படிப்பு பலன் தரும்
யாரேனும் பழங்களை பொறுக்கிப் பார்த்து வாங்குவதைக் கவனித்திருக்கிறீர்களா? பழுத்திருக்கிறதா என தெரிந்துகொள்ள பெரும்பாலானவர்கள் நிறத்தையும் அளவையும் பார்க்கிறார்கள். சிலர் பழத்தை முகர்ந்து பார்க்கிறார்கள். இன்னும் சிலர் அதைத் தொட்டுப் பார்க்கிறார்கள், ஏன் அமுக்கியும் பார்க்கிறார்கள். மற்றவர்கள் இரு கைகளிலும் ஒவ்வொரு பழத்தை எடுத்துக்கொண்டு எது கனம் அதிகம், அதாவது எதில் சாறு அதிகம் என பார்க்கிறார்கள். இவர்கள் எல்லாரும் என்ன யோசிக்கிறார்கள்? விவரங்களை பகுத்தறிந்து, வித்தியாசங்களை மதிப்பிட்டு, முன் அனுபவங்களை நினைத்துப் பார்த்து, ஏற்கெனவே அறிந்திருப்பதையும் இப்போது பார்ப்பதையும் ஒப்பிடுகிறார்கள். கவனமாக யோசித்துப் பார்ப்பதால் அவர்களுக்கு ருசியான பலன் காத்திருக்கிறது.
கடவுளுடைய வார்த்தையை படிக்கையில் அதைக் காட்டிலும் மிகுந்த பலன் உண்டு என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட படிப்புக்கு நம் வாழ்க்கையில் முக்கிய இடம் தரும்போது, நம் விசுவாசம் பலப்படும், அன்பு பெருகும், ஊழியம் அதிக பயன் தரும். அதுமட்டுமல்ல, நாம் எடுக்கும் தீர்மானங்களில் விவேகமும் தெய்வீக ஞானமும் அதிகமாய் மிளிரும். “நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல” என அப்படிப்பட்ட பலன்களைப் பற்றி நீதிமொழிகள் 3:15 சொல்கிறது. அப்படிப்பட்ட பலன்களை நீங்கள் அனுபவிக்கிறீர்களா? அது நீங்கள் படிக்கும் விதத்தை சார்ந்திருக்கலாம்.—கொலோ. 1:9, 10.
படிப்பு என்றால் என்ன? அது மேலோட்டமாக வாசிப்பது அல்ல. ஒரு விஷயத்தை கவனமாக அல்லது ஆழமாக சிந்திக்க மனத் திறனை உபயோகிப்பதை உட்படுத்துகிறது. வாசிப்பதை பகுத்தறிந்து, ஏற்கெனவே அறிந்தவற்றோடு ஒப்பிட்டு, சொல்லப்படும் கருத்துக்களுக்கான காரணங்களையும் கவனிக்க வேண்டும். படிக்கும்போது புதிதாக கற்றுக்கொள்ளும் கருத்துக்களைக் குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். வேதப்பூர்வ ஆலோசனையை இன்னும் முழுமையாக எப்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம் என்றும் சிந்தியுங்கள். யெகோவாவின் சாட்சியாக, எப்படி அந்த விஷயத்தை பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவலாம் என்றும் யோசியுங்கள். ஆக, படிப்பில் தியானத்திற்கும் இடமிருப்பதில் சந்தேகமில்லை.
சரியான மனநிலையைப் பெறுதல்
படிக்க உட்காருகையில் பொதுவாக நீங்கள் பைபிளை, பயன்படுத்தப் போகும் பிரசுரங்களை, பென்சில் அல்லது பேனாவை, நோட்டுப் புத்தகத்தை எல்லாம் பரப்பி வைக்கலாம். ஆனால் உங்கள் இருதயத்தையும் தயார்படுத்துகிறீர்களா? “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான் [“தயார்படுத்தியிருந்தான்,” NW]” என்று பைபிள் சொல்கிறது. (எஸ்றா 7:10) இருதயத்தைத் தயார்படுத்துவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
கடவுளுடைய வார்த்தையை சரியான மனப்பான்மையோடு படிப்பதற்கு ஜெபம் நமக்கு உதவும். யெகோவா தரும் அறிவுரையை உள்ளூர, அதாவது இருதயத்தில் ஏற்க நாம் விரும்புகிறோம். ஒவ்வொரு முறை படிக்க ஆரம்பிக்கும்போதும் யெகோவாவிடம் அவரது ஆவியின் உதவிக்காக கேளுங்கள். (லூக். 11:13) படிக்கப்போகும் விஷயம் எதை அர்த்தப்படுத்துகிறது, அது அவருடைய நோக்கத்தோடு எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது, அவரோடு உள்ள உங்கள் உறவை எவ்வாறு பாதிக்கிறது என்பதையெல்லாம் புரிந்துகொள்ள உதவி கேட்டு ஜெபிக்கலாம். வாசிக்கும் விஷயம், நன்மை தீமையை பகுத்துணர உதவ வேண்டுமென்றும், தெய்வீக நியமங்களை வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என காட்ட வேண்டுமென்றும்கூட ஜெபிக்கலாம். (நீதி. 9:10) படிக்கும்போது ஞானத்திற்காக “கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருங்கள்.” (யாக். 1:5, NW) தவறான எண்ணங்களை அல்லது கேடுவிளைவிக்கும் ஆசைகளை விட்டொழிக்க யெகோவாவின் உதவியை நாடுகையில், வாசிக்கும் விஷயத்தை வைத்து உங்களை நீங்களே நேர்மையாக எடைபோடுங்கள். யெகோவா வெளிப்படுத்தும் விஷயங்களுக்காக எப்போதும் அவருக்கு “நன்றிசெலுத்துங்கள்.” (சங். 147:7, NW) இவ்வாறு ஜெபத்துடன் படிப்பைத் துவங்குவது யெகோவாவிடம் நெருங்கி வர உதவும். ஏனெனில் அவர் தமது வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசும் விஷயங்களைக் கேட்டு நடக்க அது நமக்கு உதவுகிறது.—சங். 145:18.
இவ்வாறு கேட்டு நடக்கும் மனப்பக்குவம்தான் யெகோவாவின் மக்களை உலக மக்களிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. எழுதப்பட்ட விஷயங்களை சந்தேகிப்பதும் குற்றஞ்சாட்டுவதுமே தேவபக்தி இல்லாதவர்களின் பிரபலமான போக்கு. ஆனால் நம் மனப்பான்மை அப்படிப்பட்டதல்ல. நாம் யெகோவாவை நம்புகிறோம். (நீதி. 3:5-7) நமக்கு ஏதேனும் புரியவில்லையென்றால் அது தவறு என நாமாகவே முடிவெடுத்துவிட மாட்டோம். பதில்களுக்கு தேடி ஆராயும் அதே சமயத்தில் யெகோவாவிற்காக காத்திருப்போம். (மீ. 7:7) எஸ்றாவைப் போலவே, கற்ற விஷயங்களைக் கடைப்பிடித்து மற்றவர்களுக்கு கற்பிப்பதே நமது குறிக்கோளும் ஆகும். இந்த இருதய நிலையோடு படிக்கையில் மிகுந்த பலன்களைப் பெறுவோம்.
எப்படி படிப்பது
எடுத்தவுடன் முதல் பத்தியிலிருந்து கடைசி பத்தி வரை வாசித்து முடிப்பதற்கு பதிலாக, முழு கட்டுரையையும் அல்லது அதிகாரத்தையும் மேலோட்டமாக பாருங்கள். முதலில், தலைப்பு அமைக்கப்பட்டிருக்கும் விதத்தை கவனியுங்கள். நீங்கள் படிக்கப் போகும் கட்டுரையின் மையப்பொருள் அதுதான். அதன்பின் உபதலைப்புகள் எவ்வாறு மையப்பொருளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை கவனமாக பாருங்கள். படங்கள், அட்டவணைகள், அல்லது போதனை பெட்டிகள் இருந்தால் அவற்றையும் கவனியுங்கள். அதன்பின், ‘இந்தக் கட்டுரையிலிருந்து என்னென்ன விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்? அதனால் எனக்கு என்ன பிரயோஜனம்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இது நோக்கத்தோடு படிக்க உங்களுக்கு உதவும்.
இப்போது விஷயங்களை வாசியுங்கள். காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளிலும் சில புத்தகங்களிலும் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாராவை வாசிக்கும்போதும் பதில்களை குறித்துக்கொள்வது நன்மையளிக்கும். ஒருவேளை கேள்விகள் கொடுக்கப்படாவிட்டாலும், நீங்கள் நினைவில் வைக்க விரும்பும் முக்கிய குறிப்புகளை குறித்துக்கொள்ளலாம். ஒரு புதிய கருத்தை வாசிக்கும்போது, அதை நன்கு புரிந்துகொள்வதற்கு கூடுதலாக நேரம் செலவழியுங்கள். சபை பேச்சிற்கோ வெளி ஊழியத்திற்கோ உதவியாயிருக்கும் உதாரணங்கள் அல்லது நியாயவிவாதங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என கவனிக்க எப்போதும் உன்னிப்பாக இருங்கள். நீங்கள் வாசிக்கும் விஷயங்களை எப்படிப்பட்ட நபர்களிடம் சொன்னால் அவர்களது விசுவாசம் பலப்படும் என யோசித்து வையுங்கள். நீங்கள் பயன்படுத்த விரும்பும் குறிப்புகளை குறித்துக்கொண்டு, படிப்பின் முடிவில் மறுபடியும் எடுத்துப் பாருங்கள்.
கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களை பைபிளில் திறந்து பாருங்கள். ஒவ்வொரு வசனமும் அந்தப் பாராவின் முக்கிய பொருளோடு எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என பகுத்தறியுங்கள்.
சில குறிப்புகளை உங்களால் உடனடியாக புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், அல்லது அவற்றை கூடுதலாக ஆராய்ந்து பார்க்க விரும்பலாம். உங்கள் கவனம் திசைதிரும்பாமலிருக்க அப்போதைக்கு அவற்றை குறித்து வைத்துக்கொண்டு பிற்பாடு தேவையான கவனம் செலுத்துங்கள். பொதுவாக கட்டுரையைப் படிக்க படிக்கவே குறிப்புகள் தெளிவாகிவிடும். இல்லையென்றால், கூடுதலான ஆராய்ச்சி செய்யலாம். எப்படிப்பட்ட குறிப்புகளை இவ்வாறு ஆராயலாம்? மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஒரு வசனம் ஒருவேளை புரிந்துகொள்ள கஷ்டமாக இருக்கலாம். அல்லது சிந்திக்கப்படும் பொருளோடு அது எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என விளங்கிக் கொள்ள முடியாமல் நீங்கள் தவிக்கலாம். ஒருவேளை, கட்டுரையிலுள்ள ஒரு குறிப்பிட்ட கருத்து உங்களுக்கு புரிந்தாலும், அதை வேறு ஒருவருக்கு எப்படி விளக்குவது என தெரியாமல் திண்டாடலாம். இவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதற்குப் பதிலாக, படிக்க வேண்டியதை படித்து முடித்த பிறகு ஆராய்ச்சி செய்வது புத்திசாலித்தனமானது.
அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு விவரமான கடிதம் எழுதியபோது, நடுவே சற்று நிறுத்தி, “முக்கியமான பொருளென்னவெனில்” என குறிப்பிட்டு பிறகு தொடர்ந்து எழுதினார். (எபி. 8:1) அவ்வப்போது நீங்களும் முக்கியமான பொருளை நினைவுபடுத்திக் கொள்கிறீர்களா? பவுல் ஏன் அதைச் செய்தார் என்பதை கவனியுங்கள். கடவுளது மகத்தான பிரதான ஆசாரியராக கிறிஸ்து பரலோகத்திற்குள் பிரவேசித்திருப்பதை, ஏவப்பட்ட இந்தக் கடிதத்தின் முந்தைய அதிகாரங்களில் ஏற்கெனவே விளக்கியிருந்தார். (எபி. 4:14–5:10; 6:20) ஆனால் 8-ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் அந்த முக்கிய குறிப்பை பிரித்துக் காட்டி வலியுறுத்துவதன் மூலம், அது எவ்வாறு தங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது என வாசகர்கள் ஆழ்ந்து சிந்திக்கும்படி அவர்களது மனங்களை பவுல் தயார்படுத்தினார். அவர்கள் சார்பாக கடவுளது சன்னிதானத்திற்குள் கிறிஸ்து பிரவேசித்திருக்கிறார் என்பதையும் அந்த பரலோக ‘பரிசுத்த ஸ்தலத்திற்குள்’ அவர்களும் பிரவேசிக்கும்படி வழியைத் திறந்திருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டினார். (எபி. 9:24; 10:19-22) இவ்வாறு அவர்களது நம்பிக்கையை உறுதிசெய்தது, விசுவாசத்தையும் சகிப்புத்தன்மையையும் கிறிஸ்தவ நடத்தையையும் பற்றி கடிதத்தில் குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளை ஏற்று நடக்க அவர்களைத் தூண்டியது. அதேவிதமாக நாம் படிக்கும்போதும் முக்கிய குறிப்புகளுக்கு கவனம் செலுத்துவது, மையப்பொருள் எந்தக் கோணத்தில் விளக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும்; அதன்படி நடக்க வேண்டியதற்கான நியாயமான காரணங்களை நம் மனதில் பதிய வைக்கும்.
நீங்கள் படிக்கும் விதம், அதன்படி நடக்க உங்களைத் தூண்டுமா? இது முக்கியமான கேள்வி. நீங்கள் ஏதேனும் கற்றுக்கொள்ளும்போது இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இது என் மனப்பான்மையையும் என் இலட்சியங்களையும் எப்படி பாதிக்க வேண்டும்? பிரச்சினையைத் தீர்க்க, தீர்மானம் எடுக்க, அல்லது இலட்சியத்தை அடைய இந்தத் தகவலை நான் எப்படி பயன்படுத்தலாம்? வீட்டிலும், வெளி ஊழியத்திலும், சபையிலும் இதை நான் எப்படி கடைப்பிடிக்கலாம்?’ இப்படிப்பட்ட கேள்விகளை ஜெபத்தோடு சிந்தியுங்கள், என்னென்ன நிஜமான சந்தர்ப்பங்களில் படித்ததை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு அதிகாரத்தை அல்லது கட்டுரையை முடித்த பிறகு சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். முக்கிய குறிப்புகளும் அவற்றை ஆதரிக்கும் வாதங்களும் நினைவில் இருக்கிறதா என பாருங்கள். இவ்வாறு செய்வது, தகவலை நினைவில் தக்கவைத்துக் கொண்டு பிற்பாடு உபயோகிக்க உதவும்.
எதைப் படிப்பது
யெகோவாவின் மக்களாக நமக்கு படிக்க ஏராளம் இருக்கிறது. ஆனால் எதிலிருந்து ஆரம்பிப்பது? தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்திலிருந்து தினவசனத்தையும் அதற்குரிய குறிப்புகளையும் ஒவ்வொரு நாளும் வாசிப்பது நல்லது. வாராவாரம் சபைக் கூட்டங்களுக்குச் செல்கிறோம், இவற்றிற்காக முன்கூட்டியே தயாரிப்பது மிகுந்த பயன் தரும். இது மட்டுமல்லாமல் சிலர், தாங்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு வெளியிடப்பட்ட நம் கிறிஸ்தவ பிரசுரங்களைப் படிக்கவும் ஞானமாக நேரம் ஒதுக்கியுள்ளனர். இன்னும் சிலர் வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து சில வசனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஆழமாக ஆராய்கின்றனர்.
வாராந்தர சபைக் கூட்டங்களில் சிந்திக்கவிருக்கும் எல்லா தகவலையுமே கவனமாக படிக்க சூழ்நிலை அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்வது? ஏதோ கடமைக்கு அவசரமாக படித்து முடித்துவிடாதீர்கள்; அல்லது உங்களால் எல்லாவற்றையும் படிக்க முடியாது என்பதற்காக ஒன்றையுமே படிக்காமல் இருந்துவிடாதீர்கள். மாறாக, எவ்வளவு படிக்க முடியும் என்பதை முடிவு செய்து அதை நன்கு படியுங்கள். இதை வாராவாரம் செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக, மற்ற கூட்டங்களுக்கும் தயாரிக்க முயலுங்கள்.
“உன் வீட்டைக் கட்டு”
குடும்பத் தலைவர்கள் தங்கள் பாசத்திற்குரிய வீட்டாரை கட்டிக் காக்க கடினமாக உழைக்க வேண்டும் என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். ‘வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கு’ என நீதிமொழிகள் 24:27 சொல்கிறது. அதே சமயம் குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளையும் கவனிக்க வேண்டும். ஆகவேதான், “பின்பு உன் வீட்டைக் கட்டு” என அதே வசனம் தொடர்ந்து சொல்கிறது. குடும்பத் தலைவர்கள் இதை எப்படி செய்யலாம்? “வீடு . . . விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்” என நீதிமொழிகள் 24:3 சொல்கிறது.
விவேகம் எவ்வாறு உங்கள் வீட்டாருக்கு உதவும்? வெளிப்படையாக தெரியாததையும் பார்க்கும் மனத் திறமையே விவேகம். திறம்பட்ட குடும்பப் படிப்புக்கு முதல் படி, உங்கள் குடும்பத்தையே படிப்பதாகும். உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் ஆன்மீகத்தில் எப்படி முன்னேறுகிறார்கள்? அவர்களோடு பேசும்போது கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள். குறைகூறும் அல்லது மனக்கசப்படையும் மனப்பான்மை தெரிகிறதா? பொருளாதார நாட்டங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்களா? பிள்ளைகளோடு வெளி ஊழியத்திற்கு போகும்போது, நண்பர்கள் முன் தங்களை யெகோவாவின் சாட்சிகளாக அறிமுகப்படுத்திக்கொள்ள கூச்சப்படுவதாக தெரிகிறதா? குடும்பமாக பைபிள் வாசிப்பதையும் படிப்பதையும் அனுபவித்து மகிழ்கிறார்களா? உண்மையிலேயே யெகோவாவின் வழியில் நடக்க முயற்சி செய்கிறார்களா? கூர்ந்து கவனிப்பது, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரிலும் ஆன்மீக குணங்களை விதைப்பதற்கும் வளர்ப்பதற்கும் குடும்பத் தலைவராக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும்.
குறிப்பிட்ட விஷயத்தின் பேரில் கட்டுரைகள் தேவைப்பட்டால் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். அதன்பின் குடும்பப் படிப்பில் எதைப் படிக்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே குடும்பத்தாரிடம் சொல்லிவிடுங்கள். அவர்கள் அதைப் பற்றி யோசித்து வைக்க உதவியாக இருக்கும். படிப்பின்போது அன்பான சூழல் நிலவுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தார் யாரையும் திட்டாமலும் தர்மசங்கடப்படுத்தாமலும் விஷயத்தின் மதிப்பை உணர்த்துங்கள்; உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப பொருத்திக் காட்டுங்கள். ஒவ்வொருவரையும் உரையாடலில் உட்படுத்துங்கள். வாழ்க்கைக்கு தேவையானதை வழங்குவதில் யெகோவாவின் வார்த்தை எவ்வாறு “குறைவற்றது” என்பதை ஒவ்வொருவரும் காண உதவுங்கள்.—சங். 19:7.
பலன்களைப் பெறுதல்
ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் இல்லையென்றாலும் கூர்ந்து கவனிப்பவர்களால் அண்டத்தையும் உலக சம்பவங்களையும் தங்களையும்கூட ஆராய முடிகிறது. இருந்தாலும் கவனிப்பவற்றின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. மறுபட்சத்தில், கடவுளுடைய வார்த்தையை தவறாமல் படிப்பவர்கள், அவருடைய ஆவியின் உதவியோடு, கண்ணால் காணும் காரியங்களில் அவரது கைவண்ணத்தையும் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தையும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதற்கான அவருடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தையும் கவனிக்கிறார்கள்.—மாற். 13:4-29; ரோ. 1:20; வெளி. 12:12.
இது வியக்கத்தக்க ஒன்று என்றாலும் நாம் பெருமை கொள்ளலாகாது. மாறாக கடவுளுடைய வார்த்தையை தினமும் ஆராய்வது நம்மை எப்போதும் பணிவோடு இருக்கச் செய்யும். (உபா. 17:18-20) ‘பாவத்தின் வஞ்சனையிலிருந்தும்’ அது நம்மைப் பாதுகாக்கும். ஏனெனில் கடவுளுடைய வார்த்தை நம் இருதயங்களில் பசுமையாக இருக்கையில், பாவம் எவ்வளவுதான் கவர்ந்திழுத்தாலும் அதை எதிர்க்கும் நம் தீர்மானத்தை அதனால் எளிதில் வெல்ல முடியாது. (எபி. 2:1; 3:13; கொலோ. 3:5-10) இவ்வாறு, ‘சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, . . . கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்வோம்.’ (கொலோ. 1:10) அதுவே கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் நோக்கமாகும். அதை சாதிப்பதே நமக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த பலனாகும்.