அவர்களுடைய மதிப்புக்குரிய நிலைக்கு மரியாதை கொடுக்கிறீர்களா?
மிருகங்களைப்போல் வளைத்து பிடித்து, விவரிக்க முடியாதளவான அழுக்கிலும் துர்நாற்றத்திலும் ஒன்றாகத் திணித்து பூட்டிவைக்கப்பட்டவர்களாய், ஆப்பிரிக்கர்கள் சரக்குகளைப்போல் அமெரிக்காக்களுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டனர். குறைந்தபட்சம் அவர்களில் பாதிப்பேராவது தாங்கள் போய்ச்சேரும் இடத்தை எட்டுவதற்கு முன்பாக சாகும்படி எதிர்பார்க்கப்பட்டனர். குடும்ப உறுப்பினர்கள், ஒருவரையொருவர் மறுபடியும் ஒருபோதும் பார்க்க முடியாதபடி கொடூரமாய்ப் பிரிக்கப்பட்டனர். இந்த அடிமை வியாபாரம் மனிதன் மனிதனையே காட்டுமிராண்டித்தனமாக நடத்தின மிகக் கொடிய நடத்தைகளில் ஒன்றாக இருந்தது. தற்காப்பற்ற ஆப்பிரிக்க பழங்குடியினரை பலமிக்க போராளிகள் கொடூரமாக அடிமைப்படுத்தியபோது இப்படிப்பட்ட அநேக சம்பவங்கள் நடந்தன.
மதிப்புக்குரிய நிலையை ஓர் ஆளிடமிருந்து இழக்கும்படி பறித்துக்கொள்வது அவனை அடிகளால் தாக்குவதைப் பார்க்கிலும் கொடுமை மிகுந்ததாக இருக்கலாம். அது மனித மனப்பான்மைக்கு கேடு செய்வதாக இருக்கிறது. அடிமைப்படுத்துதல், பெரும்பான்மையான நாடுகளில் ஒழிக்கப்பட்டிருக்கிறபோதிலும், மனித மதிப்புக்குரிய நிலையை மறைமுகமாகக் கெடுப்பது, நுட்பமான வகைகளிலாவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
மறுபட்சத்தில், உண்மையான கிறிஸ்தவர்கள், ‘தங்களில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூரும்படி’ சொன்ன இயேசு கிறிஸ்துவின் அறிவுரையின்படி நடப்பதற்கு பிரயாசப்படுகிறார்கள். ஆகவே, ‘மற்றவரின் சொந்த மதிப்புக்குரிய நிலையை நான் மதிக்கிறேனா?’ என்று தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்கிறார்கள்.—லூக்கா 10:27.
மதிப்புக்குரிய நிலை முன்மாதிரியாகக் காட்டப்படுகிறது
அகராதியின் பிரகாரம், மதிப்புக்குரிய நிலையானது, தகுதியுடையவராக, கனத்துக்குரியவராக, அல்லது மரியாதைக்குரியவராக இருக்கும் நிலையாகும். சர்வலோக பேரரசராகிய யெகோவா தேவனின் நிலைக்கு எத்தகைய பொருத்தமான ஒரு விவரிப்பு! உண்மையில், வேதவசனங்கள், யெகோவாவையும் அவருடைய அரசதிகாரத்தையும் பெரும் மதிப்புக்குரியதாக மறுபடியும் மறுபடியுமாக சம்பந்தப்படுத்திப் பேசுகின்றன. மோசே, ஏசாயா, எசேக்கியேல், தானியேல், அப்போஸ்தலன் யோவான், இன்னும் மற்றவர்கள், மகா உன்னதமானவரையும் அவருடைய பரலோக அரசவையையும் பற்றிய, தேவாவியால் ஏவப்பட்ட தரிசனம் அளிக்கப்பட்ட சிலாக்கியம் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய விவரிப்புகள் பயபக்தியூட்டும் மாட்சிமையையும் மதிப்புக்குரிய மகத்துவ நிலையையும் தொடர்ந்து வருணித்தன. (யாத்திராகமம் 24:9-11; ஏசாயா 6:1; எசேக்கியேல் 1:26-28; தானியேல் 7:9; வெளிப்படுத்துதல் 4:1-3) துதிசெலுத்தும் ஒரு ஜெபத்தில், அரசனாகிய தாவீது இவ்வாறு சொன்னார்: “யெகோவாவே, மேன்மை, வல்லமை, மகிமை, மாட்சிமை, மகத்துவம் உமக்கேயுரியன, வானத்திலும் பூமியிலும் உள்ளனவெல்லாம் உமக்கேயுரியன.” (1 நாளாகமம் 29:11, தி.மொ.) மெய்யாகவே, யெகோவா தேவனைப் பார்க்கிலும் அதிக கனத்துக்கும் மதிப்புக்கும் தகுதியுடையவர் ஒருவருமில்லை.
மனிதனைத் தம்முடைய சாயலாகவும் ரூபத்தின்படியும் படைத்ததில் யெகோவா, மனிதருக்கு ஓரளவானத் தகைமையையும், சுயமரியாதையையும், மதிப்புக்குரிய நிலையையும் அளித்தார். (ஆதியாகமம் 1:26) ஆகையால், மற்றவர்களுடன் நம்முடைய செயல் தொடர்புகளில், ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கனத்தையும் மரியாதையையும் நாம் தரவேண்டும். அவ்வாறு நாம் செய்கையில், மனித மதிப்புக்குரிய நிலைக்கு மூலகாரணர் யெகோவா தேவன் என்பதை நன்றியோடு ஒப்புக்கொள்கிறோம்.—சங்கீதம் 8:4-9.
குடும்ப உறவுகளில் மதிப்புக்குரிய நிலை
கிறிஸ்தவ கணவர்கள், ‘பலவீன பாண்டமாயிருக்கிற’ தங்கள் மனைவிமாருக்கு ‘கனத்தைச் செலுத்தும்படி,’ மணமாகியவரான அப்போஸ்தலன் பேதுரு, தேவாவியின் ஏவுதலின்கீழ் அறிவுறுத்தினார். (1 பேதுரு 3:7; மத்தேயு 8:14) “மறுபட்சத்தில், மனைவி தன் கணவனிடமாக ஆழ்ந்த மரியாதை உடையவளாக இருக்க வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார். (எபேசியர் 5:33, NW) ஆகையால், மணவாழ்க்கையில், ஒருவர் தன் துணையின் மதிப்புக்குரிய நிலைக்கு கனமும் மரியாதையும் செலுத்துவது, பைபிள் தேவைப்படுத்தும் கடமையாக இருக்கிறது. என்ன வழிகளில் இதைக் காண்பிக்கலாம்?
வளரும் ஒரு செடிக்கு, தண்ணீர் வளமூட்டுவதைப்போல், பொதுவிலும் தனிமையிலும் கணவன் மனைவிக்கு இடையே கனிவார்ந்த பேச்சும், தயவான பாசபரிமாற்றங்களும் அவர்களிடையே நெருக்கமான உறவை வளர்க்கக்கூடும். அதற்கு நேர்மாறாக, டெலிவிஷனில் அடிக்கடி கேட்கிற பிரகாரமான, கடுகடுத்த, அவமதிப்பான பழிப்புரைகள் அல்லது சிந்தனையற்ற, குத்தலான பேச்சுகள் புண்படுத்தி, கெடுத்துப்போடுபவையாக இருக்கின்றன. அவை, தீங்குண்டாக்கும் பயனற்ற உணர்ச்சிகளையும், சோர்வையும், மனக்கசப்பையும் தொடங்கிவைத்து, எளிதில் ஆறாத உணர்ச்சிவச புண்படுத்துதல்கள் ஏற்படுவதற்கும்கூட காரணமாக இருக்கலாம்.
மற்றவர்களின் அவரவருக்குரிய மதிப்புநிலையை மரியாதையுடன் ஏற்பது அவர்களை, முன்னதாகவே மனதில் கருதியுள்ள கற்பனை உருவில் பொருத்த அல்லது மற்றவர்களுடன் நியாயமற்ற முறையில் ஒப்பிட்டுப் பேச முயற்சி செய்யாமல், அவர்கள் இருக்கிறபடியே அவர்களை ஏற்பதையும் குறிக்கிறது. இது, விசேஷமாய் கணவர் மனைவியருக்கிடையில் முக்கியமானது. பேச்சுத்தொடர்பும் பாசபரிமாற்றங்களும் மகிழ்ச்சியூட்டும் வகையில் தாராளமாயும் எளிதாயும் வெளிப்பட்டும், குற்றம் கண்டுபிடிக்கப்படுவோமா அல்லது திட்டப்படுவோமா என்ற பயம் எவருக்கும் இல்லாதபோது, நெருங்கிய உறவு தழைத்தோங்கும். மண வாழ்க்கையில் ஒருவர் தன்னியல்பின்படி இருக்கையில், உண்மையாகவே, வீடு, கனிவற்ற கொடூர வெளி உலகத்திலிருந்து பாதுகாப்பாயுள்ள புகலிடமாகிறது.
பிள்ளைகள், தங்கள் பெற்றோருக்கு மரியாதை செலுத்தி கீழ்ப்படியும்படியான வேதப்பூர்வ கட்டளைக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். தங்கள் பாகத்தில், ஞானமும் அன்புமுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் மதிப்புநிலையை கருத்தில்கொண்டு நடத்துவார்கள். நல்நடத்தைக்காக அன்பான பாராட்டுதலும், அதோடு, தேவைப்படுகையில் சிட்சையும், ‘யெகோவாவின் மனக்கட்டுப்பாட்டு’ ஒழுங்கை அவர்களில் வலியுறுத்தும். இடைவிடாது குற்றம் கண்டுபிடிப்பதும், திட்டிக்கொண்டிருப்பதும், “முட்டாள்” அல்லது “மடையன்” போன்ற பெயரிட்டு இழிவுபடுத்தும் சொற்களைக்கொண்டு அழைப்பதும் அவர்களுக்கு எரிச்சலையே உண்டாக்கும்.—எபேசியர் 6:4, NW.
மூன்று குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் வளர்த்துவருகிற ஒரு கிறிஸ்தவ மூப்பரும் தகப்பனுமானவர் இவ்வாறு சொல்கிறார்: “ராஜ்ய மன்றத்தில், தேவைப்பட்ட சிட்சையை கூடிய வரையில் அமைதியாக நாங்கள் அளித்தோம். சிறிது தட்டுவது அல்லது எச்சரிக்கையாக முறைத்துப்பார்ப்பது பெரும்பாலும் போதியதாக இருந்தது. மேலுமதிக கண்டிப்பான சிட்சை தேவைப்பட்டால், அதை, மற்ற பிள்ளைகள் இராதபோது, தனிமையில் எங்கள் வீட்டில் அளிப்போம். இப்போது பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் சிட்சை, ஒவ்வொருவருக்கும் அவரவருடைய தேவைக்கேற்ப, கடவுளுடைய வார்த்தையிலிருந்து அன்புள்ள ஞானமான அறிவுரை அளிப்பதை உட்படுத்துகிறது. அவர்களுடைய இந்தத் தனிப்பட்ட காரியங்களில் நம்பகத் தன்மையை காத்துவர நாங்கள் முயற்சி செய்கிறோம்; இவ்வாறு ஒவ்வொரு பிள்ளையின் தனிமைக்கும் மதிப்புக்குரிய நிலைக்கும் மரியாதை காட்டுகிறோம்.”
குடும்பத்திற்குள், வார்த்தையிலும் நடத்தையிலும் நல்லொழுக்க முறைகளைக் கவனிக்கத் தவறக்கூடாது. நெருங்கிய உறவுள்ளவர்களாக இருப்பது, “தயவுசெய்து,” “நன்றி,” “மன்னித்துக்கொள்ளுங்கள்,” “நான் வருந்துகிறேன்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் விடும்படி நம்மைச் செய்விக்கக்கூடாது. ஒருவருடைய சொந்த மதிப்புநிலையைக் காத்துவருவதிலும் மற்றவர்களுடையதை மதிப்பதிலுமான இருவகையிலும் நல்லொழுக்க முறைகள் இன்றியமையாதவை.
கிறிஸ்தவ சபையில்
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 11:28) ஒடுக்கப்பட்டோரும், வருத்தப்பட்டோரும், சிறு பிள்ளைகளும்கூட தடையில்லாமல் இயேசுவினிடம் வரும்படி மனம் கவரப்பட்டார்கள். அகந்தையும் சுயநீதியுமுள்ள அந்நாளைய குருமாரும் தலைவர்களுமானோரால் அவர்கள் ஏளனமாகப் பேசப்பட்டார்கள். ஆனால், தாங்கள் பெறுவதற்குத் தகுதியாயிருந்த மதிப்புநிலையைத் தங்களுக்கு அளித்தவராக இயேசுவைக் கண்டார்கள்.
இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாமும் நம்முடைய உடன் விசுவாசிகளுக்கு புத்துயிரளிக்கும் காரணராக இருக்கும்படி விரும்புகிறோம். இது, நம்முடைய பேச்சினாலும் செயல்களினாலும் அவர்களை பக்திவிருத்திக்கேதுவாக எழுப்புவதற்கான வாய்ப்புகளுக்காக ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதைக் குறிக்கிறது. நம்முடைய உரையாடலில், தயவானவையும் நம்பிக்கை அளிப்பவையுமான குறிப்புகளை உள்ளப்பூர்வமாய் தாராளமாக உபயோகிப்பது எப்போதும் தகுந்ததாக இருக்கிறது. (ரோமர் 1:11, 12; 1 தெசலோனிக்கேயர் 5:11) நாம் என்ன சொல்கிறோம், அதோடுகூட அதை எவ்வாறு சொல்கிறோம் என்பவற்றில் கவனமாக இருப்பதன்மூலம், மற்றவர்களின் உணர்ச்சிகளைப்பற்றி உணர்வுள்ளோராக இருக்கிறோம் என்று காட்டுகிறோம். (கொலோசெயர் 4:6) கிறிஸ்தவக் கூட்டங்களில் தகுதியான உடையும் ஒழுங்கு முறைமையும்கூட, நம்முடைய கடவுளின் மகத்துவத்திற்கும், அவருடைய வணக்கத்தின் மற்றும் உடன் வணக்கத்தாரின் மதிப்புநிலைக்கும் ஆழ்ந்த மதிப்பைப் பிரதிபலிக்கின்றன.
இயேசு, ஜனங்களுக்குச் சேவை செய்கையிலும்கூட அவர்களுடைய மதிப்புநிலைக்கு மரியாதை கொடுத்தார். மற்றவர்கள் இழப்பில் அல்லது மற்றவர்களைத் தாழ்த்துவதன்மூலம் தன்னை உயர்த்துபவராக அவர் ஒருபோதும் இருக்கவில்லை. சுகப்படுத்தும்படி நாடி ஒரு குஷ்டரோகி தம்மிடம் வந்தபோது, இயேசு, அந்த மனிதனை அசுத்தமானவனாகவும், தகுதியற்றவனாகவும் ஒதுக்கிவிடவுமில்லை, தம்மீது கவனத்தை இழுத்து, பிரபலப்படுத்திக்கொள்பவராகவும் இல்லை. மாறாக, “ஆண்டவரே, உமக்கு சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும்” என்று அந்தக் குஷ்டரோகி இயேசுவிடம் கெஞ்சினபோது, “எனக்குச் சித்தமுண்டு” என்று பதிலளிப்பதன்மூலம் அந்தக் குஷ்டரோகிக்கு இயேசு மதிப்பு கொடுத்தார். (லூக்கா 5:12, 13) தேவையில் இருப்போருக்கு உதவிசெய்வது மட்டுமல்லாமல், அவர்கள் பாரமானவர்களாக இல்லை, விரும்பவும் நேசிக்கவும் படுகிறார்கள் என்று அவர்களுக்குத் திரும்பவும் நம்பிக்கையூட்டுவது, நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது! வெட்கப்பட்டு ஒதுங்குவோரும், சோர்வுற்றோரும், முடமானோரும், இந்த உலகத்தில் பொதுவாக கவனிக்கப்படாமல் விடப்படுகின்றனர், வெறுத்து ஒதுக்கப்படுகின்றனர், அல்லது தாழ்த்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மத்தியில் உண்மையான தோழமையையும் ஏற்பையும் கண்டடைய வேண்டும். இந்த மனப்பான்மை நிலவுவதற்கு நாம் நம்முடைய பங்கைச் செய்ய வேண்டும்.
இயேசு, தம்முடைய சீஷர்களுக்குக் குறைபாடுகளும் வெவ்வேறுபட்ட தன்மைகளும் இருந்தபோதிலும், அவர்களைத் ‘தம்முடையவர்களாக’ நேசித்தார். “முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.” (யோவான் 13:1) அவர்களில் சுத்தமான இருதயங்களையும், தம்முடைய பிதாவினிடமாக முழு ஆத்துமாவோடிருந்த பயபக்தியையும் கண்டார். அவ்வாறே, நம் உடன் வணக்கத்தார், நாம் செய்கிற முறையில் காரியங்களைச் செய்யாததனால் அல்லது அவர்களுடைய பழக்கவழக்கங்கள் அல்லது இயல்புகள் நமக்கு வெறுப்பூட்டுபவையாய் இருப்பதால், அவர்கள் தீய நோக்கங்களை உடையவர்களென்று அவர்களை நாம் ஒருபோதும் குற்றஞ்சாட்டக்கூடாது. நம்முடைய சகோதரரின் மதிப்புநிலைக்கு மரியாதை காட்டுவது, அவர்களும் யெகோவாவை நேசித்து, சுத்தமான நோக்கங்களுடன் அவரைச் சேவிக்கிறார்கள் என்று நம்பி, உள்ளபடியே அவர்களை நேசிக்கவும் ஏற்கவும் நம்மைத் தூண்டுவிக்கும்.—1 பேதுரு 4:8-10.
முக்கியமாக மூப்பர்கள், தங்கள் கவனிப்பில் ஒப்படைக்கப்பட்டிருப்போருக்கு மட்டுக்குமீறி மனசங்கடத்தை உண்டாக்காதபடி கவனமாக இருக்க வேண்டும். (1 பேதுரு 5:2, 3) பாவம் செய்துவிட்ட சபை உறுப்பினர் ஒருவரை விசாரிக்கையில், மூப்பர்கள், அவரின் உணர்வுகளை மதித்து அன்போடும் தயவோடும் இதமாய் பேசுவதும், மனசங்கடத்தைத் தரும் கேள்விகளை அவசியமில்லாமல் கேட்பதைத் தவிர்ப்பதும் நல்லது. (கலாத்தியர் 6:1) கண்டிப்பான கடிந்துரை அல்லது சிட்சை தேவைப்படுகையிலும், தவறுசெய்தவரின் மதிப்புநிலையையும் சுயமரியாதையையும் அவர்கள் தொடர்ந்து மதிப்பார்கள்.—1 தீமோத்தேயு 5:1, 2.
சுயமதிப்புநிலையைக் காத்துவருதல்
கடவுளுடைய சாயலிலும் ரூபத்திலும் சிருஷ்டிக்கப்பட்டவர்களாய், கடவுளுடைய மகத்துவம் உட்பட, அவருடைய சிறப்பான பண்புகளை நம்மால் இயலும் வரையில் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பிரதிபலிக்கவேண்டும். (ஆதியாகமம் 1:26) அவ்வாறே, “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் உறுதியாக இருப்பது, அவரவர் மதிப்புநிலையிலும் சுயமரியாதையிலும் சமநிலையுடன் இருப்பதைத் தேவைப்படுத்துகிறது. (மத்தேயு 22:39) உண்மை என்னவெனில், மற்றவர்கள் நமக்கு மரியாதை காட்டவும் மதிப்பு தரவும் நாம் விரும்பினால், நாம் அதற்குத் தகுதியுள்ளவர்களென்று மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.
சுயமரியாதையையும் சுயமதிப்பையும் காத்துவருவதில் ஒரு முக்கியமான அம்சமானது, சுத்தமான மனச்சாட்சியைக் காத்துவருவதாகும். கறைப்பட்ட மனசாட்சியும் குற்ற மன உறுத்துதல்களும், ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற உணர்ச்சிகளுக்கும், ஏமாற்றத்திற்கும், சோர்வுக்கும் எளிதில் வழிநடத்தும். ஆகையால், ஒருவர் வினைமையான ஒரு தவறு செய்துவிட்டால், மனந்திரும்பி, ‘கர்த்தருடைய [“யெகோவாவின்,” NW] சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்களை’ அனுபவிக்கும்படி, மூப்பர்களின் ஆவிக்குரிய உதவியை நாடுவதற்கு உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த இளைப்பாறுதலில் ஒருவரின் சொந்த மதிப்புநிலையும் சுயமரியாதையும் மீண்டும் நிலைநிறுத்தப்படுவது உட்பட்டிருக்கிறது.—அப்போஸ்தலர் 3:19.
பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம் மனச்சாட்சியைக் கறைப்படுத்துவதற்கு அல்லது பலவீனப்படுத்துவதற்கு எதையும் அனுமதியாமல் பாதுகாத்துக்கொள்ள இடைவிடாமல் முயற்சி செய்வது அதைப் பார்க்கிலும் மேம்பட்டதாக இருக்கிறது. உண்பது, குடிப்பது, வேலை செய்வது, பொழுதுபோக்குவது, எதிர்பாலாரோடுள்ள தொடர்பு, போன்ற நம் அன்றாட வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் தன்னடக்கத்தைப் பிரயோகிப்பது, சுத்தமான மனச்சாட்சியைக் காத்துக்கொள்ள நமக்கு உதவிசெய்து, கடவுளுடைய மகிமையையும் மகத்துவத்தையும் நம் வாழ்க்கையில் பிரதிபலிக்கும்படி நம்மைச் செய்விக்கும்.—1 கொரிந்தியர் 10:31.
நம்முடைய தவறுகளினால் உண்டான குற்றப் பொறுப்புணர்ச்சி நீங்காமல் இருந்தால் என்ன செய்வது? அல்லது அனுபவித்த கேடுகள் நினைவைவிட்டு அகலாமல் தொடர்ந்திருந்தால் என்ன செய்வது? இந்த உணர்ச்சிகள் நம்முடைய சொந்த மதிப்புநிலையை நொறுக்கி, கடுமையான மனச்சோர்வைக் கொண்டுவரலாம். சங்கீதம் 34:18-ல் (தி.மொ.) காணப்படும், தாவீது அரசனின் இந்த வார்த்தைகள் எவ்வளவு ஆறுதல் அளிப்பவையாக இருக்கின்றன: “உடைந்த இருதயமுள்ளவர்களுக்கு யெகோவா சமீபம், நைந்த ஆவியுள்ளவர்களை ரட்சிக்கிறார்”! மனச்சோர்வையும் பிரயோஜனமற்றவராக இருப்பதைப்போன்ற உணர்ச்சிகளையும், தம்முடைய ஊழியர்கள் எதிர்த்துச் சமாளிக்க வேண்டியதாக இருக்கையில், அவர்களைத் தளராதபடி தாங்கி நடத்துவதற்கு யெகோவா ஆயத்தமாகவும் மனமுள்ளவராகவும் இருக்கிறார். அவரிடம் வேண்டிக்கொள்வதும், அதோடுகூட, கிறிஸ்தவ பெற்றோர், மூப்பர்கள், சபையில் முதிர்ச்சியுள்ள மற்றவர்கள் போன்றவர்களான, ஆவிக்குரிய பிரகாரமாய்த் தகுதி பெற்றிருப்போரின் உதவியை நாடித்தேடுவதும், சுயமரியாதையையும் சுயமதிப்புநிலையையும் திரும்ப நிலைநாட்டிக்கொள்வதற்கான வழிவகைகளாக உள்ளன.—யாக்கோபு 5:13-15.
மறுபட்சத்தில், சுயமதிப்புநிலையைமீறி அகந்தைக்கு உட்படாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும். “தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்” என்பது வேதப்பூர்வ அறிவுரையாக இருக்கிறது. (ரோமர் 12:3) சுயமரியாதையை விருத்திசெய்வது சரியானதாக இருக்கையில், மனித மதிப்புநிலையை மற்றவர்களுக்கு முன்பாகக் காத்துக்கொள்ளும்படி, நம்முடைய சொந்த தகைமையைப் பகட்டு பண்ணிக்கொள்வதோடு, அல்லது தன்னலமும் மிதமீறியதுமான முயற்சிகளைச் செய்வதோடு அதைக் குழப்பிக்கொள்ள நாம் விரும்புகிறதில்லை.
ஆம், மற்றவரின் மதிப்புநிலைக்கு மரியாதை காட்டுவது ஒரு கிறிஸ்தவ தேவையாக இருக்கிறது. நம்முடைய குடும்ப உறுப்பினர்களும் உடன் கிறிஸ்தவர்களும் ஆகிய எல்லாரும், நம் மரியாதையையும், கனத்தையும், மதிப்பையும் பெறுவதற்குத் தகுதியுடையோராகவும் உரிமையுடையோராகவும் இருக்கின்றனர். யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் ஓரளவான மதிப்புநிலையையும் கனத்தையும் அளித்திருக்கிறார், அவற்றை நாம் நன்றியோடு ஏற்று, காத்துவர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பரம தகப்பனாகிய யெகோவா தேவனின் மகா மேன்மையான மகத்துவத்துக்கும் மாட்சிமைக்கும் ஆழ்ந்த பயபக்தியை நாம் பெருகச் செய்து வரவேண்டும்.
[பக்கம் 31-ன் படம்]
திறனற்ற நிலையில் இருப்போருக்கு இளைஞர் மரியாதை காட்டலாம்