பின்குறிப்புகள்
1 நியமங்கள்
கடவுளுடைய சட்டங்கள் அவருடைய நியமங்களின் அடிப்படையில் இருக்கின்றன. பைபிளில் இருக்கும் அடிப்படை உண்மைகள்தான் இந்த நியமங்கள். கடவுள் யோசிக்கும் விதத்தையும் உணரும் விதத்தையும் புரிந்துகொள்ள இவை உதவுகின்றன. வாழ்க்கையில் நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கும், சரியானதைச் செய்வதற்கும் பைபிள் நியமங்கள் உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்பதற்கான நேரடியான சட்டங்கள் பைபிளில் இல்லாதபோது இந்த நியமங்கள் நமக்கு உதவுகின்றன.
2 கீழ்ப்படிதல்
யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது என்பது அவர் சொல்லும் விஷயங்களை மனப்பூர்வமாகச் செய்வதைக் குறிக்கிறது. அன்பினால் தூண்டப்பட்டு நாம் கீழ்ப்படிய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (1 யோவான் 5:3) கடவுள்மீது நமக்கு அன்பும் நம்பிக்கையும் இருந்தால், எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய ஆலோசனைபடி நடப்போம். கஷ்டமான சூழ்நிலைகளிலும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அப்படிக் கீழ்ப்படிவது நமக்கு நல்லது. ஏனென்றால், நாம் இப்போதே ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ அவர் நமக்குக் கற்றுத்தருகிறார். அதோடு, எதிர்காலத்திலும் நிறைய ஆசீர்வாதங்களைத் தரப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.—ஏசாயா 48:17.
3 சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை
யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை, அதாவது திறமையைக் கொடுத்திருக்கிறார். நம்மை ரோபோட்டுகளைப் போல அவர் படைக்கவில்லை. (உபாகமம் 30:19; யோசுவா 24:15) இந்த உரிமையைப் பயன்படுத்தி நாம் நல்ல தீர்மானங்களை எடுக்க முடியும். ஆனால் நாம் கவனமாக இல்லையென்றால், தவறான தீர்மானங்களை எடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. இந்தத் திறமையைப் பயன்படுத்தி, யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நாமாகவே தீர்மானம் எடுக்க வேண்டும்; அவரை உண்மையிலேயே நேசிக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
4 ஒழுக்க நெறிகள்
நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், நம்முடைய செயல்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒழுக்க நெறிகளை யெகோவா கொடுத்திருக்கிறார். அவற்றை பைபிளிலிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியும். ஒரு சிறந்த வாழ்க்கை வாழ அவை நமக்கு எப்படி உதவும் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். (நீதிமொழிகள் 6:16-19; 1 கொரிந்தியர் 6:9-11) கடவுளுடைய பார்வையில் எது சரி, எது தவறு என்பதைத் தெரிந்துகொள்ள இந்த நெறிமுறைகள் நமக்கு உதவுகின்றன. அதோடு, அன்பாகவும் தயவாகவும் நடந்துகொள்வது எப்படி... நல்ல தீர்மானங்களை எடுப்பது எப்படி... என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளவும் அவை உதவுகின்றன. உலகத்தின் ஒழுக்க நெறிகள் சீர்குலைந்து போனாலும், யெகோவாவின் நெறிகள் மாறுவதில்லை. (உபாகமம் 32:4-6; மல்கியா 3:6) அவற்றைப் பின்பற்றுவது உடலளவிலும் மனதளவிலும் நம்மைப் பாதுகாக்கும்.
5 மனசாட்சி
நமக்குள் இருக்கும் உணர்வுதான் மனசாட்சி. எது சரி, எது தவறு என்பதை அது சுட்டிக்காட்டுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் யெகோவா மனசாட்சியைக் கொடுத்திருக்கிறார். (ரோமர் 2:14, 15) நம்முடைய மனசாட்சி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால், யெகோவாவுடைய ஒழுக்க நெறிகளின்படி அதைப் பயிற்றுவிக்க வேண்டும். அப்போது கடவுளுக்குப் பிடித்த மாதிரி தீர்மானங்கள் எடுக்க நம் மனசாட்சி நமக்கு உதவும். (1 பேதுரு 3:16) முட்டாள்தனமாக ஏதாவது தீர்மானம் எடுப்பதற்கு முன் நம் மனசாட்சி நம்மை எச்சரிக்கும். தவறான எதையாவது செய்துவிட்டால் அது நம்மை வேதனையில் ஆழ்த்தும். நம் மனசாட்சி பலவீனமாவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், யெகோவாவின் உதவியோடு அதைத் திரும்பவும் நம்மால் பலப்படுத்த முடியும். நல்ல மனசாட்சி, நமக்கு மன நிம்மதியையும் சுயமரியாதையையும் தரும்.
6 கடவுள்பயம்
கடவுள்மீது ரொம்பவே அன்பும் மரியாதையும் வைத்திருப்பதால் அவருக்குப் பிடிக்காத எதையும் செய்துவிடக் கூடாது என்று நினைப்பதைத்தான் கடவுள்பயம் என்று சொல்கிறோம். நல்லதைச் செய்யவும், கெட்டதைத் தவிர்க்கவும் இந்த கடவுள்பயம் நமக்கு உதவும். (சங்கீதம் 111:10) யெகோவா சொல்கிற எல்லாவற்றையும் கவனமாகக் கேட்க அது நம்மைத் தூண்டும். அவருக்குக் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றவும் அது உதவும். ஏனென்றால், நாம் அவர்மேல் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கிறோம். நமக்குக் கடவுள்பயம் இருந்தால் நாம் யோசிக்கும் விதம்... மற்றவர்களை நடத்தும் விதம்... ஒவ்வொரு நாளும் நாம் எடுக்கும் தீர்மானங்கள்... என எல்லாமே சரியாக இருக்கும்.
7 மனம் திருந்துதல்
ஒருவர், தான் செய்த தவறை நினைத்து ரொம்பவே மனவேதனைப்படுவது மனம் திருந்துதலில் உட்பட்டுள்ளது. கடவுளை நேசிப்பவர்கள் அவருடைய நெறிமுறைகளுக்கு எதிராக ஏதாவது பாவம் செய்துவிட்டதாக உணரும்போது ரொம்பவே வேதனைப்படுகிறார்கள். நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால், இயேசுவின் மீட்புபலியின் அடிப்படையில் யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டுக் கெஞ்ச வேண்டும். (மத்தேயு 26:28; 1 யோவான் 2:1, 2) நாம் உண்மையிலேயே மனம் திருந்தி, தவறு செய்வதை நிறுத்தினால் யெகோவா நம்மை மன்னிப்பார் என்று உறுதியாக நம்பலாம். அதன்பிறகு நாம் குற்றவுணர்வினால் தவிக்க வேண்டியதில்லை. (சங்கீதம் 103:10-14; 1 யோவான் 1:9; 3:19-22) செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும், தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்ளவும், யெகோவாவின் நெறிமுறைகளின்படி வாழவும் நாம் கடினமாக உழைக்க வேண்டும்.
8 சபைநீக்கம்
மோசமான பாவத்தைச் செய்த ஒருவர் மனம் திருந்தாமல், யெகோவாவின் நெறிமுறைகளின்படி வாழ மறுத்தால் அவர் சபையின் அங்கத்தினராக இருக்க முடியாது. அவர் சபைநீக்கம் செய்யப்பட வேண்டும். ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டால் நாம் அவரோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம். அவரோடு பேசக்கூட மாட்டோம். (1 கொரிந்தியர் 5:11; 2 யோவான் 9-11) சபைநீக்கம் என்ற ஏற்பாடு யெகோவாவின் பெயருக்கும் கிறிஸ்தவ சபைக்கும் களங்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. (1 கொரிந்தியர் 5:6) சபைநீக்கம் என்ற ஏற்பாடு தவறு செய்தவரைக் கண்டித்துத் திருத்தவும் உதவுகிறது. அந்த நபர் மனம் திருந்தி யெகோவாவிடம் திரும்பி வர உதவுகிறது.—லூக்கா 15:17.
9 வழிநடத்துதல் மற்றும் ஆலோசனை
யெகோவா நம்மை நேசிக்கிறார்; நமக்கு உதவி செய்ய விரும்புகிறார். அதனால்தான், பைபிள் மூலமும் அவரை நேசிக்கிற மக்கள் மூலமும் நமக்கு வழிநடத்துதலையும் ஆலோசனைகளையும் தருகிறார். பாவ இயல்புள்ளவர்களாக இருக்கிற நமக்கு இப்படிப்பட்ட உதவி ரொம்பவே தேவை. (எரேமியா 17:9) நம்மை வழிநடத்த யெகோவா பயன்படுத்துகிற நபர்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்டால், நாம் அவருக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்றும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க விரும்புகிறோம் என்றும் அர்த்தம்.—எபிரெயர் 13:7.
10 பெருமை மற்றும் மனத்தாழ்மை
நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் அடிக்கடி சுயநலமாக, பெருமையாக நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், நாம் மனத்தாழ்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். யெகோவாவுக்கு முன்னால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்போது மனத்தாழ்மையாக இருப்பதற்குக் கற்றுக்கொள்ள ஆரம்பிப்போம். (யோபு 38:1-4) மனத்தாழ்மையாக இருப்பதற்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, நம்மைவிட மற்றவர்களையும், அவர்களுடைய நலனையும் பற்றி அதிகமாக யோசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பெருமை இருந்தால், ஒருவர் பொதுவாக மற்றவர்களைவிட தன்னை உயர்வாக நினைப்பார். மனத்தாழ்மையாக இருக்கும் ஒருவர், தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் நேர்மையாக எடைபோட்டுப் பார்ப்பார். தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ளவோ, மன்னிப்பு கேட்கவோ, ஆலோசனையையும் அறிவுரையையும் ஏற்றுக்கொள்ளவோ தயங்க மாட்டார். மனத்தாழ்மையுள்ள ஒருவர் யெகோவாவை நம்பியிருப்பார், அவருடைய ஆலோசனைகளைப் பின்பற்றுவார்.—1 பேதுரு 5:5.
11 அதிகாரம்
அதிகாரம் என்பது கட்டளைகளைக் கொடுப்பதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்கும் ஒருவருக்கு இருக்கிற உரிமையைக் குறிக்கிறது. வானத்திலும் பூமியிலும் முழு அதிகாரம் யெகோவாவுக்குத்தான் இருக்கிறது. ஏனென்றால், அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார். இந்தப் பிரபஞ்சத்திலேயே அவருக்குத்தான் அதிக சக்தி இருக்கிறது. அவர் எப்போதுமே தன்னுடைய அதிகாரத்தை மற்றவர்களுடைய நலனுக்காகப் பயன்படுத்துகிறார். நம்மைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை சில மனிதர்களுக்கு அவர் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு பெற்றோர்கள், சபை மூப்பர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்கு ஓரளவு அதிகாரம் இருக்கிறது. அதனால், நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (ரோமர் 13:1-5; 1 தீமோத்தேயு 5:17) ஆனால், மனிதர்களுடைய சட்டங்கள் கடவுளுடைய சட்டங்களுக்கு முரணாக இருக்கும்போது நாம் மனிதர்களுக்குக் கீழ்ப்படியாமல் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறோம். (அப்போஸ்தலர் 5:29) யெகோவா ஏற்படுத்தியிருக்கிற அதிகாரங்களுக்கு நாம் கீழ்ப்படியும்போது நாம் யெகோவாவின் தீர்மானங்களுக்கு மதிப்புக் கொடுப்பதைக் காட்டுகிறோம்.
12 மூப்பர்கள்
சபையைக் கவனித்துக்கொள்ள அனுபவமுள்ள சகோதரர்களை, அதாவது மூப்பர்களை யெகோவா பயன்படுத்துகிறார். (உபாகமம் 1:13; அப்போஸ்தலர் 20:28) யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தைப் பலமாக வைத்துக்கொள்ள அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். அதோடு, சமாதானமாக... ஒழுங்காக... யெகோவாவை வணங்கவும் அவர்கள் உதவுகிறார்கள். (1 கொரிந்தியர் 14:33, 40) பைபிளிலுள்ள சில குறிப்பிட்ட தகுதிகளை வளர்த்துக்கொண்ட சகோதரர்கள் கடவுளுடைய சக்தியினால் மூப்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9; 1 பேதுரு 5:2, 3) கடவுளுடைய அமைப்பை நாம் நம்புவதாலும் அதற்கு ஆதரவு கொடுப்பதாலும் சந்தோஷமாக மூப்பர்களுக்குக் கீழ்ப்படிகிறோம்.—சங்கீதம் 138:6; எபிரெயர் 13:17.
13 குடும்பத் தலைவர்
பிள்ளைகளையும் வீட்டையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் யெகோவா கொடுத்திருக்கிறார். ஆனாலும், அப்பாதான் குடும்பத்தின் தலைவர் என்று பைபிள் சொல்கிறது. ஒருவேளை அப்பா இல்லையென்றால், அம்மா குடும்பத்தின் தலைவராக ஆகிறார். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதும் குடும்பத் தலைவரின் பொறுப்புதான். யெகோவாவை வணங்குவதில் குடும்பத்தாரை முன்நின்று வழிநடத்துவது குடும்பத் தலைவரின் மிக முக்கியமான பொறுப்பாகும். உதாரணத்துக்கு, குடும்பமாகக் கூட்டங்களுக்குப் போவது, ஊழியத்தில் ஈடுபடுவது, பைபிளைப் படிப்பது போன்றவற்றைத் தவறாமல் செய்யும்படி குடும்பத் தலைவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் தன்னுடைய குடும்பத்தின் சார்பாகத் தீர்மானங்களையும் எடுக்கிறார். அவர் இயேசுவைப் போல எப்போதும் கனிவாகவும் நியாயமாகவும் நடந்துகொள்கிறார். கடுகடுப்பாகவோ முரட்டுத்தனமாகவோ நடந்துகொள்ள மாட்டார். வீட்டில் அன்பான சூழல் இருக்க இது உதவுகிறது. அதனால், குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே பாதுகாப்பாக உணருவார்கள். யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தையும் வளர்த்துக்கொள்வார்கள்.
14 ஆளும் குழு
ஆளும் குழு என்பது பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களின் ஒரு சிறு தொகுதி. தன்னுடைய மக்களை வழிநடத்த கடவுள் இந்தக் குழுவைப் பயன்படுத்துகிறார். முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவ சபையை வழிநடத்தவும், பிரசங்க வேலையை மேற்பார்வை செய்யவும் யெகோவா ஒரு ஆளும் குழுவைப் பயன்படுத்தினார். (அப்போஸ்தலர் 15:2) இன்று, ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர்கள் கடவுளுடைய மக்களை வழிநடத்துவதிலும் பாதுகாப்பதிலும் முன்நின்று செயல்படுகிறார்கள். அவர்கள் கடவுளுடைய வார்த்தையின் உதவியோடும் அவருடைய சக்தியின் உதவியோடும் தீர்மானங்கள் எடுக்கிறார்கள். இவர்களைத்தான் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 24:45-47.
15 முக்காடு
பொதுவாக, சபையில் ஒரு சகோதரர் செய்ய வேண்டிய பொறுப்பை சில சமயங்களில் ஒரு சகோதரி செய்ய வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், அந்தச் சகோதரி முக்காடு போட்டுக்கொள்வதன் மூலம் யெகோவாவின் ஏற்பாட்டுக்கு மதிப்புக் காட்டுகிறார். வேறு சில சூழ்நிலைகளிலும் முக்காடு போட்டுக்கொள்வது பொருத்தமானது. உதாரணத்துக்கு, தன் கணவர் அல்லது ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரர் அந்த இடத்தில் இருக்கும்போது ஒரு சகோதரி பைபிள் படிப்பை எடுத்தால் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும்.—1 கொரிந்தியர் 11:11-15.
16 நடுநிலையோடு இருப்பது
நாம் நடுநிலையோடு இருப்பதால், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு கொடுப்பதில்லை. (யோவான் 17:16) யெகோவாவின் மக்களாகிய நாம் அவருடைய அரசாங்கத்துக்கு மட்டுமே ஆதரவு கொடுக்கிறோம். இயேசுவைப் போல உலக விவகாரங்களில் நாம் நடுநிலையோடு இருக்கிறோம்.
“அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் . . . கீழ்ப்படிய வேண்டும்” என்று யெகோவா நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். (தீத்து 3:1, 2; ரோமர் 13:1-7) அதேசமயத்தில், கொலை செய்யக் கூடாது என்றும் கட்டளை கொடுத்திருக்கிறார். அதனால், போருக்குப் போக ஒரு கிறிஸ்தவருடைய மனசாட்சி இடம் கொடுக்காது. ராணுவ சேவைக்குப் பதிலாக வேறொரு அரசாங்க வேலையைத் தேர்ந்தெடுக்கும்படி சொல்லப்பட்டால் அந்த வேலையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை மனசாட்சியின் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவர் தீர்மானிக்க வேண்டும்.
யெகோவா நம் படைப்பாளர் என்பதால் நாம் அவரை மட்டுமே வணங்குவோம். தேசிய சின்னங்களுக்கு நாம் மதிப்புக் கொடுத்தாலும் கொடி வணக்கத்தில் ஈடுபடுவதில்லை; தேசிய கீதம் பாடுவதில்லை. (ஏசாயா 43:11; தானியேல் 3:1-30; 1 கொரிந்தியர் 10:14) அதோடு, யெகோவாவின் மக்களாகிய நாம் கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஏற்கெனவே ஆதரவு கொடுத்திருப்பதால் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஓட்டு போடாமல் இருக்க தனிப்பட்ட விதமாகத் தீர்மானம் எடுக்கிறோம்.—மத்தேயு 22:21; யோவான் 15:19; 18:36.
17 உலகத்தின் சிந்தை
இந்த உலகம், சாத்தானின் மனப்பான்மையைத் தூண்டிவிடுகிறது. யெகோவாவை நேசிக்காத... அவரைப் பின்பற்றாத... அவருடைய நெறிமுறைகளை அசட்டை செய்கிற... மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட மனப்பான்மை பரவலாக இருக்கிறது. (1 யோவான் 5:19) சாத்தானின் மனப்பான்மையையும் அதன் விளைவாக ஏற்படுகிற செயல்களையும்தான் இந்த உலகத்தின் சிந்தை என்று சொல்கிறோம். (எபேசியர் 2:2) இப்படிப்பட்ட சிந்தை வராதபடி யெகோவாவின் மக்களாகிய நாம் பார்த்துக்கொள்கிறோம். (எபேசியர் 6:10-18) அதோடு, நாம் யெகோவாவின் வழிகளை நேசித்து, அவருடைய சிந்தையைப் பின்பற்ற கடினமாக உழைக்கிறோம்.
18 விசுவாசதுரோகம்
விசுவாசதுரோகம் என்பது பைபிள் சத்தியங்களுக்கு எதிராகச் செயல்படுவதைக் குறிக்கிறது. விசுவாசதுரோகிகள், யெகோவாவுக்கும் அவருடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசுவுக்கும் எதிராகச் செயல்படுகிறார்கள். மற்றவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். (ரோமர் 1:25) யெகோவாவை வணங்குகிறவர்களின் மனதில் சந்தேக விதைகளை விதைக்க நினைக்கிறார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் இருந்த சிலரைப் போல இன்றும் சிலர் விசுவாசதுரோகிகளாக ஆகியிருக்கிறார்கள். (2 தெசலோனிக்கேயர் 2:3) யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்கள், விசுவாசதுரோகிகளோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை. ‘அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே’ என்ற ஆர்வத்தில் விசுவாசதுரோகிகளின் கருத்துகளை நாம் படிக்கவோ, கேட்கவோ மாட்டோம்; மற்றவர்கள் வற்புறுத்தினாலும் இவற்றைச் செய்ய மாட்டோம். நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறோம்; அவரை மட்டுமே வணங்குகிறோம்.
19 பாவப் பரிகாரம்
தங்களுடைய பாவங்களை மன்னிக்கும்படி இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம் கேட்பதற்கான ஏற்பாடு திருச்சட்டத்தில் இருந்தது. அவர்கள் பாவப் பரிகாரம் செய்வதற்காக தானியத்தையும், எண்ணெயையும், ஆடு-மாடுகளையும் புறாக்களையும் ஆலயத்துக்குக் கொண்டுவந்தார்கள். ஒரு தேசமாகவும் தனி நபர்களாகவும் தாங்கள் செய்த பாவங்களை மன்னிக்க யெகோவா தயாராக இருந்தார் என்பதை இஸ்ரவேலர்களுக்கு இது ஞாபகப்படுத்தியது. இயேசு நம் பாவங்களுக்காக தன்னுடைய உயிரையே கொடுத்த பிறகு, இப்படிப்பட்ட பாவப் பரிகார பலிகள் தேவைப்படவில்லை. இயேசு, “எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக” தன்னுடைய உடலைப் பரிபூரண பலியாகக் கொடுத்தார்.—எபிரெயர் 10:1, 4, 10.
20 மிருகங்களின் உயிரை மதித்தல்
திருச்சட்டத்தின்படி, மிருகங்களின் இறைச்சியைச் சாப்பிட மக்களுக்கு அனுமதி இருந்தது. மிருகங்களைப் பலியாகச் செலுத்தும்படியும் அவர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. (லேவியராகமம் 1:5, 6) ஆனால், மிருகங்களைக் கொடூரமாக நடத்த யெகோவா ஒருபோதும் அனுமதிக்கவில்லை. (நீதிமொழிகள் 12:10) சொல்லப்போனால், மிருகங்களைக் கொடூரமாக நடத்தக் கூடாது என்பதற்கான சில சட்டங்கள் திருச்சட்டத்தில் இருந்தன. தங்களுடைய மிருகங்களை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.—உபாகமம் 22:6, 7.
21 இரத்தத்தின் சிறு கூறுகள் மற்றும் சிகிச்சை முறைகள்
இரத்தத்தின் சிறு கூறுகள். இரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா ஆகிய நான்கு முக்கிய பாகங்கள் உள்ளன. இரத்தத்தின் இந்த நான்கு முக்கிய பாகங்கள், சிறு சிறு பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றைத்தான் இரத்தத்தின் சிறு கூறுகள் என்று சொல்கிறோம்.a
கிறிஸ்தவர்கள் இரத்தத்தையோ அதன் நான்கு முக்கிய பாகங்களில் ஒன்றையோ ஏற்றிக்கொள்வதில்லை. ஆனால், இரத்தத்தின் சிறு கூறுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாமா? அதைப் பற்றி நேரடியாக பைபிள் எதுவும் சொல்வதில்லை. அதனால், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் சொந்தமாகத் தீர்மானம் எடுக்க வேண்டும்.
கிறிஸ்தவர்கள் சிலர், இரத்தத்தின் சிறு கூறுகள் எல்லாவற்றையுமே தவிர்க்கத் தீர்மானிக்கிறார்கள். மிருகங்களின் இரத்தத்தை “தரையில் ஊற்றிவிட வேண்டும்” என்று இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கட்டளை கொடுத்திருந்ததை அதற்குக் காரணமாக அவர்கள் சொல்லலாம்.—உபாகமம் 12:22-24.
மற்றவர்களுடைய தீர்மானம் வித்தியாசமாக இருக்கலாம். இரத்தத்தின் சில சிறு கூறுகளை ஏற்றுக்கொள்ள அவர்களுடைய மனசாட்சி அனுமதிக்கலாம். இரத்தத்திலிருந்து சிறு கூறுகளைப் பிரித்த பிறகு அவை எந்த உயிரினத்திலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த உயிரினத்தின் உயிரைப் பிரதிநிதித்துவம் செய்வதில்லை என்று அவர்கள் சொல்லலாம்.
சிறு கூறுகள் சம்பந்தமாகத் தீர்மானம் எடுப்பதற்கு முன் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:
எல்லா சிறு கூறுகளையும் ஏற்றுக்கொள்ள நான் மறுத்துவிட்டால், நோய்களை எதிர்க்கும் சில மருந்துகளையும், இரத்தக்கசிவை நிறுத்தும் சில மருந்துகளையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பதை அறிந்திருக்கிறேனா?
சிறு கூறுகளில் ஒன்றை அல்லது பலவற்றை நான் ஏன் மறுக்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்பதை மருத்துவரிடம் என்னால் விளக்க முடியுமா?
சிகிச்சை முறைகள். கிறிஸ்தவர்களான நாம், இரத்தத் தானம் செய்வதில்லை. நம்முடைய சொந்த இரத்தத்தைக்கூட அறுவை சிகிச்சைக்கு சில வாரங்களுக்கு முன்பே சேமித்து வைப்பதில்லை. ஆனாலும், ஒருவருடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்தி அளிக்கப்படும் மற்ற சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அறுவை சிகிச்சையின்போது, மருத்துவப் பரிசோதனையின்போது அல்லது நவீன சிகிச்சையின்போது தன்னுடைய இரத்தத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவருடைய தனிப்பட்ட பொறுப்பு. அப்படிப்பட்ட சிகிச்சை முறையின்போது கொஞ்ச நேரத்துக்கு ஒருவருடைய இரத்தம் உடலிலிருந்து முழுமையாகப் பிரிக்கப்படுகிறது.—கூடுதல் தகவலுக்கு காவற்கோபுரம், அக்டோபர் 15, 2000, பக்கங்கள் 30-31-ஐப் பாருங்கள்.
உதாரணத்துக்கு, இரத்தச் செறிவைக் குறைத்தல் (hemodilution) என்ற ஒரு சிகிச்சை முறை இருக்கிறது. இந்தச் சிகிச்சை முறையின்படி நோயாளியின் உடலிலிருந்து அறுவை சிகிச்சையின்போது இரத்தம் வெளியே எடுக்கப்படுகிறது. வெளியே எடுக்கப்பட்ட இரத்தத்தின் அளவை ஈடுகட்டுவதற்காக ஒரு திரவம் உடலில் செலுத்தப்படுகிறது. பிற்பாடு, அறுவை சிகிச்சையின் ஒரு கட்டத்தில் அல்லது அறுவை சிகிச்சைக்குச் சற்றுப் பிறகு அந்த இரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.
இரத்தச் சுத்திகரிப்பு (cell salvage) என்பது இன்னொரு சிகிச்சை முறை. இந்தச் சிகிச்சை முறையில், அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் உடலிலிருந்து வடியும் இரத்தம் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு அறுவை சிகிச்சையின்போதோ அதற்குச் சற்றுப் பிறகோ மீண்டும் நோயாளியின் உடலில் செலுத்தப்படுகிறது.
இந்தச் சிகிச்சை முறைகளை ஒவ்வொரு மருத்துவரும் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்யலாம். அதனால் ஒரு கிறிஸ்தவர், தன்னுடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் எந்தவொரு அறுவை சிகிச்சை முறையையோ மருத்துவப் பரிசோதனையையோ நவீன சிகிச்சையையோ பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்களுடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவ சிகிச்சையைப் பற்றித் தீர்மானம் எடுப்பதற்கு முன் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:
என்னுடைய இரத்தம் என் உடலிலிருந்து திருப்பிவிடப்பட்டு, சில நேரத்துக்கு ஓடாமல் நிறுத்தி வைக்கப்படுமென்றால், அந்த இரத்தத்தை ‘தரையில் ஊற்றிவிடுவதற்கு’ பதிலாக மறுபடியும் என் இரத்தமாகவே நினைத்து உடலில் ஏற்றிக்கொள்ள என் மனசாட்சி அனுமதிக்குமா?—உபாகமம் 12:23, 24.
சிகிச்சையின்போது என் இரத்தம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, அதில் மருந்து கலக்கப்பட்டு, மீண்டும் என் உடலுக்குள் செலுத்தப்பட்டால் (அல்லது, உடல்மீது தடவப்பட்டால்) பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என் மனசாட்சி உறுத்துமா?
என் இரத்தத்தைப் பயன்படுத்தி அளிக்கப்படும் எல்லா சிகிச்சை முறைகளையும் நான் மறுத்துவிட்டால், இரத்தப் பரிசோதனையையும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஹீமோடையாலிஸிஸ் (hemodialysis) சிகிச்சையையும், இதய-நுரையீரல் இயந்திரத்துக்கு (heart-lung bypass machine) இரத்தம் திருப்பிவிடப்படும் சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அறிந்திருக்கிறேனா?
இரத்தத்தின் சிறு கூறுகளைப் பயன்படுத்தியும் நம்முடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்தியும் கொடுக்கப்படும் சிகிச்சையைப் பற்றித் தீர்மானம் எடுப்பதற்கு முன் வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். பிறகு அந்தச் சிகிச்சையைப் பற்றி நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். (யாக்கோபு 1:5, 6) அதன் பிறகு, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம் மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும். ‘என்னுடைய சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று நாம் மற்றவர்களிடம் கேட்கக் கூடாது. மற்றவர்கள் தங்களுடைய தீர்மானத்தை நம்மீது திணிக்கவும் நாம் அனுமதிக்கக் கூடாது.—ரோமர் 14:12; கலாத்தியர் 6:5.
22 ஒழுக்க சுத்தம்
கடவுளுடைய பார்வையில் நம்முடைய நடத்தையும் செயல்களும் சுத்தமாக இருப்பதுதான் ஒழுக்க சுத்தம். நம் சொல், செயல், எண்ணங்கள் எல்லாமே இதில் உட்படுகின்றன. எந்தவொரு அசுத்தமான நடத்தையையோ ஒழுக்கங்கெட்ட செயலையோ நாம் தவிர்க்க வேண்டுமென்று யெகோவா நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். (நீதிமொழிகள் 1:10; 3:1) தவறு செய்யத் தூண்டும் ஒரு சூழ்நிலை வருவதற்கு முன்பே, யெகோவாவின் சுத்தமான நெறிமுறைகளைத்தான் பின்பற்றுவோம் என்று நாம் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய மனதைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்படி கடவுளிடம் கேட்க வேண்டும். அதோடு, ஒழுக்க விஷயத்தில் வரும் சபலங்களைத் தவிர்க்க நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 6:9, 10, 18; எபேசியர் 5:5.
23 வெட்கங்கெட்ட நடத்தை மற்றும் அசுத்தமான நடத்தை
கடவுளுடைய நெறிமுறைகளைத் துளிக்கூட மதிக்காத விதத்தில் அல்லது கேவலமான மனப்பான்மையைக் காட்டும் விதத்தில் பேசுவதோ நடந்துகொள்வதோ வெட்கங்கெட்ட நடத்தையில் உட்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் ஒரு நபர், கடவுளுடைய சட்டங்கள்மீது தனக்குத் துளிகூட மதிப்பு மரியாதை இல்லை என்பதைக் காட்டுகிறார். ஒருவர் வெட்கங்கெட்ட நடத்தையில் ஈடுபட்டிருந்தால், நீதிவிசாரணைக் குழு அந்த விஷயத்தைக் கையாளும். பலவிதமான தவறுகள் அசுத்தமான நடத்தையில் உட்பட்டிருக்கின்றன. ஒருவர் செய்த தவறு, அசுத்தமான நடத்தையோடு சம்பந்தப்பட்டதாக இருந்தால் அது எந்தளவு மோசமானது என்பதைப் பொறுத்து நீதிவிசாரணை குழு அதைக் கையாள வேண்டியிருக்கலாம்.—கலாத்தியர் 5:19-21; எபேசியர் 4:19; கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஜூலை 15, 2006, காவற்கோபுரத்தில், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
24 சுய இன்பப் பழக்கம்
அன்பின் ஒரு வெளிக்காட்டாக இருப்பதற்குத்தான், கணவன் மனைவிக்கு இடையில் செக்ஸ் என்ற ஒன்றை யெகோவா ஏற்படுத்தினார். அதன் புனிதத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் ஒரு ஆணோ பெண்ணோ சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடும்போது, அதாவது இன்பத்துக்காக தங்களுடைய பாலுறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும்போது, செக்ஸை அவர் அசுத்தமான விதத்தில் பயன்படுத்துகிறார். இந்தப் பழக்கம் யெகோவாவோடு ஒருவருக்கு இருக்கும் பந்தத்தைப் பாதித்துவிடலாம். இது ஒருவருடைய மனதில் கீழ்த்தரமான ஆசைகளையும் செக்ஸ் பற்றிய தவறான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்திவிடலாம். (கொலோசெயர் 3:5) இந்த அசுத்தமான பழக்கத்தை நிறுத்த ஒருவர் போராடிக்கொண்டிருந்தால், அவர் தன்னுடைய முயற்சியைக் கைவிடக் கூடாது. (சங்கீதம் 86:5; 1 யோவான் 3:20) நீங்கள் ஒருவேளை இதுபோன்ற சூழ்நிலையில் இருந்தால், உருக்கமாக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்; உதவிக்காக அவரிடம் கேளுங்கள். அசுத்தமான எண்ணங்களுக்கு வழிநடத்துகிற ஆபாசம் போன்ற விஷயங்களைத் தவிர்த்திடுங்கள். யெகோவாவின் சாட்சியாக இருக்கும் உங்கள் அப்பாவிடமோ அம்மாவிடமோ அல்லது யெகோவாவின் சட்டங்களை மதிக்கும் முதிர்ச்சியுள்ள ஒரு நண்பரிடமோ அதைப் பற்றிப் பேசுங்கள். (நீதிமொழிகள் 1:8, 9; 1 தெசலோனிக்கேயர் 5:14; தீத்து 2:3-5) ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் யெகோவா பார்க்கிறார் என்றும் அதை உயர்வாக மதிக்கிறார் என்றும் நீங்கள் உறுதியாக நம்பலாம்.—சங்கீதம் 51:17; ஏசாயா 1:18.
25 பலதார மணம்
பலதார மணம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கத்தைக் குறிக்கிறது. யெகோவா திருமண ஏற்பாட்டைச் செய்தபோது ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும்தான் அந்த பந்தத்தில் இணைத்தார். ஒருவர், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்வது யெகோவாவின் நோக்கமாக இருக்கவில்லை. ஆனால் பூர்வ இஸ்ரவேலில், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யும் பழக்கத்தை அவர் அனுமதித்தார். இன்று, தன்னுடைய மக்கள் மத்தியில் அதை யெகோவா அனுமதிப்பதில்லை. ஒரு கணவனுக்கு ஒரு மனைவி மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல், ஒரு மனைவிக்கு ஒரு கணவன் மட்டுமே இருக்க வேண்டும்.—மத்தேயு 19:9; 1 தீமோத்தேயு 3:2.
26 விவாகரத்து மற்றும் பிரிந்து வாழ்வது
கணவனும் மனைவியும் உயிரோடிருக்கும் காலமெல்லாம் ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் யெகோவாவின் நோக்கம். (ஆதியாகமம் 2:24; மல்கியா 2:15, 16; மத்தேயு 19:3-6; 1 கொரிந்தியர் 7:39) கணவனோ மனைவியோ தன் துணைக்குத் துரோகம் செய்தால் மட்டுமே விவாகரத்து செய்துகொள்ள யெகோவா அனுமதிக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், விவாகரத்து செய்வதா வேண்டாமா என தீர்மானிக்கும் உரிமையை, பாதிக்கப்பட்ட நபரிடமே யெகோவா விட்டுவிடுகிறார்.—மத்தேயு 19:9.
சில சமயங்களில், கிறிஸ்தவர்கள் சிலர் பாலியல் முறைகேடு சம்பந்தப்படாத சில காரணங்களுக்காகப் பிரிந்து வாழத் தீர்மானித்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:11) பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு கிறிஸ்தவர் பிரிந்து வாழத் தீர்மானிக்கலாம்.
கணவர் வேண்டுமென்றே குடும்பத்தைக் கவனிக்காமல் போகும்போது: குடும்பத்தார் சாப்பாட்டுக்கு அல்லது பணத்துக்கு திண்டாடும் அளவுக்கு ஒரு கணவர் குடும்பத்தின் தேவைகளைக் கவனிக்காமல் போகும்போது, அந்த மனைவி பிரிந்து வாழத் தீர்மானிக்கலாம்.—1 தீமோத்தேயு 5:8.
பயங்கரமாகக் கொடுமைப்படுத்தப்படும்போது: உயிருக்கோ ஆரோக்கியத்துக்கோ ஆபத்து வருமளவுக்கு ஒருவருடைய கணவனோ மனைவியோ அவரைக் கொடுமைப்படுத்தினால் அவர் பிரிந்து வாழத் தீர்மானிக்கலாம்.—கலாத்தியர் 5:19-21.
யெகோவாவை முற்றிலுமாக வணங்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது: யெகோவாவைச் சேவிக்கவே முடியாதளவுக்கு ஒருவருடைய கணவனோ மனைவியோ தடை போடும்போது அவர் பிரிந்து வாழத் தீர்மானிக்கலாம்.—அப்போஸ்தலர் 5:29.
27 பாராட்டுவது மற்றும் உற்சாகப்படுத்துவது
நம் எல்லாருக்குமே பாராட்டும் உற்சாகமும் தேவை. (நீதிமொழிகள் 12:25; 16:24) அன்பான, கனிவான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பலப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் முடியும். ரொம்பக் கஷ்டமான சூழ்நிலைகளில்கூட சகித்திருக்கவும் யெகோவாவைச் சேவிக்கவும் நம் சகோதர சகோதரிகளுக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள் உதவும். (நீதிமொழிகள் 12:18; பிலிப்பியர் 2:1-4) ஒருவர் மனதளவில் ரொம்பவே சோர்ந்துபோயிருந்தால், அவர் சொல்வதை நாம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர் எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அவரிடம் எப்படி ஆறுதலாகப் பேசுவது, அவருக்கு எப்படி நடைமுறையாக உதவுவது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். (யாக்கோபு 1:19) சகோதர சகோதரிகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள நீங்கள் முயற்சி செய்யும்போது அவர்களுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஆறுதலுக்கும் உற்சாகத்துக்கும் ஊற்றுமூலரான யெகோவாவிடமிருந்து உண்மையான புத்துணர்ச்சியைப் பெற நீங்கள் அவர்களுக்கு உதவ முடியும்.—2 கொரிந்தியர் 1:3, 4; 1 தெசலோனிக்கேயர் 5:11.
28 திருமண நிகழ்ச்சி
திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு பைபிளில் திட்டவட்டமான எந்தச் சட்டமும் இல்லை. உள்ளூர் பழக்கவழக்கங்களும் அரசாங்கச் சட்டங்களும் இடத்துக்கு இடம் வித்தியாசப்படலாம். (ஆதியாகமம் 24:67; மத்தேயு 1:24; 25:10; லூக்கா 14:8) ஒரு தம்பதி யெகோவாவின் முன்னிலையில் திருமண உறுதிமொழியைச் சொல்வதுதான் திருமண நிகழ்ச்சியின் மிக முக்கியமான அம்சம். அப்படி உறுதிமொழியைச் சொல்லும்போது தங்களுடைய குடும்பத்தாரும் நெருங்கிய நண்பர்களும் அங்கே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பலாம். அதோடு, ஒரு மூப்பர் பைபிள் அடிப்படையில் திருமணப் பேச்சைக் கொடுக்க வேண்டுமென்றும் அவர்கள் விரும்பலாம். திருமணத்துக்குப் பிறகு, வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால், அதை எப்படி நடத்துவது என்பதை அந்தத் தம்பதியே தீர்மானித்துக்கொள்ளலாம். (லூக்கா 14:28; யோவான் 2:1-11) ஒரு தம்பதி, திருமண ஏற்பாடுகளை எப்படிச் செய்யத் தீர்மானித்தாலும் சரி, அது யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் விதமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். (ஆதியாகமம் 2:18-24; மத்தேயு 19:5, 6) சரியான தீர்மானங்களை எடுக்க பைபிள் நியமங்கள் அவர்களுக்கு உதவும். (1 யோவான் 2:16, 17) வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபானத்தைப் பரிமாற விரும்பினால், கூடிவந்திருப்பவர்களைச் சரியாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்று அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 20:1; எபேசியர் 5:18) இசை போன்ற ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தால், அதுவும்கூட யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு கிறிஸ்தவத் தம்பதி திருமண ஏற்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைவிட, யெகோவாவோடு தங்களுக்கு இருக்கும் பந்தத்துக்கும், தங்களுக்கிடையே இருக்கும் பந்தத்துக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.—நீதிமொழிகள் 18:22; கூடுதலாகத் தெரிந்துகொள்ள, அக்டோபர் 15, 2006, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 18-31-ஐப் பாருங்கள்.
29 ஞானமான தீர்மானங்கள் எடுப்பது
கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களின் அடிப்படையில் நல்ல தீர்மானங்களை எடுக்க நாம் விரும்புகிறோம். உதாரணத்துக்கு, ஒரு பண்டிகை நாளில் தன்னுடைய உறவினர்களோடு விருந்து சாப்பிட வரும்படி ஒரு கிறிஸ்தவரை சத்தியத்தில் இல்லாத அவருடைய துணை அழைக்கலாம். நீங்கள் அந்தச் சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்வீர்கள்? அந்த விருந்துக்குப் போக உங்கள் மனசாட்சி ஒருவேளை அனுமதிக்கலாம். ஆனால், அங்கே ஏதாவது பொய் மதப் பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுமானால் அவற்றில் உங்களால் கலந்துகொள்ள முடியாது என்பதை உங்கள் துணையிடம் விளக்கலாம். அதுமட்டுமல்ல, அந்த விருந்துக்குப் போனால், அது மற்றவர்களுக்கு இடறலாக இருக்குமா என்றும் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.—1 கொரிந்தியர் 8:9; 10:23, 24.
இன்னொரு சூழ்நிலையைக் கவனியுங்கள். உங்களுடைய முதலாளி, ஒரு பண்டிகையின் சமயத்தில் உங்களுக்குப் போனஸ் தரலாம். அதை நீங்கள் மறுத்துவிட வேண்டுமா? வேண்டியதில்லை. உங்கள் முதலாளி எதற்காக அந்த போனஸைக் கொடுக்கிறார் என்பதை வைத்து நீங்கள் தீர்மானிக்கலாம். நீங்கள் அந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக அதைக் கொடுக்கிறாரா? அல்லது உங்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் அதைக் கொடுக்கிறாரா? இந்தக் கேள்விகளையும் மற்ற சில விஷயங்களையும் யோசித்துப் பார்த்து நீங்களே தீர்மானிக்கலாம்.
மற்றொரு சூழ்நிலையைக் கவனியுங்கள். பண்டிகையின்போது ஒருவர் உங்களுக்கு ஒரு அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு, “நீங்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதை உங்களுக்குக் கொடுக்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொல்லலாம். ஒருவேளை அவருக்கு உங்கள்மீது அன்பு இருப்பதால் அப்படிச் செய்கிறாரா அல்லது, உங்களுடைய விசுவாசத்தைச் சோதிப்பதற்காகவோ அந்தப் பண்டிகையைக் கொண்டாட வைப்பதற்காகவோ அப்படிச் செய்கிறாரா என்று யோசித்துப் பாருங்கள். பிறகு, அந்த அன்பளிப்பை வாங்குவதா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யலாம். நாம் என்ன தீர்மானம் எடுத்தாலும் சரி, நம்முடைய மனசாட்சி சுத்தமாக இருக்க வேண்டும்; யெகோவாவுக்கு நாம் உண்மையோடு இருக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 23:1.
30 தொழில் மற்றும் சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்
மனஸ்தாபங்களைச் சமாதானமான முறையில் உடனுக்குடன் சரிசெய்தால் பெரும்பாலும் அவை பெரிய பிரச்சினைகளாக வெடிக்காது. (மத்தேயு 5:23-26) எல்லாவற்றையும்விட யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பதையும் சபையின் ஒற்றுமையைக் காப்பதையும்தான் கிறிஸ்தவர்கள் முக்கியமானதாக நினைக்க வேண்டும்.—யோவான் 13:34, 35; 1 கொரிந்தியர் 13:4, 5.
கிறிஸ்தவர்களுக்கு இடையே தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டால், நீதிமன்றத்துக்குப் போகாமல் அவர்களாகவே அதைச் சரிசெய்ய முயற்சி எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக 1 கொரிந்தியர் 6:1-8-ல் அப்போஸ்தலன் பவுல் ஆலோசனை கொடுத்திருக்கிறார். நம் சகோதரரை நீதிமன்றத்தில் நிறுத்தினால், யெகோவாவுக்கும் சபைக்கும் அது கெட்ட பெயரைக் கொண்டுவரலாம். இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது, மோசடி செய்வது போன்ற படு மோசமான குற்றச்சாட்டுகளைச் சரிசெய்ய மத்தேயு 18:15-17-ல் கொடுக்கப்பட்டுள்ள மூன்று வழிகளை கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டும். (1) அவர்கள் முதலில் தங்களுக்குள்ளேயே பிரச்சினைகளைச் சரிசெய்ய முயற்சி எடுக்கலாம். (2) அப்படிச் செய்தும் பிரச்சினை தீரவில்லை என்றால், சபையில் இருக்கும் முதிர்ச்சியுள்ள ஓரிரு நபர்களை வைத்துப் பேசலாம். (3) பிறகு தேவைப்பட்டால், அந்தப் பிரச்சினையைக் கையாளும்படி மூப்பர் குழுவிடம் கேட்கலாம். அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எல்லாரும் சுமூகமான ஒரு முடிவுக்கு வர, பைபிள் நியமங்களைப் பயன்படுத்தி மூப்பர்கள் உதவி செய்வார்கள். ஒருவேளை அந்த பைபிள் நியமங்களைப் பின்பற்ற யாராவது மறுத்தால், அவர்கள்மீது மூப்பர்கள் நீதிவிசாரணை நடத்த ஏற்பாடு செய்யலாம்.
சில பிரச்சினைகளுக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம். விவாகரத்து, பிள்ளையை வளர்க்கும் உரிமை, ஜீவனாம்சம், காப்பீட்டுத் தொகை, திவால் (bankruptcy) மற்றும் உயில்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம். முடிந்தவரை சமாதானமான முறையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு கிறிஸ்தவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், அவர் பவுலின் ஆலோசனையை மீறுகிறார் என்று சொல்ல முடியாது.
பாலியல் பலாத்காரம், குழந்தை துஷ்பிரயோகம், கடுமையான தாக்குதல், கொலை, கொள்ளை போன்ற ஏதாவது ஒரு விஷயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவர், அதைப் பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்தால் அவர் பவுலின் ஆலோசனையை மீறுகிறார் என்று சொல்ல முடியாது.
31 சாத்தானின் தந்திரங்கள்
ஏதேன் தோட்டத்திலிருந்தே சாத்தான் மனிதர்களைத் தந்திரமாக ஏமாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறான். (ஆதியாகமம் 3:1-6; வெளிப்படுத்துதல் 12:9) நம்முடைய எண்ணங்களைத் திசை திருப்பிவிட்டால் நம்மைத் தவறு செய்ய வைக்க முடியும் என்று அவனுக்குத் தெரியும். (2 கொரிந்தியர் 4:4; யாக்கோபு 1:14, 15) அரசியல், மதம், வர்த்தகம், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் இன்னும் நிறைய விஷயங்களைப் பயன்படுத்தி அவனுடைய எண்ணங்களை நம் மனதுக்குள் திணிக்கப் பார்க்கிறான். அந்த எண்ணங்கள், சரியானவைதான் என நினைக்க வைக்கிறான்.—யோவான் 14:30; 1 யோவான் 5:19.
மக்களை ஏமாற்ற இன்னும் கொஞ்சக் காலமே மீதியிருக்கிறது என்று சாத்தானுக்குத் தெரியும். அதனால், எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரை ஏமாற்ற தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அவன் செய்கிறான். முக்கியமாக, யெகோவாவைச் சேவிக்கும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12) நாம் கவனமாக இல்லையென்றால், நம்முடைய எண்ணங்களை அவன் கொஞ்சம் கொஞ்சமாகக் கெடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. (1 கொரிந்தியர் 10:12) உதாரணத்துக்கு, திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (மத்தேயு 19:5, 6, 9) ஆனால், இன்று பெரும்பாலான மக்கள் திருமண ஒப்பந்தத்தை ரொம்ப லேசாக எடுத்துக்கொள்வதால் எப்போது வேண்டுமானாலும் அதை முறித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். திரைப்படங்களும், டிவி நிகழ்ச்சிகளும்கூட இப்படிப்பட்ட எண்ணத்தைத்தான் தூண்டிவிடுகின்றன. திருமணத்தைப் பற்றிய உலகத்தின் இந்த எண்ணம் நம்மைப் பாதிக்காதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நம்மை ஏமாற்ற சாத்தான் பயன்படுத்துகிற இன்னொரு வழி, சுதந்திர மனப்பான்மையைத் தூண்டிவிடுவது. (2 தீமோத்தேயு 3:4) நாம் கவனமாக இல்லையென்றால், யெகோவாவினால் அதிகாரத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு நாம் மதிப்புக் கொடுக்காமல் போய்விடலாம். உதாரணத்துக்கு, சபையிலுள்ள மூப்பர்கள் கொடுக்கும் வழிநடத்துதலை ஒரு சகோதரர் எதிர்க்க ஆரம்பிக்கலாம். (எபிரெயர் 12:5) அல்லது, குடும்பத்தில் யெகோவா ஏற்படுத்தியிருக்கிற தலைமை ஸ்தானத்துக்கு எதிராக ஒரு சகோதரி கேள்வி கேட்க ஆரம்பிக்கலாம்.—1 கொரிந்தியர் 11:3.
நம்முடைய எண்ணங்களைக் கெடுக்க சாத்தானுக்கு இடம்கொடுக்கக் கூடாது என்பதில் நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். யெகோவா யோசிக்கும் விதமாக யோசிக்கவும், ‘பரலோகத்துக்குரிய காரியங்கள்மீது நம் மனதைப் பதிய வைக்கவும்’ நாம் விரும்புகிறோம்.—கொலோசெயர் 3:2; 2 கொரிந்தியர் 2:11.
32 மருத்துவ சிகிச்சை
நாம் எல்லாருமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும், உடல்நலப் பிரச்சினை வந்தால் மிகச் சிறந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறோம். (ஏசாயா 38:21; மாற்கு 5:25, 26; லூக்கா 10:34) இன்று, மருத்துவர்களும் மற்றவர்களும் பல விதமான மருத்துவ முறைகளையும் சிகிச்சை முறைகளையும் பயன்படுத்துகிறார்கள். நாம் எந்தச் சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தாலும் சரி, அது பைபிள் நியமங்களுக்கு ஏற்றபடி இருப்பது முக்கியம். கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் எல்லாவித நோய்களையும் நிரந்தரமாக நீக்கும் என்று நமக்குத் தெரியும். அதனால், நம் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு யெகோவாவை வணங்குவதை நாம் அலட்சியப்படுத்துவதில்லை.—ஏசாயா 33:24; 1 தீமோத்தேயு 4:16.
பேய்களின் சக்தியைப் பயன்படுத்தி ஒரு சிகிச்சை கொடுக்கப்படுவதாகத் தெரிந்தால் அதை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். (உபாகமம் 18:10-12; ஏசாயா 1:13) அதனால், ஒரு சிகிச்சையையோ மருந்தையோ எடுத்துக்கொள்வதற்கு முன் அதைப் பற்றி நாம் முழுவதுமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அந்தச் சிகிச்சை எப்படிக் கொடுக்கப்படும், அதில் பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏதாவது இருக்கின்றனவா போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 14:15) சாத்தான் நம்மை பேய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தந்திரமாக ஈடுபட வைப்பான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு சிகிச்சை முறை பேய்களோடு சம்பந்தப்பட்டதாக இருக்குமோ என்று நமக்குத் துளி சந்தேகம் வந்தால்கூட அதை நாம் தவிர்க்க வேண்டும்.—1 பேதுரு 5:8.
a மருத்துவர்கள் சிலர், இரத்தத்தின் நான்கு முக்கிய பாகங்களைக்கூட சிறு கூறுகள் என்று கருதுகிறார்கள். அதனால், இரத்தத்தையோ அதன் நான்கு முக்கிய பாகங்களான சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா ஆகியவற்றை நீங்கள் ஏற்றிக்கொள்ள மாட்டீர்கள் என்ற உங்கள் சொந்தத் தீர்மானத்தை அவர்களிடம் விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கலாம்.