“தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்”
“தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்.”—வெளிப்படுத்துதல் 14:7.
நாம் யாருக்குப் பயப்பட வேண்டும்? நிச்சயமாகவே அந்தச் சிவப்பு நிற வலுசர்ப்பமாகிய சாத்தானுக்கும் அவனுடைய பேய்கள் கூட்டத்துக்கும் அல்ல! 1914-ல் ராஜ்யம் பிறந்ததைத் தொடர்ந்து கிறிஸ்து இயேசு இவர்களைப் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார். ஆனால் சாத்தான் இங்கு பூமியில் தன்னுடைய கடைசி முயற்சியாகக் கடவுளுடைய நோக்கங்களை முறியடிப்பதற்குப் பயன்படுத்தும் அமைப்பை திருவெளிப்பாட்டின் தரிசனங்கள் அடுத்ததாக வெளிப்படுத்துகிறது. இந்தச் சித்தரிப்பில் மேம்பட்டிருப்பது இரண்டு மூர்க்கமான மிருகங்களும் குடிபோதையிலிருக்கும் மகாபாபிலோன் என்னும் ஒரு வேசியுமாகும். இவற்றைக் கண்டு நாம் பயப்படவேண்டுமா? பயப்படவேண்டியதில்லை. மாறாக யெகோவாவுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்குமே பயப்படவேண்டும், ஏனென்றால் அவர்களுடைய ராஜ்யம் சாத்தானின் மோசமான உலகத்தை இப்பொழுது கடைசி நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.—நீதிமொழிகள் 1:7; மத்தேயு 10:28; வெளிப்படுத்துதல் 12:9–12.
தூஷணமான மிருகங்கள்
2 வெளிப்படுத்துதலின் எட்டாம் தரிசனம் காட்சிக்கு வர, மனிதவர்க்கமாகிய கொந்தளிக்கும் கடலிலிருந்து ஏறிவருகிறது. அது ஏழு தலைகளையும், சாத்தானால் ஆளும் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் பத்து கிரீடங்களையுடைய பத்து கொம்புகளையும் கொண்டிருக்கிறது. அது யெகோவாவை தூஷிக்கிறது; ஒரு சிறுத்தை, கரடி, அல்லது சிங்கத்தைப் போன்று அவருடைய ஊழியர்களை அடித்து நொறுக்குகிறது. ஆனால் அதன் அதிகாரம் தற்காலிகமானதே, ஏனென்றால் அதை வலுசர்ப்பமாகிய சாத்தானிடமிருந்து பெற்றிருக்கிறது. அது சாத்தானுக்கு நெருங்க ஒத்திருக்கிறது. இதற்கு முன்பாகவே தானியேல் தீர்க்கதரிசி பூமிக்குரிய அரசியல் ஆட்சிமுறைகளை மிருகங்களாக விளக்கியிருக்கிறான். மற்றும் அரசாங்கங்கள்தாமே கொடிய விலங்குகளைத் தங்களுடைய தேசிய சின்னங்களாகத் தெரிந்துகொண்டிருக்கின்றனர், உதாரணமாக பிரிட்டிஷ் சிங்கம், அமெரிக்கக் கழுகு. (தானியேல் 8:5–8, 20–22) என்றாலும் பூமியில் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களை அடிக்கடி ஒடுக்கிவந்திருக்கும் பைபிள் சரித்திரத்தின் அனைத்து அரசியல் வல்லரசுகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு மிருகத்தை இப்பொழுது பார்க்கிறோம். இவற்றில் தலைசிறந்து விளங்கிய “தலைகள்” எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பெர்சியா, கிரீஸ், ரோம், மற்றும் கடைசியாக ஆங்கிலோ-அமெரிக்க இரட்டை வல்லரசு.—வெளிப்படுத்துதல் 1:1, 2; 12:3, 7–9.
3 1914-18 உலக மகா யுத்தத்தின்போது, ஏழாவது உலக வல்லரசாகிய மகா பிரிட்டன் தனக்கு ஆபத்தானதாயிருந்திருக்கும் “சாவுக்கேதுவான காயத்தைப்” பெற்றது. ஆனால் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் அவள் உதவிக்கு வந்தது. அதுமுதல், அமெரிக்காவும் பிரிட்டனும் இரட்டை உலக வல்லரசாக ஒன்றிணைந்து செயல்பட்டுவந்திருக்கிறது, இதைத்தான் யோவான் ஸ்தாபிக்கப்பட்ட மனித சமுதாயத்திலிருந்து, “பூமியிலுருந்து” வெளிவருகிற இரண்டு கொம்புகளுடைய மிருகம் என்று விவரிக்கிறான். இந்த இரண்டு கொம்புகளுடைய மிருகம் முதல் மூர்க்க மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணவும் அதற்கு உயிர் கொடுக்கவும் முன்னிலையிலிருந்து, இப்படியாக சர்வதேச சங்கத்துக்கும் அதன் வாரிசாகிய ஐக்கிய நாட்டு சங்கத்துக்கும் ஆங்கிலோ அமெரிக்க உலக வல்லரசு எப்படி பிரதான சிபாரிசு ஏதுவாகவும் உயிரூற்றாகவும் ஆனது என்பதைச் சித்தரிக்கிறது. முதல் மூர்க்க மிருகத்துக்கு 666 என்ற ஒரு எண்ணடங்கிய நாமம் இருக்கிறது. ஆறு ஓர் அபூரண எண்—பைபிள் பரிபூரண எண்ணாகிய ஏழுக்குக் குறைவு—இப்படியாக மும்முறை ஆறு என்ற நிலை இன்றைய மனித ஆட்சியாளர்களின் அபூரணத்தன்மை அதிக வருத்தத்திற்குரிய நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் அரசாங்கத்திற்கு மதிப்புக்கொடுத்து தாங்கள் வாழும் தேசத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில் முன்மாதிரிகளாயிருப்பினும், அவர்கள் அந்த “மூர்க்க மிருகத்தை”யோ அல்லது அதன் சொரூபத்தையோ வணங்குவதைத் தைரியமாக மறுக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 13:3–18; ரோமர் 13:1–7.
தேவனுக்குப் பயப்படுங்கள்—ஏன்?
4 தற்சமயத்துக்கு, அந்த மிருகங்களைப்பற்றியது போதும்! எதிர்மாறாக புத்துயிரளிக்கும் விதத்தில், ஒன்பதாம் தரிசனம் ஆட்டுக்குட்டியானவரிடமாகக் கவனத்தைத் திருப்புகிறது. அவர் சீயோன் மலையில் மனிதவர்க்கத்திலிருந்து முதற் பலன்களாகத் தாம் கிரயத்துக்குக்கொள்ளும் 1,44,000 பேருடன் நிற்கிறார். இவர்களில் சிலர் இன்னும் பூமியில் சேவித்துக் கொண்டிருந்தாலும், ஆவிக்குரிய கருத்தில் எல்லா 1,44,000 பேரும் “சீயோன் மலையினிடத்திற்கும் . . . பரம எருசலேமினிடத்திற்கும் . . . வந்து சேர்ந்தார்கள்.” (எபிரெயர் 12:22) பொருத்தமாகவே, 24 மூப்பர்களும் இங்கு கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்பாகக் காணப்படுகிறார்கள், ஏனென்றால் இவர்கள் இன்னொரு நோக்குநிலையில்—ஏற்கெனவே, உயிர்த்தெழுப்பப்பட்டு அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் அமர்த்தப்பட்டவர்களாய்— அதே அபிஷேகம்பண்ணப்பட்ட தொகுதிக்குப் படமாக இருக்கின்றனர். அந்த 1,44,000 பேர் “புதுப்பாட்டைப்” பாடுகிறார்கள். இது ராஜ்ய சுதந்தரவாளிகளாவதற்குப் பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதன் தனித்தன்மைவாய்ந்த அனுபவத்திலிருந்து உண்டாகிறது. திரள் கூட்டத்தாருங்கூட “யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடு”கிறார்கள், ஆனால் இது வித்தியாசப்படுகிறது, எப்படியெனில் இவர்கள் ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியில் நித்திய ஜீவனைப் பெறும் எதிர்பார்ப்போடு பாடுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9; 14:1–5; சங்கீதம் 96:1–10; மத்தேயு 25:31–34.
5 தரிசனம் இப்பொழுது விரிவடைகிறது. வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கிறதை யோவான் கண்டான். அவன் அறிவிக்கவேண்டிய மகிழ்ச்சியான செய்திகள்தான் என்னே! அது நித்திய நற்செய்தி, ஏனென்றால் கடவுளுடைய இந்த நியாயத்தீர்ப்பு வேளையில் சகல தேசத்திலும் கோத்திரத்திலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலுமிருந்து வரும் கடவுளுக்குக் கீழ்ப்படிகிற மக்களுக்கு நித்திய ஜீவனைக் குறிக்கிறது. யோவான் இப்பொழுதுதானே விளக்கிய அந்தக் கோரமான மிருகத்துக்கு முரணாக இந்த மகத்துவம் பொருந்திய கடவுள் ஏன் வணங்கப்படக்கூடாது, ஆம், தொழுதுகொள்ளப்படக்கூடாது? அவர்தாமே வானத்தையும் பூமியையும் படைத்தார். அவர்தாமே உயிருள்ளதும் உயிரற்றதுமான எல்லாவற்றுக்கும் ஊற்றுமூலர். எனவே “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்,” என்று தேவதூதன், அதிகாரத்தோரணையில் கட்டளையிடுவதற்குப் பலமான காரணம் இருக்கிறது! தேவதூதனின் குரல் பூமி முழுவதும் கேட்கப்படுகிறது, அவனுடைய எழுப்புதலான அழைப்பை யெகோவாவின் சாட்சிகள் மனிதவர்க்கத்தினர் அனைவருக்கும் ஏறக்குறைய 200 மொழிகளில் எதிரொலிக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 14:6, 7; ஏசாயா 45:11, 12, 18.
மகா பாபிலோனின் வீழ்ச்சி
6 வேறொரு தூதன் தோன்றுகிறான். ஆம், அவன் மலைக்கவைக்கும் அதிர்ச்சிகொண்ட செய்தியை அறிவிக்கிறான்: “பாபிலோன் மகா நகரம் [மகா பாபிலோன், NW] விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே!” (வெளிப்படுத்துதல் 14:8) தேசங்களைக் கெடுத்து அவர்களைப் போதையில் ஆழ்த்தவல்ல இந்த மகா பாபிலோன் யார்?
7 பூர்வ பாபிலோன் பொய் மதத்தின் பிறப்பிடமாக இருந்தது, இது பூமி முழுவதும் விஸ்தரித்து “மகா பாபிலோன்” என்று பொருத்தமாகப் பெயர் சூட்டப்பெற்ற ஒரு பேய்த்தன உலகப் பேரரசாக ஆனது. காலப்போக்கில் அந்த மதப் பேரரசில் ரோம் பிரபலமான இடத்தைப் பெற்றது, ஏனென்றால் ரோம் ஆட்சியின் கீழ்தான் விசுவாச துரோக கிறிஸ்தவம் வளர்ந்தது. ரோம் தொடர்ந்து பாபிலோனிய மதத்தின் உலக மையமாக இருந்து வருகிறது. இது 1986-ல் தெளிவாகத் தெரிந்தது, ஐக்கிய நாட்டு சங்கம் அறிவித்த சர்வதேச சமாதான ஆண்டின் சார்பாக ஜெபிப்பதற்கு ரோமின் போப் விடுத்த அழைப்பை ஏற்று அவரோடு ரோமுக்கு அண்மையில், அதாவது அஸிஸியில் ஒன்றுகூடினர்.
8 என்றபோதிலும், மகா பாபிலோனுக்கு மகா வீழ்ச்சி! உலக முழுவதும் பொய்மதத்துக்கு இருந்துவரும் ஆதரவு 1919 முதல் குறைந்துவருவதிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. நாத்திகக் கம்யூனிசம் இப்பொழுது பூமியின் பேரளவான பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்குப் பரிணாமவாதம் கற்பிக்கப்படுகிறது, இது கடவுளுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கிறது. புராட்டஸ்டாண்ட் மத ஐரோப்பாவில் வெகு சிலரே சர்ச்சுக்குப் போகின்றனர், மற்றும் அலைமோதுகிற போப் கத்தோலிக்க சாம்ராஜ்யத்தை ஒன்றாகக் கட்டிக் காக்கப் போராடுகிறார். உலக மதங்களின் பல்வேறு கடவுட்களை நோக்கி ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் பதிலளிக்கப்படாமல் போகிறது. ரூத் L. சிவார்டு பின்வருமாறு அறிக்கை செய்தார்: “1987-ல் 22 போர்கள் நடந்துகொண்டிருந்தன, பதிவு செய்யப்பட்ட சரித்திரத்தில் இதற்கு முன்னான எந்த ஓர் ஆண்டிலும் இருந்ததைவிட அதிகமான போர்கள். இந்தப் போர்களில் இதுவரை குறைந்தபட்சம் 22,00,000 உயிரிழந்திருக்கின்றனர்—இந்த எண்ணிக்கை வேகமாக உயருகிறது.”a அந்த அஸிஸி ஜெபக்கூட்டம் எந்தளவுக்குப் பலனற்றதாய் நிரூபித்துவிட்டது! அப்படியிருந்தும் போப் அந்தக் கூட்டத்தின் 1987-ம் ஆண்டு நிறைவுவிழாவைக் குறிக்கும் வகையில் தன்னுடைய சாயலை ஒரு பக்கத்திலும் அந்த ஜெபக்கூட்டத்தின் சின்னத்தை மறுபக்கத்திலும் கொண்ட ஒரு நாணயம் வெளியிட்டார். அவர்கள் “சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லிக்”கொண்டிருக்கிறார்கள்.—எரேமியா 6:14.
பாபிலோனின் வேசித்தனம் வெளியாகிறது
9 மகா பாபிலோன் ஒரு வேசி என்று வெளிப்படுத்துதல் 14:8 காண்பிக்கிறது. அவளுடைய குருவர்க்கம் தங்களுடைய ஒழுக்கங்கெட்ட வழிகளுக்கு பேர்போனது. தொலைக்காட்சி சுவிசேஷர்கள் தங்களுடைய மந்தையிடமிருந்து பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்கின்றனர், ஆனால் அதே சமயத்தில் அவர்கள் பயங்கரமான ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர். கத்தோலிக்கக் குரு சேவையும் வெகுவாக கேள்வியில் இருக்கிறது என்பது பென்சில்வேனியாவில் பிலடெல்பியாவின் தி பீக்கன் ஜர்னல் (The Beacon Journal), ஜனவரி 3, 1988 வெளியீடு குறிப்பிடுவதாவது: “ஐக்கிய மாகாணங்களில், கத்தோலிக்கப் பாதிரிமார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பிள்ளைகளைத் தவறாக நடத்திவந்திருக்கிறார்கள் என்று இது சம்பந்தப்பட்ட வழக்குகளில் உட்பட்ட பெற்றோரும், உளநூலறிஞரும், காவல் துறையினரும் வழக்கறிஞரும் கூறுகின்றனர்.” பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கங்கெட்ட நடத்தை மகா பாபிலோனின் குருவர்க்கத்தினரில் பலருடைய புகழைக் கெடுத்துவிட்டிருக்கிறது.
10 என்றாலும், “தன் வேசித்தனமாகிய உக்கிரமான மது,” குறிப்பாக பொய்மதம் ஆட்சியாளர்களில் காதல் கொள்வதையும், அவர்களுடைய அரசியல் திட்டங்களையும் போர்களையும் ஆதரிப்பதையும் மூர்க்க மிருகத்தின் ஏதாவது தேசிய பாகத்தை வணங்கும்படியாக வற்புறுத்துவதையும் குறிப்பிடுவதாயிருக்கிறது. அரசியல்வாதிகள் தங்களுடைய திட்டத்தை நிறைவேற்ற மதம் ஒரு பயனுள்ள துணையாய் இருப்பதாகக் கண்டிருக்கின்றனர் என்பது 1933-ல் வத்திக்கனுடன் செய்யப்பட்ட ஹிட்லரின் ஒப்பந்தத்திலும், 1935-36 ஸ்பானிய உள்நாட்டுப் போரிலும் புலப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது இரு பக்கத்துக் கத்தோலிக்கர், புராட்டஸ்டாண்டினர், புத்த மதத்தினர், மற்றும் மற்ற மதத்தினரின் குருவர்க்கத்தினர் தேசப்பற்றுடன்கூடிய போர் வெறியின் போதைவெறியிலிருப்பது போன்று நடந்துக்கொண்டனர். 1914 முதல் போர்களில் மாண்ட கோடிக்கணக்கான போர்வீரர்களின் மற்றும் பொதுமக்களின் இரத்தப்பழிக்குப் பெருமளவில் குற்றமுடையவர்களாயிருக்கின்றனர். பாஸிச மற்றும் நாசி கொள்கையினரை ஆதரித்துவந்த குருவர்க்கமும் மரண தண்டனை அளிக்கப்பட்ட அல்லது கான்சன்ட்ரேஷம் முகாம்களில் மரித்த யெகோவாவின் சாட்சிகள் நிமித்தமும் மற்றவர்கள் நிமித்தமும் இரத்தப் பழிக்கு உட்பட்டவர்கள்.—எரேமியா 2:34; வெளிப்படுத்துதல் 18:3, 24.
11 கடந்த 74 ஆண்டுகளாக, உத்தமமான அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களும், அவர்களோடு எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டிருக்கும் திரள் கூட்டத்தாரும் தொடர்ந்து தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். மூர்க்க மிருகத்தின் எந்த ஒரு தேசிய பாகத்தையும் வணங்குவதை நாம் உறுதியாக மறுத்துவிட்டோம். அந்த மிருகத்தின் சொரூபத்தை—சர்வ தேச சங்கத்தையும் ஐக்கிய நாட்டு சங்கத்தையும்—மகிமைப்படுத்த மறுத்துவிட்டோம், ஏனென்றால் “நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவாவுக்கும், NW] அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யம்” மட்டுமே உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் என்று உணருகிறோம். நாம் “தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும்” கைக்கொள்ள தீர்மானமாயிருக்கிறோம். அந்தச் சகிப்புத்தன்மைக்குரிய பலன் உண்டு! “கர்த்தருக்குள் மரிக்கிற” அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் சந்தோஷமுள்ளவர்களாக எண்ணப்பட்டிருக்கின்றனர், ஏனென்றால் “அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்.” திரள் கூட்டத்தாரில் யாராவது துன்புறுத்தலினால், வியாதியால் அல்லது விபத்தால் மரிக்க நேரிட்டால், கடவுளுடன் வளர்த்திருக்கும் நட்புதானே அவர்களுக்கு “புதிய பூமி” சமுதாயத்தில் பூமிக்குரிய உயிர்த்தெழுதலை உறுதியளிக்கிறது. இந்த மகத்தான எதிர்பார்ப்புகள் தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துவதற்கு நமக்கு பலமான காரணம் அளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:15, 17; 12:10; 14:9–13; 21:1.
12 நியாயத்தீர்ப்பு தொடர, தேவதூதன் இரண்டு அறுப்புகளுக்கான அழைப்பைக் கொடுக்கிறான். முதல் அறுப்பு செய்பவர் 1914 முதல் ராஜ்ய மகிமையில் வீற்றிருக்கும் இயேசு என்பது தெளிவாக இருக்கிறது. ஏனென்றால் அவர் ஒரு வெள்ளை மேகத்தின்மேல் முடிசூட்டப்பட்டவராய் “மனுஷகுமாரனுக்கொப்பானவராய்” இருக்கிறார். இப்பொழுது, கர்த்தருடைய நாளில், அவர் பூமியின் விளைவை அறுவடை செய்கிறார்; முதலாவதாக அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களையும் பின்பு இலட்சக்கணக்கான திரள் கூட்டத்தாரையும் அறுவடை செய்கிறார். (மத்தேயு 25:31–34; யோவான் 15:1, 5, 16-ஐ ஒப்பிடவும்.) முரணாக இரண்டாவது அறுப்பு “பூமியின் திராட்சப்பழங்கள்,” இவை “தேவனுடைய கோபாக்கினை என்னும் பெரிய ஆலையிலே” போடப்படுகிறது. இதுதான் அர்மகெதோனில் நிறைவேற்றப்படும் நியாயத்தீர்ப்பு. அப்பொழுது துன்மார்க்கமான சிக்கலான மனித சமுதாயம் வேரோடு பிடுங்கப்பட்டு, அதன் விஷக் கனிகள் முற்றுலும் பிழியப்படுகிறது. பூமியிலிருந்து இந்த விஷ திராட்சையை அகற்றிப்போடுவதற்காக யெகோவா மகிமைப்படுத்தப்படுவாராக!—வெளிப்படுத்துதல் 14:14–20; 16:14, 16.
“யெகோவா . . . நீதியும் சத்தியமுமானவர்”
13 வெளிப்படுத்துதலின் பத்தாவது தரிசனத்தில் கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன் உன்னத மகிமைபொருந்திய சம்பவங்கள் நடப்பதை நாம் மறுபடியும் காண்கிறோம். அவருடைய பிரசன்னத்தைச் சூழ என்னே மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு! உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்—தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்தியதால் வெற்றிசிறந்து வந்தவர்கள்—மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடுகிறார்கள்: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய யெகோவாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். யெகோவாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின.” கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் உண்மையிலேயே நீதியும் சத்தியமுமானவை என்பது இந்தத் தரிசனம் முழுவதும் தெளிவாகத் தெரிவிக்கப்படுகிறது! தேவதூதர்கள் கடவுளுடைய கோபாக்கினையின் ஏழு கலசங்களை ஊற்றுகின்றனர், இது சகல தேசங்களும் அர்மகெதோனுக்குக் கூட்டிச்சேர்க்கப்படுவதற்கு வழிநடத்துவதோடு, “மகா பாபிலோன் அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது” என்பதற்கு ஒரு நினைப்பூட்டுதலாகவும் இருக்கிறது! ஆம், தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள் என்ற அழைப்புக்குச் சரியான சமயம்.—வெளிப்படுத்துதல் 15:1–16:21.
14 மகா பாபிலோன் வெளிப்படுத்துதலில் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படும் நிலைக்கு வருகிறது. அவளை நாம் திரும்பவுமாக 11-வது 12-வது தரிசனங்களில் முக்கிய நபராகப் பார்க்கிறோம். அவள் “திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்து,” மக்களை அடக்கியாண்டுக்கொண்டும் தன்னுடைய விஷமுள்ள பொய்ப்போதனைகளைக் குடிக்கக்கொடுத்து போதையில் வைத்திருக்கிறாள். அவள்தாமே துன்புறுத்தல்களில் கொன்ற “பரிசுத்தவான்களின் இரத்தத்தினால்” வெறிகொண்டிருக்கிறாள். மற்றும் “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய” இரத்தப்பழியும் அவள்மீது இருக்கிறது, இதற்குக் காரணம், அவளுடைய வஞ்சனைமிகுந்த போர்ச்சதிப் போக்கு. பெரிய வியாபாரத்தோடு அவளுடைய வர்த்தக ஈடுபாடுகளும் மக்களிடம் வற்புறுத்தி பணம் தண்டுதலும் அவளுக்கு அநியாயமான செல்வத்தை ஏராளமாகச் சேர்த்துவிட்டிருக்கிறது. சமாதானம்-பாதுகாப்பு மிருகத்தில்—ஐ.நா.-வில்—சவாரி செய்யும் புகழ்நிலையைப் பெறுமளவுக்கு அவள் அரசியலுடன் காதல் உறவு கொண்டிருப்பது அவளை மிகுந்த பழிக்கு நீங்கலாக்கவில்லை. ஆனால் அந்த மிருகத்தின் இராணுவக் கொம்புகள்தாமே அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கிக் கொன்றுவிடப்போகிறது. தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துகிற எல்லாரும் அவளை விட்டுவிடுவதற்கு சரியான சமயமாகிவிட்டது, “ஏனென்றால் அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, இவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.”—வெளிப்படுத்துதல் 17:1–18:24.
15 எனவே மகா பாபிலோனின் அழிவு யெகோவாவிடமிருந்து வரும் நீதியான நியாயத்தீர்ப்பாக வருகிறது. இதற்குப் போற்றுதல் தெரிவிக்கும் பொருட்டு, யெகோவாவுக்கு இரட்சணியமும் மகிமையும் வல்லமையும் உரித்தாக்கும் வகையில் பரலோகத்திலும் பின்பு பூமியிலும் ‘அல்லேலூயாக்கள்’ ஒலிக்கின்றன. “ஜனங்களே, யாவைத் துதியுங்கள்!” என்ற இந்தப் பல்லவி மகா வேசிக்கு வந்த நித்திய அழிவின்பேரில் மிகுந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறது. அவளுடைய அழிவு பரலோகத்தில் நடக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு வைபவத்துக்கு—ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவுக்கும் அவருடைய மணவாட்டியாகிய உத்தமமான வெற்றிக்கொண்ட 1,44,000 பேருக்குமான விவாக வைபவத்துக்கு—எவ்வளவு முரணாக இருக்கிறது! “சர்வவல்லமையுள்ள தேவனாகிய யெகோவாவுக்கு” இடிமுழக்கம்போன்று ஒரு பாட்டு முழங்குகிறது, ஆம், “நாம் சந்தோஷப்பட்டு களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்.”—வெளி. 19:1–10.
16 என்றபோதிலும், அந்த உன்னத விவாகம் நடைபெறுவதற்கு முன்பு, யெகோவாவின் அரசுரிமையை உட்படுத்துகிற அந்த விவாதம் எப்படி தீர்க்கப்படுகிறது என்று 13-வது தரிசனம் காண்பிக்கிறது. திரளான தூதர்கள் புடைசூழ அவருடைய ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாகிய இயேசு, சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறவராய் “நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.” சாத்தானுடைய பூமிக்குரிய ஒழுங்குமுறையில் எஞ்சியுள்ள எல்லா பாகமும் சுக்குநூறாக நொறுக்கப்படுகிறது! (வெளிப்படுத்துதல் 19:11–21) விரைந்துகொண்டுவரும் அந்த வெற்றியை நாம் தரிசனத்தின் மூலம் பார்க்கும்போது, தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்த நமக்கு எல்லா காரணமும் இருக்கிறது!
தேவனை நித்திய காலத்துக்கு மகிமைப்படுத்துதல்
17 வெளிப்படுத்துதலின் 14-வது 15-வது தரிசனங்கள் தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்தும் எல்லாருக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியான பலனை வெளிப்படுத்துகிறது. சாத்தானும் அவனுடைய பேய்களும் அபிஸில் போடப்பட, ஆட்டுக்குட்டியானவருக்கும் அவருடைய மணவாட்டிக்கும் பரலோகத்தில் விவாகம் நடைபெறுகிறது. இந்த 1,44,001 அரசர்களும் ஆசாரியர்களும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆட்சி செய்கையில் மனிதவர்க்கத்தைப் பரிபூரணத்துக்குக் கொண்டுவருகிறார்கள். கடைசி பரீட்சைக்குப் பின்பு, தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துகிறவர்கள் வெற்றிகொண்டு, நித்திய ஜீவனடைய அங்கீகரிக்கப்படுவார்கள். இது ஜீவ புத்தகத்தில் தங்களுடைய பெயரைக் கொண்டிருப்பதற்குத் தகுதியாய் நிரூபித்த மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட கோடிக்கணக்கான மரித்தோரை, “சிறியோரையும் பெரியோரையும்” உட்படுத்தும். “ஒரு புதிய வானமும் புதிய பூமியும்” ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டிருக்கும் சொல்லிலடங்கா ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும், ஏனென்றால் “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது,” என்று “சகலத்தையும் புதிதாக்கும்” யெகோவா அறிவிக்கிறார்.—வெளி. 20:1–21:8.
18 தரிசனம் 16 நம்மை வெளிப்படுத்துதலின் உச்சக்கட்டத்திற்குக் கொண்டுசெல்கிறது. அது என்ன? அது ஒரு நகரத்தின் தரிசனம். இந்த நகரம், புதிய எருசலேம், மனிதன் பூமியில் இதுவரை கட்டியிருக்கும் எந்த ஒரு நகரத்துக்கும் வெகுவாக வித்தியாசப்பட்ட ஒன்று—கடவுளுடைய நாமத்தைக் கனவீனப்படுத்தியிருக்கும் விசுவாச துரோக, மிக மோசமான ஒழுக்கங்கெட்ட, அரசியல் வேசியாகிய மகா பாபிலோனுக்கு மிகுதியாக வித்தியாசப்பட்ட ஒன்று. இந்தப் பரிசுத்த நகரம் மாசற்றது, சுத்தமானது, மதிப்பிடப்படமுடியாதது. இது ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டி, மனிதவர்க்க உலகத்துக்கு நித்திய ஜீவனை அளிப்பதில் அவருடைய துணை. (யோவான் 3:16) போலி நகரமாகிய மகா பாபிலோனை விட்டு வெளியேறும்படியாகக் கொடுக்கப்படும் அழைப்பு சப்தமாகவும் தெளிவாகவும் இருப்பதில் ஆச்சரியமில்லை!—வெளிப்படுத்துதல் 18:4; 21:9–22:5.
19 யெகோவாவின் சக்திவாய்ந்த ஆவி, மணவாட்டி சபை மூலம், “வா,” என்ற ஊக்கமான அழைப்பைக் கொடுக்கிறது. ஆம், பூகோள அளவான பரதீஸில் நித்திய ஜீவனை விரும்பும் சாந்தகுணமுள்ள நீங்கள் அனைவரும் கிறிஸ்துவின் மூலமும் அவருடைய மணவாட்டியின் மூலமும் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்வதற்கான யெகோவாவின் ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்கிறவர்களாய் “ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி”யினிடமாக வாருங்கள்! என்னே மகத்தான எதிர்பார்ப்பு—பரதீஸான பூமியில் பரிபூரண மனித வாழ்க்கை! இது “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்,” என்ற கட்டளைக்குத் திட்டவட்டமான பதில் கூறுகிற அநேகர் பெறும் பலனாக இருக்கும்!—வெளிப்படுத்துதல் 22:6–21. (w88 12⁄15)
[அடிக்குறிப்புகள்]
a உலக இராணுவமும் சமுதாய செலவுகளும் 1987-88 (World Military and Social Expenditures 1987-88)
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ இரண்டு மூர்க்க மிருகங்களைப்பற்றிய தரிசனத்தில் நமக்கு என்ன புத்திமதி இருக்கிறது?
◻ வானத்தின் மத்தியில் பறக்கும் தேவதூதன் செய்யும் அறிவிப்புக்கு நாம் எப்படி பிரதிபலிக்கவேண்டும்?
◻ மகா பாபிலோன் எந்த விதத்தில் வேசித்தனத்தில் உட்பட்டிருக்கிறது? தேவனுக்குப் பயப்படுகிறவர்களால் இது எவ்விதம் நோக்கப்படுகிறது?
◻ கர்த்தருடைய நாளில் பூமி எந்த விதத்தில் அறுவடை செய்யப்படுகிறது?
◻ என்ன மகிழ்ச்சியான சம்பவங்கள் வெளிப்படுத்துதலை நிறைவுசெய்கிறது? கடவுளுடைய மக்கள் அதில் எவ்வாறு பங்கடையக்கூடும்?
[கேள்விகள்]
1. நாம் யாருக்குப் பயப்பட வேண்டும்? நாம் எதற்குப் பயப்படக்கூடாது?
2. எட்டாம் தரிசனத்தில் என்ன மிருகம் காணப்படுகிறது? அது எதைப் பிரதிநிதித்துவஞ்செய்கிறது?
3.(எ) மூர்க்க மிருகத்தின் ஏழு தலைகளில் ஒன்று எப்படி “சாவுக்கேதுவான காயத்தைப்” பெற்றது? (பி) இரண்டு கொம்புகளுடைய மிருகம் எப்படி முதல் மூர்க்க மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணுவதில் முன்னிலையிலிருந்தது? (சி) முதல் மூர்க்க மிருகத்தின் நாமமும் அது குறிப்பிடும் காரியமும் என்ன?
4. (எ) பரம சீயோன் மலையில் யார் நின்றுகொண்டிருப்பதாகத் தெரிகிறது? கடவுளுடைய சிங்காசனத்துக்கு முன்பாக இருக்கும் 24 மூப்பர்கள் யாருக்குப் படமாக இருக்கிறார்கள்? (பி) அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் பாடின “புதுப்பாட்டுக்கும்” திரள் கூட்டத்தினர் பாடின “புதுப்பாட்டுக்கும்” என்ன வித்தியாசம்?
5.(எ) வானத்தின் மத்தியிலே பறக்கிற தூதன் அறிவிக்கும் செய்தி யாது? அது ஏன் நித்திய நற்செய்தி? (பி) அந்தத் தூதன் உரத்த குரலில் என்ன கட்டளை பிறப்பித்தான்? அது ஏன் அவ்வளவு பொருத்தமாயிருக்கிறது?
6. வேறொரு தூதன் மலைக்கவைக்கும் அதிர்ச்சிகொண்ட என்ன செய்தியை அறிவிக்கிறான்?
7. மகா பாபிலோன் என்பது என்ன? அது எப்படி வளர்ச்சியுற்றது?
8. (எ) மகா பாபிலோனுக்கு எப்படி மகா வீழ்ச்சி ஏற்பட்டது? இது எப்பொழுதிருந்து தெளிவாகத் தெரிகிறது? (பி) சமாதானத்துக்கான மதத் தலைவர்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படாமற்போகிறது என்பதை எது காண்பிக்கிறது?
9. மகா பாபிலோனின் குருவர்க்கம் எந்தவிதமான ஒழுக்கங்கெட்ட வழிகளுக்குப் பேர்போனதாகிவிட்டது?
10. (எ) வெளிப்படுத்துதல் 18:3-ல் மகா பாபிலோனின் “வேசித்தனம்” எதைக் குறிக்கிறது? (பி) வெளிப்படுத்துதல் 18:24-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி, மகா பாபிலோனின் குருவர்க்கம் ஏன் இரத்தப்பழிக்குப் பெருமளவில் குற்றமுடையதாயிருக்கிறது?
11. (எ) அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களும் திரள் கூட்டத்தினரும் வணங்க மறுத்தது என்ன? (பி) எந்த மகத்தான எதிர்பார்ப்புகள் தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துவதற்கு நமக்கு பலமான காரணம் அளிக்கிறது?
12. என்ன இரண்டு அறுப்பு நடைபெறுகிறது? எப்பொழுது?
13. (எ) பத்தாவது தரிசனத்தில், உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் என்ன பாட்டு பாடுகிறார்கள்? அந்தப் பாட்டின் வார்த்தைகள் என்ன? (பி) இந்தத் தரிசனத்தில் கடவுளுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்புகள் எவ்விதம் தெளிவாகத் தெரிவிக்கப்படுகிறது?
14.மகா பாபிலோன் 11-வது 12-வது தரிசனத்தில் என்ன முக்கியமான பங்கை வகிக்கிறாள்? அவளை விட்டுவிடுவதற்கு இது ஏன் சரியான சமயம்?
15. மகா வேசியின் அழிவு என்ன துதிப் பாடலுக்கு வழிநடத்துகிறது? இதைப் பின்தொடரும் மகிழ்ச்சிகரமான மற்றொரு வைபவம் என்ன?
16. தரிசனம் 13-ன் பிரகாரம், முடிவாகத் தீர்க்கப்படும் விவாதம் என்ன? எப்படித் தீர்க்கப்படும்?
17. வெளிப்படுத்துதலின் 14-வது 15-வது தரிசனங்கள், தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்தும் எல்லாருக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியான பலனைக் குறித்து என்ன வெளிப்படுத்துகிறது?
18. தரிசனம் 16-ன் பிரகாரம், வெளிப்படுத்துதல் புத்தகத்தின் உச்சக்கட்டம் என்ன?
19. (எ) மணவாட்டி வகுப்பு மூலம் என்ன அழைப்பு கொடுக்கப்படுகிறது? சாந்தகுணமுள்ளவர்கள் எவ்விதம் பிரதிபலிக்கிறார்கள்? (பி) “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்,” என்ற கட்டளைக்குத் திட்டவட்டமான முறையில் பிரதிபலிப்போமானால் நமக்கு என்ன பலன் இருக்கும்?
[பக்கம் 29-ன் படம்]
இந்த வெண்கலப் பதக்கம் அக்டோபர் 1987-ல் அஸிஸியில் நடைபெற்ற சமாதானத்துக்கான ஜெபக்கூட்டத்தின் நிறைவுவிழாவின் போது வெளியிடப்பட்டது. ஒரு பக்கத்தில் “புனித பிதா”வின் உருவமும் அதைச் சுற்றி, “ஜான் பால் பான்டிஃபெக்ஸ் மாக்ஸிமஸ்” என்ற வார்த்தைகளும் தேதியும் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் சமாதானத்துக்கான அஸிஸி ஜெபக்கூட்டத்தில் “புனித ஃபிரான்ஸிஸ்” “கடவுளுடைய ஈவாகிய சமாதானத்”துக்காக வேண்டுகிறார்