2 நாளாகமம்
16 ஆசா ஆட்சி செய்த 36-ஆம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவான பாஷா+ யூதாவுக்கு விரோதமாக வந்தார்; யூதாவின் ராஜாவான ஆசாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்குள் மக்கள் போய் வருவதைத் தடுப்பதற்காக ராமா+ நகரத்தைக் கட்ட* ஆரம்பித்தார்.+ 2 உடனே ஆசா, யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளிலும்+ அரண்மனை கஜானாக்களிலும் இருந்த வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்து, தமஸ்குவில் குடியிருந்த சீரியா ராஜாவான பெனாதாத்துக்கு+ அனுப்பி வைத்தார். 3 அப்படி அனுப்பி வைக்கும்போது, “என் அப்பாவும் உங்கள் அப்பாவும் செய்ததுபோல, நானும் நீங்களும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதனால், நான் அனுப்பியிருக்கிற தங்கத்தையும் வெள்ளியையும் ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவான பாஷாவோடு நீங்கள் செய்திருக்கிற ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்படிச் செய்தால், அவர் எங்களைவிட்டுப் பின்வாங்கிப் போய்விடுவார்” என்று சொல்லச் சொன்னார்.
4 ஆசா ராஜா சொன்னதை பெனாதாத் ஏற்றுக்கொண்டான். அதனால், இஸ்ரவேல் நகரங்களைத் தாக்குவதற்காகத் தன்னுடைய படைத் தலைவர்களை அனுப்பினான். அவர்கள் ஈயோனையும்+ தாணையும்+ ஆபேல்-மாயீமையும் நப்தலியைச் சேர்ந்த நகரங்களில் இருந்த கிடங்குகள் எல்லாவற்றையும் நாசமாக்கினார்கள்.+ 5 பாஷா அதைக் கேள்விப்பட்டதும், ராமா நகரத்தைக் கட்டுவதை* உடனடியாக நிறுத்திவிட்டார். 6 பின்பு ஆசா ராஜா, யூதாவிலிருந்த அத்தனை பேரையும் ராமாவுக்குக்+ கூட்டிக்கொண்டு போனார். அந்த நகரத்தைக் கட்டுவதற்கு பாஷா பயன்படுத்திய கற்களையும் மரங்களையும் அவர்கள் அங்கிருந்து கொண்டுவந்தார்கள்.+ அவற்றை வைத்து கெபாவையும்+ மிஸ்பாவையும்+ ஆசா கட்டினார்.*
7 இறைவாக்கு சொல்பவரான அனானி+ என்பவர் யூதா ராஜாவான ஆசாவிடம் வந்து, “உங்களுடைய கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வைக்காமல் சீரியா ராஜாமேல் நீங்கள் நம்பிக்கை வைத்ததால், அவனுடைய படை உங்கள் கையிலிருந்து தப்பித்துவிட்டது.+ 8 ஒருசமயம், எத்தியோப்பியர்களும் லீபியாவைச் சேர்ந்தவர்களும் நிறைய ரதங்களோடும் குதிரைவீரர்களோடும் மிகப் பெரிய படையாக வந்தார்கள், இல்லையா? அப்போது நீங்கள் யெகோவாமேல் நம்பிக்கை வைத்தீர்கள். அதனால்தான் அவ்வளவு பெரிய படையை அவர் உங்கள் கையில் கொடுத்தார்.+ 9 தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக* யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.+ இந்தத் தடவை நீங்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டீர்கள். அதனால் இப்போதுமுதல் நீங்கள் நிறைய போர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்”+ என்று சொன்னார்.
10 அதைக் கேட்டதும் ஆசாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. கோபம் தலைக்கேறியதால் அனானியைப் பிடித்து சிறையில் தள்ளினார். அந்தச் சமயத்தில், பொதுமக்களில் சிலரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். 11 ஆரம்பம்முதல் முடிவுவரை ஆசாவின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள், யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.+
12 ஆசா ஆட்சி செய்த 39-ஆம் வருஷத்தில், அவருடைய காலில் ஒரு நோய் வந்தது. அந்த நோய் முற்றிக்கொண்டே போனதால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. அந்தச் சமயத்திலும்கூட, அவர் யெகோவாவிடம் உதவி கேட்காமல் மருத்துவர்களிடம் போனார். 13 தான் ஆட்சி செய்த 41-ஆம் வருஷத்தில் இறந்துபோனார்.*+ 14 ‘தாவீதின் நகரத்தில்’+ ஆசா தனக்காக வெட்டி வைத்திருந்த பிரமாண்டமான கல்லறையில் அவரை அடக்கம் செய்தார்கள். பலவித வாசனை எண்ணெயும் வாசனைப் பொருள்களும் கலந்து செய்யப்பட்ட தைலத்தையும் பரிமளத் தைலத்தையும் பாடையில் ஊற்றி, அதில் அவருடைய உடலை வைத்தார்கள்.+ அதோடு, அவருக்கு மரியாதை செய்வதற்காக எக்கச்சக்கமான வாசனைப் பொருள்களையும் எரித்தார்கள்.