நமக்கு விழிப்புணர்வு இன்னும் அதிகமாய் இப்பொழுது தேவை
“உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் [“தொடர்ந்து,” Nw] விழித்திருங்கள்.”—மத்தேயு 24:42.
1, 2. இந்த ஒழுங்குமுறையின் முடிவில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை எது காட்டுகிறது?
“எல்லாவற்றையும்விட போர்தான் 20-ம் நூற்றாண்டை மிக அதிகமாக பாதித்திருக்கிறது” என பில் எமட் என்ற ஆசிரியர் கூறுகிறார். மனித சரித்திரம் முழுவதிலும் போரும் வன்முறையும் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார், அதேசமயத்தில் அவர் மேலும் இவ்வாறு கூறுகிறார்: “போரையும் வன்முறையையும் பொறுத்தவரை தீவிரத்தில் மட்டும்தான் இருபதாம் நூற்றாண்டு வேறுபட்டிருக்கிறது, வேறு எந்த விதத்திலும் அல்ல. முதன்முதலாக உலகளவில் யுத்தத்தை சந்தித்தது இந்த நூற்றாண்டே . . . இதை வலியுறுத்திக் காட்டுவதைப் போல, இந்த நூற்றாண்டு ஒரு உலக யுத்தத்தை அல்ல, ஆனால் இரண்டு யுத்தங்களை சந்தித்திருக்கிறது.”
2 ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும்’ எழும்பி போர்கள் தொடுக்கும் என இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார். ஆனால் ‘கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கும் இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்குமான அடையாளத்தில்’ இவை ஒரேவொரு அம்சமே. இயேசு முன்னறிவித்த இந்தப் பெரிய தீர்க்கதரிசனத்தில், பஞ்சங்களையும் கொள்ளை நோய்களையும் பூமியதிர்ச்சிகளையும் குறிப்பிட்டார். (மத்தேயு 24:3, 7, 8; NW; லூக்கா 21:6, 7, 10, 11) பல்வேறு அம்சங்களில், இத்தகைய பேரழிவுகள் விஸ்தாரத்திலும் தீவிரத்திலும் அதிகரித்திருக்கின்றன. மனிதனுடைய துர்குணமும் பெருகிப் போயிருக்கிறது, கடவுளிடமும் சக மனிதரிடமும் அவன் காட்டும் மனப்பான்மை இதற்கு அத்தாட்சி. ஒழுக்கச் சீர்குலைவும், குற்றச்செயலிலும் வன்முறையிலும் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் இவற்றைத் தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றன. மனிதர்கள் தெய்வப் பிரியர்களாக அல்ல, ஆனால் பணப் பிரியர்களாக மாறியிருக்கிறார்கள், இன்பத்தை நாடுவதிலேயே மூழ்கியிருக்கிறார்கள். நாம் ‘கொடிய காலங்களில்’ வாழ்ந்து வருகிறோம் என்பதை இவையனைத்தும் நிரூபித்துக் காட்டுகின்றன.—2 தீமோத்தேயு 3:1-5; NW.
3. ‘காலங்களின் அடையாளங்கள்’ நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
3 மனித விவகாரங்கள் மேன்மேலும் மோசமாகிக்கொண்டே போகும் போக்கைப் பற்றி உங்களுடைய கருத்தென்ன? இன்றைய கொடிய சம்பவங்களை அநேகர் கண்டுகொள்வதே இல்லை, அதைக் குறித்து வருத்தப்படுவதும் இல்லை. ‘காலங்களின் அடையாளங்களுக்குரிய’ அர்த்தத்தை, செல்வாக்கும் அறிவாற்றலும் படைத்தவர்கள் பகுத்துணருவதில்லை; இந்த விஷயத்தில் மதத் தலைவர்களும்கூட சரியான வழிநடத்துதல் கொடுப்பதில்லை. (மத்தேயு 16:1-3) ஆனால் இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இவ்வாறு புத்திமதி கூறினார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் [“தொடர்ந்து,” NW] விழித்திருங்கள்.” (மத்தேயு 24:42) விழித்திருங்கள் என்று மட்டுமல்ல, ஆனால் தொடர்ந்து விழித்திருங்கள் என்று சொல்லி இயேசு உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து விழித்திருப்பதற்கு, நாம் உன்னிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறோம் என்பதை வெறுமனே ஒத்துக்கொள்வதைக் காட்டிலும், காலங்கள் கொடிய காலங்கள் என்பதை உணர்ந்துகொள்வதைக் காட்டிலும் அதிகத்தை இது அர்த்தப்படுத்துகிறது. “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று” என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு வேண்டும். (1 பேதுரு 4:7) அப்பொழுதுதான் நாம் அவசரவுணர்வோடு விழிப்புடன் இருப்போம். ஆகவே, நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி என்னவென்றால்: ‘முடிவு சமீபம் என்ற நமது நம்பிக்கையைப் பலப்படுத்த எது நமக்கு உதவும்?’
4, 5. (அ) இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் அழிவு சமீபமாயிருக்கிறது என்ற நமது நம்பிக்கையை எது பலப்படுத்தும், ஏன்? (ஆ) நோவாவின் நாளுக்கும் மனுஷகுமாரனுடைய பிரசன்னத்திற்கும் இடையேயுள்ள ஓர் ஒப்புமை என்ன?
4 மனித சரித்திரத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு சம்பவம் நிகழ்ந்த காலத்திற்கு முன்பு, அதாவது நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்கு முன்பு நிலைமைகள் எப்படி இருந்தன என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஜனங்களெல்லாரும் மிக மோசமானவர்களாய் இருந்ததால் அது யெகோவாவின் “இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” ஆகவே அவர் இவ்வாறு அறிவித்தார்: “நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், . . . நிக்கிரகம் பண்ணுவேன்.” (ஆதியாகமம் 6:6, 7) அவர் சொன்னபடியே செய்தார். அந்தக் காலத்திற்கும் நம்முடைய காலத்திற்கும் இடையேயுள்ள ஒப்புமைகளுக்கு நமது கவனத்தை ஈர்த்து, இயேசு இவ்வாறு கூறினார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:37.
5 ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த உலகைக் குறித்து யெகோவா உணர்ந்ததைப் போலவே தற்போதைய உலகத்தைக் குறித்தும் அவர் உணருகிறார் என நாம் எண்ணுவது நியாயமானதே. நோவாவின் நாளில் தேவபக்தியற்ற உலகத்திற்கு அழிவை கொண்டுவந்ததால், இன்றைய பொல்லாத உலகத்தையும் அழிப்பார் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் காலத்திற்கும் நம்முடைய காலத்திற்கும் இடையேயுள்ள ஒப்புமைகளைத் தெளிவாக மனதில் வைத்திருப்பது, தற்போதைய உலகத்தின் அழிவு சமீபமாயிருக்கிறது என்ற நமது நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும். அப்படியானால், அந்த ஒப்புமைகள் யாவை? குறைந்தபட்சம் ஐந்து ஒப்புமைகள் இருக்கின்றன. முதல் ஒப்புமை என்னவென்றால், வரக்கூடிய அழிவை பற்றிய தெள்ளத் தெளிவான எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகும்.
“தற்காலத்திலே காணாதவைகளைக்” குறித்து எச்சரிக்கப்பட்டார்கள்
6. நோவாவின் நாளில் யெகோவா என்ன முன்னெச்சரிக்கை கொடுத்ததாக தோன்றுகிறது?
6 நோவாவின் நாளில் யெகோவா இவ்வாறு அறிவித்தார்: “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்.” (ஆதியாகமம் 6:3) பொ.ச.மு. 2490-ல் பிறப்பிக்கப்பட்ட இந்தத் தெய்வீக கட்டளை தேவபக்தியற்ற அன்றைய உலகத்தின் முடிவு ஆரம்பித்ததை சுட்டிக்காட்டியது. அன்று வாழ்ந்தவர்களுக்கு இது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! யெகோவா பின்னர் நோவாவிடம் கூறியதைப் போலவே வெறும் 120 வருஷத்தில், ‘வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க [அவர்] பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணவிருந்தார்.’—ஆதியாகமம் 6:17.
7. (அ) ஜலப்பிரளயத்தைப் பற்றிய எச்சரிக்கைக்கு நோவா எப்படி பிரதிபலித்தார்? (ஆ) இந்த ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றிய எச்சரிக்கைகளுக்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்?
7 வரக்கூடிய பேரழிவைப் பற்றிய எச்சரிப்பை பல பத்தாண்டுகளுக்கு முன்பே நோவா பெற்றார், தப்பிப்பிழைப்பதற்கு ஆயத்தமாகும் வகையில் காலத்தை ஞானமாகவும் பயன்படுத்தினார். “நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்” என அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். (எபிரெயர் 11:7) நம்மைப் பற்றியென்ன? இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்கள் 1914-ல் ஆரம்பித்து சுமார் 90 ஆண்டுகள் கடந்துவிட்டன. நாம் நிச்சயமாகவே இப்பொழுது ‘முடிவு காலத்தில்’ வாழ்கிறோம். (தானியேல் 12:4) நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளுக்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என பைபிள் கூறுகிறது. (1 யோவான் 2:17) ஆகவே யெகோவாவின் சித்தத்தை மிகவும் அவசரவுணர்வுடன் செய்வதற்கு இதுவே காலம்.
8, 9. நவீன காலங்களில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் யாவை, அவை எவ்வாறு அறிவிக்கப்படுகின்றன?
8 இந்த ஒழுங்குமுறை அழிவுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பதை நவீன காலங்களில் உண்மையுள்ள பைபிள் மாணாக்கர்கள் கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்ட வேதவசனங்களிலிருந்து அறிந்து கொண்டார்கள். இதை நாம் நம்புகிறோமா? இயேசு கிறிஸ்து தெளிவாக சொன்னதை கவனியுங்கள்: “உலகமுண்டானது முதல் இது வரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.” (மத்தேயு 24:21) கடவுளால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியாய் வந்து, மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிப்பது போல மனிதரை தாம் பிரிக்கப் போவதாகவும் இயேசு கூறினார். தகுதியற்றவர்கள் ‘நித்திய ஆக்கினையை அடைவார்கள், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடைவார்கள்’ என்றார்.—மத்தேயு 25:31-33, 46.
9 “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” அளிக்கும் ஆவிக்குரிய உணவின் வாயிலாக காலத்திற்கேற்ற நினைப்பூட்டுதல்களைத் தந்து இந்த எச்சரிக்கைகளுக்கு யெகோவா தமது ஜனங்களுடைய கவனத்தைத் திருப்புகிறார். (மத்தேயு 24:45-47, NW) மேலும், “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது” என எல்லா தேசத்தாருக்கும் குலத்தாருக்கும் பாஷைக்காரருக்கும் மக்களுக்கும் அறிவிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 14:6, 7) கடவுளுடைய ராஜ்யம் விரைவில் மனித ஆட்சியை நீக்கப் போகிறது என்ற எச்சரிப்பே யெகோவாவின் சாட்சிகளால் உலகெங்கும் பிரசங்கிக்கப்படும் ராஜ்ய செய்தியின் இன்றியமையாத பாகமாகும். (தானியேல் 2:44) இந்த எச்சரிப்பை இலேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சர்வ வல்லமையுள்ள கடவுள் எப்பொழுதும் தமது வாக்குறுதிகளை காப்பாற்றுகிறவர். (ஏசாயா 55:10, 11) இதை அவர் நோவாவின் நாளில் நிரூபித்துக் காட்டினார், நம்முடைய நாளிலும் நிரூபித்துக் காட்டுவார்.—2 பேதுரு 3:3-7.
பாலியல் சீர்கேடு தலைவிரித்தாடுகிறது
10. நோவாவின் நாளில் பாலியல் நெறிபிறழ்வு எந்தளவு காணப்பட்டது?
10 மற்றொரு வகையில் நம்முடைய காலம் நோவாவின் காலத்துடன் ஒத்திருக்கிறது. கடவுளால் கொடுக்கப்பட்ட பாலுணர்வை கனத்துக்குரிய விதத்தில் திருமணத்தில் பயன்படுத்தி, மனித இனத்தால் இந்தப் ‘பூமியை நிரப்பும்படி’ முதல் மனிதனுக்கும் மனுஷிக்கும் யெகோவா கட்டளையிட்டிருந்தார். (ஆதியாகமம் 1:28) நோவாவின் நாளில், கீழ்ப்படியாத தேவதூதர்கள் வக்கிர பாலியல் பழக்கத்தால் மனிதகுலத்தை கறைப்படுத்தினார்கள். அவர்கள் இந்தப் பூமிக்கு வந்து, மாம்ச உடல் எடுத்து, அழகிய பெண்களுடன் வாழ்ந்து, நெபிலிம் என அழைக்கப்படும் பாதி மனிதனும் பாதி பிசாசுமான சந்ததியைப் பிறப்பித்தார்கள். (ஆதியாகமம் 6:2, 4) மோக வெறிபிடித்த இந்தத் தேவதூதர்களின் பாவம், சோதோம் கொமோராவில் செய்யப்பட்ட வக்கிர பாலியல் பழக்கங்களுக்கு ஒப்பிடப்படுகிறது. (யூதா 6, 7) இதன் விளைவாக, அந்நாட்களில் பாலியல் நெறிபிறழ்வு எங்கும் பரவியிருந்தது.
11. நம்முடைய காலத்தில் நிலவும் ஒழுக்கச் சூழல் நோவாவின் காலத்துடன் எப்படி ஒத்திருக்கிறது?
11 இன்று எத்தகைய ஒழுக்கச் சூழல் நிலவுகிறது? இந்தக் கடைசி நாட்களில், அநேகருடைய வாழ்க்கையில் முதலிடம் பெறுவது பாலியலே. இப்படிப்பட்டவர்களை ‘எல்லா ஒழுக்கவுணர்வும் மரத்துப்போனவர்கள்’ என்றும், ‘எல்லா வகை அசுத்தத்தையும் பேராசையுடன் நடப்பிக்க தங்களை ஒழுக்கக்கேட்டிற்கு’ அர்ப்பணித்து விட்டவர்கள் என்றும் பவுல் தெளிவாக வர்ணிக்கிறார். (எபேசியர் 4:19, NW) ஆபாசம், திருமணத்திற்கு முன் பாலுறவு, சிறார் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினப்புணர்ச்சி ஆகியவை சர்வ சாதாரணமாக காணப்படுகின்றன. சிலர் ஏற்கெனவே தங்கள் “தப்பிதத்திற்குத் தகுதியான பலனை” பால்வினை நோய்கள், குடும்ப முறிவு, சமூக பிரச்சினைகள் போன்றவற்றின் வடிவில் ‘தங்களுக்குள் அடைந்து’ வருகிறார்கள்.—ரோமர் 1:26, 27.
12. ஏன் தீமையின் மீது வெறுப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
12 நோவாவின் காலத்தில், யெகோவா பெரும் ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்து செக்ஸ் பைத்தியம் பிடித்த அந்த உலகுக்கு ஒரு முடிவு கட்டினார். நாம் வாழும் காலமும் நோவாவின் காலத்தைப் போலவே இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. வரப்போகும் “மிகுந்த உபத்திரவம்” இந்த உலகிலிருந்து ‘வேசிமார்க்கத்தாரையும், விக்கிரகாராதனைக்காரரையும், விபசாரக்காரரையும், சுயபுணர்ச்சிக்காரரையும் ஆண்புணர்ச்சிக்காரரையும்’ அடியோடு அழித்துவிடும். (மத்தேயு 24:21; 1 கொரிந்தியர் 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8) தீமையின் மீது வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டு, ஒழுக்கயீனத்திற்கு வழிநடத்தும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பது எவ்வளவு அவசரமானது!—சங்கீதம் 97:10; 1 கொரிந்தியர் 6:18.
பூமி ‘வன்முறையினால் நிறைந்திருக்கிறது’
13. நோவாவின் நாளில், ஏன் இந்தப் பூமி ‘வன்முறையினால் நிறைந்திருந்தது’?
13 நோவாவின் நாளில் நிலவிய மற்றொரு அம்சத்தை சுட்டிக் காட்டி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் [“வன்முறையினால்,” பொது மொழிபெயர்ப்பு] நிறைந்திருந்தது.” (ஆதியாகமம் 6:11) உண்மையில் வன்முறை என்பது புதிய ஒன்றல்ல. ஆதாமின் மகன் காயீன், நீதிமானாக விளங்கிய தன் சகோதரனை கொலை செய்தான். (ஆதியாகமம் 4:8) தனது நாளில் நிலவிய மூர்க்கத்தனமான குணத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பாடலை லாமேக்கு இயற்றினார்; தற்காப்புக்காக அதில் தான் ஒரு வாலிபனைக் கொலை செய்ததைப் பற்றி வீராப்பாக எழுதினார். (ஆதியாகமம் 4:23, 24) வன்முறையின் அளவைப் பொறுத்ததில், நோவாவின் நாள் வேறுபட்டிருந்தது. கடவுளுடைய கீழ்ப்படியாத குமாரர்களாகிய தேவதூதர்கள் பூமியில் பெண்களை மணமுடித்துக் கொண்டு நெபிலிம் என்ற சந்ததியைப் பிறப்பித்தார்கள்; அதனால் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு வன்முறை பெருகியது. இந்த மூர்க்க அரக்கர்கள் “வீழ்த்துபவர்களாக”—“மற்றவர்களை கீழே விழச் செய்பவர்களாக”—இருந்தார்கள். (ஆதியாகமம் 6:4, NW அடிக்குறிப்பு) அதன் விளைவாக, இந்தப் பூமி ‘வன்முறையினால் நிறைந்திருந்தது.’ (ஆதியாகமம் 6:13, பொ.மொ.) இத்தகைய சூழலில் தனது குடும்பத்தினரை வளர்ப்பதற்கு நோவா பட்ட கஷ்டங்களை கற்பனை செய்து பாருங்கள்! என்றாலும், நோவா ‘அந்தச் சந்ததியில் யெகோவாவுக்கு முன்பாக நீதிமானாக’ விளங்கினார்.—ஆதியாகமம் 7:1.
14. இந்த உலகம் எப்படி ‘வன்முறை நிறைந்த’ ஒன்றாக ஆனது?
14 காலம்காலமாக மனிதர்களுடைய இரத்தத்தில் வன்முறை ஊறிப்போயிருக்கிறது. ஆனால் நோவாவின் நாளைப் போலவே நம்முடைய நாளிலும் வன்முறை முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு புரையோடிக் கிடக்கிறது. வீட்டில் வன்முறை, பயங்கரவாத செயல்கள், படுகொலைகள், எந்தவித நோக்கமுமின்றி துப்பாக்கியால் ஏராளமானோரை சுட்டுத்தள்ளுதல் ஆகியவை பற்றிய செய்திகளை அன்றாடம் கேட்கிறோம். இது போதாதென்று போர்களில் இரத்தம் சிந்துதல் வேறு! இந்தப் பூமி மறுபடியும் வன்முறையால் நிறைந்திருக்கிறது. ஏன்? இது அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதற்கான பதில், நோவாவின் நாளுடன் பொருந்துகிற மற்றொரு அம்சத்தை வெளிப்படுத்துகிறது.
15. (அ) கடைசி நாட்களில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என்ன? (ஆ) எதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்?
15 கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் 1914-ல் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டபோது, மணிமுடி சூடிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்து வரலாறு காணாத நடவடிக்கையை எடுத்தார். பிசாசாகிய சாத்தானும் அவனைச் சேர்ந்த பிசாசுகளும் பரலோகத்திலிருந்து பூமிக்கு அருகில் தள்ளப்பட்டனர். (வெளிப்படுத்துதல் 12:9-12) ஜலப்பிரளயத்திற்கு முன்பு, கீழ்ப்படியாத தேவதூதர்கள் பரலோக ஸ்தானத்தை தாங்களாகவே துறந்தனர்; ஆனால் நவீன காலங்களில், அவர்கள் பலவந்தமாக தள்ளப்பட்டனர். இனிமேலும் தவறான மாம்ச இன்பங்களில் திளைப்பதற்கு மனித சரீரம் தரித்து பூமிக்கு வர அவர்களால் முடியாது. அதனால் வெறுப்படைந்து, கோபங்கொண்டு, வரக்கூடிய நியாயத்தீர்ப்புக்குப் பயந்து, நோவாவின் நாளைவிட மிகப் பெரிய அளவில் மனிதநேயமற்ற குற்றச்செயல்களும் வன்முறையும் புரிவதற்கு மனிதரையும் அமைப்புகளையும் தூண்டுகின்றனர். ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த காலத்தில் கீழ்ப்படியாத தேவதூதர்களும் அவர்களுடைய சந்ததியும் இந்தப் பூமியை துன்மார்க்கத்தால் நிரப்பியபோது யெகோவா அதை துடைத்தழித்தார். இதைத்தான் நம்முடைய நாளிலும் செய்வார் என்பதில் ஆணித்தரமாக இருக்கலாம்! (சங்கீதம் 37:10) என்றாலும், விடுதலை சமீபம் என்பதை இன்று விழிப்புடனிருப்பவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
செய்தி பிரசங்கிக்கப்படுகிறது
16, 17. நோவாவின் நாளுக்கும் நம்முடைய நாளுக்கும் இடையேயுள்ள நான்காவது ஒப்புமை என்ன?
16 ஜலப்பிரளயத்திற்கு முன்னான உலகத்திற்கும் நம்முடைய நாளுக்கும் இடையேயுள்ள நான்காவது ஒப்புமையை நோவாவுக்கு கொடுக்கப்பட்ட வேலையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். நோவா ஒரு பெரிய பேழையைக் கட்டினார். அவர் ‘பிரசங்கிப்பவராகவும்’ இருந்தார். (2 பேதுரு 2:5) என்ன செய்தியை அவர் பிரசங்கித்தார்? மனந்திரும்புவதும் வரப்போகும் அழிவைப் பற்றி எச்சரிப்பதும் நோவாவின் பிரசங்கத்தில் உட்பட்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை. நோவாவின் காலத்தில் வாழ்ந்த ஜனங்கள் “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்” என இயேசு கூறினார்.—மத்தேயு 24:38, 39.
17 அதைப் போலவே, பிரசங்கிப்பதற்கு தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை யெகோவாவின் சாட்சிகள் ஊக்கமாய் நிறைவேற்றுவதால் கடவுளுடைய ராஜ்ய செய்தி உலகெங்கும் அறிவிக்கப்படுகிறது. ஏறக்குறைய உலகத்தின் எல்லா பாகத்திலும் வாழும் ஜனங்கள் தங்களுடைய சொந்த மொழியில் ராஜ்ய செய்தியை கேட்கவோ வாசிக்கவோ முடிகிறது. யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கும் காவற்கோபுரம் பத்திரிகை 140-க்கும் அதிகமான மொழிகளில் 2,50,00,000-க்கும் மேலான பிரதிகள் அச்சிடப்படுகிறது. உண்மையிலேயே கடவுளுடைய ராஜ்யத்தின் செய்தி “பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும்” பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. கடவுள் திருப்திப்படும் அளவுக்கு இந்த வேலை செய்து முடிக்கப்படும்போது முடிவு கண்டிப்பாக வரும்.—மத்தேயு 24:14.
18. நமது பிரசங்க வேலைக்கு பலர் காட்டும் பிரதிபலிப்பு எவ்வாறு நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்களுடைய பிரதிபலிப்புடன் ஒத்திருக்கிறது?
18 ஆவிக்குரிய காரியங்களில் ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலத்தில் நிலவிய அக்கறையின்மையையும் ஒழுக்கச் சீர்குலைவையும் சிந்தித்துப் பார்க்கையில், உண்மையை ஏற்காத அயலார்களால் நோவாவின் குடும்பத்தார் எதிர்ப்பட்ட பரிகாசத்தையும் நிந்தையையும் கற்பனை செய்து பார்ப்பது கடினமல்ல. பரிகாசத்தின் மத்தியிலும், அன்று முடிவு வந்தது. அதைப் போலவே, கடைசி நாட்களிலும் ‘பரியாசக்காரர் பரிகசிப்பது’ அதிகமாக இருக்கும். என்றாலும், “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்” என பைபிள் கூறுகிறது. (2 பேதுரு 3:3, 4, 10) குறிக்கப்பட்ட நாளில் அது நிச்சயம் வரும், தாமதிக்காது. (ஆபகூக் 2:3) நாம் தொடர்ந்து விழித்திருப்பது எவ்வளவு ஞானமானது!
வெகு சிலரே தப்பிப்பிழைப்பர்
19, 20. ஜலப்பிரளயத்திற்கும் தற்போதைய ஒழுங்கு முறையின் அழிவுக்கும் இடையே என்ன ஒப்புமையை கவனிக்கலாம்?
19 துன்மார்க்க ஜனங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட அழிவு ஆகிய அம்சங்களில் மட்டுமல்ல, வேறு அம்சங்களிலும் நோவாவின் நாளுக்கும் நம்முடைய நாளுக்கும் இடையே ஒப்புமைகள் உள்ளன. அன்று ஜலப்பிரளயத்தில் சிலர் தப்பிப்பிழைத்ததைப் போலவே இன்றைய ஒழுங்கு முறையின் அழிவிலும் சிலர் தப்பிப்பிழைப்பார்கள். ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் சாந்தகுணமிக்கவர்களாக இருந்தார்கள், அன்றிருந்த ஜனங்களைப் போல அவர்கள் வாழவில்லை. அவர்கள் தெய்வீக எச்சரிப்புக்கு செவிசாய்த்தார்கள், அந்நாளைய பொல்லாத உலகத்திலிருந்து தங்களை தனியே பிரித்து வைத்துக் கொண்டார்கள். “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” என பைபிள் கூறுகிறது. “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.” (ஆதியாகமம் 6:8, 9) முழு மனிதவர்க்கத்தினரில், ஒரேவொரு குடும்பம், அதாவது “சிலராகிய எட்டுப் பேர் மாத்திரம் . . . ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.” (1 பேதுரு 3:20) “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்ற கட்டளையை அவர்களுக்கு யெகோவா தேவன் கொடுத்தார்.—ஆதியாகமம் 9:1.
20 “திரளான கூட்டமாகிய” ஜனங்கள் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து வருவார்கள்’ என கடவுளுடைய வார்த்தை உறுதியளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 14) திரளான கூட்டத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? இயேசு தாமே இவ்வாறு கூறினார்: “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) இப்பொழுது பூமியில் வாழும் கோடிக்கணக்கான ஜனங்களுடன் ஒப்பிடும்போது, வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைப்போர் வெகு சிலரே. ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்தவர்களைப் போலவே இவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம். தப்பிப்பிழைப்பவர்கள் புதிய பூமிக்குரிய சமுதாயத்தின் பாகமாக சிலகாலத்திற்கு பிள்ளைகளைப் பிறப்பிப்பவர்களாக இருக்கலாம்.—ஏசாயா 65:23.
‘தொடர்ந்து விழித்திருங்கள்’
21, 22. (அ) ஜலப்பிரளயத்தைப் பற்றிய விவரப்பதிவை கலந்தாலோசித்தது எவ்வாறு உங்களுக்கு பயனளித்திருக்கிறது? (ஆ) 2004-ன் வருடாந்தர வசனம் என்ன, அதன் அறிவுரைக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்?
21 ஜலப்பிரளயம் வெகு காலத்திற்கு முன்பு சம்பவித்தது போல தோன்றினாலும், நாம் அலட்சியப்படுத்தக் கூடாத ஓர் எச்சரிக்கையை அது தெளிவாக கொடுக்கிறது. (ரோமர் 15:4) நோவாவின் நாளுக்கும் நம்முடைய நாளுக்குமுரிய ஒப்புமைகள் நம்முடைய காலத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அதிக உணர்வுள்ளவர்களாய் இருப்பதற்கும், பொல்லாத ஜனங்கள் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற திருடனைப் போல இயேசு வரவிருப்பதால் விழிப்புடன் இருப்பதற்கும் நம்மை உந்துவிக்க வேண்டும்.
22 இன்று, இயேசு கிறிஸ்து பிரமாண்டமான அளவில் ஆவிக்குரிய கட்டுமான வேலையை வழிநடத்தி வருகிறார். மெய் வணக்கத்தாருடைய பாதுகாப்பிற்கும் தப்பிப்பிழைத்தலுக்கும் பேழையைப் போன்ற ஆவிக்குரிய பரதீஸ் இருக்கிறது. (2 கொரிந்தியர் 12:3, 4) மிகுந்த உபத்திரவத்தில் பாதுகாக்கப்படுவதற்கு நாம் அந்தப் பரதீஸில் தொடர்ந்திருக்க வேண்டும். ஆவிக்குரிய பரதீஸுக்கு வெளியே சாத்தானிய உலகம் இருக்கிறது, அது ஆவிக்குரிய விதத்தில் தூக்க மயக்கத்தில் இருப்பவர்களை விழுங்குவதற்கு தயாராயிருக்கிறது. நாம் ‘தொடர்ந்து விழித்திருந்து’ யெகோவாவின் நாளுக்கு ஆயத்தமானவர்களாக நிரூபிக்க வேண்டும்.—மத்தேயு 24:42, 44.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
• தமது வருகையைக் குறித்து இயேசு கொடுத்த புத்திமதி என்ன?
• தமது பிரசன்னத்தை இயேசு எதனுடன் ஒப்பிடுகிறார்?
• எந்த விதங்களில் நம்முடைய நாள் நோவாவின் நாளுடன் ஒத்திருக்கிறது?
• நோவாவின் நாளுக்கும் நமது நாளுக்கும் உள்ள ஒப்புமைகளுக்கு கவனம் செலுத்துவது எவ்வாறு நம் அவசரவுணர்வை தூண்ட வேண்டும்?
[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]
2004 வருடாந்தர வசனம்: ‘தொடர்ந்து விழித்திருங்கள். . . . ஆயத்தமாயிருங்கள்.’—மத்தேயு 24:42, 44, NW.
[பக்கம் 15-ன் படம்]
நோவா தெய்வீக எச்சரிப்புக்கு செவிசாய்த்தார். அதைப் போல நாமும் செவிசாய்க்கிறோமா?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்”