‘நம் கடவுளின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கிறது’
“பசும்புல் காய்ந்துபோகிறது. பூ வாடிப்போகிறது. நம் கடவுளின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது.”—ஏசா. 40:8.
1, 2. (அ) பைபிள் மட்டும் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? (ஆ) கடவுளுடைய வார்த்தையிலிருந்து பிரயோஜனம் அடைய நமக்கு எது உதவும்?
பைபிள் மட்டும் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஒவ்வொரு நாளும் உங்களை வழிநடத்துவதற்குத் தேவையான ஞானமான ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைத்திருக்காது. கடவுளையும் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய எந்த உண்மைகளும் உங்களுக்குத் தெரிந்திருக்காது. கடந்த காலத்தில் மனிதர்களுக்காக யெகோவா செய்த எதுவுமே உங்களுக்குத் தெரிந்திருக்காது.
2 ஆனால், இந்தப் பரிதாபமான நிலைமையில் நாம் இல்லாததற்காகச் சந்தோஷப்படுகிறோம். தன்னுடைய வார்த்தையாகிய பைபிளை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். அதில் இருக்கும் செய்தி என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஏசாயா 40:8-ஐ அப்போஸ்தலன் பேதுரு மேற்கோள் காட்டினார். இந்த வசனம் நேரடியாக பைபிளைப் பற்றிச் சொல்லாவிட்டாலும் அது பைபிளிலுள்ள செய்திக்குப் பொருந்துகிறது. (1 பேதுரு 1:24, 25-ஐ வாசியுங்கள்.) நம் சொந்த மொழியில் பைபிளைப் படிக்கும்போது நாம் ரொம்பவே பிரயோஜனம் அடைவோம். கடவுளுடைய வார்த்தையை நேசித்தவர்களுக்கு இது எப்போதுமே தெரிந்திருந்தது. பைபிளை மொழிபெயர்ப்பதற்காகவும், அது மக்களுக்குக் கிடைக்கும்படி செய்வதற்காகவும் இவ்வளவு நூற்றாண்டுகளாக நிறைய பேர் கடினமாக உழைத்திருக்கிறார்கள்; அதுவும், பயங்கரமான எதிர்ப்பின் மத்தியிலும் கஷ்டங்களின் மத்தியிலும் அப்படி உழைத்திருக்கிறார்கள். முடிந்தவரை எல்லா மக்களும் “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்” யெகோவாவின் விருப்பம்.—1 தீ. 2:3, 4.
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்? (ஆரம்பப் படம்)
3 இந்தக் கட்டுரையில், கடவுளுடைய வார்த்தை எப்படி (1) மொழி மாற்றங்களின் மத்தியிலும், (2) அரசியல் மாற்றங்களின் மத்தியிலும், (3) மொழிபெயர்ப்பதற்கு வந்த எதிர்ப்புகளின் மத்தியிலும் நிலைத்திருக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். அப்படிப் பார்க்கும்போது, பைபிள் மீதும் அதன் எழுத்தாளர் மீதும் நமக்கு இருக்கும் மதிப்பு அதிகமாகும்.—மீ. 4:2; ரோ. 15:4.
மொழி மாற்றங்கள்
4. (அ) காலங்கள் போகப்போக மொழிகள் எப்படி மாறுகின்றன? (ஆ) எந்த ஒரு குறிப்பிட்ட மொழியினரிடமும் கடவுள் பாரபட்சமாக நடந்துகொள்வதில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்? இதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
4 காலங்கள் போகப்போக மொழிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களின் அர்த்தமே அடியோடு மாறிவிடுகிறது. உங்கள் மொழியிலும் இப்படி நடந்திருப்பது உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். பழங்கால மொழிகளிலும் இப்படித்தான் நடந்திருக்கிறது. பைபிளை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழியும் கிரேக்க மொழியும், இன்று மக்கள் பேசுகிற எபிரெய மொழியிலிருந்தும் கிரேக்க மொழியிலிருந்தும் ரொம்பவே வித்தியாசப்படுகின்றன. பைபிளை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எபிரெயு, கிரேக்க மொழிகளை இன்று பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் பைபிளை மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. பழங்கால எபிரெயு, கிரேக்க மொழிகளைக் கற்றுக்கொண்டால்தான் பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது அந்தளவுக்கு உதவியாக இருக்காது.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இன்று பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ 3,200-க்கும் அதிகமான மொழிகளில் கிடைப்பதற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். ‘எல்லா தேசத்தினரும் கோத்திரத்தினரும் மொழியினரும்’ தன்னுடைய வார்த்தையிலிருந்து பிரயோஜனம் அடைய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (வெளிப்படுத்துதல் 14:6-ஐ வாசியுங்கள்.) இதைத் தெரிந்துகொள்ளும்போது, பாரபட்சம் காட்டாத நம்முடைய அன்பான கடவுளிடம் இன்னும் நெருங்கிவருகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை.—அப். 10:34.
5. கிங் ஜேம்ஸ் வர்ஷன் ஏன் பிரபலமானது?
5 மொழிகளில் ஏற்படுகிற மாற்றம் பைபிள் மொழிபெயர்ப்புகளையும் பாதிக்கிறது. ஆரம்பத்தில் எளிமையாக இருக்கும் ஒரு மொழிபெயர்ப்பு எப்போதுமே அப்படி இருப்பதில்லை. இதற்கு ஒரு உதாரணம்தான், 1611-ல் முதன்முதலாக வெளியான கிங் ஜேம்ஸ் வர்ஷன். அது மிகவும் பிரபலமான ஒரு ஆங்கில பைபிளாக ஆனது. சொல்லப்போனால், அதில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்கள், பிற்பாடு ஆங்கில மொழியில் மரபுத்தொடர்களாகவே ஆகிவிட்டன. ஆனால், யெகோவா என்ற பெயரைச் சில தடவைதான் அந்த மொழிபெயர்ப்பு குறிப்பிட்டது. எபிரெய மூலப்பிரதியில் கடவுளுடைய பெயர் காணப்பட்ட பெரும்பாலான இடங்களில், அந்தப் பெயருக்குப் பதிலாக “கர்த்தர்” என்ற வார்த்தையைப் பெரிய எழுத்துகளில் அது குறிப்பிட்டது. பிற்கால பதிப்புகளிலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் சில வசனங்களில் “கர்த்தர்” என்ற வார்த்தையைப் பெரிய எழுத்துகளில் அது குறிப்பிட்டது. இந்த விதத்தில், புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் பகுதியிலும் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருந்ததை கிங் ஜேம்ஸ் வர்ஷன் காட்டுகிறது.
6. புதிய உலக மொழிபெயர்ப்பு கிடைத்ததற்காக நாம் ஏன் நன்றியோடு இருக்கிறோம்?
6 கிங் ஜேம்ஸ் வர்ஷன் முதன்முதலில் வெளியானபோது, அதில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் காலப்போக்கில், அவற்றில் சில வார்த்தைகள் பழங்கால வார்த்தைகளாகிவிட்டன; இன்று அவற்றைப் புரிந்துகொள்வதே கஷ்டமாக இருக்கிறது. மற்ற மொழிகளில் வெளிவந்த பைபிள்களின் விஷயத்திலும் இதுதான் உண்மை. அதனால், நவீன மொழியைப் பயன்படுத்தியிருக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் கிடைத்ததற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். இது முழுமையாகவோ பகுதியாகவோ 150-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. அதனால், உலகத்தில் இருக்கிற பெரும்பாலான மக்களால் தங்களுடைய சொந்த மொழியிலேயே இந்த பைபிளைப் படிக்க முடிகிறது. இதில் தெளிவான, நவீன வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், கடவுள் சொல்லும் செய்தி சுலபமாக நம் மனதைத் தொடுகிறது. (சங். 119:97) ஆனால், புதிய உலக மொழிபெயர்ப்பு விசேஷமானதாக இருப்பதற்கு முக்கியமான காரணம், மூலப்பிரதியில் கடவுளுடைய பெயர் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதைப் பயன்படுத்தியிருப்பதுதான்.
அரசியல் மாற்றங்கள்
7, 8. (அ) கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த நிறைய யூதர்களால் ஏன் எபிரெய வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை? (ஆ) கிரேக்க செப்டுவஜின்ட் என்பது என்ன?
7 உலகத்தில் நடந்த சில அரசியல் மாற்றங்கள், அந்தந்த சமயத்தில் மக்கள் பேசிய மொழியை மாற்றியிருக்கின்றன. இருந்தாலும், மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பைபிள் கிடைக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். உதாரணத்துக்கு, பைபிளின் முதல் 39 புத்தகங்களை இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள் எழுதினார்கள். முதலில், அவர்களிடம்தான் “கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகள் ஒப்படைக்கப்பட்டன.” (ரோ. 3:1, 2) அவர்கள் அந்தப் புத்தகங்களை எபிரெயு அல்லது அரமேயிக் மொழியில் எழுதினார்கள். ஆனால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குள், யூதர்களில் நிறைய பேரால் எபிரெய மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏன்? உலகத்திலுள்ள நிறைய இடங்களை மகா அலெக்ஸாண்டர் கைப்பற்றியபோது, கிரேக்க சாம்ராஜ்யம் விரிவடைந்தது. அந்த சாம்ராஜ்யத்தின் பகுதிகளில் கிரேக்க மொழி புழக்கத்துக்கு வந்தது. நிறைய பேர் தங்களுடைய சொந்த மொழியைப் பேசுவதற்குப் பதிலாகக் கிரேக்க மொழியைப் பேச ஆரம்பித்தார்கள். (தானி. 8:5-7, 20, 21) நிறைய யூதர்களும் கிரேக்க மொழியைப் பேச ஆரம்பித்தார்கள். அதனால், எபிரெய மொழியில் பைபிளைப் படிப்பது அவர்களுக்குக் கஷ்டமாகிவிட்டது. இந்தப் பிரச்சினை எப்படித் தீர்க்கப்பட்டது?
8 இயேசு பிறப்பதற்குக் கிட்டத்தட்ட 250 வருஷங்களுக்கு முன்பு, பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பிற்பாடு, எபிரெய வேதாகமத்தின் மற்ற புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டன. அந்த மொழிபெயர்ப்பு கிரேக்க செப்டுவஜின்ட் என்று அழைக்கப்பட்டது. எபிரெய வேதாகமத்தின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு அதுதான்.
9. (அ) கடவுளுடைய வார்த்தையை வாசிக்க செப்டுவஜின்ட்டும் மற்ற ஆரம்பகால மொழிபெயர்ப்புகளும் மக்களுக்கு எப்படி உதவின? (ஆ) எபிரெய வேதாகமத்தில் உங்களுக்கு எந்த வசனங்கள் பிடிக்கும்?
9 செப்டுவஜின்ட் கிடைத்ததால், கிரேக்க மொழி பேசிய யூதர்களால் கிரேக்க மொழியிலேயே எபிரெய வேதாகமத்தை வாசிக்க முடிந்தது. இப்படி, தங்களுக்குத் தெரிந்த மொழியிலேயே கடவுளுடைய வார்த்தையைக் கேட்டபோது அல்லது வாசித்தபோது அவர்கள் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்! காலப்போக்கில், அந்தந்த சமயத்தில் புழக்கத்தில் இருந்த மற்ற மொழிகளிலும் பைபிளின் சில பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டன. உதாரணத்துக்கு, சிரியாக், காதிக், லத்தீன் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. அதனால், இன்னும் நிறைய பேர் கடவுளுடைய வார்த்தையை வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் அதை நேசிக்கவும் ஆரம்பித்தார்கள். இன்று போலவே அன்றும், அவரவருக்குப் பிடித்த வசனங்கள் இருந்தன. (சங்கீதம் 119:162-165-ஐ வாசியுங்கள்.) இப்படித்தான், அரசியல் மாற்றங்களின் மத்தியிலும் மொழி மாற்றங்களின் மத்தியிலும் கடவுளுடைய வார்த்தை நிலைத்திருக்கிறது.
பைபிள் மொழிபெயர்ப்புக்கு வந்த எதிர்ப்பு
10. ஜான் வைக்ளிஃப் காலத்தில், பெரும்பாலான மக்களால் ஏன் பைபிளை வாசிக்க முடியவில்லை?
10 பல வருஷங்களாக, அதிகாரம்படைத்த தலைவர்கள் நிறைய பேர், பைபிளைப் படிக்காதபடி மக்களைத் தடுத்திருக்கிறார்கள். ஆனால், எல்லாருக்குமே பைபிள் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கடவுள்பக்தியுள்ள ஆட்கள் தொடர்ந்து பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், 14-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஜான் வைக்ளிஃப். எல்லாருமே பைபிளை வாசித்துப் பயன்பெற வேண்டுமென்று அவர் நினைத்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில், இங்கிலாந்திலிருந்த பெரும்பாலான மக்கள் தங்களுடைய மொழியில் பைபிள் செய்தியைக் கேட்டதே இல்லை. பைபிள்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன. ஒவ்வொரு பிரதியையும் கைப்பட நகல் எடுக்க வேண்டியிருந்தது. அதனால், ஒருசிலர் மட்டும்தான் பைபிளை வைத்திருந்தார்கள். அதோடு, அன்றிருந்த பெரும்பாலான மக்களுக்கு வாசிக்கக்கூடத் தெரியவில்லை. சர்ச்சுக்குப் போனவர்கள், லத்தீன் மொழியில் பைபிள் சத்தமாக வாசிக்கப்படுவதைக் கேட்டிருக்கலாம். ஆனால், அந்தப் பழங்கால மொழியை சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்களின் சொந்த மொழியிலேயே பைபிள் கிடைக்கும்படி யெகோவா எப்படிப் பார்த்துக்கொண்டார்?—நீதி. 2:1-5.
11. வைக்ளிஃபின் பைபிள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
11 ஜான் வைக்ளிஃபும் மற்றவர்களும் 1382-ல், பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள். அவரைப் பின்பற்றிய லோலார்ட்ஸ் என்ற தொகுதியினரின் மத்தியில் வைக்ளிஃபின் பைபிள் ரொம்பவும் பிரபலமாக ஆனது. அந்தத் தொகுதியினர் பைபிளை நேசித்தார்கள். இங்கிலாந்திலிருந்த எல்லா கிராமங்களுக்கும் நடந்தே போய், மக்களுக்கு பைபிளை வாசித்துக் காட்டினார்கள். கைப்பட நகல் எடுக்கப்பட்ட பைபிளின் சில பகுதிகளை மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்கள் செய்த சேவையால், பைபிள்மேல் மக்களுக்கு மறுபடியும் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
12. வைக்ளிஃபையும் அவருடைய பைபிளையும் பற்றிக் குருமார்கள் எப்படி உணர்ந்தார்கள்?
12 வைக்ளிஃபையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பைபிளையும் குருமார்கள் வெறுத்தார்கள். அதனால், லோலார்ட்ஸைத் துன்புறுத்தினார்கள். அவர்களுடைய கையில் சிக்கிய அத்தனை வைக்ளிஃப் பைபிள்களையும் அழித்தார்கள். வைக்ளிஃப் அப்போது உயிரோடு இல்லாவிட்டாலும், அவரை சர்ச்சின் எதிரியாக அறிவித்தார்கள். அவருடைய எலும்புகளைத் தோண்டி எடுத்து, நெருப்பில் சுட்டெரித்து, அந்தச் சாம்பலை ஸ்விஃப்ட் என்ற ஆற்றில் வீசினார்கள். ஆனாலும், நிறைய பேர் கடவுளுடைய வார்த்தையை வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் விரும்பினார்கள். சர்ச்சினால் அவர்களைத் தடுக்க முடியவில்லை. பிறகு நூற்றுக்கணக்கான வருஷங்களாக, ஐரோப்பாவிலும் உலகத்தின் மற்ற பகுதிகளிலும் வாழ்ந்தவர்கள், மக்களுக்குப் புரிந்த மொழிகளில் பைபிளை மொழிபெயர்க்கவும் அச்சடிக்கவும் ஆரம்பித்தார்கள்.
“உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன்”
13. என்ன விஷயம் தெளிவாகத் தெரிகிறது? இது எப்படி நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது?
13 பைபிள் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக, செப்டுவஜின்ட், வைக்ளிஃபின் பைபிள், கிங் ஜேம்ஸ் வர்ஷன் போன்ற பைபிள் மொழிபெயர்ப்புகளும் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டதாகச் சொல்ல முடியாது. இருந்தாலும், அவை உருவான வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, யெகோவா கொடுத்த வாக்குறுதியின்படியே அவருடைய வார்த்தை நிலைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது, யெகோவாவுடைய மற்ற வாக்குறுதிகளும் நிறைவேறும் என்பதில் நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது.—யோசு. 23:14.
14. பைபிளைப் பற்றி நாம் கற்றுக்கொள்ளும்போது, கடவுள்மேல் இருக்கும் அன்பு எப்படி அதிகமாகிறது?
14 யெகோவா தன் வார்த்தையை எப்படியெல்லாம் பாதுகாத்தார் என்று நாம் கற்றுக்கொள்ளும்போது, அவர்மேல் இருக்கும் நம் நம்பிக்கையும் அன்பும் அதிகமாகிறது.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) யெகோவா ஏன் நமக்கு பைபிளைக் கொடுத்திருக்கிறார்? அதைப் பாதுகாப்பதாக ஏன் வாக்குக் கொடுத்திருக்கிறார்? ஏனென்றால், அவர் நம்மை நேசிக்கிறார், நமக்குப் பிரயோஜனமானதைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார். (ஏசாயா 48:17, 18-ஐ வாசியுங்கள்.) அதனால், அவர்மேல் அன்பு காட்டவும் அவருக்குக் கீழ்ப்படியவும் நம் மனம் நம்மைத் தூண்டுகிறது!—1 யோ. 4:19; 5:3.
15. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
15 நாம் கடவுளுடைய வார்த்தையை ரொம்பவே நேசிக்கிறோம். தனிப்பட்ட பைபிள் வாசிப்பிலிருந்து நாம் எப்படி முழுமையாகப் பிரயோஜனம் அடையலாம்? பைபிளுக்கு மதிப்புக் காட்ட, ஊழியத்தில் பார்க்கிற ஆட்களுக்கு நாம் எப்படி உதவலாம்? சபையில் போதிக்கிறவர்கள், கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் எல்லாவற்றையும் போதிக்க எப்படிக் கவனமாக இருக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
a நவம்பர் 1, 2009 காவற்கோபுரத்தின் ஆங்கில இதழில், “எபிரெயு மற்றும் கிரேக்க மொழியை நீங்கள் கற்றுக்கொள்வது அவசியமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
b “நீங்களே வந்து பாருங்கள்!” என்ற பெட்டியைப் பாருங்கள்.