விடாமுயற்சியே வெற்றிக்கு வழி
விடாமுயற்சி. இன்று இது அரிய ஒன்றாகிவிட்டது. விடாமுயற்சியைவிட, நேரமும் இடமும்தான் வெற்றியை வாங்கித் தருகிறது என்பதே அநேகருடைய நம்பிக்கை. இவர்களைச் சொல்லி குற்றமில்லை. மீடியாக்களே இதற்கெல்லாம் காரணம் அவற்றில் கவர்ச்சியான விளம்பரங்களே முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருக்கின்றன. கொஞ்ச பணமும், ஓரளவு முயற்சியுமே போதும் நீங்கள் பெற விரும்புகிற எல்லாவற்றையும் வாங்கலாம் என்ற எண்ணத்தை இவை விதைக்கின்றன. ஒரே இரவில் பணக்காரர்களாக ஆகியவர்கள் பலருடைய கதைகளை செய்தித்தாள்கள் அதிக அளவில் பிரசுரிக்கின்றன. அதோடு, படிப்பை முடித்ததுமே லட்சலட்சமாக சம்பாதிக்கும் வியாபார மேதைகளைப் பற்றியும் அவை வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன.
“வெற்றி அடைவதும் சமுதாயத்தில் பெரிய ஆளாவதும் மிக சுலபமாக தோன்றலாம். . . . வியாபார நுணுக்கங்களை தெரிந்திருந்தால், திறமைகளை வளர்த்திருந்தால், அல்லது கடவுள் அருள் பெற்றிருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் இதை அடையலாம் என்பதுபோல் தோன்றுகிறது” என பத்திரிகை எழுத்தாளர் லெனார்ட் பிட்ஸ் புலம்புகிறார்.
விடாமுயற்சி என்பது என்ன?
‘தடைகளோ அல்லது தோல்விகளோ எது வந்தாலும்சரி, ஒரு நோக்கத்தில், எடுத்த காரியத்தை முடிப்பதில் தொடர்ந்து உறுதியாய் பற்றியிருத்தலே’ விடாமுயற்சி என்பது. இன்னல்கள் பல ஏற்பட்டாலும், விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து தளரா உறுதியோடு இருப்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. இந்த குணத்தின் அவசியத்தை பைபிள் வலியுறுத்துகிறது. உதாரணமாக, கடவுளுடைய வார்த்தை, ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள்’ எனவும், “தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்” எனவும், “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” எனவும், “நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்” எனவும் அறிவுறுத்துகிறது.—மத்தேயு 6:33; லூக்கா 11:9, NW; ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:21.
தவிர்க்க முடியாத தோல்விகளை சமாளிப்பதே விடாமுயற்சியின் முக்கிய அம்சம். ‘நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்’ என நீதிமொழிகள் 24:16 குறிப்பிடுகிறது. கஷ்டங்கள் அல்லது தோல்விகள் வரும்போது எடுத்த காரியத்தை அப்படியே பாதியில் விட்டுவிடாமல், விடாமுயற்சியுடைய ஒருவர் ‘எழுந்துவிடுவார்,’ ‘தரித்திருப்பார்,’ மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வார்.
பிரச்சினைகளையும் தோல்விகளையும் சந்திக்க அநேகர் தயாராய் இருப்பதில்லை. அதற்கான மனபலத்தை அவர்கள் வளர்த்துக்கொள்வதும் இல்லை. அதனால், எளிதில் துவண்டுவிடுகின்றனர். “தோல்வியை சந்திக்கையில், தங்களுக்கே கேடு உண்டாகும் வகையில்தான் அநேகர் நடந்துகொள்கின்றனர். சுய இரக்கத்தால் சுருண்டுவிடுகின்றனர், எதுக்கெடுத்தாலும் மற்றவர்மீது பழிபோடுகின்றனர், மனக்கசப்படைகின்றனர் . . . முயற்சியை கைவிட்டுவிடுகின்றனர்” என எழுத்தாளர் மார்லீ காலகன் குறிப்பிடுகிறார்.
வருந்தத்தக்க விஷயம் இது. “சோதனைகளை எதிர்ப்படுவதிலும் ஒரு நன்மை இருக்கிறது, இக்கட்டுகளில் தவிக்கும்போதும் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்” என பிட்ஸ் சுட்டிக்காட்டுகிறார். என்ன பாடம்? “இழப்பு எல்லாவற்றிற்கும் அஸ்தமனம் அல்ல, தோல்வி நிரந்தரமும் அல்ல என்பதை [ஒருவர்] கற்றுக்கொள்கிறார். வாழ்க்கையில் அனுபவத்தைப் பெறுகிறார். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் அடைகிறார்” என சொல்லி பிட்ஸ் முடிக்கிறார். இதையேதான் பைபிள் மிக எளிய வார்த்தைகளில் சொல்கிறது: “எல்லாவித பாடுகளும் பலன் தரும்.”—நீதிமொழிகள் 14:23, NW.
ஒரு தோல்வியை சந்தித்த உடனே காரியங்களை சரிசெய்து பழையபடி ஆவதென்பது அத்தனை சுலபமல்ல என்பது மெய்யே. நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளையுமே முறியடிப்பதாக தோன்றும் பிரச்சினைகளை நாம் சில சமயங்களில் எதிர்ப்படுகிறோம். நம் குறிக்கோள், நெருங்க நெருங்க பிடிகொடாமல் விட்டு விலகுவதாக தோன்றலாம். காரியம் மிஞ்சிப்போய் விட்டது என்று நாம் நினைக்கலாம். அல்லது நிலைமையை சமாளிக்க நமக்கு திறமை போதாது என யோசிக்கலாம். அதனால், மனச்சோர்வடைந்து, மன உளைச்சலுக்கும் ஆளாகலாம். (நீதிமொழிகள் 24:10) இருப்பினும், பைபிள் நம்மை இவ்வாறு உற்சாகப்படுத்துகிறது: ‘நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.’—கலாத்தியர் 6:9.
விடாமுயற்சியுடன் இருக்க எது உதவும்?
பயனுள்ள, அடையக்கூடிய இலக்குகளை வைப்பதே, எடுத்த காரியத்தை முடிப்பதில் விடாமுயற்சியுடன் இருப்பதற்கான முதல் படி. இதை அப்போஸ்தலனாகிய பவுல் நன்றாகவே புரிந்திருந்தார். அவர் கொரிந்தியர்களுக்கு சொன்னார்: “ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.” ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஒருவர் இறுதிக் கோட்டை தாண்டுவதிலேயே தன்னுடைய மனதை ஒருமுகப்படுத்துகிறார். அதைப்போலவே, தன் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற, திட்டவட்டமான குறிக்கோள்கள் தேவை என்பதை பவுல் அறிந்திருந்தார். “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” என பவுல் அவர்களை உற்சாகப்படுத்தினார். (1 கொரிந்தியர் 9:24, 26) இதை நாம் எப்படி செய்யலாம்?
“விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என நீதிமொழிகள் 14:15 சொல்கிறது. வாழ்க்கையில் நம் திட்டங்களை அவ்வப்போது சீர்தூக்கிப் பார்ப்பது ஞானமானது. என்ன குறிக்கோளை அடைய செயல்படுகிறோம், ஏதாவது மாற்றங்கள் தேவையா என்பதையும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் எதை, ஏன் சாதிக்க விரும்புகிறோம் என்பதை மனதில் எப்போதும் தெளிவாக வைத்திருப்பது மிக அவசியம். குறிக்கோளை எட்டுவதை நம் மனதில் நிலையாக பதித்தோமானால், சட்டென சோர்ந்துபோய் விடமாட்டோம். ஆவியில் ஏவப்பட்டு எழுதப்பட்ட நீதிமொழி இதைத்தான் வலியுறுத்துகிறது: “உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது,” அப்போதுதான் “உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிரு”க்கும்.—நீதிமொழிகள் 4:25, 26.
உங்கள் இலக்குகளை தெளிவாக தீர்மானித்தபின், அதை அடைய என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை ஆராய்வதே அடுத்த படி. ‘உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருக்கையில் . . . முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?’ என இயேசு கேட்டார். (லூக்கா 14:28, 30) இந்த நியமத்திற்கு இசைவாக, மனநல நிபுணர் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எந்தவொரு காரியத்தை செய்தாலும் அது என்ன விளைவுகளில் முடியும் என்பதை தெளிவாக புரிந்திருப்பதே வாழ்க்கையில் வெற்றிச்சிகரத்தை அடைந்தவர்களில் நான் பார்த்த ஒன்று. எதை சாதிக்க விரும்புகிறார்களோ அதை அடைவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இவர்கள் தெளிவாக புரிந்திருக்கிறார்கள்.” நம் பங்கில் என்னென்ன செய்ய வேண்டும் என தெளிவாக புரிந்துகொள்வது, நம் குறிக்கோளிலிருந்து வழிபிசகாமல் இருக்க உதவும். ஏதாவது தோல்வியை சந்தித்தாலும், சுதாரித்துக்கொண்டு, பழையபடி காரியங்களை சீர்படுத்துவதை சுலபமாக்கும். இப்படிப்பட்ட முயற்சிதான் ஆர்வில் ரைட், வில்பர் ரைட் சகோதரர்களுடைய வெற்றியின் இரகசியம்.
எனவே, தோல்விகளை சந்திக்கும்போது, அவற்றை சாதகமான மனநிலையோடு நோக்கவும், வாழ்க்கையில் அனுபவத்தைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். சூழ்நிலையை ஆராயுங்கள். எங்கே தவறு நேர்ந்தது என்பதை கண்டுபிடியுங்கள். பின், ஏற்பட்ட தவறுகளை திருத்துங்கள் அல்லது பிழைகளை சரி செய்யுங்கள். மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்பதும் நல்லது. ஏனெனில், “ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்.” (நீதிமொழிகள் 20:18) நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், குறிப்பிட்டத் துறையில் தேர்ச்சி பெற உதவும், உங்களுடைய திறமையையும் வளர்க்கும். முடிவில், உங்களுடைய வெற்றிக்கு இது வழிவகுக்கும்.
விடாமுயற்சியுடன் இருப்பதற்கான முயற்சியில் மூன்றாவது படி, சீரான செயல்கள். “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக” என அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை ஊக்குவிக்கிறார். (பிலிப்பியர் 3:16) ஒரு கல்விமான் சொல்கிறபடி, “தொடர்ந்து நிதானத்தோடும், சீராகவும் செயல்படுவதுதான் குறிப்பிடத்தக்க பலன்களைத் தரும்.” மிகப் பரவலாக, பலரால் அறியப்பட்ட ஆமையும் முயலும் கதை இதைத்தான் படம்பிடித்துக் காட்டுகிறது. முயலைவிட மிக மெதுவாக சென்றபோதிலும், ஆமையே ஓட்டத்தில் வென்றது. ஏன்? ஏனென்றால், ஆமை ஒரே சீராக, கட்டுப்பாட்டோடு அயராது செயல்பட்டதாலேயே. தனக்கு இயன்ற வேகத்தை தெரிந்துகொண்டு, இறுதிக்கோட்டை தாண்டும்வரை அதே வேகத்தை கடைப்பிடித்தது. காரியங்களை நன்கு ஒழுங்கமைக்கும், தடுமாற்றமில்லாத ஒரு நபர், சீராக முன்னேறுகிறார். காரியத்தை முடிக்கும்வரையில் தளராமல் இருக்கிறார். எனவேதான், ஓட்டத்தை பாதியிலேயே நிறுத்தி விடுவதுமில்லை, ஓட்டத்திலிருந்து நீக்கப்படுவதுமில்லை. எனவே, உங்கள் பந்தயப்பொருளை “பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.”
பயனுள்ள இலக்குகளை வையுங்கள்
விடாமுயற்சி உண்மையிலேயே பலன் அளிக்க வேண்டுமென்றால், பயனுள்ள இலக்குகளை வைக்கவேண்டியது மிக அவசியம். பயனற்ற காரியங்களையே அநேகர் நாடுகின்றனர். ஆனால் பைபிள் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது: “நிறைவான விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர் . . . தம் செயல்களால் பேறு பெற்றவர் ஆவார்கள்.” (யாக்கோபு 1:25, பொது மொழிபெயர்ப்பு) கடவுளுடைய சட்டத்தை புரிந்துகொள்ள பைபிளைப் படிப்பது, மிகப் பயனுள்ள இலக்கு. ஏன்? ஏனென்றால், கடவுளுடைய சட்டங்கள் பூரணமான, நீதியான தராதரங்களின் அடிப்படையிலேயே உள்ளன. தன்னுடைய படைப்புகளுக்கு எது சிறந்தது என படைப்பாளர் அறிந்திருக்கிறார். எனவே, கடவுளுடைய அறிவுரைகளைக் கற்றுக் கொள்வதில் நாம் உறுதியாய் இருந்து, அவற்றை நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போமானால், சந்தோஷத்தை அடைவது நிச்சயம். “உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [“யெகோவாவில்,” NW] நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என நீதிமொழிகள் 3:5, 6 உறுதியளிக்கிறது.
கூடுதலாக, கடவுளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் அறிவை எடுத்துக்கொள்வதே “நித்திய ஜீவன்” என இயேசு சொல்கிறார். (யோவான் 17:3) இந்த ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம் என பைபிள் தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-13) விரைவில் கடவுளுடைய ராஜ்யம், அவருடைய நீதியான அரசாங்கம், பூமியின் குடிகள் எல்லார்மீதும் அதன் ஆட்சியை செலுத்தும். (தானியேல் 2:44; மத்தேயு 6:10) முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு சமாதானம், செழிப்பு, வளம் ஆகியவற்றை கீழ்ப்படிதலுள்ள மக்களுக்கு இந்த அரசாங்கம் தரும். (சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 21:4) “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என அப்போஸ்தலர் 10:34 சொல்கிறது. இந்த நன்மைகளை அனுபவித்து மகிழ எல்லோருமே அழைக்கப்படுகின்றனர்!
ஞானமும் அர்த்தமும் பொதிந்த பழமையான புத்தகமே பைபிள். அதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நேரமும் முயற்சியும் தேவை. ஆனால் கடவுளுடைய உதவியோடு அந்த அறிவை பெற்றுக்கொள்ள தொடர்ந்து நாடுவோமானால், அதன் அர்த்தங்கள் நமக்கு புலப்படும். (நீதிமொழிகள் 2:4, 5; யாக்கோபு 1:5) நாம் கற்றுக்கொள்வதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது மிகப் பெரிய சவால். நம் சிந்தனைகளில் அல்லது பழக்கங்களில் மாற்றங்கள் தேவையாக இருக்கலாம். பைபிள் படிப்பதை நல்லெண்ணம் கொண்ட தோழர்களும் குடும்ப அங்கத்தினர்களுமே ஒருவேளை எதிர்க்கலாம். எனவே, விடாமுயற்சி மிக அவசியம். ‘நற்கிரியைகள் செய்வதில் சோர்ந்துபோகாமல்’ இருப்பவர்களுக்கு கடவுள் நித்திய ஜீவனை தருவார் என அப்போஸ்தலனாகிய பவுல் நினைவுபடுத்துகிறார். (ரோமர் 2:7) இந்த இலக்கை அடைவதற்கு யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ தயாராய் இருக்கிறார்கள்.
கடவுளைப் பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் கற்றுக்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருங்கள். மேலும், நீங்கள் கற்றுக்கொள்வதை கடைப்பிடிப்பதில் தொடர்ந்து நிலைத்திருங்கள். அப்படி செய்தீர்களென்றால், வெற்றி நிச்சயம்.—சங்கீதம் 1:1-3.
[பக்கம் 6-ன் படம்]
கடவுளையும் அவருடைய விருப்பத்தையும் பற்றி கற்றுக்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருந்தால், வெற்றியடைவீர்கள்
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Culver Pictures