யெகோவாவின் நாளுக்கு ஆயத்தமாயிருங்கள்
‘நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், ஆயத்தமாயிருங்கள்.’ —மத்தேயு 24:44.
1. யெகோவாவின் நாளைக் குறித்து நாம் ஏன் அக்கறைகொள்ள வேண்டும்?
அது போர் நாள், பழிவாங்கும் நாள்; வேதனையும் துயரமும் மிகுந்த நாள்; அந்தகாரமும் பாழ்க்கடிப்புமிக்க நாள். நோவாவின் நாளில் பொல்லாத உலகை வெள்ளம் மூழ்கடித்தது போலவே யெகோவாவின் ‘பெரிதும் பயங்கரமுமான நாள்’ இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் மீது நிச்சயம் வரும். அது கட்டாயம் வரும். என்றாலும், ‘யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.’ (யோவேல் 2:30-32; ஆமோஸ் 5:18-20) சத்துருக்களை அழித்து, தமது ஜனங்களை கடவுள் பாதுகாப்பார். ‘யெகோவாவின் பெரிய நாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது’ என செப்பனியா தீர்க்கதரிசி அவசரவுணர்வுடன் அறிவித்தார். (செப்பனியா 1:14) ஆனால் இந்தத் தெய்வீக நியாயத்தீர்ப்பு எப்பொழுது நிறைவேற்றப்படும்?
2, 3. யெகோவாவின் நாளுக்கு நம்மை ஆயத்தமாக்குவது ஏன் இன்றியமையாதது?
2 “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்” என இயேசு கூறினார். (மாற்கு 13:32) நமக்குத் துல்லியமான நேரம் தெரியாததால், “தொடர்ந்து விழித்திருங்கள். . . . ஆயத்தமாயிருங்கள்” என்ற 2004 வருடாந்தர வசனத்திற்கு செவிசாய்ப்பது இன்றியமையாதது.—மத்தேயு 24:42, 44, NW.
3 ஆயத்தமாயிருப்பவர்கள் சடுதியில் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்பதையும் மற்றவர்கள் கைவிடப்படுவார்கள் என்பதையும் சுட்டிக் காட்டி இயேசு இவ்வாறு கூறினார்: “அப்பொழுது, இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.” (மத்தேயு 24:40, 41) நெருக்கடியான அந்த சமயத்தில், நம்முடைய தனிப்பட்ட சூழ்நிலை என்னவாக இருக்கும்? நாம் ஆயத்தமாயிருப்போமா, அல்லது திடுக்கிடும் விதத்தில் அந்த நாள் நம்மீது திடீரென வருமா? இவையெல்லாம் இப்பொழுது நாம் எடுக்கும் நடவடிக்கைகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது. யெகோவாவின் நாளுக்காக ஆயத்தமாயிருக்க வேண்டுமென்றால், இன்றைக்கு பரவலாக காணப்படும் மனப்பான்மையையும், ஆவிக்குரிய நிலைமையையும், வாழ்க்கை பாணிகளையும் தவிர்ப்பது முக்கியம்.
மெத்தனமான போக்கை தவிருங்கள்
4. நோவாவின் நாளைய ஜனங்கள் எப்படிப்பட்ட மனநிலையைக் காட்டினார்கள்?
4 நோவாவின் நாளை நினைத்துப் பாருங்கள். “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்” என பைபிள் கூறுகிறது. (எபிரெயர் 11:7) அந்தப் பேழை அசாதாரணமானதாகவும் எல்லார் கண்ணிலும் நன்கு படும்படியும் இருந்தது. அதோடு, நோவா ‘நீதியை பிரசங்கித்தவராக’ இருந்தார். (2 பேதுரு 2:5) நோவா பேழையைக் கட்டியதோ அவர் செய்த பிரசங்கமோ அந்நாளில் வாழ்ந்த மக்களை உந்துவிக்கவில்லை. ஏன்? ஏனென்றால், அவர்கள் “புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும்” வந்தார்கள். நோவாவின் செய்தியைக் கேட்டவர்கள் தங்களுடைய சொந்த காரியங்களிலும் இன்பங்களிலுமே மூழ்கியிருந்தார்கள், அதனால் “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்.”—மத்தேயு 24:38, 39.
5. லோத்துவின் நாளில் சோதோம் குடிமக்களுடைய மனப்பான்மை எப்படி இருந்தது?
5 லோத்துவின் நாட்களிலும் இதுவே சம்பவித்தது. வேதவசனங்கள் நமக்கு இவ்வாறு சொல்கின்றன: “ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.” (லூக்கா 17:28, 29) வரப்போகும் அழிவைக் குறித்து தேவதூதர்கள் எச்சரித்தப்பின் தனது மருமகன்களிடம் இதைப் பற்றி லோத்து பேசினார். ஆனால் அவர்களுடைய பார்வையில், ‘அவர் பரியாசம் பண்ணுகிறதாகக் கண்டது.’—ஆதியாகமம் 19:14.
6. நாம் எத்தகைய மனப்பான்மையை தவிர்க்க வேண்டும்?
6 நோவாவின் நாளிலும் லோத்துவின் நாளிலும் நடந்தது போலவே, “மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என இயேசு கூறினார். (மத்தேயு 24:39; லூக்கா 17:30) சொல்லப்போனால், மெத்தனமான போக்கு இன்றும் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இத்தகைய போக்கு நம்மையும் தொற்றிக்கொள்ளாமல் காத்துக்கொள்ள வேண்டும். சுவையான உணவை சாப்பிடுவதிலோ மதுபானத்தை மிதமாக குடிப்பதிலோ எந்தத் தவறுமில்லை. அதைப் போலவே, திருமணமும் கடவுளுடைய ஏற்பாடு. ஆனால் இத்தகைய விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமானதாகி, ஆவிக்குரிய விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டால், யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு நாம் தனிப்பட்ட விதமாக ஆயத்தமாயிருக்கிறோம் என சொல்ல முடியுமா?
7. எந்தவொரு வேலையிலும் இறங்குவதற்கு முன்பு என்ன கேள்வியை கேட்டுக்கொள்வது முக்கியம், ஏன்?
7 ‘காலம் குறுகியது’ என அப்போஸ்தலன் பவுல் கூறினார். ஆகவே, “மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போல . . . இருக்க வேண்டும்.” (1 கொரிந்தியர் 7:29-31) கடவுளால் கொடுக்கப்பட்ட பிரசங்க வேலையை முடிப்பதற்கு நமக்கு இன்னும் கொஞ்ச காலமே இருக்கிறது. (மத்தேயு 24:14) தம்பதியினரும்கூட தங்களுடைய வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கும் அளவுக்கு ஒருவர் மற்றவர் மீதே முழு கவனமும் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது என பவுல் புத்திமதி கூறினார். பவுல் பரிந்துரைப்பது மெத்தனமான போக்கிற்கு எதிரிடையானது என்பது தெளிவாகிறது. “தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் [“தொடர்ந்து,” NW] தேடுங்கள்” என இயேசு கூறினார். (மத்தேயு 6:33) எந்தவொரு தீர்மானமும் எடுப்பதற்கு முன்பு அல்லது எந்தவொரு வேலையிலும் இறங்குவதற்கு முன்பு, ‘என்னுடைய வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பதை இது எவ்வாறு பாதிக்கும்?’ என்ற முக்கியமான கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும்.
8. வாழ்க்கையின் அன்றாட காரியங்கள் நமது முக்கிய அக்கறையாக ஆகிவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்?
8 ஆவிக்குரிய காரியங்களை அலட்சியம் செய்யும் அளவுக்கு நாம் ஏற்கெனவே வாழ்க்கையின் அன்றாட காரியங்களில் மூழ்கிவிட்டிருந்தால் என்ன செய்வது? நம்முடைய வாழ்க்கை பாணியும் வேதாகமத்தைப் பற்றிய திருத்தமான அறிவு இல்லாத, ராஜ்ய அறிவிப்பாளர்களாக இல்லாத நமது அக்கம்பக்கத்தாருடைய வாழ்க்கை பாணியும் வித்தியாசமின்றி ஒரே விதமாக இருக்கிறதா? அப்படியென்றால், இந்த விஷயத்தைக் குறித்து நாம் ஜெபிப்பது அவசியம். சரியான மனப்பான்மையைப் பெற யெகோவா நமக்கு உதவி செய்வார். (ரோமர் 15:5, NW; பிலிப்பியர் 3:15, NW) ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பதற்கும், சரியானதை செய்வதற்கும், தமக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றுவதற்கும் அவர் நமக்கு உதவி செய்வார்.—ரோமர் 12:2; 2 கொரிந்தியர் 13:7.
ஆவிக்குரிய மயக்கத்தை தவிருங்கள்
9. வெளிப்படுத்துதல் 16:14-16 கூறுகிறபடி, ஆவிக்குரிய மயக்கத்தை தடுத்து நிறுத்துவது ஏன் முக்கியம்?
9 அர்மகெதோனில் ‘சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தைப்’ பற்றி பேசுகிற அதே தீர்க்கதரிசனம் சிலர் விழிப்புடனிருக்க மாட்டார்கள் என்பதையும் எச்சரிக்கிறது. “இதோ, நான் திருடனைப் போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்” என கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார். (வெளிப்படுத்துதல் 16:14-16) இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வஸ்திரங்கள் யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளாக நம்மை அடையாளம் காட்டுகிறவற்றைக் குறிக்கின்றன. ராஜ்ய அறிவிப்பாளர்களாக நாம் செய்யும் வேலையையும் நம் கிறிஸ்தவ நடத்தையையும் இவை உட்படுத்துகின்றன. நாம் கொஞ்சம் கொஞ்சமாக தூங்கி விழுகிறவர்களாக ஆகிவிட்டால், நம் கிறிஸ்தவ அடையாளம் என்ற ஆடை உரிக்கப்படலாம். அது வெட்கக்கேடானது, ஆபத்தானது. ஆவிக்குரிய மயக்க நிலைக்கு அல்லது களைப்புற்ற நிலைக்கு சென்றுவிடுவதை நாம் தவிர்க்க வேண்டும். இதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
10. ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடனிருக்க தினமும் பைபிள் வாசிப்பது எவ்வாறு உதவும்?
10 தொடர்ந்து விழித்திருந்து தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருப்பதன் அவசியத்தை பைபிள் அடிக்கடி வலியுறுத்திக் கூறுகிறது. உதாரணமாக, சுவிசேஷப் பதிவுகள் நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகின்றன: ‘தொடர்ந்து விழித்திருங்கள்’ (மத்தேயு 24:42, NW; 25:13; மாற்கு 13:35, 37); “ஆயத்தமாயிருங்கள்” (மத்தேயு 24:44); ‘தொடர்ந்து எச்சரிக்கையாயிருங்கள்’ (மாற்கு 13:33, NW). யெகோவாவின் நாள் இவ்வுலகத்தின் மீது திடீரென வரப்போவதைப் பற்றி குறிப்பிட்ட பிறகு, சக விசுவாசிகளை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு உந்துவிக்கிறார்: “மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.” (1 தெசலோனிக்கேயர் 5:6) பைபிளின் கடைசி புத்தகத்தில், தமது வருகை திடீரென நிகழும் என்பதை வலியுறுத்தி, மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்து இயேசு “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்” என்று கூறுகிறார். (வெளிப்படுத்துதல் 3:11; 22:7, 12, 20) பெரும்பாலான எபிரெய தீர்க்கதரிசிகளும்கூட யெகோவாவின் மகா நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றி விவரித்தார்கள், எச்சரித்தார்கள். (ஏசாயா 2:12, 17; எரேமியா 30:7; யோவேல் 2:11; செப்பனியா 3:8) தினமும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் படித்து, நாம் வாசித்தவற்றைப் பற்றி தியானிப்பது ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடனிருக்க நமக்கு பெரிதும் உதவும்.
11. ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடனிருக்க ஏன் தனிப்பட்ட பைபிள் படிப்பு இன்றியமையாதது?
11 “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வழங்கும் பைபிள் பிரசுரங்களை தனிப்பட்ட படிப்பில் ஊக்கமாக படிப்பது நாம் ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடனிருக்க எவ்வளவாய் உந்துவிக்கிறது! (மத்தேயு 24:45-47, NW) ஆனால் தனிப்பட்ட படிப்பு முன்னேறுவதாகவும் சீராகவும் இருந்தால்தான் பலன்தரும். (எபிரெயர் 5:14–6:3) நாம் பலமான ஆவிக்குரிய உணவை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இந்தக் காலத்தில் தனிப்பட்ட படிப்பிற்காக நேரம் கிடைப்பதே பெரும் சவாலாக இருக்கலாம். (எபேசியர் 5:15, 16) இருந்தாலும், பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நேரம் கிடைக்கும்போது மாத்திரமே படிப்பது போதாது. “விசுவாசத்திலே ஆரோக்கிய”த்துடனும் விழிப்புடனும் இருப்பதற்கு தவறாமல் தனிப்பட்ட படிப்பு படிப்பது இன்றியமையாதது.—தீத்து 1:14.
12. கிறிஸ்தவ கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவை ஆவிக்குரிய மயக்கத்தை எதிர்த்துப் போராட எவ்வாறு நமக்கு உதவுகின்றன?
12 கிறிஸ்தவ கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவையும் ஆவிக்குரிய மயக்கத்தை எதிர்த்துப் போராட நமக்கு உதவி புரிகின்றன. எப்படி? நாம் பெறும் போதனையின் மூலமாகவே. இப்படிப்பட்ட கூட்டங்களில், யெகோவாவின் நாள் சமீபமாயிருப்பதைப் பற்றி நமக்கு தவறாமல் நினைப்பூட்டுதல் கிடைக்கிறது அல்லவா? ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் உந்துவிப்பதற்கும்’ வாராந்தர கிறிஸ்தவ கூட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன. இத்தகைய உந்துவிப்பு ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடனிருக்க மிகவும் துணைபுரிகிறது. ‘நாளானது சமீபித்து வருகிறதை பார்க்கையில்’ தவறாமல் கூடிவரும்படி நமக்கு கட்டளை கொடுக்கப்படுவதில் ஆச்சரியமில்லையே.—எபிரெயர் 10:24, 25.
13. ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடனிருக்க எவ்வாறு கிறிஸ்தவ ஊழியம் நமக்கு உதவுகிறது?
13 கிறிஸ்தவ ஊழியத்தில் முழு இருதயத்தோடு ஈடுபடுவது தொடர்ந்து விழித்திருக்க துணைபுரிகிறது. காலங்களின் அடையாளங்களையும் அவற்றின் அர்த்தத்தையும் மனதில் பசுமையாக வைத்திருப்பதற்கு அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதைவிட சிறந்த வழி வேறு உண்டோ! நம்முடன் பைபிள் படிப்பவர்கள் முன்னேறி வருவதையும் கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்கேற்ப செயல்பட ஆரம்பிப்பதையும் பார்க்கும்போது, நம்முடைய அவசரவுணர்வும் அதிகரிக்கிறது. “நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிரு”ங்கள் என அப்போஸ்தலன் பேதுரு கூறினார். (1 பேதுரு 1:13) ‘கர்த்தருடைய வேலையில் எப்பொழுதும் நிறைய செய்வது’ ஆவிக்குரிய மயக்கத்திலிருந்து தெளிவடைய உதவும் அருமருந்தாகும்.—1 கொரிந்தியர் 15:58, NW.
ஆவிக்குரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாழ்க்கை பாணிகளை தவிருங்கள்
14. லூக்கா 21:34-36-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, எத்தகைய வாழ்க்கை பாணிகளைப் பற்றி இயேசு எச்சரித்தார்?
14 தமது பிரசன்னத்தைப் பற்றிய பெரிய தீர்க்கதரிசனத்தில், இயேசு மற்றொரு எச்சரிப்பையும் கொடுத்தார். அவர் இவ்வாறு கூறினார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்.” (லூக்கா 21:34-36) பொதுவாக மக்கள் பின்பற்றும் வாழ்க்கை பாணிகளை இயேசு துல்லியமாக விவரித்தார்; அதாவது பெருந்தீனி, குடிவெறி, கவலைகள் நிறைந்த வாழ்க்கைமுறை ஆகியவற்றை குறிப்பிட்டார்.
15. மிதமீறி உண்பதையும் குடிப்பதையும் நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
15 பெருந்தீனியும் மிதமிஞ்சி குடிப்பதும் பைபிள் நியமங்களுக்கு முரணாக இருக்கின்றன, ஆகவே இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். “மதுபானப் பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 23:20) ஆனால் இந்த வசனம் சொல்லுமளவுக்கு வெறித்தனமாக புசிப்பதும் குடிப்பதும்தான் ஒருவரின் ஆவிக்குரியத் தன்மையை ஆபத்திற்குள்ளாக்கும் என்று அர்த்தமல்ல. அதற்கு முன்பே அது ஒருவரை மயக்க நிலைக்கும் மந்த நிலைக்கும் கொண்டு சென்றுவிடும். “சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது” என பைபிள் நீதிமொழி ஒன்று கூறுகிறது. (நீதிமொழிகள் 13:4) இத்தகைய ஒருவர் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விரும்பலாம், ஆனால் அசட்டை மனப்பான்மையால் அந்த விருப்பம் நிறைவேறாமலேயே போகிறது.
16. குடும்பத் தேவைகளுக்காக கவலைப்பட்டு பாரமடைவதை நாம் எப்படி தவிர்க்கலாம்?
16 இயேசு எச்சரித்த வாழ்க்கையின் கவலைகள் யாவை? அவை சொந்தக் கவலைகள், குடும்பத்திற்கு தேவையானவற்றை அளிக்க வேண்டுமென்ற கவலைகள் போன்றவையாகும். இவை நம்மை பாரமடையச் செய்ய அனுமதிப்பது எவ்வளவு ஞானமற்றது! “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” என இயேசு கேட்டார். தமக்கு செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அவர் இவ்வாறு புத்திமதி கூறினார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.” ராஜ்ய அக்கறைகளுக்கு நம்முடைய வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதும் நமக்குத் தேவையானவற்றை யெகோவா கொடுப்பார் என்பதில் நம்பிக்கை வைப்பதும் கவலைகளை ஓரங்கட்டி வைக்கவும் விழிப்புடனிருக்கவும் நமக்கு உதவும்.—மத்தேயு 6:25-34.
17. பொருளாதார நாட்டங்கள் எவ்வாறு கவலையை உண்டாக்கலாம்?
17 கவலை என்பது பொருளுடைமைகளை நாடுவதாலும் வரலாம். உதாரணமாக, தங்களுடைய வருவாய்க்கு மேல் செலவு செய்வதன் மூலம் சிலர் தங்களுடைய வாழ்க்கையை சிக்கலாக்குகிறார்கள். வேறுசிலர் திடீர் பணக்காரராகும் திட்டங்களிலும், ரிஸ்க் நிறைந்த காரியங்களில் முதலீடு செய்வதிலும் சிக்கியிருக்கிறார்கள். மற்றவர்களோ பொருளாதார ரீதியில் ஏற்றம் காண உலகப்பிரகாரமான கல்வி எனும் ஏணியில் ஏறி தவித்திருக்கிறார்கள். வேலை வாய்ப்புக்கு ஓரளவு கல்வி தேவை என்பது உண்மைதான். ஆனால் உயர் கல்வி கற்பது அதிக நேரத்தை விழுங்குவதால் சிலர் தங்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் தீங்கிழைத்திருக்கிறார்கள். யெகோவாவின் நாள் நெருங்கி வருவதால் எப்பேர்ப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் இருப்போம்! பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9.
18. பொருளாசைமிக்க வாழ்க்கை பாணிக்குள் சிக்கிக்கொள்வதை தவிர்க்க நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமை எது?
18 தீர்மானங்கள் எடுக்கும்போது எது சரி எது தவறு என்பதை பகுத்துணரும் திறமையை வளர்த்துக் கொள்வது, பொருளாசைமிக்க வாழ்க்கை பாணிக்குள் இழுப்புண்டு போகாமலிருக்க இன்றியமையாததாகும். ‘முதிர்ச்சி வாய்ந்தவர்களுக்குரிய பலமான ஆவிக்குரிய ஆகாரத்தை’ தவறாமல் உட்கொண்டு வருவதன் மூலமும், ‘பயிற்சியினால் பகுத்தறியும் திறனை பெற்றிருப்பதன் மூலமும்’ இத்திறமையை வளர்த்துக் கொள்ளலாம். (எபிரெயர் 5:13, 14, NW) எவற்றிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்போது ‘அதிமுக்கியமானவற்றை’ நிச்சயப்படுத்திக் கொள்வதும்கூட தவறான தீர்மானங்கள் எடுப்பதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.—பிலிப்பியர் 1:10, NW.
19. ஆவிக்குரிய நாட்டங்களுக்கு சிறிதளவு நேரமே இருப்பதாக நாம் பகுத்துணர்ந்தால், என்ன செய்ய வேண்டும்?
19 பொருளாசைமிக்க வாழ்க்கை பாணி நம்மை குருடாக்கி, ஆவிக்குரிய நாட்டங்களுக்கு சிறிதளவு நேரமே அளிக்கும் அல்லது நேரமே இல்லாமல் செய்துவிடும். நாம் எவ்வாறு நம்மையே ஆராய்ந்து பார்த்து இத்தகைய வாழ்க்கை பாணியில் சிக்காமல் தவிர்க்க முடியும்? நம் வாழ்க்கையை எப்படி, எந்தளவுக்கு எளிமையாக்கலாம் என்பதை ஜெபத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூர்வ இஸ்ரவேலைச் சேர்ந்த சாலொமோன் ராஜா இவ்வாறு கூறினார்: “வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.” (பிரசங்கி 5:12) தேவையற்ற பொருளுடைமைகளை பராமரிப்பதே நம்மிடமிருந்து நிறைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடுகிறதா? எவ்வளவு அதிகம் வைத்திருக்கிறோமோ அவ்வளவு அதிகம் நாம் அவற்றை பராமரிக்க வேண்டும், பேணிப் பாதுகாக்க வேண்டும், காப்பீடு செய்ய வேண்டும். ஆனால் சில உடைமைகளை தவிர்ப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்வது நமக்கு நன்மை பயக்குமா?
எப்படியாகிலும், ஆயத்தமாயிருங்கள்
20, 21. (அ) யெகோவாவின் நாள் சம்பந்தமாக அப்போஸ்தலன் பேதுரு என்ன உறுதியளிக்கிறார்? (ஆ) யெகோவாவின் நாளுக்காக நாம் ஆயத்தமாயிருக்கையில் தொடர்ந்து செய்ய வேண்டிய செயல்கள் யாவை?
20 நோவாவின் நாளைய உலகம் முடிவுக்கு வந்தது, அது போலவே தற்போதைய ஒழுங்குமுறையும் முடிவுக்கு வரும். அப்போஸ்தலன் பேதுரு நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.” அடையாளப்பூர்வ வானங்களோ, அதாவது அரசாங்கங்களோ அடையாளப்பூர்வ பூமியோ, அதாவது கடவுளிடமிருந்து பிரிந்த மனிதவர்க்க உலகமோ கடவுளுடைய உக்கிர கோபத்திலிருந்து தப்ப முடியாது. அந்நாளுக்காக நாம் ஆயத்தமாயிருக்கிறோம் என எவ்வாறு நிரூபிக்கலாம் என்பதை சுட்டிக்காட்டி, பேதுரு இவ்வாறு கூறுகிறார்: “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்.”—2 பேதுரு 3:10-12.
21 தவறாமல் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதும் நற்செய்தியை அறிவிப்பதில் பங்குகொள்வதும் தேவபக்திக்குரிய இந்தச் செயல்களில் அடங்கும். யெகோவாவின் மகா நாளுக்காக பொறுமையுடன் காத்திருக்கையில் அவருக்கு நமது இருதயப்பூர்வ பக்தியை இச்செயல்கள் வாயிலாக தொடர்ந்து காட்டுவோமாக. நாம் ‘கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே தேவ சந்நிதியில் காணப்படும்படி’ நம்மாலான மிகச் சிறந்ததை செய்வோமாக.—2 பேதுரு 3:14.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
• யெகோவாவின் நாளுக்காக ஏன் ஆயத்தமாயிருக்க வேண்டும்?
• அன்றாட வாழ்க்கையிலேயே மூழ்கிவிட்டிருந்தால், நாம் என்ன செய்ய வேண்டும்?
• ஆவிக்குரிய மயக்கத்திலிருந்து வெளிவர எது நமக்கு உதவும்?
• நாம் என்னென்ன தீய வாழ்க்கை பாணிகளை தவிர்க்க வேண்டும், எவ்வாறு?
[பக்கம் 20, 21-ன் படங்கள்]
நோவாவின் நாளில் வாழ்ந்த ஜனங்கள், வரவிருந்த நியாயத்தீர்ப்பை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை—நீங்கள்?
[பக்கம் 23-ன் படம்]
ஆவிக்குரிய நாட்டங்களுக்கு அதிக நேரம் செலவழிக்க உங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்க முடியுமா?