இது ‘உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது’
“அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக.”—யாத். 12:14.
1, 2. எந்த நிகழ்ச்சியைக் கிறிஸ்தவர்கள் முக்கியமாகக் கருத வேண்டும், ஏன்?
மணமானவர்கள், வருடாவருடம் திருமண நாளைச் சந்தோஷமாக நினைவுகூருகிறார்கள். வேறுசிலர், நாட்டின் சுதந்திர தினத்தை அல்லது வரலாற்று சிறப்புமிக்க வேறெதாவது தினத்தை வருடந்தோறும் நினைவுகூருகிறார்கள். ஆனால், சுமார் 3,500 ஆண்டுகளாக நினைவுகூரப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2 அதுதான் பஸ்கா பண்டிகை. பூர்வ இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான நாளை நினைவுகூர இது கொண்டாடப்படுகிறது. இந்தச் சம்பவம் உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களோடு இது சம்பந்தப்பட்டிருக்கிறது. ‘யூதர்கள் இதைக் கொண்டாடுகிறார்கள்; ஆனால் நான் ஒன்றும் யூதனில்லையே, எனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். இதற்கான பதிலை 1 கொரிந்தியர் 5:7-ல் காணலாம். “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே” என அது சொல்கிறது. இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, யூதர்களின் பஸ்கா பண்டிகையைப் பற்றியும் கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளையோடு இது எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பஸ்கா பண்டிகை ஏன் கொண்டாடப்பட்டது?
3, 4. பஸ்கா பண்டிகை ஆரம்பமானது எப்படி?
3 பஸ்கா பண்டிகை எப்படி ஆரம்பமானது என்பதை உலகம் முழுவதுமுள்ள யூதரல்லாத லட்சக்கணக்கானோர் அறிந்திருக்கிறார்கள். எப்படி? ஒருவேளை யாத்திராகமப் புத்தகத்தில் வாசித்திருக்கலாம், யாரிடமிருந்தாவது கேள்விப்பட்டிருக்கலாம், அல்லது அந்தச் சம்பவத்தை விவரிக்கும் சினிமாவைப் பார்த்திருக்கலாம்.
4 இஸ்ரவேலர்கள் எகிப்தில் பல வருடங்கள் அடிமைகளாக இருந்த சமயம் அது. யெகோவா தம்முடைய ஜனங்களை விடுவிக்கும்படி கேட்க மோசேயையும் அவருடைய அண்ணன் ஆரோனையும் பார்வோனிடம் அனுப்பினார். அந்தக் கர்வம் பிடித்த பார்வோன் அவர்களை விடுதலை செய்ய மறுக்கவே, யெகோவா எகிப்து தேசத்தை அடுத்தடுத்து பல வாதைகளால் வாதித்தார். இறுதியாக, பத்தாம் வாதையைக் கொண்டுவந்தபோது எகிப்தின் முதற்பேறனைத்தும் செத்துமடிந்தன. அதற்குப் பிறகே அவர்களை விடுதலை செய்தான்.—யாத். 1:11; 3:9, 10; 5:1, 2; 11:1, 5.
5. எகிப்திலிருந்து விடுதலையாகிச் செல்வதற்கு முன் இஸ்ரவேலர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.)
5 கி.மு. 1513-ஆம் ஆண்டு, ஆபிப் என்றழைக்கப்பட்ட எபிரெய மாதத்தின் (பிற்பாடு நிசான் என்றழைக்கப்பட்டது) இளவேனிற்காலத்தில், பகலும் இரவும் ஓரளவு சரிசமமாக இருந்த ஒரு நாளில் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட வேண்டியிருந்தது.a அது நிசான் மாதம் 14-ஆம் தேதி. ஆனால், அங்கிருந்து செல்வதற்குமுன் அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? அந்த 14-ஆம் தேதிக்காக, 10-ஆம் தேதியிலிருந்தே தயாராக வேண்டும் என கடவுள் அவர்களுக்குச் சொல்லியிருந்தார். அந்த நாள், சூரிய அஸ்தமனத்திலிருந்து ஆரம்பிக்கும். ஏனென்றால், எபிரெயர்களுக்கு ஒருநாள் என்பது, ஒரு சூரிய அஸ்தமனத்தில் துவங்கி அடுத்த சூரிய அஸ்தமனத்தில் முடியும். நிசான் 14-ஆம் தேதியன்று, இஸ்ரவேல் வீட்டுத்தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு செம்மறியாட்டுக்கடாவை (அல்லது வெள்ளாட்டுக்கடா) அடித்து, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை வீட்டுவாசலின் நிலைக்கால்களிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்தார்கள். (யாத். 12:3-7, 22, 23) நெருப்பினால் சுடப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை, கசப்பான கீரையோடும் புளிப்பில்லாத அப்பத்தோடும் சாப்பிட்டார்கள். அந்த ராத்திரியிலே, கடவுளுடைய தூதர் எகிப்தியரின் தலைப்பிள்ளைகளைக் கொன்றுபோட்டார்; கீழ்ப்படிந்த இஸ்ரவேலர்களோ, அந்த வாதையிலிருந்து தப்பி அங்கிருந்து புறப்பட்டார்கள்.—யாத். 12:8-13, 29-32.
6. கடவுளுடைய மக்கள் பஸ்காவை ஏன் வருடந்தோறும் கொண்டாட வேண்டியிருந்தது?
6 ஆம், அற்புதமாக விடுதலையான அந்த நாளை அவர்கள் காலங்காலமாக நினைவுகூர வேண்டியிருந்தது. “அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்” என்று கடவுள் அவர்களிடம் சொன்னார். இந்த 14-ஆம் தேதியைத் தொடர்ந்து வந்த ஏழு நாட்களும் அவர்கள் பண்டிகை கொண்டாட வேண்டியிருந்தது. உண்மையில், 14-ஆம் தேதிதான் பஸ்கா பண்டிகை. இருந்தாலும், அந்த எட்டு நாட்களும் பஸ்கா பண்டிகை என்றே அழைக்கப்பட்டது. (யாத். 12:14-17; லூக். 22:1; யோவா. 18:28; 19:14) இது, வருடாந்தர பண்டிகையாக இருந்ததால் யூதர்கள் இதை ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டியிருந்தது.—2 நா. 8:13.
7. கடைசி பஸ்காவின்போது, இயேசு எதை ஆரம்பித்து வைத்தார்?
7 திருச்சட்டத்தைக் கடைப்பிடித்த யூதர்களான இயேசுவும் அவருடைய சீடர்களும் வருடாந்தர பஸ்காவை அனுசரித்து வந்தார்கள். (மத். 26:17-19) அந்தப் பண்டிகையை அவர்கள் கடைசியாக கொண்டாடியபோது, இயேசு ஒரு புதிய அனுசரிப்பை ஆரம்பித்து வைத்தார். அதுதான் எஜமானரின் இரவு விருந்து. அவரது சீடர்கள் வருடாவருடம் அதை அனுசரிக்க வேண்டும். எந்த நாளில் அதைச் செய்யவேண்டும்?
எஜமானரின் இரவு விருந்தை அனுசரிக்க வேண்டிய நாள்
8. பஸ்கா மற்றும் எஜமானரின் இரவு விருந்து சம்பந்தமாக என்ன கேள்வி எழும்புகிறது?
8 கடைசி பஸ்காவை அனுசரித்த உடனே, இயேசு இந்த இரவு விருந்தை ஆரம்பித்து வைத்தார். அதனால், பஸ்காவை அனுசரித்த அதே நாளில்தான் இதையும் அனுசரிக்க வேண்டும். இன்றும் யூதர்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், பஸ்காவை அவர்கள் கொண்டாடும் நாளுக்கும், எஜமானரின் இரவு விருந்தை நாம் அனுசரிக்கும் நாளுக்கும் இடையில் ஓரிரு நாட்கள் வித்தியாசப்படுவதைக் கவனித்திருப்பீர்கள். ஏன் இந்த வேறுபாடு? இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த ஒரு கட்டளையிலிருந்து இதற்கான பதிலை ஓரளவு தெரிந்துகொள்ளலாம். “இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும்” ஒரு ஆட்டுக்குட்டியை அடிக்க வேண்டுமென மோசே சொன்ன பிறகு, நிசான் 14 அன்று எந்தச் சமயத்தில் அதைச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.—யாத்திராகமம் 12:5, 6-ஐ வாசியுங்கள்.
9. யாத்திராகமம் 12:6-ன்படி, பஸ்கா ஆட்டுக்குட்டி எந்தச் சமயத்தில் அடிக்கப்படவேண்டும்? (“எந்தச் சமயத்தில்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
9 “இரண்டு சாயங்காலங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில்” ஆட்டுக்குட்டியை அடிக்க வேண்டும் என யாத்திராகமம் 12:6 சொல்வதாக, பென்டட்யூக் அண்ட் ஹஃப்டோராஸ் (ஆங்கிலம்) என்ற புத்தகம் விளக்கம் தருகிறது. சில பைபிள்கள் இந்த வசனத்தை இப்படித்தான் மொழிபெயர்த்திருக்கின்றன. வேறு சில மொழிபெயர்ப்புகள், இந்த வசனத்தை “மாலை மங்கும் வேளையில்” (பொது மொழிபெயர்ப்பு) என்றும், “மாலைப் பொழுதில்” (ஈஸி டூ ரீட் வர்ஷன்) என்றும் மொழிபெயர்த்திருக்கின்றன. ஆகவே, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, வெளிச்சம் இருக்கும்போதே, அதாவது, நிசான் 14-ஆம் நாள் ஆரம்பித்த உடனே, ஆட்டுக்குட்டி அடிக்கப்படவேண்டும்.
10. ஆட்டுக்குட்டி எந்தச் சமயத்தில் அடிக்கப்படலாம் என்று சிலர் நம்பினார்கள்? இது என்ன கேள்வியை எழுப்புகிறது?
10 காலம் செல்லச்செல்ல, ஆலயத்திற்குக் கொண்டுவரப்படும் எல்லா ஆட்டுக்குட்டிகளையும் அடிக்க மணிக்கணக்கில் நேரம் எடுக்கும் என்பதாக சில யூதர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஆகவே, நிசான் 14-ஆம் நாள் முடிவடையும் சமயத்தில், அதாவது, ஏறக்குறைய வெயில் தாழும் சமயத்திலிருந்து (பிற்பகல்) அந்த நாளில் சூரியன் அஸ்தமிக்கும்வரையாக அடிக்கப்படலாம் என்று யாத்திராகமம் 12:6 சொல்வதாக நம்பினார்கள். அப்படியென்றால், பஸ்கா உணவை எப்பொழுது சாப்பிடுவது? பூர்வகால யூத மதத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் வல்லுநரான பேராசிரியர் ஜோனத்தன் க்ளவான்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “சூரியன் அஸ்தமிக்கையில் ஒரு புதிய நாள் ஆரம்பிப்பதால், பஸ்கா ஆட்டுக்குட்டி நிசான் 14-ஆம் நாள் அடிக்கப்படுகிறது. ஆனால், நிசான் 15-ஆம் நாள்தான் பஸ்கா பண்டிகை ஆரம்பமாகிறது; பஸ்கா உணவைச் சாப்பிடுவதும் அன்றுதான். என்றாலும், இந்த வரிசைக் கிரமத்தைப் பற்றி யாத்திராகமப் புத்தகம் எதுவும் குறிப்பிடுவதில்லை.” மேலும் அவர் இவ்வாறு எழுதினார்: “ரபீக்களின் புத்தகங்கள் . . . [கி.பி. 70-ல்] ஆலயம் அழிக்கப்பட்டதற்கு முன் பஸ்கா உணவு ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டன என்பதைப் பற்றி நமக்கு உறுதியாக எதுவும் சொல்வதில்லை.”—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
11. (அ) கி.பி. 33, பஸ்கா நாளில், இயேசுவுக்கு என்ன நடந்தது? (ஆ) கி.பி. 33, நிசான் 15, “பெரிய” ஓய்வுநாள் என்றழைக்கப்பட்டது ஏன்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
11 இப்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. கி.பி. 33-ல், பஸ்காவுக்கான ஏற்பாடுகள் எப்படி நடந்தன? “பஸ்கா பலி செலுத்த வேண்டிய” நாள் நெருங்கியபோது, அதாவது நிசான் 13 அன்று, “நாம் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள்” என்று பேதுருவிடமும் யோவானிடமும் இயேசு சொல்லி அனுப்பினார். (லூக். 22:7, 8) நிசான் 14, வியாழக்கிழமை சாயங்காலம், பஸ்கா உணவுக்கான ‘நேரம் வந்தது.’ அப்போஸ்தலர்களோடு சேர்ந்து பஸ்கா உணவைச் சாப்பிட்டபின், எஜமானரின் இரவு விருந்தை இயேசு ஆரம்பித்து வைத்தார். (லூக். 22:14, 15) அந்த இரவு அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டார். நிசான் 14-ஆம் நாள், மதியவேளை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கழுமரத்தில் அறையப்பட்டார்; அன்று பிற்பகலில் மரணமடைந்தார். (யோவா. 19:14) இவ்வாறாக, பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்ட அதே நாளில் ‘நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டார்.’ (1 கொ. 5:7; 11:23; மத். 26:2) யூதர்களின் அந்த நாள் முடிவதற்குள், அதாவது நிசான் 15-ஆம் நாள் தொடங்குவதற்கு முன் இயேசு அடக்கம் செய்யப்பட்டார்.b—லேவி. 23:5-7; லூக். 23:54.
பஸ்கா—முக்கியத்துவம் வாய்ந்த நாள்
12, 13. பஸ்கா பண்டிகை இஸ்ரவேலர்களின் பிள்ளைகளுக்கு எப்படி நினைவுகூருதலான நாளாய் இருந்தது?
12 இப்போது மீண்டும் எகிப்தில் நடந்த சம்பவத்துக்கு வரலாம். கடவுளுடைய ஜனங்கள் தலைமுறை தலைமுறையாக பஸ்காவை அனுசரிக்க வேண்டும்; அது அவர்களுக்கு “நித்திய” நியமமாக இருக்க வேண்டும் என்று மோசே சொன்னார். இந்த வருடாந்தர அனுசரிப்பின்போது, இஸ்ரவேலர்களின் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் இந்த அனுசரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்பார்கள். (யாத்திராகமம் 12:24-27-ஐ வாசியுங்கள்; உபா. 6:20-23) ஆகவே, இது பிள்ளைகளுக்கும் “நினைவுகூருதலான நாளாய்” இருக்கும்.—யாத். 12:14.
13 ஆம், புதிய தலைமுறைகள் வளர்ந்துவந்தபோது, தகப்பன்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சில முக்கியமான விஷயங்களை வலியுறுத்தினார்கள். யெகோவா தம்முடைய மக்களைக் காப்பாற்ற வல்லவர், அவர் புரிந்துகொள்ள முடியாத உணர்ச்சியற்ற வெறும் சக்தியல்ல, தம்முடைய மக்கள்மீது மிகுந்த அக்கறையுள்ளவர், உதவிக்கரம் நீட்ட எப்போதும் தயாராக இருக்கும் நிஜமான ஒரு நபர் போன்ற விஷயங்களைப் பிள்ளைகள் கற்றுக்கொண்டார்கள். “அவர் எகிப்தியரை அதம்பண்ணி”, இஸ்ரவேலர்களின் தலைப்பிள்ளைகளைக் காப்பாற்றியதன் மூலம் இதையெல்லாம் நிரூபித்தார்.
14. பஸ்காவைப் பற்றிய என்ன பாடங்களை பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்கலாம்?
14 கிறிஸ்தவ பெற்றோர் வருடாவருடம் தங்களுடைய பிள்ளைகளிடம் பஸ்கா பண்டிகையின் முக்கியத்துவத்தைப் பற்றித் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதில்லை. இருந்தாலும், கடவுள் தம்முடைய மக்களைக் காப்பாற்ற வல்லவர் என்பதை உங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்களா? இன்றும் யெகோவா தம்முடைய மக்களைக் காப்பாற்ற வல்லவர் என்பதில் உங்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர்களுக்குள் விதைக்கிறீர்களா? (சங். 27:11; ஏசா. 12:2) இந்த விஷயங்களையெல்லாம் சலிப்புத்தட்டும் விதத்தில் சொல்லாமல் அவர்கள் ரசித்துக் கேட்கும் விதத்தில் சொல்கிறீர்களா? குடும்பத்தினர் ஆன்மீக ரீதியில் நன்கு வளர இந்த விஷயங்களைக் கலந்துபேசுங்கள்.
15, 16. பஸ்கா மற்றும் யாத்திராகமப் பதிவுகளிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன விஷயத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
15 யெகோவா தம்முடைய மக்களைக் காப்பாற்ற வல்லவர் என்ற விஷயத்தை மட்டுமல்ல, அவர் விடுவிப்பவர் என்ற விஷயத்தையும் பஸ்கா பற்றிய பதிவு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இஸ்ரவேலர்களை “எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி,” விடுவித்தார். அதற்காக அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். மேகஸ்தம்பத்தாலும் அக்கினிஸ்தம்பத்தாலும் அவர்களை வழிநடத்தினார். சமுத்திரத்தின் தண்ணீர் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் மதிலாக நிற்க, அதன் நடுவே வெட்டாந்தரையில் அவர்கள் நடந்துபோனார்கள். பத்திரமாக அக்கரையை அடைந்தபின், தண்ணீர் திரும்பிவந்து பார்வோனுடைய ராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டதை அவர்கள் கண்டார்கள். பின்னர் இஸ்ரவேலர்கள் இவ்வாறாக ஆனந்த கீதம் பாடினார்கள்: “கர்த்தரைப் பாடுவேன் . . . குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்.”—யாத். 13:14, 21, 22; 15:1, 2; சங். 136:11-15.
16 விடுவிப்பவரான யெகோவாமீது நம்பிக்கை வைக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறீர்களா? உங்களுக்கு இருக்கும் அந்த நம்பிக்கை, உங்களுடைய பேச்சிலும், தீர்மானங்களிலும் வெளிப்படுவதை அவர்களால் பார்க்கமுடிகிறதா? உங்களுடைய குடும்ப வழிபாட்டில் யாத்திராகமம் 12-15 வரையான அதிகாரங்களையும் அப்போஸ்தலர் 7:30-36 அல்லது தானியேல் 3:16-18, 26-28 வரையான வசனங்களையும் கலந்தாலோசிக்கும்போது, யெகோவா தம்முடைய மக்களை எப்படி விடுவித்தார் என்பதை வலியுறுத்துங்கள். ஆம், கடந்த காலத்தில் மட்டும் அல்ல, இப்போதும் யெகோவா தம்முடைய மக்களை விடுவிக்கிறார் என்பதில் இளையோரும் முதியோரும் நம்பிக்கை வைக்க வேண்டும். மோசே காலத்தில் யெகோவா தம்முடைய மக்களை விடுவித்தது போல எதிர்காலத்தில் நம்மையும் விடுவிப்பார்.—1 தெசலோனிக்கேயர் 1:9, 10-ஐ வாசியுங்கள்.
நாம் நினைவுகூர
17, 18. பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைவிட இயேசுவின் இரத்தம் ஏன் மிகச் சிறந்தது?
17 பஸ்கா அனுசரிப்பு, திருச்சட்டத்தின் ஒரு பாகம். உண்மை கிறிஸ்தவர்கள் இப்போது அதைப் பின்பற்றாததால், யூதர்களின் அந்த வருடாந்தர அனுசரிப்பை அவர்கள் நினைவுகூருவதில்லை. (ரோ. 10:4; கொலோ. 2:13-16) மாறாக, கடவுளுடைய மகனின் மரண நாளை நினைவுகூருகிறார்கள். ஆனாலும், பஸ்கா பண்டிகையின்போது கடைப்பிடிக்கப்பட்ட விஷயங்கள் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை யாவை?
18 இஸ்ரவேலர்கள், தங்களுடைய உயிரைப் பாதுகாத்துக்கொள்ள, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வாசலின் நிலைக்கால்களிலும் நிலையின் மேற்சட்டங்களிலும் தெளிக்க வேண்டியிருந்தது. பஸ்கா நாளன்றோ வேறெந்தச் சமயத்திலோ நாம் மிருகபலிகளைச் செலுத்துவதில்லை. ஆனால், நம் உயிரை என்றென்றும் பாதுகாக்க உதவும் மிகச் சிறந்த பலி ஒன்று இருக்கிறது. அதுதான் இயேசுவின் ‘தெளிக்கப்பட்ட இரத்தம்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இது “பரலோக உறுப்பினர்களாய்ச் சேர்க்கப்பட்டிருக்கிற தலைமகன்களின் சபையை” பாதுகாக்கிறது. (எபி. 12:23, 24) பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் உயிரையும் பாதுகாக்கிறது. ஆகவே, நாம் அனைவரும் எப்போதுமே இந்த வாக்குறுதியை நினைவில் வைக்க வேண்டும்: “அளவற்ற கருணையின் ஐசுவரியத்தின்படியே, அந்த அன்பு மகன் தமது இரத்தத்தை மீட்புவிலையாகக் கொடுத்ததால் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது; ஆம், நம்முடைய மீறுதல்களுக்கு மன்னிப்புக் கிடைத்திருக்கிறது.”—எபே. 1:7.
19. பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பற்றிய என்ன விஷயம் தீர்க்கதரிசனங்களின் மீதுள்ள நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது?
19 பஸ்காவின்போது அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் எலும்பை இஸ்ரவேலர்கள் முறிக்கக்கூடாது. (யாத். 12:46; எண். 9:11, 12) அப்படியென்றால், உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்கு ‘கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியை’ பற்றி என்ன சொல்லலாம்? (யோவா. 1:29) இரு குற்றவாளிகளுக்கு இடையே இயேசு அறையப்பட்டார். கழுமரங்களில் ஏற்றப்பட்டவர்கள் சீக்கிரத்தில் இறந்து விடுவதற்காக அவர்களுடைய கால்களை முறித்துவிடுமாறு பிலாத்துவிடம் யூதர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஏனென்றால், அடுத்த நாளாகிய நிசான் 15, பெரிய ஓய்வு நாளாக இருந்தது. ஓய்வுநாளன்று சடலங்களைக் கழுமரத்தில் அப்படியே விட்டுவிடக்கூடாது. அதனால், படைவீரர்கள் இரு குற்றவாளிகளின் கால்களையும் முறித்தார்கள்; “இயேசுவிடம் வந்தபோதோ, அவர் ஏற்கெனவே இறந்திருந்ததைக் கண்டு அவரது கால்களை முறிக்காமல் விட்டுவிட்டார்கள்.” (யோவா. 19:31-34) பஸ்கா ஆட்டுக்குட்டியின் எலும்புகள் முறிக்கப்படாதது, கி.பி. 33, நிசான் 14 அன்று நடக்கவிருந்த சம்பவத்துக்கு “நிழலாய்” இருந்தது. (எபி. 10:1) அதுமட்டுமல்லாமல், இவையெல்லாம், சங்கீதம் 34:20-லுள்ள வார்த்தைகளுக்கு இசைவாகவே நடந்தன. தீர்க்கதரிசனங்களின் மீதான நம்முடைய நம்பிக்கையை இது பலப்படுத்துகிறது.
20. பஸ்காவுக்கும் எஜமானரின் இரவு விருந்துக்கும் இடையில் என்ன குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது?
20 ஆனால், பஸ்கா பண்டிகைக்கும் எஜமானரின் இரவு விருந்துக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. யூதர்கள் நினைவுகூர்ந்த பஸ்கா, பிற்பாடு சீடர்கள் நினைவுகூர்ந்த இயேசுவின் மரணத்திற்கு முன்நிழலாக இருக்கவில்லை. இஸ்ரவேலர்கள் அனுசரித்த பஸ்காவின்போது, அவர்கள் ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை மட்டுமே சாப்பிட்டார்கள், இரத்தத்தைச் சாப்பிடவில்லை. இது, சீடர்களுக்கு இயேசு கொடுத்த கட்டளையிலிருந்து வேறுபடுகிறது. “கடவுளுடைய அரசாங்கத்தில்” ஆட்சிசெய்யப் போகிறவர்கள், தம்முடைய உடலையும் இரத்தத்தையும் அடையாளப்படுத்துகிற ரொட்டி, திராட்சமது ஆகிய இரண்டையும் சாப்பிடவேண்டும் என்று இயேசு சொன்னார். இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் விவரமாகப் பார்ப்போம்.—மாற். 14:22-25.
21. பஸ்காவைப் பற்றி அறிந்துகொள்வது ஏன் முக்கியம்?
21 கடவுளுடைய மக்களின் சரித்திரத்தில் பஸ்கா ஒரு முக்கிய சம்பவமாக இருந்தது. அது, நம் ஒவ்வொருவருக்கும் படிப்பினையூட்டும் நிறைய விஷயங்களைக் கற்றுத்தருகிறது. பஸ்காவை, அன்றைய யூதர்கள் ‘நினைவுகூர’ வேண்டியிருந்தாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் அதைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்தப் பதிவு கற்பிக்கும் சில பயனுள்ள போதனைகளை நெஞ்சத்தில் பதிக்க வேண்டும். ஏனென்றால், ‘கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கும் வேதவசனங்களில்’ அவையும் ஒன்று.—2 தீ. 3:16.
a இஸ்ரவேலர்கள் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து வந்த பின்னரே, நிசான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இருந்தாலும், யூத நாட்காட்டியின் முதல் மாதத்தை நிசான் என இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.
b நிசான் 15 அன்று, வாராந்தர ஓய்வு நாள் (சனிக்கிழமை) ஆரம்பித்தது. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதலாம் நாள் அதே தினத்தில் வந்தது. அந்த நாளும் வழக்கமாக ஒரு ஓய்வு நாளாகவே இருக்கும். இந்த இரண்டு ஓய்வு நாட்களும் ஒரே நாளில் வந்ததால், இது “பெரிய” ஓய்வு நாள் என அழைக்கப்பட்டது.—யோவான் 19:31, 42-ஐ வாசியுங்கள்.