15, 16, 27, 30, 38-50; 8:64.
[பக்கம் 23-ன் படம்]
ஏழு சபைகள் அமைந்திருந்த நகரங்களுடைய தொல் பொருள் ஆய்வின் எஞ்சிய பதிவுகள், பைபிள் பதிவை சரியென உறுதிசெய்கின்றன. உலகளாவிய சபையை ஊக்கமூட்டுகிற இயேசுவுடைய உற்சாகமான செய்திகளை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இங்கேயே பெற்றனர்
பெர்கமு
சிமிர்னா
தியத்தீரா
சர்தை
எபேசு
பிலதெல்பியா
லவோதிக்கேயா