ஓர் இரகசியம்—வேசியாகிய அந்த மகா பாபிலோன் யார்?
ஒரு பெண், மோசமான வேசி, கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தியவள், கொல்லப்படுகிறாள், அழிக்கப்படுகிறாள். ஆனால் இது சாதாரண அழிவு அல்ல. இந்த அழிவை வித்தியாசப்படுத்துவது எது? அதை அழிப்பது ஒரு மிருகம், ஒரு மூர்க்க மிருகம். அது அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவள் மாம்சத்தைப் பட்சித்து, எஞ்சிய பாகங்களை அக்கினிக்கு இறையாக வைக்கிறது. செல்வாக்கு மிகுந்த இந்தப் பெண் யார்? அவளை ஏன் ஒரு மூர்க்க மிருகம் தாக்குகிறது? இந்தக் கொடிய முடிவுக்குப் பாத்திரமாக அவள் என்ன செய்திருக்கிறாள்?a—வெளிப்படுத்துதல் 17:16, 17.
இது உட்சூழ்ச்சி கொண்ட ஓர் இரகசிய கதைக்கு அடிப்படையாக இருக்கக்கூடும்—ஒரு நாவல் கதையின் நிகழ்ச்சிக்கூறாக அமையவில்லை. நிறைவேற்றத்தின் பாதையில் இருக்கும் ஒரு சரித்திர உண்மையாக இருக்கிறது. இது உங்கள் கவனத்துக்குரிய ஒன்று, ஏனென்றால் இந்த மோசமான வேசி இந்தச் சமயத்திலுங்கூட உங்கள் வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்துகிறவளாய் இருக்கக்கூடும். மேலும், நீங்கள் அவளோடு நிலைத்திருப்பீர்களா அல்லது அவளை விட்டுவிடுவீர்களா என்பது ஜீவனுக்கும் மரணத்துக்குமான வித்தியாசத்தைக் குறிக்கக்கூடும். எனவே அவள் யார்?
அந்த இரகசிய பெண்ணின் ஆதரவாளர்கள்
இந்தப் பெண், இந்த வெட்கங்கெட்ட நச்சுக்கவர்ச்சிக் கொண்ட பெண், பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இவ்விதமாய் விவரிக்கப்படுகிறாள்: “ஆவிக்குள் என்னை [தேவதூதன்] வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும், இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், இரகசியம், ‘மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்’ என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.”—வெளிப்படுத்துதல் 17:3–5.
இந்த “மகா பாபிலோன்” பிறர் மதிப்பைக் கோரும் ஒரு பெண்ணாக இருக்கவேண்டும், ஏனென்றால் அவள் “திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற”தாக வசனம் 1-ல் பதிவு கூறுகிறது. அது எதைக் குறிக்கிறது? கடவுளுடைய தூதன் யோவானுக்குப் பின்வருமாறு விளக்கினான்: “அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.” (வெளிப்படுத்துதல் 17:15) இவள் உலக முழுவதும் செல்வாக்குடைய ஒரு வேசி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவள் பொதுச் சந்தை வேசியல்ல. அவள் “வேசிகளுக்குத் தாய்,” விடுதியின் தலைவி. வேசித்தனத்தைக் குறித்ததில், அவள் உத்தரவுகள் கொடுக்கிறாள். ஆனால் அவளுக்கென்று விசேஷ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
அந்த மகா வேசியின் தயவுபெற்ற அவளுடைய ஆதரவாளர்கள் யார் என்பதைத் தேவதூதன் வெளிப்படுத்துகிறான். அவன் அவர்களை எவ்விதம் அடையாளங் காட்டுகிறான்? மகா பாபிலோனோடு “பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவர்களுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே,” என்று அவன் சொல்லுகிறான். (வெளிப்படுத்துதல் 17:1) இவள் உலகத்தின் அரசியல் ஆட்சியாளர்களை, “பூமியின் ராஜாக்களைக்”கூட கவர்ந்திழுக்குமளவுக்கு அவர்களுடன் நல்ல தொடர்புடைய ஒரு கவர்ச்சி மிகுந்த பெண்ணாக இருக்க வேண்டும்! எனவே அவள் யார்?
அவளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்று தேவதூதன் கூறுகிறான். அது ஓர் இரகசிய பெயர், “மகா பாபிலோன்.” அவள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கு இப்பொழுது இரண்டு துப்புகள் உள்ளன—ஒன்று அவள் ஆதரவு காண்பிக்கும் அவளுடைய கட்சிக்காரர்கள், மற்றொன்று மகா பாபிலோன் என்ற அவளுடைய பெயர். அந்தத் துப்புகள் என்ன முடிவுக்கு வழிநடத்துகிறது? (w89 4⁄1)
[அடிக்குறிப்புகள்]
a இவற்றையும், இந்த இரகசிய பெண் சம்பந்தப்பட்ட வேறு கேள்விகளையும் சிந்திக்கும் காவற்கோபுரம் பத்திரிகையின் நான்கு இதழ்களில் இது முதலாவதாகும்.