யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
யோசுவா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
வருடம் பொ.ச.மு. 1473. மோவாப் சமவெளியில் இஸ்ரவேலர் கூடாரமிட்டிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் பின்வரும் வார்த்தைகளைக் கேட்டது அவர்களை நிச்சயம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கும்: “உங்களுக்கு போஜன பதார்த்தங்களை ஆயத்தம் பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள்.” (யோசுவா 1:11) அவர்களது 40 வருட வனாந்தர வாசம் முடிவடையப் போகிறது.
இருபதுக்கும் சற்று அதிக வருடங்களுக்குப் பிறகு, கானான் தேசத்தின் மையப் பகுதியில் யோசுவா நின்றுகொண்டு இஸ்ரவேல் மூப்பர்களிடம் இவ்வாறு அறிவிக்கிறார்: “பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திர மட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப் போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார் [“அகற்றிப்போட்டார்,” NW].”—யோசுவா 23:4, 5.
இப்புத்தகம் பொ.ச.மு. 1450-ல் யோசுவாவால் எழுதப்பட்டது. அந்த 22 வருட காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் பரபரப்பூட்டும் சரித்திர பதிவாக இப்புத்தகம் விளங்குகிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரிப்பதற்குத் தயாராக இருந்த இஸ்ரவேலரைப் போலவே நாமும் இன்று இருக்கிறோம், அதாவது வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகின் நுழைவாயிலில் நாம் நிற்கிறோம். ஆகவே, மிகுந்த ஆர்வத்தோடு யோசுவா புத்தகத்தை இப்போது நாம் சிந்திக்கலாம்.—எபிரெயர் 4:12.
‘எரிகோவின் சமனான வெளிகளுக்கு’
“என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்” என யோசுவாவிடம் யெகோவா சொல்கிறார். (யோசுவா 1:2) இது எப்பேர்ப்பட்ட பொறுப்பான வேலை! வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு லட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை யோசுவா வழிநடத்த வேண்டும். இதற்கு ஆயத்தமாக, இரண்டு வேவுகாரரை எரிகோவுக்கு அவர் அனுப்புகிறார்; அதுதான் அவர்கள் கைப்பற்ற வேண்டிய முதல் பட்டணம். இப்பட்டணத்தில் ராகாப் எனும் வேசி வாழ்கிறாள், யெகோவா தமது ஜனங்கள் சார்பாக செய்துள்ள வல்லமையான செயல்களைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். தன் பட்டணத்திற்கு வந்த அந்த வேவுகாரர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு உதவி செய்கிறாள்; அதற்கு கைமாறாக தன்னை அவர்கள் காப்பாற்ற வேண்டுமென்று அவர்களிடமிருந்து வாக்குறுதியைப் பெற்றுக்கொள்கிறாள்.
வேவுகாரர்கள் திரும்பி வந்ததும் இஸ்ரவேல் ஜனங்கள் அங்கிருந்து புறப்பட்டு யோர்தான் நதியைக் கடப்பதற்கு தயாராகிறார்கள். ஆனால் அந்த நதி கரைபுரண்டோடுகிறது; இருந்தாலும் அவர்களுடைய பயணத்திற்கு எவ்விதத்திலும் அது ஒரு முட்டுக்கட்டையாய் இல்லை. ஏனெனில் மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீருக்கு யெகோவா அணை போட்டுவிடுகிறார்; ஏற்கெனவே ஓடிக்கொண்டிருந்த தண்ணீரை சவக் கடலில் சங்கமிக்க வைக்கிறார். இவ்வாறு நதியை அவர் வற்றிப்போகச் செய்கிறார். யோர்தானைக் கடந்த பிறகு எரிகோவுக்கு அருகே கில்காலில் இஸ்ரவேலர் கூடாரமிடுகிறார்கள். நான்கு நாட்களுக்குப் பின், ஆபிப் மாதம் 14-ம் நாள் மாலை எரிகோவின் சமனான வெளிகளிலே அவர்கள் பஸ்கா பண்டிகையை ஆசரிக்கிறார்கள். (யோசுவா 5:10) மறுநாளிலிருந்து அத்தேசத்தின் சில உணவு வகைகளை அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள், அத்துடன் மன்னா பொழிவது நின்றுவிடுகிறது. இந்தக் காலக் கட்டத்தில், வனாந்தரத்தில் பிறந்த எல்லா ஆண் பிள்ளைகளையும் யோசுவா விருத்தசேதனம் பண்ணுகிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:4, 5—வேவுகாரர்களைத் தேடிவந்த ராஜாவின் மனுஷரை ராகாப் ஏன் தவறாக வழிகாட்டினாள்? ராகாப் தனது உயிரையே பணயம் வைத்து இந்த வேவுகாரர்களைக் காப்பாற்றுவதற்குக் காரணம், யெகோவா மீது அவள் நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருந்ததுதான். ஆகவே, கடவுளுடைய ஜனங்களுக்குக் கெடுதல் செய்ய வழிதேடுபவர்களிடம் இந்த வேவுகாரர்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை. (மத்தேயு 7:6; 21:23-27; யோவான் 7:3-10) சொல்லப்போனால், ராகாப் தன் ‘கிரியைகளினாலே நீதியுள்ளவளாக்கப்பட்டாள்’; அதாவது, ராஜா அனுப்பிய ஆட்களைத் தவறாக வழிகாட்டியது நீதியான ஒரு செயலாகவே இருந்தது.—யாக்கோபு 2:24-26.
5:14, 15—‘யெகோவாவுடைய சேனையின் அதிபதி யார்’? வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மீது படையெடுக்கத் துவங்குகையில் யோசுவாவைப் பலப்படுத்த வரும் அந்த அதிபதி, வேறு யாருமல்ல, பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் இருந்த ‘வார்த்தையாகிய’ இயேசு கிறிஸ்துவே அவர். (யோவான் 1:1; தானியேல் 10:13) இன்றும்கூட கடவுளுடைய ஜனங்கள் ஆன்மீகப் போரில் ஈடுபடுகையில் மகிமை பொருந்திய இயேசு கிறிஸ்து நம் கூடவே இருப்பதாக உறுதியளித்திருப்பது நம்மை எவ்வளவாய் பலப்படுத்துகிறது!
நமக்குப் பாடம்:
1:7-9. தினமும் பைபிள் வாசிப்பது, வாசித்தவற்றைத் தவறாமல் தியானிப்பது, கற்றதை நடைமுறையில் பின்பற்றுவது ஆகியவை நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானவை.
1:11. கடவுள் தங்களுக்கு உணவு கொடுப்பார் என்று சோம்பேறித்தனமாக காத்துக்கொண்டிராமல், வேண்டிய உணவுப் பதார்த்தங்களைத் தயார் செய்யும்படி ஜனங்களிடம் யோசுவா சொல்கிறார். அப்படியானால், வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளைக் குறித்து கவலைப்படாதிருங்கள் என்ற இயேசுவின் அறிவுரையும் ‘மற்ற காரியங்கள் எல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்’ என்ற அவருடைய வாக்குறுதியும் நம் தேவைகளைக் கவனிக்க எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை.—மத்தேயு 6:25, 33.
2:4-13. யெகோவாவின் மாபெரும் செயல்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்த ராகாப் தான் ஆபத்தான ஒரு சூழலில் இருப்பதை அறிந்துகொள்கிறாள். ஆகவே, கடவுளுடைய வணக்கத்தாரின் பக்கம் சேர தீர்மானிக்கிறாள். அதுபோல, நீங்களும் சில காலமாகவே பைபிளைப் படித்து வருவதாக வைத்துக்கொள்ளுங்கள், நாம் “கடைசி நாட்களில்” வாழ்ந்து வருகிறோம் என்பதையும் அறிந்துகொள்கிறீர்கள். அப்படியானால், கடவுளுக்குச் சேவை செய்ய நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமல்லவா?—2 தீமோத்தேயு 3:1.
3:15. எரிகோவுக்கு அனுப்பிய வேவுகாரர்களின் சாதகமான அறிக்கையைக் கேட்டவுடன், யோர்தானின் தண்ணீர் வற்றிப்போகட்டும் என்று காத்திருக்காமல் யோசுவா உடனடியாக செயல்படுகிறார். மெய் வணக்கம் சம்பந்தப்பட்ட செயல்களில் நாமும்கூட, நல்ல சூழ்நிலை வரட்டும் என காத்திராமல் தைரியமாக செயல்படுவது அவசியம்.
4:4-8, 20-24. யோர்தானிலிருந்து எடுக்கப்பட்ட 12 கற்கள் இஸ்ரவேலருக்கு ஒரு நினைப்பூட்டுதலாக இருந்தது. அதுபோல, தமது நவீன கால மக்களை விரோதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக யெகோவா செய்யும் செயல்கள், தங்களுடன் அவர் இருக்கிறார் என்பதற்கு ஒரு நினைப்பூட்டுதலாக இருக்கிறது.
படையெடுப்பு தொடர்கிறது
எரிகோ இறுக்கமாக ‘அடைக்கப்பட்டிருக்கிறது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.’ (யோசுவா 6:1) அப்படியானால் இந்தப் பட்டணத்தைக் கைப்பற்றுவது எப்படி? அதற்கான ஓர் உபாயத்தை யோசுவாவுக்கு யெகோவா சொல்லிக் கொடுக்கிறார். சீக்கிரத்தில் அதன் மதில்கள் நொறுங்கி விழுகின்றன, பட்டணமும் அழிக்கப்படுகிறது. ராகாபும் அவளுடைய குடும்பத்தாரும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
அடுத்து கைப்பற்றப்படவிருப்பது ராஜதானி பட்டணமான ஆயி. இப்பட்டணத்தில் சொற்ப ஜனங்களே குடியிருப்பதால் அவர்களை முறியடிப்பதற்கு அநேகர் தேவையில்லை என அங்கு அனுப்பப்பட்ட வேவுகாரர்கள் அறிவிக்கிறார்கள். என்றாலும், அந்தப் பட்டணத்தைத் தாக்குவதற்கு அனுப்பப்பட்ட சுமார் 3,000 படைவீரர்கள் ஆயி பட்டணத்து ஆட்களைக் கண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். காரணம்? யெகோவா இஸ்ரவேலரோடு இருக்கவில்லை. எரிகோவைக் கைப்பற்றுகையில் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஆகான் என்பவன் பாவம் செய்துவிடுகிறான். இந்தக் காரியத்தை சரிசெய்த பிறகு, ஆயி பட்டணத்தை யோசுவா தாக்கச் செல்கிறார். இஸ்ரவேலரை ஒரு முறை முறியடித்த தைரியத்தில் ஆயி பட்டணத்து ராஜா அவர்களோடு போரிட ஆர்வமாக வருகிறார். ஆனால் ஆயி பட்டணத்தாரின் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையைச் சாதகமாக பயன்படுத்தி ஒரு போர்த் தந்திரத்தால் அந்தப் பட்டணத்தை யோசுவா கைப்பற்றி விடுகிறார்.
கிபியோன் ‘ஒரு பெரிய பட்டணமும் ஆயியைப் பார்க்கிலும் பெரிதுமாயிருக்கிறது; அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாய் இருக்கிறார்கள்.’ (யோசுவா 10:2) ஆனாலும், எரிகோவையும் ஆயியையும் இஸ்ரவேலர் கைப்பற்றியதை அறிந்த கிபியோனியர் சமாதான உடன்படிக்கை செய்துகொள்வதற்காக யோசுவாவை ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு சமாதானம் செய்துகொண்டதால் சுற்றுமுற்றுமுள்ள தேசத்தார் பீதியடைகிறார்கள். அவர்களின் ஐந்து ராஜாக்கள் கூட்டுச் சேர்ந்து கிபியோனைத் தாக்க வருகிறார்கள். கிபியோனியரை இஸ்ரவேலர் பாதுகாத்து, தாக்க வந்தவர்களை முற்றிலும் முறியடித்துவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, யோசுவாவின் தலைமையில் தெற்கேயும் மேற்கேயும் உள்ள பட்டணங்களைக் கைப்பற்றுகிறார்கள்; வடக்கேயுள்ள கூட்டணி ராஜாக்களையும் முறியடிக்கிறார்கள். இவ்வாறு யோர்தானுக்கு மேற்கே மொத்தம் 31 ராஜாக்களை இஸ்ரவேலர் முறியடிக்கிறார்கள்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்
10:13—இப்படிப்பட்ட ஓர் அதிசயம் எப்படிச் சாத்தியம்? வானத்தையும் பூமியையும் படைத்த ‘யெகோவாவால் ஆகாத காரியம் உண்டோ?’ (ஆதியாகமம் 18:14) யெகோவா நினைத்தால், இந்தப் பூமியின் இயக்கத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி, பார்ப்பவர்களின் கண்களுக்குச் சூரியனும் சந்திரனும் நகராமல் இருப்பது போல் தோன்றச் செய்ய முடியும். அல்லது பூமியையும் சந்திரனையும் சுழலவிட்டு, ஒளி விலகல் மூலம் சூரிய, சந்திர ஒளிக்கதிர்களைப் பூமியின் மீது தொடர்ந்து பிரகாசிக்கச் செய்ய முடியும். அவர் அதை எப்படிச் செய்திருந்தாலும், மனித சரித்திரத்தில் ‘அந்நாளையொத்த நாள் இருந்ததே இல்லை.’—யோசுவா 10:14.
10:13—யாசேர் புத்தகம் என்பது என்ன? 2 சாமுவேல் 1:18-ல் (பொது மொழிபெயர்ப்பு) “வில்லின் பாடல்” என்ற ஒரு கவிதையைப் பற்றி, அதாவது சவுலுக்காகவும் அவரது மகன் யோனத்தானுக்காவும் பாடப்பட்ட சோக கீதத்தைப் பற்றி சொல்லும்போது இந்தப் புத்தகம் மீண்டும் ஒருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புத்தகம் இஸ்ரவேலரைப் பற்றிய மறக்கமுடியா சம்பவங்களை விவரிக்கும் கீதங்கள் மற்றும் கவிதைகளின் தொகுப்பாக இருந்திருக்க வேண்டும், எபிரெயர்கள் நன்கு அறிந்த புத்தகமாகவும் இருந்திருக்க வேண்டும்.
நமக்குப் பாடம்:
6:26; 9:22, 23. எரிகோ பட்டணம் அழிக்கப்பட்ட சமயத்தில் யோசுவா உரைத்த சாபம் சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறுகிறது. (1 இராஜாக்கள் 16:34) கிபியோனியர் வேலைக்காரர்களாக ஆகிறபோது, தன் பேரனான கானானுக்கு நோவா இட்ட சாபம் பலிக்கிறது. (ஆதியாகமம் 9:25, 26) ஆக, யெகோவாவின் வார்த்தை எப்போதுமே நிறைவேறும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
7:20-25. ஆகான் களவாடியது ஒரு பெரிய குற்றமே அல்ல என சிலர் கருதலாம், அவன் செய்தது பிறரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் ஒருவேளை அவர்கள் நியாயப்படுத்தலாம். பைபிள் சட்டத்திற்கு விரோதமான சிறு சிறு திருட்டுகளையும் குற்றங்களையும்கூட அவர்கள் இது போலவே கருதலாம். ஆனால், சட்டவிரோதமான அல்லது ஒழுக்கக்கேடான காரியங்களை ஒதுக்கித் தள்ளுவதில் நம்முடைய தீர்மானமும்கூட யோசுவாவுடையதைப் போலவே இருக்க வேண்டும்.
9:15, 26, 27. நாம் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களை முறிக்காமல் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.
யோசுவா கடைசியாக ஒரு பெரிய பொறுப்பை ஏற்கிறார்
இப்போது 90 வயதை எட்டவிருக்கும் முதிர் வயதான யோசுவா, அந்தத் தேசத்தைப் பகுத்துக் கொடுக்கும் வேலையைத் தொடங்குகிறார். ஆம், அது ஒரு பெரிய பொறுப்பு! ரூபன் மற்றும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் யோர்தானுக்குக் கிழக்கில் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். மீதமுள்ள கோத்திரத்தாருக்கோ இப்போது சீட்டுப்போட்டு மேற்குப் பகுதியில் சுதந்தரம் கொடுக்கப்படுகிறது.
எப்பிராயீம் பிராந்தியத்திலுள்ள சீலோவில் ஆசரிப்புக் கூடாரம் நிறுவப்படுகிறது. காலேபுக்கு எபிரோன் பட்டணமும், யோசுவாவுக்கு திம்னாத்சேரா பட்டணமும் கிடைக்கின்றன. லேவியருக்கு ஆறு அடைக்கலப் பட்டணங்களையும் சேர்த்து 48 பட்டணங்கள் கொடுக்கப்படுகின்றன. ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்து யுத்த வீரர்கள் யோர்தானுக்குக் கிழக்கே தங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த இடங்களுக்குத் திரும்புகையில் “பெரிதான ஒரு பீடத்தைக்” கட்டுகிறார்கள். (யோசுவா 22:10) யோர்தானுக்கு மேற்கே வசிக்கிற கோத்திரத்தார் இதை ஒரு விசுவாசதுரோக செயலாகக் கருதுகிறார்கள். அதனால் கோத்திரங்களுக்கு இடையே போர் மூளும் அளவுக்கு வந்துவிடுகிறது, ஆனால் அவர்கள் நேராக காரியங்களைப் பேசித் தீர்த்துக்கொள்வதால் இரத்தம் சிந்துவது தடுக்கப்படுகிறது.
யோசுவா சில காலத்திற்கு திம்னாத்சேராவில் வாழ்கிறார். பிறகு இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும் நியாயாதிபதிகளையும் அதிபதிகளையும் அழைத்து தைரியமாய் இருக்கும்படியும் கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாய் இருக்கும்படியும் அறிவுறுத்துகிறார். பிற்பாடு, இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்தாரையும் சீகேமிலே கூடிவரும்படி சொல்கிறார். ஆபிரகாமின் காலம் முதற்கொண்டு யெகோவா செய்துவந்த காரியங்களை அந்த ஜனங்களுக்கு நினைப்பூட்டுகிறார்; அதோடு ‘யெகோவாவுக்குப் பயந்து அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவிக்கும்படி’ மீண்டுமாக அறிவுரையும் கொடுக்கிறார். அதற்கு அந்த ஜனங்கள்: ‘நம்முடைய தேவனாகிய யெகோவாவையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம்’ என்று சொல்கிறார்கள். (யோசுவா 24:14, 15, 24) இந்தக் காரியங்களை எல்லாம் செய்து முடித்த பிறகு 110-ம் வயதில் யோசுவா மரிக்கிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
13:1—யோசுவா 11:23-ல் சொல்லப்பட்டுள்ள விஷயத்திற்கு இது முரண்பாடாக இல்லையா? இல்லை. ஏனென்றால், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுவதில் இரண்டு அம்சங்கள் உட்பட்டிருந்தன: தேசிய அளவில் கானான் தேசத்தின் 31 ராஜாக்களைப் போரில் முறியடித்து கானானியரின் செல்வாக்கை அடக்கியது ஓர் அம்சம்; கோத்திரங்களாகவும் தனிநபர்களாகவும் செயல்பட்டு தேசம் முழுவதும் சுதந்தரிக்கப்பட்டது இரண்டாவது அம்சம். (யோசுவா 17:14-18; 18:3) கானானியரை இஸ்ரவேலர் முழுவதுமாக துரத்திவிடாவிட்டாலும், தப்பிப்பிழைத்தவர்கள் எவ்விதத்திலும் இஸ்ரவேலருக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை. (யோசுவா 16:10; 17:12) யெகோவா “அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப் பண்ணினார்” என யோசுவா 21:44 குறிப்பிடுகிறது.
24:2—ஆபிரகாமின் தகப்பன் தேராகு விக்கிரகங்களை வழிபடுபவராக இருந்தாரா? ஆரம்பத்தில், தேராகு யெகோவாவை வழிபடுபவராக இல்லை. ஊர் பட்டணத்தில் பிரபலமாக இருந்த சின் என்ற சந்திரக் கடவுளை அவர் வழிபட்டிருக்கலாம். யூத பாரம்பரியம் சொல்கிறபடி, தேராகு விக்கிரகங்களை உண்டாக்குபவராகவும் இருந்திருக்கலாம். என்றாலும், கடவுளுடைய கட்டளைப்படி ஊர் பட்டணத்தை விட்டு ஆபிரகாம் கிளம்பும்போது தேராகுவும் அவருடன் சேர்ந்து ஆரானுக்குப் போகிறார்.—ஆதியாகமம் 11:31.
நமக்குப் பாடம்:
14:10-13. காலேபுக்கு 85 வயதான போதிலும் எபிரோன் பிராந்தியத்தினரை விரட்டியடிக்கும் சவால்மிக்க வேலையைக் கொடுக்கும்படி கேட்கிறார். அது ஏனாக்கியர் குடியிருக்கிற பகுதி, அவர்கள் பிரமாண்டமான உருவம் கொண்டவர்கள். யெகோவாவின் உதவியோடு அனுபவமுள்ள இந்தப் போர்வீரர் வெற்றி பெறுகிறார்; எபிரோன் ஓர் அடைக்கலப் பட்டணமாகிறது. (யோசுவா 15:13-19; 21:11-13) சவால்மிக்க தேவராஜ்ய நியமிப்புகளைத் தட்டிக் கழிக்காமலிருக்க காலேபின் மாதிரி நம்மை உற்சாகப்படுத்துகிறது.
22:9-12, 21-33. பிறருடைய உள்நோக்கங்களைத் தவறாக எடைபோடுவதைத் தவிர்ப்பது அவசியம்.
“ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை”
யோசுவா தனது முதிர் வயதில் பொறுப்புள்ள ஸ்தானத்தை வகித்த இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொல்கிறார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; . . . அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.” (யோசுவா 23:14) யோசுவாவின் சரித்திரப் பதிவு இதை எவ்வளவு தத்ரூபமாக விளக்குகிறது!
“தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 15:4) கடவுளுடைய வாக்குறுதிகளின் மீதுள்ள நமது நம்பிக்கை வீண்போகாது என்பதில் நாம் உறுதியோடிருக்கலாம். அவருடைய ஒரு வாக்குறுதியும் தவறாது, எல்லாமே நிறைவேறும்.
[பக்கம் 10-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
யோசுவாவின் தலைமையில் கைப்பற்றப்பட்ட தேசம்
பாசான்
கீலேயாத்
அராபா
நெகெப்
யோர்தான் நதி
உப்புக் கடல்
யாபோக் நதிப் பள்.
அர்னோன் நதிப் பள்.
ஆத்சோர்
மாதோன்
லசரோன்
சிம்ரோன்
யொக்னியாம்
தோர்
மெகிதோ
கேதேஸ்
தானாக்
எப்பேர்
திர்சா
ஆப்பெக்
தப்புவா
பெத்தேல்
ஆயி
கில்கால்
எரிகோ
கேசேர்
எருசலேம்
மக்கெதா
யர்மூத்
அதுல்லாம்
லிப்னா
லாகீஸ்
எக்லோன்
எப்ரோன்
தெபீர்
ஆராத்
[பக்கம் 9-ன் படம்]
ராகாப் என்ற வேசி நீதியுள்ளவளாக ஆனது ஏன் என்று தெரியுமா?
[பக்கம் 10-ன் படம்]
‘யெகோவாவுக்குப் பயந்து அவரை சேவிக்கும்படி’ இஸ்ரவேலருக்கு யோசுவா அறிவுரை கூறினார்
[பக்கம் 12-ன் படம்]
ஆகான் திருடியது சிறிய குற்றமல்ல; அதனால் பெரிய விபரீதங்கள் ஏற்பட்டன
[பக்கம் 12-ன் படம்]
‘விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் விழுந்தன.’—எபிரெயர் 11:30