அதிகாரம் 32
கடவுளுடைய கோபம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது
1. அந்த ஏழு கலசங்களும் முழுமையாக ஊற்றி முடிந்துதீருகையில், என்ன நடந்தேறிவிட்டிருக்கும், இந்தக் கலசங்களைக் குறித்து என்ன கேள்விகள் இப்பொழுது எழும்புகின்றன?
ஏ ழு கலசங்களை ஊற்றும்படி பொறுப்பளித்துக் கட்டளையிடப்பட்ட அந்தத் தூதர்களை யோவான் ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்டார். “இவையே கடைசி வாதைகள், இவற்றோடு கடவுளின் கோபாக்கினை முற்றுப்பெறும்” என்று அவர் நமக்குச் சொல்லுகிறார். (வெளிப்படுத்துதல் 15:1, தி.மொ.; 16:1) பூமியின் பொல்லாங்கை நீக்கும் யெகோவாவின் தடுப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் இந்த வாதைகள் முழுமையாக ஊற்றி முடித்துத் தீர்க்கப்பட வேண்டும். அவை முடிந்துதீருகையில், கடவுளுடைய ஆக்கினைத் தீர்ப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கும். சாத்தானின் உலகம் இனிமேலும் இராது! இந்த வாதைகள் மனிதவர்க்கத்துக்கும் இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் அதிபதிகளுக்கும் எதை முன்குறித்துக் காட்டுகின்றன? ஆக்கினைத்தீர்ப்பளிக்கப்பட்ட இந்த உலகத்தோடுகூட வாதிக்கப்படுவதைக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு தவிர்க்கலாம்? இவை முக்கியமான கேள்விகள், இப்பொழுது பதிலளிக்கப்படவிருக்கின்றன. நீதி வெற்றிப்பெறுவதற்கு ஆவலோடு காத்திருக்கும் யாவரும் யோவான் அடுத்தபடியாகக் காண்பவற்றில் கூர்ந்த அக்கறையுடையோராக இருப்பர்.
“பூமிக்கு” எதிராக யெகோவாவின் உக்கிர கோபம்
2. முதலாம் தூதன் தன் கலசத்தைப் பூமிக்குள் ஊற்றுவதிலிருந்து உண்டாகும் விளைவுகள் யாவை, “பூமி” என்பதால் என்ன அடையாளமாகக் குறிக்கப்படுகிறது?
2 முதலாவது தூதன் செயல்படுகிறார்! “முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.” (வெளிப்படுத்துதல் 16:2) முதல் எக்காள ஊதலின் காரியத்தில் இருந்ததுபோல், இங்கே “பூமி,” 4,000 ஆண்டுகளுக்கு முன்பாக, நிம்ரோதின் காலத்தில் இங்கே பூமியில் சாத்தான் கட்டத் தொடங்கின நிலையாகத் தோன்றின அரசியல் ஒழுங்குமுறையை அடையாளமாகக் குறிக்கிறது.—வெளிப்படுத்துதல் 8:7.
3. (அ) வணக்கத்துக்கு நிகரான எதை, பல அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களிடமிருந்து வற்புறுத்திக் கேட்டிருக்கின்றனர்? (ஆ) கடவுளுடைய ராஜ்யத்துக்குப் பதிலீடாக ராஜ்யங்கள் எதை உண்டாக்கியிருக்கின்றன, அதை வணங்குவோரின்பேரில் உண்டாகும் பாதிப்பு என்ன?
3 கடவுளுக்கு அல்லது எந்தப் பக்திக்கும் மேலாக அரசாங்கமே உயர்த்தப்பட வேண்டுமென்று வற்புறுத்தி, இந்தக் கடைசி நாட்களில் பல அரசாங்கங்கள், தங்கள் குடிமக்களிடமிருந்து வணக்கத்துக்கு நிகரானதை வற்புறுத்திக் கேட்டிருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1; ஒப்பிடுங்கள்: லூக்கா 20:25 யோவான் 19:15.) ஆண்டு 1914 முதற்கொண்டு, தேசங்கள், தங்கள் வாலிபர்களை, நவீன சரித்திரத்தின் பக்கங்களை அவ்வளவு அதிகமாய் இரத்தக்கறையாக்கியுள்ள வகையான மொத்தப் போரில் போரிடும்படி, அல்லது போரிட ஆயத்தமாக இருக்கும்படி, கட்டாயப் படைத்துறைப் பணிக்குப் பெயர் பதிவு செய்வது சாதாரணமாகிவிட்டது. கர்த்தருடைய நாளின்போது, இந்தத் தேசங்கள், கடவுளுடைய ராஜ்யத்துக்குப் பதிலீடாக, அந்த மிருகத்தின் சொரூபத்தை—சர்வதேச சங்கத்தையும் அதன் வாரிசான ஐக்கிய நாட்டு சங்கத்தையும்—உண்டாக்கியும் இருக்கின்றன. சமீப காலத்திய போப்புகள் செய்தபடி, மனிதனால் உண்டுபண்ணப்பட்ட இந்தச் சங்கத்தை, தேசங்களின் சமாதானத்துக்கான ஒரே நம்பிக்கையென அறிவிப்பது எத்தகைய தேவதூஷணம்! இது கடவுளுடைய ராஜ்யத்தை முற்றிலுமாக எதிர்க்கிறது. இதை வணங்குவோர், மோசேயின் காலத்தில் யெகோவாவை எதிர்த்த எகிப்தியர்கள் சொல்லர்த்தமான புண்களாலும் கொப்புளங்களாலும் வாதிக்கப்பட்டதுபோல், ஆவிக்குரியப் பிரகாரம் அசுத்தமாகின்றனர், புண்ணுற்றவர்களாகின்றனர்.—யாத்திராகமம் 9:10, 11.
4. (அ) கடவுளுடைய கோபாக்கினையின் அந்த முதல் கலசத்தில் அடங்கியுள்ளவை எதை உறுதியாய் அறிவுறுத்துகின்றன? (ஆ) அந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையை ஏற்போரை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
4 இந்தக் கலசத்தில் அடங்கியவை மனிதருக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற தெரிவை உறுதியாக அறிவுறுத்துகின்றன. அவர்கள் இந்த உலகத்தால் ஏற்காது தள்ளப்படுவதை அல்லது யெகோவாவின் கோபாக்கினையை அனுபவிக்க வேண்டும். “அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்”யும் நோக்கத்துடன் மனிதவர்க்கம் அந்த முத்திரையைப் பெறும்படி வற்புறுத்தும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 13:16, 17) ஆனால் இதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது! இந்த முத்திரையை ஏற்போரை “பொல்லாத கொடிய புண்”ணுற்றிருப்போராக யெகோவா கருதுகிறார். ஜீவனுள்ள கடவுளை ஏற்க மறுத்துவிட்டதாக அவர்கள் 1922 முதற்கொண்டு வெளிப்படையாய் அடையாளம் போடப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய அரசியல் சதித்திட்டங்கள் வெற்றிப்பெறுகிறதில்லை, அவர்கள் கடும் வேதனையை அனுபவிக்கிறார்கள். ஆவிக்குரிய பிரகாரம், அவர்கள் அசுத்தமாக இருக்கின்றனர். அவர்கள் மனந்திரும்பினால் தவிர, இந்தக் “கொடிய” நோய் கடைசி முடிவைக் கொண்டுவருவதாக இருக்கும், ஏனெனில் இப்பொழுது இது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள். இந்த உலகக் காரிய ஒழுங்குமுறையின் பாகமாயிருப்பதற்கும் கிறிஸ்துவின் சார்பில் யெகோவாவைச் சேவிப்பதற்கும் இடையில் நடுநிலை வகிப்பு எதுவும் கிடையாது.—லூக்கா 11:23; யாக்கோபு 4:4-ஐ ஒப்பிடுங்கள்.
சமுத்திரம் இரத்தமாகிறது
5. (அ) இரண்டாவது கலசம் ஊற்றப்படுகையில் என்ன நேரிடுகிறது? (ஆ) அடையாளக் குறிப்பான அந்தச் சமுத்திரத்தில் குடியிருப்போரை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
5 கடவுளுடைய கோபாக்கினையின் இரண்டாவது கலசம் இப்பொழுது ஊற்றப்படவேண்டும். இது மனிதவர்க்கத்துக்கு எதைக் குறிக்கும்? யோவான் நமக்குப் பின்வருமாறு சொல்லுகிறார்: “இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.” (வெளிப்படுத்துதல் 16:3) இரண்டாவது எக்காள ஊதலைப்போல், இந்தக் கலசம் ‘சமுத்திரத்துக்கு’—யெகோவாவிடமிருந்து பிரிந்துசென்ற கொந்தளிக்கும், கலகத்தனமான மனிதக் கூட்டங்களுக்கு—விரோதமாக ஊற்றப்படுகிறது. (ஏசாயா 57:20, 21; வெளிப்படுத்துதல் 8:8, 9) யெகோவாவின் பார்வையில், இந்தச் ‘சமுத்திரம்’ இரத்தத்தைப்போல், பிராணிகள் வாழ்வதற்குத் தகாத நிலையில் இருக்கிறது. இதனிமித்தமே கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது. (யோவான் 17:14) கடவுளுடைய கோபாக்கினையின் இரண்டாம் கலசத்தை ஊற்றுவது, இந்தச் சமுத்திரத்தில் குடியிருக்கிற மனிதவர்க்கத்தினர் முழுவதும் யெகோவாவின் பார்வையில் செத்தவர்களாக இருக்கின்றனரென வெளிப்படுத்துகிறது. சமுதாய பொறுப்பின் காரணமாக, மனிதவர்க்கம் குற்றமற்ற இரத்தத்தைப் படுமோசமாகச் சிந்தினக் குற்றப்பழியுடையதாக இருக்கிறது. யெகோவாவின் கோபாக்கினையின் நாள் வந்துவிடுகையில், அவர்கள் மரணாக்கினையை நிறைவேற்றும் சேனைகளின் கரங்களில் உண்மையில் கொல்லப்பட்டு மாண்டுபோவார்கள்.—வெளிப்படுத்துதல் 19:17, 18; ஒப்பிடுங்கள்: எபேசியர் 2:1; கொலோசெயர் 2:13.
அவர்களுக்கு இரத்தத்தைக் குடிக்கக் கொடுப்பது
6. மூன்றாவது கலசம் ஊற்றப்படுகையில் என்ன நேரிடுகிறது, ஒரு தூதனிடமிருந்தும் பலிபீடத்திலிருந்தும் வரும் என்ன வார்த்தைகள் கேட்கப்படுகின்றன?
6 கடவுளுடைய கோபாக்கினையின் மூன்றாவது கலசம், மூன்றாவது எக்காள ஊதலைப்போல், சுத்தமான நீரூற்றுமூலங்களின்பேரில் ஒரு பாதிப்பைக் கொண்டிருக்கிறது. “மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின. அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர். அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்; அதற்குப் [அவர்கள், NW] பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன். பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.”—வெளிப்படுத்துதல் 16:4-7.
7. ‘ஆறுகளும் நீரூற்றுகளுமானவற்றால்,’ எது படமாகக் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது?
7 இந்த ‘ஆறுகளும் நீரூற்றுகளும்,’ மனித நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் வழிநடத்தும் அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், கல்வி, சமுதாய, மற்றும் மதத் தத்துவங்களைப்போன்ற, இந்த உலகம் ஏற்றிருக்கும் வழிநடத்துதலுக்கும் ஞானத்துக்குமுரிய புதிய ஊற்றுமூலங்களென அழைக்கப்படுபவற்றை படமாகக் குறிப்பிடுகின்றன. உயிரளிக்கும் சத்தியத்துக்காக, ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய யெகோவாவிடம் நோக்குவதற்கு மாறாக, மனிதர் “வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டு,” ‘தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிற இவ்வுலகத்தின் ஞானத்தை’ நிறைவாய்க் குடித்திருக்கின்றனர்.—எரேமியா 2:13; 1 கொரிந்தியர் 1:19; 2:6; 3:19; சங்கீதம் 36:9.
8. என்ன வழிகளில் மனிதவர்க்கம் இரத்தப்பழிக்குள்ளாகியிருக்கிறது?
8 இத்தகைய களங்கமுள்ளத் ‘தண்ணீர்கள்’ மனிதரை இரத்தப் பழிக்குள்ளாகும்படி வழிநடத்தியிருக்கின்றன, உதாரணமாக, பத்துக்கோடிக்கும் மேற்பட்ட உயிர்களைப் போக்கின கடந்த நூற்றாண்டு போர்களில் இவ்வளவு பேரளவுகளில் இரத்தத்தைச் சிந்தும்படி அவர்களை ஊக்குவித்ததில் அவ்வாறு செய்திருக்கின்றன. முக்கியமாய், இரண்டு உலக யுத்தங்கள் தொடங்கின கிறிஸ்தவமண்டலத்தில், மனிதர் “குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரித்”தனர், இதில் கடவுளுடைய சொந்த சாட்சிகளின் இரத்தமும் அடங்கியிருக்கிறது. (ஏசாயா 59:7; எரேமியா 2:34) மேலும் யெகோவாவின் நீதியுள்ள சட்டங்களை மீறி, இரத்தமேற்றுதல்களுக்காகப் பேரளவுகளில் இரத்தத்தைத் தகாத முறையில் பயன்படுத்துவதனாலும் மனிதவர்க்கம் இரத்தப் பழிக்குள்ளாகியிருக்கிறது. (ஆதியாகமம் 9:3-5; லேவியராகமம் 17:14; அப்போஸ்தலர் 15:28, 29) இதன் காரணமாக, இரத்தமேற்றுதல்களின்மூலம் எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி, இன்னும் மற்ற நோய்களை அடைந்து, ஏற்கெனவே அதிகமான அளவில் துயரத்தை அறுவடை செய்திருக்கின்றனர். எல்லா இரத்தப் பழிக்கும் முழுமையான தண்டனை, சீக்கிரத்தில் வரவிருக்கிறது, அப்பொழுது “தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே” மிதிக்கப்படுவதான அந்த முழுமையான தண்டனையை, சட்டத்தை மீறுவோர் பெறுவார்கள்.—வெளிப்படுத்துதல் 14:19, 20.
9. மூன்றாம் கலசத்தை ஊற்றுவது எதை உட்படுத்துகிறது?
9 மோசேயின் நாளில், நைல் நதி இரத்தமாக மாற்றப்பட்டபோது, எகிப்தியர்கள் வேறே தண்ணீர் ஊற்று மூலங்களைத் தேடியதால் உயிருடனிருக்க முடிந்தது. (யாத்திராகமம் 7:24) எனினும், இன்று, இந்த ஆவிக்குரிய வாதையின்போது, உயிரளிக்கும் தண்ணீர்களை ஜனங்கள் சாத்தானின் உலகத்தில் ஓரிடத்திலும் காணமுடிகிறதில்லை. இந்த மூன்றாம் கலசத்தை ஊற்றுவது, இந்த உலகத்தின் ‘ஆறுகளும் நீரூற்றுகளும்’ இரத்தத்தைப்போல் இருக்கின்றன, அவற்றைக் குடிக்கிற யாவருக்கும் ஆவிக்குரிய மரணத்தைக் கொண்டுவருகின்றனவென யாவரறிய அறிவிப்பதை உட்படுத்துகிறது. ஜனங்கள் யெகோவாவிடம் திரும்பினால் தவிர, அவர்கள் அவருடைய எதிரான நியாயத்தீர்ப்பை அறுவடை செய்வார்கள்.—எசேக்கியேல் 33:11-ஐ ஒப்பிடுங்கள்.
10. “தண்ணீர்களின் தூதன்,” எதைத் தெரியப்படுத்துகிறார், “பலிபீடம்” என்ன சாட்சியத்தை மேலுமாகச் சேர்க்கிறது?
10 “தண்ணீர்களின் தூதன்,” அதாவது, இந்தக் கலசத்தைத் தண்ணீர்களுக்குள் ஊற்றும் இந்தத் தூதன், சர்வலோக நியாயாதிபதியாக, யெகோவாவின் நீதியுள்ள தீர்ப்புகள் முழுமையானவையென அவரை மகிமைப்படுத்துகிறார். ஆகவே, இந்த நியாயத்தீர்ப்பைக் குறித்து: “அதற்குப் அவர்கள் பாத்திரராயிருக்கிறார்கள்” என்று சொல்கிறார். இந்தப் பொல்லாத உலகத்தின் பொய்ப் போதகங்களாலும் தத்துவ ஞானங்களாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தூண்டி ஊக்கமளிக்கப்பட்டுவந்த பெரும்பான்மையான இரத்தஞ்சிந்துதலையும் கொடுமையையும் சந்தேகமில்லாமல், அந்தத் தூதன் தானே நேரில் பார்த்திருக்கிறார். ஆகையால், யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் சரியென அவர் அறிந்திருக்கிறார். கடவுளுடைய ‘பலிபீடமும்’ பேசுகிறது. வெளிப்படுத்துதல் 6:9, 10-ல், இரத்தச் சாட்சிகளாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்துமாக்கள் அந்தப் பலிபீடத்தின்கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் அந்தப் ‘பலிபீடம்’ யெகோவாவின் தீர்ப்புகளின் நியாயத்துக்கும் நீதிக்கும் வல்லமைவாய்ந்த சாட்சியத்தைக் கூட்டுகிறது.a நிச்சயமாகவே, இவ்வளவு மிகுந்த இரத்தத்தைச் சிந்தினவர்களும் தகாப்பிரயோகம் செய்தவர்களும், யெகோவா அவர்களை மரணத்துக்குத் தீர்ப்பளிப்பதன் அடையாளமாக, தாங்களாகவே இரத்தத்தை வற்புறுத்திக் குடிக்க வைக்கப்படுவது தகுந்ததாயுள்ளது.
அக்கினியால் மனிதரைத் தகித்தல்
11. கடவுளுடைய கோபாக்கினையின் நான்காவது கலசத்தின் தாக்கும் குறியிலக்கு என்ன, இது ஊற்றப்படுகையில் என்ன நேரிடுகிறது?
11 கடவுளுடைய கோபாக்கினையின் நான்காவது கலசம் சூரியனை அதன் தாக்கும் குறியிலக்காகக் கொண்டுள்ளது. யோவான் நமக்குப் பின்வருமாறு சொல்லுகிறார்: “நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல் அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.”—வெளிப்படுத்துதல் 16:8, 9.
12. இந்த உலகத்தின் “சூரியன்” எது, இந்த அடையாளக் குறிப்பான சூரியனுக்கு என்ன அனுமதிக்கப்பட்டிருக்கிறது?
12 இன்று, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில், இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்கள் “தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்.” (மத்தேயு 13:40, 43) இயேசுதாமே ‘நீதியின் சூரியனாக’ இருக்கிறார். (மல்கியா 4:2) எனினும், மனிதவர்க்கம், அதன் சொந்த ‘சூரியனை,’ அதாவது, கடவுளுடைய ராஜ்யத்துக்கு எதிர்ப்பாகப் பிரகாசிக்க முயற்சி செய்யும் அதன் சொந்த அதிபதிகளைக் கொண்டுள்ளது. நான்காவது எக்காள ஊதல், கிறிஸ்தவமண்டலத்தின் வானங்களிலுள்ள அந்தச் ‘சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும்’ உண்மையில் இருளின் ஊற்றுமூலங்களே ஒளியினுடையவையல்லவென வெளிப்படையாக அறிவித்தது. (வெளிப்படுத்துதல் 8:12) கடவுளுடைய கோபாக்கினையின் நான்காவது கலசம், இந்த உலகத்தின் “சூரியன்” தாங்கமுடியாத வகையில் வெப்பமுடையதாகுமென இப்பொழுது காட்டுகிறது. சூரியனைப்போன்ற தலைவர்களாகக் கருதப்பட்டவர்கள் மனிதவர்க்கத்தைத் ‘தகிப்பார்கள்’. இது அந்த அடையாளக் குறிப்பான சூரியனுக்கு அனுமதிக்கப்படும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், யெகோவா, மனிதவர்க்கத்தின்மீது தீபோன்ற தம்முடைய ஆக்கினைத் தீர்ப்பின் பாகமாக இதை அனுமதிப்பார். தகிப்பதான இது எவ்வகையில் நடைபெற்றிருக்கிறது?
13. சூரியனைப்போன்ற இந்த உலகத்தின் அதிபதிகள் எவ்வகையில் மனிதவர்க்கத்தைத் ‘தகித்தனர்’?
13 முதல் உலக யுத்தத்துக்குப் பின், இந்த உலகத்தின் அதிபதிகள், உலகப் பாதுகாப்பின் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் சர்வதேச சங்கத்தை உருவாக்கி அமைத்தனர், ஆனால் இது தோல்வியடைந்தது. ஆகவே மற்ற சோதனைமுறையான ஆட்சி வகைகள், ஃபாசிஸம், நாசியாட்சிமுறை போன்றவை முயன்று பார்க்கப்பட்டன. பொதுவுடைமை கொள்கை தொடர்ந்து விரிவாகியது. இந்த ஒழுங்குமுறைகளிலிருந்த சூரியனைப்போன்ற இந்த அதிபதிகள், மனிதவர்க்கத்தின் நிலையை முன்னேற்றுவதற்குப் பதிலாக, ‘மிகுந்த உஷ்ணத்தினால் மனிதவர்க்கத்தைத் தகிக்கத்’ தொடங்கினார்கள். ஸ்பெய்னிலும் எதியோபியாவிலும், மன்ச்சூரியாவிலும் நடந்த உள்ளூர் போர்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு வழிநடத்தின. சர்வாதிகாரிகளாக முசோலினியும் ஹிட்லரும் ஸ்டாலினும் தங்கள் சொந்த தேச மக்கள் பலர் உட்பட, கோடிக்கணக்கானவர்களின் மரணங்களுக்கு நேர்முகமாயும் மறைமுகமாயும் பொறுப்புள்ளோராயினர். வெகு சமீபத்தில், சர்வதேச அல்லது உள்நாட்டுக் கலகங்கள் வியட்நாம், கம்பூச்சியா, ஈரான், லெபனான், அயர்லாந்து போன்ற நாடுகளின் மற்றும் லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள நாடுகளின் மக்களைத் ‘தகித்தன.’ இவற்றோடுகூட பெரும் வல்லரசுகளுக்கிடையில் தொடர்ந்துகொண்டிருக்கும் போராட்டமும் உள்ளது, இவற்றின் கிலியூட்டும் அணு ஆயுதங்கள் மனிதவர்க்கம் முழுவதையும் எரித்துச் சாம்பலாக்கக் கூடிய சக்தியுடையவை. இந்தக் கடைசி நாள்களில், மனிதவர்க்கம், அதன் அநீதியான அதிபதிகளாகிய, தகிக்கும் “சூரிய”னுக்குப் பாதுகாப்பற்ற நிலையில் நிச்சயமாகவே விடப்பட்டுள்ளது. கடவுளுடைய கோபாக்கினையின் நான்காவது கலசத்தை ஊற்றுவது இந்தச் சரித்திர நிகழ்ச்சிகளை மிக நுட்பமாகக் குறிப்பிட்டிருக்கிறது, கடவுளுடைய ஜனங்கள் இவற்றை பூமியெங்கும் யாவரறிய அறிவித்துள்ளனர்.
14. எது மனிதவர்க்கத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஒரே பரிகாரமென யெகோவாவின் சாட்சிகள் இடைவிடாமல் கற்பித்துவந்திருக்கின்றனர், இதற்குப் பொதுவான மனிதவர்க்கத்தின் பிரதிபலிப்பு என்ன?
14 மனிதவர்க்கத்தின் குழப்பமடையச் செய்யும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரே பரிகாரம் கடவுளுடைய ராஜ்யமேயென யெகோவாவின் சாட்சிகள் இடைவிடாமல் கற்பித்து வந்திருக்கின்றனர். இந்த ராஜ்யத்தின்மூலம் யெகோவா தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த நோக்கங்கொண்டிருக்கிறார். (சங்கீதம் 83:4, 17, 18; மத்தேயு 6:9, 10) எனினும், மனிதவர்க்கம், முழுமையாக, இந்தப் பரிகாரத்துக்குச் செவிகொடாதிருக்கிறது. ராஜ்யத்தை ஏற்க மறுக்கும் பலர், யெகோவாவின் அரசாட்சியை ஏற்க மறுத்தபோது பார்வோன் செய்ததுபோலவே, கடவுளுடைய பெயரையும் தூஷிக்கின்றனர். (யாத்திராகமம் 1:8-10; 5:2) மேசியானிய ராஜ்யத்தில் எவ்வித அக்கறையில்லாமல், இந்த எதிரிகள், ஒடுக்கும் மனித ஆட்சியாகிய, தங்கள் சொந்த கடுவெப்பமான “சூரிய”னின்கீழ் துன்பப்படுவதைத் தெரிந்துகொள்கின்றனர்.
மூர்க்க மிருகத்தின் சிங்காசனம்
15. (அ) ஐந்தாம் கலசம் எதன்மீது ஊற்றப்படுகிறது? (ஆ) ‘மிருகத்தினுடைய சிங்காசனம்’ எது, இந்தக் கலசத்தை அதன்மீது ஊற்றுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
15 அடுத்த தூதன் எதன்மீது தன் கலசத்தை ஊற்றுகிறார்? “ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்.” (வெளிப்படுத்துதல் 16:10அ) இந்த ‘மூர்க்க மிருகம்’ சாத்தானின் அரசாங்க ஒழுங்குமுறையாகும். இந்த மூர்க்க மிருகம்தானே சொல்லர்த்தமான மிருகமாக இல்லாததுபோல், இதற்குச் சொல்லர்த்தமான ஒரு சிங்காசனமும் இல்லை. எனினும் சிங்காசனம் குறிப்பிடப்படுவதானது, இந்த மூர்க்க மிருகம் மனிதவர்க்கத்தின்மீது அரச அதிகாரத்தைச் செலுத்தியிருப்பதைக் காட்டுகிறது; இது, அந்த மிருகத்தின் கொம்புகள் ஒவ்வொன்றும் அரசருக்குரிய கிரீடத்தைத் தரித்திருக்கும் உண்மையோடு பொருந்தியிருக்கிறது. உண்மையில், இந்த மூர்க்க ‘மிருகத்தினுடைய சிங்காசனம்’ அந்த அதிகாரத்தின் அஸ்திபாரமாக அல்லது ஊற்றுமூலமாக இருக்கிறது.b “வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் [மிருகத்துக்குக்] கொடுத்தது” என்று மிருகத்தைக் குறித்துப் பைபிள் சொல்கையில், இந்த அரச அதிகாரத்தின் உண்மையான நிலைமையை அது வெளிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 13:1, 2; 1 யோவான் 5:19) இவ்வாறு, அந்த மூர்க்க மிருகத்தின் சிங்காசனத்தின்மீது இந்தக் கலசத்தை ஊற்றினதானது, இந்த மூர்க்க மிருகத்தை ஆதரிப்பதிலும் முன்னேற்றுவிப்பதிலும் சாத்தான் வகித்ததும் இன்னும் வகிப்பதுமான அந்த உண்மையான பாகத்தை யாவரறிய வெளிப்படுத்தும் அறிவிப்பை உட்படுத்துகிறது.
16. (அ) ராஜ்யங்கள் தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிடினும் யாரைச் சேவிக்கின்றனர்? விளக்குங்கள். (ஆ) இந்த உலகம் சாத்தானின் குணவியல்பை எவ்வாறு பிரதிபலிக்கிறது? (இ) மூர்க்க மிருகத்தின் சிங்காசனம் எப்போது கவிழ்க்கப்படும்?
16 சாத்தானுக்கும் ராஜ்யங்களுக்குமிடையிலுள்ள இந்த உறவு எவ்வாறு காத்துக்கொள்ளப்படுகிறது எவ்வாறு? சாத்தான் இயேசுவைச் சோதித்தபோது, அவன் இந்த உலகத்தின் ராஜ்யங்களையெல்லாம் ஒரு தரிசனத்தில் அவருக்குக் காண்பித்து அவற்றின் “இந்த அதிகாரம் முழுவதையும் இவற்றின் மகிமையையும்” அவருக்கு அளிக்க முன்வந்தான். ஆனால் ஒரு நிபந்தனை இருந்தது—இயேசு சாத்தானுக்கு முன்பாக ஒரு வணக்கச் செயலை நடப்பிக்க வேண்டும். (லூக்கா 4:5-7, தி.மொ.) இந்த உலகத்தின் அரசாங்கங்கள் தங்கள் அதிகாரத்தை அதற்கும் குறைந்த விலையில் பெறுகின்றனவென நாம் கற்பனை செய்ய முடியுமா? ஒருபோதும் இல்லை. பைபிள் சொல்கிறபடி, சாத்தான் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுள், ஆகையால், இந்த ராஜ்யங்களுக்கு இது தெரிந்திருந்தாலும் தெரியாவிடினும், அவை அவனைச் சேவிக்கின்றன. (2 கொரிந்தியர் 4:3, 4)c தன்னல தேசாபிமானம், பகை, மற்றும் தன்னல அக்கறையின்மீது கட்டப்பட்டுள்ள, இந்தத் தற்போதைய உலக ஒழுங்குமுறையின் அமைப்பில் இந்த நிலைமை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது—மனிதவர்க்கத்தைத் தனக்குக் கீழ் அடக்கிவைக்கும்படி—சாத்தான் விரும்பும் முறையில் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திலுள்ள ஊழல்கள், அதிகாரத்துக்கான மீறிய இச்சை, பொய் பேசும் அரசியல் தந்திரம், போர்த்தளவாடங்களின் போட்டி—ஆகியவை சாத்தானின் இழிவான குணயியல்பைப் பிரதிபலிக்கின்றன. இந்த உலகம் சாத்தானின் அநீதியான தராதரங்களுக்கு ஆதரவளிக்கிறது, இவ்வாறு அவனை அதன் கடவுளாக்கிக் கொள்கிறது. இந்த மூர்க்க மிருகத்தின் சிங்காசனம், அந்த மிருகம் அழிவை அனுபவிக்கையில் கவிழ்க்கப்படும். கடவுளுடைய ஸ்திரீயின் வித்தானவர் முடிவாக சாத்தானைத்தானே அபிஸ்ஸுக்குள்ளாக்குவார்.—ஆதியாகமம் 3:15; வெளிப்படுத்துதல் 19:20, 21; 20:1-3.
இருளும் பற்கடிப்பான வேதனையும்
17. (அ) ஐந்தாம் கலசத்தை ஊற்றுவது எவ்வாறு மூர்க்க மிருகத்தின் ராஜ்யத்தை எப்போதும் சூழ்ந்து மூடியிருந்த ஆவிக்குரிய இருளை விரித்துரைக்கிறது? (ஆ) கடவுளுடைய கோபாக்கினையின் ஐந்தாம் கலசம் ஊற்றப்படுகையில் ஜனங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?
17 இந்த மூர்க்க மிருகத்தின் ராஜ்யம், அதன் தொடக்கமுதற்கொண்டே ஆவிக்குரிய இருளில் இருந்து வந்திருக்கிறது. (ஒப்பிடுங்கள்: மத்தேயு 8:12; எபேசியர் 6:11, 12.) ஐந்தாவது கலசம் இந்த இருளைப் பற்றிய மிகக் கடுமையாக்கப்பட்ட வெளிப்படையான ஓர் அறிவிப்பைக் கொண்டுவருகிறது. கடவுளுடைய கோபாக்கினையின் இந்தக் கலசம் இந்த அடையாளக் குறிப்பான மூர்க்க மிருகத்தின் சிங்காசனத்தின்மீதுதானே ஊற்றப்படுவதில், இதை அது செய்துங்கூட காட்டுகிறது. “அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வேதனையினிமித்தம் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டார்கள். தங்கள் வேதனைகளினிமித்தமும் தங்கள் புண்களினிமித்தமும் வானத்தின் கடவுளைத் தூஷித்தார்களேயல்லாமல் தங்கள் செய்கைகளை விட்டு நீங்க மனந்திரும்பவில்லை.”—வெளிப்படுத்துதல் 16:10ஆ, 11, தி.மொ.
18. ஐந்தாவது எக்காள ஊதலுக்கும் கடவுளுடைய கோபாக்கினையின் ஐந்தாவது கலசத்துக்கும் என்ன ஒப்புமை உள்ளது?
18 ஐந்தாவது எக்காள ஊதல் கடவுளுடைய கோபாக்கினையின் ஐந்தாவது கலசத்தோடு சரிசமமாக இல்லை, எவ்வாறெனில், எக்காள ஊதல் வெட்டுக்கிளிகளின் வாதையை அறிவித்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிகளின் வாதை வெளிப்படுத்தப்பட்டபோது, சூரியனும் ஆகாயமும் இருளடைந்ததைக் கவனியுங்கள். (வெளிப்படுத்துதல் 9:2-5) யாத்திராகமம் 10:14, 15-ல் (NW) யெகோவா எகிப்தை வாதித்த வெட்டுக்கிளிகளைக் குறித்து நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “மிகத் தொல்லையாக இருந்தன. வெட்டுக்கிளிகள் இவ்வண்ணமாய் அதற்குமுன் வந்ததும் இல்லை, அதற்குப்பின் வருவதும் இல்லை, அவைகள் பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று; தேசம் அந்தகாரப்பட்டது.” ஆம், இருள்! இன்று, இந்த ஐந்தாம் எக்காளம் ஊதப்பட்டதனாலும் கடவுளுடைய கோபாக்கினையின் ஐந்தாவது கலசம் ஊற்றப்பட்டதனாலும் இந்த உலகத்தின் ஆவிக்குரிய இருள் மிகத் தெளிவாகக் காணக்கூடியதாகியிருக்கிறது. தற்கால வெட்டுக்கிளிகளின் திரள் யாவரறிய அறிவிக்கும் சுரீரெனக் கொட்டும் செய்தி, “ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்பும்” அந்தப் பொல்லாதவர்களுக்கு வாதையையும் வேதனையையும் கொண்டுவருகிறது.—யோவான் 3:19.
19. சாத்தானை இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளாக யாவரறிய வெளிப்படுத்திக் காட்டுவது வெளிப்படுத்துதல் 16:10, 11-க்கு ஒத்திசைய எதை உண்டாக்குகிறது?
19 உலக அதிபதியாக, சாத்தான் மிகுந்த சந்தோஷமின்மையையும் துன்பத்தையும் உண்டுபண்ணியிருக்கிறான். பஞ்சம், போர்கள், வன்முறை, குற்றச் செயல்கள், போதைப்பொருள் துர்ப்பிரயோகம், ஒழுக்கக்கேடு, பாலுறவால் கடத்தப்பட்ட நோய்கள், நேர்மையில்லாமை, மதப் பாசாங்குத்தனம்—இவையும் இன்னுமதிகமும் சாத்தானின் காரிய ஒழுங்குமுறையின் அதிகார முத்திரைகளாக இருக்கின்றன. (கலாத்தியர் 5:19-21-ஐ ஒப்பிடுங்கள்.) இவ்வாறிருப்பினும், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளாகச் சாத்தானை யாவரறிய வெளிப்படுத்திக் காட்டுவது, அவனுடைய தராதரங்களின்படி வாழ்வோருக்கு வேதனையையும் மன உளைவையும் உண்டாக்கினது. முக்கியமாய்க் கிறிஸ்தவமண்டலத்தில், “அவர்கள் வேதனையினிமித்தம் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டார்கள்.” அநேகர் சத்தியம் தங்கள் வாழ்க்கைப் பாங்கை வெளிப்படுத்திக்காட்டுகிறதென கடுங்கோபங்கொள்கின்றனர். சிலர் அதைப் பயமுறுத்துவதாகக் கண்டு, பிரஸ்தாபிப்போரைத் துன்புறுத்துகின்றனர். கடவுளுடைய ராஜ்யத்தை அவர்கள் ஏற்க மறுத்து யெகோவாவின் பரிசுத்தப் பெயரை நிந்திக்கின்றனர். மதசம்பந்தமாய் நோயுற்று, புண்நிறைந்திருக்கும் அவர்களுடைய நிலைமை வெளிப்படுத்திக் காட்டப்படுகிறது, ஆகையால் பரலோகத்தின் கடவுளை அவர்கள் தூஷிக்கின்றனர். இல்லை, அவர்கள் “தங்கள் செய்கைகளை விட்டு நீங்க மனந்திரும்பவில்லை.” ஆகவே இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்னால் மொத்த மதமாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.—ஏசாயா 32:6.
ஐபிராத் நதி வற்றிப்போயிற்று
20. ஆறாவது எக்காள ஊதலும் ஆறாவது கலசத்தை ஊற்றுவதுமான இவ்விரண்டும் எவ்வாறு ஐபிராத் நதியை உட்படுத்துகின்றன?
20 ஆறாவது எக்காள ஊதல் “ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்கள்” அவிழ்த்துவிடப்படுவதை அறிவித்தது. (வெளிப்படுத்துதல் 9:14) சரித்திரப்பூர்வமாய், பாபிலோனே அந்த ஐபிராத் நதியின்மேல் உட்கார்ந்திருந்த அந்த மகா நகரம். இந்த அடையாளக் குறிப்பான நான்கு தூதர்கள் 1919-ல் விடுவிக்கப்பட்டதோடு மகா பாபிலோன் குறிப்பிடத்தக்கதாய் விழுந்தது. (வெளிப்படுத்துதல் 14:8) அவ்வாறெனில், கடவுளுடைய கோபாக்கினையின் ஆறாவது கலசம் ஐபிராத் நதியையும் உட்படுத்துவது குறிப்பிடத்தக்கதாயிருக்கிறது: “ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.” (வெளிப்படுத்துதல் 16:12) இதுவும் மகா பாபிலோனுக்கு துர்ச் செய்தியே!
21, 22. (அ) பாபிலோனுக்குப் பாதுகாப்பாயிருந்த ஐபிராத் நதியின் தண்ணீர்கள் பொ.ச.மு. 539-ல் எவ்வாறு வற்றிப்போயின? (ஆ) மகா பாபிலோன் உட்கார்ந்திருக்கும் அந்தத் ‘தண்ணீர்கள்’ யாவை, இந்த அடையாளக் குறிப்பான தண்ணீர்கள் எவ்வாறு இப்போதே வற்றிக்கொண்டிருக்கின்றன?
21 பூர்வ பாபிலோன் உயர்ந்தோங்கியிருந்த காலத்தில், ஐபிராத்தின் ஏராளமான தண்ணீர்கள் அதன் அரண்காப்பு முறையின் முக்கிய பாகமாக இருந்தன. பெர்சியரின் தலைவனான கோரேசு, பொ.ச.மு. 539-ல், அந்தத் தண்ணீர்களின் ஓட்டப் போக்கை வேறு வழியில் செல்லும்படி திருப்பிவிட்டபோது அந்தத் தண்ணீர்கள் வற்றிப்போயின. இவ்வாறு “சூரியன் உதிக்குந் திசையிலிருந்து” (அதாவது, கிழக்கிலிருந்து) வரும் ராஜாக்களாகிய பெர்சியனான கோரேசுக்கும் மேதியனான தரியுவுக்கும், பாபிலோனுக்குள் நுழைந்து அதைக் கைப்பற்றுவதற்கு வழி திறக்கப்பட்டது. அந்த நெருக்கடியான நேரத்தில், ஐபிராத் நதி அந்த மகா நகரத்தைப் பாதுகாக்கத் தவறிற்று. (ஏசாயா 44:27–45:7; எரேமியா 51:36) தற்கால பாபிலோனாகிய, உலகெங்குமுள்ள பொய்மத ஒழுங்குமுறைக்கு இதைப்போன்ற ஒன்று சம்பவிக்கவிருக்கிறது.
22 மகா பாபிலோன் ‘திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிறது.’ வெளிப்படுத்துதல் 17:1, 15-ன்படி, இவை “ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமா”னவர்களை—பாதுகாப்பாக அது கருதின அதைப் பின்பற்றின திரளான ஆட்களை—அடையாளமாகக் குறித்துக் காட்டுகின்றன. ஆனால் இந்தத் ‘தண்ணீர்கள்’ வற்றிக்கொண்டிருக்கின்றன! முன்னாளில் அது மிகுந்த செல்வாக்கு கொண்டிருந்த மேற்கு ஐரோப்பாவில், பத்துக்கோடிக்கணக்கான ஆட்கள் வெளிப்படையாக மதத்தைப் புறக்கணித்துவிட்டிருக்கின்றனர். சில நாடுகளில், மதத்தின் செல்வாக்கை அழிக்க முயற்சி செய்யும்படி அறிவிக்கப்பட்ட திட்டம் ஒன்று பல வருடங்களுக்கு இருந்தது. அந்நாடுகளிலுள்ள ஜனக் கூட்டங்கள் அவள் சார்பாக எழும்பவில்லை. அவ்வாறே, மகா பாபிலோன் அழிக்கப்படுவதற்கான சமயம் வருகையில், அதைக் கடைப்பிடிப்போரின் குறைந்துகொண்டே போகும் எண்ணிக்கை எவ்விதப் பாதுகாப்பும் அற்றதாக நிரூபிக்கும். (வெளிப்படுத்துதல் 17:16) அது கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொள்கிறபோதிலும், மகா பாபிலோன், “சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு” எதிராகத் தன்னைப் பாதுகாப்பற்றதாகக் காணும்.
23. (அ) பொ.ச.மு. 539-ல் ‘சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்கள்’ எவராக இருந்தனர்? (ஆ) கர்த்தருடைய நாளில், ‘சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்கள்’ யாவர், இவர்கள் மகா பாபிலோனை எவ்வாறு அழிப்பார்கள்?
23 இந்த ராஜாக்கள் யார்? பொ.ச.மு. 539-ல் மேதியனாகிய தரியுவும் பெர்சியனாகிய கோரேசுமாக இருந்தனர்; அந்தப் பூர்வ நகரமாகிய பாபிலோனை வென்று கைப்பற்றும்படி யெகோவா இவர்களைப் பயன்படுத்தினார். கர்த்தருடைய நாளாகிய இதில், மகா பாபிலோனின் பொய் மத ஒழுங்குமுறையும் மனித அரசர்களால் அழிக்கப்படும். ஆனால் மறுபடியும், இது தெய்வீக நியாயத்தீர்ப்பாக இருக்கும். “சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்க”ளாகிய யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும், மகா பாபிலோனுக்கு எதிராக எழும்பி அதை முற்றிலுமாக அழிக்கும்படியான “யோசனையை” மனித அரசர்களின் இருதயத்துக்குள் போட்டிருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 17:16, 17) இந்த ஆறாவது கலசத்தை ஊற்றுவது, இந்த ஆக்கினைத் தீர்ப்பு சீக்கிரத்தில் நிறைவேற்றப்படவிருக்கிறதென்று யாவரறிய அறிவிக்கிறது!
24. (அ) யெகோவாவின் கோப கலசங்கள் முதல் ஆறில் அடங்கியவை எவ்வாறு பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன, அதன் விளைவென்ன? (ஆ) கடவுளின் கோப கலசத்தின் மீதியானதைப் பற்றி நமக்குச் சொல்வதற்கு முன்பாக, வெளிப்படுத்துதல் எதை வெளிப்படுத்துகிறது?
24 யெகோவாவின் கோபத்தின் இந்த முதல் ஆறு கலசங்கள் வினைமையான செய்தியைக் கொண்டுசெல்கின்றன. தூதர்களால் ஆதரிக்கப்பட்டு, கடவுளுடைய பூமிக்குரிய ஊழியர்கள், இவற்றில் அடங்கியவற்றை பூமி முழுவதும் விரிவாக யாவருக்கும் பிரஸ்தாபிப்பதில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருக்கின்றனர். இம்முறையில், சாத்தானின் உலக ஒழுங்குமுறையின் எல்லா பகுதிகளிலும் போதிய எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, நீதிக்குத் திரும்பி, தொடர்ந்து வாழும்படியான வாய்ப்பை யெகோவா ஒவ்வொரு ஆட்களுக்கும் அருளியிருக்கிறார். (எசேக்கியேல் 33:14-16) இன்னும் கடவுளுடைய கோப கலசத்தில் ஒன்று மீந்திருக்கிறது. ஆனால் அதைப்பற்றி நமக்குச் சொல்வதற்கு முன்பாக, சாத்தானும் அவனுடைய பூமிக்குரிய காரிய கர்த்தாக்களும், யெகோவாவின் ஆக்கினைத் தீர்ப்புகளை யாவரறிய பிரஸ்தாபிப்பதை எதிர்த்துத் தடைசெய்வதற்கு எவ்வாறு முயற்சி செய்கின்றனரென்பதை வெளிப்படுத்துதல் வெளிப்படுத்துகிறது.
அர்மகெதோனுக்குக் கூட்டிச் சேர்த்தல்
25. (அ) அசுத்தமான, தவளைப்போன்ற ‘ஏவப்பட்ட கூற்றுகளைப்’ பற்றி யோவான் நமக்கு என்ன சொல்லுகிறார்? (ஆ) கர்த்தருடைய நாளில் எவ்வாறு ‘அசுத்தமான ஏவப்பட்ட கூற்றுகளின்’ தவளைப்போன்ற அருவருப்பான தோற்றம் இருந்திருக்கிறது, அதன் விளைவென்ன?
25 யோவான் நமக்குப் பின்வருமாறு சொல்லுகிறார்: “அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத் தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் [அசுத்தமான ஏவப்பட்ட கூற்றுகள், NW] புறப்பட்டுவரக் கண்டேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.” (வெளிப்படுத்துதல் 16:13, 14) மோசேயின் நாளில், பார்வோனுடைய எகிப்தின்மீது, அருவருப்பூட்டின தவளைகளின் ஒரு வாதையை யெகோவா கொண்டுவந்தார், ஆகவே “பூமியெங்கும் நாற்றமெடுத்தது.” (யாத்திராகமம் 8:5-15) கர்த்தருடைய நாளின்போதும், வேறு ஊற்றுமூலத்திலிருந்து வந்தபோதிலும், தவளைப்போன்ற அருவருப்பான தோற்றமும் இருந்திருக்கிறது. இது சாத்தானின் “அசுத்தமான ஏவப்பட்ட கூற்றுகள்” அடங்கியது. மனித அதிபதிகளான, ‘இராஜாக்கள்’ யாவரையும் யெகோவா தேவனுக்கு எதிராகத் தூண்டி இயக்கும்படி சதித்திட்டமிட்ட பிரச்சாரத்தைத் தெளிவாய் அடையாளமாகக் குறிப்பிடுகின்றன. கடவுளுடைய கோபாக்கினையின் கலசங்களை ஊற்றுவதால் அவர்கள் தயங்கி சாய்ந்துவிடாமல், “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தம்” தொடங்கும்போது தன் சார்பில் உறுதியாக நிற்கும்படி இவ்வாறு சாத்தான் நிச்சயப்படுத்திக்கொள்கிறான்.
26. (அ) சாத்தானிய பிரச்சாரம் எந்த மூன்று ஊற்றுமூலங்களிலிருந்து வருகிறது? (ஆ) அந்தக் “கள்ளத் தீர்க்கதரிசி” எது, நாம் எவ்வாறு தெரிந்துகொள்கிறோம்?
26 இந்தப் பிரச்சாரம் “வலுசர்ப்பத்தி”னிடமிருந்தும் (சாத்தானிடமிருந்தும்) அந்த மூர்க்க “மிருகத்தி”னிடமிருந்தும் (சாத்தானின் பூமிக்குரிய அரசியல் அமைப்பினிடமிருந்தும்) வருகிறது, இவை நாம் ஏற்கெனவே வெளிப்படுத்துதலில் சந்தித்தப் பிராணிகள். எனினும், அந்தக் “கள்ளத் தீர்க்கதரிசி” எது? இது பெயரில் மாத்திரமே புதிதானது. ஏழு தலைகளையுடைய மூர்க்க மிருகத்துக்கு முன்பாக பெரிய அடையாளங்களை நடப்பித்த, ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான இரண்டு கொம்புகளையுடைய ஒரு மூர்க்க மிருகம் முன்பு நமக்கு காட்டப்பட்டது. இந்த வஞ்சனையான பிராணி அந்த மூர்க்க மிருகத்துக்குத் தீர்க்கதரிசியாக செயல்பட்டது. அந்த மூர்க்க மிருகத்தை வணங்குவதை இது முன்னேற்றுவித்தது, அதற்கு ஒரு சொரூபம் உண்டாக்கப்படும்படியும் செய்வித்தது. (வெளிப்படுத்துதல் 13:11-14) ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான இரண்டு கொம்புகளையுடைய இந்த மூர்க்க மிருகம், இங்கே குறிப்பிடப்பட்ட “கள்ளத் தீர்க்கதரிசி”யாகவே இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்துவதாய், இந்தக் கள்ளத் தீர்க்கதரிசி, இரண்டு கொம்புகளையுடைய அந்த அடையாளக் குறிப்பான மூர்க்க மிருகத்தைப்போல், “மிருகத்தின் [ஏழு தலைகளையுடைய மூர்க்க மிருகத்தின்] முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின”தென்று நாம் பின்னால் வாசிக்கிறோம்.—வெளிப்படுத்துதல் 19:20.
27. (அ) காலத்துக்கேற்ற என்ன எச்சரிக்கையை இயேசுதாமே கொடுக்கிறார்? (ஆ) இயேசு பூமியில் இருந்தபோது என்ன எச்சரிக்கையைக் கொடுத்தார்? (இ) இயேசுவின் எச்சரிக்கையை அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு எதிரொலித்தார்?
27 சுற்றிலும் சாத்தானிய பிரச்சாரம் இவ்வளவு மிகுதியாக இருப்பதால், அடுத்தபடியாக யோவான் பதிவுசெய்யும் வார்த்தைகள் காலத்துக்கேற்றவையாக உள்ளன: “இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW].” (வெளிப்படுத்துதல் 16:15) “திருடனைப்போல்” யார் வருகிறார்? அறிவிக்கப்படாத ஒரு சமயத்தில் இயேசுதாமே, யெகோவாவின் ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றுபவராக வருகிறார். (வெளிப்படுத்துதல் 3:3; 2 பேதுரு 3:10) பூமியில் இன்னும் இருந்துகொண்டிருந்தபோதும், இயேசு தம்முடைய வருகையைத் திருடன் வருவதைப் போன்றதற்கு ஒப்பிட்டு பின்வருமாறு சொன்னார்: “ஆகவே உங்கள் ஆண்டவர் இன்னநாளிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். அப்படியே நீங்களும் ஆயத்தமாயிருங்கள்; நீங்கள் நினையாத நாழிகையில் மனுஷகுமாரன் வருகிறார்.” (மத்தேயு 24:42, 44, தி.மொ.; லூக்கா 12:37, 40) இதே எச்சரிக்கையை எதிரொலித்து, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு கூறினார்: “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய [யெகோவாவின், NW] நாள் வரு[ம்]. . . . சமாதானமும் சவுக்கியமும் [பாதுகாப்பும், NW] உண்டென்று அவர்கள் சொல்லும்போது, . . . அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.” சாத்தானே, ‘சமாதானமும் பாதுகாப்பும்!’ என்ற அப்படிப்பட்ட எந்தப் பொய்யான பொது அறிவிப்பைச் செய்வதற்கும் காரணமாய் இருக்கிறான்.—1 தெசலோனிக்கேயர் 5:2, 3.
28. உலகப்பிரகாரமான அழுத்தங்களை எதிர்ப்பதைப் பற்றிய என்ன எச்சரிக்கையை இயேசு கொடுத்தார், “கண்ணியைப்போல்” தங்கள்மீதுவர கிறிஸ்தவர்கள் விரும்பாத “அந்த நாள்” எது?
28 பிரச்சாரத்தில் தோய்ந்துள்ள இந்த உலகம், கிறிஸ்தவர்களின்மீது கொண்டுவரும் வகையான அழுத்தங்களைக் குறித்தும் இயேசு எச்சரித்தார். அவர் சொன்னதாவது: “உங்கள் இருதயங்கள் பெருந் தீனியினாலும் வெறியினாலும் லெளகீகக் கவலைகளினாலும் எப்போதாகிலும் பாரமடையாதபடி உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இல்லையானால், அந்த நாள் திடீரென ஒரு கண்ணியைப்போல் உங்கள்மேல் வரும். . . . ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பவும் மனுஷகுமாரன் முன்னிலையில் நிற்கவும் வலிமை பெறும்படி எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.” (லூக்கா 21:34-36, தி.மொ.) “அந்த நாள்,” ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாள்’ ஆகும். (வெளிப்படுத்துதல் 16:14) யெகோவாவின் அரசாட்சியின் நியாயநிரூபணத்துக்குரிய “அந்த நாள்” நெருங்கிவருகையில், வாழ்க்கையின் கவலைகளைச் சமாளிப்பது மேலும் மேலுமாகக் கடினமாகிறது. அந்த நாள் வந்துசேரும் வரையில், கிறிஸ்தவர்கள் இடைவிடாத விழிப்புடன் நிலைத்திருந்து எச்சரிக்கையுடனும் கூர்ந்த கவனத்துடனும் இருப்பது அவசியம்.
29, 30. (அ) தூங்குகிறவர்களாகக் கண்டுபிடிக்கப்படுவோர் தங்கள் “வஸ்திரங்களை” இழந்து வெட்கப்பட செய்யப்படுவரென்ற இயேசுவின் எச்சரிக்கை குறிப்பாகத் தெரிவிப்பது என்ன? (ஆ) இந்த வஸ்திரங்கள் அதை அணிந்திருப்பவரைக்குறித்து என்ன அடையாளம் காட்டுகின்றன? (இ) ஒருவர் தன் அடையாளக் குறிப்பான வஸ்திரங்களை எவ்வாறு இழந்துவிடக்கூடும், இதன் விளைவு என்னவாகும்?
29 எனினும், தூங்குகிறவர்களாகக் கண்டுபிடிக்கப்படுவோர் தங்கள் “வஸ்திரங்களை” இழந்து வெட்கப்பட செய்யப்படுவரென்ற இந்த எச்சரிக்கை குறிப்பாகத் தெரிவிப்பது என்ன? பூர்வ இஸ்ரவேலிலே, ஆலயத்தில் காவல் செய்யும் வேலையில் இருந்த எந்த ஆசாரியனும் அல்லது லேவியனும் கனத்த பொறுப்புடையவனாக இருந்தான். அத்தகைய வேலை செய்கையில் தூங்குபவனாக எவனாவது கண்டுபிடிக்கப்பட்டால், அவனை வெளிப்படையாக வெட்கப்படுத்துவதற்காக, அவனுடைய வஸ்திரங்கள் அவனிலிருந்து உரிந்தெடுத்து எரிக்கப்படலாமென யூத கருத்துரையாளர்கள் நமக்குச் சொல்கின்றனர்.
30 இதைப்போன்ற ஏதோ ஒன்று இன்று நேரிடக்கூடுமென இயேசு இங்கே எச்சரிக்கிறார். இந்த ஆசாரியர்களும் லேவியர்களும் இயேசுவின் அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்களை நிழலாக முன்குறித்தனர். (1 பேதுரு 2:9) ஆனால் இயேசுவின் எச்சரிக்கை விரிவாக்கப்பட்ட முறையில் திரள் கூட்டத்தாருக்குங்கூட பொருந்துகிறது. இங்கே குறிப்பிடப்பட்ட இந்த வஸ்திரங்கள் அதை அணிந்திருப்பவரை யெகோவாவின் ஒரு கிறிஸ்தவ சாட்சியாக அடையாளம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 3:18; 7:14-ஐ ஒப்பிடுங்கள்.) சாத்தானுடைய உலகத்தின் வசீகர வற்புறுத்தல்கள் தங்களைத் தூங்கவைக்க அல்லது செயலற்ற நிலைக்குள்ளாக்க எவராவது இடமளித்தால், அவர்கள் இந்த வஸ்திரங்களைப் பெரும்பாலும் இழந்துபோகலாம்—வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், கிறிஸ்தவர்களாகத் தங்கள் சுத்தமான அடையாளக் குறியீட்டை இழப்பார்கள். இத்தகைய நிலைமை வெட்கக்கேடானதாக இருக்கும். இது முற்றிலுமாய் இழந்துபோவதன் ஆபத்தில் ஒருவரை வைக்கும்.
31. (அ) கிறிஸ்தவர்கள் நிலையாய் விழித்திருப்பதற்கான தேவையை வெளிப்படுத்துதல் 16:16 எவ்வாறு அறிவுறுத்துகிறது? (ஆ) அர்மகெதோனைக் குறித்து, மதத் தலைவர்கள் சிலர் என்ன கற்பனைசெய்திருக்கின்றனர்?
31 வெளிப்படுத்துதலின் அடுத்த வசனம் நிறைவேற்றத்தை நெருங்குகையில், கிறிஸ்தவர்கள் நிலையாய் விழித்திருப்பதற்கான தேவை இன்னுமதிக அவசரமாகிறது: “[பேய்களால் ஏவப்பட்ட கூற்றுகள்] எபிரெயு பாஷையில் அர்மகெதோன் [ஹார்-மகெடன், NW] எனப்படும் இடத்தில் அவர்களைக் [பூமிக்குரிய ராஜாக்களை, அல்லது அதிபதிகளைக்] கூட்டிச் சேர்த்தன.” (வெளிப்படுத்துதல் 16:16, தி.மொ.) பொதுவாய் அர்மகெதோன் என மொழிபெயர்க்கப்படுகிற ஹார்-மகெடன் என்ற இந்தப் பெயர், பைபிளில் ஒரே ஒரு தடவை மாத்திரமே காணப்படுகிறது. ஆனால் இது மனிதவர்க்கத்தின் மனக்கற்பனையைத் தூண்டியெழுப்பியிருக்கிறது. உலகத் தலைவர்கள் சாத்தியமாயுள்ள அணுசக்திப் போரான அர்மகெதோனைப்பற்றி எச்சரித்திருக்கின்றனர். பைபிள் காலங்களில் உறுதித்தீர்வான போர்கள் பலவற்றின் இடமாக இருந்த, பூர்வ நகரமாகிய மெகிதோவுடனும் அர்மகெதோன் இணைக்கப்பட்டிருக்கிறது, ஆகவே, மதத் தலைவர்கள் சிலர், பூமியில் நடக்கும் கடைசி போர் அந்த எல்லைக்குட்பட்ட நிலப்பகுதியில் நடைபெறுமென கற்பனை செய்திருக்கின்றனர். இதில் அவர்கள் சத்தியத்திலிருந்து வெகுதூரம் விலகியிருக்கின்றனர்.
32, 33. (அ) சொல்லர்த்தமான இடமாக இருப்பதற்கு மாறாக, ஹார்-மகெடன் அல்லது அர்மகெதோன் என்ற இந்தப் பெயர் எதைக் குறிப்பிடுகிறது? (ஆ) பைபிள் பதங்களில் வேறு எவை “அர்மகெதோ”னுக்கு ஒப்பாக உள்ளன அல்லது அதற்குச் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன? (இ) ஏழாம் தூதன் கடவுளுடைய கோபாக்கினையின் கடைமுடிவான கலசத்தை ஊற்றுவதற்கு எப்பொழுது நேரமாகிவிட்டிருக்கும்?
32 ஹார்-மகெடன் என்ற இந்தப் பெயரின் பொருள் “மெகிதோ மலை” என்பதாகும். ஆனால், சொல்லர்த்தமான ஓர் இடமாக இருப்பதற்கு மாறாக, இது யெகோவா தேவனுக்கு எதிர்ப்பாக எல்லா ராஜ்யங்களும் கூடியிருப்பதும் அந்நிலையில் அவர்களை முடிவாக அழிக்கவிருப்பதுமான உலக நிலைமையைக் குறிக்கிறது. இது பரப்பளவில் முழு உலகளாவியதாயுள்ளது. (எரேமியா 25:31-33; தானியேல் 2:44) இது ‘தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலைக்கும்,’ யெகோவா ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக ராஜ்யங்கள் கூட்டிச்சேர்க்கப்படுகிற “நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கு,” அல்லது ‘யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கும்’ ஒப்பாயிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:19; யோவேல் 3:12, 14) மேலும் இது, மாகோகின் கோகுடைய சாத்தானிய சேனைகள் அழிக்கப்படும் இடமான “இஸ்ரவேல் தேசத்து”டனும், பெரிய அதிபதியாகிய மிகாவேலின் கைகளில் வடதேச ராஜா “தன் முடிவுக்குச் செல்லும்” இடமான “சமுத்திரத்திற்கும் சிறப்பான பரிசுத்த பர்வதத்திற்கும் இடையில்” ஆனதுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.—எசேக்கியேல் 38:16-18, 22, 23; தானியேல் 11:45–12:1, தி.மொ.
33 சாத்தானிடமிருந்தும் அவனுடைய பூமிக்குரிய காரிய கர்த்தாக்களிடமிருந்தும் தோன்றும் தவளைகள் கத்துவதைப்போன்ற பிரச்சாரத்தால், ராஜ்யங்கள் இந்த நிலைமைக்குள் தூண்டி இயக்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கையில், ஏழாவது தூதன் கடவுளுடைய கோபாக்கினையின் கடைமுடிவான கலசத்தை ஊற்றுவதற்கு நேரமாகிவிட்டிருக்கும்.
‘ஆயிற்று!’
34. ஏழாம் தூதன் எதன்மீது தன் கலசத்தை ஊற்றுகிறார், “மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து” என்ன அறிவிப்பு வெளிப்படுகிறது?
34 “ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள [மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள, NW] சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.”—வெளிப்படுத்துதல் 16:17.
35. (அ) வெளிப்படுத்துதல் 16:17-ல் குறிப்பிட்டுள்ள ‘ஆகாயம்’ எது? (ஆ) இந்த ஆகாயத்தின்மீது தன் கலசத்தை ஊற்றுவதில், இந்த ஏழாம் தூதன் எதை வெளிப்படுத்துகிறார்?
35 வாதிக்கப்படுவதற்குரிய கடைசி உயிரைக் காக்கும் சாதனம் ‘ஆகாயம்’ ஆகும். ஆனால் இது இயல்பான ஆகாயம் அல்ல. இயல்பான பூமி, சமுத்திரம், சுத்தமான நீரூற்று மூலங்கள், அல்லது சூரியன் யெகோவாவின் கரத்தில் ஆக்கினைத் தீர்ப்புகளை அனுபவிப்பதற்குத் தகுதியுடையவையாக இல்லாததுபோல், இயல்பான ஆகாயத்தைப் பற்றியதிலும் யெகோவாவின் ஆக்கினைத் தீர்ப்புகளுக்கு அதைத் தகுதியாக்குவதற்குரிய எதுவும் இல்லை. மாறாக, இது, ‘ஆகாயத்து அதிகாரப் பிரபு’ என பவுல் சாத்தானை அழைத்தபோது பேசின அந்த ‘ஆகாயம்.’ (எபேசியர் 2:2) இது, இன்றைய உலகம் சுவாசிக்கிற சாத்தானியத் தன்மையான ‘ஆகாயம்,’ அவனுடைய பொல்லாதக் காரிய ஒழுங்குமுறை முழுவதையும் வருணிக்கும் குணப்பாங்கான அந்த ஆவி அல்லது பொது மனப்போக்கு, யெகோவாவின் அமைப்புக்குப் புறம்பாகவுள்ள வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவிப் பரவியிருக்கும் சாத்தானிய சிந்தனை ஆகும். ஆகவே ஆகாயத்தின்மீது தன் கலசத்தை ஊற்றுவதில், இந்த ஏழாவது தூதன் சாத்தானுக்கும், அவனுடைய அமைப்புக்கும், யெகோவாவின் அரசாட்சியை எதிர்ப்பதில் சாத்தானை ஆதரிப்பதற்கு மனிதவர்க்கத்தைத் தூண்டுவிக்கும் எல்லாவற்றிற்கும் எதிராகக் கடவுளுடைய உக்கிர கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
36. (அ) ஏழு வாதைகளும் எதை உறுதிப்படுத்துகின்றன? (ஆ) ‘ஆயிற்று!’ என்று யெகோவா அறிவிப்பதால் என்ன குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது?
36 இதுவும் அந்த முந்தின ஆறு வாதைகளும், சாத்தானுக்கும் அவனுடைய ஒழுங்குமுறைக்கும் எதிராக யெகோவாவின் ஆக்கினைத்தீர்ப்புகளின் முழு மொத்தத்தைத் தெரிவிக்கின்றன. அவை சாத்தானுக்கும் அவனுடைய வித்துக்கும் மரணத்தீர்ப்புக்குரிய வெளிப்படையான அறிவிப்புகள். இந்தக் கடைசி கலசம் ஊற்றப்படுகையில், ‘ஆயிற்று!’ என்று யெகோவாதாமே வெளிப்படையாக அறிவிக்கிறார். சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. கடவுளுடைய கோபாக்கினையின் கலசங்களில் அடங்கியவை, யெகோவா போதுமென்று கூறும் அளவுக்கு பிரஸ்தாபிக்கப்பட்டு முடிக்கப்படுகையில், இந்தச் செய்திகள் வெளிப்படையாக அறிவித்த ஆக்கினைத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் தாமதமிராது.
37. கடவுளுடைய கோபாக்கினையின் ஏழாவது கலசம் ஊற்றப்பட்ட பின்பு நேரிடுவதை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்?
37 யோவான் தொடர்ந்து சொல்லுகிறார்: “மின்னல்களும் சத்தங்களும் இடிமுழக்கங்களும் உண்டாயின; பெரிய பூமியதிர்ச்சியுமுண்டாயிற்று. பூமியின்மேல் மனுஷர் தோன்றிய நாள்முதல் அப்படிப்பட்டது உண்டானதில்லை; அவ்வகை பூமியதிர்ச்சி! அவ்வளவு பெரிது! அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காய்ப் போயிற்று. புறஜாதிகளின் [ராஜ்யங்களின், NW] நகரங்களும் விழுந்தன. கடவுளின் உக்கிர கோபாக்கினை மது நிறைந்த பாத்திரத்தை மகா பாபிலோனுக்குக் கொடுக்கும்படி அது அவர் சந்நிதியில் நினைக்கப்பட்டது. தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்களுங் காணப்படவில்லை. தாலந்து நிறையான பெரிய கற்களைப் பொழியும் கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழை வாதையினிமித்தம் மனுஷர் கடவுளைத் தூஷித்தார்கள்; அதன் வாதை கொடிது, மிகக்கொடிது!”—வெளிப்படுத்துதல் 16:18-21, தி.மொ.
38. பின்வருபவை அடையாளமாகக் குறிப்பதென்ன: (அ) “பெரிய பூமியதிர்ச்சி”? (ஆ) மகா பாபிலோனாகிய அந்த “மகா நகரம்,” “மூன்று பங்காய்ப்” பிளவுண்டது? (இ) “தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்களுங் காணப்படவில்லை,” என்பது? (ஈ) “கல்மழை வாதை”?
38 சந்தேகமில்லாமல், மறுபடியும் ஒருமுறை, யெகோவா மனிதரிடமாக நடவடிக்கை எடுக்கிறார், இது “மின்னல்களும் சத்தங்களும் இடிமுழக்கங்களும்” ஆனவற்றால் தெரிவிக்கப்படுகிறது. (ஒப்பிடுங்கள்: வெளிப்படுத்துதல் 4:5; 8:5.) பாழாக்கும் பூமியதிர்ச்சியினால் செய்யப்படுவதைப் போன்று, முன்பு ஒருபோதும் ஏற்பட்டிராத வகையில் மனிதவர்க்கம் அசைவிக்கப்படும். (ஒப்பிடுங்கள்: ஏசாயா 13:13; யோவேல் 3:16.) இந்தக் கடுந்தீவிர வெடிப்புடன் தகர்த்துப் பாழாக்கும் அதிர்ச்சி மகா பாபிலோனாகிய அந்த ‘மகா நகரத்தை’ நொறுக்கிச் சிதறடிக்கும், இவ்வாறு அது “மூன்று பங்காய்ப்” பிளவுறுகிறது—இது மீட்கமுடியாத பாழ்க்கடிப்புக்குள் வீழ்ந்தழிவதற்கு அடையாளக் குறிப்பாயுள்ளது. மேலும், “ராஜ்யங்களின் நகரங்க”ளும் விழும். ‘தீவுகள் யாவும் பர்வதங்களும்’—இந்த ஒழுங்குமுறையில் அவ்வளவு நிலையானவையாகத் தோன்றும் நிறுவனங்களும் அமைப்புகளும்—அகன்றுபோம். ஏழாவது வாதையின்போது எகிப்தை வாதித்தக் கல்மழையைப் பார்க்கிலும் மிகப் ‘பெரிய கல்மழை,’ ஒவ்வொரு கல்லும் ஏறக்குறைய ஒரு தாலந்து எடையுடையதாய், மனிதர்மீது கடும் வேதனையுண்டாக்கும் வகையில் விழும்.d (யாத்திராகமம் 9:22-26) தண்ணீர்கள் உறைந்து மழையாகப் பெய்வதால் தண்டிக்கப்படுவது, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு கடைசியாக வந்துசேர்ந்துவிட்டதென குறிப்பாகத் தெரிவித்து, அசாதாரண முறையில் யெகோவாவின் ஆக்கினைத்தீர்ப்பை வெளிப்படுத்தும் கடுமையான வாய்முறை அறிவிப்புகளைச் சித்தரித்துக் காட்டுவதாகப் பெரும்பாலும் இருக்கலாம்! சொல்லர்த்தமான கல்மழையையுங்கூட யெகோவா தம்முடைய அழிக்கும் வேலையில் பயன்படுத்தலாம்.—யோபு 38:22, 23.
39. இந்த ஏழு வாதைகள் ஊற்றப்பட்டும், மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் என்ன நடத்தைப்போக்கை ஏற்பர்?
39 இவ்வாறு, சாத்தானின் உலகம் யெகோவாவின் நீதியுள்ள ஆக்கினைத் தீர்ப்பை எதிர்ப்பட்டு அனுபவிக்கும். முடிவு வரை, மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் தொடர்ந்து கடவுளை எதிர்த்துக்கொண்டும் தூஷித்துக்கொண்டுமிருப்பர். பூர்வ பார்வோனைப்போல், இவர்களுடைய இருதயமும், திரும்பத்திரும்ப ஏற்படும் வாதைகளால் அல்லது அந்த வாதைகள் மரணத்தை உண்டாக்கும் கடைசி உச்சநிலையை அடைவதால் கனியச் செய்யப்படுவதில்லை. (யாத்திராகமம் 11:9, 10) பெரும் எண்ணிக்கையான அளவில் கடைசி நிமிட இருதய மாற்றம் இராது. “நானே யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள்,” என்று அறிவிக்கும் கடவுளைத் தங்கள் சாகும் மூச்சுடனும் எதிர்த்து நிந்திப்பார்கள். (எசேக்கியேல் 38:23, தி.மொ.) எனினும், சர்வவல்லவரான யெகோவா தேவனின் அரசாட்சி நியாயநிரூபணம் செய்யப்பட்டாகிவிட்டிருக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a உயிரற்றப் பொருட்கள் சாட்சியாகச் சேவிப்பதை அல்லது சாட்சியம் கொடுப்பதைப்பற்றிய உதாரணங்களுக்கு, ஆதியாகமம் 4:10; 31:44-53; எபிரெயர் 12:24 ஆகியவற்றை ஒப்பிடுங்கள்.
b ‘சிங்காசனம்’ என்பதன் இதைப்போன்ற உபயோகம் தீர்க்கதரிசனமாய் இயேசுவை நோக்கிப் பேசப்படும் பின்வரும் வார்த்தைகளில் தோன்றுகிறது: “கடவுளே வரையறையில்லா காலத்துக்கும், என்றென்றுமாகவும் உம்முடைய சிங்காசனம்.” (சங்கீதம் 45:6, NW) இயேசுவின் ராஜரீக அதிகாரத்திற்கு யெகோவாவே ஊற்றுமூலரும் அஸ்திபாரமுமாக இருக்கிறார்.
c இவற்றையும் பார்க்கவும்: யோபு 1:6, 12; 2:1, 2; மத்தேயு 4:8-10; 13:19; லூக்கா 8:12; யோவான் 8:44; 12:31; 14:30; எபிரெயர் 2:14; 1 பேதுரு 5:8.
d கிரேக்க தாலந்துவை யோவான் மனதில் கொண்டிருந்தாரானால், ஒவ்வொரு கல்லும் ஏறக்குறைய 20 கிலோகிராம் எடையுடையதாக இருக்கும். அது பாழாக்கும் கல்மழையாக இருக்கும்.
[பக்கம் 221-ன் பெட்டி]
“பூமியின்மேல்”
யோவான் வகுப்பார் பின்வருபவற்றைப்போன்ற கூற்றுகளுடன் ‘பூமிக்கு’ எதிராக யெகோவாவின் உக்கிர கோபத்தை யாவரறிய அறிவித்தனர்:
“நூற்றாண்டுகளாக முயற்சிசெய்த பின்பும், அரசியல் கட்சிகள் தற்போதைய நிலைமைகளை எதிர்ப்படவும் துயரந்தரும் பிரச்னைகளைத் தீர்க்கவும் முடியாதத் தங்கள் இயலாமையை நிரூபித்துள்ளனர். இந்தக் கேள்வியை ஊக்கமாய் ஆராயும் பொருளியல் ஆய்வாளர்களும், அரசியல் மேதகையர்களும், தாங்கள் ஒன்றும் செய்யமுடியாதெனக் காண்கின்றனர்.”—இப்பொழுது வாழும் இலட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிப்பதில்லை (ஆங்கிலம்), 1920, பக்கம் 61.
“இந்த உலகத்தின் நியாயமான அளவான பகுதியைத் திருப்திசெய்யும் அரசாங்கம் ஒன்றும் இன்று பூமியில் இல்லை. தேசங்கள் பல சர்வாதிகாரிகளால் ஆளப்படுகின்றன. இந்த முழு உலகமும் நடைமுறையில் நொடித்துப் போய்விட்டிருக்கிறது.”—விரும்பத்தக்க ஓர் அரசாங்கம் (ஆங்கிலம்), 1924, பக்கம் 5.
“இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு முடிவைக் கொண்டுவருவதே . . . இந்த உலகத்திலிருந்து தீமையை ஒழித்து சமாதானமும் நீதியும் செழித்தோங்க இடமுண்டாக்குவதற்கு ஒரே வழி.”—“ராஜ்யத்தின் இந்த நற்செய்தி,” (ஆங்கிலம்), 1954, பக்கம் 25.
“இந்தத் தற்போதைய உலக ஏற்பாடு, பாவத்தையும், அநீதியையும் கடவுளுக்கும் அவருடைய சித்தத்துக்கும் எதிராகக் கலகத்தையும் பெருகச் செய்வதால் தன்னை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறது. . . . அது சீர்த்திருத்தப்பட முடியாதது. ஆகையால், அது ஒழிய வேண்டும்!”—தி உவாட்ச்டவர், நவம்பர் 15, 1981, பக்கம் 6.
[பக்கம் 223-ன் பெட்டி]
“சமுத்திரத்தில்”
பின்வருபவை யெகோவாவிடமிருந்து விலகிச்சென்றுவிட்ட கொந்தளிக்கும் கலகத்தனமான தேவபக்தியற்ற மனிதவர்க்கமாகிய “சமுத்திரத்”துக்கு எதிராகக் கடவுளுடைய உக்கிர கோபத்தை யாவரறிய அறிவித்து யோவான் வகுப்பாரால் பல ஆண்டுகளினூடே பிரசுரிக்கப்பட்ட வெறும் ஒருசில கூற்றுகள்:
“இது வகுப்பாரிடையே போராட்டமாக இருந்திருக்கிறதென ஒவ்வொரு தேசத்தின் சரித்திரமும் காட்டுகிறது. அநேகருக்கு எதிராக ஒருசிலவாக இது இருந்திருக்கிறது. . . . இந்தப் போராட்டங்கள் பல புரட்சிகளிலும், பெரும் துன்பப்படுதலிலும், மிகுந்த இரத்தஞ்சிந்துதலிலும் விளைவடைந்திருக்கின்றன.”—அரசாங்கம் (ஆங்கிலம்), 1928, பக்கம் 244.
“புதிய உலகத்தில், சாத்தான் பயன்படுத்துவதற்காக, அந்த அடையாளக் குறிப்பான மூர்க்க மிருகம் வெகுகாலத்துக்கு முன்பாக எழும்பிவந்த, இந்தக் கொந்தளிக்கும், கலகத்தனமான, தேவபக்தியற்ற ஜனங்களாகிய அடையாளக் குறிப்பான ‘சமுத்திரம்’ இராமல், ஒழிந்துபோய்விட்டிருக்கும்.”—தி உவாட்ச்டவர், செப்டம்பர் 15, 1967, பக்கம் 567.
“இந்தத் தற்போதைய மனித சமுதாயம் ஆவிக்குரிய பிரகாரம் நோயுற்று சீரழிந்திருக்கிறது. நம்மில் ஒருவரும் அதைக் காப்பாற்ற முடியாது, அதன் நோய் அதை அதன் மரணத்துக்கு வழிநடத்திக்கொண்டிருக்கிறதென கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது.”—மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—எந்த மூலகாரணத்திலிருந்து?, 1973, பக்கம் 131.
[பக்கம் 224-ன் பெட்டி]
“ஆறுகளிலும் நீரூற்றுகளிலும்”
“மூன்றாம் வாதை பின்வருபவற்றைப் போன்ற கூற்றுகளால் ‘ஆறுகளையும் நீரூற்றுகளையும்’ வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது:
“குருமார், [கிறிஸ்துவின்] கோட்பாடுகளைப் போதிப்போராக உரிமைபாராட்டும் இவர்கள், போரைப் பரிசுத்தப்படுத்தி அதை ஒரு பரிசுத்தக் காரியமாக்கியுள்ளனர். இவர்கள் தங்கள் உருவப்படங்களும் சிலைகளும் அந்த இரத்தஞ்சிந்தும் போர்ச்சேவகர்களுடையவற்றுடன் அருகருகே காட்சிப்படுத்தி வைக்கப்படுவதில் இன்பங்கொண்டனர்.”—தி உவாட்ச்டவர், செப்டம்பர் 15, 1924, பக்கம் 275.
“ஆன்மீகக்கொள்கை [ஆவியுலகத் தொடர்பு] பெரும் பொய்யில், மரித்தப்பின் பிழைத்திருப்பதன் மற்றும் மனித ஆத்துமா அழியாமையின் பொய்யில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.”—“மரணத்துக்குப் பின் பிழைத்திருத்தல்,” என்பதைப்பற்றி வேதவார்த்தைகள் என்ன சொல்கின்றன (ஆங்கிலம்), 1955, பக்கம் 51.
“மனித தத்துவஞானங்கள், அரசியல் கோட்பாட்டறிஞர்கள், சமுதாய அமைப்பாளர்கள், பொருளாதார அறிவுரையாளர்கள், மற்றும் மத பாரம்பரியங்களை சிபாரிசுசெய்வோர் உண்மையான உயிரளிக்கும் ஆறுதலில் பலன்தரவில்லை. . . . இத்தகைய தண்ணீர்களைக் குடிப்போரை இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையைப் பற்றிய சிருஷ்டிகரின் சட்டத்தை மீறும்படியும் மதத் துன்புறுத்தல்களில் ஈடுபடும்படியுங்கூட அவை வழிநடத்தியிருக்கின்றன.”—“நித்திய நற்செய்தி” சர்வதேச மாநாட்டில் ஏற்கப்பட்ட தீர்மானம், 1963.
“விஞ்ஞான மீட்பு அல்ல, மனித குலத்தின் அழிவே மனிதனிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய காரியம். . . . மனிதவர்க்கத்தின் சிந்திக்கும் முறையை மாற்றுவதற்கு இந்த உலகத்தின் எல்லா உளநூல் வல்லுநர்களையும் உளநூல் மருத்துவர்களையும் நாம் எதிர்பார்க்க முடியாது . . . சர்வதேச காவற்படை ஏதாவது உருவாக்கி அமைக்கப்பட்டு . . . இந்தப் பூமியை வாழ்வதற்குப் பாதுகாப்பான இடமாக்கும்படி நாம் சார்ந்திருக்க முடியாது.”—மனித குலத்தைக் காப்பாற்றுவது—ராஜ்ய முறையில் (ஆங்கிலம்), 1970, பக்கம் 5.
[பக்கம் 225-ன் பெட்டி]
“சூரியன்மேல்”
மனித அரசாட்சியின் “சூரியன்” கர்த்தருடைய நாளில் மனிதவர்க்கத்தைத் “தகிக்”கையில், யோவான் வகுப்பார், பின்வருபவற்றைப்போன்ற கூற்றுகளைக் கொண்டு, சம்பவித்துக்கொண்டிருப்பதற்குக் கவனத்தை இழுத்தனர்:
“இன்று கொடுங்கோன்மையான சர்வாதிகாரிகள், ஹிட்லரும் முசோலினியும், முழு உலகத்தின் சமாதானத்தையும் பயமுறுத்துகின்றனர், சுயாதீனத்தை இவர்கள் அழிப்பதில் ரோமன் கத்தோலிக்க ஆளும் குருக்களால் முழுமையாக ஆதரிக்கப்படுகின்றனர்.”—பாஸிஸம் அல்லது சுயாதீனம் (ஆங்கிலம்), 1939, பக்கம் 12.
“சரித்திரமுழுவதிலும் ஆட்சிசெய் அல்லது அழி! என்பதே மனித சர்வாதிகாரிகளால் பின்பற்றப்பட்ட அரசியல் தந்திரமாக இருந்திருக்கிறது. ஆனால், சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட கடவுளுடைய அரசர், இயேசு கிறிஸ்து, இப்பொழுது பூமி முழுவதற்கும் பயன்படுத்தப்படவிருக்கிற நிபந்தனை, ஆளப்படுங்கள் அல்லது அழிக்கப்படுங்கள் என்பதே.”—சகல தேசங்களும் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் ஒன்றுபடுகையில் (ஆங்கிலம்), 1961, பக்கம் 23.
“1945 முதற்கொண்டு பூகோளத்தைச் சுற்றி தொடுத்த ஏறக்குறைய 150 போர்களில் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட ஆட்கள் கொல்லப்பட்டனர்.”—தி உவாட்ச்டவர், ஜனவரி 15, 1980, பக்கம் 6.
“பூமியைச் சுற்றிலுமுள்ள ராஜ்யங்கள் . . . சர்வதேச பொறுப்பை அல்லது நடத்தைக்குரிய விதிகளைப்பற்றி ஏதும் கவலைப்படுகிறதில்லை. தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள, சில ராஜ்யங்கள் தாங்கள் அவசியமாகக் கருதும் எந்த வழிவகைகளையும்—படுகொலைகள், சதிக்கொலைகள், வழிப்பறிகள், குண்டுவீச்சுகள், போன்றவற்றைப்—பயன்படுத்துவதில் தாங்கள் செய்வது முற்றிலும் சரியென உணருகின்றனர் . . . இத்தகைய அறிவற்ற மற்றும் பொறுப்புணர்ச்சியற்ற நடத்தையில் இந்த ராஜ்யங்கள் எவ்வளவு காலம் ஒருவரையொருவர் சகித்துக்கொண்டிருப்பார்கள்?”—தி உவாட்ச்டவர், பிப்ரவரி 15, 1985, பக்கம் 4.
[பக்கம் 227-ன் பெட்டி]
மூர்க்க “மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல்”
இந்த மூர்க்க மிருகத்தின் சிங்காசனத்தை யெகோவாவின் சாட்சிகள் வெளிப்படுத்திக் காட்டி, பின்வருபவற்றைப்போன்ற கூற்றுகளைக் கொண்டு, யெகோவாவின் கண்டனத்தீர்ப்பைப் பிரஸ்தாபித்தனர்:
“ராஜ்யங்களின் அதிபதிகளும் அரசியல் வழிகாட்டிகளும் கெடுநோக்குள்ள மீமானிட படைகளால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றனர், இவை அவர்களை அர்மகெதோனின் இறுதித்தீர்வான சண்டைக்குத் தற்கொலைக்கேதுவாக அணிவகுத்துச் செல்லும் போக்கில் தடுக்கமுடியாதபடி விரட்டி நடத்திக்கொண்டிருக்கின்றன.”—அர்மகெதோனுக்குப் பின்—கடவுளுடைய புதிய உலகம் (ஆங்கிலம்), 1953, பக்கம் 8.
“கடவுளுடைய ஆட்சிக்கு மாறுபட்ட மனித அரசாங்கத்தின் இந்த ‘மூர்க்க மிருகம்’ அதன் வல்லமையையும், அதிகாரத்தையும் சிங்காசனத்தையும் வலுசர்ப்பத்தினிடமிருந்து பெற்றது. ஆகையால் அது அதன் கட்சித் தந்திரத்தை, வலுசர்ப்ப தந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.”—அர்மகெதோனுக்குப் பின்—கடவுளுடைய புதிய உலகம், (ஆங்கிலம்), 1953. பக்கம் 15.
“புறஜாதி ராஜ்யங்கள் தங்களைத்தாமே . . . கடவுளுடைய பிரதான எதிரியாகிய, பிசாசான சாத்தானின் சார்பில் மாத்திரமே வைத்துக்கொள்ள முடியும்.”—“தெய்வீக வெற்றி” சர்வதேச மாநாட்டில் ஏற்கப்பட்ட தீர்மானம், 1973.
[பக்கம் 229-ன் பெட்டி]
‘அதின் தண்ணீர் வற்றிப்போயிற்று’
இப்போதே, பாபிலோனிய மதத்திற்கு ஆதரவு பல இடங்களில் வற்றிப்போய்க் கொண்டிருக்கின்றன, இது ‘சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்கள்’ தங்கள் தாக்குதலைச் செய்கையில் என்ன நேரிடுமென்பதைக் குறிப்பாய் உணர்த்திக் காட்டுகிறது.
“தேசமுழுவதிலும் செய்யப்பட்ட ஓர் ஆய்வு [தாய்லாந்தின்] நகராட்சி பகுதிகளில் வாழ்வோரில் 75 சதவீதம், பிரசங்கங்களைக் கேட்க புத்தமதக் கோயில்களுக்குச் செல்வதேயில்லையென கண்டுபிடிக்கப்பட்டது, அதேசமயத்தில் நாட்டுப்புறத்திலிருந்து கோயில்களுக்கு வருவோரின் எண்ணிக்கை ஒரே சீராய்க் குறைந்து 50 சதவீதத்துக்கு வந்திருக்கிறது.”—பாங்காக் போஸ்ட், செப்டம்பர் 7, 1987, பக்கம் 4.
“ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக டாவோ மதம் தோற்றுவிக்கப்பட்ட நாட்டில் [சீனாவில்] அந்த மாயமந்திரம் போய்விட்டது. . . . அவர்களும் அவர்களுடைய மூதாதைகளும் அதால் பின்பற்றுவோர் மிகுதியானோரை அடைந்துவந்த அந்த மாயமந்திர உபாயங்கள் பறிக்கப்பட்டுப்போகவே, அந்தக் குருத்துவத்தின் உறுப்பினர் வாரிசுகளற்றவர்களாகத் தங்களைக் காண்கின்றனர், பெரும்பகுதியில் ஒழுங்குபடுத்தியமைக்கப்பட்ட மதமாக டாவோ மதம் உண்மையில் அற்றுப்போவதை எதிர்ப்படுகின்றனர்.”—தி அட்லான்ட்டா ஜர்னல் அண்ட் கான்ஸ்டிட்யூஷன், செப்டம்பர் 12, 1982, பக்கம் 36-எ.
“ஜப்பான் . . . உலகத்திலேயே மிக அதிக அயல் நாட்டு மிஷனரிகளைக் கொண்ட ஒன்றாக இருக்கிறது, ஏறக்குறைய 5,200 பேரைக் கொண்டுள்ளது, எனினும் . . . அந்த ஜனத்தொகையில் 1% வீதத்துக்கும் குறைந்தவர்களே கிறிஸ்தவர்கள். . . . 1950-ன் பத்தாண்டுகளிலிருந்து இங்கே வேலைசெய்யும் ஃபிரான்ஸிஸ்கன் குரு ஒருவர் . . . ‘ஜப்பானில் அயல்நாட்டு மிஷனரியின் நாள் முடிந்துவிட்டது’ என்று நம்புகிறார்.”—தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஜூலை 9, 1986, பக்கம்1.
இங்கிலாந்தில் கடந்த மூன்று பத்தாண்டுகளில், “16,000 ஆங்கிலிக்கன் சர்ச்சுகளில் ஏறக்குறைய 2,000 பயன்படுத்தப்படாததால் மூடப்பட்டன. கிறிஸ்தவ நாடுகளென யாவரும் ஒப்புக்கொள்பவற்றில் மிகச் சிறியதானவற்றுக்குள்ளும் ஆஜராவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. . . . ‘இங்கிலாந்து கிறிஸ்தவ நாடு என்பது இப்போது இல்லை’ என்று [பிஷப் டுர்ஹாம்] சொன்னார்.”—தி நியூ யார்க் டைம்ஸ், மே 11, 1987, பக்கம் எ4.
“பலமணிநேரங்கள் கடுந்தீவிர வாக்குவாதத்துக்குப் பின்பு, [கிரீஸின்] சட்டமாமன்றம் விவாதிக்கப்பட்ட அந்தச் சட்டத்தை அங்கீகரித்து, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் உடைமையாகக் கொண்டிருந்த மிகப் பெரும் நில சொத்துக்களைப் பொதுவுடைமை அரசாங்கம் தனதாக ஏற்கக்கூடியதாக்கிற்று. . . . மேலும், அந்தச் சட்டம், விடுதிகள், பளிங்குக்கல் சுரங்கங்கள் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள் உட்பட சர்ச்சின் உயர்வாக மதித்த சொத்துக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்புள்ள சர்ச் ஆலோசனைக் குழுக்கள்மீதும் பொறுப்பு குழுக்கள்மீதும் குருக்களல்லாதவர்களுக்கு அதிகாரமளிக்கிறது.”—தி நியூ யார்க் டைம்ஸ், ஏப்ரல் 4, 1987, பக்கம் 3.
[பக்கம் 222-ன் படம்]
கடவுளுடைய கோபாக்கினையின் முதல் நான்கு கலசங்கள் முதல் நான்கு எக்காள ஊதல்களின் விளைவாக உண்டானவற்றிற்கு ஒப்பான வாதைகளைக் கொண்டுவருகின்றன
[பக்கம் 226-ன் படம்]
ஐந்தாவது கலசம் மூர்க்க மிருகத்தின் சிங்காசனத்தை, சாத்தான் அந்த மூர்க்க மிருகத்துக்குக் கொடுத்த அதிகாரமென வெளிப்படுத்திக் காட்டுகிறது
[பக்கம் 231-ன் படம்]
பேய்த்தன பிரச்சாரம் பூமியின் அதிபதிகளை அந்த ஒருமுகமான நிலைமையாகிய, ஹார்-மகெடனுக்குக் கூட்டிச் சேர்க்கிறது, அங்கே யெகோவாவின் ஆக்கினைத் தீர்ப்புகள் அவர்கள்மீது ஊற்றப்படும்
[பக்கம் 233-ன் படம்]
சாத்தானின் மாசுபடுத்தப்பட்ட ‘ஆகாயத்தால்’ தூண்டி நடத்தப்பட்டவர்கள் யெகோவாவின் நீதியுள்ள ஆக்கினைத்தீர்ப்புகளின் நிறைவேற்றத்தை அனுபவிக்க வேண்டும்