“மக்களே, யாவைத் துதியுங்கள்!”
“சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.”—சங்கீதம் 150:6, தி.மொ.
1, 2. (அ) உண்மை கிறிஸ்தவம் எந்த அளவுக்கு முதல் நூற்றாண்டில் செழித்தோங்கியது? (ஆ) என்ன முன்னெச்சரிக்கையை அப்போஸ்தலர்கள் அளித்திருந்தனர்? (இ) விசுவாசதுரோகம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது?
இயேசு தம்முடைய சீஷர்களை கிறிஸ்தவ சபையாக ஒழுங்கமைத்தார், முதல் நூற்றாண்டில் அது செழித்தோங்கியது. கடும் எதிர்ப்பின் மத்தியிலும், ‘அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வந்தது.’ (கொலோசெயர் 1:23) ஆனால் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களின் இறப்பிற்கு பின்னர் சாத்தான் தந்திரமாக விசுவாசதுரோகத்தைத் தூண்டினான்.
2 இதைக் குறித்த முன்னெச்சரிக்கையை அப்போஸ்தலர்கள் அளித்திருந்தனர். உதாரணமாக, எபேசுவிலிருந்து வந்த மூப்பர்களிடத்தில் பவுல் கூறினார்: “உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய குமாரனின் ரத்தத்தினாலே வாங்கிய தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக நியமித்த முழு மந்தையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே நுழைந்து, மந்தையைக் கனிவோடு நடத்தாது, உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்வதற்காக மாறுபாடான காரியங்களைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 20:28-30, NW; இவற்றையும் காண்க: 2 பேதுரு 2:1-3; 1 யோவான் 2:18, 19.) இவ்வாறாக, நான்காம் நூற்றாண்டில், விசுவாசதுரோக கிறிஸ்தவம் ரோம சாம்ராஜ்யத்துடன் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்க ஆரம்பித்தது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், மனிதவர்க்கத்தின் பெரும் பகுதியைப் பரிசுத்த ரோம சாம்ராஜ்யம் ரோமிலிருந்த போப்புடன் தொடர்புகொண்டு ஆளத் தொடங்கியது. காலப்போக்கில், கத்தோலிக்க சர்ச்சின் பொல்லாத, வரம்புகடந்த செயல்களுக்கு எதிராக புராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கம் கலகஞ்செய்தது, ஆனால் மெய் கிறிஸ்தவத்தை மீண்டும் நிலைநாட்ட தவறியது.
3. (அ) எப்போது மற்றும் எப்படி சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டது? (ஆ) பைபிள் சார்ந்த என்ன எதிர்பார்ப்புகள் 1914-ல் ஈடேறின?
3 இருந்தபோதிலும் 19-ம் நூற்றாண்டின் இறுதி நெருங்குகையில், பைபிள் மாணாக்கரின் உண்மையுள்ள ஒரு தொகுதியினர் மீண்டும் சுறுசுறுப்பாகப் பிரசங்கித்துக்கொண்டும், ‘சுவிசேஷத்தின் நம்பிக்கையை வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்’ விரிவாக்கிக்கொண்டும் இருந்தனர். பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பமான ‘தேசங்களின் குறிக்கப்பட்ட காலங்கள்,’ “ஏழு காலங்கள்” அடங்கிய ஒரு காலப்பகுதியின் அல்லது 2,520 ஆண்டுகளின் முடிவை, 1914 குறித்துக்காட்டுவதாக இந்த பைபிள் மாணாக்கர் தொகுதியினர் 30 வருடங்களுக்கு முன்னதாகவே, தாங்கள் படித்த பைபிள் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டினர். (லூக்கா 21:24; தானியேல் 4:16) அவர்களின் எதிர்பார்ப்பு ஈடேறிய விதத்தில், பூமியில் மனித விவகாரங்களின் திருப்புமுனையாக 1914 நிரூபித்தது. வரலாறு படைத்த சம்பவங்கள் பரலோகத்திலும் நடந்தேறின. அப்போதுதான், நித்திய ராஜா தம்முடைய உடன் அரசராகிய இயேசு கிறிஸ்துவைப் பரலோக சிங்காசனத்தில் ஏற்றினார்; இந்தப் பூமியிலிருந்து எல்லா பொல்லாத்தனத்தையும் அகற்றிவிட்டு, பரதீஸை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான முன்னேற்பாடாக அது இருந்தது.—சங்கீதம் 2:6, 8, 9; 110:1, 2, 5.
மேசியானிய ராஜாவைப் பாருங்கள்!
4. இயேசு, மிகாவேல் என்னும் தம்முடைய பெயரின் அர்த்தத்திற்குப் பொருத்தமாக எவ்வாறு வாழ்ந்தார்?
4 1914-ல் இந்த மேசியானிய ராஜாவாகிய இயேசு செயல்பட ஆரம்பித்தார். பைபிளில் அவருக்கு “கடவுளைப்போல் இருப்பவர் யார்?” என்ற அர்த்தமுள்ள பெயரும்கூட சூட்டப்பட்டுள்ளது, ஏனெனில் யெகோவாவின் உன்னத அரசாட்சியை நியாயநிரூபணம் செய்வதில் அவர் நோக்கம் கொண்டிருக்கிறார். வெளிப்படுத்துதல் 12:7-12-ல் பதிவுசெய்திருப்பதைபோல் அப்போஸ்தலன் யோவான் என்ன நடக்கும் என்று தரிசனத்தில் விவரித்தார்: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது; அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” உண்மையில், மாபெரும் ஒரு வீழ்ச்சியே!
5, 6. (அ) 1914-ஐ தொடர்ந்து, பரலோகத்திலிருந்து என்ன எழுச்சியூட்டும் அறிவிப்பு செய்யப்பட்டது? (ஆ) இதனுடன் எவ்வாறு மத்தேயு 24:3-13 இணைகிறது?
5 பின்னர் பரலோகத்தில் ஒரு பெருங்குரல் அறிவித்ததாவது: “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும் பொருட்டு, அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் [கிறிஸ்து இயேசுவின்] இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் [உண்மையுள்ள கிறிஸ்தவர்கள்] அவனை ஜெயித்தார்கள்.” இயேசுவின் அருமையான மீட்கும் பலியில் விசுவாசம் வைத்திருக்கிற உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்களுக்கு இது விடுதலையைக் குறிக்கிறது.—நீதிமொழிகள் 10:2; 2 பேதுரு 2:9.
6 வானத்திலே உண்டான அந்தப் பெருங்குரல் தொடர்ந்து அறிவித்தது: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருப்பவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” இவ்வாறு இந்தப் பூமிக்காகத் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருக்கிற இந்த “ஆபத்து” இந்த நூற்றாண்டில் பூமியை வருத்தியிருக்கிற உலகப் போர்களிலும் பஞ்சங்களிலும் கொள்ளை நோய்களிலும் பூமியதிர்ச்சிகளிலும் அக்கிரமத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. மத்தேயு 24:3-13 (NW) விவரிப்பதுபோல, ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவிற்கான அடையாளத்தின்’ பாகமாக இவை இருக்கும் என்பதாக இயேசு முன்னறிவித்தார். தீர்க்கதரிசனம் முன்னுரைத்தவாறே, மனிதவர்க்கமானது முந்தைய மனித சரித்திரத்திலேயே முன்னொருபோதும் நடந்திராத ஆபத்தை 1914-லிருந்து அனுபவித்திருக்கிறது.
7. அவசரத்தன்மையோடு ஏன் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிறார்கள்?
7 சாத்தானிய ஆபத்திலிருக்கும் இந்தச் சகாப்தத்தில், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை மனிதவர்க்கம் கண்டடைய முடியுமா? ஏன், முடியுமே! மத்தேயு 12:21 இயேசுவைப் பற்றி சொல்கிறது: “அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள்.” தேசங்களின் மத்தியில் உள்ள அதிர்ச்சி தரும் நிலைமைகள் ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையினுடைய முடிவின் அடையாளத்தை’ மாத்திரம் குறிக்காமல், மேசியானிய ராஜ்யத்தின் பரலோக அரசராக ‘இயேசுவின் வந்திருத்தலைப் பற்றிய அடையாளத்தையும்’ குறிக்கின்றன. அந்த ராஜ்யத்தைப் பற்றி இயேசு மேலுமாகச் சொல்கிறார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் மகத்தான நம்பிக்கையை எந்த ஒரு ஜனத்தினர் இன்று பூமியில் பிரசங்கித்து வருகின்றனர்? யெகோவாவின் சாட்சிகளே! நீதியும் சமாதானமுமான கடவுளுடைய ராஜ்யம் பூமியின் விவகாரங்கள் மீது பொறுப்பேற்கும் என்பதை அவர்கள் அவசரத்தன்மையோடு, பொதுப்படையாகவும் வீடுவீடாகவும் அறிவிக்கிறார்கள். இந்த ஊழியத்தில் நீங்கள் பங்கேற்கிறீர்களா? உங்களுக்கு இதைவிட பெரிய சிலாக்கியம் வேறு ஏதும் கிடைக்காதே!—2 தீமோத்தேயு 4:2, 5.
“முடிவு” எப்படி வரும்?
8, 9. (அ) எவ்வாறு நியாயத்தீர்ப்பு ‘தேவனுடைய வீட்டிலே’ துவங்கியது? (ஆ) கிறிஸ்தவமண்டலம் எவ்வாறு கடவுளின் வார்த்தையை மீறியது?
8 நியாயத்தீர்ப்பின் காலப்பகுதியில் மனிதவர்க்கம் நுழைந்திருக்கிறது. 1 பேதுரு 4:17-ல் நாம் அறிவிக்கப்பட்டிருக்கிறோம், ‘நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்கும்’—1914-18-ல் முதல் உலகப் போர் கொன்று குவித்ததில் ஆரம்பமான “கடைசி நாட்கள்” முதற்கொண்டே வெளியரங்கமாயுள்ள கிறிஸ்தவ அமைப்புகள் என்று உரிமை பாராட்டினவற்றின் மீதான நியாயத்தீர்ப்பு துவங்கிவிட்டது. இந்த நியாயத்தீர்ப்பில் கிறிஸ்தவமண்டலம் எவ்வாறு தேறியது? உண்மையில், 1914-லிருந்து போர்களை ஆதரிப்பதில் சர்ச்சுகளின் நிலைநிற்கையைச் சிந்தித்துப் பாருங்கள். பீரங்கி சுடும் வரம்பெல்லைகளிலிருந்து பிரசங்கித்த மதகுருமார்கள் ‘குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தத்தால்’ கறைபடிந்திருக்கிறார்கள் அல்லவா?—எரேமியா 2:34.
9 மத்தேயு 26:52-ன் பிரகாரம், இயேசு குறிப்பிட்டார்: “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.” இந்த நூற்றாண்டின் போர்களில் இது எவ்வளவு உண்மையாக இருக்கிறது! இளைஞர் இளைஞரைப் படுகொலை செய்யும்படி மதகுருமார்கள் தூண்டியிருக்கிறார்கள், தங்கள் சொந்த மதத்தினரையும்—கத்தோலிக்கர் கத்தோலிக்கரை கொல்லுகிறார்கள், புராட்டஸ்டன்டினர் புராட்டஸ்டன்டினரை கொல்லுகிறார்கள். கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் மேலாக தேசாபிமானம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில், சில ஆப்பிரிக்க தேசங்களில் பைபிள் நியமங்களைவிட இனப்பற்றுகளே முதலிடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. ருவாண்டாவில், மக்கள்தொகையில் பெரும்பான்மையர் கத்தோலிக்கர்கள், குறைந்தபட்சம் ஐந்து லட்ச ஆட்கள் இன வன்முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஸோஸிவதோரே ரொமெனோ என்ற வத்திகன் செய்தித்தாளில் போப் ஒப்புக்கொண்டார்: “இது முழுக்கமுழுக்க இன படுகொலையேதான், விசனகரமாக கத்தோலிக்கரும் இதற்குக் காரணம்.”—ஒப்பிடுக: ஏசாயா 59:2, 3; மீகா 4:3, 5.
10. என்ன நியாயத்தீர்ப்பை யெகோவா பொய் மதத்தின்மீது நிறைவேற்றுவார்?
10 மனிதர் ஒருவரையொருவர் கொல்வதற்கு உற்சாகப்படுத்தும் மதங்களை அல்லது அவற்றின் மந்தையில் உள்ள அங்கத்தினர்கள் மற்ற அங்கத்தினர்களைக் கொலைசெய்வதை வெறுமனே பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கும் மதங்களை நித்திய ராஜா எவ்வாறு கருதுகிறார்? உலகளாவிய பொய் மத அமைப்பாகிய மகா பாபிலோனைக்குறித்து வெளிப்படுத்துதல் 18:21, 24 நமக்கு சொல்கிறது: “பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த்தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும், தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.”
11. கிறிஸ்தவமண்டலத்தில் என்ன பயங்கரமான காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன?
11 பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, பயங்கரமான காரியங்கள் கிறிஸ்தவமண்டலத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. (ஒப்பிடுக: எரேமியா 5:30, 31; 23:14.) பெரும்பாலும் மதகுருமாரின், எதையும் அனுமதிக்கும் மனநிலையின் காரணமாக, அவர்களின் மந்தைகளில் பாலுறவு ஒழுக்கக்கேடு பரவியிருக்கிறது. கிறிஸ்தவ நாடாக இருக்கவேண்டிய ஐக்கிய மாகாணங்களில், அனைத்து திருமணங்களிலும் கிட்டத்தட்ட பாதி விவாகரத்தில் முடிகின்றன. இளம்வயதில் கருத்தரித்தலும் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியும் சர்ச் அங்கத்தினர்கள் மத்தியில் மிதமிஞ்சி இருக்கின்றன. பாதிரிமார் சிறார்களைப் பாலியல் சம்பந்தமாகத் துர்ப்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் வெறும் சொற்ப எண்ணிக்கை அல்ல. இந்த வழக்குகள் உட்படுத்தும் நீதிமன்ற தீர்வுகளை நாடுவதில் ஐக்கிய மாகாணங்களிலுள்ள கத்தோலிக்க சர்ச்சுக்கு ஒரு பத்தாண்டிற்குள் ஆகக்கூடிய செலவு நூறு கோடி டாலர்கள் என்பதாகச் சொல்லப்பட்டது. 1 கொரிந்தியர் 6:9, 10-ல் உள்ள அப்போஸ்தலன் பவுலின் எச்சரிக்கையைக் கிறிஸ்தவமண்டலம் அவமதித்திருக்கிறது: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும் கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”
12. (அ) மகா பாபிலோனுக்கு எதிராக நித்திய ராஜா எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்? (ஆ) கிறிஸ்தவமண்டலத்திற்கு நேர்மாறாக, என்ன காரணத்திற்காக கடவுளின் மக்கள் “அல்லேலூயா” பல்லவிகளைப் பாடுவார்கள்?
12 கூடிய சீக்கிரத்தில், நித்திய ராஜா, யெகோவா தம்முடைய பரலோக படைத் தளபதி கிறிஸ்து இயேசுவின் மூலம் செயல்படுகையில் மிகுந்த உபத்திரவத்தை அவிழ்த்துவிடுவார். முதலாவதாக, கிறிஸ்தவமண்டலமும் மகா பாபிலோனின் மற்ற எல்லா கிளைகளும் யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றத்தில் துன்புறும். (வெளிப்படுத்துதல் 17:16, 17) இயேசுவின் மீட்கும் பலியின் மூலம் யெகோவா ஏற்பாடு செய்திருக்கும் இரட்சிப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்பதைத் தாங்களாகவே வெளிக்காட்டிவிட்டனர். கடவுளுடைய பரிசுத்த பெயரை அவர்கள் அவமதித்திருக்கின்றனர். (எசேக்கியேல் 39:7-ஐ ஒப்பிடுக.) தங்களுடைய செல்வமிக்க மத ஸ்தலங்களில் அவர்கள் பாடும் “அல்லேலூயா” பல்லவிகள் என்னே ஒரு கேலிக்கிடமான செயல்! யெகோவாவினுடைய மதிப்புமிக்க பெயரை தங்கள் பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து அவர்கள் நீக்கிவிடுகின்றனர், ஆனால் “அல்லேலூயா” என்பதன் அர்த்தம் “யாவைத் துதி”—“யா” என்பது “யெகோவா” என்பதன் சுருக்கவடிவம் என்ற உண்மையை அறியார்கள் போலும். பொருத்தமாகவே, மகா பாபிலோன்மீது கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றுதலைக் கொண்டாடுகையில் விரைவில் பாடப்படும் “அல்லேலூயா” பல்லவிகளை வெளிப்படுத்துதல் 19:1-6 பதிவுசெய்கிறது.
13, 14. (அ) அடுத்ததாக என்ன முனைப்பான நிகழ்ச்சிகள் நடந்தேறின? (ஆ) கடவுள்-பயமுள்ள மனிதர்களுக்குச் சந்தோஷமான இறுதி பலன் என்னவாக இருக்கும்?
13 தேசங்கள் மீதும் மக்கள் மீதும் நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் அடுத்ததாக வரவிருப்பது இயேசுவின் ‘வருகை.’ அவர்தாமே தீர்க்கதரிசனமாக உரைத்தார்: “அன்றியும் மனுஷகுமாரன் [கிறிஸ்து இயேசு] தமது மகிமைபொருந்தியவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள [நியாயத்தீர்ப்பு] சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்போது சகல ஜனங்களும் [பூமியிலே] அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆதீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.” (மத்தேயு 25:31-34) வெள்ளாட்டு வகுப்பார் ‘நித்திய ஆக்கினையை அடைவார்கள்’ என்பதாக வசனம் 46 விவரிக்கிறது.
14 அந்தச் சமயத்தில், ‘ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா’ நம்முடைய பரலோக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அர்மகெதோன் போரில் சவாரிசெய்து, சாத்தானுடைய காரிய ஒழுங்குமுறையின் அரசியலையும் வர்த்தக துறைகளையும் எவ்வாறு அழித்துப்போடுவார் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் விவரிக்கிறது. இவ்வாறாக, சாத்தானின் பூமிக்குரிய ஆட்சி எல்லையின்மீது ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபத்தை’ கிறிஸ்து ஊற்றி முடித்திருப்பார். இந்த ‘முந்தினவைகள் ஒழிந்துபோகையில்’ மகிமையான புதிய உலகில் கடவுள்-பயமுள்ள மனிதர்களின் மேல் ஆசீர்வாதங்கள் பொழியப்படும், அதில் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்.”—வெளிப்படுத்துதல் 19:11-16; 21:3-5.
யாவைத் துதிப்பதற்கான காலம்
15, 16. (அ) யெகோவாவினுடைய தீர்க்கதரிசன வார்த்தைக்குச் செவிசாய்ப்பது ஏன் முக்கியம்? (ஆ) இரட்சிப்பிற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்று தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலரும் சுட்டிக்காட்டுகிறார்கள் மற்றும் கோடிக்கணக்கானோருக்கு இது எதை அர்த்தப்படுத்துகிறது?
15 நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான அந்த நாள் சமீபித்துவிட்டது! ஆகையால், நித்திய ராஜாவின் தீர்க்கதரிசன வார்த்தைக்குச் செவிசாய்ப்பது நமக்கு நல்லதாயிருக்கும். பொய் மதத்தின் போதனைகளிலும் பழக்கவழக்கங்களிலும் இன்னும் சிக்கியிருப்போருக்கு பரலோக குரல் ஒன்று அறிவிக்கிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” ஆனால் தப்பித்துக்கொள்வோர் எங்கே செல்லவேண்டும்? ஒரே ஒரு சத்தியம் மாத்திரம் இருக்க முடியும், எனவே ஒரே ஒரு உண்மை மதம் மாத்திரம் இருக்க முடியும். (வெளிப்படுத்துதல் 18:4; யோவான் 8:31, 32; 14:6; 17:3) அந்த மதத்தைக் கண்டுபிடிப்பதிலும், அதன் கடவுளுக்குக் கீழ்ப்படிவதிலும்தான் நாம் அடையவிருக்கும் நித்திய ஜீவன் சார்ந்திருக்கிறது. சங்கீதம் 83:17-ல் பைபிள் நம்மை அவரிடமாக வழிநடத்துகிறது, அது வாசிப்பதாவது: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்.”
16 இருப்பினும், நித்திய ராஜாவின் பெயரை வெறுமனே அறிந்திருப்பதைக் காட்டிலும் நாம் அதிகத்தைச் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. நாம் பைபிளைப் படித்து அவருடைய மகத்தான குணங்களையும் நோக்கங்களையும் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு ரோமர் 10:9-13-ல் (NW) குறிப்பிட்டிருப்பதைப் போன்றே இந்தக் காலத்திற்கான அவருடைய சித்தத்தை நாம் செய்யவேண்டும். ஏவப்பட்ட தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களை அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கோள்காட்டி முடிக்கிறார்: “யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள்.” (யோவேல் 2:32, தி.மொ.; செப்பனியா 3:9) இரட்சிக்கப்படுவதா? ஆம், சாத்தானுடைய ஊழல் நிறைந்த உலகின்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது, கிறிஸ்துவின் மூலம் யெகோவா செய்திருக்கும் மீட்பின் ஏற்பாட்டில் இன்று விசுவாசம் வைத்திருக்கும் கோடிக்கணக்கானோர், வரவிருக்கும் மகா உபத்திரவத்தில் காப்பாற்றப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 10, 14.
17. என்ன மகத்தான நம்பிக்கை நம்மை மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடுவதில் இப்பொழுது சேர்ந்துகொள்ள தூண்ட வேண்டும்?
17 தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுள்ளவர்களுக்கு கடவுளுடைய சித்தம் என்ன? நித்திய ராஜாவின் வெற்றியை எதிர்நோக்கி அவரைத் துதிக்கும் மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடுவதில் இப்போதே நாம் சேர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அவரின் சித்தம். அவருடைய மகத்தான நோக்கங்களை மற்றவர்களிடத்தில் சொல்வதன் மூலம் இதை நாம் செய்யலாம். பைபிளைப் புரிந்துகொள்வதில் நாம் முன்னேறுகையில், நித்திய ராஜாவுக்கு நமது வாழ்க்கையை ஒப்புக்கொடுப்போம். ஏசாயா 65:17-19-ல் இந்த வல்லமையுள்ள ராஜா விவரிக்கும் ஏற்பாட்டின் கீழ் நித்திய காலம் வாழ்வதற்கு அது வழிநடத்தக்கூடும்: “இதோ, நான் புதிய வானத்தையும் [இயேசுவின் மேசியானிய ராஜ்யத்தையும்] புதிய பூமியையும் [ஒரு நீதியான மனித சமுதாயத்தையும்] சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதில் தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.”
18, 19. (அ) சங்கீதம் 145-ல் உள்ள தாவீதின் வார்த்தைகள் என்ன செய்ய நம்மை தூண்ட வேண்டும்? (ஆ) யெகோவாவின் கையிலிருந்து எதை நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்?
18 சங்கீதக்காரனாகிய தாவீது நித்திய ராஜாவை இவ்வார்த்தைகளால் விவரிக்கிறார்: “கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.” (சங்கீதம் 145:3) அவருடைய மகத்துவம் விண்வெளியின் மற்றும் நித்தியத்தின் எல்லையைப் போன்று தேடிக் காணக்கூடாததாய் இருக்கிறதே! (ரோமர் 11:33) நம் சிருஷ்டிகரைப் பற்றிய மற்றும் அவர் தமது குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் செய்திருக்கும் மீட்பின் ஏற்பாட்டை பற்றிய அறிவை நாம் தொடர்ந்து பெற்றுக்கொள்கையில், நம்முடைய நித்திய ராஜாவை அதிகமதிகமாகத் துதிப்பதற்கு விரும்புவோம். சங்கீதம் 145:11-13 குறிப்பிடுவதைப்போல செய்ய விரும்புவோம்: “மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.”
19 “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்,” என்ற வாக்கைக் குறித்ததில் நம் கடவுள் உண்மையுள்ளவராக இருப்பார் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். இந்தக் கடைசி நாட்களின் முடிவினூடே நித்திய ராஜா நம்மை கனிவாக வழிநடத்திச் செல்வார், ஏனென்றால் தாவீது பின்வருமாறு நமக்கு உறுதியளித்தார்: “கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.”—சங்கீதம் 145:16, 20.
20. கடைசி ஐந்து சங்கீதங்களில் தொனிப்பதைப்போன்று, நித்திய ராஜாவின் அழைப்பிற்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்?
20 பைபிளின் கடைசி ஐந்து சங்கீதங்கள் ஒவ்வொன்றும் “அல்லேலூயா” என்ற அழைப்போடு துவங்கி அதே அழைப்புடன் முடிவடைகின்றன. இவ்வாறாக, சங்கீதம் 146 (தி.மொ.) நம்மை அழைக்கிறது: “அல்லேலூயா [“மக்களே, யாவைத் துதியுங்கள்!” NW], என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. நான் உயிரோடிருக்குமளவும் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் கடவுளைத் துதிபாடுவேன்.” அந்த அழைப்பிற்கு நீங்கள் பதிலளிப்பீர்களா? நிச்சயமாகவே அவரைத் துதிப்பதற்கு நீங்கள் விரும்ப வேண்டும்! சங்கீதம் 148:12, 13-ல் (தி.மொ.) விவரிக்கப்பட்டுள்ள ஆட்களின் மத்தியில் நீங்கள் இருப்பீர்களாக: “வாலிபரே, கன்னிகைகளே, முதியோரே, இளையோரே, துதியுங்கள். அவர்கள் யெகோவா திருநாமத்தைத் துதிப்பார்களாக; அவர் திருநாமமே உயர்ந்தது; அவர் மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.” “மக்களே, யாவைத் துதியுங்கள்!” என்ற இந்த அழைப்பிற்கு முழு இருதயத்தோடு நாம் பிரதிபலிப்போமாக. நம் நித்திய ராஜாவை ஒத்திசைவோடு துதிப்போமாக!
உங்கள் குறிப்பு என்ன?
◻ இயேசுவின் அப்போஸ்தலர்கள் எதை முன்னெச்சரித்தார்கள்?
◻ 1914-ன் துவக்கத்திலிருந்து, என்ன தீர்மானமான நடவடிக்கைகள் நடந்தேறியிருக்கின்றன?
◻ என்ன நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றும் தறுவாயில் யெகோவா இருக்கிறார்?
◻ ஏன் நித்திய ராஜாவைத் துதிப்பதற்கு இந்தக் காலம் என்றுமில்லா முக்கியத்துவம் உடையதாய் இருக்கிறது?
[பக்கம் 19-ன் பெட்டி]
குழப்பமிக்க இந்தப் பேரழிவுக்குரிய சகாப்தம்
20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குழப்பமிக்க சகாப்தம் உதயமானது என்று அநேகரால் ஆமோதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 1993-ல் பிரசுரிக்கப்பட்ட, ஐ.மா.-வின் ஆட்சிமன்ற உறுப்பினராகிய டேனியல் பேட்ரிக் மோய்நெஹானால் எழுதப்பட்ட பான்டெமோனியம் என்ற ஆங்கில புத்தகத்தின் முகப்புரையில் “1914-ன் பேரழிவு” என்பதன் பேரிலுள்ள குறிப்பு இவ்வாறு வாசிக்கிறது: “போர் வந்தது, உலகம் முற்றிலுமாக மாறியது. பூமியில் 1914-ல் இருந்த எட்டு தனியுரிமை நாடுகளே இன்னும் இருக்கின்றன, அன்றிலிருந்து அவற்றின் ஆட்சி முறை வன்முறையினால் மாற்றப்படவில்லை. . . . சமகால தனியுரிமை ஆட்சி நாடுகளில் மீதமிருக்கும் ஏறத்தாழ 170 நாடுகளும், வெகு சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சில நாடுகளும் தற்போதைய குழப்பத்தை அதிகம் அனுபவிக்கின்றன.” மெய்யாகவே, 1914 முதற்கொண்டே இந்தச் சகாப்தம் பேரழிவுக்குமேல் பேரழிவைக் கண்டிருக்கிறதே!
கட்டுப்பாடு மீறி—இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூலோக குழப்பம் (ஆங்கிலம்) என்ற புத்தகமும் 1993-ல் பிரசுரிக்கப்பட்டது. இதன் ஆசிரியர் ஐ.மா. தேசிய பாதுகாப்பு அவையின் முன்னாள் தலைவராகிய ஸூபிக்நெஃப் பிரேஷின்ஸ்கீ என்பவர். அவர் எழுதுகிறார்: “இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தை, காரியங்களை ஆய்ந்து முடிவுசெய்யும் சகாப்தத்தின் உண்மையான துவக்கம் என்று பல புகழாரங்கள் சூட்டப்பட்டன. . . . அதன் வாக்குக்கு முரணாக, இருபதாம் நூற்றாண்டு மனிதவர்க்கத்தின், பெருமளவில் இரத்தம் சிந்திய, பகைமை நிறைந்த ஒரு நூற்றாண்டாக, அரசியலின் மற்றும் பெருமளவில் கொல்லுதலின் எண்ணத்தைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு நூற்றாண்டாக ஆனது. மனிதாபிமானமற்ற செயல்கள் முன்னொருபோதும் இல்லாத அளவில் திட்டமிடப்படுகின்றன, உயிர்க்கொல்லிகள் பெரிய அளவான உற்பத்தியின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டன. நன்மையை விளைவிக்கும் விஞ்ஞானத்தின் திறனுக்கும், உண்மையிலேயே ஏவிவிடப்படும் அரசியல் தீமைக்கும் உள்ள வேறுபாடு அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. வரலாற்றிலேயே முன்னொருபோதும் கொல்லுதல் உலகளாவிய அளவில் இவ்வளவு பரவலாக பரவியதேயில்லை, முன்னொருபோதும் இத்தனை அநேக உயிர்களை அது அழித்ததேயில்லை, முன்னொருபோதும் முரண்பாடான இலக்குகளின் நிமித்தம் அத்தகைய அகந்தையோடு மனிதனின் அழிவை இடைவிடாத முயற்சியுடன் பின்தொடர்ந்ததேயில்லை.” இது எவ்வளவு உண்மையாயிருக்கிறது!
[பக்கம் 17-ன் படம்]
1914-ல் ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், மிகாவேல் சாத்தானையும் அவனுடைய சேனையையும் பூமிக்குத் தள்ளினார்