உத்தமத்தை காத்துக்கொள்வதன் மூலம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்!
“பிழைத்தாலும் மரித்தாலும் நாம் யெகோவாவுடையவர்களாயிருக்கிறோம்.”—ரோமர் 14:8.
1, 2. (எ) யெகோவாவின் சாட்சிகள் ஏன் கடவுளுக்கு தங்களுடைய உத்தமத்தை காத்துக் கொள்ள தீர்மானித்தவர்களாக இருக்கிறார்கள்? (பி) ஆனால் என்ன கேள்விகள் எழும்புகின்றன?
அப்போஸ்தலனாகிய பவுலின் அந்த வார்த்தைகள் இந்த 20-ம் நூற்றாண்டில், உண்மையாக உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களின் உணர்ச்சிகளை எத்தனை நேர்த்தியாக வெளிப்படுத்துகின்றன! நாம் தொடர்ந்து உயிரோடிருந்து தற்போதைய பொல்லாத ஒழுங்கு நம்முடைய கண்களுக்கு முன்பாகவே நொறுங்கி விழுவதைப் பார்க்க சிலாக்கியம் பெற்றிருந்தோமேயானால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்போம்! ஆனால் கடவுளுடைய ஊழியத்தில் நாம் மரிக்க வேண்டியிருந்தால் அது அப்படி ஆகக்கடவது. எப்படியிருந்தாலும் நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவுக்கு உண்மைத் தவறாத சாட்சிகளாக இருக்க தீர்மானித்திருக்கிறோம். நாம் அவருக்கு நம்முடைய உத்தமத்தைக் காத்துக் கொள்வோம். ஏன்? ஏனென்றால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் நிச்சயமாகவே யெகோவாவுடையவர்களாகவே இருக்கிறோம்!
2 ஆனால் உத்தமம் என்பது என்ன? அது நம்மிடம் தேவைப்படுத்துவது என்ன? நாம் உத்தமத்தைக் காத்துக்கொள்வது உண்மையில் கடவுளுக்கு ஏதாவது வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா?
உத்தமமும் அதனுடைய தேவைகளும்
3. பைபிளின் பிரகாரம் உத்தமத்தைக் காத்துக்கொள்வது எதை அர்த்தப்படுத்துகிறது?
3 கடவுளுடைய வார்த்தையில் உத்தமம் என்பது நடத்தையில் தெளிந்த புத்தியையும், குறைபாடில்லாமையையும், குற்றமில்லாமையையும் பிழையற்ற நிலையையும் சுட்டிக் காட்டுகிறது. எத்திசைக்கும் விலகிச் செல்லாமல் நீதிக்கு முழுமையாக அர்ப்பணித்தவர்களாக இருப்பதை அது அர்த்தப்படுத்துகிறது. உண்மையில், உத்தமம் ஒரு நபரிடம்—யெகோவா தேவனிடம்—முறிக்கப்படமுடியாத பக்தியைக் கொண்டிருப்பதை தேவைப்படுத்துகிறது. ஆம், உத்தமத்தைக் காத்துக்கொள்வது யெகோவாவின் உன்னத சித்தத்தை தொடர்ந்து செய்வதை அர்த்தப்படுத்துகிறது.
4. (எ) உத்தமத்தை முதல் முதலாக முறித்துக் கொண்டவன் யார்? (பி) முதல் மானிட ஜோடியை என்ன செய்யும்படியாக அவன் தூண்டினான்?
4 உத்தமத்தை முதல் முதலாக முறித்துக் கொண்டவன் ஒரு ஆவி சிருஷ்டியாக இருந்தான். அவன் முதல் மானிட ஜோடியை சிருஷ்டிகருக்கு எதிராக கலகத்தனமான போக்கில் வழிநடத்திச் சென்றான். அறிவின் விருட்சத்தின் சம்பந்தமாக கடவுளுடைய தடையை மதித்து நடப்பதன் மூலம் யெகோவாவினிடமாக தங்களுடைய உத்தமத்தை விளங்கப்பண்ண ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வாய்ப்பிருந்தது. விரோதி தன்னலத்ததுக்கு கவர்ச்சியூட்டியபோது அதன் அழுத்தத்தின் கீழ் அவர்கள் கீழ்ப்படியாது போய்விட்டார்கள். யெகோவாவின் பிரமாணங்களில் அவர்கள் இருதயம் உத்தமமாக நிரூபிக்கவில்லை. அவர்கள் அவருக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ளவில்லை.—சங்கீதம் 119:1, 80.
5. சாத்தானின் கலகம் என்ன பிரச்னையை எழுப்பியது? உத்தமனான யோபுவின் அனுபவங்களால் இது எவ்விதமாக நிரூபிக்கப்படுகிறது?
5 சாத்தானுடைய கலகம், அவருடைய எல்லா சிருஷ்டிகளின் மீதும் கடவுள் ஆட்சி செய்வதற்கான உரிமையைப் பற்றிய அவர்களுடைய முழு கீழ்ப்படிதலை கேட்பதற்குரிய யெகோவாவின் உரிமையைப் பற்றிய பிரச்னையை எழுப்பியது. ஆகவே கடவுளின் அரசுரிமைக்கு மனிதன் உத்தமத்தைக் காத்துக்கொள்வது சர்வலோக அரசுரிமையின் பிரச்னையில் இன்றியமையாத ஒரு பாகமாக இருக்கும். இதற்குரிய அத்தாட்சி, உத்தமனும், சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்தவனுமாகிய யெகோவாவின் ஊழியனாகிய யோபின் விஷயத்தில் காணப்படுகிறது. (யோபு 1:1) யோபு கடவுளுடைய நேர்மையான வழியிலிருந்து விலகிச் செல்லவில்லை. பாலின ஒழுக்கக்கேட்டில் அவனுக்கு எந்த ஈடுபாடும் இருக்கவில்லை. நியாயம் செய்வதில் அவன் ஒருபோதும் நேர்மையற்றவனாக இருக்கவில்லை. விதவைகள், தாய் தகப்பன் இல்லாதவர்கள் அல்லது எளியவர்களுக்கு கொடுப்பதில் அவன் கை குறுகினதாக இருக்கவில்லை. அவன் தன்னுடைய ஆஸ்தியை நம்பியிருக்காமல் மகா உன்னதமானவரில் முழுவதுமாக நம்பிக்கையை வைத்திருந்தான். (யோபு 31:7-40) ஆனாலும்கூட யோபு தன்னல காரணங்களுக்காகவே கடவுளை சேவித்தான் என்பதாக பிசாசு குற்றஞ்சாட்டினான். யோபு உடைமைகளையும் அவனுடைய பிள்ளைகளையும்கூட பறித்துக்கொள்வதற்கு யெகோவா சாத்தானுக்கு அனுமதி கொடுத்தப்போதிலும் பிரதான மோசக்காரன், அந்த உத்தம மனிதனின் உத்தமத்தை தகர்த்துவிடுவதில் தோல்வியடைந்தான். துன்பந்தரும் நோயும் பொய்யான தேற்றரவாளர்களின் கீழ்த்தரமான விமர்சனமும்கூட பயனற்றதாக இருந்தது. ஏனென்றால் யோபு உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் மனிதனாக தன்னை நிரூபித்தான்.—யோபு 1:6-2:13; 27:5, 6; 31:6; 42:8, 9.
6. “யெகோவாவுடையவர்களிடம்” தேவைப்படுவது என்ன?
6 ஆகவே கடவுளுடைய நாமத்தை பரிசுத்தப்படுத்துவதில் மனிதர்களுக்கு மதிப்பிடமுடியாத ஒரு பங்கு இருக்கிறது. எவ்விதமாக? உத்தமத்தைக் காத்துக்கொண்டு அவர்கள் உண்மையுடன் யெகோவாவின் சர்வலோக அரசுரிமையையே ஆதரிப்பதை காண்பிப்பதன் மூலமாக இதைச் செய்யலாம். அப்படியென்றால், ‘யெகோவாவுடையவர்களாக’ இருப்பவர்களிடம் தேவைப்படுவது என்ன? நாம் முழு பக்தியோடு கடவுளை சேவித்து, யெகோவா “தனிப்பட்ட பக்தியை கேட்கிற தேவன்” என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.—யாத்திராகமம் 20:5.
நாம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்த முடியும்
7, 8. நாம் அபூரணராக இருப்பதன் காரணமாக நாம் எவ்விதமாக கடவுளுக்கு நம்முடைய உத்தமத்தை காத்துக் கொள்ள முடியும்? (பி) நாம் உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்களாக இருப்போமேயானால், நீதிமொழிகள் 27:11 நமக்கு எவ்விதமாக பொருந்தும்?
7 நாம் அனைவருமே அபூரணராக இருப்பதன் காரணமாக கடவுளுடைய நீதியான தராதரங்களை பரிபூரணமாக கைக்கொள்ள முடியவில்லை. ஆகவே நாம் உத்தமத்தைக் காத்துக்கொள்வது செயலிலோ பேச்சிலோ பரிபூரணத்தை அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக அது இருதயப்பூர்வமான பக்தியில் முழு இருதயத்தோடிருப்பதை அல்லது முழு நிறைவோடிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. தாவீது வினைமையான பாவங்களைச் செய்தபோதிலும் ‘மன உத்தமமாய் நடந்தான்.’ (1 இராஜாக்கள் 9:4) சிட்சையை ஏற்றுக்கொண்டு அவன் தன்னுடைய வழியை திருத்திக் கொண்டான். யெகோவாவிடமாக அவனுக்கிருந்த உண்மையான அன்பு அவனுடைய இருதயத்தில் நிறைந்திருந்ததை அவன் காட்டினான். (சங்கீதம் 26:1-12) நாமும்கூட அத்தகைய அன்பைக் காட்டி, ‘இருதயத்தின் உண்மையின்படியே’ நடக்கலாம்.—சங்கீதம் 78:72.
8 உத்தமத்தைக் காத்துக் கொள்வது கூடிய காரியமாக இருக்கிறது. ஏனென்றால் யெகோவா தேவன் மீது நமக்கு ஆழமான விசுவாசம் இருக்கிறது. அவரிலும் நம்மை பாதுகாப்பதற்கான அவருடைய வல்லமையிலும் நமக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. (சங்கீதம் 25:21; 41:12) நம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வது எளிதல்ல. ஏனென்றால் யெகோவாவினுடைய மற்றும் நம்முடைய மிகப்பெரிய சத்துருவாகிய பிசாசாகிய சாத்தான் அவிசுவாசிகளின் மனங்களை குருடாக்கி “உலகமனைத்தையும் மோசம் போக்கிக்“ கொண்டிருக்கிறான். (வெளிப்படுத்தின விசேஷம் 12:9; 2 கொரிந்தியர் 4:4) ஆனால் யோபைப் போல நாம் உத்தமத்தை காத்துக் கொள்பவர்களாக இருக்கலாம். நாம் அபூரணராக இருந்தபோதிலும், இவ்விதமாக நாம் நம்முடைய அன்புள்ள கடவுளின் இருதயத்தை சந்தோஷப்படுத்தலாம். நீதிமொழிகள் 27:11 சொல்லுகிறபடியே: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக நீ ஞானவானாகி என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” யெகோவாவின் உண்மைத் தவறாத ஊழியர்களாக, அவரை நிந்திக்கிற சத்துருவுக்கு மனதில் பதியத்தக்க பதிலை கொடுப்பதற்கு நாம் உதவி செய்ய முடியும். ஆகவே நாம் உத்தமத்தைக் காத்துக்கொள்வது உண்மையில் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் ஆட்களாக நாம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்த முடியும். இது நமக்கு என்ன மகிழ்ச்சியை கொண்டுவருகிறது!
உத்தமத்தைக் காத்துக் கொண்டவர்களின் ஒரு நீண்ட அணி
9. உத்தமத்தைக் காத்துக்கொண்ட மேகம் போன்ற திரளான யெகோவாவின் சாட்சிகளில் சிலரை குறிப்பிடுக. உத்தமத்தின் என்ன பரீட்சைகளை அவர்கள் சகித்துக் கொண்டார்கள்?
9 உண்மையில் யெகோவாவின் சாட்சிகள் இன்று உத்தமத்தைக் காத்துக் கொண்டவர்களின் நீண்ட அணியில் ஒரு பாகமாக இருக்கிறார்கள். அது உண்மையுள்ள ஆபேலின் ஆரம்பமாகிறது. ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, யாக்போபு, யோசேப்பு, மோசே, ராகாப், கிதியோன், பாராக்கு, சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் போன்ற ஆண்களும் பெண்களும் இதில் அடங்கியிருக்கிறார்கள். பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உண்டாக்கின சிலையை வணங்க மறுத்து, வெகு அதிகமாக சூடாக்கப்பட்ட சூளைக்குள் போடப்பட்டு, “அக்கினியின் உக்கிரத்தை அவித்ததாக” குறிப்பிடப்படும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ என்பவர்களும் உத்தமத்தை காத்துக் கொண்டவர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து வந்த யெகோவாவின் மற்ற சாட்சிகள், ‘நிந்தைகளையும் அடிகளையும் காவலையும், அநுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டார்கள். செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்! நிச்சயமாகவே “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” என்பதாக பவுல் சொன்னதை நாம் ஒப்புக்கொள்கிறோம். உத்தமத்தை காத்துக்கொள்ளும் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகளால் சூழப்பட்டிருப்பது எத்தனை கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது!—எபிரேயர் 11:1-12:1; தானியேல் அதிகாரம் 3 பார்க்கவும்.
10. அப்போஸ்தலனாகிய பவுல் எவ்விதமாக யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தினான்?
10 அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளால் கொடுக்கப்பட்ட தைரியத்தினாலும் பெலத்தினாலும் காவல்களையும், அடிகளையும், கப்பற் சேதத்தையும் கண்விழிப்புகளையும் பசியையும், தாகத்தையும், குளிரையும் நிர்வாணத்தையும் “அநேகந்தரம் மரண அவதியை”யும் சகித்துக் கொண்டான். (2 கொரிந்தியர் 11:23-27) ஊழியத்தினிமித்தமாக அவன் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவித்தான். இவை அனைத்திலும், தளராத ஊக்கத்தோடு உத்தமத்தைக் காத்துக்கொள்கிறவனாக யெகோவாவின் இருதயத்தை அவன் சந்தோஷப்படுத்தினான். நாமும் அவ்விதமேச் செய்ய முடியும்.
11. உத்தமத்தின் சம்பந்தமாக இயேசு கிறிஸ்து என்ன முன்மாதிரியை வைத்தார்?
11 “இரட்சிப்பின் அதிபதியும் நம்முடைய விசுவாசத்தை பூரணப்படுத்துகிறவருமான” இயேசு கிறிஸ்துவே உத்தமத்தைக் காத்துக்கொண்டவர்களில் மிகவும் முதன்மையானவராக இருக்கிறார். வனாந்தரத்திலே பிசாசினால் சோதிக்கப்படுகையில், இயேசு தம்முடைய உத்தமத்தில் உறுதியாக இருந்து கடைசியாக இவ்விதமாகச் சொன்னார்: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய யெகோவாவைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே.” கடவுளால் கொடுக்கப்பட்ட இத்தகைய ஒரு திட தீர்மானத்துக்கு முன்னால் பிசாசு ஒன்றும் செய்ய இயலாமல் இயேசுவை விட்டு விலகிச் சென்றான். இயேசுவின் மீது சாத்தான் கொண்டுவந்த கடைசி தாக்குதலாக இது இருக்கவில்லை. ஆனால் கடவுளுடைய குமாரனின் உத்தமத்தை முறித்துவிட பிசாசு வலிமையற்றவனாக இருந்தான். ‘இயேசு தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு அவர் கழு மரத்தை சகித்துக்கொண்டு’ உத்தமத்தை விட்டு விலகாதிருந்தார். அவருடைய மிக உயர்ந்த முன்மாதிரியைப் பின்பற்றி உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்களாக, யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவோமாக.—எபிரெயர் 12:2, 3; மத்தேயு 4:1-11.
12, 13. உத்தமத்தின் என்ன பரீட்சைகளை பூர்வ கிறிஸ்தவர்களால் வெற்றிகரமாக எதிர்ப்பட முடிந்தது?
12 இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்விதமாகச் சொன்னார்: “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.” (மத்தேயு 10:22) மெய்க் கிறிஸ்தவர்களுக்கு அது எப்பொழுதும் எவ்வளவு உண்மையாக இருந்திருக்கிறது! கிறிஸ்தவமும் ரோம அரசாங்கமும் என்ற தன்னுடைய புத்தகத்தில் E.G. ஹார்டி பின்வருமாறு எழுதினார்: திட்டவட்டமான குற்றச்சாட்டுக்காக அல்லது குற்ற நிரூபணத்துக்காக மட்டுமின்றி கிறிஸ்தவர்கள் என்ற அந்த பெயருக்காக மட்டுமே அல்லது கிறிஸ்தவத்தை பின்பற்றுவதாக சொல்வதற்காக மட்டுமேயும்கூட அவர்கள் தண்டிக்கப்படலாம் என்பது பிள்ளையின் கடிதத்திலிருந்தும் ட்ராஜனின் மறுவரைவிலிருந்தும் முடிவாகத் தெரிகிறது.”
13 கடவுள் கொடுத்த சக்தியால் அந்த பூர்வ கிறிஸ்தவர்களால் உத்தமத்தின் என்ன பரீட்சைகளையெல்லாம் வெற்றிகரமாக எதிர்பட முடிந்தது! உதாரணமாக அவர்களைக் குறித்து இவ்விதமாகச் செல்லப்பட்டிருக்கிறது: “சில சமயங்களில் அவர்கள் வாதிக்கப்பட்டு, பொதுமக்களை களிப்படையச் செய்வதற்காக அரங்கத்தில், பசியாக இருக்கும் மூர்க்க மிருகங்களுக்கு முன்பாக தூக்கி எறியப்பட்டார்கள். ஆனால் இத்தகைய துன்பங்கள் இருந்தபோதிலும், “துன்புறுத்தல் அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தவும், அநேகர் அவர்களுடைய மதத்துக்கு மாறவுமே உதவியாக இருந்தது” கவனிப்பப்பட்டது. (பழைய உலகிலிருந்து புதியதற்கு, யூஜீன் A. காலிகனும் மாக்ஸ்வெல் F. லிட்வினும் எழுதியது. 1932, பக்கங்கள் 90-1) இந்த 20-ம் நூற்றாண்டில், யெகோவாவின் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் சாட்சிகளின் விஷயத்திலும் இது உண்மையாக இருக்கிறது. பிசாசின் ஏஜெண்டுகளால் அவர்களோடு வெற்றிகரமாக போராட முடியவில்லை.
14, 15. “இரண்டு சாட்சிகள்” யார்? 1918 மற்றும் 1919-ல் அவர்கள் அனுபவித்தது என்ன?
14 யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்களான, அடையாளமான “இரண்டு சாட்சிகள்” 1918 மற்றும் 1919-ம் ஆண்டுகளில் அனுபவித்ததை சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய சத்துருக்கள் அவர்களுக்கு ‘தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கச்’ செய்தார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 11:3, 7-10; சங்கீதம் 94:20) J.F.ரதர்போர்ட்டும் (காவற்கோபுர சங்கத்தின் அன்றைய தலைமைப் பொறுப்பேற்றவர்) மற்றும் அவருடைய 7 கூட்டாளிகளும் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் ‘தீர்க்கதரிசனம் சொல்லும்’ விஷயத்தை பொறுத்தவரை இரண்டு சாட்சிகளும் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய சத்துருக்கள் களிகூர்ந்தார்கள். பிரசங்கிகள் ஆயுத பரிசு அளிக்கிறார்கள் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் ரே H. ஏப்ராம்ஸ் இவ்விதமாக குறிப்பிட்டிருந்தார்: “[ரதர்போர்டையும் அவருடைய கூட்டாளிகளையும் உட்படுத்திய] முழு வழக்கையும் அலசி பார்க்கும்போது [பைபிள் மாணாக்கர்களை] அழிப்பதற்காக செய்யப்பட்ட இயக்கத்துக்குப் பின்னால் ஆரம்பத்தில் இருந்தது சர்ச்சுகளும் குருமார்களுமே என்ற முடிவுக்கு வருகிறோம். . . . இருபது ஆண்டுகள் சிறைவாசம் இவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் பற்றிய செய்தி, திருச்சபை பத்திரிக்கை பதிப்பாசிரியர்களை எட்டியபோது, பெரிதும் சிறியதுமான இந்த பிரசுரங்களில் ஒவ்வொன்றும் உண்மையாகவே இந்த நிகழ்ச்சியைக் குறித்து களிக்கூர்ந்தது. ஆர்த்தடாக்ஸ் மதபத்திரிக்கைகளில் எந்த அனுதாப வார்த்தையையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.”
15 குறித்த காலத்துக்கு முன்பாகவே காவலில் வைக்கப்பட்டிருந்த எட்டு பைபிள் மாணாக்கர்களும் விடுவிக்கப்பட்டு, முழுவதுமாக குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். இது சாத்தானுக்கும் அவனுடைய ஆட்களுக்கும் கடும் ஏமாற்றமாக இருந்தது. தேவனுடைய ஜீவ ஆவியால் உயிர் பெற்றுக்கொண்ட “இரண்டு சாட்சிகளாக” அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த சிறிய படை மறுபடியுமாக ராஜ்ய அறிவிப்பாளர்களாக காலூன்றி நின்றது. (வெளிப்படுத்தின விசேஷம் 11:11) அப்போதிலிருந்து, இதுபோன்ற உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களுக்கு எதிராக யெகோவாவின் சத்துருக்கள் வெற்றி வாய்ப்பில்லா போராட்டத்தை போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
16. உத்தமத்தைக் காத்துக் கொண்ட ஒரு இளம் மனிதன் என்ன சொன்னான்?
16 இதை விளக்க: நாஸியில் துன்புறுத்துகிறவர்களின் கைகளில் மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த சமயம், ஒரு இளம் மனிதன் அவனுடைய குடும்பத்தாருக்கு எழுதிய தைரியமான வார்த்தைகளை கவனியுங்கள். அவன் பின்வருமாறு எழுதினான்: “இப்பொழுது நள்ளிரவுக்கும் மேலாகிவிட்டது. என் மனதை மாற்றிக்கொள்ள இன்னும் எனக்கு நேரமிருக்கிறது. ஆ! நான் நம்முடைய கர்த்தரை மறுதலித்துவிட்ட பின்பு இந்த உலகில் மறுபடியுமாக சந்தோஷமாக வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது! ஆனால் இப்பொழுது நான் சந்தோஷத்தோடும் சமாதானத்தோடும் இந்த உலகை விட்டு போகிறேன் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.” இது பலவீனமாக கோழைத்தனமாக, அடிக்கு அச்சங்கொண்டு உத்தமத்தை விட்டு விலகி விடுகிறவனின் வார்த்தைகளைப் போன்று தொனிக்கிறதா? நிச்சயமாகவே இல்லை!
17. சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் கைது செய்யப்பட்டது, அவர்களுடைய ராஜ்ய பிரசங்கிப்பு நடவடிக்கைகளின் மீது என்ன பாதிப்பை கொண்டிருந்தது?
17 யெகோவாவின் ஊழியர்களுடைய உத்தமத்தை தகர்க்க முயற்சிகள் தொடர்ந்து செய்ப்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக சோவியத் நாட்டில் மதம் என்ற தன்னுடைய புத்தகத்தில் இதழாசிரியர் வால்டர் கோலார்ஸ் 1951-ன் ஆரம்பத்தில் யெகோவாவின் சாட்சிகள் மொத்தமாக கைது செய்யப்பட்டதைப்பற்றி சொல்லிவிட்டு இவ்விதமாக குறிப்பிட்டிருந்தார்: “மொத்தமாக 7000 பேர் யூரல் மலைப்பகுதிக்கும், சைபீரியாவுக்கும் தொலைவான வடப்பகுதிக்கும் (வார்கூட்டா) மற்றும் களக்ஸ்டானுக்கும் நாடு கடத்தப்பட்டதாக சாட்சிகளே மதிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “இது ருஷ்யாவில் ‘சாட்சிகளின்’” முடிவாக இருக்கவில்லை. ஆனால் மதம் மாற்றும் அவர்களுடைய நடவடிக்கைகளில் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகவே இருந்தது. நாடு கடத்தப்படும்போது வழிநெடுக, இருப்பூர்தி நிலையங்களில் நின்றபோதும்கூட. அவர்களுடைய விசுவாசத்தை அவர்கள் பரப்ப முயற்சித்தார்கள். அவர்களை நாடு கடத்துவதில், சோவியத் அரசாங்கம், அவர்களுடைய விசுவாசத்தை எங்கும் பரப்புவதற்கு இதைவிட மேலான ஒன்றைச் செய்திருக்க முடியாது. கான்சன்ட்ரேஷன் மற்றும் அடிமை தொழிலாளிகளின் முகாம்களின் பயங்கரமான உலகமாக இருந்தாலும், அவர்கள் கிராமத்தில் தனியாக வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து அவர்கள் விரிவான ஒரு உலகினுள் கொண்டுவரப்பட்டார்கள்.” அங்கு யெகோவாவின் ஊழியர்கள், கிளர்ச்சியூட்டிய ராஜ்ய செய்தியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட அநேகரை கண்டார்கள்.—அப்போஸ்தலர் 11:19-21 ஒப்பிடவும்.
வெற்றிச் சிறந்த ஒரு சேனையைப் போல
18, 19. உத்தமத்தைக் காத்துக் கொள்கிறவர்களாக வெற்றி பெறுவது எப்படி கூடிய காரியமாகும்?
18 கடவுளுடைய ஜனங்கள் துன்புறுத்தப்படுவது இன்று வரையாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆகவே யெகோவாவின் சாட்சிகள் உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களாக வெற்றி சிறப்பது எப்படி கூடிய காரியமாக இருக்கும்? நாம் அவ்விதமாகச் செய்ய முடியும். ஏனென்றால் நாம் கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறோம். ‘நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்ததறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாக’ நாம் இருக்கிறோம். யெகோவாவின் உண்மைத் தவறாத சாட்சிகளாக நாம் ‘இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகி’ இருக்கிறோம். யெகோவாவுக்கு பிரியமானதை நாம் சந்தோஷத்தோடே செய்கிறோம். அவர், பேய் மற்றும் மானிட சத்துருக்களின் மீது நமக்கு வெற்றியைத் தருகிறார்.—எபிரெயர் 5:12-14; ரோமர் 12:1, 2.
19 “யெகோவாவுடையவர்களாக” இருக்கும் நாம் வெற்றி சிறக்கும் ஒரு சேனைக்கு ஒப்பிடப்படலாம். ஆனால் நம்முடையது ஒரு ஆவிக்குரிய போராட்டமாக இருக்கிறது. நாம் தொடர்ந்து கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட்டு வருகிறோம். நாம் தேவனிடமிருந்து வரும் சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய பரிசுத்த ஆவி நமக்கு பக்கபலமாக இருக்கிறது. அதன் காரணமாகவே நாம் ‘பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாயி’ருக்கிறோம். (எபேசியர் 6:10-20; 2 கொரிந்தியர் 10:3, 4) ஆம், அதன் காரணமாகவே உத்தமத்தைக் காத்துக் கொள்கிறவர்களாக நாம் தொடர்ந்து வெற்றி பெறுவோம்.
20. நம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள உழைக்கையில் நமக்கு என்ன உதவியும் உறுதியும் இருக்கிறது?
20 நிச்சயமாகவே நாம் தனிச்சிறப்பான ஒரு இராணவ படையாக இருக்கிறோம். ஏன், நம் மத்தியில் “நற்செய்தியை அறிவிக்கிற பெண்கள் ஒரு பெருஞ் சேனை.” (சங்கீதம் 68:11, NW) நாம் அதிக வல்லமை வாய்ந்த சத்துருக்களை எதிர்பட்டாலும் ‘அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகமாக’ இருக்கிறார்கள். (2 இராஜாக்கள் 6:16) நாம் பூமியின் குடிமக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கையில், தேவதூதர்கள் நம்மோடேகூட இருக்கிறார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 14:6) உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்களாக, ‘நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.—ஏசாயா 54:17.
21. நாம் அனுபவிக்கும் துன்புறுத்தலின் மத்தியிலும் எது தொடர்ந்து நடந்து வருகிறது?
21 யுத்தம் ஆரம்பமாகிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. சாத்தானின் சேனைகள் சாட்சி கொடுக்கும் நம்முடைய வேலையை நிறுத்திவிட தீர்மானமாக இருக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து ‘நல்ல போராட்டம் பண்ண’ வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. (1 தீமோத்தேயு 1:18) மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை நம்முடைய சேனாதிபதியாகவும் தலைவராகவும் கொண்டு நாம் ஒவ்வொருவரும் ‘இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாய்” இருப்போமாக. (2 தீமோத்தேயு 2:3, 4) நாம் எல்லா பக்கத்திலும் தாக்கப்பட்டாலும், கடவுளுடைய தகுதியற்ற தயவினால் உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களாக உறுதியாக நிற்கவேண்டும். நாம் அவ்விதமாக நிற்போம். அதிகரிப்புக்கு மேல் அதிகரிப்பை நாம் காணும்போது நம்முடைய முகங்கள் பிரகாசமாக இருக்கின்றன. அதிகதிகமான எண்ணிக்கையில் சகல ஜாதிகளிலிருந்தும் விரும்பப்பட்டவர்கள் வந்து யெகோவாவின் வீட்டை மகிமையினால் நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். (ஆகாய் 2:7) துன்புறுத்தல், சிறையிருப்பு, அடிகள், பல்வேறு தேசங்களில் நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருத்தல், நம்முடைய வாயை அடக்க மும்முரமான முயற்சி ஆகியவற்றின் மத்தியிலும் மகத்தான சீஷராக்கும் வேலை தொடர்ந்து செய்யப்பட்டும் அதன் வேகம் அதிகரித்தும் வருகிறது.—மத்தேயு 24:14; 28:19, 20.
22. யெகோவாவுடையவர்களாக நாம் என்ன செய்ய வேண்டும்?
22 யெகோவாவுக்கு துதியின் தொனி அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, அது பூமியிலுள்ள ஒவ்வொருவருக்கும் தீர்மானம் எடுக்க வேண்டிய சமயமாக இருக்கிறது. நற்செய்தியை பரப்புவதற்கும் மெய் வணக்கத்தை தழுவிக் கொள்பவர்களுக்கு கற்பிப்பதற்கும் நாம் எவ்வளவு சிலாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம்! ஆகவே “திரள் கூட்டம்” பெரிதாகும்போது நாம் மகா உன்னதமான தேவனின் ஊக்கந்தளராத ஊழியர்களாக தொடர்ந்து செயல்படுவோமாக. (வெளிப்படுத்தின விசேஷம் 7:9) பிழைத்தாலும் மரித்தாலும் நாம் “யெகோவாவுடையவர்களாய்” இருக்கிறோம். ஆகவே நம்முடைய வாழ்க்கையின் இலக்கை நோக்கி தொடர்ந்து செல்வோமாக. உத்தமத்தை காத்துக் கொள்வதன் மூலம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும் நம்முடைய மகத்தான சிலாக்கியத்துக்காக எப்போதும் நாம் நன்றியுள்ளவர்களாயிருப்போமாக! (w86 2/1)
உங்களால் பதிலளிக்கமுடியுமா?
◻ உத்தமம் என்றால் என்ன?
◻ உத்தமத்தைக் காத்துக் கொள்வது யெகோவாவின் ஜனங்களிடம் என்ன காரியங்களை கேட்கிறது?
◻ நாம் உத்தமத்தை காத்துக்கொள்வது கடவுளுக்கு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது என்பது எவ்விதமாக காட்டப்படலாம்?
◻ கடந்த காலங்களில் சிலர் என்ன விதங்களில் உத்தமத்தை காத்துக் கொள்பவர்களாக தங்களை காண்பித்தார்கள்?
◻ இன்று யெகோவாவின் சாட்சிகள் உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களாய் இருப்பது எப்படி கூடியகாரியமாயிருக்கிறது?
[பக்கம் 11-ன் படம்]
இன்று யெகோவாவின் ஊழியர்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் அவருடைய சாட்சிகளின் நீண்டதோர் அணியின் பாகமாக இருக்கிறார்கள். நீங்கள் அவர்கள் மத்தியில் இருக்கிறீர்களா?
ஏனோக்கு
சாராள்
யெப்தா
பவுல்