தேவைப்படுவோருக்கு அன்புள்ள தயவை காட்டுங்கள்
‘அவனவன் தன்தன் சகோதரனுக்கு தயவு செய்யுங்கள் [“அன்புள்ள தயவு காட்டுங்கள்,” Nw].’ —சகரியா 7:9.
1, 2. (அ) அன்புள்ள தயவை நாம் ஏன் காட்ட வேண்டும்? (ஆ) என்னென்ன கேள்விகளை நாம் கலந்தாராய்வோம்?
யெகோவா தேவனின் வார்த்தை, “இரக்கத்தைச் [“அன்புள்ள தயவை,” NW அடிக்குறிப்பு]” சிநேகிக்கும்படி நம்மை ஊக்கமூட்டுகிறது. (மீகா 6:8) நாம் சிநேகிக்க வேண்டியதற்கான காரணங்களையும் அது தருகிறது. ஒரு காரணம், “தயையுள்ள [“அன்புள்ள தயவுடைய,” NW] மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 11:17) எத்தனை உண்மை! அன்புள்ள தயவை அல்லது பற்றுமாறா அன்பை காட்டுவது, கனிவான, நிலையான பந்தத்தை மற்றவர்களுடன் உருவாக்குகிறது. ஆகவேதான் உண்மைப் பற்றுறுதியுள்ள நண்பர்கள் நமக்கு இருப்பார்கள்; இது நிஜமாகவே ஓர் ஒப்பற்ற பரிசு!—நீதிமொழிகள் 18:24.
2 மேலும், “நீதியையும் தயையையும் [“அன்புள்ள தயவையும்,” NW] பின்பற்றுகிறவன் ஜீவனை . . . கண்டடைவான்.” (நீதிமொழிகள் 21:21) அன்புள்ள தயவை நாம் காட்டினால், கடவுளிடம் நெருங்கி வருவோம்; நித்திய ஜீவன் உட்பட எதிர்கால ஆசீர்வாதங்களைப் பெறும் வாய்ப்பும் நமக்குக் கிடைக்கும். ஆனால் அன்புள்ள தயவை நாம் எவ்வாறு காட்டலாம்? யாரிடம் காட்டலாம்? அன்புள்ள தயவு, இயல்பான மனித தயவிலிருந்து, அல்லது பொதுவான தயவிலிருந்து வேறுபடுகிறதா?
மனித தயவும் அன்புள்ள தயவும்
3. அன்புள்ள தயவு மனித தயவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
3 பொதுவாக காட்டப்படும் மனித தயவும், அதாவது மனித நேயம் அல்லது மனிதாபிமானமும், அன்புள்ள தயவும் வெவ்வேறு வழிகளில் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக, மனித நேயத்தைக் காட்டுபவர்கள் பெரும்பாலும், தாங்கள் தயவுடன் நடத்தும் நபர்களுடன் அதிகமான, தனிப்பட்ட ஈடுபாட்டை, அல்லது உறவை வைத்துக்கொள்ளாமலேயே அவ்வாறு காட்டுகின்றனர். என்றாலும், நாம் யாருக்காவது அன்புள்ள தயவு காட்டுகையில், அவருடன் நம்மை அன்புடன் ஈடுபடுத்திக் கொள்கிறோம். மனிதர் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புள்ள தயவு, ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள உறவுகளின் அடிப்படையில் இருக்கலாம் என்பதை பைபிளில் காண்கிறோம். (ஆதியாகமம் 20:13; 2 சாமுவேல் 3:8; 16:17) அல்லது, முன்பு தயவு காட்டியதால் ஏற்பட்ட உறவுகளின் அடிப்படையில் இருக்கலாம். (யோசுவா 2:1, 12-14; 1 சாமுவேல் 15:6; 2 சாமுவேல் 10:1, 2) இந்த வேறுபாட்டை விளக்குவதற்கு இரண்டு பைபிள் உதாரணங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். அவற்றில் ஒன்று, மனிதரிடையே காட்டப்பட்ட தயவுக்கு எடுத்துக்காட்டு; மற்றொன்று மனிதரிடையே காட்டப்பட்ட அன்புள்ள தயவுக்கு எடுத்துக்காட்டு.
4, 5. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பைபிள் உதாரணங்கள், மனித தயவிற்கும் அன்புள்ள தயவிற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எவ்வாறு விளக்குகின்றன?
4 மனித நேயத்திற்கு அல்லது மனிதாபிமானத்திற்கு ஓர் உதாரணம், அப்போஸ்தலன் பவுலுடன் கப்பற்சேதத்தை அனுபவித்த ஒரு தொகுதியினருடன் சம்பந்தப்பட்டது. கப்பலிலிருந்த அவர்கள் அடித்துச் செல்லப்பட்டு மெலித்தா தீவில் கரை சேர்ந்தனர். (அப்போஸ்தலர் 27:37–28:1) பாதை மாறிய இந்தப் பயணிகளை கவனிக்கும் கட்டாயம் மெலித்தா தீவினருக்கு இருக்கவில்லை, அவர்களுடன் ஏற்கெனவே எந்த உறவும் இருக்கவில்லை; ஆனாலும், முன்பின் அறிமுகமில்லாதவர்களை அந்தத் தீவினர் உபசரித்து, அவர்களுக்குப் ‘பாராட்டின அன்பு [“மனித தயவு,” NW] கொஞ்சமல்ல.’ (அப்போஸ்தலர் 28:2, 7) அவர்கள் தயவாக உபசரித்தனர், ஆனால் அது முன்பின் தெரியாதவர்களுக்கு தற்செயலாக காட்டப்பட்ட தயவு. ஆகவே அது மனிதாபிமான அடிப்படையில் காட்டப்பட்ட தயவு.
5 தாவீது ராஜா தன் நண்பர் யோனத்தானின் மகன் மேவிபோசேத்துக்கு காட்டிய உபசரிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள். தாவீது மேவிபோசேத்திடம் சொன்னதாவது: “நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய்.” இந்த ஏற்பாட்டை தான் செய்வதற்கு காரணத்தையும் தாவீது அவரிடம் பின்வருமாறு சொன்னார்: “உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்வேன் [“அன்புள்ள தயவு காட்டுவேன்,” NW].” (2 சாமுவேல் 9:6, 7, 13) தாவீது தான் சொன்னபடியே காட்டிய உபசரிப்பை அன்புள்ள தயவின் வெளிக்காட்டு என குறிப்பிடுவது சரியானது; அது மனித நேயம் அல்லது மனிதாபிமானம் அல்ல; ஏனெனில் ஏற்கெனவே நிலவிய ஓர் உறவுக்கு அத்தாட்சியாக காட்டிய உண்மைப் பற்றுறுதியாக இருந்தது. (1 சாமுவேல் 18:3; 20:15, 42) அதைப் போலவே இன்றும், பொதுவாக மனிதகுலத்திடம் கடவுளின் ஊழியர்கள் மனித நேயத்தைக் காட்டுகிறார்கள். இருந்தாலும், கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட உறவை தாங்கள் பகிர்ந்து கொள்பவர்களிடம், நிலைத்துநிற்கும் அன்புள்ள தயவை அல்லது பற்றுமாறா அன்பை காட்டுகிறார்கள்.—மத்தேயு 5:45; கலாத்தியர் 6:10.
6. மனிதரிடையே காட்டப்படும் அன்புள்ள தயவின் என்ன இயல்புகள் கடவுளுடைய வார்த்தையில் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன?
6 அன்புள்ள தயவின் கூடுதலான அம்சங்களைக் கோடிட்டுக் காட்டுவதற்கு, இந்தக் குணத்தை சிறப்பித்துக் காட்டும் மூன்று பைபிள் பதிவுகளை சுருக்கமாக கவனிப்போம். இவற்றிலிருந்து மனிதரின் அன்புள்ள தயவு, (1) திட்டவட்டமான செயல்களால் காட்டப்படுகிறது, (2) மனமுவந்து காட்டப்படுகிறது, (3) தேவைப்படுவோருக்கு முக்கியமாக காட்டப்படுகிறது என்பதை கவனிப்போம். மேலும், இன்று அன்புள்ள தயவை நாம் எவ்வாறு காட்டலாம் என்பதை இந்தப் பதிவுகள் விளக்குகின்றன.
ஒரு தகப்பனின் அன்புள்ள தயவு
7. பெத்துவேலிடமும் லாபானிடமும் ஆபிரகாமின் ஊழியக்காரன் என்ன சொன்னார், பின்பு என்ன முக்கியமான விஷயத்தை அவர்களிடம் கேட்டார்?
7 முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஆபிரகாமின் ஊழியக்காரனைப் பற்றிய மீதமுள்ள சம்பவத்தை ஆதியாகமம் 24:28-67 விவரிக்கிறது. ரெபெக்காளை சந்தித்த பிறகு, அவளுடைய தகப்பன் பெத்துவேலின் வீட்டிற்கு வரும்படி அவர் அழைக்கப்பட்டார். (வசனங்கள் 28-32) அப்போது, ஆபிரகாமின் மகனுக்கு தான் பெண் பார்க்க வந்த விஷயத்தை விலாவாரியாக அந்த ஊழியக்காரன் விவரித்தார். (வசனங்கள் 33-47) தனக்கு இதுவரை கிடைத்திருந்த வெற்றியை, யெகோவா தரும் அடையாளமாகவே தான் கருதுவதாய் குறிப்பிட்டு, அவரை “என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த[வர்]” என்று கூறினார். (வசனம் 48) இவ்வாறு தன் உள்ளத்திலிருந்ததை அப்படியே சொல்வது, தான் ஏற்றுவந்த இந்த முக்கிய பொறுப்பை யெகோவா ஆசீர்வதித்து வந்திருப்பதை பெத்துவேலும் அவருடைய குமாரன் லாபானும் நம்புவதற்கு உதவும் என அவர் எதிர்பார்த்ததில் சந்தேகமில்லை. கடைசியில் அந்த ஊழியக்காரன், “நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் [“அன்புள்ள தயவும்,” NW] உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன்” என சொன்னார்.—வசனம் 49.
8. ரெபெக்காளின் விஷயத்தில் பெத்துவேலின் பதில் என்னவாக இருந்தது?
8 யெகோவா ஏற்கெனவே ஆபிரகாமுக்கு அன்புள்ள தயவு காட்டியிருந்தார். (ஆதியாகமம் 24:12, 14, 27) ரெபெக்காளை ஆபிரகாமின் ஊழியக்காரனுடன் அனுப்புவதன் மூலம் பெத்துவேல் அதே அன்புள்ள தயவை வெளிக்காட்ட தயாராக இருப்பாரா? கடவுளின் அன்புள்ள தயவும் மனிதரின் அன்புள்ள தயவும் சேர்ந்து அந்த நோக்கத்தை முற்றிலும் நிறைவேற்றுமா? அல்லது அந்த ஊழியக்காரன் சிரமப்பட்டு இவ்வளவு தூரம் பயணம் செய்ததெல்லாம் வீணாகிவிடுமா? “இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது” என்று லாபானும் பெத்துவேலும் சொன்னதை ஆபிரகாமின் ஊழியக்காரன் கேட்டபோது அவருக்கு மிகவும் ஆறுதலாக இருந்திருக்கும். (வசனம் 50) இவற்றில் யெகோவாவின் துணை இருப்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்; எனவே அவருடைய தீர்மானத்தை உடனே ஏற்றுக்கொண்டனர். அடுத்து, “இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம்” என்று சொல்வதன் மூலமாகவும் தன் அன்புள்ள தயவை பெத்துவேல் காட்டினார். (வசனம் 51) ரெபெக்காள் மனமுவந்து ஆபிரகாமின் ஊழியக்காரனோடு சென்றாள்; விரைவில் ஈசாக்கின் அருமை மனைவியானாள்.—வசனங்கள் 49, 52-58, 67.
ஒரு மகனின் அன்புள்ள தயவு
9, 10. (அ) தனக்காக என்ன செய்யுமாறு தன் மகன் யோசேப்பை யாக்கோபு கேட்டுக்கொண்டார்? (ஆ) யோசேப்பு தன் தகப்பனுக்கு எவ்வாறு அன்புள்ள தயவு காட்டினார்?
9 ஆபிரகாமின் பேரன் யாக்கோபுக்கும் அன்புள்ள தயவு காட்டப்பட்டது. ஆதியாகமம் 47-ம் அதிகாரம் விவரிப்பதன்படி, யாக்கோபு அப்போது எகிப்தில் வசித்து வந்தார்; பின்பு “[அவர்] மரணமடையும் காலம் சமீபித்தது.” (வசனங்கள் 27-29) ஆபிரகாமுக்கு கடவுள் வாக்குக் கொடுத்திருந்த தேசத்திற்கு வெளியே மரிக்கப்போவதை நினைத்து யாக்கோபு கவலைப்பட்டார். (ஆதியாகமம் 15:18, 21; 35:10, 12; 49:29-32) தன்னை எகிப்தில் அடக்கம் செய்வதை யாக்கோபு விரும்பவில்லை; எனவே தன் உடல் கானான் தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட ஏற்பாடு செய்தார். செல்வாக்குள்ள நிலையிலிருந்த அவர் மகன் யோசேப்பை தவிர வேறு யாரால் அவருடைய ஆசையைப் பூர்த்தி செய்ய முடியும்?
10 அந்த விவரப் பதிவு இவ்வாறு குறிப்பிடுகிறது: “அப்பொழுது அவன் [யாக்கோபு] தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், . . . என்மேல் பட்சமும் [“அன்புள்ள தயவும்,” NW] உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக. நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ள வேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு [என்றார்].” (ஆதியாகமம் 47:29, 30) அவருடைய விருப்பப்படி செய்வதாக யோசேப்பு வாக்குக் கொடுத்தார்; சீக்கிரத்திலேயே யாக்கோபு இறந்துவிட்டார். யோசேப்பும் யாக்கோபின் மற்ற குமாரர்களும் அவருடைய உடலை, “கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் . . . மக்பேலா என்னும் நிலத்திலே . . . வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அடக்கம்பண்ணினார்கள்.” (ஆதியாகமம் 50:5-8, 12-14) இவ்வாறு தன் தகப்பனுக்கு யோசேப்பு அன்புள்ள தயவு காட்டினார்.
ஒரு மருமகளின் அன்புள்ள தயவு
11, 12. (அ) நகோமிக்கு ரூத் எவ்வாறு அன்புள்ள தயவு காட்டினாள்? (ஆ) ரூத் காட்டிய “பிந்தின” அன்புள்ள தயவு, “முந்தின” அன்புள்ள தயவைவிட எவ்விதத்தில் உத்தமமாய் இருந்தது?
11 விதவையாய் இருந்த நகோமிக்கு மோவாப் தேசத்து மருமகளும் விதவையுமான ரூத் அன்புள்ள தயவு காட்டியதை ரூத் புத்தகம் விவரிக்கிறது. யூதாவிலிருந்த பெத்லெகேமிற்கு திரும்பிச் செல்ல நகோமி தீர்மானித்த போது, ரூத் அன்புள்ள தயவுடனும் உறுதியுடனும் இவ்வாறு சொன்னார்: “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) பின்னர் நகோமியின் உறவுக்காரரான வயதான போவாஸை மணந்துகொள்ள ரூத் சம்மதித்தபோது தன் அன்புள்ள தயவை வெளிக்காட்டினாள்.a (உபாகமம் 25:5, 6; ரூத் 3:6-9) போவாஸ் ரூத்திடம் இவ்வாறு கூறினார்: “நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின அன்புள்ள தயவைப் பார்க்கிலும் உன் பிந்தின அன்புள்ள தயவு உத்தமமாயிருக்கிறது.”—ரூத் 3:10, NW.
12 ரூத் காட்டிய “முந்தின” அன்புள்ள தயவு, தன் ஜனங்களை விட்டு வந்து நகோமியுடன் ஒட்டிக்கொண்ட சமயத்தை குறிப்பிடுகிறது. (ரூத் 1:14; 2:11) அதைவிட, அவள் காட்டிய “பிந்தின” அன்புள்ள தயவு மேம்பட்டதாய் இருந்தது; அதுதான் அவள் போவாஸை மணந்துகொள்ள சம்மதித்தது. அப்பொழுது பிள்ளை பெற முடியாத வயதிலிருந்த நகோமிக்கு ஒரு வாரிசை ரூத்தால் பெற்றுக் கொடுக்க முடியும். அந்த திருமணம் நடந்தது; ரூத் பிள்ளை பெற்றபோது, பெத்லெகேம் ஊர்ப் பெண்கள் மகிழ்ச்சியுடன் இவ்வாறு கூறினார்கள்: “நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது.” (ரூத் 4:14, 17) ரூத் மெய்யாகவே “குணசாலி” தான்; இயேசு கிறிஸ்துவுக்கு மூதாதையாகும் அரிய வாய்ப்பை தந்து யெகோவா அவளை ஆசீர்வதித்தார்.—ரூத் 2:12; 3:11; 4:18-22; மத்தேயு 1:1, 5, 6.
செயல்களால் காட்டப்பட்டது
13. பெத்துவேல், யோசேப்பு, ரூத் ஆகியோர் அன்புள்ள தயவை எப்படி காட்டினார்கள்?
13 பெத்துவேல், யோசேப்பு, ரூத் ஆகியோர் தங்கள் அன்புள்ள தயவை எவ்வாறு வெளிக்காட்டினார்கள் என்பதை கவனித்தீர்களா? தயவான வார்த்தைகளால் மட்டுமின்றி திட்டவட்டமான செயல்களாலும் காட்டினார்கள். பெத்துவேல், “இதோ, ரெபெக்காள்” என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல், நிஜமாகவே ‘ரெபெக்காளை அனுப்புவித்தார்.’ (ஆதியாகமம் 24:51, 59) யோசேப்பு, “உமது சொற்படி செய்வேன்” என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவரும் அவருடைய சகோதரர்களும் “தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே” யாக்கோபுக்கு செய்தார்கள். (ஆதியாகமம் 47:30; 50:12, 13) ரூத், “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்” என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல், தன் ஜனங்களை விட்டுப் பிரிந்து நகோமியுடன் சென்றாள்; இவ்வாறு “இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்.” (ரூத் 1:16, 19) யூதாவில் இருக்கையில், ரூத் “தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம்” செய்தாள். (ரூத் 3:6) ஆம், மற்றவர்களைப் போலவே, ரூத்தும் அன்புள்ள தயவை செயல்களில் காட்டினாள்.
14. (அ) கடவுளுடைய இன்றைய ஊழியர்கள் செயல்களால் எவ்வாறு அன்புள்ள தயவு காட்டுகிறார்கள்? (ஆ) உங்களுக்குத் தெரிந்தளவில், உங்கள் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள் என்ன விதங்களில் அன்புள்ள தயவை காட்டுகின்றனர்?
14 இன்று கடவுளுடைய ஊழியர்களின் அன்புள்ள தயவை தொடர்ந்து செயல்களில் காண்பது மகிழ்ச்சி தருகிறது. உதாரணமாக, உடன் விசுவாசிகளில் தளர்ந்திருப்பவர்களுக்கு, மனதளவில் சோர்ந்திருப்பவர்களுக்கு, துக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு தொடர்ந்து உணர்ச்சிப்பூர்வ ஆதரவை அளிப்பவர்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். (நீதிமொழிகள் 12:25) அல்லது, வாராந்தர சபை கூட்டங்களுக்கு முதியவர்களை தவறாமல் தங்கள் வாகனங்களில் அழைத்துச் செல்லும் அநேக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி சிந்தியுங்கள். 82 வயது ஆனா, மூட்டு அழற்சி நோயால் அவதிப்படுபவர்; அவர் சொன்னதாவது: “எல்லா கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவது யெகோவா தரும் ஓர் ஆசீர்வாதம். இப்படிப்பட்ட அன்பான சகோதர சகோதரிகளை தந்திருப்பதற்காக அவருக்கு என் இதயப்பூர்வ நன்றியைத் தெரிவிக்கிறேன்.” இப்படித்தான் இன்னும் அநேகரும் உணருகின்றனர். உங்கள் சபையில் உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட உதவி அளிக்கிறீர்களா? (1 யோவான் 3:17, 18) அளிக்கிறீர்கள் என்றால், உங்கள் அன்புள்ள தயவு பெரிதும் மதிக்கப்படுகிறது என்பதில் நிச்சயமாய் இருங்கள்.
மனமுவந்து காட்டப்படுகிறது
15. நாம் கலந்தாராய்ந்த மூன்று பைபிள் சம்பவங்களிலிருந்து அன்புள்ள தயவின் என்ன முக்கிய இயல்பு வெகுவாய் சிறப்பித்துக் காட்டப்படுகிறது?
15 நாம் கலந்தாராய்ந்த பைபிள் சம்பவங்களில், அன்புள்ள தயவு கட்டாயத்தினால் அல்லாமல், மனப்பூர்வமாகவும் தாராளமாகவும் காட்டப்பட்டது தெரிகிறது. பெத்துவேல் ஆபிரகாமின் ஊழியக்காரனுக்கு மனமுவந்து இணங்கினார்; ரெபெக்காளும் அவ்வாறே நடந்துகொண்டாள். (ஆதியாகமம் 24:51, 58) யோசேப்பும் தன் அன்புள்ள தயவை மற்றவர்களது தூண்டுதல் இல்லாமலே காட்டினார். (ஆதியாகமம் 50:4, 5) ரூத், “[நகோமியோடே] வர மன உறுதியாயிரு”ந்தாள். (ரூத் 1:18) போவாஸை அணுகுமாறு நகோமி ரூத்துக்கு ஆலோசனை கூறினபோது, அந்த மோவாபியப் பெண், “நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன்” என்று சொல்வதற்கு அன்புள்ள தயவே அவளை உந்துவித்தது.—ரூத் 3:1-5.
16, 17. பெத்துவேல், யோசேப்பு, ரூத் ஆகியோர் காட்டிய அன்புள்ள தயவை முக்கியத்துவம் வாய்ந்ததாக்குவது எது, இந்தக் குணத்தை வெளிக்காட்ட அவர்களை உந்துவித்தது எது?
16 பெத்துவேல், யோசேப்பு, ரூத் ஆகியோர் வெளிக்காட்டிய அன்புள்ள தயவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனெனில் ஆபிரகாம், யாக்கோபு, நகோமி ஆகியோர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை வற்புறுத்தும் நிலையில் இல்லை. பெத்துவேலைப் பொறுத்தமட்டில், தன் மகளைப் பிரியும் சட்டப்பூர்வ நிர்ப்பந்தம் அவருக்கு இருக்கவில்லை. அவர் ஆபிரகாமின் ஊழியக்காரனிடம், ‘கடினமாய் உழைக்கும் என் பெண்ணை அவ்வளவு தூரத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை’ என்று சுலபமாக சொல்லியிருக்கலாம். (ஆதியாகமம் 24:18-20) அதைப் போலவே, யோசேப்புக்கும், தன் தகப்பனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதா, அல்லது மறுப்பதா என தீர்மானிக்க சுயாதீனம் இருந்தது; ஏனெனில் யாக்கோபு இறந்துவிடுவார், தன்னுடைய வார்த்தையை காப்பாற்றச் சொல்லி அவரால் வற்புறுத்த முடியாது. மோவாப் தேசத்திலேயே இருந்துவிட ரூத்துக்கு சுயாதீனம் இருந்ததை நகோமியும் குறிப்பிட்டுக் காட்டினார். (ரூத் 1:8) வயதான போவாஸுக்குப் பதிலாக ‘வாலிபர்களில்’ ஒருவரை திருமணம் செய்துகொள்ளவும் ரூத்துக்கு சுயாதீனம் இருந்தது.
17 பெத்துவேல், யோசேப்பு, ரூத் ஆகியோர் மனமுவந்து அன்புள்ள தயவை காட்டினர்; அவ்வாறு செய்ய அவர்கள் இதயப்பூர்வமாய் உந்துவிக்கப்பட்டனர். ஏதாவது ஒரு விதத்தில் ஏற்கெனவே தாங்கள் உறவு வைத்திருந்தவர்களிடம் இந்தக் குணத்தைக் காட்ட தங்களுக்கு தார்மீக பொறுப்பு இருந்ததாக அவர்கள் உணர்ந்தனர்; அதைப் போலவே மேவிபோசேத்துக்கு அன்புள்ள தயவு காட்ட தான் கடமைப்பட்டிருந்ததாக தாவீது ராஜா பிற்பாடு உணர்ந்தார்.
18. (அ) என்ன மனப்பான்மையுடன் கிறிஸ்தவ மூப்பர்கள் ‘மந்தையை மேய்க்கின்றனர்’? (ஆ) ஒரு மூப்பர் உடன் விசுவாசிகளுக்கு உதவுவதைப் பற்றி தான் உணருவதை எவ்வாறு தெரிவிக்கிறார்?
18 கடவுளுடைய மந்தையை மேய்க்கும் மனிதர் உட்பட, கடவுளுடைய ஜனங்களின் மத்தியில் அன்புள்ள தயவு இன்றும் அடையாளமாக இருக்கிறது. (சங்கீதம் 110:3; 1 தெசலோனிக்கேயர் 5:12) அப்படிப்பட்ட மூப்பர்கள் அல்லது கண்காணிகள் தங்கள் நியமிப்பின் காரணமாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கு ஏற்றவாறு வாழும் அவசியத்தை உணருகின்றனர். (அப்போஸ்தலர் 20:28) இருந்தாலும், அவர்களுடைய மேய்க்கும் வேலையும், சபையாரிடம் காட்டும் அன்புள்ள தயவின் மற்ற செயல்களும், ‘கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாய்’ செய்யப்படுகின்றன. (1 பேதுரு 5:2) மூப்பர்களுக்கு பொறுப்பும் விருப்பமும் இருப்பதாலேயே அவர்கள் மந்தையை மேய்க்கின்றனர். கிறிஸ்துவின் ஆடுகளிடம் அவர்கள் அன்புள்ள தயவு காட்டுகின்றனர்; ஏனெனில் அவர்கள் அவ்வாறு காட்டவும் வேண்டும், காட்டவும் விரும்புகின்றனர். (யோவான் 21:15-17) “சகோதரர்களை வீடுகளில் சென்று சந்தித்து அல்லது அவர்களுக்கு போன் செய்து, அவர்களை நான் மறக்கவில்லை என்பதை தெரியப்படுத்த எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றும், “சகோதரர்களுக்கு உதவுவது எனக்கு ரொம்பவே சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகிறது!” என்றும் ஒரு கிறிஸ்தவ மூப்பர் கூறுகிறார். இதை எங்குமுள்ள அக்கறையுள்ள மூப்பர்கள் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்வார்கள்.
தேவைப்படுவோருக்கு அன்புள்ள தயவு
19. இந்தக் கட்டுரையில் கலந்தாலோசிக்கப்பட்ட பைபிள் சம்பவங்களில் அன்புள்ள தயவைப் பற்றிய என்ன உண்மை வலியுறுத்தப்படுகிறது?
19 சுயமாக தீர்த்துக்கொள்ள முடியாத குறைபாட்டில் தவிப்பவர்களுக்கு அன்புள்ள தயவு காட்ட வேண்டும் என்ற உண்மையையும் நாம் கலந்தாராய்ந்த பைபிள் சம்பவங்கள் வலியுறுத்துகின்றன. தன் குடும்ப வம்சாவளி தழைக்க ஆபிரகாமுக்கு பெத்துவேலின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. தன் உடலை கானான் தேசத்திற்கு எடுத்துச் செல்ல யாக்கோபுக்கு யோசேப்பின் உதவி தேவைப்பட்டது. ஒரு வாரிசை உருவாக்க, நகோமிக்கு ரூத்தின் உதவி தேவைப்பட்டது. ஆபிரகாம், யாக்கோபு, நகோமி இவர்களில் யாராலும் தங்களது தேவைகளை பிறரது உதவியின்றி பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. அதுபோலவே இன்று அன்புள்ள தயவையும், தேவைப்படுவோருக்கு முக்கியமாக காட்ட வேண்டும். (நீதிமொழிகள் 19:17) முற்பிதா யோபுவை நாம் பின்பற்ற வேண்டும்; ‘கெட்டுப்போக இருந்தவனை’ கவனித்ததுடன், “முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும்” அவர் கவனித்தார். மேலும் யோபு, ‘விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப் பண்ணினார்,’ ‘குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாய்’ இருந்தார்.—யோபு 29:12-15.
20, 21. நம் அன்புள்ள தயவு யாருக்கு தேவைப்படுகிறது, நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய தீர்மானமாய் இருக்க வேண்டும்?
20 உண்மையில், ‘முறையிடுகிற ஏழைகள்’ ஒவ்வொரு கிறிஸ்தவ சபையிலுமே இருக்கிறார்கள். தனிமை, சோர்வு, தகுதியற்ற உணர்வுகள், மற்றவர்களால் ஏமாற்றத்திற்கு ஆளாதல், தீராத நோய், பிரியமானவரின் மரணம் ஆகியவற்றால் இந்நிலையை அனுபவிக்கலாம். என்ன காரணமானாலும் சரி, அப்படிப்பட்ட அன்பானவர்களுக்கு தேவைகள் இருக்கின்றன; அன்புள்ள தயவின் செயல்களை தொடர்ந்து செய்வதனால் நாம் அவற்றை மனமுவந்து பூர்த்தி செய்ய முடியும், செய்யவும் வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 5:14.
21 ஆகவே, “அன்புள்ள தயவு பெருத்த” யெகோவா தேவனை தொடர்ந்து நாம் பின்பற்றுவோமாக. (யாத்திராகமம் 34:6; எபேசியர் 5:1; NW) மனமுவந்து திட்டவட்டமான செயல்களில் ஈடுபடுவதன் மூலமும், குறிப்பாக தேவைப்படுவோருக்கு அவ்வாறு செய்வதன் மூலமும் அவரைப் பின்பற்றலாம். “அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவு [“அன்புள்ள தயவு,” NW]” காட்டுகையில் நிச்சயமாகவே யெகோவாவை கனப்படுத்துவோம், பெருமகிழ்ச்சியையும் காண்போம்.—சகரியா 7:9.
[அடிக்குறிப்பு]
a இங்கு சொல்லப்பட்டுள்ள விதமான திருமணம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை ஆங்கில புத்தகம், தொகுதி 1, பக்கம் 370-ஐக் காண்க.
உங்கள் பதில்?
• அன்புள்ள தயவு மனித தயவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
• பெத்துவேல், யோசேப்பு, ரூத் ஆகியோர் என்னென்ன விதங்களில் அன்புள்ள தயவு காட்டினர்?
• என்ன மனப்பான்மையுடன் அன்புள்ள தயவை நாம் காட்ட வேண்டும்?
• நம் அன்புள்ள தயவு யாருக்கு தேவைப்படுகிறது?
[பக்கம் 18-ன் படம்]
பெத்துவேல் எவ்வாறு அன்புள்ள தயவு காட்டினார்?
[பக்கம் 21-ன் படம்]
ரூத்தின் பற்றுமாறா அன்பு நகோமிக்கு ஆசீர்வாதமாய் அமைந்தது
[பக்கம் 23-ன் படங்கள்]
மனிதர் காட்டும் அன்புள்ள தயவு மனமுவந்து காட்டப்படுகிறது, திட்டவட்டமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் காட்டப்படுகிறது, தேவைப்படுவோருக்கு காட்டப்படுகிறது